நெல் வயல்களுக்கு அப்பால்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 13,637 
 
 

அந்த சித்திரை மாதத்தில், மூலங்குடியின் தெற்கு பார்த்த பண்ணை வீட்டுக்கு வந்து சேர்ந்த போது சுட்டெரித்த வெயில் தணிந்து போய் வானம் இருள் கொண்டிருந்து.சடுதியில் புழுக்கம் எழுந்து உடம்பெங்கும் வியர்வையை வர செய்தது . ஆட்கள் யாருமற்று அந்த வீடு தனிமையில் உறைந்து போயிருந்து. தனி வீடுகளில் அதிகளவில் நாய்கள் வளர்ப்பார்கள் ஆனால் இங்கு நாய் இல்லாமல் இருந்தது வியப்பளித்தது. புற வாசல் பக்கம் எட்டிப்பார்த்தான். வயிறு பசித்தது. காலையில் குடித்த பச்சப்பயறு கஞ்சி போன இடம் தெரியவில்லை. வீட்டின் பின் புறம் நீண்டு இருந்த தென்னை தோப்பில் மா, கொய்யா. நெல்லி மரங்கள் தெரிந்தன. கருங்குயில் ஒன்று குரல் எழுப்பியது. சில நிமிடங்களில் சட்டென்று சூழல் மாறியது. குளிர்ந்த காற்று உடல் தழுவ மழை பிடித்துக் கொண்டது. கடும் காற்றுடன் பெரும் சத்ததுடன்கொட்டியது . உற்சாகம் பீறிட பழைய நடவு பாடலொன்றை முணுமுணுத்தான். பெய்து கொண்டேயிருந்தது மழை.

மரங்கள்அடர்ந்த தோப்பு அவனுக்கு பருவ மழை காலத்தை ஞாபகப்படுத்தியது. நினைவுகள் முன்னும் பின்னுமாக சுழன்றன. ஆளில்லாத வீட்டில் இருப்பது பயமாக இருந்தது என்றாலும் யாராவது ஆட்கள் வருவார்கள் என்று எதிர்ப் பார்த்தான். அப்போது தொப் என்று நனைந்த மேனியோடு ஆடைகள் உடம்பில் ஒட்டியிருக்க சரசரக்க வந்து கொண்டிருந்தாள் சுந்தரவள்ளி.அவர் சொன்ன பெண் இவள் தானோ? ஐந்தடிக்கும் குறையாத உயரத்தில் சற்று உடல் பருத்து கன்னம் குழி விழும் சதுரமான முகமைப்பில் இருந்தாள். வயதும் கூட நாற்பதிலிந்து இரண்டு மூன்று கூட இருக்கலாம். முகத்தில் நல்ல தெளிவு தெரிந்ததது.

கரியப்பன் அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

யாரு நீ யாரை பாக்கனும் ? சற்று அதட்டும் தொனியில் கேட்டாள்.

சட்டென்று பதட்டம் பற்றிக்கொண்டது. அந்த வீட்டின் ஆளோடியில் இருந்து எழுந்து கொண்டான் . மழை உக்கிரமாய் பெய்ந்து கொண்டிருந்தது. காற்றில் மரங்கள் குலுங்கின. காகங்களும் மாடப்புறாக்களும் நனைந்தபடி குரலிட்டுக் கொ ண்டு பறந்தன. இப்படி கோடையில் மழை பெய்வது வியப்பாக இருந்தது.

‘சுந்தரமூர்த்தி அனுப்பினாங்க’..

சுந்தவள்ளி அவனை குழப்பமாக பார்த்தாள்.

‘என்னை சுந்தரமூர்த்தி அனுப்பி வைத்தருங்க. கொல்லய பாத்துக்க ஆள் வேனுமுன்னு கேட்டிங்களமே’

‘ம்…ஒனக்கு எந்த ஊரு’

‘தண்டலைச்சேரிங்க’

‘உன் பெயரு’

‘கரியப்பன்’

அவள் முகத்தில் மாற்றம் எழுந்தது. தலையை அசைத்து விட்டு . இங்கே நில்லு என்று சைகையால் காண்பித்து, விட்டை திறந்து உள்ளே நுழைந்தாள். அப்போது மழையின் தீவிரம் குறைந்து சிறு தூறல் விழுந்து கொண்டிருந்தது.

சில மணி நேரத்துக்கு முன்பு அடித்த வெயில் தாக்கம் அடியோடு குறைந்து போய் திடிரென்று குளிர்மை பரவியதால் உடல் அதனை ஏற்றக் கொள்ள தடுமாறியது.
அவள் உள்ளே செல்போனில் எவரிடமோ பேசுவது கேட்டது. காதுகளை கூர்மைப்படுத்தினான்.

சில நிமிடங்களில் க.ழித்து உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

‘சம்பளம் எவ்வளவு கேட்குற’

‘நீங்க எம்புட்டு கொடுத்தாலும் அவுங்க வாங்கிக்க சொன்னாங்க’

மூணு வேளை சோறு உண்டு .வயகாட்டு தோட்டத்துல இருக்கிற கொட்டயில தாங்கிக்கனும் மாசத்துக்கு ரெண்டாயிரம் சம்ளம். இன்னக்கி நாளு சரியில்ல ஊருக்கு போய்ட்டு நாளக்கி மறு நா…வந்துடு…

சரிங்க என்று தலையாட்டி விட்டு திருப்பி பார்க்கமால் நடக்கத் தொடங்கினான்.

இரவு வந்திருந்தது எரியும் ட்யூப் விளக்கை சுற்றி விட்டில் பூச்சிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. பள்ளிக்கு சென்ற திரும்பிய ப்ரிதா நடு அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள்.சுந்தரவள்ளி டிபன் ரெடி செய்து மகளை அழைத்தாள் இருவரும் சாப்பிட்டார்கள். ப்ரிதா எட்டாம் வகுப்பு படித்தாள். நாளைக்கு மிட்டம் பரீட்சை இருப்பதால் ரூம்மில் உட்கார்ந்து படிக்க போகிறேன் என்று சொல்லி சென்று விட்டாள். பாத்திரங்களை சமையல் கேட்டில் அள்ளிப்போட்டாள். நிறைய சாப்பிட்டது வயிறு நிறைவு கொண்டிருந்தது. அறைக்கு சென்று படுக்கையை சரி செய்து கட்டிலில் முதுகுக்கு சாய்மானம் கொடுத்து அமர்ந்தாள். எதிரே மாட்டியிருந்த அப்பாவும் அம்மாவும் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்தாள். அப்பா உற்றுப் பார்த்து ஏதோ சொல்ல வருவது போல பிரமை தட்டியது. நினைவுகள் மெல்ல கசிந்தன. கண்களை துடைத்துக் கொண்டாள்.

மைசூரிலிருந்து இருபது மைல் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் எட்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்தது பட்டனப்பள்ளி கிராமம். தொடர்ந்து பெய்ந்த அடைமழையில் நிலசரிவு ஏற்பட்டது. அங்கேயிருந்து தப்பிய மூன்று குடும்பங்களில் தாத்தா சித்தண்ணன் செட்டி குடும்பமும் ஒன்று அப்போது அப்பா சிங்கபுண்ணன் செட்டிக்கு ஐந்து வயது. கூட பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டு பெண்கள் மட்டுமே அப்பாவோடு மிஞ்சினார்கள். அந்த காலத்திலேயே உபாத்தியார் படிப்பு பயிற்சி பெற்ற தாத்தா மைசூர் அரண்மணையின் சேவகர்களில் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பாடம் சொல்லிக் கொடுத்தார். காலை நேரங்களில் பல சரக்கு வணிகர்களிடம் சென்று கணக்கு எழுதி கொடுத்தார். சொற்ப வருமானத்தில் குடும்பம் தள்ளாடியது .தாத்தாவின் கஷ்ட ஜீவனத்தை போக்க அப்பா மதராஸ் வந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியில் தெரிந்த உறவினர் மூலம் 16 வயதிலேயே வேலைக்கு சேர்ந்தார். சில வருடங்களிலே மதராஸ் ஸ்டேட் ஆங்கிலேயர் வசமாகியது. நெல்லை சீமை கலெக்டர் எல்டன் துரைக்கு தபேதராக பணிக்கு அனுப்பட்டார். நெல்லையில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலே மைசூரிலிருந்து வந்த தாத்தா கல்யாணம் செய்து வைக்க அப்பாவை அழைத்து சென்றார். ஒரு வார விடுமுறையில் ஊருக்கு சென்ற அப்பா அம்மா கெங்கம்மாவை மணம் முடித்து அழைத்து வந்தார். வருடம் ஏழு ஆகியும் குழந்தை பேறு இல்லமால் இருந்தாள் அம்மா. சித்த வைத்தியர்களின் வைத்தியங்கள் பலன் தரவில்லை. கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். எல்டன் துரை பதவி உயர்வு லண்டன் சென்ற பிறகு ஒரு மாதம் கழித்து ஒரு நாள் மதுரை கள்ளழகர் கோயிலில் பெருமாள் தரிசனம் செய்து விட்டு, மலையிலிருந்து இறங்கி வந்த போது தான் மதுரை கலெக்டரிடம் தபேதராக வேலைப் பார்க்கும் சிதம்பரத்தை பாத்தார்கள். அவர் தான் . கோலாட்டி சித்தர் பற்றி சொன்னர். அவர் குற்றாலத்தில் ஐந்தருவி அருகில் ஒரு குகையில் இருப்பதாகவும் அவரை உடனே, பாருங்கள் என்றும் சொல்லி சென்றார். சித்தரை பார்க்க சென்ற அந்த வியாழக்கிழமை இளம் மதிய பொழுதில் உடலில் உறைக்காத இதமான வெயில். ஐந்தருவியில் குறைவாக தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அங்கே சித்தர் அமர ஒரு கல் இருந்தது.தொலைவில் கரடுமுரடான பாதையில் மலையில் சரிவுக்குள் இருந்தது குகை. நாலைந்து ஆட்கள் வெளியே நின்றனார்கள். சித்தர் தியானத்தில் இருக்கிறார் என்றார்கள். ஒரு மணி நேரத்துக்கு பிறகு உள்ளேயிருந்து வந்தார் . ஆறடி உயரத்தில் சாந்தமான முகத்துடன் வந்து முட்டு கல்லில் அமர்ந்தார். அங்கிருந்தவர்கள் கையெடுத்து கும்பிட்டார்கள்.

சிங்கண்ணன் இங்கன வாடா’..

‘சுவாமி’ ….

‘ஒம் பொஞ்சாதிய ஒன்பது நா…கழுதை சாணிய கரைச்சி வெறும் வயித்துல குடிக்க சொல்லுடா…அடுத்த ஒரு பௌர்ணமியில கரு தரிக்கும் புள்ளய தூக்கிகிட்டு வா’
இருவரும் ஆசி பெற்று வீடு வந்தனர். வாரத்துக்கு இரண்டு நாள் என்று சாணம் குடித்த அம்மா குமட்டி வாந்தியெடுத்து துவண்டு போனாள். அடுத்த மாதமே கருவுற்றாள். பத்து மாதங்கள் நாழிகையாக ஒடின. அதே பௌணர்மி வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறந்தது. தூக்கிக்கொண்டு கோலாட்டி சித்தரிடம் ஒடினார்கள். குழந்தையை உற்றுப்பாத்த அவர் ‘நல்ல ராசியில பொறந்திருக்கா சொத்து பெருவும் ஆனா ஒனக்கு ஆண் வாரிசு கிடையாது. இவளுக்கு பஞ்சவர்ணம்முன்னு பேரு வைய்யு’ என சொல்லிவிட்டு மலை உச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதன் பிறகு சில மாதங்களில் திருச்சிக்கு மாற்றலாகி வந்தார். பிரிட்டிஸ் அதிகாரிகளிடம் விசுவாசமாக நடந்து கொண்டதால் தஞ்சாவூர் பக்கத்தில் மூலங்குடியில் 30 வேளி புறம்போக்கு தரிசு நிலத்தையும் ,கும்பகோணம் சுவாமிமலையில் காவேரியாற்றின் கரையை ஒட்டிய 27 வேலியும் தனது பெயரில் பட்டா போட்டுக் கொண்டார். அவர்கள் நாட்டை விட்டு போகும்போது நிறைய நகைகளை கொடுத்துச் சென்றார்கள். மூலங்குடிக்கு வந்து வீட்டைக் கட்டிக் கொண்டு நிலத்தை வளைத்துப் போட்டு விவசாயம் செய்து பண்ணையராக வலம் வரத்தொடங்கினார்.

கரியப்பன், சுந்தரமூர்த்தியை பார்க்க குளிக்கரை மேட்டுத் தெருவுக்கு வந்தபோது மாடுகளுக்கு உண்ணி பிடிங்கி கொண்டிருந்தார். ஒரு நாள் மழையில் வயல் வெளி, தோட்டங்கள் ,புதர்காடுகள் என எங்கும் அலாதியான அழகில் பச்சை துயில் கொண்டிருந்தன.வெகுநாளுக்கு பிறகு பச்சைக்கிளிகளையும் செண்பக வகையாறக்களையும் பார்ததான். ஒரு மஞ்சள் பைக்குள் நிறைய ஆடைகளை திணித்திருந்தான்.

‘வாடா.. கிளம்பிட்டியா,அந்த செட்டியார் குடும்பம் எனக்கு ரொம்ப வேண்டியபட்டது. எங்க அப்பாரும் செட்டியாரும் திருச்சியில உத்தியோகம் பார்த்தவாங்க.ரொம்ப கால சினேகிதம். ஒண்ணா சேர்ந்து மில்லு வெச்சாங்க .அந்த பொண்ணு உன்ன அன்னக்கி பார்த்ததும் கொஞ்சம் தயக்கம பேசியது. நான் உன்னப்பத்தி நல்ல மாதிரி எடுத்துச் சொல்லியிருக்கேன். மாரியதையாக நடந்து என் பேரைக் காப்பத்து.’

‘சரிங்க பெயிட்டு வர்றேன்.’

மூலங்குடிக்கு வந்திருந்தான். வீட்டு வாசலில் நின்று ‘ஆச்சி….’ என குரலிட்டான்.

உள் அறையிலிருந்து எட்டிப்பாத்து விட்டு வெளியே வந்தாள் சுந்தரவள்ளி எதுவும் பேசமால் புறவாசல் பார்த்து ‘ அம்மாசி இங்க வா’… என்றாள் சற்று நேரத்தில் வயதான ஒருவர் வந்தார்.

‘இவரு தான் நான் சொன்ன ஆளு…இவரை கொண்டு போயி நம்ம வய காடு எல்லாத்தையும் சுத்தி காட்டிட்டு, இந்தா சாவி, கொட்டகையில திறந்து விட்டுட்டு வா’

அம்மாசி வேகமாக நடந்தார் .வயது எழுபதுக்கு மேலிருக்கும் ஆனாலும் அவ்வளவு சுறுசுறுப்பு. இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு கிராமம் முழுவதையும் சுற்றி முடித்திருந்தனர். கொட்டகையை திறந்து இருவரும் உட்காந்தார்கள். அம்மாசி இடுப்பில் சொருகியிருந்த வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்தார் காய்ந்த சுண்ணாம்பு வாசனை எழுந்தது. இந்த கிராமத்தைப் பற்றியும் செட்டியார் குடும்பம் குறித்தும் அவர் வாய் அசைபோட துவங்கியது. அந்த குடும்பத்தை பற்றி கதை கதையாக சொன்னார். அதில் சுந்தரவள்ளியை பற்றி சொன்னது மட்டுமே பிடித்தது.

சித்திரை மாதம் என்பதால் விவசாய வேலைக்கு இது ஏற்ற பருவம் இல்லை.பண்ணை வீட்டுக்கு பின்னே நீண்ட கிடந்த தோட்டத்தில் மழை பெய்த ஈரம் இருந்தால் புற்கள் முளைத்திருந்தன. கரியப்பன் மாடுகளை அவிழ்த்து மேய்த்துக் கொண்டிருந்தான். அம்மாவின் ஞாபகம் முகம் நினைவுக்கு வந்தது. அம்மா இருந்தவரை சாப்பாட்டுக்கு கவலையில்லை எப்படியவாது ருசியான சாப்பாடு கிடைத்து விட்டும். அப்பாவின் முகத்தை கூட பார்த்தது கிடையாது. அம்மா வயிற்றில் மூன்று மாத சிசுவாக இருந்தபோது நடந்த குஸ்தி போட்டியில் கலந்து கொண்டதாகவும் அவரை விழ்த்த முடியாதளவுக்கு அசுர பலம் நிறைந்தவராக இருந்தார் என்பதால் மான் கொம்பில் விஷம் தடவியோ, அவர் குடித்த கள்ளிலோ ஏதோ வைத்து கொன்று விட்டார்கள் என்று அப்பாவின் ஞாபகம் வரும்போது எல்லாம் அம்மா புலம்புவாள். தாத்தா சின்னசாமி விடுதலை போராட்ட தியாகி. அவருக்கு அரசு வழங்கிய ஒரு ஏக்கர் வயலில் எந்த நேரமும் உழைத்துக் கிடந்தாள். தாத்தாவை ஆங்கிலேய போலீசார் தேடி அடிக்கடி வருவார்கள். அதற்கு பயந்து கொண்டு நெருங்கிய அப்பாவின் பங்காளி உறவுகள் திருச்சி குளித்தலை பக்கமாக போய்விட்டார்கள். தாத்தாவுக்கு அப்பா ஒரே பிள்ளை. அதே போல இவனும் ஒத்தையாக அமைந்து விட்டான் என்ற வருத்தம். அம்மாவுக்கு இருந்தது. இவனுக்கு காலகாலத்தில் கல்யாணம் செய்து வைக்க பல வழிகளில் பெண் தேடினாள். ஆனால் அந்த பெண்களை எல்லாம் வேண்டாம் என்று மறுத்தான்.. அம்மா வகை உறவில் பார்த்து பேசிய லெட்சுமியை கூட வேண்டாம் என்று மறுத்து விட்டான். இல்வாழ்க்கை குறித்து அவனுக்குள் அச்சம் இருந்து கொண்டேயிருந்தது. வயது ஐம்பதை நெருங்கிவிட்டது. அம்மா இருந்த நாட்களில் எல்லாம் மராமத்து வேலை பார்த்து சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு சரக்கு அடிக்க நண்பர்களோடு காரைக்கால் கிளம்பி விடுவான். அம்மா இறந்த பிறகு அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டான். அதன் பிறகு தான் கொத்து வேலைக்கு போன போது ஆண்டிபாளையம் விஜயாவோடு பழக்கம் ஏற்பட்டது. இவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்ததும் நெருங்கி பழகி வந்தாள். அவள் கணவன் மாரிமுத்து மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்து போனதால் பிழைக்க வேறு வழியின்றி வேலைக்கு வந்ததாக சொன்னாள். பூதமங்கலத்தில்.சுல்தான் பாய் வீட்டு கான்கிரிட் வேலை முடிந்து திரும்பிய அந்த பௌர்ணமி முடிந்த முன்றாவது நாள் இரவில் மற்ற ஆட்கள் வேலை முடிந்து போய்விட இருவரும் பஸ் பிடிக்க வேகமாக நடந்தார்கள். ஒரு மைல் தொலைவில் சின்ன பஸ் நிறுத்தம் இருந்தது. கடும் உழைப்புக்கு பிறகு உடல் தளர்ந்து தான் நடந்தார்கள் என்றாரலும் குளிர்ந்த காற்று இதம் வருடியது. ஆள் அரவாரமற்ற சாலையில் நடப்பது திடிரென்று அவனுக்குள் பரவசத்தை சுடர்ந்தது. அவள் ஏதோ முணுணுத்துக் கொண்டே நடந்தாள். பேச வாத்தைகளை தேடினான். நாக்கு உலர்ந்து போனது. அவள் கையைப் பற்றினான்.முனகிக் கொண்டே தோளில் சாய்ந்தாள். வயலில் இறங்கி களத்துமேட்டில் ஏறினார்கள். முதன் முதலாக நிலா வெளிச்சத்தில் பெண்ணுடலின் பரிபூரண இன்பத்தை அடைந்தான். ஆறு மாத காலம் அவளை சுற்றியே படர்ந்தான். ஒரு நாள் அவள் கொத்தனார் முருகேசனுடன் பைக்கில் போவதை பார்த்தான். இது பற்றி அவளிடம் கேட்டான். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மெல்ல இவனை தவிர்க்க தொடங்கினாள்.பேசுவதையும் குறைத்துக் கொண்டாள். தூரத்தில் நின்று பார்க்க மட்டும் தான் முடிந்தது. சில நேரங்களில் அவள் நினைவு வரும்போமது போய் சந்திக்கலாம் என்று எண்ணம் எழும் தவிர்த்து விடுவான்.

அம்மாசி சத்தம் போட்டுக் கொண்டேவேகமாக நடந்து வந்தான்..’ கரியப்பா எம்புட்டு நேரமா கூப்பிடுறேன் காதுல விழல சாப்பிட வா..’ பொழுது உச்சிக்கு போயிருந்தது.

ஆடிப்பெருக்கு இரண்டு நாளுக்கு முன்பாகவே ஒடம்போக்கி ஆற்றில் நுங்கும் நுரையுமாக பழுப்பு நிறத்தில் தண்ணீர் கரைகளைத் தொட்டுக் கொண்டு போய் கொண்டிருந்தது. அம்மாசி நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறி தவறி விழுந்து இடுப்பு முறிந்து படுத்த படுக்கையாக கிடந்தான். கரியப்பன் பண்ணையின் எல்லா வேலைகளையும் இவனே பார்த்துக் கொண்டான் . நீலபெருங்கண்ணி இவனிடம் முகம் கொடுத்து பேசத் தொடங்கியிருந்தாள். இவனால் அவளை இயல்பாக பார்க்க முடியவில்லை. அவள் நெருங்கி வந்து பேசும்போது இவனுக்குள் நடுக்கம் பரவியது. இரவில் உறக்கம் கலையும்போது அவள் நிழலை கிடத்தி உறங்கினான்..

சுந்தரவள்ளி பிறந்த உடனே ஆண் ராசியில்லை என்று செட்டியார் நம்பினார். இவள் கடைசி பெண்ணாக பிறந்திருந்தாள். இவளுக்கு ஜாதகம் எழுதிய சீர்காழி ஜோதிடர் சந்தான கிருஷ்ணன் ஆண்களை அடக்கி ஆள நினைக்கும் ராசியில் பிறந்திருக்கிறாள் என்றார். இவளுடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் காரைக்குடியில் பெரிய அக்காவும், அடுத்தவள் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும் இருக்கிறார்கள். இவளுக்கு 2 வயது இருக்கும் போது செட்டியார் மாடு முட்டி 70 களின் இறுதியில் இறந்து போனார் . அப்போது அவருக்கு 66 வயது. அதன் பிறகு இவள் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். 18 வயதிலே வரன் தேடும் படலம் தொடங்கியது.ஆனால் நாலு வருட தேடலுக்கு பிறகு 22 வயதில் தான் வீட்டோடு மாப்பிள்ளை அமைந்தது. தடபுடலாக திருமணம் நடந்து மாப்பிள்ளை தண்டபாணி ஒரு மாதம் கூட முழுமையாக இவளோடு வாழவில்லை. விட்டால் போதும் என்று ஒட்டம் பிடித்து விட்டான். அவன் சொந்த ஊருக்கு போய் விசாரித்ததில் ஆள்வரவில்லை வரவில்லை என்றார்கள்.. இரண்டு வருடம் ஒடியது. அதற்காக இவள் அலட்டிக் கொள்ளவில்லை. கொழுந்தியாவின் வாழ்க்கையை எப்படியாவது நல்ல விதமாக அமைத்து தரவேண்டும் என்று பெரியக்கா வீட்டுக்காரர் புண்ணியகோடி, இரண்டாவதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவரை மணமகனாக பார்த்து வந்தார். இவள் தயங்கினாள் எல்லோரும் எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்தார்கள். எண்கண் முருகன் கோயிலில் வைத்து எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தார்கள். 6 மாத காலம் சந்தோஷமாக கழிந்தது. தாம்பத்திய வாழ்வின் ருசி புரிந்தது.. ஒரு நாள் சாரயம் குடித்து விட்டு வந்து குடும்ப சொத்துக்களில் பாதியை பிரித்து தன் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தான். இரண்டு நாள் கழித்து வந்து சமதானம் செய்த பெரியக்கா வீட்டுக்காரரை எடுத்தெறிந்து பேசினான். பொறுமை காத்து பார்த்த சுந்தரவள்ளி அவன் சட்டையைப் பிடித்து வெளியே தள்ளினாள். அதற்கு பின்பு தான் செட்டிநாட்டில் இருந்து ப்ரிதாவை 6 குழந்தையாக தத்தெடுத்து வந்தாள். இனி தனது வாழ்வில் ஆண்களுக்கே இடமில்லை என முடிவெடுத்தாள்…ஒரு நாள் அம்மா சொன்னாள் , நம்ம இந்த நெல் வயல்கள் எல்லாம் செழுமையாக விளையக்கூடியவை. இது உன் அப்பாவுக்கு இனமாக கிடைத்திருக்கலாம். ஆனால் அதனை செழுமையான நிலமாக மாற்றியது உன் அப்பா. அப்போது இது கரம்பை நிலங்களாக தரிசாக கிடந்தன. மேட்டையும், வரப்பையும் சீர் செய்து இந்த பகுதி மக்கள் கடும் உழைப்பை செலுத்தி தான் விளை நிலங்களாக மாற்றினார்கள் . இந்த சுற்று வட்டார பகுதிகளில் ஒரு’மா’ வுக்கு இருவது கலம் நெல் விளைவயும் வயல்கள் இதை விட்டால் வேறு இங்கு எங்கும் கிடையாது . வாய்க்கால்கள் அவ்வளவு நேர்த்தியாக அமைந்தவை. காவேரியற்று பாசனம் தான். தண்ணீர் திறந்து வைத்தால் போதும் நண்டு வளையில் கோடை மழை பாய்வதை போல கட கடவென்று பாய்ந்து விடும். எவ்வளவு மழை பெய்ந்தாலும் வெள்ளம் நிற்காது. இங்குள்ள கூலியட்களுக்கு என்றும் நம்முடைய குடும்பம் கடைமைப்பட்டுள்ளது. அப்பா உன்னை ஆணாகவே வளர்க்க சொன்னார். இந்த நெல் வயல்களை தொடர்ந்து விளைச்சல் செய்யவேண்டும் இதனை நம்பியுள்ள விவசாய கூலிகளுக்கு வேலை தரவேண்டும் என்று விரும்பினார். அவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது கூட ‘ இங்கிலீஸ்காரன் கிட்டே ஜால்ரா போட்டு இந்த நிலங்களை நான் வாங்கியிருந்தாலும் நாட்டுக்கு நான் செய்த துரோகத்துக்கு தொடர்ந்து நடவு நட்டு நாலு பேருக்கு சோறு போடுறது மூலமாக தீர்த்துபுடலாம் என்று செய்துக் கிட்டு வந்தேன். .ஆனால் நாட்டு விடுதலைக்கு எதிராக நடந்து கிட்டதற்கு மாடு முட்டி உரிய தண்டனை எனக்கு கொடுத்தவிட்டது. இந்த நெல் வயல்களுக்கு அப்பால் நானும்..என் கூலியட்களின் கனவும் எப்போதும் உறைந்திருக்கும்’ என்றார் அதனை என் மகள்களிடம் எப்போதும் சொல் என்றார்..

விவசாய வேலைகள் முடிந்து இரண்டு வார காலம் ஆகியிருந்து. நெல் பயிர் பச்சை பிடித்துவிட்டது. கூட்டுறவு சொசைட்டிக்கு போய் டிராக்டரில் உரம் ஏற்றி வந்தான். கிணற்றுக் கொட்டகையில் ஆட்களோடு உர மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு வாய்க்கால் நீரில் சின்னதாக குளியல் போட்டு விட்டு வந்தான் எதிரே கையில் தூக்கு வாளியோடு வந்த கனகம், ஆச்சி சாப்பிட வரச்சொன்னாங்க போ.. என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்கு போனாள்.

ப்ரிதா பள்ளிக்கு போயிருந்தாள். புறவாசல் பக்கமாக வந்தான். எப்போதும் அங்குள்ள சிமெண்ட் கட்டையில் சாப்பாடு வைக்கப்பட்டு பூனை வாய் வைக்கமால் இருக்க முங்கில் கூடையால் முடப்பட்டு அது மேல் செங்கல் வைக்கப்பட்டிருக்கும் மூன்று வேளையும் வந்து எடுத்து சாப்பிடுவான். பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு போய்விடுவான். கட்டயைப் பார்த்தான் கூடையை காணவில்லை.. புறவாசல் பக்கமாய் நெருங்கி வந்தான். அவள் உள்ளே குளிக்கும் சப்தம் கேட்டது. ஏதோ ஒன்று தொண்டைக்குள் உருண்டது. உள்ளே போய் காலில் விழுந்து தனது தாபத்தை சொல்லிவிடலமா? மறுத்து திட்டினாள் எங்காவது கண் காணத இடத்துக்கு சென்று விடலாமா? மனம் குழம்பியது உடல் நடுங்கியது உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டே நின்றான். அவள் குளித்துவிட்டு வெளியில் வருவது தெரிந்தது. சட்டென்று பின் வாங்கி விலகி நடந்தான்.

புறவாசலில் வந்து எட்டிப்பார்த்தாள் .சற்று தூரத்தில் இருந்த புன்னை மர நிழலில் நின்றான். வா என்று சைகையால் அழைத்தாள். லேசாக வதங்கிய வாழை எடுத்து வந்து நீட்டினாள்.’தண்ணி படாமல் மூட்டைய அடுக்கியாச்சா..’

ம்… தலையாட்டி அமர்ந்தான். அன்னச்சட்டி நிறைய சுடுசோறும். அதில் வறுத்த மீன் துண்டுகள் இருந்தன..பெரிய கிண்ணத்தில் மீன் குழம்பையும் வைத்தாள்…நல்ல வறுவல் மீன் வாசம் சாப்பட்டின் மீது ஆவலைக் கிளர்த்தியது. நல்ல வெண்ணிறம் கலந்த மெல்லிய நீல நிறத்தில் புடவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தண்ணீரை ஒரு செம்பில் வைத்துவிட்டு எதிரே நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.

சோற்றை கரண்டியால் அள்ளிப்போட்டு விட்டு அவள் முகத்தைப் பார்த்தான். ஒனக்கு பொண்ணு பார்க்குறேன்..கல்யாணம் பண்ணிக்கிறீயா..கடைசி காலத்துல மனுஷ ஒத்தசை தேவைப்படும் அதான் சொல்றேன் நான் சொல்றது விளங்குதா..

‘இல்லிங்க.. இனிமே அது சரிவராதுங்க அந்த மனநிலையும் எனக்கு இல்ல’

‘செலவ நான் பார்த்துக்கிறேன்…தோட்டத்துல வீடு கட்டித் தர்றேன்”.

”வேண்டாங்க..நீங்க வேற என்னா சொன்னாலும் கேட்குறேன்..ஆனா அது மட்டும் வேணாம்.”..

‘நீ அம்பள தானே’

பதிலேதும் சொல்லமால் சாப்பாட்டை பிசைந்தான்.

விருட்டென்று எழுந்து உள்ளே போனாள். விறுவிறுவென அறைகுறையாக சாப்பிட்டு விட்டு மீதமுள்ள சாப்பட்டை எடுத்து கொண்டு இரவு சாப்பிடுகிறேன் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தான். கோண வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வரும் ஆடுமாடுகளை தடுக்க தாண்டு வேலி காட்டும் வேலை பாக்கியிருந்தது வீட்டைப் பார்த்து குரல் கொடுத்தான்.
வெளியே வந்தவள்…’மழைக்காலம் ஆரம்பிக்கபோவுது…கொட்டகைய பூட்டிட்டு துணிகளை எடுத்துக்கிட்டு நீ ஊருக்கு கிளம்பு’

சம்பள பணத்தை நீட்டினாள். தொண்டைக்குள் வலியெடுக்க ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு நடக்கத் தொடங்கினான்

-விகடன் தடம்- ஜூன்-2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *