நூற்றெட்டுத் தேங்காய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2024
பார்வையிட்டோர்: 170 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அண்டா நீரில் விழுந்த எலியைப்போல் தத்தளித் துக்கொண் டிருந்தது கிருஷ்ணன் மனசு. வயசோ இருபது. மூன்றாவது பாரத்தில் வருஷாந்தப் பரீக்ஷைக்கு மூன்றா வது தடவையாக உட்கார்ந்து எழுதியாகிவிட்டது. அந்தக் கணக்குத் தாளே அப்படித்தான் ! 

ஒவ்வொரு வருஷமும் இந்தத் திண்டாட்டந்தான். அப்படியேனும் படிப்பானேன் என்றால் அவன் விருப்பப் படி நடந்தால் தானே? அவன் படிக்காமல் நின்றுவிடுவதில் பெற்றோருக்கு இஷ்டமே இல்லை. பரீக்ஷையில் எத்தனை தரம் தேறாவிட்டாலும் முழுகிப்போவதென்ன? பணக்கார வீட்டுப் பிள்ளைக்குப் படிப்பு வராது என்ற வாதத்தை -அபவாதத்தைப் – பொய்யாக்கிவிட வேண்டு மென்ற ஒரே பிடிவாதம். 

கிருஷ்ணன் முதல் பாரத்தில் சேர்ந்தபோது வயசு பதினான்கு. அவன் பேரில் வஞ்சனை இல்லை. தாயின் சொல்லுக்கு அடங்கி மிகவும் ஒழுங்காகப் பாடம் படிப் பான். படுக்கைத் தலைமாட்டில் புஸ்தகம், ஹரிகேன் விளக்கு, நெருப்புப் பெட்டி இவைகள் இல்லாமல் தூங்கவேமாட்டான். அதிகாலையில் எழுந்து பக்கத்துத் தெருக்கள் கிடுகிடுத்துப்போகும்படி இரைந்து படிப்பான். காலை ஏழு மணிக்குப் பிறகு பட்டை பட்டையாக விபூதியை அணிந்துகொண்டு வாசிப்பான். நிமிஷம் பிசகா மல் பள்ளிக்கூடம் போவான். இருந்தாலும் வாத்தியார் கேள்வி கேட்டால் மட்டும் சரியாகப் பதில் சொல்லத் தெரிவதில்லை. 

கிருஷ்ணன் ஒற்றைநாடியாக உயரமாக வளர்ந்தவன். சதைப்பற்றற்ற உடம்பில் எலும்புகள் முண்டும் முடிச்சுமாக அங்கங்கே தெரியும. எழுந்து நின்றால் லேசான கூனல் வேறு. இப்படி வயசும் உருவமும் வளர்ந்த ஒருவன் வகுப்பில் எழுந்து கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தால், ‘நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே’ என்று வாத்தியார் கேலி செய்யாமல் என்ன செய்வார்? வாத்தியாரே வழி காட்டினால் மற்றச் சிறு பையன்கள் சும்மா இருப்பார் களா? அழகு, ஏணி, ஒட்டைச் சிவிங்கி, இடையன் பூச்சி என்று பல பெயரிட்டுப் பேசிக்கொண்டார்கள். நாளடை வில் அவன் காதில் விழும்படியே கூப்பிட்டார்கள். அவனுக்குக் கோபமே வருவதில்லை. தனக்குப் படிப்பு வராது என்று அவனுக்கே தெரியும்போது பிறர் அதைச் சொல்லுவதற்காக ஏன் வருந்தவேண்டும்? கொஞ்ச நாள் வரையில் ஓயாமல் புரளி செய்து அலுத்துப்போன பிறகு பையன்களுக்கு ஞானோதயம் ஆகிவிட்டது. இவ்வள வு நல்லவனிடத் தில் விஷமம் செய்யக்கூடாதென்று தங்கள் முறையை மாற்றிக்கொண்டு விட்டார்கள். அப்பால் அவனை ஒரு பையன்கூடப் புரளி செய்ததில்லை. முந்திச் செய்த புரளிக்கு நஷ்ட ஈடு செய்வதுபோலவோ என்னவோ அவனிடம் அபாரமான பரிவை வாரிச் சொரிய ஆரம்பித்தனர். 

 முதல் பாரத்தில் நாட்கள் கழிந்தன. பரீக்ஷை வந்தது; பிறகு போயிற்று. ஆனால் அவனை மட்டும் இரண் டாவது பாரத்துக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இனிமேல் தான் படிக்கப் போவதில்லை என்று தகப்பனாரிடம் சொன்னான். 

“போடா முட்டாள்! ஒரு தடவை தேறாவிட்டால் என்ன? இந்தத் தடவை வாத்தியாரை ‘டியூஷன்’ வச்சுக்கோ; தேறிவிடலாம்” என்று ஆறுதல் சொன்னார். 

‘டியூஷன்’ வாத்தியாருக்கு நல்ல சம்பளம் கிடைத் தது. தீபாவளிக்கு இனாம் கிடைத்தது. எனவே பரீக்ஷைக் கேள்விகள்கூடக் கிருஷ்ணனுக்குத் தெரிந்துவிட்டன. பிறகு அதில் என்ன கஷ்டம்? அந்த வருஷம் அவனுக்குப் பரீக்ஷை தேறிவிட்டது. அவன் தாய் தெருக்கோடிப் பிள்ளையாருக்குப் பத்துத் தேங்காய் உடைத்தாள். 

மூன்றாவது பாரத்துக்கு வந்த பிறகு சிக்கல் திரும்ப வும் ஏற்பட்டது. அந்த வகுப்பு வாத்தியார் ‘டியூஷன்’ சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இல்லை. வேறு யாரையோ வைத்துக்கொண்டு படித்தான். முதல் வருஷம் தேற வில்லை. தாயும் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்க மறுத்துவிட்டாள். இரண்டாவது வருஷம் படித்தான். அப்போதும் தேறவில்லை. 

கடைசித் தடவையாக மூன்றாவது வருஷம் படித் தான் . பரீக்ஷை நெருங்கிவிட்டது. ‘டியூஷன்’ வாத்தியா ரால் ஒன்றும் கையால் ஆகவில்லை. வகுப்பு வாத்தியாரோ உச்சாணிக்கிளையில் ஒளிந்திருக்கும் செங்கனியைப்போல் அவன் இலக்கிலேயே படவில்லை. இப்படியே போய்விட் டால் மூன்றாவது வருஷமும் தேறாது. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போக வேண்டியதுதான். ஆனால் அந்த எல்லைக்குப் போக வேண்டிய வைராக்கியம் அவனுக்கு இல்லை.யோசித்து யோசித்து ஒரு முடிவு கட்டினான். அவன் தாயும் பரீக்ஷைதேறினால் நூற்றெட்டுத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டாள். 

அவன் முக்கியமாக பூஜ்யம் வாங்குவதெல்லாம் இங்கிலீஷிலும் கணக்கிலுந்தான். இந்த இரண்டிலும் தேறிவிட்டால் கவலை இல்லை. அதற்கு வழி கண்டு பிடித்தான். 

இங்கிலீஷ் கேள்வித்தாள் தயார் செய்யும் வாத்தியார் மேல் வகுப்பில் இருந்தார். அவருடைய தமக்கை பிள்ளை ஒரு வாண்டுப் பயல் இவன் வகுப்பில் படித்துக்கொண் டிருந்தான். அவனுக்குக் கொடுக்காப்புளிக்காய் என்றால் பைத்தியம். நாள் தவறாமல் அவனுக்குக் கொடுக்காப்புளிக் காய் வாங்கிக் கொடுத்தான். பணக்கார வீட்டுப் பிள்ளைகள் என்றாலே சாதாரணமாகப் பையன்கள் காரணம் இல்லாம லேயே அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்; கிணற்றில் வளையமிடும் ஆறுகால் பூச்சியைப்போல. தின்பண்டம் வேறு வாங்கிக் கொடுத்தால் கேட்பானேன்? இந்தப் புது உறவின் காரணமாக அந்தப் பையன் தினம் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்து போய்க்கொண் டிருந்தான். கிருஷ்ணன் தாய் வேறு அந்தப் பையனுக்குப் பக்ஷணங்கள் கொடுப்பாள். 

ஒரு நாள் அணில்போல் கொடுக்காப்புளிக்காயைக் கொறித்துக்கொண் டிருந்தான் பையன். 

“ஏண்டா! உங்கள் அப்பா இங்கிலீஷ் பேப்பர் தயார் செய்துவிட்டாரா?” என்று கேட்டான் கிருஷ்ணன். 

“எனக்குத் தெரியாதே.” 

“எனக்கு வயசென்ன தெரியுமா?”

“தெரியாதே.” 

“இருபது வயசு. இந்த வருஷமும் எனக்குப் பரீக்ஷை தேறப்போறதில்லை, தெரியுமா ?” 

“தெரியாது.இருக்கட்டும். ஏன் தேறாது” 

“நான் மக்கு. நீ மனசு வச்சால் தேறுவேன்.”

விஷயம் விளங்காமல் பையன் விழித்தான். 

“நீ ஒரு காரியம் செய்யணும்; அப்பாவுக்குப் பொட்டி இருக்கா?” 

“இருக்கு.”

“அதிலே அவர் இங்கிலீஷ் கேள்வித்தாள் எழுதி வைத்திருப்பார். நான் நாளைக்குச் சாயங்காலம் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். அதை எடுத்துக் காண்பி; போதும். நாளைக்கு ஓர் அணாவுக்குக் கொடுக்காப்புளிக்காய் வாங்கித் தருகிறேன்.”

ஓர் அணாக் கொடுக்காப்புளிக்காய்க்கு எதிராக இது ஒரு குற்றமாகுமா? 

மாலை இருட்டுவேளையில், வாத்தியார் வீட்டுக்குப் போய்த் திருட்டுத்தனமாகக் கேள்வித்தாளைப் பார்த்து விட்டு வந்தான் கிருஷ்ணன். பரீக்ஷையில் ஒரு பாதிக்கு மேல் வெற்றி அடைய ஏற்பாடாகிவிட்டது. 

மற்றொரு பாதி கணக்குப் பரீக்ஷை.கேள்வித்தாளைப் பார்க்கலாமென்று அந்த வாத்தியாருடைய பிள்ளையைக் காபியும் ஹல்வாத்துண்டும் வாங்கிக்கொடுத்து நைச்சியம் பண்ணினான். துரதிருஷ்டவசமாகக் கேள்வித் தாள் அச்சா பீசுக்குப் போய்விட்டது. வேறு வழி? கணக்குப் பரீக்ஷை யில் ‘கோழிமுட்டை’ வாங்கிவிட்டுப் பள்ளிக்கூடத்துக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட வேண்டியதுதானா? கிருஷ்ணன் நம்பிக்கையை இழக்கவில்லை. 

பரீக்ஷைகள் வந்தன – கணக்கு உள்பட எதிர்பார்த்த படியே கணக்குப் பரீக்ஷை சங்கு ஊதிவிட்டது. முடிவாக ஒரு யோசனை தோன்றிற்று. விடை திருத்தும் வாத்தியா ரின் பையனை நாடினான். முதலில் எழுதிவைத்த விடைத் தாளுக்குப் பதிலாகச் சரியான விடைத்தாள் எழுதிக் கட்டுடன் சேர்த்துவிட்டால்-ஹும்! ஜயந்தான்! 

பையன்களுக்குப் பரீக்ஷை தேறவேண்டியது லக்ஷ்யமே ஒழிய அதில் வெற்றிபெறும் முறை அவ்வளவு பெரிதாகப் படுவதில்லை. அந்த விஷயத்தில் வேண்டிய ஒத்தாசை ஒருவருக்கொருவர் செய்யவேண்டுமென்பது டையன்களுடைய எழுதாக் கொள்கை. தவிர, குறிப்பிட்ட பையனுக்கோ காசில் ஆசை. ஒரு ரூபாய் லாபம் என்றால் பிறகு கேட்பானேன்? 

வாத்தியார் ‘டென்னிஸ்’ ஆடப் போன சமயம்: அவர் வீட்டுக் ‘காம்ரா’ அறையிலிருந்து வெளியே ஒரு சின்னக் கை நீண்டு வந்தது. வெளியே வந்து நின்ற கிருஷ்ணன் ஒரு தாள் கத்தையை அதில் வைத்துவிட்டான். அவ்வளவுதான்! 

அதற்குப் பிறகு கிருஷ்ணன் மனசு அலையவில்லை. 

ஆனால், பொதுவாக, அமைதியோ ஆத்திரமோ நீடித் திருப்பதில்லை. கோடை விடுமுறைக்குப் பள்ளிக்கூடம் சாத்த ஒரு வாரம் இருந்தது. பள்ளிக்கூட நேரத்தில் வராந்தா வழியாகக் கிருஷ்ணன் சுற்றிவந்தபோது திடுக் கிடத் தக்க இரண்டு காட்சிகளைக் கண்டான். தனக்கு உதவி செய்த இரண்டு பையன்களும் வகுப்புக்கு வெளியே ஸ்டூலின் மேல் ஏறி நின்றுகொண்டிருந்தார்கள். 

‘ஏன்? நமக்கு உதவி செய்ததன் விளைவா?’ என்ற நினைப்பு அவன் நெஞ்சை அறுத்தது. 

பள்ளிக்கூடம் விடுவதற்கு ஐந்து நிமிஷம் முன்ன தாகவே வகுப்பை விட்டு நழுவிக் காம்பவுண்டுக்கு வெளியே வந்து நின்றுகொண்டான் கிருஷ்ணன். 

பையன்கள் இருவரும் வந்ததும், “ஏண்டா??” என்றான் கிருஷ்ணன். 

“உன்னாலே தாண்டா; எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சு. வீட்டிலே எந்தச் சனியனோ சொல்லித் தொலைச்சுட்டுது. நல்ல வேளையா ஹெட்மாஸ்டரண்டை சொல்லாமே வாத்தியாரண்டைமட்டும் சொன்னா” என்று இரட்டை நாயனம்போல் அழுதார்கள். 

கிருஷ்ணன் மனசு துடித்தது. சமாதானம் சொல்வ தற்கும் வழி தெரியவில்லை. பேசாமல் வீடு போய்ச் சேர்ந்தான். 

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறந்தார்கள். கிருஷ்ணன் பரீக்ஷையில் தேறிவிட்டான். மத்தியான்னச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்ததும் தாய் அதிகப் பரபரப்புடன், “என்ன ஆயிற்று?” என்றாள். 

“மேல் வகுப்புக்கு மாற்றிவிட்டார்கள்” என்றான். ஆனால் அவன் சொன்ன மாதிரி அவனுக்கு இருந்த ஆற்ற மாட்டாத் துயரத்தை வெளிப்படுத்திற்று. 

ரகசியமாக நடந்த விஷயங்களை யெல்லாம் தாய் கண்டாளா? “ஏண்டா! பரீக்ஷை தேறாமல் இருந்தால் தான் உனக்குச் சந்தோஷமா? நம்ம தெருப் பிள்ளை யாருக்கு நூற்றெட்டுத் தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டேன். இல்லாத போனால் தேறுமா? இதிலே வருத்தமா இருக்கு? சாயங்காலமாகத் தேங்காய் உடைக்கணும். அந்த வாத்தியார் வீட்டுப் பையன்களையும் வரச்சொல்லு” என்றாள். 

“ஆகட்டும்” என்று ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு அவன் சொன்னான். 

சாயங்காலம் பிள்ளையார் கோயில் சரவிளக்குகள் பளிச்சென்று எரிந்துகொண் டிருந்தன. தாய் ஒவ்வொரு தேங்காயாக உடைத்துக்கொண் டிருந்தாள். கிருஷ்ணன் பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு நின்றாலும் அவன் மனம் பையன்களை நாடிப் போயிருந்தது. அதனால் தானோ என்னவோ எதிரே தெருவில் போன அந்த இரண்டு பையன்கள்கூட அவன் கண்ணில் படவில்லை. பையன்கள் அவனைப் பார்த்தும் பாராததுபோல் போனார்கள். கொடுக்காப்புளிக்காயையும் காசையும் காட்டி அவர்களை மயக்காதிருந்தால், பள்ளிக்கூட மத்தியில், அவர்கள் எட்டு மணி நேரம் ஸ்டூலின்மேல் ஏறி நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிராதல்லவா? வயசான பையன் இப்படி வஞ்சிக்க லாமா? அவன் முகத்தில் விழிக்கலாமா? இந்த மாதிரி நினைப்புடன் அவனைப் பார்த்தும் பாராமல் போனார்கள். 

சிதறிய தேங்காய் மூடியைப் பொறுக்கப் போன கிருஷ்ணனுடைய தாய் அவர்களைப் பார்த்துவிட்டாள். 

“ஏண்டா! அந்தப் பையன்களைக் கூப்பிடவில்லையோ? அதோ போறான்களே.” 

“கூப்பிட்டேன்” என்று பொய் சொன்னான் கிருஷ்ணன். 

“பின்னே, ஏன் வரவில்லை?” 

“ஏனோ தெரியவில்லை.” 

இரவு ஏழு மணிக்குத் தாயும் பிள்ளையும் வீடு திரும்பினார்கள். விபூதிப் பிரசாதத்தைத் தகப்பனாரிடம் கொடுத்தபோதே அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டு விட்டார். 

“நல்ல காலம்! இனிமேல் நாலாவது பாரமா? ஸபாஷ்! ஸைகிள் வாங்கித் தருகிறேன். நல்லாப் படி” என்று அடங்காத சந்தோஷத்தைத் தெரிவித்தார். 

கிருஷ்ணன் ஒரு நிமிஷம் ஆழ்ந்து யோசித்தான். பிறகு அழுத்தந் திருத்தமாக, “நான் வாசிக்கப் போவ தில்லை” என்றான். 

“ஏன்?” 

“நான் வாசிக்கமாட்டேன். படிப்பு வேண்டாம்.”

பெற்றோர்களுக்கு அவனுடைய பிடிவாதம் புரிய வில்லை; எப்படிப் புரியும்? ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கேள்விப்பட்ட பையன்களுக்கு மட்டும் அது புரிந்து விட்டது.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *