நெஞ்சமெல்லாம் நீ

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 18,864 
 
 

கணேசன் அவனுடைய அப்பாவுக்கு நீல நிற இன்லாண்டு லெட்டரில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மற்ற விவரங்களை எழுதிவிட்டு, ”எனக்கும் எனது மேலதிகாரிக்கும் இரண்டு நாள்களாக ஒரு விவாதம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விருப்பம். அது என்னவென்றால்..” என்று எழுதியபோது, வாசல் மணி அடித்தது.

யோசித்தபடி கதவைத்திறந்தான். தந்தி சேவகன். அவன் அப்பா செத்துப் போனதாக தகவல். பஸ் ஏறினான். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஆறு மணி நேரம் பயணம்.

”பயணம் ஒரு வாய்ப்பு. நிச்சயமாக அப்போது தூங்கக் கூடாது. வெளியே பார். அது உன்னுடைய உலா. பல்வேறுபட்ட ஊர்களை, மனிதர்களை, மரங்களை, வெற்றிடங்களை, பாலங்களை, வயல்களைப் பார். மேலும், கண்களை மூடி யோசி. உன்னுடன் பேசு. ஓசையற்ற உரையாடல் நிகழ்த்து. தினம் தினம் வாங்கிப் போடும் எத்தனையோ விஷயங்கள், பேக்கிங் பிரிக்கப்படாத புதிய இயந்திரங்களைப் போல மனதின் மூலையில் கிடக்கும். அந்த விஷயங்களைப் பற்றி சிந்தி.”

அவன் அப்பா கதிரேசன் சொல்லியது எதுவுமே கணேசனுக்கு மறக்காது.

’எதைப் பற்றியும் தெளிவான கண்ணோட்டம் கொண்ட உனக்கு மகனாகப் பிறந்தது என் பாக்கியம். நீ தந்தை மட்டுமல்ல. நல்ல சிநேகிதனும் கூட. பெண், காதல், பொறாமை, அரசியல், வீரம், விளையாட்டு, மேலாண்மை. எதைத்தான் நாம் பேசவில்லை! நீ எதையும் தவிர்த்தது இல்லையே!! உரையாட நண்பனாய், குருவாய், ஏன் குழந்தையாய்க்கூட உன்னை பாவித்து இருக்கிறேனே! என்ன இப்படி சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாய்! உன்னை இனி எங்கே பார்ப்பது? பேசவே முடியவே முடியாதா? கடிதம் கூட சாத்தியப்படாதா? இனி உன் கருத்தையே அறியவே இயலாதா?’

கணேசனுக்கு கண்ணில் ஈரம் கசிந்தது. மனதை பிசைந்தது. சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் திரும்பி அவனைப் பார்த்தார். கணேசன் உருவம் எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பார் அப்பா.

”உனக்கு உன் அம்மா நிறம்டா. நம்ம குடும்பத்து மூக்கு. கருகருன்னு மீசையோடு… சினிமா ஹீரோ எல்லாம் கெட்டான் போ. சும்மா வெட்கப்படாமல் என்கிட்ட சொல்லு. நீ வீதில போறப்ப பொண்ணுங்க உன்ன கவனிப்பாங்கதானே. உன்னை தூரத்தில் பார்த்ததுமே வேகமாக மேலாடையை சரி பண்ணிப்பாங்களே. கிட்ட வரும்போது ஓரக்கண்ணால பாப்பாங்களே! இந்த மீசையோட நீ ரொம்ப ஹேண்ட்சம் தாண்டா.’

கணேசன் வெட்கப்படுவதை பார்த்ததும், அதற்கும் ஒரு விளக்கம் கொடுப்பார் என்பதும் அவன் நினைவுக்கு வந்தது.

“முதல்ல குற்ற உணர்ச்சியையும் கூச்ச உணர்ச்சியையும் விடணும்டா. அது வளர்ச்சியைக் கெடுத்துவிடும். தகுந்ததை கருமித்தனம் இல்லாம பாராட்டு. அதே மாதிரி யாரும் உண்மையா பாராட்டினா, ஏத்துக்க. எதுக்கு அனாவசிய டிபென்சிவ்னெஸ்! அடக்கம் தேவைதான். ஆனாலும், சரியானதை ஏத்துக்கப் பழகு.”

பேருந்து ஏதோ ஒரு ஊரில் நிற்க, கொஞ்சம் பேர் இறங்கி, புதியவர்கள் ஏறி அமர்ந்வதை கணேசன் கவனித்தான்.

’வாழ்க்கையும் பயணம் போறமாதிரியேதான் இல்லையா! சிலர் புதுசா வர்றாங்க. சிலர் வெளியேறிடுவாங்க. கூடவே பயணம் பண்ணிட்டு சொல்லிக்காமல் இறங்கிப் போயிடுவாங்க”. அவன் அப்பா என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

”வெள்ரிக்காய்.. வெள்ரிக்காய்.. கட்டு ஒரு ரூபாய் சாமி”

வாங்கினான். கொண்டு சென்றிருந்த பாட்டில் தண்ணீரில் கழுவி விட்டு ஒன்றை சாப்பிட ஆரம்பித்தான். பின் சீட்டுக்காரர் நான்கு கட்டு மூன்று ரூபாய்க்கு கேட்டு பேரம் பேசிக் கொண்டிருந்தார். இது அப்பாவுக்கு சுத்தமாக பிடிக்காத விஷயம்.

“ரிக்க்ஷாக்காரன் காய்கறிக்காரன், சாப்பாட்டு கேரியர் கொண்டுவர்றவன்கிட்ட எல்லாம் பேரம் பேசுவதற்கு ரொம்ப கல் மனசா இருக்கணும்டா” என்பார்.

தெரு திரும்பியதும், அவன் வீட்டு வாசலில் கூட்டம் தெரிந்தது. பந்தல் போட்டிருந்தார்கள். இவனுக்கு வழி விட்டார்கள். மூங்கில் கழிகளும் பச்சை ஓலைகளும் வெளியில் கிடந்தன.

கூடத்தில் இரண்டு மர பெஞ்ச்சு களை ஒன்றாகச் சேர்த்துப் போட்டு, அதன் மீது போர்வை விரித்து, அதன்மேல்….கணேசனுக்கு அடி வயிற்றில் வலித்தது. தாங்கவில்லை. கணேசன் அவர் அருகில் போய் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டான். தலைமாட்டில் அவன் அம்மா. அதிகம் அழுதிருப்பாள் போல. முகமெல்லாம் வீங்கி, பொட்டு கலைந்து.. அருகில் தங்கை மீனா விசும்பியபடி.

கணேசன் கையை பிடித்தபடி இருவரும் கதறத் தொடங்க..கணேசன் அப்பாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். ”உறங்குவது போலும் சாக்காடு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார், பார்த்தியா? சாகிறது அவ்வளவு சுலபமாடா? தூங்கப் போற மாதிரியா? அவ்வளவு கேஷிவலா எடுத்துக்க முடியுமா?” கேள்வி கேட்பார்.

பின்னர் அவரே, ”அப்கோர்ஸ். எல்லா வேலையும் முடிஞ்சாசின்னா..எல்லாம் திருப்தியா பார்த்தாச்சின்னா..ஈசியாப் போயிடலாம்தான். பொருட்காட்சிக்குப் போறோம்.நாலு மணி நேரம், ஆறு மணி நேரம்… வேடிக்கை, வினோதம், சாப்பாடு, விளையாட்டு… எவ்வளவு நேரம்தான் செய்ய முடியும்? திரும்பத் திரும்ப அதே ன்னா அது தண்டனை ஆயிடும்லயா! ஒவ்வொண்ணுக்கும் ஒரு ’சைக்கிள் டைம்’ இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு அவசியம். வெளியில வரத்தான் வேணும். வயதாகி இறப்பதும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.” விளக்கமாய் சொல்வார்.

கணேசனுக்கு, சுந்தரேசனைப் பார்க்க தூங்குவதுபோலதான் இருந்தது. அவர் லேசாக சிரிக்கிறார் போல கூட கணேசனுக்கு பட்டது.

”எதுக்கும் பயப்படாதே. சந்திக்க வேண்டியதை சந்திக்கத்தான் வேண்டும். போய்விட்டு வா” என்று பதினாறு வயதில் தனியாக பம்பாய்க்கு அனுப்பியவர். தைரியம் சொல்லியவர். “நீச்சல்தானே கற்றுக்கொள்ளனும் என்று வீட்டுக் கிணற்றில் தூக்கி போட்டவர். மூன்றாவது எம்பலுக்கு மட்டுமே, தானும் குதித்துத் தூக்கியவர். பத்தாயிரம் ரூபாய் பணத்தை பஸ் ஸ்டாண்டில் தொலைத்துவிட்டு வந்ததற்கு, நிதானமாக விவரம் கேட்டுக்கொண்டு, கூடத் தேட வந்தவர். தேட மட்டும் செய்தவர்.

மீண்டும் நிதானமாக அவரை தலைமுதல் கால்வரை பார்த்தான். அவன் சிறு வயது முதல் சந்தோஷமாக பிடித்துக்கொண்டு நடந்த கைகள். கட்டிக்கொண்டு தொங்கிய கழுத்து. படுத்துப் புரண்டபடி, தன் செல்லக் கோபம் காட்டிய தலைமுடி. இந்த உருவம் இனி கிடையாதா? கணேசனின் மனம் துவண்டது.

எழுந்தான். அவருடைய அறைக்கு சென்றான். அவர் தியானம் செய்ய அமரும் ஓலைத் தடுக்கு. வரிசையாய் கண்ணாடி அலமாரிக்குள் நின்றிருக்கும் சில நூறு புத்தகங்கள். செங்கருப்பு மர மேசை, நாற்காலி. அவன் தாயாரின் பிரேம் பண்ணிய கருப்பு-வெள்ளை போட்டோ. ஒற்றைக் கட்டில். அதில் அமர்ந்து கொண்டான். காபி வந்தது.

வெளியில் நடவடிக்கைகள் அதிகமாகின. கணேசன் அதிகம் பதறாத் மாதிரி மற்றவர்களுக்குப் பட்டது. அவன் சித்தப்பா அழைத்தார். செய்யவேண்டிய சம்பிரதாயங்கள் ஒவொன்றாய்ச் சொல்ல, இயந்திரமாய் செய்து முடித்தான்.

மயானக் கரையில் தலையும் முகமும் மழிக்கப்பட்ட கணேசன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அடுக்கிய கட்டைகள் மேல் அவனுக்கு மிகப் பிரியமான சுந்தரேசன். அக்கம்பக்கம் என்று எத்தனையோ இடங்களில் இழப்புகளை பார்த்திருந்த கணேசனுக்கு அன்றுதான் இழப்பின் வலி புரிந்தது.

தீட்டு, தந்தையை அனுப்பி விட்டு வீடு வந்தான். மனது கிடந்து தவித்தது. இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளக் கூட அவன் மனம் சுந்தரேசனைத்தான் நினைத்து ஏங்கியது.

உறவினர்கள் கிளம்ப, ஒரே வாரத்தில் வீட்டில் நிலைமை அதிகம் மாறியது. வீட்டு விஷயங்களைப் பேசிவிட்டு, அம்மாவையும் தங்கையையும் விட்டுவிட்டு அலுவலகம் செல்ல ஊருக்கு கிளம்பினான்.

கண்ணாடி பார்க்கையில் அவனுடைய மீசை இல்லாத முகம் அவனுக்கே பெரிய வித்தியாசமாய்த் தெரிந்தது.

சுந்தரேசன் இழப்புக்கு மொட்டைத் தலையும் மழிக்கப்பட்ட மீசையும் தான் அடையாளம். இதுவும் கூட ஓரிரு மாதங்களில் மாறிவிடும். அவன் மனதுக்குள் பேசினான்.

’மனைவியை இழந்த மேனேஜர் ராஜகோபால் மறு கல்யாணம் செய்து கொள்ள நான்கு மாதம் ஆனது. பாட்டி இறப்பை அம்மா மறக்க, ஒரு வருடம் தேவைப்பட்டது. மூத்த பையன் கிணற்றில் விழுந்த இறந்ததை ராஜேந்திரன் மாமா வருடமொருமுறை ஜனவரி ஏழாம் தேதி நினைக்கிறார். உன்னை.. உன்னை மறக்கவே கூடாது …உன்னை நான் தினம்தினம் வாழ்க்கை முழுக்க நினைக்க விரும்புகிறேன். எப்படி என்ரு கேட்கிறாயா.. இனி எனக்கு மீசை கிடையாது.

ஆஹாஹா.. கண்ணாடி பார்க்கும் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு முறையும் உன் நினைவு எனக்கு வர வேண்டும். என்ன .. உன் விளக்கம் உண்டா?

இதற்கு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

(குமுதம் ஜங்ஷன் 18. 2. 2001ல் வெளியானது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *