(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சட்டையைக் கழற்றி ஆணியில் இன்னும் மாட்டியாகவில்லை.
“இன்னிக்கு உங்கள் அருமந்தப் பிள்ளை என்ன பண்ணான் கேளுங்கோ”
ஸாரங்கன் ஒன்றும் கவலைப்படுகிற மாதிரி தெரியவில்லை. தன் விளையாட்டுச் சாமான் கூடையிலிருந்து ஒவ்வொரு சொப்பா யெடுத்து ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கிக் கொண்டிருந்தான்.
“வேறென்ன உனக்கு வேலை? அதைப் பண்ணான்னு இதைப் பண்ணான்னு எதையாவது சொல்லிண்டு!”
“தினம் போலில்லை இன்னிக்கு அவன் பண்ணது. தினம் போல் எதுவும்தான் இல்லை இன்றைக்கு. மூணு நாளாவே இல்லை. என்றைக்குத்தான் ஒன்றே போலிருக்கிறது? ஒன்றுதான் ஒன்றேபோல் இருக்கிறது. ‘இன்றையப்போது இன்று; நாளையப்போது நாளைக்கு'”.
ஆபீஸில் ஹெட் கிளார்க்கின் உதடுகள் எப்பவும் அசைந்து கொண்டேயிருக்கும். வந்த புதிதில் வியப்பாய் இருந்தது.ஏதாவது நரம்புக் கோளாறா?
அவன் கவனிப்பதை ஒருநாள் பார்த்துவிட்டார்.
முகத்தில் வழிந்த அசடை கையால் மறைக்க முயன்றான்.
“ஒண்ணுமில்லே ஸார் நீங்கள் ஏதோ சொன்ன மாதிரியிருந்தது என்னைக் கூப்பிட்டேளோ என்று”
“‘உம்மை ஏன் கூப்பிடுகிறேன்? ராமனைக் கூப்பிடுகிறேன்.”
“ராமனா? மன்னிச்சுக்கோங்க- இப்பத்தான் ஒரு கப் காப்பிக்கு அனுப்பினேன் – தொண்டை வரண்டாற் போலிருந்தது–”
“இந்த ராமனையில்லை. ஸ்ரீராமனைக் கூப்பிடுகிறேன். ‘ஆபதாமப ஹத்தாரம்’ சொல்கிறென், இன்னிப் பொழுதுக்கு அவன் வாயில் புகுந்து புறப்படாமல் நல்ல பொழுதாப் போகணுமே! தினமே இப்படித்தான்.”
“உங்க பிள்ளையை வெச்சிண்டு என்னால் சமாளிக்க முடியவில்லை. இன்னிப் பொழுது போச்சா இன்னிக்கு, நாளைக்குப் போச்சா நாளைக்குன்னு இதென்ன பிழைப்பு இதென்ன துஷ்டத்தனம்?”
இதென்ன எங்கேயும் இப்படித் தானா? ஆபீஸ் காற்று இங்கேயும் அடித்துவிட்டதா?
“என்ன நெற்றியை ஒத்தை விரலால் சுரண்டிண்டு நிக்கறேள்?”
ஏதோ ஒரு எண்ணம் திசை தப்பிய பட்சி போல் பிரக்ஞை தவறி மண்டையோட்டிற்குள் கண்ணாம்பூச்சி விளையாடுகிறது, இவள் என்ன சொல்கிறாள்? நான் என்ன சொல்லவந்தேன்?
“நான் சொன்னத்தை வாங்கிண்டேளோ?”
“வாங்கிக்கலாம். முன்னால் குனிந்த தலை நிமிர், துணியைக் கீழே போட்டுவிட்டு காப்பி கொண்டு வா.”
“இருங்கோ வந்தூட்டேன். இந்த இடம் தையல் நிரடல்.”
“நீ கீழே வைக்கிறையா! நான் பிடுங்கி எறியட்டுமா ? ஒரு தரம் ரெண்டு தரம்”.
“இங்கே ஒண்ணும் ஏலம் விட வேண்டாம்.”
ப்ரேமை (frame) வீசி எறிந்து விட்டு கடுகடுத்த முகத்துடன் உள்ளே சென்றாள். கோபத்தின் குதிரை நடையில் இடுப்பு மிடுக்காய்த் திருகி ஒடிவதைப் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணெதிரில் புருவ மத்தியில் மின்னிட்டது. மூண்டெழுந்த கோபம் கண நேரத்தில் சிரிப்பாய் மாறுவது மாறும்போதே தெரிந்தது, அதன் ரஸாயனம் தான் தெரியவில்லை. சிரிப்பை அடக்கிக் கொண்டான். அவ்விடம் காண்பித்துக் கொள்ள இஷ்டமில்லை: தன்னையே காட்டிக் கொடுத்துக் கொள்வது போல் வெட்கமாயிருந்தது. இருக்கிற சிரிப்பை இல்லாத கோபத்தால் மூடத்தான் தோன்றிற்று.
முதலில் வந்த கோபங்கூட வேஷந்தானோ? சிரிப்பும் வேஷந்தானோ? ஒரு ஒரு வேஷமும் ஒரு ஒரு நிழல். ஒவ்வொரு நிழலும் ஒரு ஒரு வர்ணம். அவை ஆடுவதும் பூசுவதும் வருவதும் மறைவதும் சில சமயங்கள் தெரிவது கூட இல்லை,
இன்று அதுமாதிரி தான் ஆகிவிட்டது. டிபன் பையை மேஜைக்கடியில் வைத்து இன்னும் தலை நிமிரக் கூட இல்லை.
“ஸார் உங்களை S.E. கூப்டுகிறார்,”
எதிரே பாப்பையா பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நின்றான். உதட்டோரங்களில் சிந்திய ஏளனத்தை மறைக்கக்கூட அவன் முயலவில்லை. இன்று வண்ணான் மடியில் இருந்து எடுத்த யூனிபாரத்தில் ரொம்பவும் துடியாயிருந்தான். உலசில் உள்ள துர்ப் பழக்கங்கள் அத்தனைக்கும் உறைவிடமாயிருந்தாலும் பாப்பய்யாவுக்கு நல்ல உடல் கட்டு. சிரிக்கையில் பல் வரிசை அணி வகுப்பாய் நின்றன. இப்பொழுது பளார் என்று பலம் கொண்ட மட்டும் வாய் மேலேயே ஒரு அறை அறைந்தால், ரெண்டு பல் உதிர்ந்தால் எப்படி இருக்கும்.
“ஏன் கூப்பிடுகிறார் இதுக்குள்ளேயே?”
ஏதுமே அறியாதவன்போல் உதட்டைப் பிதுக்கிக் கைகளை அகல விரித்தான்.
“எனக்குத் தெரியும்?”
“பின்னே ஏன் கேக்கறீங்க?'”
“உனக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும்?”
“எனக்கென்ன தெரியும்?”
“ரிஜிஸ்தரை இவ்வளவு அக்குஸாய் உள்ளே கொண்டுபோய் வெச்சது நீதானே?”
“மணியைப் பாருங்க ஸார், பத்துலே முள் ஒடிஞ்சு அஞ்சு நிமிஷமாச்சு!”
”நீ ஏன் கொண்டு போய் வைத்தாய் என்றும் எனக்குத் தெரியும்”.
“நீங்க சொல்றது எனக்கொண்ணும் புரியல்லீங்க!'”
“அதனால்தான் புரியும்படி சொல்கிறேன்-‘” கோபம் தன்னுன் முறுக்கேறுவது தெரிந்தது. “நேற்று அஞ்சு ரூபாய் கடன் கேட்டாய்; நான் கொடுக்கவில்லை என்று தானே? நான் பத்து ரூபாய் நோட்டை பர்ஸுள் சொரகுவதைப் பார்த்ததும் உனக்குப் பொறுக்கவில்லை தானே? ஆனால் அது நானே கடன் வாங்கினது என்று உனக்குத் தெரியுமோ? நான் எதற்கு வாங்கினேன் என்று தெரியுமோ?”
“அதெல்லாம் எனக்கென்னத்துக்கு?”
‘வாஸ்தவந்தான். எவன் எக்கேடு கெட்டாலும் உனக்கு உன் காரியம் ஆகணும் அதானே!”
“நான் என் டூட்டி செய்யறேன். நீங்க உங்க டூட்டி செய்யுங்க ஸார், இந்தக் கதையெல்லாம் எதுக்கு? துரை கூப்பிட்டார்; வந்து சொன்னேன். போறதூன்னா போங்க. இல்லாட்டி, உங்களுக்கு இஷ்டமில்லேன்னு போய்ச் சொல்லிடறேன். என்ன முளிச்சிப் பாக்கிறீங்க? ஐயையோ பெல் அடிச்சிட்டாரே? என்னை ஏன் ஸார் பேச்சிக்கிளுத்து நிறுத்தி வைச்சிட்டீங்க?” – தலையிலடித்துக் கொண்டு ஓடினான்.
நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றான்.
S.E. எதிரில் கிடந்த ஆஜர்ப் பதிவுப் புத்தகத்திலிருந்து நிமிர்ந்தார். எப்படி இந்த மனுஷன் ஓரு நாளைப் போல் அலுக்காமல் தினம் முக ஷவரம் செய்து கொள்கிறான். நமக்கு ஒருநாள் விட்டு ஒருநாளே கை வரமாட்டேன் என்கிறது. கத்தியை வைத்தாலே பிராணன் போகிறது, ஒரு மாசு மறு இல்லாமல், கன்னமும் மோவாயும் நீலச்சலவைக்கல் மாதிரி வழவழென… ஒருநாளைப்போல் எப்படி இவ்வளவு உயர்ந்த துணி உடை நலுங்காமல், புத்தம் புதிதாய் – ஸீனிமாவில் விளம்பரம் பார்த்த ஞாபகம் வந்தது. பாரீஸ் பெப்பர் மிண்டு – கைபடாது செய்யப்படுவது. பாகிலிருந்து பதமாகி, அச்சாகி, ‘ட்ரேஸ்’ காகிதத்தில் சுருட்டும் வரை- எந்த இயந்திரம் ஆபீஸர்களை உற்பத்தியாக்கி வெளியே தள்ளுகிறது?
“நீர்தானே ஸம்பத்?”
“ஆமாம் ஸார்”
“சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் லேட்.”
“ஆமாம் ஸார்!”
“ரூல் பிரகாரம் இதே சாக்காய் நடவடிக்கை எடுத்து உம்மை வேலையிலிருந்துகூட நீக்கிவிட முடியும், தெரியுமா? உங்கள் ‘யூனியன்’ எல்லாம் சேர்ந்து என்ன சிப்பக் கட்டு கட்டினாலும் ஒண்ணும் பண்ண முடியாது. தெரியுமா?”
“யூனியனுக்கும் எனக்கும் எந்த ஸம்பந்தமுமில்லை ஸார்!”
“ஏன், உமக்கு இங்கேதானே வேலை?”
”ஆனால் நான் யூனியனில் மெம்பர் இல்லை ஸார்?”
“I don’t care, ஏன் லேட்?”
“….”
S.E.க்கு முகம் சிவந்தது: மத்தியானம் தின்னும் ஆப்பிளும் ஆரஞ்சும் வீணாய்ப் போகுமா?
நல்ல பெரிய ஆப்பிள். ஸாரங்குக்கு வாங்கிப்போகலாம் என்று பழக்கடையில் விலை கேட்கப்போய் கடைக்காரன் ‘பன்னிரண்டணா’ என்றதும் ‘கர்ரெண்டு!’ அடித்தாற்போல். கையிலெடுத்த பழத்தை அப்படியே கீழே போட்டு விட்டு –
“என்னய்யா சிரிக்கிறீர்?”
“சிரிக்கிறேனா என்னா?” அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது.
“என்ன விளையாடுகிறீர்? யாரோடு பேசுகிறீர் என்று நினைவிருக்கிறதா? ஹெட்க்ளார்க்! ஹெட்க்ளார்க்!”
H. C. ஓடி வந்தார். அவர் அவசரமாய் எடுத்து வைத்துக் கொண்ட தலைப்பாகை முன்னும் பின்னுமாய்த் திரும்பி ஒரு பக்கமாய்ச் சரிந்திருந்ததைப் பார்க்க இன்னும் சிரிப்பாய் வந்தது. கடவுளே என் சிரிப்பிலிருந்து என்னைக் காப்பாற்றேன்? ஆனால் புருவ மத்தியில். மூக்குத்தண்டில் விழியோரச் சதையில், கன்னத்தின் மேட்டில், மோவாய்க் குழியில், உதட்டோரங்களில் குறு குறுப்புத் தாங்க முடியவில்லை.
“எக்ஸ்க்யூஸ் மி-”
வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டே வெளியே ஓடினான். படிக்கட்டில் தடதடவென இறங்கி, இடைவேளையில் சாப்பிடும் அறைக்குப் போய் விலாவைப் பிடித்துக் கொண்டு இடி இடி என்று சிரித்தான், கண்கள் வடிந்தன. ஏன் இந்தச் சிரிப்பு, இவ்வளவு சிரிப்புக்கு என்ன நடந்தது என்று தனக்கே விளங்கவில்லை. ஆனால் அந்த சிரிப்பைச் சிரித்துத் தீர்த்தபின்தான் இம்சை சற்று அடங்கிற்று. இடத்துக்குத் திரும்பி வந்தபோது, சிரித்த அசதியில் மூச்சு லேசாய்த் திணறிற்று.
H. C. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “எங்கே போயிட்டீருங்காணும்? உம்முடைய சமாதானத்தை எழுதி வாங்கச் சொல்லியிருக்கார். ஏனய்யா காலங்காத்தாலே வந்ததும் வராததுமாய் அவனைச் சீண்டிவிட்டு அவன் குணத்தைக் கெடுத்து, எங்களை நாள் முழுவதும் கதிகலக்க அடிக்கிறீர்! நாங்கள் எல்லாம் சம்சாரிகளய்யா! எங்கள் பிண்டத்தைப் பெருங்காயமாக்கி விடாதேயும்!”
மறுபடியும் விழியோரங்கள் குறுகுறுத்தன. H.C.க்கா பிண்டம் பெருங்காயம்? H.Cக்குப் பட்டணத்திலேயே நாலு வீடுகள் இருக்கின்றன. பொங்கலுக்கு சுண்ணாம்பு கூட அடித்துத் தரமாட்டார். வாடகையை மாத்திரம் கறுக்காய் மாதா மாதம் மூணாந்தேதியே வசூல் பண்ணி விடுவார். ரெண்டு பிள்ளைகள் வியாபாரத்தில் சக்கை போடு போடுகிறான்கள், தவிர நிலபலம். மாமனார் வீட்டு சொத்து ஸ்வீகார சொத்து எல்லாம் வரவிருக்கின்றன. வீட்டுக் கணக்குகளைக் கவனிக்க தனி ஆளே போட்டிருக்கிறார். S.E. க்கே கடன் கொடுத்திருப்பதாக ஆபீஸில் சொல்லிக் கொள்கிறார்கள்,
இருந்தும் ‘ஆபதாமபஹத்தாரம்’ சொல்கிறார். தலைப்பாகையை முன்னும் பின்னுமாய் ஒருபக்கமாய் சரிய மாட்டிக் கொண்டு அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வருகிறார். ‘டேப்பா!’ ஒவ்வொருத்தனும் என்னென்ன வேஷம் போடுகிறான்!’
நாற்காலியை முன்னுக்கிழுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
“என்னத்தை எழுத?”
அவன் இடம் ஜன்னலுக்குப் பக்கத்தில். ஆபீஸின் நாலாவது மாடி உயரத்திலிருந்து, கீழே பஸ்களும் மோட்டார்களும் வண்டிகளும், மரவட்டைகளும், வண்டுகளும் பூச்சிகளுமாய் ஊர்ந்தன ஆங்காங்கே, புடவைகளின் சிவப்புக்களும் பச்சைகளும் சின்னஞ்சிறு வர்ணக் காயிதத் துண்டுகள் காற்றில் அலைவதுபோல் விட்டுவிட்டு நெளிந்தன. இங்கிருந்து தற்செயலாயோ வேணுமென்றோ ஆள் விழுந்தால் ஒரு எலும்புகூட முழுசாகத் தேறாது.
ஆயினும் மூன்று நாட்கள்-பதினஞ்சு, பன்னிரண்டு அஞ்சு நிமிஷங்கள் நேரங்கழித்து வந்ததற்கு சமாதானம் எழுதியாகணும்.
என்னத்தை எழுத? உள்ளதை எழுதினால் எடுபடுமோ? இவர்களுக்குப் புரியுமோ?
-‘நேரம் கழித்து வந்ததற்கு
மிகவும் வருந்துகிறேன்.
இனி இம்மாதிரி நேரிடாதபடி-‘
2
உமா சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். அவள் கைடம்ளரில் ஆவி பறந்தது.
“என்ன இப்படிக் கொதிக்கிறதே? அடுப்பில் சுட வைத்தாயா? இல்லை. வயிற்றிலேயே கொஞ்ச நாழி வைத்துக் கொண்டு வந்துவிட்டாயா? பறக்கிறது அதன் ஆவியா? உன் ஆத்திரமா?”
உமாவின் முகம் இறுகியது. “நான் இப்போ சிரிக்கணுமா?”
ஸைகிள் டயரில் காற்றை வாங்கி விட்டாற்போல் எதிர்ப் பேச்சில்லாமல் அடிப்பதில் உமாவை மிஞ்ச முடியாது. எந்தத் தர்க்கத்திலும் கடைசி வார்த்தை அவளுடையதுதான்.
“உமா உமா.கெஞ்சிக் கேட்கிறேன். நாலுபேர் வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என் வார்த்தையே ஓங்கி இருக்கட்டும், கொஞ்சம் விட்டுக் கொடு” – என்று கேட்டுக் கொண்டாலும் ஹும் என்று ஒரு உறுமலாவது உறுமி அவனுக்கு வெற்றியில்லாமல் அடித்து விடுவாள்.
காப்பியை எடுத்துக் கொண்டு வாசலறைக்குக் சென்றான். அதுவே அவன் கோட்டை, தனிவளை, பட்டறை, தர்பார் அறை எல்லாமே.
டம்ளரை வாய்க்கு எடுத்துச் செல்கையில் – இன்னும் தலை நிமிரவில்லை. அறையில் திடீரென புனுகு குபீரிட்டு, வயிறு குமட்டிற்று.
தெரு வழியே ஒரு ஆள் சென்றான். கழுத்தில் மைனர் சங்கிலி. மஞ்சள் பட்டு ஜிப்பா புரள புரள நூலும் ரேயனும் கலந்த வேஷ்டி, ஏற்பாடாய்க் கலைக்கப்பட்ட முன்மயிர் நெற்றிமேல் திருகு சரங்களாய்த் தொங்கின. ஜன்னலுக் கெதிரில் கொத்துப் புகையிலைச் சாறை உமிழ்ந்து கொண்டே போய்விட்டான்.
மண்ணில் ரத்தம் போல் –
ரத்தம் போல்…
ரத்தம்…
கண்கள் திடீரென இருண்டன. கால் கட்டைவிரலிலிருந்து ‘சுர்ர்’ரென ஆவியெழுப்பி, போகும் வழி யெல்லாம் தீய்த்துக் கொண்டே போய் மண்டையை அடைந்தது, தலையை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டான். ரத்தக் குழம்பு தளைத்து சிவப்புச் சக்கிரம், இறுக மூடிய கண்களுள் இமைத்திரையை நார் நாராய்க் கிழித்துக் கொண்டு ஆடிற்று.
முந்தாநாள் புதன்கிழமை, காலை ஆபிஸூக்குப் போகும் வழியில் கட்டவிழ்ந்த பொட்டலம் போல் கலைந்து கொண் டேயிருக்கும் கூட்டத்தின் நடுவே நின்று கொண்டிருந்தான். பயங்கரத்தில் நிலைகுத்தி விட்ட கண்கள் காலடியில் இன்னும் முற்றிலும் காயாத ஒரு பெரிய சிவப்புத் திட்டின்மேல் வெறித்து விட்டது. செவிகளில் சமுத்திரம் இரைந்தது. ஒன்றும் இரண்டும், நாலும் அஞ்சுமாய் வார்த்தைகள் மீன் குட்டிகள் துள்ளி எழும்பி மேல் மோதி மூழ்கி அலை வேகத்தில் அடித்துக் கொண்டு போயின.
“இப்போத் தானய்யா – ப்ளாட் பாரத்துலே தேமேனு போய்க்கிட்டேயிருந்தானே திடீர்னு நினைச்சுக்கிட்டு க்ராஸ் பண்ணான்யா’ வரவன் புல் ஸ்பீடுலே வரான். ஏன் வரக் கூடாது? இது கிராஸ் பண்ற இடமா! ஏனய்யா க்ராஸ் பண்ணனும்? ஆனால் அவனா பண்ணான்? வேளைதான் பின்னாலே நின்னுட்டு புடரியைப் பிடிச்சுத் தள்ளுதே! ‘ப்ரேக்’ ‘டேர்ண். எதுக்குமே டைம் இல்லை. நேரே வந்து இந்தா கொடுக்கறேன் வாங்கிக்கின்னு சக்ரத்தடீலே பூட்டான். ஐயோன்னு சத்தங்கூட இல்லே. அதுக்குக்கூட டைம் இல்லேங்கறேன்னா, அந்த வண்டியிலேயே வாரி யெடுத்துட்டு ஆஸ்பத்திரிக்குப் பூட்டானுங்க. ஆனால் அங்கே என்ன இருக்கும்? போன உசிரு வ்லாஸம் விட்டூட்டாப் போவும்?
“ஆமாய்யா இன்னிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பறப்போ பூடப்போறான்னு தெரியுமா? என்னமோ நீ சொல்றதைப் பார்த்தா, விலாஸத்தை எளுதி ஜேபிலே வெச்சுக்க?”
“ஆனால் அது அவஸ்யம்னு நான் சொல்வேன்.”
“எது?”
விலாஸம் எப்பவும் ஜேபிலே இருக்கணும். இந்தப் பட்டணத்திலே காலைலே ‘டூட்டி, மேலே போனவன் மாலைலே உருவாத் திரும்பி வரான்னு என்ன நிச்சியம்?’
“இன்னிப் பொழுது போச்சா இன்னிக்கு. நாளைப் பொழுது நாளைக்கு”
“விலாஸம் தெரிஞ்சா வீட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமில்லே-“.
“இல்லாட்டி மூணுநாள் பொறுத்து போலிஸ்காரன் வந்து கதவைத் தட்டுவான்!”
“இந்த வூட்டுலேதானே-”
காதைப் பொத்திக் கொண்டான். நினைத்துப் பார்க்கக் கூடத் தைரியமில்லை.
”- காலைலே கன்னத்தைக் கிள்ளிட்டுப் போன அப்பன் பிக்கேட்டு வாங்கி வருவான்னு குளந்தை நடைக்கும் வாசலுக்குமா நடக்கும்.”
“-வேலைவிட்டதும் கையோடு வாங்கிவரும் கதம் பத்துக்கு ஜடைபோட்டு கட்டினவ ஜன்னலண்டை காத்திட்டு நின்னுருப்பா – டிபனும் காபியும் சூடாறிப்போவுதேன்னு பெத்தவ அடுக்குள்ளே ஏந்தி இறக்கிட்டிருப்பா.”
”-இது பாத்தியா, போனவன் என்னவோ ஒண்ணு தான். ஆனா ஒரே வீட்டிலேயே அதனுக்கு எத்தனை வேசம்? ஒண்ணுக்கு அப்பன். ஒண்ணுக்கு புருஷன், ஒண்ணுக்குப் பிள்ளை, ஒண்ணுக்கு உடன்பிறந்தவன். இன்னுங்கூட என்னென்னவோ கட்டலாம்-”
”எல்லாம் நொடி நேரத்துவே கலைஞ்சுட்டுதே என்ன அக்ரம்பு!”
”-ஆனால் இந்த சிந்திய ரத்தத்தையும் அது காரணமா வித விதமாக் கண்ணீரையும் வாங்கிட்டுத் தானே இந்தப் பூமி வளர்ரது அது பாத்தியா?”
“-அதுக்கு சுமக்கிற கூலி வேணாமா? உலகத்திலே எதுதான் சும்மா கிடைக்குது? சும்மா நினைச்சுக்கிட்டு வேணுமானா ஏமாறலாம். அத்தோடு சரி”
“-=இதுமாதிரி இன்னுன்னும் எங்கெங்கே இதைவிட என்னென்ன கொடுமையோ?-”
அப்பவே, அங்கேயே சாரங்கனின் நினைப்பு எழுந்தது. குழந்தையைப் பார்க்கவேணும் எனும் தாக்க முடியாத வேட்கை. குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருப்பான். தெருவில் வண்டி, காடி நினைப்பில்லாமலே உமா மூடாந்தகாரமாய் உள்ளே வேலையாயிருப்பாள். அம்மாவோ இல்லை. ‘வீடா இது? காலை நீட்டி மடக்க இடமில்லை. என்னத்தையோ மடக்கி மடக்கிக் கட்டிப்பிட்டு இது வாசல், இது அறை, இது கூடங்கறான். ஐப்பசிமாதம் முடவனுக்கு மோக்ஷமுமதுவுமாய் காவேரி ஸ்னானத்தை விட முடியுமா? நான் இருக்கிறது இன்னும் எத்தனை நாளோ?-அம்மா ஊருக்கு மூணு வாரத்துக்கு முன்னாலேயே போயாச்சு,
“அ- பா!-!’ சிறகுகள் போல கைகளை விரித்தபடி சாரங்கன் சிரித்துக் கொண்டு வந்து தன் அணைப்புள் மோதுவான். பயலுக்கு ஏகமாய் மயிர் வளர்ந்து விட்டது. அசல் பொட்டைக் குட்டியாயிருக்கான். போதும் போதாதற்கு அவன் அம்மா நடுவகிடு எடுத்து ரெண்டு பக்கமும் பின்னால் சும்மா சீவி விட்டிருக்கா. கையில் வேல் ஓண்ணுதான் பாக்கி. மொட்டையடித்து விபூதியையும் பட்டை பட்டையா இட்டு விட்டால் பழனி ஆண்டவனேதான். வைத்தீஸ்வரன் கோயில் மூடியிருக்கிறது, ஆனால் கையில் அம்பது ரூபாயில்லாமல் அதைப்பற்றி நினைப்பதற்குக் கூ இல்லை. குடும்பம் அப்போ தத்தளிக்கிற நிலையைப் பார்த்தால் பயலுக்கு முடி, பூனூல் கலியாணம், தனக்கு ஷஷ்டியப்த பூர்த்தி எல்லாமே ஒரே பந்தலில்தான் போல்-
3
வாசலில் நிழல் தட்டியது.
“கலியாணமா வாவா. இப்போதான் வரையா?”
“இன்றைக் காலை வண்டியில் வந்தேன், உன்னை இன்று காலையிலேயே பார்த்துவிட்டேன். வண்டியிலிருந்தே கத்தினேன். உனக்குக் கா எது கேட்கவில்லை. காலடியில் ஈயடிக்கிற ஜட்கா வண்டிக் குதிரைபோல் ஒரு கால் மாற்றி ஒரு கால் தவித்துக் கொண்டிருந்தாய்.”
“ஆமாம்பா; லெவல் கிராஸ்ஸிங்கில் மாட்டிக் கொண்டு விட்டேன். வரத்துக்குள் ‘கேட்டை மூடிவிட்டான். இன்னிக்கு நான் ‘ லேட். எக்ஸ்ப்லனேஷன் பழங் குப்பை எல்லாம் ஏக கலாட்டா. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். ஸர்விஸ்னா முன்னாலே கையைக் கொடு. குழந்தையைப் பார்த்தையா. உன் தக்காளி மூக்கை அப்படியே உறிச்சி வச்சிருக்கு. டேடேடே விடுடா, விடுடா-என் கை தானா ஐயையோ மாவாப் போச்சே!”
“ஸம்பத், லக்ஷ்மி எல்லாம் சொன்னாள். என் நன்றியை மப்படி நான் தெரிவிக்கப் போறேன்!”
”நீ ஒண்ணும் தெரிவிக்க வேண்டாம்; அதற்கெல்லாம் நமக்குப் போறாது. நமக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கத் தான் முடியும். தெரிவிக்க, அறிவிக்க அணு அணுவாய் அலுக் காமல் விஸ்தரிக்க அதெல்லாம் பொம்மனாட்டிகள் டிப்பார்ட் மெண்ட், நான் இல்லாததை ஒண்ணும் செய்துவிடவில்லை.”
“எல்லாத்தையுமே பூப்பூன்னுட்டா அப்புறம் என்ன தான் இருக்கிறது?”
“நான் என்னத்தைச் செய்தாலும் அவள் குழந்தையை அவள் தானே பெறணும்? பார்க்கப் போனால் நானே லக்ஷ்மிக்கு வந்தனம் செலுத்த வேண்டும்.”
“…?”
“நீ காம்பில் கிளம்பின சமயத்தில் பார்த்துக்கொள். நிறை மாதம். உற்ற துணையில்லை. உன் வீட்டிலேயே இருக் கட்டும்’ என்று என்னிடம் ஒப்படைத்து விட்டுப் போனதற்கு சிக்கல், கோளாறு.விபரீதமில்லாமல்,என் மூக்கை யறுக்காமல் சுகப் பிரசவமாச்சே! கலியாணம், நான் ஒன்று சொல்றேன். ஏதாவது ஒண்ணுக் கொண்ணு ஆச்சு வெச்சுக்கோ நீ கூட சினேகிதத்தில் சும்மா இருந்து விடுவாய். பெற்றவர்கள், மற்ற வர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள். பழி யாரப்பா சுமப்பது? ஒருத்தரைச் சொல்லப் போவானேன்? உமாவே சும்மா இருக்க மாட்டாள். இப்போ என்னவோ என் மனைவியும் உன் மனைவியும் அக்கா தங்கையா ஒழுகினாலும், ‘உங்களை யார் ஏத்துக்கச் சொன்னது?’ என்று கேட்டால் எனக்குப் பேச வாய் எங்கே? நான் ஒருத்தரையும் குற்றம் சொல்லவில்லை இது மனித இயல்பு.
“உலக வழக்கு என்னமோ அப்படித்தான்.”
“நாமும் இவ்வுலகத்தைச் சேர்ந்தவர்கள்தான். தெய்வப் பிறவியில்லை. அதனால் எல்லாம் நல்லபடியாக முடிந்ததே என்று நாம் எல்லோரும் சேர்ந்து சந்தோஷப் படுவதைத் தவிர எனக்குத் தனியாக மாலை சூட்டுவதில் அர்த்த மில்லை.”
“இருந்தாலும் – “
“நாம் அதைப்பற்றி இனி பேச வேண்டாம்.”
“சரி பேசவில்லை.”
இருவரும் சற்று நேரம் சும்மாயிருந்தனர். ஆறி மேலே வெண்மை பூத்துவிட்ட காப்பி மேல் ஈ தைரியமாக உட்கார ஆரம்பித்தது.
“மாமியார் நாளை காலை வண்டிக்கு வருகிறாள். கடிதம் வந்திருக்கிறது”.
“ஏனாம் முன்னால் வர முடியவில்லையாம்?”
‘இப்போத்தான் மூணாம் பெண்ணுக்கு பிள்ளைப்பேறு செய்துவிட்டு, திரும்பி வந்தாளாம். தவிர அங்கங்கே ரயில் உடைப்பு வேறே, என்னப்பா என் மாமியார் என்னை விடப் பெரிய ‘டூரா’, மாற்றி மாற்றி ஏழு பெண்களுக்குப் போய்ப் போய்ச் செய்யத்தான் போது இருக்கிறது.”
“சரி கவலைவிட்டது. எங்கே அதுக்குள்ளேயும் கிளம்பிவிட்டாய்?”
“தலைக்கு மேல் வேலை கிடக்கிறது. காலையிலே கலைத்த மூட்டையை போய் மறுபடியும் கட்டியாகணும். நாளை மத்யான வண்டிக்குக் கிளம்பறேன்.”
”எங்கே?”
“எங்கே? ட்யூடிதான்!-”
4
கலியாணம் போன சற்று நேரத்துக்கெல்லாம் தூறல் படபடத்து உடனே வலுத்து மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. பாவம். நடுவழியில் மாட்டிக் கொண்டிருப்பான், இதென்ன மழையோ. ஒரு ஒரு ஸீஸனுக்கும் சொல்கிறோம். இப்பப் போல் எப்பவுமே பெய்ததில்லை!” என்று. அதென் னவோ வருஷம் முழுக்க வெயில் பிளந்தாலும் ஸஹித்துக் கொள்கிறோம். ஓருவார மழையில் நாறிப்போய் விடுகிறோம். அதுவும் முந்தா நாள் ராத்திரி கொட்டிற்றே அதற்கு மேலேயா?
முந்தா நாள் ராத்திரி ஓயாமல் பேயும் ஜோ’வின் தாலாட்டில் நன்றாய்த் தூங்கி விட்டான். ஆனந்தமான கனா.S,E. க்கு மாற்றல். ஆபீஸில் டின்னர் பார்ட்டி! கிளாஸ் டம்பளரில் யாரோ பாதாம்கீரை ஊற்றுகிறார்கள். கொடி கொடியாய் குங்குமப் பூவும். முழி முழியாய்ச் சாரைப் பருப்பும் சுழன்று மிதக்க ஸ்வரனை உருக்கி வார்த்தாற்போல் டம்ளரை கையில் எடுத்து வாய்க்குக் கொண்டு போவதற்குள் —
My God! யாரோ தோளை இடித்து அத்தனையும் மேலே கொட்டிவிட்டது.
“இன்னொரு டம்ளர் ப்ளீஸ்”
“டம்ளராவது அடுக்காவது எழுந்திருங்கோன்னா!”
தோளாப் பட்டையில் உமா ஓங்கி அறைந்த பிறகுதான் தூக்கம் கலைந்தது.
“என்ன?”
“லக்ஷ்மிக்கு உடம்பு சரியாயில்லை. சுருக்க ஒரு ரிக்ஷா பாருங்கோ”
இந்த மழையில் ரிக்ஷாவாவது? டாக்ஸியாவது? எதுவுமே கிடைக்கவில்லை. ஸ்டாண்டில் இருந்த ஒருத்தன் இருவரும் வர மறுத்துவிட்டனர். தெருத் தெருவாய்ச் சுற்றிக் கடைசி யாக ஒரு வீட்டோரமாய் ஒரு மாடும் வண்டியும் அவிழ்த்து விட்டிருந்தது. வண்டிக்காரன் குறுந்திண்ணையில் ஓடுங்கிக் கொண்டிருந்தான்.
‘கொஞ்சம் ஆஸ்பத்திரிவரையில் வாப்பா, பிரஸவக் கேஸ் -‘ என்று ஆனமட்டும் சொல்லியும் வண்டிக்காரனுக்கு மனம் இரங்கவில்லை.
‘இந்த மழையிலே மாட்டுக்கு ஜுரம் வந்தூடும், என்று விட்டான். கடைசியாக ‘நான் மாட்டை விட்டுட்டு வர முடியாது, என்னால் முடிஞ்சுது வண்டியை எடுத்துகிட்டுப் போய் திருப்பிக் கொணாந்திடுங்க? அதுவும் நீங்க ரொம்பக் கேட்டுக்கறத்தாலே. பாவ தோஷத்துக்கு அஞ்சி, உங்களை நம்பிக் கொடுக்கறேன்.’
உமா லக்ஷ்மியைத் தாங்கிக் கொண்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். தெரு விளக்கு வெளிச்சம் நேரே லக்ஷ்மி முகத்தில் அடித்தது. உமா கட்டை விரலால் ரக்ஷையாய் இட்டிருந்த உதிர் விபூதி லக்ஷ்மி நெற்றியில் துலங்கிற்று.
அவன் வண்டியை இழுத்துக் வருவதைக் கண்டதும் அந்த நேரத்திலும் உமாவின் இடக்குப் போகவில்லை.
“இதென்ன கூத்து? எத்தனை நாளாய் இந்த ‘பார்ட் டைம்’ ஜாப்?”
“ஏறு ஏறு-”
அவர்கள் கிளம்புவதற்கென்றே காத்திருந்தாற் போல் மழை வலுக்க ஆரம்பித்துவிட்டது. ஜலம் முழங்கால் ஆழத் திற்கு ஓடிற்று, ஆகாயத்திலிருந்து பூமிமேல் எறிந்த ஈட்டிகள் போல் தெருவிளக்கில் தூறல்கள் பளபளத்தன. ஸூபாகள் திறந்து கொண்ட இடத்தில் மழை வெள்ளம் சுழித்தது. பகவானே, எதிலாவது நான் காலை விடாமல் இருக்கணுமே! கைகள் சட்டங்களைப் பிடித்துக்கொண்டிருந்தமையால். முகத்தின் மேல் வழியும் ஜலத்தை வழிந்தெறிய முடிய வில்லை.உதட்டிலிருந்து நக்கிக்கொண்ட ஜலம் நாக்கில் இனித்தது. கண்களை அடைத்த ஜலத்தில் விழிகள் நீந்தின, அந்த ஜலத்திரையில் மங்கின திருஷ்டியில், பூமியும் வானமும் ஒன்று சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான புஷ்பமாய் மலர்ந்து மெதுவிட்டுத் தோன்றிற்று. ஈரம் தோலுள் இறங்கி, சதையை ஊடுருவி, எலும்பை தெருப்பாய்க் காய்ச்சிற்று.
வண்டியிலிருந்து பின்னால் வெகு தூரத்திலிருந்து உமாவின் குரல் அவசரமாய் மழைத் திரையைத் துளைத்துக் கொண்டு எட்டிற்று.
“வண்டியை நிறுத்துங்கோ – நிறுத்துங்கோ”
ஆண்டவன் அந்தக்ஷணமே அவர்களுக்கென்றே படைத் தாற்போன்று எதிரே ஒரு வீடு திண்ணையோடு எழும்பிற்று. திண்ணை மேல் வண்டியை. முட்டுக் கொடுத்துவிட்டு, குனிந்து வெளிவந்து முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு திண்ணைமேல் உட்கார்ந்து விட்டான். ஒரு நிமிஷம் எங்கிருக் கிறோம், என்ன பண்ணுகிறோம். என்னத்துக்கு இங்கு வந்தோம்? எப்படி வந்தோம்? எதுவுமே நினைவில்லாமல் போய்விட்டது. மழையில் தான் எனும் தனிப் பிரக்ஞை கரைந்து, அழிந்து மழையோடு கலந்து விட்டாற் போலிருந்தது.
அந்தச் சமயம் பூமியே திறந்து, அதனின்று அதன் இதயத் துடிப்பு விடுபட்டாற்போல் புத்த புதிதாய் ஓரு குரல் வண்டி யின் உள் கும்மிருட்டிலிருந்து கிளம்பி அவனை இருகூராய் பிளந்தது. வாஸ்தவமாய் அவரைத் தோல் போல்தான், இரண்டாய்ப் பிளந்தாற்போலேயே இருந்தது. அப்புறமே, அந்த வியப்பிலிருந்து அவன் முழுக்க மீளவில்லை.
ஆஸ்பத்திரியை அடைந்தது. புதுக் கேஸ் வந்திருக்கும், அறிகுறியாய் அடித்த ஆராய்ச்சி மணியோசை, திரும்ப வண்டியைக் கொண்டுபோய் சொந்தக் காரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு வந்து உடையைக் களைந்து படுக்கையில் விழுந்தது- எல்லாமே எங்கோ யாருக்கோ நடந்த தாய், கதைகேட்டாற்போல்-எல்லாமே, நாக்கில் எச்சிலைத் தொட்டு அழித்து கோடு போல் பளிச்சென்று ஞாபகத்தில் இல்லை. ஒன்றுதான் நினைவிருந்தது.
ஸாரங் பூட்டிக் கொண்டு, போனபடியே நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தான்.
தோளைக் குலுக்கி உமா காப்பி டம்ளரை வாயண்டை நீட்டியபோதுதான் மூர்ச்சை தெளிந்தது.
“பரவாயில்லை; குடிச்சிட்டே பல் தேயுங்கோ.”
“மணி என்ன?”
“ஒன்பது.”
“My God?-“
அன்று மாலை ஆபீஸ் விட்டதும் நேரே ஆஸ்பத்திரிக்குச் சென்றான். தாயின் கால்மாட்டில் கட்டிலோடு மாட்டிய தொட்டிலில் குழந்தை வளர்ந்திருந்தது. ஒரு கையை வாயில் அடைத்துக் கொண்டு, உடம்பையும் இன்னொரு கையையும் அவன் பக்கமாய் முறித்தது.’டொமாட்டோ நோஸ்’, இது தானா? இவ்வளவு ரகளையும் இதுதானா?
தன்னையறியாது மனம் பொங்கிற்று. இதன் ஆக்கலில் தன் தாய்க்கும் தகப்பனுக்கும் என்ன பங்குண்டோ அது மாதிரி இதன் பிறப்பில் இதன் பிறப்பித்தலில் (வார்த்தைகள் எப்படித் தாமே தம்மிடத்தில் விழுந்து அடுக்கித் தம்மை சரிப்படுத்திக் கொள்கின்றன!) எனக்கும் என் பங்கு உண்டல்லவா?
உயிர் தன் விடுதலைக்குத் தன்னைப் புரிந்துகொள்வதற் காக திரும்பத் திரும்பத் தன்னைப் பிறப்பித்துக் கொண்டு இயங்கி படும் விசுவகர்ப்ப வேதனையில் என் உதவியும் அதற்கு வேண்டியிருக்கிறதல்லவா? என்னைத் தனக்கு சாக்ஷியாக்கிக் கொண்டிருக்கிறதே அதுவே அதிலேயே அதற்க்கு நான் உதவிதானே! இப்படித்தானே! எல்லோரும் ஒருத்தருகொருத்தர் சாக்ஷி? என்னை யறியாமலே இவ்வுலகரங்கில் நடக்கும் எத்தனை நாடகங்களில் நான் பாத்திரமாய் இருக்கி றேன்! நான் அறிந்தவர் அறியாதவர் எல்லோருமே என்னை ஒவ்வொரு வகையில் பாதிக்கின்றனர். நேற்று விபத்தில் இறந்தவனின் ரத்தத்தில் அப்படித் துடித்தேன். இன்று இக் குழந்தையின் பிறப்பில் முக்கிய பாகம் தாங்கியிருக்கிறேன். நேற்று விடுதலையான ஜீவனே இக்குழந்தையின் பிறப்பில் புகுந்து கொண்டில்லை என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியு மோ? இப்படி ஒன்றுக்கொன்று ஒருவர்க்கொருவர் சாட்சி யான இவ்வுயிர்ப் பிணைப்பில், நான் ஏது தனி? இன்று நேற்று நாளை நேரங்கள் ஏது? நேற்று விபத்தில் இறந்தவனும் நானே. நான் இழுத்த வண்டிக்குள் பிறந்து இத்தொட்டிலில் இருப்பதும் நானே. இன்று நேற்று நாளை எனும், நேரங்களி னூடே ஒடும் இந்த உண்மை எந்த மட்டுக்கு என்னுள் அழுந் திற்றோ அந்த அளவுக்கு நான் வளர்ந்தவன்தானே?
தொட்டிலின் மேல் தாழ்ந்த பார்வை உயர்ந்ததும் தாயின் முகத்தைத்தான் சந்தித்தது, லக்ஷிமியின் கண்கள் அவனைச் சிந்தித்துக் கொண்டிருந்தன. திடீரென்று அவன் காலடியில் பூமி விட்டது. அக் கண்களுள் புகுந்து அவை களின் அகண்ட, நிர்ச்சலமான ஆழத்திலிருந்து தப்ப முடியா மல் அதில் தான் மூழ்கிவிட்டாற் போலிருந்தது. வார்டில் இருந்து வெளிவந்த பின்னரும் தன்னில் ஒரு பகுதியை அவள் கண்களின் ஆழத்துள் விட்டு வந்தாற்போல் தான் இருந்தது, நான் இங்குமிருக்கிறேன், அங்குமிருக்கிறேன்.
இதன் ரஸாயனம் என்ன?
அறைக்கு வெளியே ஆளரவம் கேட்டது. உள்ளே வந்து விளக்கைப் போட்டாள், கையில் பையனைப் பிடித்துக் கொண்டிருந்தாள், ஸாரங்கள் திமிர முயன்றான்,
“இதென்ன விளக்கைக் கூடப் போடாமல் எந்தப் பட்டணத்தைக் கட்டியாறது? இவன் பண்ற அக்ரமம் வரவர ஸஹிக்க முடியல்லே. என் மானம் போறது. இவனை நீங்கள் கண்டிக்கணும்”
“என்ன நடந்து விட்டது?”
“காலையில் என்ன பண்ணானோ அதேதான் இப்பவும். கையும் பிடியுமாய்ப் பிடிச்சு இழுத்துண்டு வந்தேன். எதிர் வீட்டு மாமா எச்சிலை தின்னுண்டிருக்கான், அவரும் வஞ்சனையில்லாமல் கலத்திலிருந்து குழம்புஞ் சாதத்தை உருட்டி உருட்டி கொடுக்கிறார், இவனும் குருவிக் குஞ்சு மாதிரி வாயைத் திறந்து காட்டிண்டிருக்கான்.
”உமா நீ ஒன்றும் புதிதாய்க் கண்டுபிடித்து விடவில்லை. வீட்டுக்கு வீடு தலைமுறை தலைமுறையாய் நடக்கிறதைத் தான் சொல்கிறாய்,”
“இதென்ன வியாக்யானம்?”
“இது உள்ளது. இவன் வயதில் நான் என் தாத்தாவின் இலைப் பாலுஞ் சாதத்திற்குக் காத்திருந்தது இன்னும் மறக்கவில்லை. தாத்தாவுக்கு எச்சில் கொடுக்கப் பிடிக்காது. அதற்காகவே சாப்பிடாமல், நான் தூங்குவதற்குக் காத்திருப்பார். ஆனால் நானா ஏமாறுபவன்? தூங்காமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு காத்திருப்பேன். வேண்டா விருப்பாய் அவர் சபித்துக் கொண்டே என் வாயில் மேலும் கீழும் வழிய ஒரு கவளமாவது ஊட்டி. சர்க்கரை விரலில் தொட்டு என் நாக்கில் இழுத்த பின்தான் அந்த இடத்தை விட்டு அகலுவேன்?”
“அப்படியானால் இப்படியே எச்சிலைத் தின்னுண்டே யிருன்னு இன்னுங் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கோ.”
ஆத்திரத்துடன் பையனை அவன் பக்கம் தள்ளினாள் குழந்தையை அப்படியே வாரியணைத்துக்கொண்டான்.
“மூஞ்சி குத்தறதப்பா கறுப்பு கறுப்பாயிருக்கே எப்போப்பா வெள்ளை வெள்ளையாய்ப் பண்ணிக்கப் போறே?”
ஸ்படிகத் தூய்மையில் சிரிப்பு. நெஞ்சில் நீர்வீழ்ச்சியாய்ப் பிடுங்கிக் கொண்டு தான் பாயுமிடமெல்லாம் சுந்தம் செய்து கொண்டு உடல் அகலத்துள் பரவுவது தெரிந்தது.
– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.