நெகிழ்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 3,079 
 
 

நெகிழ்ச்சி – மகிழ்ச்சியைவிட பன்மடங்கு மேலானது.

மகிழ்ச்சி, ஏற்படும் அந்த கணத்தைப் பொறுத்தது. மகிழ்ச்சியை எதிர்பார்த்தும் நாம் செயல்படலாம். நெகிழ்ச்சி நெடுங்காலம் நெஞ்சில் நிறைந்து நிற்பது. நெகிழ்ச்சிநாம் செய்வதால் ஏற்படுவதல்ல, தானாகவே நம்மை வந்தடையும் – எதிர்பாராமலே! சாதாரணமான நிகழ்ச்சிகூட நெகிழ்ச்சியை உண்டாக்கலாம்.

அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக வந்த முரளியை வரவேற்க சென்னை விமானநிலையத்தில் யாருமில்லை. முரளியின் ஒரு தங்கையும் அவளுடைய கணவனும் மட்டும்சென்னையில் இருந்தாலும், முரளி வந்த அன்று ஏனோ விமான நிலையத்துக்கு அவர்களால்வர இயலாமல் போனது. டாக்சி ஏற்பாட்டுடன் முரளி தன்னுடைய ஃப்ளாட்டுக்கு போய் சேர்ந்தபோது மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. அவன் வாங்கியிருந்த இடம் ஓ. எம். ஆர் சாலையில் சோளிங்கநல்லூர் அருகில் இருந்தது.

அந்த பகுதியின் அமைதிவரவேற்கத்தக்கதானாலும் வசதிகள் இன்னும் வளரவில்லை. அங்கிருந்து அடையாறுபோய்சேர ஒருமணி நேரமாவது தேவை.

முரளியின் மனம் மட்ராஸ் காபிக்கு ஏங்கியது… டாக்சியில் வந்தபோதே வழியில்ஏதாவது ஓட்டலில் வாங்கிக் கொள்ளாமல் விட்டது முட்டாள்தனம் என்று தன்னையேதிட்டிக் கொண்டான். காபிதான் இல்லை என்றாகிவிட்டது…அடுத்து சாப்பாடு?

என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் சூட்கேசுகளை திறந்து பொருள்களை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தான். அவனுடய இந்திய அலைபேசி அலறியது.

“என்ன முரளி, உன் ஃப்ளாட்டுக்கே போயிட்டியா? என்னால ஏர்போர்ட்டுக்குவரமுடியலே… கோபமா?” போனில் அவன் தங்கை வள்ளி.

“அதெல்லாம் இல்லை… வந்ததுமே மட்ராஸ் காபி கிடைக்கல…அதான் எரிச்சலா இருக்கு…”

“நான் எவ்ளோ சொன்னேன்… நீ கேக்கல நேரே எங்க வீட்டுக்கே வந்திருக்கலாமே. இதுக்குள்ள ரெண்டு கப் காபி கிடைச்சிருக்கும். சரி, சாப்பாட்டுக்கு என்ன ஏற்பாடு? வர்றியா?”

“ஏன்கெனவே மணிக்கணக்கா ஃப்ளைட்ல வந்திருக்கேன்… வெய்யில் ரொம்ப…”

முரளி மேலே பேசுவதற்குள் அலைபேசி தானாகவே அடங்கியது.

நெட்ஒர்க் தகறாரு. வள்ளிக்கு பிறகு போன் செய்து கொள்ளலாம்.

முரளிக்கு மீண்டும் யோசனை சாப்பாட்டை நோக்கித் திரும்பியது. மற்ற காரியங்களை ஒரு வழியாக முடித்த முரளி சோபாவில் சோர்வுடன் உட்கார்ந்தபோது மணி பன்னிரண்டை நெருங்கியது.

வாசல் மணி அடித்தது. ‘நான் யாரையும் எதர்பார்க்கவில்லையே’ என்று திகைத்தவாறுகதவைத்திறந்தவனுக்கு முகத்தில் ஆச்சரியக்குறி மிஞ்சியது. தங்கை வள்ளி பளிச்சென்றபுன்னகையுடன் நிற்க,

அவளுக்குப்பின்னால் கையில் ஒரு பெரிய பையுடன் அவள் கணவன் சண்முகம் நின்றிருந்தார்.

“வாங்க, வாங்க… எப்டி இருக்கீங்க? நான் சாயங்காலம் உங்களை பாக்க வரலாம்னு இருக்கேன். அதுக்குள்ள இந்த கடும் வெய்யில பாக்காம இப்படி…”.

முரளி முடிக்குமுன்னே, வள்ளி பேசினாள்.

“நீ எதுவும் பேசாதே முரளி. நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். முதல்ல சாப்பாடு… அப்புறமா பேசு.” கனிவான கண்டிப்புடன் முரளியை அடக்கினாள்.

புன்முறுவலுடன் சண்முகம் பையிலிருந்து சாப்பாட்டு கேரியரை வெளியில் எடுத்து, பண்டங்களை மேசையில் பரப்பினார். தங்கை சமைத்திருந்த ஒவ்வொரு பண்டத்தையும் முரளி ரசித்து சாப்பிட்டான்.

முறுங்கைக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், தக்காளி பருப்பு ரசம்,

பொரித்த அப்பளம், மெது வடை, வத்தல், கட்டித்தயிர், மாவடு… போதாக்குறைக்கு அவனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு – காசி அல்வா! பூசணிக்காயின் மதிப்பு காசிஅல்வா சாப்பிடும்பேதுதானே தெரிகிறது.

முரளி சாப்பிடும் போது அவனது இடது கை வள்ளியின் இடது கையைப் பற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு பண்டத்தையும் வள்ளி முரளியின் தட்டில் போட்டபோது அவன் வள்ளியைப் பார்த்தான். அந்த பார்வையின் பொருள் அவனுக்கு மட்டும்தான் புரியும். அவன் கண்களின் ஓரத்தில் ஈரம் – நெகிழ்ச்சியின் சுவடு.

“என்ன முரளி… இப்படி பாக்கற? என்ன ஆச்சு?”

“எப்படி சொல்றதுன்னு புரியல வள்ளி…”

“முடிஞ்சா சொல்லு…”

“சாப்பாடு சூப்பர்! என் நிலமையை நல்லா புரிஞ்சுகிட்டு எனக்கு பிடிச்ச பண்டங்களோட இந்த படபடைக்கிற வெய்யில்ல வந்து உபசரிக்ககிறீங்களே…இதை மகிழ்ச்சின்னு சொல்றது தப்பு…”

“அப்படின்னா உனக்கு மகிழ்ச்சி இல்லையா?”

“இல்லை…மகிழ்ச்சியைவிட பல மடங்கு மேலானது…நெகிழ்ச்சி!”

உணவு முரளியின் வயிற்றை நிரப்ப, தங்கையின் பாசம் அவன் உள்ளத்தை நெகிழ்ச்சியால் நிரப்பியது.

நெகிழ்ச்சியும் மனத்தளவில் ஓர் உணர்ச்சிதானே. எந்த உணர்ச்சியையும் யாராலும்உணரத்தான் முடியுமே தவிர எப்படி விவரிக்க முடியும்? விவரிக்க இயலாதஉணர்ச்சிகள்தானே நம் வாழ்க்கையை உந்தித் தள்ளுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *