நெருஞ்சிக்காடு என்று சொன்னாலே சிறு வயதில் எனக்கு நெஞ்சில் முள் குத்தியது போல் வலியை மனதில் உணர வைக்கும். சிறுவயதில் அக்காட்டிற்குள் கால் வைத்து நடக்கச்சொன்னால் அமிர்தமே கிடைத்தாலும் வேண்டாமென மறுத்து விடுவேன்.
ஆனால் அங்கு வாழும் மனிதர்களின் நெஞ்சம் மட்டும் பஞ்சு போல மென்மையாக இருக்கும் என்பதற்கு எனது தாயின் செயலே சாட்சி.
“தங்கம்…. மணி…. எஞ்சாமி…. இங்க வா சாமி… இந்தா மைசூர்பாகு தின்னு….” என அம்மா சொல்லும் போதே என்னிடம் ஏதாவது வேலை வாங்கப்போகிறார்கள் என்பதை பத்து வயதிலும் புரிந்து கொள்வேன்.
“அய்யஞ்சந்தைக்கு போயிருக்கறாரு. வரும்போது உனக்கு தேர் முட்டாயி, தேங்காய்ப் பண்ணு, சீக்கி, பலூனு எல்லாமே வாங்கியாரதா சொல்லிப்போட்டுத்தான் போனாரு. செவல மாடு தீணு இல்லாம சோந்து கெடக்குது. இப்புடியே கெடந்துச்சுன்னா ஒரு நாளைக்கு பத்துப்படி கறக்கற மாடு ரெண்டு படியா கொறைஞ்சு போகும். அதனால..” என வார்த்தையை இழுத்தாள் அம்மா பூரணி.
“அதனால….? என்னையென்ன பண்ணச்சொல்லறே….?” என்றேன் பொய்யான கோபத்துடன்.
“வேறொன்னும் கஷ்டமான வேல சொல்லல… நெருஞ்சிக்காட்டுக்குள்ள செருப்பத்தொட்டுட்டு நெதானமா கால் வெச்சுப்போயி, கொடிபூடு ஒரு கத்த புடுங்கீட்டு வரச்சொன்னந்தங்கம்….” என அம்மா கெஞ்சாத குறையாகக்கேட்டாள்.
அம்மாவைப்பொறுத்தவரை தன் கண் முன் இருக்கும் வேலையை ஓய்வின்றி பிறரிடம் சொல்லி வேலை வாங்காமல் தானே செய்து விடுவாள். காலில் வேலா முள் குத்தியதில் சீல் வடிவதால் நடக்க இயலாமல் என்னைப்பார்த்துக்கெஞ்சிக்கேட்கிறாள் என்பதும் புரிந்திருந்தது எனக்கு. ஆனாலும் வேண்டுமென்றே நானும் மழுப்பி பிடிவாதம் பிடிப்பதுண்டு. வயது அப்படி.
“அதெல்லாம் முடியாது. வேணும்னா புளீம்பட்டி சந்தைக்கு புடிச்சுட்டு போயி அய்யன மாட்ட வித்துப்போட்டு வரச்சொல்லு….” என்றேன்.
“தப்புத்தப்புன்னு சொல்லு. போன ரெண்டு மூணு வருசமா மழையே பேயாம காடுகரை வெளையாமப்போச்சு. இந்த மாடுங்கறக்காம இருந்துச்சுன்னா கஞ்சிக்கு ஆருகுட்டப்போறது…?” எனச்சொன்ன அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அம்மாவின் மடியில் அமர்ந்து, ஆள்காட்டி விரலால் கண்ணீரைத்துடைத்து விட்டு மஞ்சிக்கயிறை எடுத்துக்கொண்டு பெருவிரல் வார் கழண்ட செருப்புக்கு ஒரு சுள்ளானி எடுத்து, அடிக்க சுத்தி கிடைக்காமல் ஒரு கல்லை எடுத்து கொட்டும் போது இடது கை பெருவிரலில் பட ‘ஆ’ என அலறிய சத்தம் கேட்டு ‘பாத்து…’ என அம்மா எச்சரிக்க, ‘சேரி...’ என பதில் கூறி விட்டு நெருஞ்சிக்காட்டிற்குள் விரல் வலியைப்பொறுத்துக்கொண்டு பிரவேசித்தேன்.
கொடிய தவறுகளைச்செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் வெறும் காலில் நெருஞ்சி முட்கள் காய்த்துக்கிடக்கும் காட்டிற்குள் நூறு மீட்டர் வெறும் காலில் ஓடச்சொன்னால் போதும். ஆயுள் முழுவதும் தவறே செய்ய மாட்டார்கள்.
செருப்பைத்தாண்டி காலின் ஓரங்களில் முட்கள் குத்தவே செய்தன. அதைக்குனிந்து பிடுங்கும்போது உடம்பு தடுமாற, வலது கையை நெருஞ்சி முற்கள் மீது ஊன்றி விட நேர்ந்த போது மரண வலி ஏற்பட்டதோடு உள்ளங்கை முழுவதும் ரத்தம் வெளிப்பட்டது. கையில் ஏறியிருந்த முட்களை வலி தாங்கி ஒவ்வொன்றாகப்பிடுங்கி எறிந்தேன்.
ரத்தம் வந்த கையில் பூடு பிடுங்க முடியாது என்பதால் இடது கையில் பிடுங்கி கயிறில் ஒரு கையாலேயே கட்டி எடுத்து வந்து மாட்டின் முன் நான் போட்டதைக்கண்டு அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
என்னை அருகில் வரவழைத்து “கைவலிக்குதா சாமி…?” எனக்கேட்ட படி அணைத்த போது கையில் வடியும் ரத்தத்தைப்பார்த்து “ஐயோ... என்ற கொழந்தைக்கு என்னாச்சு….?” எனக்கூறி மயக்கமடைந்த அம்மாவின் முகத்தில் நான் தண்ணீர் தெளித்தேன். சிறிது நேரத்தில் எழுந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள்.
“எத்தனை பாவம் போன ஜென்மத்துல பண்ணுனமோ தெரியலையே… இந்தப்பொட்டல் காட்டுக்குள்ளே கட்டல் கூட இல்லாம கட்டுத்தரையில கோரப்பாய விரிச்சு படுத்தூங்க வெச்ச கடவுளு, காட்ட நல்லா வெளைய வெச்சிருந்தா முள்ளுக்காட்டுக்குள்ள பூடு புடுங்க உன்னப்போச்சொல்லி இந்தப்பிஞ்சுக்கைய புண்ணாக உட்டுருக்க மாட்டேன்….” ஒப்பாரி வைத்து அழுத வெள்ளந்தியான அம்மாவின் பாசத்தால் எனக்கு கை வலி பறந்து போனது.
அன்பின் வெளிப்பாட்டிற்கு துன்பங்களை விரட்டும் சக்தி உண்டு என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். இந்த பூமியில் அன்பு, பாசம், காதல் தான் நமக்கு வாழவேண்டும் என்கிற நம்பிக்கையைத்தருகிறது. அதற்குப்பின் பசி தீரக்கிடைக்கிற உணவுப்பண்டங்கள்.
நகரங்களை விட கிராமங்களில் சார்ந்த வாழ்க்கை அதிகமென்பதால் பிரிவுகள் அதிகம் உண்டாவதில்லை. திட்டினாலும் திரும்பவும் வந்து அன்பாகப்பேசி சரி செய்து விடும் நிலையால் யாரையும் நிரந்தரமாக வெறுக்க முடிவதில்லை.
வயதாகி விட்ட நிலையில் இப்போது நகர வாழ்வில் எனது குழந்தைகளிடம் என் அம்மாவைப்போல அன்பாகப்பேசி வேலை வாங்குவது கடினமாக உள்ளது. அவர்களது தேவைகளை நாம் செய்யாமல் விடும் போது தான் நமது தேவைகளைப்புரிந்து சொல்லாமலேயே செய்து முடித்து விடுகிறார்கள். அவர்களது தேவைகளை நாமும் முடிக்கத்தயாராகி விடுகின்றோம். ஒன்றைக்கொடுத்து இன்னொன்றைப்பெறுவதாக உள்ளது. பழைய பண்டமாற்று முறையாக வாழ்க்கை மாறி விட்டது.
படித்த சமுதாயத்தினரின் வாழ்க்கை முறை படிக்காத மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அவர்களுக்கேற்ப படிக்காதவர்கள் தான் மாற வேண்டும். படித்தவர்கள் மாற வாய்பில்லை என்பதை நானும் புரிந்து கொண்டு செயல் படுவதால் எனக்கு மரியாதை மாறாமல் வீட்டில் கிடைக்கிறது. ஆனால் வெளிப்பழக்கம், வெளியில் நடக்கும் மனிதர்களின் செயல்கள் முள்ளாகக்குத்துவதால் வருத்தமளிக்கிறது.
நெருஞ்சிக்காடு இது, நல்ல பூமி இது, இதில் நடந்தால் முட்கள் குத்தி ரத்தம் வரும், இதில் நடந்தால் பஞ்சு போல் இருக்கும் என சிறு வயதில் கிராமத்தில் விவசாயி மகனாக பிரித்தறியக்கற்றுக்கொண்ட எனக்கு, நகரத்தில் நெருஞ்சியை விடக்கடினமான மனதோடு இருக்கும் மனிதர்களைக்கண்டு பிரித்தறிய முடியவில்லை.
‘எந்தப்புத்துல எந்தப்பாம்பு இருக்கும்னு தெரியலை’ என்று கிராமத்துப்பெரியவங்க சொன்னது போல எந்த மனிதர் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதைக்கண்டறிவது சிரமமாகவே இருந்தது.
யோசிக்காமல் ஒருவருக்கு துன்பத்தைத்தருகிறார்கள். தேவையில்லாமல் வழக்கு போட்டு அச்சுறுத்துகிறார்கள். பத்து வருடங்கள் காதலித்து கைப்பிடித்த ஒருவரின் மனைவி பார்க்கவே பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து கேட்கிறாள். இரண்டாவது, மூன்றாவது திருமணம் என்பது எளிய விசயமாகி விட்டது. ஏமாற்றுவது புத்திசாலித்தனமெனப்பார்க்கப்படுகிறது.
முள்ளின் வலியை விட சொல்லின் வலி அதிகமாகவே இருக்கிறது.
மனம் பிடித்து மணம் முடிக்காமல் பணம் பிடித்து மணம் முடிப்பதும், விரைவில் விட்டுப்போவதும், குழந்தைகளை கண்டுகொள்ளாமல், அன்பு செலுத்தாமல் விட்டு விடுவதும், கண்டிக்காமல் மனம் போன போக்கில் விட்டு விடுவதும், விரும்பியபடி விரும்பியவர்களோடு வாழ்வதும், பின் வேறு நபர்களோடு மணம் புரியாமலேயே வாழ்வதும், தவறுகளைச்செய்து விட்டு தலை நிமிர்ந்து நடப்பதுமான நிலை நடைமுறையில் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
கிராமத்தில் முட்கள் நிறைந்த காட்டில் முட்களை முற்றிலும் பிடுங்காமல் செல்லும் வழித்தடத்தின் அளவுக்கு மட்டும் பிடுங்கி விட்டு நடப்பது போல, நகரத்தில் முட்கள் நிறைந்த நெஞ்சினரை ஒதுக்கி, நமக்கேற்ற மனிதர்களைக்கண்டு பிடித்து அவர்களோடு வாழப்பழகுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதையறிந்து முள் நெஞ்சக்காரர்களிடம் ஒதுங்கிச்செல்லப்பழகிக்கொண்டேன்.