நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 10,496 
 
 

ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?

கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில். அந்த இனிமையைக் குலைப்பதுபோல், அபஸ்வரமாக ஒலித்தது விசாலியின் கட்டைக் குரல்.

தன்னைத் தாக்கிய மனைவியின் குரல் காதில் விழுந்தும், தற்காலிகமாகச் செவிடாகி விட்டதுபோல் வாளாவிருந்தார் பராங்குசம். எல்லாம் முப்பது வருட இல்லற வாழ்வில் பெற்ற விவேகம்தான்.

ஆரம்பத்தில், `ஏன் தெரியாது? ஒன்னைக் கல்யாணம் பண்ணிக்கலே?` என்று வீராவேசமாகக் கேட்டுவிட்டு, அந்த வார்த்தைகளால் தோன்றிய பூரிப்பை மறைக்க முயன்றபடி, `போதும். ரொம்பத்தான் வழியாதீங்க!` என்று அவள் கடிந்துகொண்டது மறக்கக் கூடியதா!

அது ஏன், தான் எது செய்தாலும் இவளுக்கு மாற்றுக் குறைவாகவே படுகிறது என்று யோசித்து யோசித்து, அவர் முடியெல்லாம் உதிர்ந்ததுதான் கண்ட பலன். அவரால் விசாலியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

தன்னால் அவளுக்கு புத்திர பாக்கியத்தைக் கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மிக, அவள் தன்னைக் குறைத்து மதிப்பிடும்போது அசட்டுச் சிரிப்பு சிரித்துவிடுவது, இல்லை ஊமையாகிவிடுவது என்று புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருந்தார்.

இதனால், மனைவியிடம் பராங்குசத்துக்கு அன்பு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது.

இல்லாவிட்டால், அவள் தற்செயலாகச் சொல்வதுபோல், “என் சிநேகிதி புவனா இருக்காளே, மாசாமாசம் மாரிப், போர்ட் டிக்ஸன் (PORT DICKSON), பங்கோர்னு (PANGKOR) ஏதாவது பீச்சுக்குப் போறாளாம். அவ மகனுக்கு ஆடிசம்னு ஏதோ வியாதியாம். தானே பேசிக்குவான். அப்படியே பேசினாலும், ரோபாட் பேசறமாதிரி, உணர்ச்சியில்லாமதான். யார்கிட்ட என்ன பேசறதுன்னு தெரியாது. டாக்டர் சொன்னாராம், அடிக்கடி கடல்ல குளிச்சா, நல்ல உடற்பயிற்சி, அதனால அவனும் கட்டுக்கடங்கி இருப்பான்னு!” என்று, விசாலி ஏக்கத்துடன் விவா¢த்தபோது, அவளைக் கேட்காமலேயே தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த செராட்டிங் (CHERATING) கடற்கரைக்கு அவளை அழைத்துப் போக திட்டமிட்டிருப்பாரா!

அவள் தோழி போகாத இடம் என்பதால், விசாலி அவளிடம் பெருமையாகப் பேசிக் கொள்ளவும் முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

“இப்ப எதுக்கு கடலும், மண்ணாங்கட்டியும்?” என்று முதலில் பிகு செய்துகொண்டவள், கோலாலும்பூ¡ர் புடு (PUDU) பகுதியிலுள்ள வெளியூர் பஸ் நிறுத்தத்துக்கு வந்ததும் கலகலப்பானாள்.

`ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?` என்று அன்று பூராவும் அவள் கேட்காததுபற்றி பராங்குசத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி. பேருந்தின் முன்னிருக்கையில் விரல்களால் தாளம் போடலானார்.

சும்மாவா நாட்டுக்கு `மலாயா` என்று பெயர் வைத்திருந்தார்கள்! மலைப் பாதையில் சுற்றிச் சுற்றிப் போனபோது, விசாலிக்குத் தலைசுற்றல் வந்தது. நல்லவேளை, அவர் தாராளமாக பன்னிரண்டு வெள்ளி கொடுத்து, ஒரு கிலோ திராட்சைப் பழத்தை வாங்கி வந்திருந்தார். மனைவி ஒரு விரலால் நெற்றியைச் சுட்டி, சுழற்றும் போதெல்லாம், ஒரு பழத்தை அவள் வாய்க்குள் போட்டார்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடனேயே விசாலிக்குத் தெம்பு வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா? கடற்கரைக்குப் போக ஆசையா இருக்குன்னு ஒங்ககிட்ட வந்து நான் கேட்டேனா? வயத்தைப் புரட்டுது. டிவி தொடர்வேற விட்டுப் போயிடும்,” என்று பாய்ந்திருப்பாளா?
அவள் பழையபடி ஆனதில் அவருக்குத் திருப்தியாக இருந்தது.

`நான் என்னம்மா கண்டேன், இந்த பஸ்காரன் டோலுக்குப் பயந்து, இப்படி சுத்திச் சுத்தி வருவான்னு!` என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டார். உரக்கச் சொல்லி, அதற்கு வேறு அவள் ஏதாவது பதிலடி கொடுத்து வைத்தால்?

`மௌனம் தங்கத்திற்குச் சமானம்,` என்று ஆங்கிலத்தில் சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

கடற்கரையிலேயே அமைந்திருந்த சிறு சிறு மர வீடுகளுள் ஒன்றில் நுழைந்தார்கள். மலாய் கம்பத்து (கிராமிய) பாணியிலான குடில். தரையிலிருந்து மூன்றடி மேலே இருந்தது. எல்லாம், வருடம் முழுவதும் கொட்டும் மழைக்கான எச்சா¢க்கைதான். வீட்டைத் தாங்க, நான்கு மூலைகளிலும் மரத்தூண்கள். அதன் அடியில், தாய்க்கோழியின் பின்னால், ஆசிரியரைப் பின்தொடரும் சிறு பிள்ளைகள்போல், கோழிக்குஞ்சுகள் அணிவகுத்துச் சென்றன.

அந்தப் புதுமாதிரியான சூழ்நிலையில், விசாலி குதூகலித்தாள். “தேவலியே! ஒங்களுக்குக்கூட உருப்படியா ஒரு காரியம் பண்ணத் தெரியுதே! எப்படி இந்த இடத்தைப் பிடிச்சீங்க?” என்று அவள் பாராட்டியபோது, சொர்க்கமே தெரிந்தது பராங்குசத்திற்கு.

காலையிலும், மாலையிலும் சமுத்திர ஸ்நானம், இடையில் சாப்பாடு, தூக்கம் என்று பொழுதை உல்லாசமாகக் கழித்தார்கள். இந்திய உணவு கிடைக்காததை விசாலி பொ¢து பண்ணவில்லை என்பதுபற்றி பராங்குசத்துக்கு நிம்மதி.

சில சமயம், அவர்கள் குடில் வாசலிலிருந்த வராந்தாவில் போடப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்தார்கள், ஓய்வாக. ஜட்டி மட்டுமே அணிந்து, அல்லது முழு நிர்வாணமான மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், மணலில் வீடு கட்டி, அவைகளின்மீது சிப்பிகளையோ, அல்லது கடற்கரையைச் சார்ந்து இயற்கையாகவே வளர்ந்திருந்த சவுக்கு மரங்களின் கூரான இலைகளையோ வைத்து அழகுபடுத்துவதை கண்கொட்டாது பார்த்தபடி இருந்த விசாலி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

அதை ஓரக்கண்ணால் கவனித்த பராங்குசத்துக்கு அவள்மேல் பா¢தாபம் பொங்கியது. `நல்லா தூங்கினியா?` `அடுத்த தடவை பினாங்கு போகலாம், என்ன? அங்க சாப்பாடு நல்லா இருக்கும்,` என்று பா¢ந்தார்.
மூன்று இரவுகள் போனதே தெரியவில்லை.

முதல்நாளே விசாலி கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள், “என்னால இனிமே அந்த பாடாவதி பஸ்ஸில ஏற முடியாது. ஏதாவது டாக்ஸி பாருங்க!` என்று.

அவளது கட்டளையைச் சிரமேற்கொண்டு, இந்த வாடகைக்காரை ஏற்பாடு செய்திருந்தார் பராங்குசம்.

வண்டியோட்டியை ஒரு பார்வை பார்த்தாள் விசாலி. அவ்வளவுதான். (இப்போது கதையின் முதல் வா¢யை நினைவுபடுத்திக் கொள்ளவும்).

கணவர் பா¢தாபமாக, “இப்பல்லாம் இங்கேயிருந்து கே.எல் (K.L, கோலாலும்பூர்) போக நானூறு வெள்ளியாம். 280 கிலோமீட்டர் தொலைவில்ல! இவன் ஒருத்தன் மட்டும் முன்னூறு சொன்னான். அதான்..,” என்று இழுத்தார்.
`இதுக்கே பஸ் கட்டணத்தைவிட மூன்று மடங்கு அழணும், தெரியுமா? ஒன் பிடிவாதத்தினாலதான் இப்படி!` என்ற விமா¢சனத்தை சாமர்த்தியமாக மறைத்தார்.

“இந்த ஆளோட முகமே சா¢யா இல்ல. எலும்பா இருக்கான். கண்ணு வேற கலங்கி இருக்கு. சா¢யான போதைப் பித்தன்! எப்படித்தான் அவ்வளவு தூரம் ஓட்டப் போறானோ!” டிரைவர் தமிழனில்லை என்ற ¨தா¢யத்தில், அவள் அங்கலாய்ப்பு உரக்கவே ஒலித்தது.

பராங்குசத்துக்குக் கூசியது. ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அவரைப்பற்றி இழிவாகப் பேசுவது யாராக இருந்தாலும்… அது அவரது ஆசை மனைவியாகவே இருந்தாலும்… அது தப்புதான் என்று தோன்றிற்று அவருக்கு. ஆனால், அவள் வாயை அடக்கப்போய், அவள் ஏட்டிக்குப் போட்டியாக கத்த ஆரம்பித்தால்.., மொழி தெரியாதவராக இருந்தாலும், இன்னொருவரால் புரிந்துகொள்ள முடியாதா, என்ன!

மௌனம் என்ற ஒன்றுதான் பல சமயங்களில் எப்படி கை கொடுக்கிறது என்ற அயர்ந்துபோய் அமர்ந்திருந்தார்.

காரோட்டி, “ஸாயா (நான்).. யாஹ்யா!” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, கையை நீட்டியபோது, விசாலி திகைத்துப்போனாள். ஒரு வினாடி தயங்கிவிட்டு, கையை நீட்டினாள்.

முன் கதவைத் திறந்து, பராங்குசம் ஏற யத்தனித்தபோது, “இந்த புரோடான் ஸாகா (PROTON SAGA, மலேசியாவில் தயாரிக்கப்படும் கார்), அதோட டிரைவர் மாதிரியே, பாத்தா பா¢தாபமா இருக்கு. பின்னால ஒக்காந்தா, எனக்கு மறுபடியும் வயத்தைப் புரட்டும். என்னால முடியாதுப்பா!” என்றபடி, அவரைத் தள்ளாத குறையாக முன்னால் ஏறிக்கொண்டாள். `அம்பது வயசு ஆகப்போகுது. ஆம்பளைங்க பக்கத்தில ஒக்காந்தா, என்னா தப்பு! அதான் கையைக் குலுக்கியாச்சே!` என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

காரை ஓட்ட ஆரம்பிப்பதற்குள், காரோட்டி நிறைய நிபந்தனைகள் விதித்தார்.

“நான் மெதுவாத்தான் போவேன். முந்தி பென்ஸ் கார் வெச்சிருந்தேன். அதில நூத்துப் பத்து என்ன, நூத்து நாப்பதுகூடப் போகலாம். ஆனா, இதில..,” என்று சிரித்தவர், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்று ஏதோ சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்தார்.

உள்ளே குளிர்சாதன வசதி இருந்ததென்று பெயர்தான். சன்னல் கண்ணாடியை முழுமையாக அடைக்க முடியாதுபோக, வெளியே வீசிய அனல்காற்றும், அந்த நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்த பிற வாகனங்கள் பெருமூச்சாக விட்ட புகையும் உள்ளே நுழைந்தன.

பற்களைக் கடித்துக்கொண்டு, விசாலி தூங்க முயற்சித்தாள். மனதுக்குள் சுலோகம் சொல்லிப் பார்த்தாள். இருப்பினும் ஒன்றரை மணிக்குமேல் அவளால் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

“நல்ல காடி வெச்சிருக்கான் இந்த ஆளு! பஸ்ஸே தேவலாம்னு இருக்கு,” என்று, தலையைத் திருப்பி, கணவா¢டம் கூறினாள்.

“என்ன சொல்றாங்க?” என்று விசாரித்தார் யாஹ்யா.

“பாத்ரூம் போகணுமாம்!” சமயோசிதமாகப் புளுகினார் பராங்குசம்.

“கே.எல் போக இன்னும் எத்தனை நேரமாகும்?” இத்தனை நேரம் டிரைவா¢ன் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்ததில், அவருடன் பேசும் துணிவு வந்திருந்தது விசாலிக்கு.

“இன்னும் மூணு மணியாவது ஆகும். நாம்ப என்ன, வால்வோ காரிலேயா போறோம்?” என்று சிரித்துவிட்டு, “நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க,” என்று விடை கொடுத்தார்.

கதவை உள்பக்கத்திலிருந்து திறக்கும் சாதனம் உடைந்து போயிருந்தது. அசட்டுச் சிரிப்புடன், “இன்னிக்குக் காரை மெகானிக்கிட்ட விடறதா இருந்தேன்,” என்றபடி, யாஹ்யா வெளியே வந்து, திறந்துவிட்டார்.

“எனக்கென்னமோ சந்தேகமா இருக்குங்க. அந்த ஆளு பத்துப் பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒருவாட்டி எதையோ குடிக்கறான். எல்லாத்துக்கும் சிரிக்கறான். தண்ணியில ஏதாவது போதை மருந்து போட்டு கலக்கியிருப்பானோ?”

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது, “அந்தப் பக்கம் இருக்கு,” என்று அநாவசியமாக, பெண் படத்தைக் கதவில் தாங்கியிருந்த கழிப்பறையைக் காட்டிவிட்டு, தன்பாட்டில் விரைந்தார் பராங்குசம்.
விசாலி திரும்ப வரும்போது, அவள் கரத்தில் கொட்டையில்லாத கொய்யாத் துண்டங்கள் நிரம்பிய சிறிய பிளாஸ்டிக் கை.

“இந்தாங்க!”

கையை நீட்டினார் கணவர்.

ஆனால், அவள் யாஹ்யாவை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தாள்.

அவருடைய முகத்தில் நன்றி கலந்த முறுவல். “வேணாம்மா. என்னால சாப்பிட முடியாது!” என்றபடி, பல பற்களை இழந்திருந்த வாயைத் திறந்து காட்டினார். பின், “எனக்குத் தொண்டையில கான்சர்!” என்று அசாயாசமாகத் தெரிவித்தார். குரலில் வருத்தமில்லை. `இன்னிக்கு மழை வரும்,` என்று சொல்வதுபோல் இருந்தது.

விசாலி அதிர்ந்தாள். பையைத் தவறவிட்டாள். நல்லவேளையாக, அது அவள் மடியில் விழுந்தது.
“கீமோ சிகிச்சை குடுத்தாங்களா! அதில பல்லெல்லாம் போயிடுச்சு. என் வாயில உமிழ்நீர் சுரக்கிறதில்ல. அதனால, அப்பப்போ, கொஞ்சம் தண்ணியால நனைச்சுக்கணும்”.

வருடந்தவறாது, கடலில் இருபதாயிரம் மைல் நீந்தி, மே மாதம் முதல் செப்டம்பர்வரை, இரவு வேளைகளில் செராட்டிங் கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமையைப்போல, விசாலியின் தலை கழுத்துக்குள் நுழைந்தது.
அதைக் கவனியாது, தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார் மற்றவர். “தொண்டையில ஓட்டை போட்டு, சாப்பாட்டை உள்ளே இறக்கலாம்னாங்க. எனக்குப் பிடிக்கல. வெண்டைக்காய், கீரை, கோபீஸ் எல்லாத்தையும் வேகவெச்சு அரைச்சு, சாதத்தோட திரும்பவும் ஒண்ணா அரைச்சுடுவேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஒரு மணி நேரம் பிடிக்கும். அதனால வீட்டை விடறதுக்கு முந்தி சாப்பிட்டுட்டுத்தான் புறப்படுவேன்”.

“வீட்டுக்கு வெளியே வந்தா, என்ன சாப்பிடுவீங்க?” விசாலியின் குரல் மங்கியிருந்தது.

“ஐஸ்கி¡£ம். இல்லாட்டி, நல்லா மசிச்ச உருளைக்கிழங்கு — கெண்டகி சிக்கன் கடையில கிடைக்குதில்ல!” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

போத்தலைத் திறந்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரை அவர் வாயில் கவிழ்த்துக்கொண்டபோது, ஏதேனும் பேச வேண்டும்போல இருந்தது அவளுக்கு. “ஒங்க வீடு செராட்டிங்கிலேயே இருக்கா?” என்று கேட்டுவைத்தாள்.

“நான் கே.எல்.காரன்தாம்மா. ஒரு கார் கம்பெனியில பொ¢ய வேலையில இருந்தேன். என்னோட நிலைமை இப்படி ஆனதும், எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க — பெண்டாட்டி, பிள்ளைங்ககூட!” லேசான வருத்தம் குரலில். “பென்ஸ் காரையும் விக்க வேண்டியதாப்போச்சு. மத்தவங்க கையை எதிர்பாக்கறது அசிங்கம், இல்லியா? அதனால, இங்கேயே ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருக்கேன்”.

“தனியாவா இருக்கீங்க?”

யாஹ்யா பொ¢தாகச் சிரித்தார். “தனியாத்தானே வந்தேன்? தனியாத்தான் போகவும் போறேன்!” என்று தத்துவம் பேசிவிட்டுத் தொடர்ந்தார். “இது சின்ன கிராமம். அதனால மனுஷன் இன்னும் மனுஷனாவே இருக்கான். எனக்கு உடம்பு ரொம்ப முடியாட்டி, அக்கம்பக்கத்துக்காரங்க உதவி செய்வாங்க. நான் சொந்தமா தோட்டம் போட்டு, எனக்கு வேண்டியதைப் பயிரிட்டுக்கறேன். என் சிகிச்சை, மருந்துச் செலவுக்கு எல்லாம்… உடம்பு ஒத்துழைக்கறப்போ, இப்படி சவாரி ஏத்திக்கிட்டுப் போவேன். ஒரு நாளைக்கு ஐம்பது மாத்திரைகளை இல்ல விழுங்கித் தொலைக்க வேண்டியிருக்கு!”

அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. யாஹ்யா சொன்னவற்றை சீரணித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள் விசாலி. சிறிது யோசனைக்குப்பின், “நமக்கு ஏன் இப்படி வந்திடுச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமா இல்ல?” என்று துருவினாள்.

“வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது! சாகாம யாராவது இருக்காங்களா? நாம்ப சாகறதுக்கு ஏதோ ஒரு வழி. அவ்வளவுதான். ஒல்லியா இருந்தா, ஏன் இப்படி ஒடிஞ்சு விழறமாதிரி இருக்கேன்னு கேள்வி. முந்தி ரொம்ப குண்டா இருந்தேன். இருநூறு பவுண்டில்ல! அப்ப, `ஏன் இப்படி குண்டோதரனா இருக்கே?`ன்னு கேட்டாங்க!” சிரித்தார். “ஏன், ஏன்னு கேட்டுட்டு இருந்தா, அதுக்கு முடிவே இல்ல,” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டு, “இப்படிப் பேசிக்கிட்டே மெதுவா கார் ஓட்டறது ரொம்ப ரிலாக்ஸிங்கா இருக்கு. நான் ஏத்திட்டுப் போறவங்க எல்லாருமே ஒங்கமாதிரிதான் — அன்பாப் பழகறாங்க. அவங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லிக்கிறாங்க. போன வாரம் பாருங்க..!” என்று ஆரம்பித்தார்.

பேசிக்கொண்டே வந்ததில், கண்ணாடி சா¢யாக மூடாத ஜன்னல்வழி உள்ளே வந்த புகையோ, வீடு வந்து சேர்ந்ததோ எதுவுமே தெரியவில்லை விசாலிக்கு. கைகளைக் கூப்பியபடி, யாஹ்யாவிடம் விடைபெற்றுக்கொண்டாள்.

“சாமானை நான் எடுத்துக் குடுக்கறேன்,” என்றபடி யாஹ்யா பின்னால் விரைந்தபோது, விசாலி கணவரைப் பார்த்து முறைத்தாள். “நீங்க போய் எடுங்க. அதான் மூணு நாள் ஒரு வேலையும் செய்யாம, ஜாலியா இருந்தாச்சில்ல! இன்னும் என்ன சோம்பல்?”

கார் கண்ணிலிருந்து மறைந்தபின், “எவ்வளவு குடுத்தீங்க?” என்று கேட்டாள். குரல் அனாவசியமாக, ரகசியமாக ஒலித்தது.

“அதான் அங்கேயே சொன்னேனே — முந்நூறுதான்!” என்று அவர் அலட்சியமாகக் கூறியபோது, சற்றும் எதிர்பாராதவண்ணம், அவர்மேல் பாய்ந்தாள் தர்மபத்தினி.

“நாம்ப எல்லாம் ஒரு தலைவலி, காய்ச்சலுக்கே என்ன அமர்க்களப்படுத்தறோம்! அவரு சொந்தக்காலில நிக்கறாரு, இவ்வளவு பொ¢ய வியாதியோட போராடிக்கிட்டு!” ஆத்திரத்தில் பெருமூச்சு வாங்கியது அவளுக்கு.

“எதையுமே கூழா அரைச்சுத்தான் சாப்பிடுவாராமே, பாவம்! கூட ஒரு அம்பதோ, நூறோ போட்டுக் குடுத்திருந்தா குறைஞ்சா போயிடுவீங்க? ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா?”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *