கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 13,953 
 
 

“அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது.

“மாமா.. ப்ளீஸ்.. எனக்கு பஸ்ஸ{க்கு நேரமாயிடுச்சு..” வீட்டில் ஒரு காலும் வாசலில் ஒரு காலுமாக பேசிய சுமதி நழுவும் ஹேண்ட்பேக்கை சரி செய்தவாறே வெளியே விரைந்தாள். ‘பாவம்.. அவளுந்தா என்னா செய்வா..? பொம்பள ஜென்மம் எடுத்தாலே இப்டிதான் போலருக்கு..’ மருமகளுக்காக மனம் பரிந்துக் கொண்டு வந்தது. ‘செண்பகம் மட்டும் கொஞ்சமாவா ஒழைச்சா.. அம்மா, ரெண்டு தங்கச்சிங்க, என் தம்பின்னு ஒரு கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டா.. வரிசயா ரெண்டு புள்ளைங்க… எல்லா கடமையும் முடிச்சுப்புட்டு அப்பாடான்னு நிமிரும் போது பொட்டுன்னு போயி சேந்துட்டா..’ சட்டென்று கலங்கிய கண்களை தலையணைக்கடியில் இருந்த துண்டில் வலது கையால் துடைத்துக் கொண்டார் நடராஜன். அது ஒன்று தான் சரிவர இயங்குகிறது. இரண்டு வருடத்திற்கு முன் திடீரென இயக்கமிழந்து போன ஒரு பக்க கை கால் இப்போது தொடர் சிகிச்சையில் ஓரளவு ஒத்துழைக்கிறது. மிச்சமிருக்கும் இயக்கத்தோடு பேரன் வரும் வரைக்கும் ஓட்ட வேண்டும்.

“ஏ ஹரி.. என்னப்பா செய்ற..? சத்ததத்தைய காணோம்..?” படுத்தவாறே கேட்டார் குமரேசன்.

“ஹோமொர்க் பண்றேன் தாத்தா..” வந்ததும் வராததுமாக எழுத உட்கார்ந்த ஹரி நிமிராமலேயே பதிலளித்தான். நான்காவது படிக்கிறான். “அம்மா ஹாட்பேக்குல இட்லி வச்சுருக்காங்கப்பா.. போய் சாப்டுட்டு கொஞ்சம் நேரம் வெளையாடு.. அப்றமா படிக்கலாம்..” இட்லியும் பொடியுமாக தாத்தாவின் கட்டில் அருகில் உட்கார்ந்தான் ஹரி. “இந்தா தாத்தா.. நீயும் சாப்டு..” குமரேசனின் வாயில் இட்;லியை திணித்தான். “போதும்பா.. நீ சாப்டு..” ஹரி கை கொடுக்க தட்டு தடுமாறி எழுந்தார். அருகிலிருந்த நடைக்குச்சியை தாங்கியவாறு கழிவறைக்குள் நுழைந்தார். ஹாலில் கார்ட்டூன் ஓடும் சத்தம் கேட்டது. “தாத்தா.. இந்த டீச்சரயெல்லாம் சைல்ட் லேபர் ஆக்ட்ல ஜெயில்ல போடணும்..” என்றான் ஹரி சட்டென்று. “ஏம்ப்பா..?” திடுக்கிட்டவராய் கேட்டார். “பின்ன.. இவ்ளோ ஹோமொர்க் குடுக்குறாங்க..” வாய் விட்டு சிரித்தார் குமரேசன். எத்தனை நாட்களாகி விட்டது இப்படி சிரித்து.
சிரிப்பையெல்லாம் செண்பகம் எடுத்துக் கொண்டு போய்விட்டாளோ..? சுந்தரும் லலிதாவுமாக இரண்டு பிள்ளைகள். நேர்மையாக அதிகாரியாகவே வலம் வந்து விட்டார் குமரேசன். தம்பி தங்கைகள் என்ற குடும்ப நிர்பந்தம் இருந்ததால் பணப்புழக்கம் குறைவு தான். தேவைகள் குறைவான செண்பகம். சாதாரண பள்ளியிலும் அசாதாரணமாக படிக்கும் பிள்ளைகள் என மன நிறைவுக்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை. மகள் லலிதா யூபிஎஸ்சி தேர்வில் தெரிவாகி டில்லியில் பணியில் இருக்கிறாள். நல்லவேளையாக மாப்பிள்ளை இரண்டு குழந்தைகள் என மகளின் வாழ்க்கையை பார்த்த பிறகே செண்பகம் இறந்து போனாள். சுந்தருக்கு மாநில அரசாங்கத்தில் வேலை.
“ஏங்க.. நம்ம ‘புள்ளக்குட்டி’ போஸ்ட்மேன் உங்கள பாக்கணும்னு சொன்னாரு.. ஞாயிற்றுகிழமை வாங்கன்னு சொல்லியிருக்கேன்…” அலுவலகம் விட்டு வந்த கணவனிடம் செண்பகம் சொன்னாள். அந்த தபால்காரருக்கு வதவதவென்று நிறைய குழந்தைகள்.

“அய்யா.. இவ எம் பொண்ணு சுமதி.. உங்கள பாக்கணும்னு சொல்லுச்சுங்க..” இப்படி தான் அறிமுகமானாள் சுமதி. “அங்கிள்.. எம்.காம் டிஸ்டிங்ஷென்ல முடிச்சுருக்கேன்; அங்கிள்.. உங்க ஆபிஸ்ல எதாவது வேலை கிடைக்குமா..? கண்களில் ஆர்வம் மின்னியது சுமதிக்கு. “அய்யா.. ஆறு புள்ளங்கள்ல இது ஒண்ணும் தான் நல்லா படிக்கற புள்ள.. எதாவது ஒரு வேல கிடைச்சுசுன்னா குடும்பத்துக்கு ரொம்ப ஒதவியா இருக்கும்யா..” தபால்காரரின் குரலில் கெஞ்சல் இருந்தது.

குமரேசன் சாதாரண கிளார்க் வேலையில் தான் அவளை சேர்த்திருந்தார். சட்டென புரிந்துக் கொள்ளும் திறன் கடுமையான உழைப்பு அர்ப்பணிப்பு இவையெல்லாம் அவளுக்கு அலுவலகத்தில் நற்பெயரை கொடுத்து கொண்டிருந்த நேரம் குமரேன் வீட்டார் மகன் சுந்தருக்கு பெண் தேடிக் கொண்டிருந்தனர். சுமதியின் திறமையை பற்றி மனைவியிடம் அடிக்கடி சிலாகிப்பார் குமரேசன். செண்பகம் தான் முதலில் சொன்னாள்.

“ஏங்க.. அந்த சுமதிய நம்ப சுந்தருக்கு பாத்தா என்னா..?” எல்லாம் நல்லபடியாக முடிந்து சுந்தரின் மனைவியாக மீண்டும் பணியில் சேர்ந்தாள் சுமதி.

“தாத்தா.. நான் போய் வெளையாடிட்டு வர்றேன்.. அம்மா ஃபோன் பண்ணுனா சொல்லிடு..” கதவை ஒருக்களித்து சாத்தினான். “ஹரி.. யூனிஃபார்ம மாத்திக்கிட்டு போப்பா..” அதற்குள் வெளியே ஓடி விட்டான். செண்பகத்திடம் கூட திமிறிக் கொண்டு தான் ஓடுவான். “போ.. பாட்டீ.. எனக்கு நேரமாச்சு..” வெளியே ஓட தயாராகும் பேரனை இழுத்து பிடித்து உடையை மாற்றி விடுவாள். சுமதி வருவதற்குள் இரவுக்கு அடையோ வெண்பொங்கலே தோசைக்கான சட்னியோ தயாராகி விடும். “ஏபிசிடி-ய எவ்ளோ நேரம் சொல்லி தருவீங்க..?” கணவனிடமிருந்து பேரனை மீட்பதில் அதிக அக்கறை காட்டுவாள். ஹரி ஓடி வந்து பாட்டியின் மடிக்குள் ஐக்கியமாகி விடுவான்.

“பாட்டீ.. சீதா ஆன்டிய காப்பத்தறதுக்கு ஏன் பாட்டீ அவுங்கள்ல்லாம் கார்ல போவுல..” பாட்டியின் தாவங்கட்டையை இழுத்து பிடித்து கேட்பான் ஹரி. “கடல்ல எப்டீப்பா கார் போவும்..” என்பாள் செண்பகம் பொறுமையாக. “அப்டீன்னா ஃபிளைட்ல போவுலாம்ல..?” “அப்பல்லாம் ஃபிளைட்டெல்லாம் கிடையாதுப்பா.. சரி சரி.. குறுக்க பேசாம கதைய கேளு..” எல்.கே.ஜி படிப்பவனுக்கு அதெல்லாம் புரிவதில்லை. “போ.. பாட்டீ.. அந்த ராமர் அங்கிளுக்கு ஒண்ணும் தெரியல.. அவங்க பேசாம டோராக்கிட்ட போய் கேட்டுருக்குணும்.. அவ சரியா வழி சொல்லுவா.. உன்னோட கத போரடிக்குது… போ…” ஓடி அம்மாவிடம் தஞ்சம் புகுந்து கொள்வான்.

“தங்கம்.. அம்மாவுக்கு ஆபிஸ்ல வேல நெறய இருந்துச்சா.. அதுனால அம்மாவுக்கு கொஞ்சம் டயர்டா இருக்கா.. ஹரிகண்ணு கொஞ்ச நேரம் பாட்டி கூட வெளையாடிட்டு வருவானாம்..” மகனை கெஞ்சும் கண்களில் சோர்வு தெரியும்.

“நான் வேணும்னா வெளியில டிபன் வாங்கிட்டு வரட்டுமா..?” மனைவியின் சோர்வை புரிந்து கொள்ள முடியும் சுந்தருக்கு.

“வேணாம்ப்பா.. எல்லாம் ஒக்காருங்க.. கொஞ்ச நேரத்துல சூடா தோசை கொண்டு வர்றேன்..” கால் மணி நேரத்தில் சூடான தோசை தேங்காய் சட்னியுடன் இரவு உணவு ரெடியாகி விடும். “செண்பகம்.. நான் ஒரு தோசை எடுத்துக்கவாம்மா..?” குமரேசன் உள்ளே குரலை அனுப்புவார். “சின்ன பையன்னு நெனப்பா..? இருங்க.. இருங்க.. ஒங்களுக்கு சப்பாத்தி எடுத்துட்டு வர்றேன்..” சூடான சப்பாத்திகளோடு கணவனுடன் உட்கார்ந்து கொள்வாள் செண்பகம்.

“மாமா.. சொல்லவே மறந்துட்டேன்.. நாளைக்கு லேப்லேர்ந்து ஆள வர சொல்லியிருக்கேன்.. காலைல வெறும் வயித்துல ப்ளட் குடுக்கணும்.. மறந்துட்டு காபி குடிச்சுடாதீங்க..”

“இப்பதானம்மா குத்தி ரத்தம் எடுத்துட்டு போனாங்க.. அதுக்குள்ள திரும்ப எடுக்கணுமா? இன்னும் ஒரு மாசம் போவுட்டுமே.. ஊசி குத்திக்கவே பயமாயிருக்கு.. ப்ளீஸ்மா…”

“மாமா சொல்றத கேட்டீங்களா அத்தே.. சுகர் டெஸ்ட் பண்ணி ஆறு மாசம் ஆச்சு.. இருநூத்து இருவது இருந்துச்சு.. ரெண்டு கல்யாணம் வேற அட்டெண்ட் பண்ணிருக்காங்க.. ஏறியிருக்கான்னு பாக்க வேண்டாமா..? ஏங்க.. மாமாவ என்னான்னு கேளுங்க..” என்பாள் சுமதி கணவனை நோக்கி.

டி.வி. செய்திகளில் கண்ணை பதித்திருந்தான் சுந்தர். “உன் வீட்டுக்காரனுக்கு டி.வி.தான் குடும்பமே..” செண்பகத்தின் கிண்டல் குரல் கேட்டு திரும்பினான் சுந்தர். “என்னம்மா பிரச்சன..?” ‘உங்கப்பா சின்னபுள்ளயாட்டம் ஊசிக்குத்திக்க பயப்படுறாரு பாருங்க..” என்றாள் சுமதி பட்டென.

“அதெல்லாம் ஒன் டிபார்ட்மென்ட்.. என்ன இழுக்காத..” மீண்டும் செய்திகளில் ஆழ்ந்தான். அடுத்த நாள் காலை வேலைகளுக்கு ஆயத்தமாவாள் சுமதி. “அத்தே.. முருங்ககாய் சாம்பார் வச்சுட்டு உருளகிழங்கு வறுத்துடுறேன்.. உங்களுக்கும் மாமாவுக்கும் கீரை கூட்டு பண்ணிடட்டுமா..” சாப்பாட்டு பாத்திரங்களை கழுவிக் கொண்டே பேசினாள்.

அலுவலகத்தில் வேலை அதிகம் என்பதால் ஆறுமணிக்கு தான் எழுத்துக் கொள்ள முடியும் சுமதிக்கு. அடுப்படியில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொண்டிருந்தாள் சண்பகம். “ஏன்த்N;த.. என்ன எழுப்பி விட்டுருக்கலாம்ல்ல..” குற்றவுணர்வோடு வந்தவள் திடீரென்று ஞாபகம் வந்தவளாக கேட்டாள். “மாமாவுக்கு காபி ஏதும் குடுத்துடலியே..?”

இப்போதெல்லாம் பணி உயர்வு அதை தொடர்ந்த பணிச்சுமை என இரவு வீடு வந்து சேர மணி ஏழாகி விடுகிறது சுமதிக்கு. அன்று இரவு அனைவருக்கும் இட்லியை பரிமாறிய செண்பகம் நாற்காலியில் தொய்வாக அமர்ந்தாள். “அம்மா சுமதி.. மூச்சு விட செரமமாயிருக்கு.. கொஞ்சம் சுடுதண்ணி வச்சுக்குடேன்..” ஒரு டம்ளர் சுடுதண்ணீர் கொதிக்கும் நேரத்திற்குள் ஆவியாகி போனாள் செண்பகம். இடிந்து போய் உட்கார்ந்திருந்த குடும்பத்தில் முதலில் தெளிந்தவள் சுமதி தான். போன் வழியாக தகவல் பறந்தது. பந்தல் முதல் ஐஸ்பாக்ஸ் வரை சகலமும் தயார் செய்ய தெரிந்திருந்தது அவளுக்கு. “நம்ம செண்பகம் மருமகள பாத்தியா.. சமார்த்தியகார புள்ள…” ஊராரின் பேச்சு குமரேசனுக்கும் கேட்டது.

இப்போது இரவு உணவு தயாரிக்க பணியாள் வருகிறாள். மருமகளி;ன் வேலை பளு மனைவியின் இறப்பை சற்றே பின்னுக்குத்தள்ள மீண்டும் வெளி வேலைகளை கையில் எடுத்துக் கொண்டார் குமரேசன். “சுமதிம்மா.. இன்னைக்கு ரேஷனுக்கு போவணும்.. அப்டியே வரும் போது இபி பில் கட்டிட்டு வந்துடட்டுமா..”

“சரிங்க மாமா.. பணம் உள்ள இருக்கு.. எடுத்துக்கங்க..” செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டே பேசினாள். முன்பெல்லாம் “வெயில் கொல்லுது.. சீக்கரமா போய்ட்டு வந்துடுங்க.. மோர் கலக்கி வச்சிட்டு போறேன்.. வந்தவொடனே குடிச்சுக்கோங்க..” என்பாள் அணுசரனையாக. ‘பாவம்.. அவளுந்தா என்ன செய்வா..’ தண்ணீர் பாட்டிலுடன் சிறிய பிஸ்கெட் பாக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டார். ரிடையர்மெண்ட்டுக்கு பிறகு பதினோரு மணிக்கு கஞ்சியோ டீயோ பிஸ்கட்டுடன் கட்டாயம் இருக்கும். செண்பகம் இல்லையென்று வயிற்றுக்கு சேதி அனுப்பத் தெரியவில்லை அவருக்கு. குடையை விரித்தப்படியே படியில் இறங்கினார்.

“சுந்தர்.. வெளிய போய்ட்டு வந்ததுலேர்ந்து மயக்கமா வர்றாப்புல இருக்குப்பா.. தலையெல்லாம் பயங்கரமா வலிக்குது..” வீட்டிற்கு வந்த பிறகு மகனிடம் பேசினார். “வெயில் என்ன கொஞ்சமாவா அடிக்குது..? எங்கையும் அலையாம நிம்மதியா ஏசிய போட்டுட்டு படுங்க.. சரியா போயிடும்..” அலுவல் அவசரம் அவனுக்கு. சாயங்காலம் ஹரி வந்த பிறகு தான் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “அப்பா.. தாத்தாவால நடக்க முடியலப்பா.. ஒரு கைய தூக்க முடியலே.. அழுவுறாங்கப்பா.. அம்மா ஏதோ மீட்டிங்ல இருக்காங்களாம்.. போனே எடுக்க மாட்டேங்குறாங்க.. சீக்ரம் வாப்பா.. பயமாருக்கு…” ஹரியின் அழுக்குரலுக்கு குற்றவுணர்வோடு ஓடி வந்தான் சுந்தர். சுமதி வருவதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் குமரேசன்.

ஓடியாடி திரிந்தவருக்கு வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்க முடியவில்லை. நண்பன் பார்த்தசாரதியை அடிக்கடி வரவழைத்துக் கொள்வார். நாட்டுநடப்பிலிருந்து இலக்கியம் வரை நீளும் சம்பாஷணை கடைசியில் பச்சாதாபத்தில்தான் முடியும். “இன்னும் எத்தன நாளைக்கு இந்த கஷ்டமுன்னு புரியலடா.. செண்பகம் பாதி உசுர எடுத்துட்டு போயிட்டா.. அரை உசுர வச்சுக்கிட்டு இப்டி படுக்கையா கெடக்குறோமேன்னு நெனச்சா ரொம்ப பாரமா இருக்குடா.. எல்லாம் பொண்டாட்டி பாத்துக்குவான்னு சுந்தர் ஓடிடுறான்.. பாவம் எம்மருமவளுக்கு ஆபிசுல நெறைய பொறுப்பு.. நானும் அங்க வேல பாத்தவன் தானே.. வேலைக்கும் குடும்பத்துக்கும் நடுவுல ஓடிக்கிட்டிருக்கா.. எல்லாத்தையும் பாத்துக்கிட்டு கையாலாகதவனா படுத்துக்கிட்டு இருக்கேன்..” கண்களில் துளிர்த்த நீரை ஒதுக்கி விட்டுக் கொண்டார்.

வர வர ஹரிக்கு இட்லியோ சப்பாத்தியோ மாலை நேரங்களில் சாப்பிட பிடிப்பதில்லை. “என் பிரண்ட் ராமோட அம்மா கூட ஒன்ன மாதிரி தான் வொர்க்கிங்.. அவனே சாயங்காலம் நூடுல்ஸ் பண்ணிக்குவானாம்.. நீ இனிமே எனக்கு இட்லி சப்பாத்தியெல்லாம் வைக்காத.. நானே நூடுல்ஸ் செஞ்சு சாப்டுக்குறேன்..” அம்மாவை சமாதானப்படுத்தி விட்டான். “எனக்காக ஒண்ணும் செய்ய வேணாம்மா.. படுத்தே கெடக்கறதால எனக்கு பசியே எடுக்க மாட்டேங்குது..” தன் ஒருவனுக்காக மருமகள் மெனக்கெடுவது அவருக்கு பிடித்தமில்லை.
“குமரேசு… ஊரு உலகத்துல நடக்காதது எதுவும் நடந்துடலையே.. வேலைக்கு போற லேடிஸ் எல்லாரும் இப்டிதானே ஓடிட்டிருக்காங்க.. நீ கவலப்படாத.. ஒன் மனச எவ்வளகெவ்வளவு சந்தோசமா வச்சுக்கிறியோ அவ்ளோகவ்ளோ சீக்ரமா ஒனக்கு குணமாயிடும்.. தளர்ந்துடாதப்பா..”

“ஈஸியா சொல்லிட்டே.. எனக்கு சுகர் வந்து பத்து வருஷமாச்சு.. சண்பகம் இருந்தவரைக்கும் நான் அத பத்தி கவலப்பட்டதேயில்ல.. அவளுக்கு தெரியாம இனிப்ப எப்டி சாப்புடலாம்னுதா யோசிச்சுக்கிட்டு இருப்பன்.. டாக்டர் ஒரேடியா சாப்பிடாதீங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்புடுங்கன்னு சொன்னதுலேர்ந்து காலை டிபனுக்கு பிற்பாடு பதினோரு மணிக்கா டீயும் பிஸ்கெட்டும் தருவா.. சாயங்காலத்துல எதாவது சுண்டலும் சக்கர இல்லாம ஒரு காபியும் குடுப்பா.. கவனிக்க ஆளில்லங்கிறது பசிக்கிற வயித்துக்கு தெரியுமா.. இல்ல இருக்குற நோய்க்குதான் புரியுமா..” தன்னிரக்கத்தில் பேசிக் கொண்டே போன தோழனை அணைத்துக் கொண்டார் பார்த்தசாரதி. நண்பர்கள் பேசும் போது நேரம் ஓடுவதே தெரிவதில்லை.

“தாத்தா.. தாத்த்தா..” குதித்தவாறே உள்ளே நுழைந்தான் ஹரி. பத்து வயதிற்கான உயரமும் சுமதியின் நிறமும் செண்பகத்தின் முகமுமாக இருப்பான். ஷ{க்களை சோபாவின் அடியில் தள்ளினான். “நேரம் போனது தான் தெரியலேன்னு நெனைச்சேன்.. வேன் வந்த சத்தம் கூட கேக்கல பாரு..” பார்த்தசாரதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுப்படியிலிருந்து வெளியே வந்தான் ஹரி. துணிச்சுருளுக்கு மத்தியில் கையில் பிடித்திருந்த வாணலியில் நூடுல்ஸ் இருந்தது.

“தாத்தா.. இந்தாங்க.. நூடுல்ஸ்..” கட்டிலுக்கருகில் வந்தான்.

“இந்த தாத்தாவுக்கும் கொஞ்சம் தட்டுல வச்சுக் குடுப்பா..”

ஓடிபோனவன் ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் நூடுல்ஸை வைத்து பார்த்தசாரதியிடம் நீட்டினான். “இந்தாங்க தாத்தா.. சாப்புடுங்க..” என்றவன் தனது தட்டில் இருந்த நூடுல்ஸை எடுத்து தனக்கு ஒரு வாயும் குமரேசனுக்கு ஒரு வாயுமாக ஸ்பூனில் வைத்து நீட்டினான்.
“என்னப்பா.. இதெல்லாம் சாப்புட பழகிகிட்ட போலருக்கு…

“பழக்கம் மட்டுமில்ல.. இப்ப இதெல்லாம் பிடிச்சும் போயிடுச்சு..”

பசியால் கத்திய வயிறு சற்றே ஆசுவாசித்தது.

இரவு சாப்பாட்டிற்கு பிறகு மாத்திரை அட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து உற்று பார்த்துக் கொண்டிருந்தார் குமரேசன். “ஏன்.. மாமா.. கண்ணாடி போட்டுக்கிட்டு பாக்கலாம்ல.. செரி.. இருங்க.. நான் எடுத்து தரேன்..” மாமனாரின் கையில் இருந்த மாத்திரை அட்டைகளை வாங்கி கொண்டாள் சுமதி. “சாப்பாட்ட விட அதிகமாக டேப்ளட்ஸ்தான் சாப்புடுறீங்க.. சுகர், பிரஷர் நியூரோ ப்ராப்ளம்னு அடுக்கடுக்கா எத்தனை மாத்தர.. உங்கள பாத்தா கஷ்டமாயிருக்கு மாமா..” என்றவாறு மாத்திரை அட்டைகளோடு அமர்ந்தாள்.

“அம்மா.. போன்.. அம்மாச்சி பேசுறாங்க..” செல்போனை எடுத்துக் கொண்டு வந்தான் ஹரி. “நீ கவலப்படாதேம்மா.. நான் பேசுறேன்..” போனை வைத்தவள் கணவனிடம் வந்தாள். “என் தங்கச்சி நித்யா அவங்க வீட்டுக்காரரோட ஏதோ பிரச்சனை பண்ணிக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டாளாம்.. என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாளாம்.. முரளியும் இனிமே நித்யா கூட சேர்ந்து வாழறதுல அர்த்தமேயில்லைங்கற மாதிரி போன் பண்ணி எங்கப்பாட்ட கன்னாபின்னான்னு பேசிட்டானாம்.. அம்மாவால தாங்க முடியில.. நான் நாளைக்கு பெர்மிஷன் போட்டுட்டு அப்டியே அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன்..” பேச்சு சுவாரஸ்யத்தில் மாத்திரைகளை மறந்தே போனாள்.

“அம்மா.. தாத்தா பேசவே மாட்டேங்கிறாரும்மா.. தூங்கிட்டே இருக்குறாரு..” படபடப்புடன் ஒருநாள் சாயங்காலம் ஹரியிடமிடந்து போன். அடித்து பிடித்துக் கொண்டு கிளம்பினாள் சுமதி. ஆறாம் வகுப்புக்கு வந்திருந்த அவனுக்கு கொஞ்சம் புரிந்தே இருந்தது. டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான் சுந்தர். “சிவியர் ஹார்ட் அட்டாக் சார்.. எல்லாம் முடிஞ்சிடுச்சு..” ஒற்றை வார்த்தையில் குமரேசனை முடித்து வைத்தார் அந்த மருத்துவர்.

பதினாறாம் நாள் காரியம் நடந்து கொண்டிருந்தது. “சுமதி.. ஆம்பளைங்கள்ளாம் கருமாதி படித்துறைக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள நீ ஒன் மாமனாருக்கு புடிச்சத செஞ்சு வைச்சுடு.. அதெல்லாம் வச்சு தான் அவருக்கு படைக்கணும்..” சொல்லியப்படியே அடுப்படிக்குள் நுழைந்தாள் சுமதியின் அம்மா.

“அவருக்கு என்ன பிடிக்கும்…?” யோசித்தாள் சுமதி.

“அம்மா.. தாத்தாவுக்கு நூடுல்ஸ் ரொம்ப புடிக்கும்..” அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டே சொன்னான் ஹரி.

ஏனோ அவளுக்கு சத்தமிட்டு அழ வேண்டும் என தோன்றியது.

– பிப்ரவரி 2014

பெயர் : கலைச்செல்வி கணவர் பெயர் : சு.கோவிந்தராஜு வீட்டு முகவரி : கே.கே.நகர், திருச்சி 620 021 இமெயில் முகவரி : shanmathi1995@live.com இதுவரை வெளிவந்த படைப்புகள் : “சக்கை“ என்ற இவரின் நாவல் NCBH வெளியீடாக 2015 ஜனவரியில் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியானது. இந்நாவல் நேரு மெமோரியல் கல்லுாரி, புத்தனாம்பட்டியில் தமிழ் இலக்கியத்திற்கான பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. காந்திகிராம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இவரது சக்கை நாவலை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *