நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2023
பார்வையிட்டோர்: 5,093 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30 | அத்தியாயம் 31-33

அத்தியாயம்-28

“ரூபிணி.. காரை எடுத்துக் கொண்டு வந்து தெருமுனையில் வெயிட் பண்ணுகிறேன் வந்து விடு…” ஹரிஹரன் கூறியதும் ரூபிணிக்கு தூக்கி வாரிப் போட்டது. 

“வாட் இஸ் திஸ் ஹரி? எனக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாதா…?’ இன்னும் ஒன்றும் வேண்டுமா? நான் கோவில்பட்டிக்குப் போகப் போகிறேன். அங்கே உங்கள் காரில் எப்படிப் போக முடியும்?’ ரூபிணி படபடத்தாள். 

“வெயிட்.. வெயிட்.. ஏன் டென்சனாகிறாய் ? கோவில் பட்டிக்கு ரோடு கிடையாதா ? ஒற்றையடிப் பாதைதானா? அங்கே கார் போகாதா?” 

“விளையாடுகிறீர்களா?” 

“ஆமாம்.. நான் எல்.கே.ஜி. படிக்கிற பையன் பாரு. உன்னுடன் விளையாடுகிறேன். என்ஜினியரிங் காலேஜ் நடத்துகிறவன்டி.. உன் ஊருக்கு நடந்தா போகப் போகிறாய்?” 

“பஸ்ஸில் போவேன்.” 

“அதற்குப் பதில் என் காரில் போகலாம் வா.” 

“ஹரி.. என் அப்பாவிற்கு இது தெரிந்தால் என்னைக் கொலையே பண்ணி விடுவார்.” 

“தெரிந்தால்தானே…” 

“என்ன சொல்கிறீர்கள்?” 

“இதோ பார்… உன் ஹாஸ்டல் இருக்கும் தெரு முனையில் வந்து காரில் ஏறிக் கொள்… கோவில்பட்டி போனதும் உன் வீடு இருக்கும் ஏரியா முனையிலேயே இறங்கி ஆட்டோ பிடித்துப்போய்விடு…?” 

“அதுதான் எதற்கு?” 

“எல்லாம் காரணமாகத்தான். என்னால் உன்னை அங்கே அனுப்பிவிட்டு இங்கே நிம்மதியாய் உட் கார்ந்திருக்க முடியாது. உன் வீட்டில் என்ன நடந்தாலும் அது எனக்கு உடனடியாகத் தெரிந்தாக வேண்டும்.” 

“அதை நான் போனில் சொல்கிறேனே.” 

”அதைக் கேட்க நான் விழுப்புரத்தில் இருக்க மாட்டேனே.. உன் கூட கோவில்பட்டிக்கு வந்து விடுவேனே…” 

“இது என்ன பிடிவாதம் ஹரி?” 

“என் பிடிவாதத்தைப் பற்றி இப்போதுதான் உனக்குத் தெரியுமா? நீ என்னுடையவள் என்று நான் தீர்மானித்த பின்பு தனியாக உன்னை இந்த விழுப்புரத்தின் எல்லையைத் தாண்ட விடுவேனென்று நீ நினைத் தாயா? சும்மா என் மனக்கதவை நீ லேசாய் தட்டியதற்கே உன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து என் கண்காணிப்பில் உன்னைக் கொண்டு வந்து விட்டவன் நான்… இப்போதோ என் நெஞ்சத்தில் நீ குடியேறி விட்டாய்.. உன்னை என் பிடியில் இருந்து விலகிச் செல்ல அனுமதிப்பேன் என்று நினைத்தாயா…?” ஹரிஹரனின் குரலில் கோபம் இருந்தது. 

“யார் விலகிச் செல்வது ஹரி.. ? நானா? உங்களை விட்டா..? நீங்களாய் ஏன் அப்படி நினைத்துக் கொள்கிறீர்கள்?” 

“அப்புறம் ஏன் கோவில்பட்டிக்குப் போகிறாய்? போகாதே.” 

“கூப்பிடுவது என் பேரன்ட்ஸ் ஹரி.” 

“அவர்கள் கூப்பிட்டால் நீ போய் விட வேண்டுமா?”

“போகாமல் எப்படி இருக்க முடியும்?” 

“இப்போது இப்படிச் சொல்கிறவள்.. நாளை அவர்கள் சொல்லும்போதே என்னால் எப்படி மறுத்துப் பேச முடியும்? என்று சொல்லிக் கொண்டே அவர்கள் ஏற்பாடு பண்ணும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?” 

“ஹரி…” ரூபிணி அதிர்ந்து போனாள். 

அவனா இப்படிப் பேசுகிறான்? பேசலாமா? அவளைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கலாமா? 

“சொல்லு… நீ அவர்கள் சொல்வதைச் செய்ய மாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” ஹரிஹரன் மீண்டும் கேட்டான். 

“உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை.” ரூபிணியின் வார்த்தைகளில் சீற்றமிருந்தது. 

“என்னடி சொன்னாய்.. ? எனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு இல்லையா?” ஹரிஹரன் கோபமாய் கேட்டான். 

“ஆமாம்.. உங்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? எனக்கென்ன கட்டாயம்?” ரூபிணியும் கோபத்தில் வார்த்தைகளை சிதற விட்டாள். 

“எனக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லையா?” ஹரிஹரனின் குரலில் புயலை உள்ளடக்கிய அமைதி இருந்தது. 

“இல்லை…” 

ரூபிணியின் குரலில் வேதனையால் பிறந்த வன்மம் இருந்தது. 

“உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா?’ ஹரிஹரன் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான். 

“இல்லை…” 

ரூபிணியும் பல்லைக் கடித்துக் கொண்டே பதில் சொன்னாள். 

“அப்புறம் ஏண்டி… அன்று ஜமுனா. நந்தகோபால் கல்யாண ரிசப்ஷனில் கல்யாண மண்டபத்தின் தோட்டத்தில் இருட்டில் என்னோடு கொஞ்சிக் குழாவினாய்..?” 

ஹரிஹரன் அக்கினிப் பிழம்பாய் கேட்டான். “ஹரி…” மீண்டும் ரூபிணி அதிர்ந்தாள். 

என்னவெல்லாம் பேசி விட்டான். கோபம் வந்தால் இப்படியெல்லாம் பேசுவார்களா.. கேட்பார்களா? 

எந்த முன்னிரவுப் பொழுது அவளது நெஞ்சத்தில் இனித்து உறைகின்றதோ.. அந்தப் பொழுதை நினைத்து இப்பொழுது அருவெறுத்தாள் ரூபிணி.. எவனிடம் மயங்கினாளோ.. அவனைக் கண்டு இன்று பயந்தாள். 

“சொல்லுடி.. ஏன் வாயடைத்து மெளனமாகி நிற்கிறாய்? பேசு.. சம்பந்தமில்லாதவன் நெஞ்சிலா அன்று சாய்ந்து நின்றாய் ?… உன்னைப் போன்றவளுக்கெல்லாம் அது விளையாட்டாய் போய் விட்டதா? உனக்கு புது வண்டி வாங்கி அனுப்பும்போது என்ன எழுதியிருந்தேன்?” ஹரிஹரன் குற்றம் சாட்டும் பாவனையில் பேசிக் கொண்டிருந்தான். 

”எனக்கு நினைவில்லை..” ரூபிணி விரக்தியுடன் பதிலளித்தாள். 

“உனக்கு எப்படி நினைவிருக்கும்? எதையெதையோ மறந்தவள் தானே நீ… இது எப்படி நினைவிருக்கும்” ஹரிஹரன் எகத்தாளமாய் கூறினான். 

“நீங்கள் நினைவு வைத்திருக்கிறீர்களே… அது போதும்.. இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் வாங்கிக் கொடுத்த புது வண்டி வேண்டுமா? திருப்பி அனுப்பி விடுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்” ரூபிணி எடுத்தெறிந்து பேசினாள். 

ஹரிஹரனுக்கு வெறி பிடித்து விட்டது. “திருப்பி அனுப்புவாயா? எதை…?”

“ஏன்… உங்கள் வண்டியைத்தான்… 

“வண்டியா.. அது வெறும் டூ வீலர்தானா?” 

“வேறு என்ன அது…” 

காதல் அதீதமாக இருக்கும் இடத்தில் சிறு அனல் பொறி கூட பெரும் காட்டுத்தீயாகப் பரவி எரித்து விடும். இப்போதும் அதுதான் நடந்தது. 

அத்தியாயம்-29

“நான் உன்னிடம் அனுப்பியது வெறும் டூ வீலரை இல்லைடி. அது என் நெஞ்சம்டி… அது என் நெஞ்சம்.” ஹரிஹரன் பொரிந்தான். ரூபிணி இதழ் கடித்தாள். அவள் கண்கள் கலங்கி விட்டன. இவனது காதல் தீயில் பற்றி எரிந்தாலும் ஏன் இவனை அவளால் வெறுக்க முடியவில்லை? 

“ஹரி… நானாக எதையும் சொல்லவில்லை. நீங்கள் தான் என் வாயைப் பிடுங்கி வார்த்தைகளை வரவழைக்கிறீர்கள்..” அவள் எரிச்சலுடன் கூறினாள். 

“ஓகோ… வாயைப் பிடுங்கினால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவாயா?” வெறுப்புடன் கேட்டான் அவன். 

“நீங்கள் பேசிய விதம் அப்படி?” 

“உனக்குப் பிடித்த மாதிரி பேச என்னால் முடியாது.. நான் இப்படித்தான் பேசுவேன்…” 

“நான் மட்டும் உங்களுக்குப் பிடித்த மாதிரிப் பேச வேண்டுமா?” 

“ஏய்.. எனக்குப் பிடித்த மாதிரிப் பேசச் சொல்லி உன்னை எப்போதாவது கட்டாயப்படுத்தியிருக்கிறேனாடி… பிடிக்காதவளின் நிழலைக் கூட இந்த ஹரிஹரன் திரும்பிப் பார்க்க மாட்டான். நீதானேடி… ஹோட்டலில் என் அருகே வந்து தானாக உட்கார்ந்தாய். விடிய விடிய நான் போனில் பேசும்போது தூங்காமல் விழித்திருந்து என்னோடு பேசினாய். அப்புறம் என்ன செய்தாய்? அந்த அன்பில் நிலையாக நின்றாயா? இல்லையே… ஊர் பார்க்கிறது.. உலகம் பார்க்கிறது என்று பயந்தாய்… நான் உன் அன்பைக் கேட்டு உன்னை வற்புறுத்தினேனா…. விலகித்தானே சென்றேன். உனக்காக என் ஊரை விட்டே வட இந்தியாவிற்குப் போய் மாதக் கணக்கில் இருந்தேனடி.. திரும்பி வந்தனைப் போகவிடாமல் மண்டபத்தில் மயக்கி நிறுத்தியது யார்? நீதானேடி.. அன்று ஒரு பாட்டுப் பாடினாயே… அது என்ன பாட்டு ? ம்ம்.. நினைவு வந்து விட்டது. ‘பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே…’ நீ சிறையில் மாட்டியிருப்பதாய் கதறிப் பாடி என் மனதைக் கரைத்தது நீதானேடி… அப்போதும் உன் அழைப்பில்லாமல் நான் உன்னிடம் வரமாட்டேன் என்ற என் உறுதியில் நிலையாய் நின்றேனடி… உன் கண்ணில் படாமல் பின்பக்க மாடிப் படியில் இறங்கிப் போய் விட நினைத்து வந்தால் தோட்டத்தில் நிற்கிறாய்.. உன் தோழிகள் போன பின்னாலும் இருட்டில் என்னை எப்படி அடையாளம் கண்டாய்? ஏன் என் அருகில் நெருங்கி வந்தாய்? நீயாக வாய் திறந்து ஏன் பேசினாய்? நான் கை தொட்ட மறு நொடியில் என் நெஞ்சில் ஏன் முகம் புதைத்தாய்? இத்தனையும் செய்து விட்டு நீ யார்.. நான் யார்..? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று வேறு கேட்கிறாய்.. என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு?” 

ஹரிஹரன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரூபிணியின் நெஞ்சைச் சுட்டன… இவை அனைத்தும் இல்லையென்று அவள் மறுக்கவில்லையே. ஆனால் ‘நீ யார்.. எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற ரீதியில் அவள் பேசியதும் தவறுதானே. 

கோபம் வந்து விட்டால் இன்னது பேசுகிறோம் என்று ஏன் தனக்கு மறந்து போகிறது என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளாய் அவள் கூறினாள். 

“ஹரி நான் பேசியது தவறுதான்.. ஆனால் என் பேரண்டஸின் சொல் கேட்டு மனம் மாறிவிடுவேன் என்று நீங்கள் நினைத்துப் பேசியதும் தவறுதான்…” 

மறு முனையில் மௌனம் நிலவியது. சற்று நேரம் கழித்துப் பேசிய ஹரிஹரனின் குரலில் கோபம் அப்படியே இருந்தாலும் வேகம் குறைந்திருந்தது. 

”சரி… நீ பேசியது தவறா. இல்லை நான் பேசியது தவறா என்று ஆராய்ச்சி பண்ண இப்போது நேரம் இலலை… ஒன்றை நீ உறுதியாக தெரிந்து கொள். நீ உன் பெற்றோரைப் பார்க்கப் போவதாக இருந்தால் என்னுடன்தான் போக வேண்டும்…” 

“அது எப்படி சாத்தியம்?” 

“ஏய்ய்… சாத்தியமில்லாதது என்று என் வாழ்வில் எதுவும் இல்லை.. தெரிந்ததா..?”

“நீங்கள் உங்களைப் பற்றியேதான் பேசுகிறீர்கள்.. என்னைப் பற்றியும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.” 

“நீ வேறு நான் வேறு இல்லை. உன்னைப் பற்றித் தனியாக நினைக்க என்ன இருக்கிறது? என் வழி எதுவோ.. அதுதான் உன் வழி.. என்னைப் பின் பற்றி நடக்க நீ பழகிக் கொள்…” 

ரூபிணி பேச வழியின்றி திகைத்து நின்றாள்… பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய். 

“ஓ.கே. நீங்கள் காரை எடுத்துக் கொண்டு வாங்க… நான் வருகிறேன். சேர்ந்தே போகலாம்…” என்றாள். 

“தெருமுனையில் வெயிட் பண்ணவா?” 

“இவ்வளவு நடந்த பிறகு தெருமுனையில் எதற்கு வெயிட் பண்ண வேண்டும்? கோவில்பட்டிக்கே சேர்ந்து போகப் போகிறோம் விழுப்புரத்தில் ஹாஸ்டல் வாசலில் இருந்து சேர்ந்து போவதில் என்ன வந்து விடப் போகிறது.. ஹாஸ்டலுக்கே வாங்க.” 

“குட்…” மறுமுனை துண்டிக்கப்பட்டது. 

ரூபிணி பெருமூச்சுடன் தரையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்து யோசித்தாள். செல்போனை எடுத்து அவளது அக்காவை அழைத்தாள். 

“சொல் ரூபிணி…” 

“அக்கா… எனக்கு உன் உதவி வேண்டும்.”

“பணம் வேண்டுமா?” 

“இல்லை… எனக்கு உன் சப்போர்ட் வேண்டும்.” 

“எதற்கு..?” 

“என் காதலுக்கு.” 

“காதலா.. நீயா..” 

“ஏன் நான் காதலிக்கக் கூடாதா? அக்கா நீயும் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டவள்தான். உன் காதலர் நம் இனம். வேறு பிரச்னைகள் இல்லாத குடும்பம். ஒரே படிப்பு. ஒரே ஊரில் வேலையென்பதால் எளிதாக உன் காதலில் நீ ஜெயித்து விட்டாய். ஆனால் என் கதை அப்படியில்லை.” 

“அவர் வேறு ஜாதியா?”

”ஆமாம்.’ 

“என்ன வேலை பார்க்கிறார்?” 

“ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கிறார்.” 

“பெரிய இடமா?” 

“ஆமாம்.” 

“பெயர் என்ன?” 

“ஹரிஹரன்…” 

“வாட்…? விழுப்புரம் ஹரிஹரனா?” 

“அவரேதான்.” 

“ரூபிணி.. எப்படி பயமில்லாமல் சொல்கிறாய்?” 

“பயத்தையெல்லாம் தாண்டி விட்டேன்… வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். இது மட்டும் உறுதி அக்கா.” 

“நம் அம்மா.. அப்பாவிற்குத் தெரியுமா?” 

“தெரிந்துதான் என்னை வரச் சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்… அம்மாவுக்கு சீரியஸ் உடனே புறப்பட்டு வாவென்று அப்பா காலையில் போன் பண்ணினார்.” 

“என்னிடம் சொல்லவில்லையே…” 

“பொய்யை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. என்னைத்தானே அவர் வரவழைக்க வேண்டும்” 

ரூபிணி போனில் விசும்பினாள். அவளது தமக்கை செய்வது அறியாது திகைத்தாள். 

அத்தியாயம்-30

“அக்கா.. நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். அம்மா அப்பாவை எதிர்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை… அதே சமயம் ஹரிஹரனை மறக்கவும்.. பிரியவும் என்னால் முடியாது. எனக்கு என் பெற்றவர்களின் சம்மதத்தோடு ஹரிஹரனுடன் என் கல்யாணம் நடக்க வேண்டும்…” 

“இது நடக்கக் கூடிய காரியம் என்று எனக்குத் தோன்றவில்லை.” 

“நீயே இப்படிச் சொன்னால் எப்படி அக்கா.” 

“வேறு எப்படிப் பேச ரூபிணி? நான் இருப்பது பெங்களூர். இங்கிருக்கும் எனக்கே ஹரிஹரன் என்ற பெயரைக் கேட்டதும் அவர் யார் என்று தெரிந்து விட்டது. அம்மா அப்பா எப்படி இதற்கு சம்மதிக்கப் போகிறார்கள்? திஸ் இஸ் இம்பாஸிபிள்.” 

“ஸோ… நீ எனக்கு உதவ மாட்டாய்?” 

“அப்படி நான் சொன்னேனா? நானும் உடனடியாகக் கிளம்பி ஊருக்கு வருகிறேன். உனக்காக நம் அம்மா… அப்பாவிடம் பேசிப் பார்க்கிறேன்.” 

“தேங்க் யூ அக்கா.” 

ரூபிணி போனை அணைத்துவிட்டு ஜன்னல் வழி சாலையைப் பார்த்தாள். ஹரிஹரனின் கார் நின்று கொண்டிருந்தது. மளமளவென்று பெட்டியை எடுத்துக் கொண்டவள்… அறையைப் பூட்டி சாவியை ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு படியிறங்கினாள். எதிர்பட்ட ரோஜாரமணியிடம், 

“நான் ஊருக்கு அவசரமாகப் போகிறேன் ரோஜா ரமணி. வார்டனிடம் சொல்லி விடு…”  என்றாள். 

“சரிம்மா.. நீ கவலையில்லாமல் பூட்டு வா.” என்றபடி அவள் உள்ளே சென்று விட்டாள். 

வாசலுக்கு வந்த ரூபிணி பெட்டியை எங்கே வைக்க என்று தடுமாறி நிற்க கார் கதவைத் திறந்து கொண்டு ஹரிஹரன் இறங்கினான். அவளிடமிருந்த பெட்டியை வாங்கி பின் சீட்டில் வைத்து விட்டு முன் பக்கக் கதவைத் திறந்து விட்டான். 

இவனோடு இது ஒரு தொல்லை. எதையும் அச்சமின்றி செய்வான். இதை எத்தனை பேர் பார்க்கிறார்களோ என்று எண்ணமிட்டவள்.. வாயைத் திறந்தால் அவன் சும்மா விட மாட்டான் என்ற பயத்துடன் வாயை மூடிக் கொண்டு காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள். 

காரை வேகத்துடன் கிளப்பிய ஹரிஹரனின் முகம் கல்லாக இறுகியிருந்தது. இன்னும் அவன் கோபத்திலிருந்து விடுபடவில்லை என்பது புரிய அவள் நெஞ்சில் துயரம் மண்டியது. இவனைக் கை பிடிக்க அவள் போராட வேண்டும். அதற்கு இவனது அன்பு துணை செய்ய வேண்டாமா? இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தால் அவளுக்கு எப்படி போராட சக்தி கிடைக்கும்? 

கார் உளுந்தூர்பேட்டையைத் தாண்டியிருந்தது. நான்கு வழிப் பாதைகள் கொண்ட நெடுஞ்சாலையில் வேகம் கூட்டிப் பறந்து கொண்டிருந்தான் அவன். இருவருக்கும் இடையே இரும்புத் திரை போல் கனத்த மௌனம் நிலவியது. அதைத் தாங்க முடியாத ரூபிணி தானே அவனை அழைத்தாள். அவன்தான் அவள் பேசாமல் பேச மாட்டானே… 

“ஹரி…” மெல்லிய குரலில் அழைத்தாள் ரூபிணி. “சொல்லு…” அவன் பார்வை சாலையில் பதிந்திருந்தது. 

“ஐ ஆம் ஸோ ஸாரி.” 

“ஸாரி சொல்லி விட்டால் சரியாகிப் போய் விட்டதா?” 

“நான் வேறு என்னதான் செய்ய வேண்டும்?” 

“எதையும் செய்ய வேண்டாம். வாயை மூடிக் கொண்டு வந்தால் போதும். உன்னுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை.” 

அவன் வார்த்தைகளில் வெறுப்பை உமிழ்ந்தான். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

“என்னுடன் பேசப் பிடிக்கவில்லையா? இல்லை என்னையே பிடிக்கவில்லையா?” 

“ஏய்ய்.. வாயை மூடிக் கொண்டு பேசாமல் வாடி…” 

“இல்லை.. நான் பேசுவேன். என்னைப் பிடிக்காதவர் ஏன் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?” 

“பேசாதேன்னு சொன்னேன்.” 

“அப்படித்தான் நான் பேசுவேன். என் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே என்னுடன் கோவில்பட்டிக்கு வருகிறேன் என்று சொன்னீர்கள். என் மேல் நம்பிக்கை இல்லாதவர் ஏன் என்னைக் காதலிக்க வேண்டும்?” 

“இப்போது பேச்சை நிறுத்தப் போகிறாயா இல்லையா?” 

“மாட்டேன்.. உங்களை நான் மயக்கினேன் என்றீர்களே என்னை நீங்கள் மயக்கவில்லையா? லாரன்ஸிற்கு வேலை கொடுங்கள் என்று கேட்டேன். உனக்காக வேலை கொடுக்கிறேன் என்று கொக்கி போட்டது யார்? நீங்கள்தானே… ஹோட்டலில் ஒரு அயோக்கியனின் அருகாமையிலிருந்து தப்பிக்க உங்கள் அருகில் வந்து அமர்ந்தேன்… மையலுடன் என்னிடம் பேசியது யார்? நீங்கள் தானே.. ஹாஸ்டலுக்கு நான் வந்த பின் விடியும் வரை என்னுடன் போனில் பேசியது யார்? நீங்கள் தானே… பெரிதாய் விலகிச் சென்றேன் என்று சொல்கிறீர்கள்.சும்மாவா விலகிச் சென்றீர்கள்? புது டூ வீலரை வாங்கிக் கொடுத்து விட்டு.. ‘இது என் நெஞ்சமடி நெஞ்சம்’ என்று கடிதம் எழுதி விட்டுச் சென்றது யார்..? நீங்கள்தானே… அன்றைக்கு கல்யாண மண்டபத்தில் ஜமுனாவுடன் நான் வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் போது மின்னல் போல் மேடைக்கு வந்து நந்தகோபாலன் பக்கத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்தது யார்.. ? நீங்கள்தானே.. தோட்டத்து இருட்டில் என் கைபற்றி இழுத்தது யார்..? நீங்கள்தானே.. உங்கள் மேல் சாய்ந்த என் முகம் பற்றி… முகம் பற்றி…” 

மேலே சொல்ல முடியாமல் அவள் வெட்கத்துடன் தடுமாற அவன் சரக்கென்று காரை ஒடித்துத் திருப்பி சாலையோரமாய் நிறுத்தினான். புயல்போல் அவள் தோள் பற்றி இழுத்து அவள் முகத்தோடு முகம் வைத்து அவளது இதழ் மீது இதழ் பதித்தான். ரூபிணி தன் வசமிழந்து அவனது அணைப்பில் தஞ்சம் புகுந்தாள். சற்று நேரம் கழித்த அவளை விட்டு விலகியவன் அவளை முறைத்தான். 

“பேசாதே… பேசாதேன்னு சொல்லச் சொல்லப் பேசினாயே… நான் தோட்டத்தில் என்ன செய்தேன் என்பதைச் சொல்ல வேண்டியதுதானே ஏன் வாயடைத் துப் போனாய்? அதனால்தான் அன்று நடந்ததை இன்று மீண்டும் நினைவு படுத்தினேன்” என்று கிறங்கிய குரலில் கூறவும் செய்தான். 

‘இவனது ஒரு கண்ணில் நிலவும்.. மறு கண்ணில் சூரியனும் இருக்கிறார்கள் போல.. முறைத்துக் கொண்டே கிறங்குகிறான்.’ 

வெட்கப் புன்னகையுடன் அவனது தோளில் முகம் புதைத்தாள் ரூபிணி. 

“இந்தக் கொஞ்சலில் ஒன்றும் குறைச்சல் இல்லை..” மனத்தாங்கலுடன் பேசினான் ஹரிஹரன். 

“வேறு எதிலும் குறைச்சல் இல்லை.. ஹரி.. முக்கியமாய் என் காதலில்.. வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன்.. இல்லையென்றால் உங்கள் காலடியில் உயிரை விடுவேன்..” ரூபிணி கண்ணீர் மல்கக் கூறினான். 

ஹரிஹரன் விதிர்த்துப் போனான். ‘என்ன வார்த்தைகளைச் சொல்லி விட்டாள் அவள்?’ அவளது தலைமுடியைப் பற்றி அவளது முகத்தை உயர்த்தி விழியோடு விழி நோக்கினான். 

“எனக்கு இதுதான் தலைவிதி என்று நீயும் தீர்மானித்து விட்டாயா? அன்றைக்கு என் கண் முன் என்னைப் பெற்றவர்கள் இறந்தார்கள். அது போல் நீயும் போக முடிவு செய்து விட்டாயா?” 

“இல்லை ஹரி… நான் வந்து…” 

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். பெற்றவர்கள் இல்லாமல் நான் வாழ்ந்தது பழி வாங்க… படைபலத்தை உருவாக்க… ஆனால் நீயில்லாமல் நான் வாழ மாட்டேன்…” 

“என் காதலின் உறுதியைச் சொன்னேன் ஹரி.”

“உன் காதலின் உறுதி பற்றி எனக்கும் தெரியும்டி…” ஹரிஹரன் அவளை முரட்டுத் தனமாய் இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது காதலின் தீவிரம் அதில் தெரிந்தது.

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *