வசுமதி சடக்கென்று பாம்பைப் போல் தலையை உயர்த்தி, தன் புத்தம் புது கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
‘‘எ.. என்ன?”
“நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரை யாவது லவ் பண்ணியிருக்கியானு கேட்டேன்!’’ இயல்பாக, புன்னகை மாறாமல் கேட்ட பிரமோத் வசீகரமாக இருந்தான்.
ரூம் ஸ்ப்ரே, ஊதுபத்தி, மல்லிகை, ரோஜா, பால் சொம்பு, ஸ்வீட்ஸ், வசுமதி யின் அழகான அலங்காரம், எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரமோத்.. என்று முதலிர வுக்கே உரிய தகுதிகள் அங்கு நிரம்பி இருந் தாலும், அவன் கேட்ட கேள்வி வசுமதிக் குள் வண்டு குடைந்தது. திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலை!
‘ஏன் திடீரென்று இப்படியரு கேள்வி? என்ன சொல்வது? ஒருவேளை எல்லா விஷய மும் தெரிந்துதான்.. இப்படி கேட்கிறாரோ?’
‘‘சொல்லு வசு… என்ன தயக்கம்?’’
ÔÔஇ.. இல்லே.. அப்படியெல்லாம்.. ஒ.. ஒண்ணும் இல்லீங்க!’’
வரிசை தப்பாத பற்கள் தெரிய, ‘‘நீ பொய் சொல்றே வசு!’’ என்றான்.
‘‘………?!’’
ÔÔநான் கேட்ட உடனே பதறி, இல்லேனு சொல்லி இருந்தா.. காதல் அனுபவம் இல்லேனு நம்பியிருப்பேன். ஆனா.. தயங்கி, யோசிச்சி, தடுமாறி பதில் சொல்றே! ம்! இதிலே பயப்பட என்ன இருக்கு வசு? ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தாலும், இந்த ஜென ரேஷன்ல கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கிறவங்க நைன்ட்டி நைன் பர்சன்ட்! நான் கொஞ்சம் போல்டான ஆளு! உணர்வு களுக்கு மரியாதை கொடுப்பவன். நமக் குள்ளே எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது.ÕÕ
‘வசு.. அவசரப்பட்டு உன் புருஷன் கிட்டே ராகவ் பத்தி உளறிக் கொட்டிடப் போறே? தான் எப்படி இருந்தாலும், வரப்போற பொண்டாட்டி மட்டும் தன் கால் கட்டை விரல் நகத்தைத் தவிர வேற யாரையும் பார்த் துடக் கூடாதுனு நினைக்கிற சென்சிடிவ்வான ஆளுங்கதான் எல்லா ஆம்பளைங்களும். பீ கேர்ஃபுல்’ & திருமணத்துக்கு முந்தின நாளே எச்சரிக்கை மணி அடித்து அனுப்பிய தோழி ஷாலினியின் குரல் மறுபடி வந்து போனது.
‘‘உனக்கு நான், எனக்கு நீ அப்டீனு ஆகிட்ட பிறகு, தனிப் பட்ட ரகசியங்கள் இருக்கக் கூடாது. இல்லையா? ஏன்னா, இனி நீ என் வொய்ஃப் மட்டுமில்ல.. க்ளோஸ் ஃப்ரெண்டும் கூட! லவ் பண்றது தப்பான விஷய மில்லே வசு! நீ ஃப்ரீயாப் பேசினா.. நானும் மனசு விட்டு எல்லாத்தையும் சொல் வேன்.. அஃப்கோர்ஸ் எனக்கு அந்த அனுபவம் உண்டு!’’
படபடவென அடித்துக் கொண்ட மனசு கொஞ்சம் வலிப்பதையும் உணர்ந்தாள் வசுமதி.
‘‘அப்ப நானே ஃபர்ஸ்ட் சொல்லிடறேன். அவ பேர் ஸ்வீட்டி. நான் வச்ச பேர். சொந்தப் பேர் இனியா! ரசனையான பேரு இல்லே? ரொம்ப அழகாயிருப்பா.. உன்னை மாதிரியே! யெஸ்.. நீ அவளோட சாயல்ல இருந்ததாலதான்.. பார்த்ததும் ஓகே சொன்னேன்.’’
‘‘………?!’’
‘‘என்ன, நீ கொஞ்சம் ஸ்வீட்டியோட கலரை விடக் கம்மி. இந்த மூக்கு, கன்னம், லிப்ஸ், மோவாய் எல்லாம் அவளை மாதிரியே! கண்ணுதான் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. உனக்கு மீனா மாதிரி பளபளனு ரொம்ப கிளாமரா இருக்கு!’’
‘‘………?!’’
‘‘அவ சொந்த ஊர் விஜயவாடா. படிக்கறதுக்காக சென்னைக்கு வந்தா. என் ஃபிரெண்ட் வீட்டுக்கு எதிர் வீடு. பார்த்ததுமே பத்திக்கிச்சு. என்னை கொஞ்சறதுக் காகவே தமிழ் பேசக் கத்துக்கிட்டா.. அதுவும் ஆறே மாசத்துல. அவ்ளோ காதல்!’’
‘‘………?!’’
‘‘ஒருநாள் என்னை பார்க்கலேன்னாக் கூட சண்டை போடுவா. எனக்கோ, அவளை ஒரு மணி நேரம் பார்க்க முடியலேனாலும் பைத்தியம் பிடிச்சிடும். நாலு வருஷ தீவிரக் காதல் ஒரு முடிவுக்கு வந்திச்சு. விஷயம் அவ வீட்டுக்குத் தெரிஞ்சு ரகளையாயிடுச்சு. ஜாதியும் மொழியும் எங்களைப் பிரிக்கப் போதுமானதா இருந்தது. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கல. பெத்தவங்களை எப்படியும் சம்மதிக்க வச்சிடலாம்னு நம்பினோம். ஆனா, கடைசிவரை முடியல. அவளை ஊருக்கே கூட்டிட்டுப் போய்ட்டாங்க.
அப்பப்ப பேசுவா. பக்குவப்பட்ட காதல்ங்கிறதால.. நினைவுகளை மட்டும் பொக்கிஷமா இதயத்துக்குள்ளே புதைச்சு வச்சுக் கிட்டோம். ‘என்னை நினைச்சுக்கிட்டே வாழ்க்கையை வீணடிச்சிடக் கூடாது. நீங்க கல்யாணம் பண்ணிக்கணும். நானும் பண்ணிப்பேன். ஆனா, உங்களுக்கு ஆன பிறகுதான் பண்ணிப் பேன்’னு பிடிவாதம் பிடிச்சா. நல்ல பொண்ணு. பாசமான பொண்ணு. மிஸ் பண்ணிட்டோமேன்ற வருத்தம் நிறையவே இருக்கு. பட், உன்னைப் பார்த்த பிறகு ஒரு ஆறுதல். அவளே திரும்பக் கிடைச்சிட்ட மாதிரி நிம்மதி. இப்ப நீ சொல்லு வசு. உன் ஆளோட பேரென்ன? ஏன் ஃபெயிலியர் ஆச்சு?’’
ஒரு நெருங்கிய நண்பனைப் போல் வார்த்தை களை வீசியவனை ஒருவித நடுக்கத்துடன் பார்த்தாள்.
‘அவன் காதல் கதையைப் பகிர்ந்து கொண்ட தைரியம் ஒருபுறம். இவளின் காதலை மறுத்துப் பேச முடியாத அளவுக்கு நிச்சயமாக நம்பியிருப்பவனிடம் போய் இல்லை என்று எப்படி சொல்வது? ஒரேயடியாக இல்லை என்று சாதித்து விடலாம்தான். ஆனால், நாளை எந்த ரூபத்திலாவது தெரிய வந்தால்.. என்ன நினைப்பான்? நாம் எந்தளவு உண்மையாக, வெளிப்படை யாக நடந்து கொண்டோம்? இவளானால் இல்லை என்று உறுதியாகச் சொல்லி எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து விட்டாள்? நாம் அவ்வளவு சுதந்திரம் கொடுத்தும் சொல்லாமல் மறைத்தாள் என்றால், கேரக்டரே மோசமாக இருக்குமோ என்று சந்தேகம் வந்து விடுமோ?’
‘‘வசு.. வசு..’’
‘‘ம்..’’ சின்ன திடுக்கிடலோடு ஏறிட்டாள்.
‘‘என்ன.. ஃபர்ஸ்ட் நைட்டும் அதுவுமா இதையெல்லாம் கேக்கறானேனு பயமாயிருக்கா?’’
‘‘இ.. இல்லே.. நா.. நான் எல்லாத்தையும் மறந்துட் டேன்!’’
‘‘புரியலே..’’
‘‘ராகவை!’’
‘‘ராகவ்? ஓ.. உன் ஆள் பேர் ராகவ்வா?
‘‘ப்ளீஸ்.. உன் ஆள் அப்படி இப்படினு பேச வேண்டாமே.. அநாகரீகமா இருக்கு!’’
‘‘ஓகே.. ஓகே.. பேசலே. சொல்லு!’’
அவளின் அந்த வார்த்தைகள் பிரமோத்துக்குப் பிடித்தது. இன்னும் நெருங்கி அமர்ந்தான்.
‘‘அவரும் ராஜமுந்திரி பக்கம்தான்!’’
‘‘ஓ.. தெலுங்கா?
‘‘ம்.. கிட்டத்தட்ட உங்க ஸ்டோரியேதான். அதனால இதை மேற்கொண்டு பேச வேண்டாமே!’’
‘‘சரி.. இப்ப அவர் எங்கேயிருக்கார்?’’
காதலை பொழுதுபோக்காகப் பயன்படுத்திய ராகவ் அவள் வரையில் இறந்து போனவன்! அதனால், ‘‘இப்ப உயிரோட இல்லை. ஆக்ஸிடன்ட்ல செத்துப் போயிட்டாரு’’ என்றாள்.
அயர்ந்து போனான் பிரமோத்!
ஆனால், மனதுக்குள் சூழ்ந்திருந்த மேகம் விலகி நிர்மலமாக ஆனது போல் ஒரு உணர்வு அவனுள்.
‘‘ஸாரி வசு! இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேணாம். நாம புதுசா காதலிப்போம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’’
முதலிரவில் கட்டாயமாக்கப்பட்ட கேள்வியுடன் அவளை இதமாக அணைத்து, விளக்கையும் அணைத்தான்!
ஒவ்வொரு நாளும் சந்தோஷத்தை சுமந்து கொண்டு கடந்தது.
தன் கணவன் இத்தனை நல்லவனாக இருப்பான் என்று வசுமதியே எதிர்பார்க்கவில்லை..! அவளின் முன்னாள் காதல் பற்றி அறிந்த பின், அடுத்து வந்த நாட்களில் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றிப் பேச வில்லை. மாறாக, அவள் மீது பாசத்தை பக்கெட் பக்கெட்டாகக் கொட்டினான். விதவிதமான பரிசுகள் வாங்கிப் பரிசளித்தான். அரை நாள் லீவ் கிடைத்தாலும் பைக்கில் அவளோடு ஊரைச் சுற்றினான். தனிக்குடித்தனம் வேறு! எந்த நேரமும் சிட்டுக்குருவியாகக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவளுக்கு வேறு விதத்தில் தலைவலி காத்திருந்தது.
அன்று.. அலுவலகத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்தான் பிரமோத்.
‘‘என்னங்க.. இன்னைக்கு சீக்கிரம்?’’ என்றாள் ஆச்சர்யமாக.
‘‘பர்மிஷன் போட்டுட்டு வந்தேன். ஏன் தெரியுமா?’’
‘‘ஏனாம்?’’
‘‘என் வசுக்குட்டிக்கு நான் ட்ரீட் தரப் போறேனாக்கும்.’’
‘‘ட்ரீட்டா? எதுக்குங்க.. உங்களுக்கு..’’
‘‘அவசரப்பட்டு ப்ரமோஷன், ட்ரான்ஸ்ஃபர்னு கற்பனை பண்ணிடாதே.. இது வேற விஷயம். க்விக். டின்னர் வெளியிலதான்.. டிரஸ்ஸை மாத்திக்கிட்டு கிளம்பு!’’
உற்சாகமாகக் கிளம்பினாள்.
கேண்டில் லைட் டின்னர் அவளுக்கு புது விதமாக அதீத மகிழ்ச்சியைத் தந்தது.
‘‘சொல்லுங்க.. எதுக்காக இந்த ட்ரீட்?’’
‘‘இன்னைக்கு என்ன டேட்?’’
‘‘மே 19.’’
‘‘என் ஸ்வீட்டியை முதன் முதலா இந்த நாள்லதான் மீட் பண்ணினேன்!’’
‘‘………?!’’
‘‘ஒவ்வொரு வருஷமும் இந்த நாளை நாங்க செலிப்ரேட் பண்ணுவோம் வசு!’’
‘‘நாம ஆதர்ச தம்பதி வசு. என் உணர்வுகளை உன்னால புரிஞ்சுக்க முடியும்னு நம்பறேன். அதனாலதான் எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்கறேன். ஸ்வீட்டி யோட பழகின ஒவ்வொரு நாளும் தீபாவளி, பொங்கல் மாதிரிதான். வேற என்ன சாப்பிடறே வசு?’’
‘‘போ.. போதும்!’’ சாப்பிட்டதெல்லாம் நெஞ்சு வரை கசந்தது.
‘திருமணமான பின்பும் காதலியையே நினைத்துக் கொண்டு, அவளை முதன் முதலாக சந்தித்த நாளைக் கொண்டாட எனக்கே ட்ரீட் தருகிறார் என்றால்.. இதில் ஆதர்ச தம்பதி என்பதன் அர்த்தம் என்ன? பேசி விடலாம் இதைப் பற்றி..’ தலை வலித்தது வசுமதிக்கு!
பைக்கில் வீடு திரும்பும்போதும் ஸ்வீட்டியைப் பற்றிய காலட்சேபம்தான். போதாததற்கு பெரிய ஐஸ் பாரையும் அவள் தலையில் வைத்தான்.
‘‘எத்தனை பொண்டாட்டி & புருஷன் நம்மளை மாதிரி இருப்பாங்கனு நினைக்கிறே வசு? சான்ஸே இல்லை. ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம் சந்தேகப்பட்டு, சண்டை போட்டு வாழ்க்கையைத் தொலைச்சிடறவங்கதான் நிறைய பேர்! ஆனா, நாம நம்ம காதல் விஷயங்களை இயல்பா ஏத்துக்கிட்டு, அனுசரணையா பகிர்ந்துக்கறோம்! நீ எவ்வளவு நாகரீகமா நடந்துக்கறே? நீ எனக்குக் கிடைச்ச பரிசு வசு.’’
இது போதாதா! அவள் வாயடைக்க?
இது ஒரு வகை வேதனையாக, கொடுமையாக இருந்தது வசுமதிக்கு.
தன்னை ரொம்பவும் தைரியசாலி என்று சொல்லிக் கொண்டு நாகரிகப் பகிர்தல் என்கிற பெயரில் அவன் தந்த ட்ரீட்டுகள் அவள் இதயத்தில் சம்மட்டிகளாக விழுந்தன.
ஸ்வீட்டிக்கு பிறந்த நாள் என்று இவளுக்கு உடைகள் வாங்கிக் கொடுத்து கடுப்பேற்றினான். இப்படி அவள் நினைவாக ஒவ்வொரு நாளையும் கொண்டாடி.. மேலும், மேலும் அவள் நினைவுகளை அழுத்தி ஒட்ட வைத்தான். போதாததற்கு அவர்கள் பிரிந்த தினத்தை துக்க நாளாக அனுஷ்டித்து அன்று முழுக்க சாப்பிடாமல் இருந்தான். இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று பயந்தாள் வசு.
அவன்தான் அவளைப் பற்றி வலிய ஒரு இமேஜை உருவாக்கி வாயை மூடி விட்டானே! சராசரி மனைவி யரைப் போல் அதைப் பற்றி கேட்கத்தான் முடியுமா?
ஆனால், எதையாவது செய்தே ஆகவேண்டும். என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்ததில் ஒரே ஒரு ஐடியா தோன்றியது. திருமணமான பெண்களைப் பொறுத்தவரை.. அது ரிஸ்க்கான ஐடியா!
அன்று..
‘‘வசு.. வசு!’’ என்று பாத்ரூமிலிருந்து கத்தினான் பிரமோத். கொலுசு சப்தம் கேட்டதேயழிய குரல் வரக் காணோம்.
‘‘என்ன பண்ணிட்டிருக்கே வசு.. சீக்கிரம் வா!’’
வந்து நின்றாள்.
‘‘டவல் வைக்கலையா?’’ ஈரத் தலையை, கதவைத் திறந்து கோழியைப் போல் நீட்டினான்.
‘‘ச்சொ..’’ கையை உதறியபடி திரும்பி ஓடியவள் ஒரே நிமிஷத்தில் திரும்பி வந்தாள் டவலுடன்.
‘‘தாங்க்ஸ்.’’
அதற்குள் போன் அலறியது.
‘‘வசு.. பாஸ்கராதான் இருக்கும்.. எடுத்து என்னன்னு கேளேன். என்னைக் கேட்டான்னா.. நான் கிளம்பி பத்து நிமிஷமாயிடுச்சுனு சொல்லு!’’
‘‘ம்ஹ¨ம்..’’ என்று வாயைப் பொத்தி மறுப்பாக தலையசைத்தாள்.
‘‘என்ன?’’ என்றான் இடுப்பில் டவலை சுற்றிக் கொண்டு. அவள் காட்டிய சைகை புரியவில்லை.
‘‘பல் வலியா? சொத்தைப் பல் இருக்குதா என்ன?’’
‘இல்லை’ என தலையசைத்து மறுத்தது கூட வேறுவிதமான மோனோ ஆக்டிங் போல் இருந்தது.
அதற்குள் போன் கத்தித் தொலைத்து அடங்கியது.
‘‘சீக்கிரம் டிபன் எடுத்து வை வசு. இன்னும் பத்து நிமிஷத்துல நான் வீட்டை விட்டுப் புறப்பட்டாகணும்’’.
சொன்னவன் மிக வேகமாகத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான். அவள் பரிமாறிய பரோட்டா & குருமாவை ருசித்து சாப்பிட்டான்.
‘‘எக்ஸலன்ட் வசு! ஆனா, நீ எப்படி சாப்பிடுவே? கஷ்டமாயிருக்காது?’’ உண்மையான வருத்தத்துடன் அவன் கேட்டது புரியாமல் புருவம் உயர்த்தி கணவனை நோக்கினாள்.
‘‘பை வசு.. டேக் கேர்! ரொம்ப முடியலேனா போன் பண்ணு!’’ அவள் கன்னத்தை எச்சில்படுத்தி விட்டு.. பைக்கை படபடத்தான்.
தோள்களை உயர்த்தி, உதட்டைப் பிதுக்கியவள் வீட்டு வேலைகளில் ஆழ்ந்தாள். மேலும் ஒரு மணி நேரம் ஓட, அவளின் செல்போன் அலறியது. எடுத்து ‘‘ம்’’ என்றாள்.
‘‘வசு.. வீட்ல என் பர்ஸ் இருக்கா, பாரு. மறந்து வச்சிட்டு வந்துட்டேனா, இல்லே வர்ற வழியில மிஸ் பண்ணிட்டேனானு தெரியல.. ஏழெட்டு கிரெடிட் கார்டு இருக்கு அதிலே..’’
‘‘ம்.. ம்’’ என்றவள் அசுரகதியில் தேடினாள்.
டிரஸ்ஸிங் டேபிள் மேல் சமர்த்தாக அமர்ந்திருந்தது பர்ஸ்!
மறுபடி போனில், ‘‘ம்.. ம்.. ம்..’’ என்றாள்.
‘‘என்ன சொல்றே வசு? இருக்கா?’’
‘‘ம்..’’
‘‘தாங்க் காட்! ஆமா என்னாச்சு உனக்கு.. பேச முடியலையா?’’
‘‘ம்..’’
‘‘ஓ!’’ என்று வருத்தப்பட்டான்.
‘‘சரி வச்சிடு.. ரெஸ்ட் எடு!’’ & அடுத்த நாற்பதாவது நிமிடம் காலிங்பெல் அலற.. கதவைத் திறந்த வசுமதி திகைத்தாள்.
‘‘இப்ப வலி எப்படியிருக்கு?’’ என்று கேட்டபடி உள்ளே வந்தான் பிரமோத்.
அவள் மணிக்கட்டைக் காண்பித்து சைகை செய்ததைப் புரிந்து கொண்டவன் அவளை இதமாக இழுத்து அணைத்து, ‘‘நீ இப்படி சைகையிலே பேசறது மனசு வலிக்குது வசு. அதான், லீவ் போட்டுட்டேன். டென்டிஸ்ட் வசந்தகுமாரோட அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன். இன்னும் ‘ஒன் அவர்’ல நாம அவரோட க்ளினிக்ல இருக்கிறோம். ஓகே.. ரெடியாகு?’’
அவனையே சற்று நேரம் வியப்பாகப் பார்த்தவள், வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
‘‘ஏய்.. என்ன?’’
‘ஒன் செகண்ட்’ என்பதாக ஒற்றை விரலைக் காட்டியவள், டீப்பாய் மேலிருந்த சின்ன பேடில் விறுவிறுவென எழுதி அவனிடம் காண்பித்தாள்.
‘இன்று ராகவோட இறந்த நாள்! அவர் நினைவாக மௌன விரதம் அனுஷ்டிக்கிறேன்’ & முத்து முத்தான அவளுடைய கையெழுத்து இதயத்தில் மொத்து மொத்து என்று விழுந்தது போலிருந்தது.
‘ராகவுக்காக மௌன விரதமா? இன்னுமா அவனை நினைத்துக் கொண்டிருக்கிறாள்?’ & பிரமோத்தின் மனசு உலைக்களமாகக் கொதித்தது. திகைத்திருந்த கணவனைப் பிடித்து உசுப்பி, கண்களால் ‘என்ன?’ என்றாள்.
பிரமோத் தன் கரங்களில் அவள் முகம் ஏந்தி, ‘‘வேணாமே வசு.. எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணேன்.. ப்ளீஸ்’’ என்றான் தயவாக.. வலியுடன்.
ஆமோதிப்பவளாக தலையாட்டினாள். மௌன விரதம் நல்ல பலனளித்தது. அதன் பின், ஸ்வீட்டிக்கென எந்த தினமும் கொண்டாடுவதில்லை. ட்ரீட்டும் தருவதில்லை.
இனியா சடக்கென்று பாம்பைப் போல் தலையை உயர்த்தி, தன் புத்தம்புது கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
‘‘ஏ.. ஏன்ட்டி?’’
‘‘நூ.. மணப்பெல்லிக்கு முந்து எவர்னைனா பிரேமிஞ்சாவா?’’ இயல்பாக, புன்னகை மாறாமல் கேட்ட ராகவ் வசீகரமாக இருந்தான்.
‘‘சான்ஸே இல்லை! கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு புருஷனை காதலிக்கணும்னு கட்டுப்பாடா இருந்தேன்’’ தடுமாறாமல் சொன்னாள் இனியா. ராகவ் நிம்மதியாக மூச்சு விட்டான்.
‘‘நீங்க?’’ என்றாள் தெலுங்கில்.
‘‘என் இதயத்தில் நுழைஞ்ச முதல் தேவதை நீதான்!’’
வெட்கத்துடன் புன்னகைத்தாள் இனியா.
‘‘உன்னை நான் ஸ்வீட்டினு கூப்பிடட்டுமா?’’ அவள் கரத்தோடு கரம் பற்றி கன்னத்தில் அழுத்திக் கொண் டான்.
‘‘வே.. வேணாம்.. இனியானே கூப்பிடுங்க!’’
‘‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா இனியா?’’
& அந்தக் கேள்வியுடன் முதலிரவு வைபவத்தை ஆரம்பித்தான் ராகவ்.
– ஏப்ரல் 2007