ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம் படிக்கும் அவள், மூன்றாம் பருவத் தேர்வுகள் எழுத வந்திருந்தாள். முந்தின நாள் இரவு வந்து, அவளை விட்டு, விட்டு, மறுநாள் ஊர் திரும்பி போய் விட்டான் கணவன். தொடர்ந்து ஆறு நாட்கள், மாலையில் தேர்வு.
அப்பா ரகுநந்தனும், அம்மா ஜெயந்தியும், ஆறு நாட்களும் மகளை சிறப்பாக கவனித்து அனுப்ப திட்டமிட்டிருந்தனர்.
நான்கு மாதங்களுக்கு பின் வந்திருக்கும் மகள், பெற்றோருக்கு புதிய ஆச்சரியத்தை தந்தாள். கல்யாணத்திற்கு முன் நான், உங்களுக்கு அரை டிக்கட்டாய் தெரிந்திருக்கலாம்; இப்போது, நானும் முழு டிக்கட். உங்களுக்கு, நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதையை, எனக்கும் தாருங்கள். உரிமையாய் கண்டிப்பதையோ, கை நீட்டுவதையோ மறந்து விடுங்கள்.
உங்கள் வீட்டிற்கு வந்தால், எதையும் அள்ளிப் போக எனக்கு உரிமை இருக்கிறது; அதை, நீங்கள் தடுக்கக் கூடாது. முடிந்தால், மூட்டை கட்டி எடுத்துப் போக உதவுங்கள் என்ற பாவனை அவளிடம் தெரிந்தது.
“இதற்கு தானா ஆசைபட்டாய் பாலகுமாரி?’ என்ற தொனியும், அவள் முகத்தில் காணப்பட்டது.
அம்மா ஜெயந்தி, மீன் மார்க்கெட்டுக்கும், அப்பா ரகுநந்தன், அலுவலகத்திற்கும் புறப்பட்டனர். “”விறால் மீன் மற்றும் பெரிய சைஸ் இறால் மீனும் வாங்கிக்க. அப்புறம், இவளுக்கு வியர்குரு பவுடர் வாங்கிக்க. மெடிக்கல்ல, இவளுக்கு சாபி யுனானி டானிக் வாங்கிக்க. வழில, அஞ்சு கிலோ வெயிட்ல, முழு தர்பூசணிப்பழம் வாங்கிக்க.”
கணவன் சொல்வதற்கெல்லாம், பூம் பூம் மாடு போல தலையாட்டினாள் ஜெயந்தி. அப்பாவும், அம்மாவும் பேசிக் கொள்வதை, கண்கள் குறுக்கி பார்த்தாள் மாளவிகா.
பிளஸ் டூ முடிக்கும் வரை, அப்பா பிள்ளையாக இருந்த மாளவிகா, இளங்கலை, முதுகலை படிக்கும் போது, மாநில சுயாட்சி கேட்கும் மாநிலமாக மாறியிருந்தாள். திருமணத்திற்கு பின், அம்மா பிள்ளை ஆகிவிட்டாள்.
பெற்றோர், அவரவர் வேலைகளுக்கு போக, பாட புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் மாளவிகா. இடையே, கணவனுக்கு போன் செய்தாள். பின், ராஜபாளையத்திலிருக்கும் மாமியாருக்கு போன் செய்து, உடல் நலம் விசாரித்தாள். 11:00 மணிக்கு, வீதியில் விற்று போன நுங்கை வாங்கி தின்றாள். 11:30 மணிக்கு, படிப்பதை கொஞ்சம் நிறுத்தி, மொபைல் போனில் பாட்டு கேட்டாள்.
பகல், 11:45 மணிக்கு, வயர்கூடை நிறைய சாமான்கள் வாங்கி, வீட்டிற்குள் பிரவேசித்தாள் அம்மா. அவள் வந்த ஒரு சில நிமிடங்களில், “தபதப’வென ஓடி வந்தார் அப்பா. கால் செருப்புகளை உதறியடித்தார்.
“”அறிவிருக்கா உனக்கு… தெண்டம், தெண்டம்!” மனைவியை சினந்தார்.
“”எதுக்கு திட்றீங்க?” – அப்பாவியாய் வினவினாள் ஜெயந்தி.
“”ஒண்ணேமுக்கா மணி நேரத்துல, 14 தடவை உனக்கு போன் செய்தேன். ஏன் ஸ்விட்ச் ஆப் செய்திருந்த?”
“”மொபைல் போனில் சார்ஜ் பண்ண மறந்திட்டேன். சுத்தமா சார்ஜ் இல்லாததால, ஸ்விட்ச் ஆப்ன்னு பதில் வந்திருக்கும்!”
“”என்னவோ, ஏதோன்னு பதறி போயிட்டேன்!”
“”கல்யாணமாகி, 25 வருஷமாயிருச்சு; அரைக் கிழவி ஆயிட்டேன். இனி யாரும் என்னை கடத்திட்டு போயிட மாட்டான்!”
“”நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு பேசுற… கழுதை, கழுதை… கட்டிக்குடுத்த மகளை பாத்ததும், வாய் கூடிப் போச்சா?”
“”கழுதை, கழுதைன்னு பேசாதீங்க. என்ன தலை போற காரியத்துக்கு போன் செய்தீங்க… பொண்டாட்டியை பாக்காம, ஒண்ணேமுக்கா மணி நேரம் இருக்க முடியாதா உங்களுக்கு?”
“”முக்கியமான ஆபீஸ் பைல் ஒண்ணு தொலைஞ்சு போச்சு. உன்கிட்ட குடுத்து வச்சிருக்கேனோன்னு கேக்கத்தான் போன் செய்தேன். உன் புலம்பல் மூஞ்சியை, எட்டு மணி நேரம் பாக்காம இருக்கத்தானே, நான் ஆபீசுக்கே போய் வர்றேன்!”
“”வந்திருக்கிற மக முன், ஆட்டம் போடுறீங்களா?”
“”ஹுக்கும்… நீ பெரிய முமைத்கான்; நான் வில்லன் நடிகன். “என் பேரு மீனாகுமாரி… நான் போறேன் கன்னியாகுமரி…’ன்னு நீ பாட, “பம்பரக் கண்ணாலே…’ன்னு நான் ஆட்டம் போடுறேன். உன் மகளை கட்டிக்குடுத்த கையோட, இலவச இணைப்பா உன்னையும் அவளோட அனுப்பியிருக்கலாம். மகளுக்கு புழுக்கை வேலை பாத்துக்கிட்டு, அவளோட கொஞ்சி குலாவிக்கிட்டு இருந்திருப்ப. நான் இங்க கொண்டாட்டமா, கோலாகலமா இருந்திருப்பேன்!”
“”நீ குடுத்த பைல், என்கிட்ட தான் இருக்கு; அது, எங்கயும் தொலைஞ்சு போகல. நீயும், உன் ஞாபக சக்தியும்… என் பேராவது உனக்கு மறக்காம இருக்கா?”
“”என்னடி.. என்னை நீ, வா, போன்னு பேசுற?”
“”நீ ஒரு ஆள் தானே… சிங்குலர்; நீங்கள்ன்னு கூப்பிட்டா, ப்ளூரல் ஆய்டுதுய்யா!”
“”ய்யா?”
“”உன் மக இல்லைன்னா, உன் மரியாதை இன்னும் எறங்கிடும்!”
“”மதியானம் நான் ஆபீசுக்கு போகும் போது, பைலை குடுத்துவிடு புண்ணாக்கு. விறா மீன் வாங்கிட்டு வரச் சொன்னேனே… வாங்கிட்டு வந்தீயா?”
“”கொடுவா மீனை துண்டாடி, கூறு, நூறு ரூபாய்ன்னு சொன்னான்; ஒரு கூறு வாங்கியிருக்கேன். பொடி இறால் அரை கிலோ, அறுபது ரூபாய்க்கு வாங்கிருக்கேன்!”
“”ஐநூறு ரூபாய்க்கு மீன் வாங்கிட்டு வரச் சொன்னா, 160 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்திருக்க… கஞ்சக் கழுதை!”
“”ஓவரா பேசாதே புருஷா. பகல்லயே தண்ணி போட்டு வந்திருக்கீயா? பரிட்சைக்கு படிக்கிற மகளை, மீன் அரிய சொல்ல வேண்டாமேன்னு, கொடுவா மீன் கூறு வாங்கிட்டு வந்திருக்கேன். விறா மீன் மார்க்கெட்ல இல்ல; கட்லா மீன் தான் இருந்துச்சு. முள் அதிகம்ன்னு வாங்கல. பெரிய இறால் கிலோ, நானூறு ரூபாய்ன்னு சொன்னான்; வாங்கல. நீ என்ன கலெக்டர் சம்பளமா வாங்கற? ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் மீன் வாங்க!”
“”ரெண்டு பேரும் சண்டை போடாம இருக்கீங்களா?”
“”நீ வாயை மூடிக்கிட்டு எட்டிப் போ. பொண்டாட்டி – காங்கிரஸ், மக – தி.மு.க., ரெண்டும் கூட்டணி வச்சுக்கிட்டு, பா.ம.க., – என்னை மண்ணைக் கவ்வ வைக்கறீங்க. மகளை கட்டிக் குடுத்திட்டா, அப்பன்காரன் பேசாம சன்னியாசம் வாங்கிடணும். இல்லேன்னா, கொசு தொல்ல, கரப்பான் தொல்ல மாதிரி, மக தொல்லை, பொண்டாட்டி தொல்லை!”
“”என்னவோ போங்க. ஹும்… இவ்வளவு பேசுறீங்களேப்பா… சீர்ல எலக்ட்ரிக் ஓவன் வாங்கி வைக்க மறந்திட்டீங்களே… ஏன்? சந்நியாசத்ல சமைக்க தேவைன்னு தக்க வச்சுக்கிட்டீங்களா?”
“”ஆங்… அதையும் வாங்கி குடுத்திட்டு, திருச்செந்தூர் வாசல்ல பிச்சை எடுக்கறேன். உன்கிட்ட என்ன பேச்சு? பொண்டாட்டி சரியில்லாத வீட்ல, மக துள்ளி தான் விளையாடுவா. “சாபி’ வாங்க சொன்னேன்… வாங்கினீயா?”
“”சாபி கசப்பு, உன் மகளுக்கு பிடிக்கல. வாங்கிக் குடுத்தா, ஒளிவா, மறைவா நின்று கொட்றா. இருநூத்தி சில்லறை வேஸ்ட் பண்ண வேண்டாம்ன்னு வாங்கல…”
“”வியர்குரு பவுடர் வாங்கினீயா?”
“”ஒண்ணுக்கு ஒண்ணு ப்ரீன்றதுனால, போரோசில் வாங்கிட்டு வந்தேன்!”
“”ஒண்ணுக்கு நாலு ப்ரீன்னா, பச்சை களி மண்ணை வாங்கிட்டு வந்திருப்ப போல… தர்பூசணி?”
“”உன் மக ஒரு விள்ளல் தின்னுட்டு, மீதிய ப்ரிட்ஜ்ல போட்டு வைப்பா… எதுவுமே, அவளுக்கு வாங்கற வரைக்கும் தான் முக்கியம்; அப்புறம் அது பரண்லயோ, குப்பைக் கூடையிலையோ தான் கிடக்கும்!”
“”பேசாதடி… மொத்தத்துல, நான் சொன்ன எதையும் வாங்கல. 25 வருஷமா, நான் காலால சொல்ற வேலைகளை, நீ தலையால செய்ற மாதிரி நடிச்சிருக்க. உன் மக கல்யாணத்துக்கு பிறகு, உன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சிட்ட.”
“”நீ என்ன பொண்டாட்டிய, பொண்டாட்டியாவா நடத்தற… கொத்தடிமையாவுல்ல நடத்தற?”
“”நான் தான் கொத்தடிமை… அதுவும், சம்பாதிச்சு கொட்ற கொத்தடிமை!”
“”சீ… போய்யா!”
“”அடச்சி… நீ போடி…”
“”ஏஏ… போடா போடா…”
“”போடி வாழை மட்டை… 45 வயசானவுடன், உனக்குள்ள உங்கம்மா புகுந்திட்டு ஆடுறாளோ…”
“”அம்பது வயசானவுடனே, உனக்குள்ள உங்கப்பன் புகுந்திட்டு, மேல் ஷாவனிஸ்ட் ஆட்டம் போடுறானோ!”
“”எங்கப்பனை பத்தி பேசாத… நாக்கை
அறுத்திடுவேன்!”
“”எங்காத்தாளை பத்தி பேசாதே… எதையாவது அறுத்திடுவேன்!”
வாய்க்குள் தொடர்ந்து எதையோ முணுமுணுத்தான் ரகுநந்தன். “”டேய்… கெட்ட வார்த்தை பேசுறீயா நீ? நானும் பேசுவேன்டா!” – வாய்க்குள் தொடர்ந்து எதையோ முணுமுணுத்தாள் ஜெயந்தி.
“”என்னடி… ரொம்பத்தான் பண்ற… உன்னை கொலை பண்ணிடுறேன் பாரு!”
“”என்னடா… ரொம்ப தான் பிலிம் காட்ற… உன்னை தீர்த்து கட்டிடறேன் பாரு!”
ஒருவரின் கழுத்தை ஒருவர் நெறிக்க ஆரம்பித்தனர். இருவருக்குள்ளும் புகுந்து, இருவரையும் பிரித்தாள் மாளவிகா.
“”ப்பா… இவ்வளவு மோசமாவா, “பிஹேவ்’ பண்ணுவீங்க? வெளில போய்ட்டு ரெண்டு மணிக்கு வாங்க… அம்மா… உனக்கும் இவ்வளவு வாய் கூடாது? மேட் பார் ஈச் அதர் தம்பதிகள்ன்னு உங்களை ஊர் உலகம் சொன்னதெல்லாம், அபத்தமா போச்சு. நான் சிம்பிள் சமையல் செய்து வச்சிட்டு, பரீட்சைக்கு போயிட்டு வந்திடுறேன்.”
ரகுநந்தன் வெளியேறினார். இரண்டாவது படுக்கையறைக்குள் போய், கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டாள் ஜெயந்தி.
இரவு, 1:00 மணி.
பரீட்சைக்கு படித்துவிட்டு, தூங்கும் மகளை பார்த்தவாறே, பூனை பாதம் வைத்து, மனைவி அறைக்கு போனார் ரகுநந்தன். கதவை மெதுவாக தள்ள, கதவு திறந்து கொண்டது. ஜீரோவாட் பல்ப் வெளிச்சத்தில், படுக்கையறையில் மனைவி படுத்திருப்பது தெரிந்தது. மெதுவாக பக்கத்தில் போய் படுத்து, உருண்டு, மனைவியின் முகத்துக்கு நேர், தன் முகத்தை கொண்டு வந்தார்.
“”என்னடி ராங்கிகாரி… சண்டை போதுமா?”
“”மிஸ்டர் முன்கோபம்… சண்டை போதுமா?”
“”ரொம்ப திட்டிட்டேனோ… சாரி குட்டிம்மா!”
“”நீங்களும் என்னை மன்னிச்சிருங்க. நம்மளோட இந்த டூப்ளிகேட் சண்டை தேவை தானா?”
“”தேவை… ரொம்ப நாளா நம்ம மகளுக்கு, நம்ம மேல போட்டி, பொறாமை. ஊர் உலகத்துல, புருஷன் – பொண்டாட்டிகள், பாகிஸ்தான், இந்தியாவா உருண்டு புரளும் போது, நம்ம அப்பா – அம்மா மட்டும், புது காதலர்கள் போல், கொஞ்சி குலாவிக்கிட்டு இருக்குகளே… இதுகளுக்குள்ள சண்டையே வராதான்னு, நம்ம மக ஏங்கிட்டு இருந்தா. நேயர் விருப்பத்தை நிறைவேத்தவே, இந்த சண்டையை அரங்கேற்றினோம். நாம் பண்ணின கல்யாண சீர்ல, பெஸ்ட் சீர், நம்ம சண்டை தான், நம்ம மகளைப் பொறுத்த வரைக்கும்!”
சிரித்தாள் ஜெயந்தி.
“”வாடி செல்லம்… நல்லா நடிச்சதுக்கு சம்பளம் தர்றேன்!” – ஆலிங்கனம். இருவரும், காதலாய் கசிந்துருகினர். தூங்குவது போல் நடித்த மகள் மாளவிகா, எழுந்து அமர்ந்தாள். கிழடுகள், நம்ம முன்னாடியே டூப்ளிகேட் சண்டை அரங்கேத்துதுக. மணிரத்னம் படம் அளவுக்கு நடிக்குதுன்னு பார்த்தா, விசு படம் அளவுக்கு நடிச்சா எப்படி? வெரி ஓல்ட் அவுட்டேட்டட் ஜோதிகா டைப் ஆக்டிங்.
“திருமணத்திற்கு முன், ஒற்றுமையான பெற்றோரின் காதலைக் கண்டு நான் பொறாமைபட்டிருக்கிறேன். ஆனா இப்ப, பெற்றோரின் சிறப்பான இல்லறத்தால் தான், எனக்கு அற்புதமான கணவனும், உயரிய சம்பளம் கூடிய வேலையும் கிடைச்சிருக்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஈகோக்களை ஒதுக்கிட்டு, அமைதியான இல்லறம் நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம்ன்னு, இந்த நாலு மாசத்துல நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன்.
“என் பெற்றோரின் காதல் வாழ்க்கை எங்களுக்கும் அமையணும்ன்னு, இறைவனை வேண்ட ஆரம்பிச்சுட்டேன். இளைய தலைமுறையின் எதிர்காலம், ஒற்றுமையான பெற்றோர் கையில். என் ப்ரிய அம்மாப்பா… இன்னும், 74 வருஷம், உங்க காதல் தாம்பத்யம் தொடர வாழ்த்துகிறேன். உங்களை மட்டுமல்ல, உங்களை போன்ற ஆயிரம், ஆயிரம் ஒற்றுமை பெற்றோர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்!’
“”மாலை நாலு மணியிலிருந்து, ஏண்டா போன் பண்ணல?” என, நள்ளிரவு, 2:00 மணிக்கு கணவனுக்கு போன் செய்து, பொய் சண்டை இட ஆரம்பித்தாள் மாளவிகா.
– ர.அருள்தாஸ் (ஆகஸ்ட் 2011)