நீ இருக்கும் வரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2015
பார்வையிட்டோர்: 9,648 
 

“திவாகர் ……”

“டாக்டர் என் மனைவிக்கு????”

“Im Sorry திவாகர் உங்க குழந்தைய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது… உங்க மனைவிய போலவே ஒரு அழகான பெண் குழந்தை…”

கண்களில் கண்ணீருடன் அருகில் இருந்த சுவரில் சாய்ந்து கொண்டான் திவாகர்.

“உங்க குழந்தைய inspection room ல வச்சு இருக்கிறம், She needs to be there under the inspection for some other hours. But you can be with her.”

கண்ணில் கண்ணீர் மல்க தள்ளாடிய படி Inspection Room ஐ நோக்கி சென்றான் திவாகர். அங்கு எந்த வித அசைவும் மனதிலும் உடலிலும் இல்லாது அமைதியாக இருந்த தனது இன்னோர் உயிரை கண்டதும் திவாகருக்கு தனது அஞ்சலியின் உயிரை பறித்த ஜீவனாகவே தெரிந்தது.

அவனுடன் வந்த டாக்டர் “உங்க மனைவி உங்களுக்காக மறுபடியும் பிறந்திருக்கிறதா நினைச்சுகோங்க திவாகர்..” என வழமையாக இம்மாதிரியான தருணங்களில் டாக்டர்கள் சொல்லும் பாரம்பரிய வசனத்தை சொன்னார்.

டாக்டர் கூறியதைக் கேட்டதும் மீண்டும் நினைவுக்கு வந்த திவாகர் தனது எண்ணம் தவறென புரிந்துகொண்டு குழந்தையின் அருகினில் சென்றான். ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்திருந்த தனது குழந்தைக்கு அருகில் சென்று உற்று நோக்கினான். குழந்தையை பார்க்கும் போதெல்லாம் தனது மனைவியின் உருவமே அவன் மனதில் தோன்றியது. பழைய நினைவுகள் எல்லாம் அலை மோதியது.

குழந்தையிடம் “டாக்டர் சொன்ன மாதிரி நீ என் அஞ்சலி போலவே இருக்க. அதே கண் அதே மூக்கு. ஆனா அவ உன்ன விட அழகு. அஞ்சலி, ஒ உனக்கு தெரியாதில்ல. அவ தான் உன் அம்மா. உன்ன என்கிட்டே விட்டு போய்ட்டா.உன்ன நான் எப்பிடி பாத்துக்க போறேன்? எனக்கு எதுவுமே தெரியாதுன்னு தெரிஞ்சும் என்ன தனிய விட்டுட்டு …. ” கண்ணில் கண்ணீருடன் …
சற்று நேர அமைதியின் பின் தனது தொலைபேசியை எடுத்து அதிலிருக்கும் தனது மனைவியின் படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு இருந்தான். ஒவ்வொரு படத்தின் போதும் நடந்த தருணங்களை நினைத்த வண்ணம் பார்த்தான். அவ்வேளை குழந்தை அழத்தொடங்கியது. சுற்றும் முற்றும் யாரையோ தேடிய திவாகர் எழுந்து டாக்டர் ஐ கூப்பிட சென்றான். அவன் எழும்பியதும் குழந்தை அழுவதை நிறுத்தியது. மீண்டும் இருந்த இடத்திற்கு சென்று இருந்தான். பின் தொலைபேசியில் இருக்கும் அஞ்சலியின் படங்களை பிறந்து சில மணி நேரம் கூட ஆகாத தனது குழந்தைக்கு காட்டி ஒவ்வொரு படத்தின் போதும் நடந்த தருணங்களை நினைவு மீட்டி கூறிக்கொண்டிருந்தான்.

“அஞ்சலிக்கு இளநீர் நா ரொம்ப பிடிக்கும். பைக் ல போகும் பொது எங்காச்சும் இளநீர் விக்குறத கண்டுட்டா போதும் வாங்கி குடிக்காம போமாட்டா. இது ஒரு முறை அவள் இளநீர் குடிக்கும் போது அவளுக்கே தெரியாம எடுத்தது.”

“நாங்க ஒரு Art Exhibition ஒன்றுக்கு போய் இருந்தம், அப்போ அங்க இருந்த ஒரு சின்ன பெண்குழந்தை ஒன்றுட படத்தை பாத்துட்டு நமக்கும் ஒரு பெண் குழந்தை தான் பிறக்கும் பாரு என்றாள். அவள் சொன்ன போலவே நீ பிறந்திருக்க. இது அப்போ எடுத்த படம் தான்.”

“Excuse me sir, இது உங்க பிள்ளைட birth certificate application . Have you ever thought about any name for her?” உள்ளே வந்த ஒரு நர்ஸ் திவாகரிடம் வினவினாள்.

“ஹ்ம்ம்.. நாங்க இத பற்றி ஒருமுறை கதைச்சு இருக்கிறம். அஞ்சலிக்கு அனீரா எண்ட பெயர் ரொம்ப பிடிக்கும். அதுவே இருக்கட்டும்.”

“OK சார் இத fill பண்ணி வையுங்க நான் நீங்க போகும் போது வாங்கிக்கிறேன். ” என்று கூறி விட்டு தாதி அவர்கள் இருவரையும் அந்த அறையில் தனியே விட்டுவிட்டு சென்று விட்டாள்.

“அனீரா, இந்த பெயர் அவள் கண்டு பிடிச்சதும் ஒரு பெரிய கதை.” என்று சிரித்த வண்ணம் கூறினான்.

“உனக்கொரு விஷயம் தெரியுமா, நானும் அஞ்சலியும் arranged marriage. ஆனா உன் அம்மாவை நான் அதுக்கு முதல் இரண்டு வருஷமா காதலிச்சு இருக்கான். அவளும்… ” என இழுத்தான்… தனது காதல் வாழ்க்கையை மீட்டி பார்த்து அதை தன் பிள்ளையிடம் கூறினான்.

நான் சேர்ந்த முதலாவது வேலைல எனக்கு training கொடுக்கிறதுக்காக என்ன US அனுப்பி வைச்சாங்க. ஒரு வருஷம் ட்ரைனிங்… அங்க யாருமே எனக்கு நண்பர்கள் எண்டு உதவியே இருக்கேல்ல, எப்பவும் facebook நண்பர்களோட உரையாடுறது தான் வேலை. ஏற்கனவே நடந்த சில பிரச்சினைகளால நான் என்னுடைய படத்த facebook ல போடுறதில்ல. என்னுடைய பெயரையும் அஜீ எண்டு மாத்தி தான் முகப்புத்தகத்தில போட்டிருந்தன். அங்க போன காலத்துல தான் எனக்கு அஞ்சலிட அறிமுகம் கிடச்சுது. நான் தான் request கொடுத்தனான். அவளும் ஒரு படமும் முகப்புத்தகதில போட்டதில்ல. பிறகு என்னோட chat செய்ற காலத்துல நல்ல close friends ஆனம். முகம் பார்த்ததில்ல phone ல கதைச்சதில்ல ஆனாலும் நல்ல நண்பர்கள் ஆயீட்டம். பொதுவாவே என் நண்பர்கள் சொல்லுவாங்க நான் பேசுறது பிடிக்கும்னு, அதே காரணத்தினால தான் அவளுக்கும் என்ன ரொம்ப பிடிச்சிருந்தது.

ஒரு நாள் நான் கேட்காமலேயே தன்னுடைய family photo ஒன்று அனுப்பி இது தான் என் அம்மா அப்பா என்று சொன்னாள். ஆனா அந்த படத்துல அவளும் இருந்தாள். பாத்ததுமே அவள நான் என்னும் கூட ரசிக்க தொடங்கிட்டன். அவ்வளவு அழகு. அவள் சிரிச்சா கன்னத்தில குழி விழும். அவள் தன்னுடைய படத்த காட்டுறதுக்கு தான் அந்த படத்தையே அனுப்பினாள் எண்டு புரிஞ்சுது. படத்த பாத்துட்டு சொன்னன் “நீ அழகா இருக்க, உன் படத்த காட்ட தானே அனுப்பினாய்…” அவள் அத இல்லை எண்டு மழுப்பினாலும் நான் புரிஞ்சுகிட்டேன். என் படத்தை கேட்டாள். நான் உன்னை நேரே பார்க்கும் போது பாத்துக்கலாம் எண்டு கடைசி வர அவளுக்கு நான் அனுப்பினதே இல்ல. அவளும் செல்லமா அப்பப்ப கொவிச்சுப்பாள். அன்றிலிருந்து அவள் தன்னுடைய படங்கள அனுப்பிட்டே இருப்பாள் நான் கேட்காமலேயே. அடிக்கடி Love Quotes உள்ள படங்கள தேடி எடுத்து அதுல என்ன மட்டும் tag செய்வாள். கேட்டா எனக்கு கூட பிடிச்ச நண்பன் நீ தான் எண்டு சொல்லிடுவாள். அவள் மனது எனக்கு புரிந்தது. எனக்கும் அவள் மேல் நட்பு என்றதுக்கு மேலான ஒரு எண்ணம் வந்தது.

நான் மறுபடி தாய்நாட்டிற்கு திரும்புற காலம் வந்தது, அவளை பார்க்க முன்னம் முகப்புத்தகதிலேயே காதலை சொல்லிடுவமா, இல்ல நேர கண்டு சொல்லுவமா என்று யோசிச்சுட்டே இருந்தேன். நேர கண்டு பிடிக்கவில்லை எண்டு சொல்லி விடுவாளோ எண்டு ஒரு பயமும் இருந்தது. அவளை பற்றி ஓரளவேனும் தெரிந்திருந்ததால் நேரவே கண்டு சொல்லலாம் என முடிவெடுத்தன். அவள் இருக்கிற ஊர் தெரிந்தாலும் அவள்ட முகவரி தெரியாது. அவளை ஒரு இடத்திற்கு வர சொல்லி அங்கு காதலை சொல்லலாம் எண்டு முடிவெடுத்து, நான் புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்னர் Facebook Login செய்ய Laptop ஐ திறந்தன். அந்த அதிர்ச்சிய நான் கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல. “Facebook site has been banned by US government and will no longer be able to use” எண்டு வந்தது… கொஞ்ச நாளாகவே Facebook மேல இப்பிடி ஒரு புகார் இருக்கென செய்திகள் பரவின. ஆனா நான் அதை பெரிசா எடுத்துக்கேல்ல.

அவளை இனி எங்க தேடுவன் எண்டெல்லாம் யோசிச்சு அழுது கலங்கி இங்க வந்தேன். எனக்கு இரண்டு கிழமை லீவு இருந்தனால அவளின் ஊருக்கு போய் ஒவ்வொரு தெருவா தேடி தேடி பார்த்தன். ஒவ்வொருநாளும் bike full tank முடிக்கிற அளவுக்கு அந்த ஊரை சுத்தி தேடிட்டே திரிஞ்சன். கடைசியா எதுவும் சரி வராது என்ற எண்ணத்துல வீட்ட போக வெளிக்கிடும் போது அஞ்சலி அவளின் அப்பாவுடன் குனிந்த தலை நிமிராமல் சோகமா கீழே பார்த்த வண்ணம் வந்தாள். அண்டைக்கு நான் பட்ட சந்தோசம் அவளை கல்யாணம் பண்ணும் போது கூட இருக்கேல்ல. அவைக்கு பின்னாலேயே போனான் வீட்ட கண்டு பிடிக்க.

பிறகு அதுக்கு அடுத்த நாள் அவள் வீட்டுக்கு முன்னாலேயே காவல் இருந்தன். அவள் தனிய வெளியே வரும் பொது அவளிடம் சென்று பேசி விட வேண்டுமென நினைத்து காத்திருந்தேன். ஒரு அழகான மஞ்சள் நிற சேலை அணிந்து அதே சோகத்துடன் வந்தவள் முன்னுக்கு போய் நின்றேன். என் மனதில் ஆயிரம் எதிர்பர்புக்கள் எண்ணங்கள் அலை ஓடின. அவள் என்னை பார்த்து விட்டு “Excuse me” என்றாள். அவளுக்கு என் உருவம் தெரியாது என்னும் எண்ணத்தை அறவே மறந்திருந்தேன். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. உடனேயே “கதிர் வேலு என்பவரின் வீடு எங்க இருக்கு எண்டு தெர்யுமா” என வினவினேன். அவள் தெரியாது என கூறி சென்று விட்டாள். நான் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தேன்.

நான் தான் அஜீ என்றால் நம்புவாளா மாட்டாளா, நிரூபிக்கவும் வழி இல்லை என தெரிந்துகொண்டு, மனதில் உள்ள கவலையை வெளிக்காட்டாது வீடு சென்றேன். ஆனால் அவளை இழக்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை. அம்மாவிடம் சொல்லி அவளை எனக்கு பெண் கேட்கும் படி தூது அனுப்பினேன். அஞ்சலியின் தந்தைக்கு எந்த விதத்திலும் என்னை மறுக்கும் வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்துகொண்டு. கடைசியாக கல்யாணமும் நடந்து முடிந்தது அஞ்சலியின் அரை மனதுடனே.

அவளிடம் நான் தான் அஜீ என்பதை சொல்ல தயக்கமாகவே இருந்தது. நான் அவளிடம் அதை கூற முன் ஒரு நாள் என்னிடம் ” திவா நான் உங்களிடம் ஒரு விடயம் சொல்லியாக வேண்டும், நான் facebook இருந்த காலத்தில் ஒருவருடன் பழகினேன். அவரின் முகம் கூட தெரியாது அவருடன் நெருக்கமானேன். அவர் மீது ஒருதலையாக காதலும் கொண்டேன். அனால் இறுதி வரை அவரை காணவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை. இதுவே நான் கல்யாணத்திற்கு தயங்கியதன் காரணம். என்னை மன்னிக்கவும். நான் அதை மறக்க முயட்சிகின்றேன் என்றாள். அவள் அப்படி கூறியதும், அவளை காதலியாக காதலித்ததை விட மனைவியாக அதிகம் காதலித்தேன். நான் தான் அஞ்சலி அஜீ என மனது சொல்லச்சொன்னாலும் எதுவோ என்னைத் தடுத்தது. நல்ல தருணம் வரும் வரை காத்திருந்தேன்.

நீ அவள் வயிற்றில் இருக்கும் நேரம் அவளின் பிறந்த நாள் அன்று அவளை ஒரு CANDLE LIGHT DINNER கூட்டிச் சென்று அங்கு சொல்லலாம் என முடிவெடுத்தேன். அந்த நாளும் வந்தது, ஆயிரம் எதிர்பார்புக்களுடன் அவளிடம் ………..”

பிள்ளையிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் ECG சப்தம் அதிகரித்தது, திடுக்கிட்ட திவாகர் டாக்டர்……….. என கத்தி அழைத்தான். டாக்டர் விரைந்து வந்து திவாகரை வெளியே இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்றார். ஒரு பத்து நிமிடங்களின் பின்னர் டாக்டர் “Nothing to worry. You can take her home” என்றார்.

மகிழ்ச்சியுடன் தன் பிள்ளையை வீட்டுக்கு அழைத்து சென்றான். அதன் பின்னர் அஞ்சலியை பற்றி அவன் அனீராவிடம் ஒருபோதும் பேசியதில்லை. மிகுந்த கவனத்துடன் தனது மகளை ஒரு அம்மாவைப் போலவே பார்த்து வந்தான். அவன் வேலைக்கு செல்லும் நேரங்களில் அவன் அம்மா பார்த்துக்கொள்ளுவார். வேலை செல்லும் நேரம் தவிர்ந்த மீதி நேரம் முழுதும் அனீ யுடனே நேரத்தை செலவிட்டான். அப்பிள்ளையும் சாதாரண பிள்ளைகளைப் போல் அல்லாது தன் தந்தையுடன் மிகவும் அதிக அன்னியோன்னியமாக பழகி வந்தது. அம்மா இல்லாத குறையே தெரியாத அளவிற்கு வளைந்து வந்தாள் அனீரா.

அவளிற்கு எட்டு வயதாகும் போது ஒரு நாள் அவள் தன் அறையினில் விளக்கையும் அணைத்துவிட்டு ஓரமாக சோகமான முகத்துடன் அமைதியாக இருந்தாள். வேலையில் இருந்து வந்த திவாகர் அனீயை வீடு முழுதும் தேடி கடைசியாக அவளிடம் சென்று, ” Lights ஐயும் off பண்ணிட்டு மேடம் சோகமா மூலைல என்ன பண்றா? ஸ்கூல் ல டீச்சர் பிள்ளைய பேசீட்டாவா?, இல்லாட்டி பாட்டி பேசீட்டாவா? என்னாச்சு கண்ணா?” என்றான்.

சிறிது நேர அமைதியின் பின்னர் அனீரா,

” அப்பா,……..

அம்மாக்கிட்ட நீங்க தான் அஜீ னு சொன்னிங்களா இல்லையா? அம்மா என்ன சொன்னாங்க?………”

……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *