(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம்-10
ரூபிணியின் அலுவலகத்தில் வருடாந்திர ஆடிட் நடந்து முடிந்தது. ஆடிட் பார்ட்டிக்கு விருந்து கொடுப்பது அவர்களது அலுவலக வழக்கமாம். பெரிய ஸ்டார் ஹோட்டலில் மதிய உணவு சாப்பிடுவது என்று முடிவாகியது. எல்லோரும் அவரவருடைய இரண்டு சக்கர.. நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள். அன்று ப்ரீதி அவளுடைய ஸ்கூட்டியில் வரவில்லை. “ரிப்பேர்” என்றாள்.

“ஓ.கே. என்னுடன் வா போகலாம்.” ரூபிணி எளிதாய் கூறினாள்.
மதியம் பனிரெண்டு மணிக்கே ப்ரீதி எழுந்து ரூபிணியின் டேபிள் அருகே வந்தாள். ரூபிணி கேள்வியாய் பார்த்தாள்.
“அம்மா… திடீரென்று வரச் சொல்கிறார்கள் ரூபிணி.. வீட்டுக்குப் போய் விட்டு நேரே ஹோட்டலுக்குப் போய் விடலாம். ஆபிஸரிடம் பெர்மிசன் வாங்கி விட்டேன். போகலாமா.”
”ம்ம்.. வேலையிருக்கிறதே..” ரூபிணி தயங்கினாள்.
“வந்து பார்த்துக் கொள்ளலாம்” ப்ரீதி அவசரப்படுத் தினாள்.
ரூபிணி அரை மனதாய் எழுந்து கம்ப்யூட்டரை அணைத்து விட்டு டேபிளைப் பூட்டி சாவியை ஹேன்ட் பேகிற்குள் போட்டுக் கொண்டாள்.
இருவரும் பேசிக் கொண்டே அலுவலகப் படிகளில் இறங்கினார்கள். ரூபிணி தன் கைனடிக் ஹோண்டாவை கிளப்பினாள். ப்ரீதி பின்னால் அமர்ந்து கொள்ள ப்ரீதியின் வீட்டை நோக்கி ஸ்கூட்டர் பறந்தது.
“என்னம்மா… ஏன் வரச் சொன்னீங்க..” ப்ரீதி வீட்டுக்குள் நுழைந்து கொண்டே கேட்டாள்.
‘மும்பையிலிருந்து உன் அத்தையும் மாமாவும் வந்திருக்கிறார்கள். கோயம்புத்தூர் போகிறார்களாம். ஆன் தி வேயில் உன்னைப் பார்த்து விட்டுப் போகணும்னு வந்தாங்களாம். ஈவினிங்கே கிளம்பி விடுவார்களாம். நீ ஆபிஸில் ஆடிட்ன்னு சொன்னாயே.. அதனால்தான் மதியமே வந்து விட்டுப் போன்னு போன் பண்ணினேன்..” ப்ரீதியின் அம்மா ரூபிணியை பார்த்துக் கொண்டே பேசினாள்.
ப்ரீதியின் முகம் ஏனோ கருத்தது. தாயின் பார்வையை உணர்ந்தவளாய் ரூபிணியை அறிமுகம் செய்து வைத்தாள்.
“அம்மா.. இவள் ரூபிணி.. என் கோவொர்க்கர்.”
“அப்படியாம்மா… உட்கார். என்ன சாப்பிடுகிறாய்?”
“ஒன்றும் வேண்டாம்மா… ஆக்சுவலாய் இன்றைக்கு எங்கள் ஆபிஸில் விருந்து கொடுக்கிறார்கள். நானும் ப்ரீதியும் ஹோட்டலுக்கு போகும் வழியில் வந்து விட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறோம்.”
ப்ரீதியின் தாய் ப்ரீதியைப் பார்த்த பார்வையில் ஏதோ செய்தி இருந்தது. அதற்குள் ப்ரீதியின் அத்தையும்.. மாமாவும் ஆர்ப்பரித்தவாறு வந்து விட்டார்கள்.
“ஹாய் ப்ரீதி… ஹவ் ஆர் யு…? ஐயோ… எவ்வளவு வளர்ந்து விட்டாய்?”
“குட்டிப் பெண்ணாய் இருக்கும்போது நாம் பார்த்தது. இத்தனை வருடங்களில் வளர்ந்திருக்க மாட்டாளா?”
ரூபிணி தர்ம சங்கடமாய் உணர்ந்தாள்… ப்ரீதியின் முகம் பார்த்தாள்.
“ப்ரீதி… உன் பிரண்டுக்கு மாடி ரூமைக் காட்டும்மா.. அத்தையும், மாமாவும் உன்னிடம் பேசி முடிக்கும் வரை அவள் அங்கே வெயிட் பண்ணட்டுமே.” ப்ரீதியின் தாய் ரூபிணியின் சங்கடம் உணர்ந்தவளாய் கூற அது இன்னும் ரூபிணியின் சங்கடத்தை அதிகரித்தது.
“ப்ரீதி… நான் வேண்டுமானால் ஹோட்டலுக்கு போய் விடவா. நீ பேசிவிட்டு மெதுவாக வா…”
வாசலில் நின்று கொண்டிருந்த காரைப் பார்த்தபடி ரூபிணி வினவினாள் ப்ரீதி யோசனையுடன் தாயைப் பார்த்தாள்.
“ரூபிணி அன் ஈஸியாய் பீல் பண்ணுகிறாள் போல… நாங்கள் வேண்டுமானால் உன்னைக் காரில் கொண்டு போய் விடுகிறோம்.” ப்ரீதியின் தாய் கூறினாள்.
ஓர் விடுதலை உணர்வுடன் எழுந்த ரூபிணி வாசலுக்கு வந்து கைனடிக் ஹோண்டாவை கிளப்பிக் கொண்டு மெதுவாய் ஹோட்டலை நோக்கி வண்டியை விட்டாள். ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தி பூட்டி விட்டு கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். பனிரெண்டே முக்கால் என்றது கைக்கடிகாரத்தின் முட்கள். ஒரு மணிக்கு எல்லோரும் வர ஆரம்பித்து விடுவார்கள். மெதுவாய் படியேறி ஹோட்டலின் மாடியிலிருந்த ஏஸி ஹாலை அடைந்தாள்.
“ஹாய்…” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். உல்லாசப் பார்வையுடன் மூர்த்தி நின்றிருந்தான். ரூபிணியின் முகம் கடுகடுத்தது.
‘இவன் எப்படி முன்னாலேயே வந்தான்…?’
முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் திரும்புவதை லட்சியமே பண்ணிக் கொள்ளாமல் மூர்த்தி அவளை நெருங்கி நின்று பேசினான்.
“உங்கள் சீட்டில் நீங்கள் இல்லை.. அதனால்தான் எல்லோருக்கும் முன்னால் இங்கு வந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்களும் வந்து விட்டீர்கள்…”
என்னவோ அவன் எதிர்பார்ப்பான் என்று அவள் வந்தது போல அவன் பேசியதில் ரூபிணி எரிச்சலுற்றாள். ‘இவனுக்கு நான் என்றால் அவ்வளவு ஈஸியா?’ ப்ரீதி அன்று சொன்னது அவள் நினைவில் இருந்தது.
“ரூபிணி.. நான் உள்ளூர்காரி.. நீ வெளியூர்.. என்னிடம் வாலாட்டினால் உடனே வந்து என் அப்பாவும்.. அண்ணன்களும் இவன் எலும்பை எண்ணி விடுவார்கள்.. உனக்கு வெளியூரில் இருந்து உன் அப்பா வந்து சேரவே ஒரு நாளாகும்… நான் வீட்டு மனிதர் துணையோடு இருக்கிறேன்… நீ ஹாஸ்டலில் இருக்கிறாய்.. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது… அது என்ன தெரியுமா?”
“என்ன?”
“ஜவஹர் என்னிடம் யார் வாலாட்டினாலும் அவர்களது வாலை ஓட்ட நறுக்கி விடுவான்.. என் விசயத்தில் ஜவஹர் ஒரு டெர்ரரிஸ்ட்…”
“மூர்த்தி போன்ற அடாவடிக்காரன் ஜவஹரிடம் பயப்படுகிறானா?”
“ஜவஹரை என்னவென்று நினைத்தாய்…? என்னிடம் மட்டும்தான் ஈகோ பார்க்க மாட்டான். பொறுமையாய் போவான்… நான் என்ன திட்டினாலும் தட்டி விட்டுப் போய் விடுவான்.. அதுவே மற்றவர்களாக இருந்தால் பந்தாடி விடுவான். இந்த மூர்த்தியெல்லாம் ஜவஹர் முன்னால் வெறும் பச்சா… “
இதைக் கூறும்போது பெருமையில் ப்ரீதியின் முகம் ஒளிர்ந்தது இன்னும் ரூபிணியின் நினைவில் இருக்கிறது. இவள் உண்மையிலேயே ஜவஹரை வெறுக்கிறாளா என்று தான் சந்தேகப்பட்டதும் அவளது நினைவில் வந்தது.
“வாங்களேன்.. நாம் நம் இடத்தில் உட்கார்ந்து பேசலாம்.”
மூர்த்தி அவர்களுக்காக ரிஸர்வ் செய்யப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.
‘இவனுடன் ஹோட்டலில் உட்கார்ந்து பேசுவதா…?’ ரூபிணியின் மனம் கோபத்தில் கொதித்தது. இவன் பேசுவதைத் தவறாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் சாப்பிடுவதற்காக அந்த ஹோட்டலுக்கு வந்திருப்பது உண்மைதானே.
‘அதற்காக.. மற்றவர்கள் அருகில் இல்லாமல் இந்தப் பொறுக்கியுடன் தனியே உட்காருவதா?’
தற்செயலாக அந்த ஏ.ஸி. ஹாலின் மற்றொரு மூலையைப் பார்த்த ரூபிணியின் முகம் மலர்ந்து விட்டது.
அங்கே அருகில் இருவரோடு அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.
ஒரு பிஸினெஸ் லன்ச்சிற்காக டில்லியிலிருந்து வந்திருந்தவர்களுடன் வந்திருந்தான் அவன். வியாபார விஷயமாய் பேசிக் கொண்டே ஹாலின் வாசலைப் பார்த்தவன் யோசனையாய் புருவம் தூக்கினான்.
‘யார் அது?… ரூபிணியல்லவா..? இந்தப் பெண் தனியாக சாப்பிட வந்திருக்கிறாளா..?’
அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே மூர்த்தி அவளிடம் பேசினான் அவன் அதை விரும்பவில்லை என்பதை அவள் முகம் காட்டியது. பேசிக் கொண்டே அவள் பின் வாங்க.. அவனும் அவளை நெருங்கி நிற்க முயல்வதைக் கண்டு ஹரிஹரனின் முகம் இறுகியது.
‘யார் இவன்?’
அவன் ஏதோ கேட்க.. ரூபிணி திரும்பி ஹாலை சுற்று முற்றும் பார்த்தவள் ஹரிஹரனை கண்டு விட்டாள்.
அவனைக் கண்டதும் ஒளிர்ந்த கரு விழிகளில் பரவிய வெளிச்சம் கண்டு ஹரிஹரனின் உடலில் மின்சாரம் பரவியது.
‘என்னைக் கண்டு இவ்வளவு பரவசமா?’
ரூபிணி நேராய் ஹரிஹரனிடம் வந்தாள். ஹரிஹரனின் வியப்பு இன்னும் கூடியது.
“ஹலோ சார்.. ஹவ் ஆர் யு?”
“பைன்.. எங்கே இந்தப் பக்கம்…”
“ஆபிஸில் ஆடிட்டிங் பார்ட்டிக்காக இங்கே லன்ச் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். நான் முன்னாலேயே வந்து விட்டேன்.”
“ஈஸிட்… உங்களுடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தாரே..”.
ஹரிஹரன் தயங்காமல் வினவினான். அவனது அந்தக் குணம் ரூபிணிக்கு வியப்பை அளித்தது.
‘எப்படி நேரடியாய் கேட்கிறான்?’
“அவர் என் ஆபிஸில் வேலை பார்ப்பவர்.”
“ஓ.. உங்கள் பிரண்டோ என்று நினைத்தேன்.” இது கொஞ்சம் மறைமுகமான கேள்வி. ஆனாலும் விடாமல் துருவித் துருவிக் கேட்கிறான்.
நீ ஒருவனுடன் ஏன் ஹோட்டலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறாய்? உன்னுடன் பேசிக் கொண்டிருப்பவன் யார்? ஆபிஸில் கூட வேலை பார்ப்பவன் என்றால் உனக்கு எந்த அளவுக்கு பழக்கம்?
‘சும்மாவா இவனைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள்’ ரூபிணியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
ஹரிஹரனின் கூரிய விழிகள் அவளது புன்னகையை கண்டு கொண்டன. அவன் முகத்திலும் மென்னகை பரவியது.
“போயும்.. போயும் அவனைப்போய் என் பிரண்ட் என்கிறீர்களே… அந்த அளவுக்கா என் ரசனை மட்டமாகப் போய் விட்டது… அவன் ஒரு ரோக்.”
அருகிலிருந்தவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மிக மெதுவான குரலில் ஹரிஹரனின் காதுகளில் மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தாள் ரூபிணி.
‘அப்படியா சேதி…’ ஹரிஹரனின் விழிகள் தூரமாய் நின்ற மூர்த்தியை பார்வையாலேயே எரித்தன.
“அப்படியானால் அவனுடன் ஏன் நின்று பேசவேண்டும்…?”
ரூபிணி அவனுக்கு அருகே அமர்ந்திருந்தவர்களைப் பார்க்க,
“அவர்களுக்கு தமிழ் தெரியாது…” என்றான் அவன்.
“அவனிடம் நான் எங்கே பேசினேன்.. லன்ச்சுக்கு முன்னாலேயே வந்து விட்டேன். மற்றவங்க வருவதற்காக வெயிட் பண்ண வேண்டும். இவன் வேண்டுமென்றே வந்து பேச்சுக் கொடுக்கிறான்.”
“இங்கே உட்காருங்கள்…”
ஹரிஹரன் அவனுக்கு அருகே இருந்த காலி இருக்கையை காட்டினான். அவள் தயங்காமல் உட்கார்ந்து கொண்டாள். அவன் மனதில் இதம் பரவியது.
‘எவ்வளவு இலகுவாக அமர்கிறாள்… அவளது அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவனுடன் பேசப் பிடிக்காதவள்… ஒரே ஓர் முறை நேரில் பேசியவனுடன் பேசத் தயங்காமல் உட்காருகிறாள். ஹரிஹரன் மேல் அவ்வளவு நம்பிக்கையா?’
“நீங்கள் இங்கே…” அவள் கேள்வியை முடிக்காமல் பார்த்தாள்.
“பிஸினெஸ் லன்ச்… ” அவன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான்.
“அடடா.. நான் டிஸ்டர்ப் பண்ணி விட்டேனே…”
“உங்கள் ஆபிஸ் ஆட்கள் வராமல் நீங்கள் எழுந்து போனால் அதுதான் என்னை டிஸ்டர்ப் பண்ணும். நான் நிம்மதியாய் இவர்களுடன் பிஸினெஸ் பேச முடியாது…”
ரூபிணி நம்ப முடியாமல் அவன் முகம் பார்த்தாள். ‘என் மேல் அவ்வளவு அக்கறையா? நான் அந்த அளவுக்கு முக்கியமானவளா?’
ஹரிஹரனின் முகபாவனை ‘ஆமாம்’ என்றது. அவள் விழிகள் படபடக்க பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். சர்வர் ஆர்டர் எடுக்க அருகில் வந்து மரியாதையுடன் நின்றான். அவனது விழிகள். ரூபிணியை பயபக்தியுடன் பார்த்தன.
‘ஹரிஹரன் சாரின் அருகே இவ்வளவு உரிமையாய் சகஜமாய் அமர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண் யார்?’
ஹரிஹரன் எதிரே இருந்தவர்களிடம் இந்தியில் ஏதோ வினவினான். அவர்கள் சிரித்துக் கொண்டே.
“அச்சா… என்றார்கள்.
“நான்கு ஜூஸ்…” என்றான் ஹரிஹரன்.
“எனக்கு ஒன்றும் வேண்டாமே…”
“எனக்காக நீங்கள் சாப்பிட வேண்டுமே…”
ஹரிஹரன் குறும்பாகக் கூறினான். ‘எனக்காக…’ ரூபிணி சொன்ன வார்த்தை. ரூபிணி இதழ் கடித்தாள். அவன் பார்வை அவள் இதழ்களில் படிந்தது. அவள் முகம் சிவந்தாள்.
“இன்னும் நான் சொன்ன வார்த்தையை நினைவில் வைத்திருக்கிறீர்களா?”
“என்றும் நினைவில் வைத்திருப்பேன்…” என்றுமென்றால்… என் இறுதிவரை…
ரூபிணி தவித்துப் போனாள். ஜமுனா சொன்னது போல் இது விபரீத விளையாட்டுத்தான். நெருப்போடு விளையாடும் விளையாட்டு. ‘மூர்த்திக்கு பயந்து இங்கு வந்து அமர்ந்தது தவறோ…?’ நினைக்கும்போதே அவளது நெஞ்சம் அவளைப் பார்த்துச் சிரித்தது.
‘மூர்த்திக்கு பயந்தா இங்கு வந்து அமர்ந்தாய்?’
ஹரிஹரனின் முகம் பார்த்தாள். அவன் ஜூஸ் தம்ளரை அவள் பக்கம் நகர்த்தினான். இயந்திரம் போல் எடுத்துக் குடித்தாள். ஹரிஹரன் அவளைப் பார்த்துக் காண்டே இருந்தான்.
அவளை… அவளது தவிப்பை… அவளது பயத்தை.. அவளது நடுக்கத்தை… அவளது படபடப்பை… பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவன் முகத்தில் என்றுமேயில்லாத கனிவு இருந்தது.
அத்தியாயம்-11
ஹரிஹரனின் பார்வை தன் மேலேயே பதிந்திருப்பதை உணர்ந்த ரூபிணியால் விழிகளை உயர்த்த முடியவில்லை. அவளது வெட்கத்தை உணர்ந்த ஹரிஹரனின் முகத்தில் பெருமிதம் வந்தது.
தனது அனைத்து அடையாளங்களும் அகன்று தான் ஒரு ஆண் என்ற உணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருந்தது. அவனைக் கண்டு ஒரு பெண் நாணித் தலை குனிவது அவனது ஆண்மைக்கு பெருமிதத்தையும் கௌரவத்தையும் அளித்தது. எதிரே அமர்ந்திருந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பக்கவாட்டில் அவளைப் பார்க்க வசதியாய் திரும்பி அமர்ந்து கொண்டான்.
ரூபிணி சங்கடமுற்றாள். ஹரிஹரன் அவனது ஆர்வத்தை வெளிப்படையாய் காண்பித்தது இயல்பாய் அவனைப் பார்த்து பேசவிடாமல் அவளைத் தடுத்தது. ஆனால் அவனா அவளைப் பேசாமல் இருக்க விடுபவன்?
ஹரிஹரன் அவளது மௌனத்தைக் கலைத்தான்.
“கோவில்பட்டிக்கு இந்த மாதம் போவீங்களா?”
“என் ஊர் கோவில்பட்டி என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ரூபிணி ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“அதுவும் தெரியும்… உன் வீடு அண்ணா நகரில் நான்காவது ஸ்ட்ரீட்டில் இருக்கிற ஆறாம் நம்பர் வீடு என்பதும் தெரியும். உன் அப்பா பெயர் ரெங்கநாதன்..அம்மா பெயர் வீரலட்சுமி. இருவருமே பேங்கில் வேலை பார்க்கிறார்கள் என்பதும் தெரியும்… உன் அக்கா பெயர் தாரிணி… பெங்களூரில் மேரேஜ் பண்ணிக் கொடுத்திருக்கிறீர்கள்.. உன் தம்பி பெயர் நவின் இன்ஜினியரிங் படிக்கிறான் என்பதும் தெரியும். இன்னும் உன் அக்கா வேலை பார்க்கும் கம்பெனி.. குடியிருக்கும் அட்ரஸ்.. உன் தம்பி படிக்கும் காலேஜின் பெயர்… ஊர்.. எல்லாமே தெரியும். சொல்லவா?”
“வேண்டாம்.. வேண்டாம்.. ஆனால் இவ்வளவும் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“அதுதான் ஹரிஹரன்.”
“இதையெல்லாம் ஏன் தெரிந்து கொண்டீர்கள்?”
“இது என்ன கேள்வி ? உன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அடிமுதல் நுனி வரை தெரிந்து கொள்ளத்தான்.”
“அதுதான் ஏன்?”
“சும்ம்மா…”
ஹரிஹரன் மிக லேசாக மற்றவர்கள் அறியாத வண்ணம் கண் சிமிட்டினான். இப்போது ரூபிணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.
‘எப்படி தைரியமாய் கண் சிமிட்டுகிறான்?’
ஹரிஹரனின் எதிரேயிருந்தவர்கள் ஹிந்தியில் ஏதோ வினவ.. அவன் ரூபிணியைப் பார்த்தவாறே இந்தியிலேயே பதில் சொன்னான். அவர்கள் பலமாய் சிரித்தார்கள். ரூபிணி புரியாமல் விழித்தாள்.
“ஏன் சிரிக்கிறார்கள்?” ரூபிணி வினவினாள்.
“சும்ம்..மா…” அவன் முகத்தில் விசமம் இருந்தது.
“இல்லை.. நீங்கள் என்னைப் பற்றி ஏதோ சொன்னீர்கள்.”
“இருக்கலாம்.”
“என்ன சொன்னீர்கள்…?”
“இன்னொரு நாள் சொல்கிறேன்.”
இன்னொரு நாளா?’ ரூபிணி தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
‘இதுபோல் இன்னொரு நாள் வருமா…?’
“இல்லை… இப்போதே சொல்லுங்கள்…”
“இப்போது சொல்லக்கூடாது ரூபி…”
“ரூபியா…?”
“யெஸ்… “
“என் பெயர் ரூபிணி…”
“இருக்கட்டுமே…”
“அது அழகான பெயர் தெரியுமா?”
“அழகான பெண்ணுக்கு அழகான பெயர்தான் வைப்பார்கள். அதிலும் உன் பேரண்ட்ஸ் உன் அழகைப் பார்த்து பொருத்தமாய் பெயர் வைத்திருக்கிறார்கள். ரூபிணி. ரூபவதியென்றால் அழகான பெண் என்று அர்த்தம். ரூபிணியென்றால் அழகே உருவானவள் என்று அர்த்தம்…”
ஹரிஹரனின் பார்வை ரசனையாய் அவள் மேல் படிந்திருந்தது. அவளைத் தலையோடு கால் வரை ஓர் முறை பார்த்தான். ரூபிணி முகம் திருப்பிக் கொண்டாள்.
மயில் கழுத்து நிறத்தில் ஜரிகைக் கரையிட்ட காட்டன் புடவையில் தேவதைபோல் இருந்தாள். நீண்ட பின்னல்.. காதுகளில் அழகிய பூக்களின் கொத்துக்கள் ஒன்று சேர்ந்த வடிவில் தோடு… கழுத்தில் மெல்லிய செயின்.. கைகளில் பொன் வளையல்கள்.. இடது கையில் சிறிய கைக்கடிகாரம்… முகத்தில் சாயப் பூச்சில்லாத இயற்கை வனப்பு… அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது ஹரிஹரனுக்கு.
“ரூபிணி.. அழகே வடிவானவள்.. ரூபி.. வைரம்.. இரண்டுமே உனக்குப் பொருத்தம் ரூபிணி…”
இயல்பான ஒருமைக்கு அவன் எப்போது தாவினான் என்று ரூபிணி யோசித்தாள். அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைத் தவறாக நினைக்கவும் முடியவில்லை. ஒருமை தந்த மன நெருக்கம் நிறைவைத் தந்ததால் அதைப் பற்றிய சிந்தனையைத் தவிர்த்தாள்.
“ரூபிணி.. சாப்பிட வரவில்லையா…?” பிரீதியின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவளது அலுவலகத்தார் வந்து விட்டிருந்தனர்… ப்ரீதி சற்று தள்ளி நின்று கொண்டு அழைத்தாள்.
”ஓகே.. சார்.. எங்க ஆபிஸில் வந்திட்டாங்க. ஸீ யு லேட்டர்…”
“ஊஹூம்… ? லேட்டர்ன்னா எப்போ?”
“சார் ப்ளீஸ்… தே ஆர் வெயிட்டிங் பார் மீ…”
“நானும்தான் உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.”
“சார்… நான் போகவேண்டும் சார்…”
“எனக்குப் பதிலைச் சொல்லிவிட்டுப் போ…”
”நான் சொல்கிறேனே…”
”எப்போது?”
“போனில் சொல்கிறேன்…”
ரூபிணி அப்போதைக்கு தப்பிக்க அந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள். ப்ரீதி ரூபிணியைப் பார்த்த பார்வையில் சிறு கலக்கம் இருந்தது.
“அது ஹரிஹரன் போல இருக்கிறதே…”
“அவரேதான்…”
“அவருடனா இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தாய்..?”
”ஆமாம்.”
எளிதாய் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ப்ரீதி. அதற்குள் அவர்களது ஆபிஸர் ‘யார் யாருக்கு என்ன வேண்டும்?’ என்று வினவ அவர்களது கவனம் சாப்பாட்டில் திரும்பியது.
அனைவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இடையில் சர்வர் வந்து மூர்த்தியின் காதுகளில் ஏதோ சொல்ல.. அவன்.
“ஒரு நிமிஷம்.. வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.
ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தவனின் முகம் வீங்கினாற் போல இருந்தது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. தலை முடி கலைந்திருந்தது. உடை கசங்கியிருந்தது. குனிந்த தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான்.
”மூர்த்தி.. உங்களுக்கு அடுத்து என்ன சொல்ல?” ஆபிஸர் வினவினார். அவனிடமிருந்து பதிலே இல்லை. அருகில் அமர்ந்து ப்ரீதியை சைட் அடித்துக் கொண்டிருந்த ஜவஹர் மூர்த்தியின் முதுகில் ஓர் அடி வைத்தான்.
“ஆ.. ஆ… என்ன..” மூர்த்தி பயந்து போனவன் போலவும்… வலி தாங்க முடியாதவன் போலவும் அலறினான்.
“என்னப்பா ஆச்சு. ஏன் இப்படி அலறுகிறாய்?”
“உனக்கெப்படிடா என் வேதனை தெரியும்.”
”அது சரி.. உன் வேதனை உனக்குத்தானே தெரியும். ஆபிஸர் சார் கூப்பிடுகிறார். என்னன்னு கேளு…”
”சார்…”
“இன்னும் கொஞ்சம் வேண்டுமா மூர்த்தி.. தரச் சொல்லவா?”
“ஐயையோ..”
“ஏன்ப்பா.. என்ன ஆச்சு உனக்கு பிரைட் ரைஸ் பிடிக்குமே.. இன்னும் கொஞ்சம் தரச் சொல்லவான்னு கேட்கிறார். அதுக்கு ஏன் அலறுகிற?”
”எனக்கு எதுவும் வேண்டாம் சார்.. நான் போகிறேன்.” மூர்த்தி எழுந்து அவசரமாய் கையைக் கழுவி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
”ஏம்பா ஜவஹர்! ஏன் இவன் இப்படி ஓடுகிறான்.”
“எனக்குத் தெரியவில்லை சார்.”
ஜவஹர் யோசனையுடன் எழுந்து கைகழுவச் சென்றான். சற்று நேரம் கழித்து திரும்பி வந்தான்.
“ரூபிணி சாப்பிட்டு விட்டாயா…” ப்ரீதி கேட்டாள்.
“ம்ம்…” ரூபிணி எழுந்து கொண்டாள்.
கைகழுவி விட்டுத் திரும்பி வரும்போது ஹரிஹரன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ரூபிணியின் பார்வை தாவியது.
ப்ரீதி அருகே அமர்ந்திருந்ததால் ஹரிஹரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்திக் கொண்டு அவ்வளவு நேரமும் இருந்தவள் கிளம்பப் போகிறோம் என்று தெரிந்ததும்… அவனை இனி எப்போது பார்க்க முடியுமோ.. இல்லை பார்க்க முடியாமலே போய் விடுமோ என்ற தவிப்புடன் அவனிருக்கும் திசையைப் பார்த்தாள்.
அதே நேரம் அவனும் அவளையே பார்த்துக் கொண்டு எதிரே இருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான். அவனது பார்வையைச் சந்தித்ததும் ரூபிணியின் உடல் குப்பென்று வியர்த்து விட்டது… இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“போகலாமா…” ப்ரீதி அவளது கரம் பிடித்து இழுத்தாள்.
“போகவேண்டுமா…?” மீண்டும் ஏக்கத்துடன் ஹரிஹரனிடம் அவளது பார்வை ஓடியது.
“போகத்தான் வேண்டும்..” ப்ரீதி வெடுக்கென்று பதில் சொன்னாள்.
”ம்ம்ம்…” ரூபிணி நகர நினைத்தாலும் அவள் கால்கள் நகரவில்லை.
ப்ரீதி கோபத்துடன் அவளது கை பற்றி இழுத்தவாறு ஹோட்டலை விட்டு வெளியே சென்றாள். ஏ.ஸி. ஹாலை கடக்கும் கடைசி நொடியில் ரூபிணி ஹரிஹரனைத் திரும்பிப் பார்க்க.. அவன் தலை அசைத்தான்.
அந்தச் செய்கையில் மனம் நிறைந்தவள் செலுத்தப்பட்டவள் போல வண்டியை எடுத்தாள்.
“இறங்கு…” ப்ரீதி அதட்டினாள்.
“ஏண்டி..” புரியாமல் விழித்தாள் ரூபிணி.
“நீ வண்டியை ஓட்டினால் ஆக்ஸிடென்ட்தான் வரும். நான் ஓட்டுகிறேன். நீ பின்னால் உட்காரு…”
“நான் என்ன இன்றைக்குன்னா புதிதாய் வண்டி ஓட்டுகிறேன்?”
“ஆனால் இன்றைக்குத்தானே புதிதாய் நீ நிலை தடுமாறி நின்று நான் பார்க்கிறேன்? இந்த நிலையில் நீ வண்டியை ஓட்ட வேண்டாம்.”
“ப்ரீதி…”
“பேசாமல் பின்னாலே உட்கார்.”
அலுவலகம் வந்து சேர்ந்த பின்னால் இருவருக்கும் பேச நேரம் கிடைக்கவில்லை. நான்கு மணிக்கு சபாபதி அவர்கள் இருவரின் டேபிள் மேலேயும் காபிக் கோப்பைகளை வைத்து விட்டுச் சென்றான். காபியை உறிஞ்சிய படி ரூபிணியைப் பார்த்தாள் ப்ரீதி. ரூபிணி அவள் பார்வையைத் தவிர்த்தாள். ப்ரீதியின் முகத்தில் கோபச் சிரிப்பு வந்தது.
“ஏய்ய்.. என்னைப் பாரு…”
“என்ன…?”
“நீ முதன் முதலாய் வேலையில் சேர்ந்தபோது எப்படி இருந்தாய் தெரியுமா? நேர் கொண்ட பார்வையுடன் இருந்தாய். இன்று அந்தப் பார்வை எங்கே போனது?”
“இல்லையே… நான் எப்போதும் போல்தானே இருக்கிறேன்?”
“வேண்டாம் ரூபிணி. இது சரிவராது.”
“எது…?” ரூபிணி திகிலுடன் கேட்டாள். ப்ரீதி அவளுடைய அந்தரங்கத்தை அறிந்து கொண்டு விட்டாள் என்ற பயம் அவளுள் எழுந்தது. ப்ரீதியின் வார்த்தைகள் அவளது பயத்தை உறுதிப்படுத்தின.
“எண்ணையும்.. தண்ணீரும் ஒன்றாய் சேர முடியாது ரூபிணி.. இந்த எண்ணத்தை மறந்து விடு. உன் மனதில் ஆசைகளை அழித்துவிடு.”
“ப்ரீதி.. நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.”
“புரியும்.. புரியாதது போல் நடிக்காதே.. நான் ஹோட்டலின் ஏ.ஸி. ஹாலுக்குள் வரும்போது நீ ஹரிஹரனின் பக்கத்தில் உட்கார்ந்து ஆண்டாண்டு காலமாய் பழகியவள் போல் பேசிக் கொண்டிருந்தாய்…”
“அது… மூர்த்தி வந்து தொல்லை கொடுத்தான்.. அதனால்தான்..”
“இனி மூர்த்தி தொல்லை கொடுக்க மாட்டான்.”
“எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்கிறாய்.”
“இப்போதுதான் ஜவஹர் வந்து என்னிடம் சொல்லி விட்டுப் போனான்.”
“நீ அவரிடம் பேசமாட்டாயே..”
“உன் விஷயம் என்பதால் கேட்டுக் கொண்டுதானே ஆக வேண்டும்?”
“என் விஷயமா?”
“ஆமாம்.. மூர்த்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாதியில் சர்வர் கூப்பிடவும் எழுந்து போனானே.. ஏன் என்று தெரியுமா?”
“ஏன்…?”
“கூப்பிட்டு விட்டது ஹரிஹரனின் பி.ஏ. மூர்த்தியை பாத்ரூமிற்குள் விட்டு நான்கு பேர், நொறுக்கி எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்…”
“எதற்கு…?”
“உனக்கு இன்னும் புரியவில்லையா?”
“புரியவில்லை ப்ரீதி… “
“புரியவில்லையா…? ரூபிணி.. உனக்கு எப்படி புரிய வைப்பது ? இனிமேல் அப்படித்தான். உன் நிழலைப் பார்க்கக் கூட யாரும் பயப்படுவார்கள். உன்னைச் சுற்றி நெருப்பு வளையம் விழுந்து விட்டது ரூபிணி… தெரிந்தோ.. தெரியாமலோ.. நீ அதற்குள் சிக்கி விட்டாய்.. உன்னால் மீண்டு வர முடிந்தால் வந்து விடு. அதுதான் ஒரு பிரண்டாக நான் உனக்குச் சொல்லும் அட்வைஸ்.”
ப்ரீத்தியின் கண்கள் கலங்கி விட்டன.
அத்தியாயம்-12
நெருப்புடன் நீ விளையாடுகிறாய் என்று அன்று ஜமுனா எச்சரித்தாள். நெருப்பு வளையத்திற்குள் சிக்கிவிட்டாய் என்று இன்று ப்ரீதி கூறுகிறாள். இருவரும் அவளின் அன்புத் தோழிகள். நலம் விரும்பிகள். இருவர் நாடுவதும் ரூபிணியின் நன்மையைத்தான். ஆனால் ரூபிணியின் மனம் அந்த நெருப்பு மனிதன் ஹரிஹரனிடம் சிக்கியிருக்கிறதே.. அவள் என்ன செய்வாள்? ப்ரீதியோ தன் கடமையைச் செய்து கொண்டிருந்தாள்.
“மூர்த்தி திரும்பி வந்தபோது அவனது நடையுடை பாவனை எதுவும் சரியில்லையாம்.. சாப்பிடக் கஷ்டப்பட்டிருக்கிறான். உட்காரக் கூட முடியாமல் சிரமப்பட்டானாம். அதனால்தான் பாதியிலேயே எழுந்து ஓடியிருந்திருக்கிறான். ஜவஹர் சந்தேகப்பட்டு அவனைக் கூப்பிட்டுக் கொண்டு சென்ற சர்வரிடம் போய் விசாரித்து இருக்கிறான். சர்வர்தான் எல்லாவற்றையும் சொன்னானாம்… மூர்த்தி அடிவாங்கினதில் எனக்கு சந்தோசம்தான். அவனுக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும்.”
“ஓ.. அதனால்தான் நம் ஆபிஸர் அவனிடம் இன்னும் கொஞ்சம் வேண்டுமா? தரச் சொல்லவா.. என்று கேட்டதும் அப்படி அலறினானா?” ரூபிணி ‘களுக்’ கென்று சிரித்தாள்.
ப்ரீதியும் உடன் சேர்ந்து சிரித்தாள். ஆனால் அவளது சிரிப்பு பாதியிலேயே மறைந்தது. ரூபிணியை கவலையுடன் பார்த்தாள்.
“இது சிரிக்க வேண்டிய விஷயமில்லை ரூபிணி. ரொம்ப ரொம்ப சீரியஸான விஷயம். இனி உன் சுதந்திரம் பறி போய்விடும். ஜவஹர் கூட உன்னிடம் பேச யோசிப்பான். நாம் காட்டுக் கத்தலாய் கத்தினால்தான் சபாபதி நமக்கு காபி வாங்கிக் கொண்டு வந்து தருவான். இன்றைக்கு டான்னு நாலு மணிக்கெல்லாம் காபி நம் டேபிளில் வந்து கிடைத்து விட்டது. எப்படின்னு யோசிச்சயா?”
“அட.. ஆமாம்.. ஆனால் ப்ரீதி.. நீ பயப்படுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. இது நம் ஆபிஸ் ப்ரீதி.”
“நம் ஆபிஸில் உன்னைப் பார்க்க வந்த ஹரிஹரன் எங்கே வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்? விசிட்டர்ஸ் ஹாலிலா…?” ப்ரீதியின் குரலில் எள்ளல் இருந்தது.
“நம் ஆபிஸரின் ரூமில்…” ரூபிணியின் குரல் உள்ளே இறங்கி விட்டது
“சரி… நீங்களிருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஆபிஸர்கூட இருந்தாரா? இல்லை வெளியே போய்விட்டாரா…?”
“வெளியே போய்விட்டார்.”
“இது உன் ஆபிஸ்… இங்கே ஹரிஹரன் தேர்ட் பெர்ஸன். ஆனால் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?”
ரூபிணி மௌனமானாள். ப்ரீதி தொடர்ந்து பேசினாள். ”மூர்த்தியைக் கூப்பிட்டு விட்டது ஹரிஹரனுடைய பி.ஏ. இவன் ஏன் உடனே பாதிச் சாப்பாட்டில் எழுந்து போய் அடியை வாங்கிக் கொண்டு வந்தான்? வரமாட்டேன்னு சொல்லியிருக்கலாமே.. ஏன் சொல்லவில்லை? கூப்பிட்ட உடனே போய் விட்டால் எலும்பை மட்டும் எண்ணி அனுப்பி வைத்து விடுவார்கள். வரமாட்டேன்னு சொன்னால் தூக்கிக் கொண்டு போய் கையைக் காலை முறித்து ரோட்டில் தூக்கிப் போட்டு விடுவார்கள் அதற்காகத்தான். நினைத்துப் பார் ரூபிணி… அவனை அடித்தது நான்கு பேர். நாம இருபத்தி நான்கு ஆண்கள் உள்ளே கூப்பிடு தூரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்… அவன் ஒரு சத்தம் போட்டு நம்மை உதவிக்குக் கூப்பிட்டிருக்கலாம். அவன் கூப்பிடவில்லை. வாயைத் திறக்காமல் ஸின்ஸியராய் அடி வாங்கியிருக்கிறான். வாயைத் திறந்தால் என்ன நடக்குமென்று அவனுக்குத் தெரியும்.”
“ப்ரீதி.. நீ நினைப்பது போல் எதுவும் இல்லை…”
“இல்லையென்று நம்ப நான் தயாராக இல்லை… நான் வந்தபோது நீ ஹரிஹரனுடன் பேசிக் கொண்டிருந்தாய்..எனக்கு பக்கென்று ஆகி விட்டது. ஐந்து நிமிடங்களாக அங்குதான் நின்று கொண்டிருந்தேன்.. உன் முகமும். ஹரிஹரனின் பார்வையும் எனக்கு உணர்த்திய செய்தியே வேறு… உனக்குத் தெரியுமா ரூபிணி.. ஹரிஹரன் பெண்களிடம் பேசவே மாட்டார்… அவரைப் பற்றி ஆயிரம் வதந்திகள் உண்டு. அதில் பெண்ணைச் சம்பந்தப்படுத்தி ஒரு வதந்தி கூட இல்லை. அப்படிப்பட்ட மனிதன் உன்னிடம் பேசுகிறார். அதுவும் மிகப்பெரிய பிஸினெஸ் பேச்சை நிறுத்தி வைத்து விட்டு…”
“பிஸினெஸ் லன்ச்சுக்கு வந்திருந்தார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும் ப்ரீதி.. என்ன பிஸினெஸ் என்று தெரியாது…”
“டில்லியில் ஒரு ஸ்டார் ஹோட்டல் கட்டப் போகிறாராம். அது சம்பந்தமாய் பேச வந்திருந்தவர்கள்தானாம் அவர்கள்.”
“இது உனக்கு எப்படித் தெரியும்..?”
“ஜவஹரிடம் அந்த சர்வர் சொன்னானாம்.”
“ஸோ.. ஹோட்டலுக்குப் போனால் நாம் பார்த்துப் பேச வேண்டும்…
“எங்கு பேசினாலும் பார்த்துத்தான் பேசவேண்டும். இங்கே ஆபிஸில் சபாபதியின் முன்னால் பேசிப்பார். அவன் பிபிஸி.. இந்த விழுப்புரம் தாண்டியும் அவன் பேச்சு ஒளிபரப்பாகி விடும். இந்நேரம் உன் மேல் ஹரிஹரன் காட்டிய அக்கரை பற்றி இந்த ஊர் முழுவதும் தெரிந்திருக்கும்…”
தெரிந்திருந்தது என்பது அன்று மாலை ஜமுனா முறைத்துக் கொண்டு அறைக்குள் வந்தபோதே தெரிந்தது.
‘ப்ரீதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதா.. இனி இவளிடமும் வாங்க வேண்டுமா..’ சோர்வாய் நினைத்துக் கொண்டாள் ரூபிணி.
“தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட் டுக் கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். நெருப்பை அள்ளிப் போட்டுக் கொள்கிற மர மண்டைகளை இப்போதுதான் பார்க்கிறேன்”.
உடை மாற்றிக் கொண்டே சுவரைப் பார்த்துப் பேசினாள் ஜமுனா. ரூபிணி உதட்டை மடித்துக் கடித்தாள்.
‘இவளுக்கு என்ன சமாதானம் சொல்வது?’
மெதுவாய் சென்று ஜமுனாவின் தோளைத் தொட் டாள். அவளோ கோபத்துடன் இவளது, கையைத் தட்டி விட்டாள்.
“என்னிடம் யாரும் பேச வேண்டாம்…”
“ஏன் ஜமுனா.. நான் என்ன செய்தேன்?”
“பேச வேண்டாமென்று சொல்கிறேனில்லை…”
“உன்னிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவேன்.”
“பேசுவதற்கு உனக்கு ஆளா இல்லை.”
ஜமுனாவின் குத்தல் புரிந்தாலும் புரியாதது போல் ரூபிணி வினவினாள்.
“ப்ரீதியை சொல்கிறாயா?”
“நான் யாரைச் சொல்கிறேன் என்று உனக்குத் தெரியாதா?”
“தெரியவில்லை”.
“நீ எப்போதிருந்து இப்படி ஒரு மறைத்துப் பேசுகிறவளாய் ஆனாய்… உனக்கு இப்படியெல்லாம் பேச வராதே…”
ரூபிணிக்கு அயர்வாய் இருந்தது.
“உன் நேர் கொண்ட பார்வை எங்கே போனது? உன் பார்வை ஏன் அலை பாய்கிறது…” ப்ரீதி கேட்டாள். இப்போது ஜமுனா ரூபிணியின் பேச்சை குறை சொல்கிறாள்.
அவளது நேர் கொண்ட பார்வையும். ஒளிவு மறைவில்லாத பேச்சும் எங்கே போயின?
ஹரிஹரனின் பின்னாலேயே போய் விட்டன என்று அவளது மனம் கூறியது. ரூபிணி ஜமுனாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றாள்.
“ஒன்று தானாய் தெரிய வேண்டும். இல்லையென்றால் சொல்வதைக் கேட்க வேண்டும். பிடிவாதமாய் தண்டவாளத்தில்தான் தலையை வைத்துத் தூங்குவேன் என்றால் எப்படி…?”
“ஜமுனா.. நானாய் போய் பேசவில்லைடி. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது.”
“சும்மா.. கதை விடாதே.. வேண்டுமென்றே வம்பை விலைக்கு வாங்க வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாய்…”
“என் ஆபிஸில் மூர்த்தி என்று ஒரு ராஸ்கல்…”
“எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு மட்டுமல்ல… இந்த ஊரில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். உனக்கு ஒன்று தெரியுமா?”
“என்னது…?”
“நீ ஆபிஸில் இருந்து வரும் போது ஒரு புல்லட் உன்னைப் பாலோ பண்ணிக் கொண்டு வந்ததாமே…”
“எனக்குத் தெரியாதே…”
“இப்போது தெரிந்து கொள்.. ஆளைப் பார்க்கிறாயா?”
ஜமுனா ஜன்னல் திரையை விலக்கிக் காட்டினாள். ரூபிணி மறைவாய் நின்று பார்த்தாள்.
ஹாஸ்டலின் எதிர்புறம் சாலையில் ஒரு புல்லட் நின்று கொண்டிருந்தது. அருகே வாட்டசாட்டமாய் ஒரு ஆள் நின்று பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
”யார் அந்த பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் ஆளையா சொல்கிறாய்?”
“பேப்பர் படிப்பதெல்லாம் பாவ்லா. அந்த ஆள் நம் ஹாஸ்டலுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கிறான். சம்பளம் நம் ஹாஸ்டல் நிர்வாகத்தார் குடுக்க மாட்டார்கள். அந்த ஹரிஹரன் கொடுப்பார்.”
“இது எதுக்குடி வெட்டி வேலை..?”
ஜமுனா தீர்க்கமாய் பார்த்தாள். ரூபிணியின் முகத்தில் தெரிந்த அறியாமையைக் கண்டு ஒரு கணம் அவள் மேல் பரிதாபப்பட்டாள். மனம் இளகியவளாய் ரூபிணியை அருகே அமர்த்திக் கொண்டு புத்தி சொன்னாள்.
“ரூபிணி… நிலாவைக் காட்டி நம் அம்மாக்கள் நமக்கு சோறு ஊட்டியிருக்கிறார்கள். நீ அந்த நிலவைத் தொடக்கூட ஆசைப்படலாம்… ஏனென்றால்.. அதில் நாம் கால் பதித்திருக்கிறோம். சூரியனைத் தொட ஆசைப்படலாமா? ஹரிஹரன் சுட்டெரிக்கும் சூரியன். விலகி நில். இல்லையென்றால் எரிந்து சாம்பலாகி விடுவாய்…”
தோழியின் வார்த்தைகளால் ரூபிணி மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது எல்லாம் சற்று நேரம் தான். அந்த சுட்டெரிக்கும் சூரியன் இரவு பத்து மணியளவில் செல்போனில் அழைத்தபோது அவளுக்கு இரு தோழிகளின் பயமும், அறிவுரையும் மறந்தே போனது.
நினைவில் நின்றதெல்லாம் ஹரிஹரன் அவளுடன் பேச விரும்பி போனில் அழைக்கிறான் என்பது மட்டும் தான்.
செல்போனின் அழைப்பு மணியோசை கேட்டு ஜமுனாவின் தூக்கம் கலைந்து விடுமோ என்ற பயத்துடன் உடனே பேசினாள்.
“ஹரிஹரன் பேசுகிறேன்…” என்றது மறுமுனை.
”ம்ம்…” ரூபிணி ஜமுனாவைப் பார்த்தாள்.
“ம்ம்… மட்டும்தானா… பேச மாட்டாயா?”
“ம்ம்…”
ரூபிணி எழுந்து பாத்ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“ரூபிணி…? ரூபிணி தானே?”
“நான்தான்.”
“ஏன் பேச இவ்வளவு நேரம்?”
“ரூமில் நானும் இன்னொரு பிரண்டும் இருக்கிறோம்.’
“இப்போது பாத்ரூமிற்குள் வந்த பேசுகிறாயா?”
“எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?”
“ஒரு யூகம்தான்… சரி போனில் சொல்கிறேன் என்று சொல்லி விட்டுப் போனவள் ஏன் போனில் என்னை அழைக்கவில்லை…”
“ம்ம்… சும்மாதான்…”
“என்னிடமே வா…? நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை பார்த்தாயா…?”
ரூபிணியின் மனம் இனித்தது. பதில் கூறாமல் நின்றால்,
“பேச மாட்டாயா…?”
“என்ன பேச…?”
“எதையாவது பேசு.. பேச விஷயமா இல்லை…”
“நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா…?”
“ஆஹா.. எவ்வளவு முக்கியமான விஷயம்? இப்படித் தான் பேச வேண்டும்” ஹரிஹரன் வாய்விட்டுச் சிரித்தான்.
ரூபிணி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“நீங்கள்தானே எதை வேண்டுமானாலும் பேசச் சொன்னீர்கள்?”
“ஓகே… ஓகே நான்தான் சொன்னேன். அதைவிடு… நான் போனில் கூப்பிடுவேன் என்று நீ எதிர்பார்க்கவே இல்லையா… உண்மையைச் சொல்ல வேண்டும்.”
“நான் பொய் சொன்னதில்லை.”
“அது முன்பு… இப்போதும் அப்படியே இருக்கிறாயா?” ஹரிஹரன் நகைத்தான்.
“இப்போது மட்டும் என்ன ஆகி விட்டதாம்?” ரூபிணி ரோசத்துடன் வினவினாள்.
‘இது என்ன ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி நீ இப்போ மாறி விட்டாய் என்று சொல்கிறார்கள். அவள் அப்படி என்ன மாறி விட்டாள்?’
“எதற்குடா கோபப்படுகிறாய்..” ஹரிஹரன் சரஸமாக வினவினான்.
“இப்படியெல்லாம் பேசாதீர்கள்.”
“வேறு எப்படிப் பேச…?”
“நான் தூங்கப் போகிறேன்…”
“தூக்கம் வருகிறதா?”
“ஏன் வராது…?”
“உன் பிரண்ட் என்ன செய்கிறாள்?”
“தூங்கிக் கொண்டிருக்கிறாள்..”
“எப்போது தூங்கப் போனாள்.”
“அவள் தூங்கிப் போய் ஒரு மணி நேரமாகிறது.”
“நீ ஏன் தூங்கவில்லை.”
“தூக்கம் வரவில்லை…”
ரூபிணி மீண்டும் நாக்கைக் கடித்துக் கொண்டாள். இவனிடம் போய் வாய்விட்டு மாட்டிக் கொண்டாளே… மறுமுனையில் ஹரிஹரன் சிரிப்பது காதில் ஒலித்தது.
“ஏன் தூக்கம் வரவில்லை…” மென்மையாய் கேட்டான்.
“தெரியவில்லை…” அவள் உண்மையைச் சொன்னாள்.
“நான் சொல்லவா?” அவன் கிசுகிசுத்தான்.
“வேண்டாம்…” அவள் வெட்கத்துடன் கூறினாள்.
“ஏன் வேணடாம். நான் சொல்லுவேன்.”
“நான் செல்போனை ஆப் பண்ணி விடுவேன்.”
“எங்கே கட் பண்ணு… பார்ப்போம்.”
அவன் சவால் விட்டான். அவள் சிலையாகி நின்றாள்.
– தொடரும்…
– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.