நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 7,841 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

நானாக… நானில்லை… 
நீயின்றி நானில்லை… 

அவர்கள் இருவரும் கோயிலுக்குள் நடந்தார்கள்… அந்தி நேரத்துக் காற்று… அவர்களை இதமாக தொட்டுத் தழுவிச் சென்றது. கோயில் கோபுரத்தில்… புறாக்கள் சிறகடித்து வந்து அமர்ந்தன. சாருலதாவின் மனம் இறகைவிட லேசாக ஆனது. 

“என்ன… கோபுரத்தை அப்படிப் பார்க்கிறாய்…?” என்று வினவினான் தனஞ்ஜெயன்… 

“எனக்கு அதுபிடிக்கும் தனா… ஈவினிங் டயத்தில் கோயிலுக்கு வருவதே ஒரு இனிமையான அனுபவம் தெரியுமா…? கோயில் கோபுரத்தில் கூடுகட்டி இருக்கிற புறாக்கள் சிறகடிக்கும் சிறகோசை… கோயிலின் ஆலய மணி எழுப்பும் மணியோசை… இந்தக் காற்றில் நம் காதில் ஒலிக்கும், ‘ஓம்…’ என்ற மந்திர ஓசை… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பட்… அடிக்கடி கோயிலுக்கு வர என்னால் முடிவதில்லை…” 

“என்னால் மட்டும் முடிகிறதா…? நீ ஆசைப்பட்டியேன்னு இன்று உன்கூட வந்தேன்…” 

“உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்னு சொல்லுங்க…”

“சரி தாயே… அப்படியே சொல்கிறேன். இப்ப வா… சுவாமி தரிசனம் பண்ணலாம்…” 

அவர்கள் கண்மூடி… நிற்க… அர்ச்சகர் வந்து பிரசாதக் கூடையை வாங்கிக்கொண்டு, அவர்களின் பெயர் நட்சத்திரத்தைக் கேட்டுக்கொண்டு போனார்… தீபாராதனை ஒளியில் கடவுளை வணங்கி… கன்னத்தில் போட்டுக் கொண்டாள் சாருலதா. அம்மன் சந்நிதியிலும் அர்ச்சனையை முடித்துக் கொண்டு கோயிலை வலம் வந்தார்கள். 

“உட்கார்ந்து விட்டுப் போகணும் தனா…”

“அதோ… அங்கே உட்காரலாமா…?” 

தனஞ்ஜெயன் கோயில் மண்டபத்தை சுட்டிக் காட்டினான். சாருலதா சந்தோசமாய் தலை அசைத்தாள்… அவர்கள் மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்தார்கள். 

“அந்தத் தேங்காய் மூடியை இங்கே தள்ளு…” 

தனஞ்ஜெயன்… தேங்காய் வில்லையை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அவனுக்கு இரண்டு படிகள் தள்ளி… கீழே அமர்ந்திருந்த சாருலதா… மௌனமாய் அவன் மடிமேல் தலை சாய்த்தாள். 

தனஞ்ஜெயனின் கவனம் தேங்காயின் மீதிருந்து… சாருலதாவின் பக்கம் திரும்பி விட்டது. அவன் மனம் மென்மையானது. ‘நீயே தஞ்சம்’ என்பதுபோல் மடி சாய்ந்திருந்த அவளின் அந்தத் தன்மை… அவனது முரட்டு மனத்தை நெகிழ்த்தியது. அவன் அவளது முடி கோதி விட… சாருலதா கண்மூடி அவன் மடியில் இன்னும் புதைந்தாள்… 

“சாரு.” 

“ம்ம்ம்…” 

“என்ன இது குழந்தை போல…?”

“உங்களின் முன்னால் நான் ஒரு குழந்தை போலத்தான் ஆகிவிடுகிறேன் தனா. உங்களுக்குத்தான் இது புரியவில்லை…” 

“இதை நீ சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா…? எனக்கே அது நன்றாகத் தெரியுமே…”

“தெரிந்தும் ஏன்… என் மனத்தைக் காயப்படுத்துகிறீங்க…?” 

“நீ ஏன் காயப்படுகிறாய்…? உன்னை நான் வழி நடத்துகிறேன் என்று நினைத்தால் என்ன…?”

“இதுவா வழி நடத்துவது…? என் மனதை கசக்கிப் பிழிந்து விட்டு… இப்போது நியாயவாதிபோல் பேசுகிறீங்க…”

“சண்டை போடத்தான் கோயிலுக்கு வந்தாயா…?”

“இல்லை… சாமி கும்பிடத்தான் வந்தேன்…”

“உன்னைப் பார்த்தால் அதற்கு மட்டும் வந்தது போலத் தெரியவில்லையே…” 

அவள் மடிசாய்ந்திருப்பதைத்தான் அவன் கேலியாகக் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட அவள்., வெட்கத்துடன் விலகி அமர்ந்தாள். 

“இப்படி மேலே வந்து… என் பக்கத்தில் உட்கார்…”

அவன் கைநீட்ட… அதை இறுகப் பற்றியவள், மேனிச் சிலிர்த்தாள். அவள் உணர்ந்த உணர்வை.. அவனும் உணர்ந்ததை அவனது முகம் சொல்லியது அவன் அவளையே பார்க்க ஆரம்பித்தான்… சாருலதா முகம் சிவந்தாள். அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல்.. கோயில் கோபுரத்தை பார்த்தாள். 

“ஏண்டி… என் முகம் பார்க்க மாட்டாயா…?”

“ச்சு… இது கோயில் தனா…” 

“இப்போதுதான் அது நினைவிற்கு வந்ததா…?”

“எப்போதும் என் நினைவில் அது இருக்கும்…” 

அவள் விரல் பற்றிக்கொண்டான் தனஞ்ஜெயன், அவள் கையை உருவிக் கொள்ளாமல்… அவன் முகத்தைப் பார்த்தாள். 

“என்னமோ சொல்ல நினைக்கிறாய்ன்னு தெரிகிறது… சொல்லு…” 

“இந்த நிமிடங்கள்… என் வாழ்வின் பொக்கிஷ நிமிடங்கள் தனா…” 

“எனக்கும் இந்த நினைவியிருக்கும் சாரு…”

“இப்படி அமைதியாய்… என் பக்கத்தில் உட்கார்ந்து நீங்கள் பேச… நான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது…” 

“அதுசரி… வேலையை யார் பார்ப்பது…?” 

“இப்போதுகூட வேலையின் நினைவுதானா…? யோசித்துப் பார்க்கும்போது… நம் நேரம்… நமக்குச் சொந்தமாக இல்லைன்னு தோணுது தனா…” 

“ம்ம்… நிஜம்தான்…” 

“எதற்கும் பொழுது இல்லை… நமக்கே நமக்கென்று செலவழிக்க சில நிமிடங்களை நாம் விட்டுவைத்தால் என்ன தனா… நான் படித்த படித்த ஒரு கவிதையைச் சொல்லவா…?” 

“நீ படித்ததா… இல்லை… நீ எழுதியதா…?” 

“நான் எழுதி… நான் படித்த கவிதை…”

“அதுதானே பார்த்தேன்… வசமாய் நான் அகப்பட்டுக் கொண்டேனென்று கவிதை சொல்ல ஆரம்பித்து விட்டாயா? இதோ பார் சாரு… கவிதைன்னாலே எனக்கு அலர்ஜி…” 

“இப்போது நான் கவிதை சொல்லவா… வேண்டாமா?”

“அந்தக் குறை உனக்கெதற்கு… சொல்லு…”

“கோபுரத்தின் மாடங்களில் 
கூடுகட்டி வாழ்கின்ற… 
புறாக்களை நின்று பார்க்க 
பொழுதுண்டோ எந்தனுக்கு…?” 

“பரவாயில்லையே… நன்றாக இருக்கிறதே… நான் கிருஷ்ணனின் கவிதையைப் படித்துவிட்டு கதி கலங்கிப் போயிருந்தேனா… அந்த நினைவில்… உன் கவிதையையும் கலாய்த்து விட்டேன்…”

“இன்னும் சொல்லவா…?” 

“சொல்லு…”

அவள் ஆர்வமாய் சொல்வதை ரசித்தபடி, அவன் அனுமதி கொடுக்க… அவள் உற்சாகமாய் சொல்ல ஆரம்பித்தாள். 

“இதமான இரவினிலே… 
இணையான உன்னுடனே… 
நிலவொளியில் சோறுண்ணும் 
நினைவுண்டோ எந்தனுக்கு…?” 

அவன்… அவளது கவிதையின் கருப்பொருளை… ஆழ்ந்து அனுபவித்துக் கேட்டான். 

“நீ பட்டணத்து பெண்ணாயிற்றே… உனக்கு எப்படி நிலாச் சோற்றைப் பற்றித் தெரியும்…?” 

“நீங்கள் ‘நிலாச் சோறு’ சாப்பிட்டிருக்கிறீங்களா…?”

“எங்கள் கிராமத்து வீடுகளை, எப்படிக் கட்டியிருப்போமுன்னு நீ நினைக்கிறாய்…? எங்கள் வீட்டில் முன் வராண்டாவை அடுத்து… நான்கு பக்கமும் வராண்டா வைத்து… நடுவில் ஒரு முற்றம் உண்டு… ராத்திரியில் சாப்பாட்டை நாங்கள் அங்கே உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். நான் சாப்பிடாத ‘நிலாச் சோறா’?”

“எங்கள் வீட்டில் மொட்டை மாடியில் குடும்பத்தோடு உட்கார்ந்து ‘நிலாச் சோறு’ சாப்பிடுவோம். பௌர்ணமியானால்… நைட் சாப்பாடு… மொட்டை மாடியில்தான்…” 

அன்று… வெகுநேரம்வரை தனஞ்ஜெயன் அவளருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்… சாருலதாவின் மனம் நிறைந்து கொண்டிருந்தான். சாருலதாவின் மனம் நிறைந்து… பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது… அவளது வீட்டருகே அவன் அவளை இறக்கி விட்டபோது விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டாள் சாருலதா. 

“வீட்டுக்கு வாங்களேன் தனா…” 

“வருகிற முறைப்படி… கட்டாயம் ஒருநாள் வருவேன்… இப்போது வேண்டாம்… போய் வரவா…?” 

“ம்ம்ம்…” 

“பை…” 

“பை…” 

சாருலதா – அழைப்பு மணியில் கை வைக்கும் முன்னாலேயே கதவு திறந்தது… அவளின் அண்ணி அஞ்சலி… கண்களில் ஓர் எச்சரிக்கையை உணர்த்திய வாறு நின்றிருந்தாள்… 

“அண்ணி…’ 

“ஸ்ஸ்.. சாரு… வீட்டில் எல்லாரும் உன்மேல் கோபமாய் இருக்காங்க…” 

“ஏன்… என்ன விசயம்…?” 

“என்ன விசயமா…? உன் ஸ்கூட்டி எங்கே…? நீ யாருடனோ பைக்கில் வந்து வாசலில் இறங்குகிறாயே அவன் யார்…? உன் ஆஃபீஸ் விட்டு நான்கு மணி நேரம் ஆகிறது… இருட்டி… இவ்வளவு நேரம் ஆகும் வரை… நீ எங்கே போயிருந்தாய்…?” 

சாருலதா… கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தாள். குடும்ப சபை கூட்டப்பட்டது. அவள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டாள். 

அத்தியாயம்-10

நினைவினிலே கலந்தவனே…
நீயின்றி நானில்லை 

ரமணன் கோபமாக தங்கையை உறுத்துப் பார்த்தான். சாருலதா மெளனமாக… ஆனால்… ஒரு திடத்துடன் நிமிர்ந்து நின்று, அவன் பார்வையை எதிர் கொண்டாள். அவர்கள் இருவரையும் பெற்ற தகப்பனான கங்காதரனின் கண்களில்… மகளின் நிமிர்வு பட்டது. அவர் யோசனையுடன் மனைவியைப் பார்த்தார்… கண்களில் கலக்கத்துடன் மகளைப் பார்த்தாள் மேகலா. 

“ஏன் லேட் சாரு…?” 

“கோயிலுக்குப் போயிருந்தேன்ம்மா…”

“இவ்வளவு நேரமாகவா சாமி கும்பிட்டாய்…?”

“சாமி கும்பிட்டுவிட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்… நேரமாகி விட்டது…”

மேகலாவின் பார்வை… கணவனின் பார்வையைச் சந்தித்து மீண்டது. கங்காதரனின் முகத்தில் கோபச் சிவப்பு உதயமாவதைக் கண்டவள்… பதற்றம் கொண்டாள். 

“யாருடன் பேசிக் கொண்டிருந்தாய் சாரு…?” 

“என்னைக் கொண்டு வந்து வாசலில் இறக்கிவிட்டுப் போகிறாரே… அவருடன்தான் பேசிக் கொண்டிருந்தேன்…” 

ரமணன் தங்கையைப் பார்த்து பல்லைக் கடித்தபடி அவளருகில் வேகமாய் நகர முற்பட… அஞ்சலி அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள். 

“பொறுங்க… அத்தை விசாரித்துக் கொண்டு இருக்காங்கல்ல… அப்புறமும் நீங்கள் ஏன் பாய வேண்டும்…?” 

“அவள் திமிராய் பதில் சொல்வதைக் கேட்டாயா… இல்லையா…? இதைக் கேட்டுக் கொண்டு பொறுமையாய் நிற்கச் சொன்னால்… என்னால் அது முடியாது…” 

“சாருலதா திமிர் பிடித்தப் பெண்ணில்லை…” 

“அவள் பேசுவதைக் கேட்ட பின்னாலுமா இப்படிச் சொல்கிறாய்…?” 

“அவள் மனதிலிருப்பதை, அவள் சொல்கிறாள்…” 

“எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாமா…?” 

“இன்னும் அவள் முழுதாய் சொல்லவில்லைங்க.. “

“இன்னும் சொல்ல என்ன இருக்கிறது…?” 

“நிறைய இருக்கிறது… அவளைப் பேசவிடுங்க…” மகனை, மருமகள் அடக்கிக் கொண்டிருப்பதைச் செவிமடுத்துக் கொண்டே… மகளை நிதானமாய்… ஆனால் – ஆழமாய் ஒரு பார்வை பார்த்தார் கங்காதரன். 

“உன்னை வாசலில் வந்து விட்டுவிட்டுப் போகிறவர் யாரும்மா…?” 

“தனஞ்ஜெயன்… என்னுடைய சீனியர் ஆபிஸர்…”

“ஓ… உன் ஸ்கூட்டி என்ன ஆனது…? ரிப்பேரா…?”

“இல்லைப்பா… அது ஆஃபீஸ் ஷெட்டிலேயே இருக்கிறது… நானும்… தனாவும் இன்றைக்கு கோயிலுக்குப் போவதாய் முடிவு பண்ணியதால்… நான் அவருடைய வண்டியிலேயே வந்து விட்டேன்…” 

மேகலா, உதட்டைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டாள். மகளை நன்கு புரிந்து வைத்திருந்தவளுக்கு, அவள் ஒரு முடிவுடன் பதில் சொல்வது நன்றாகப் புரிந்து விட்டிருந்தது. 

“தனஞ்ஜெயன் உன் நண்பரா…?” கங்காதரன் கூர்மையான பார்வையுடன் வினவினார். 

அவர் இந்தக் காலத்து இளைய தலைமுறையினரைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர்களின் உலகமே வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர். எனவே… கவனமாய் வார்த்தைகளைக் கோத்துக் கேள்வி கேட்டார்.

“இல்லைப்பா… அவர் அதற்கும் மேலே…”

“நேரடியாய் பதில் சொல்லும்மா…” 

“நான் தனஞ்ஜெயனைக் காதலிக்கிறேன்ப்பா… அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறேன்…” 

வீடு அதிர்ச்சியுடன் அமைதியானது. சாருலதாவின் மனதில் காதல் இருக்கும் என்பதை அறியாதவர்களாய் அதுநாள் வரை இருந்தவர்கள்… இன்று அவள் வாய் மொழியிலேயே அதைக் கேட்கவும்… சிலையாகிப் போனார்கள். 

சாருலதாவின் சுபாவம் அப்படிப்பட்டது. அவள் காதலில் விழுவாள் என்று கொஞ்சம்கூட அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை. எதையும் புத்திசாலித் தனமாய் எதிர்நோக்கிக் கையாளும் பெண் மனதில் காதல் இருப்பதை அறிந்ததும்… அவர்கள் தாளமாட்டாமல் அவளிடம் இதைக் கேட்டே விட்டார்கள். 

“ஏனம்மா… காதலித்தால்… அந்த பெண் புத்திசாலியில்லையென்று அர்த்தமா…? இல்லை… புத்திசாலிகள் காதலிக்கவே கூடாதுன்னு நீங்க சொல்கிறீங்களா…?” அன்று அவள் எதிர்க்கேள்வி கேட்டாள். 

“நீ இந்த வீட்டுப் பெண் சாருலதா…”

“அதனால் என்னம்மா…?” 

“எங்களிடம் மறைத்து நீ இப்படி ஒரு காரியத்தைப் பண்ணலாமா…?” 

“மறைக்க வேண்டும்ன்னு நினைத்ததே இல்லைம்மா. சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் இதுநாள்வரை வரவில்லை. அதனால் நான் சொல்லவில்லை. இப்போது சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…” 

“நீ சொன்னால்… அதை நாங்கள் உடனே கன்ஸிடர் பண்ணிவிடணுமா…?” 

“நான் அப்படிச் சொல்லவில்லையே அண்ணா… ஆனால், நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக கன்ஸிடர் பண்ணாமல் விடவும் வேண்டாமே…” 

“சாரு… உன்மேல் எங்களுக்கு அக்கறை இருக்கக் கூடாதா…?” 

“கூடாதுன்னு நான் சொல்வேனா அண்ணி…? அதே சமயம் நான் சிறு குழந்தையில்லை. என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பக்குவம் எனக்கு இருக்கிறது என்பதை நீங்களும் புரிந்து கொள்ளணும்.” 

“உன்னை மற்றவர்கள் புரிந்துகொள்ளணும்னுதானே இப்போதும் நீ சொல்கிறாய். இந்த வீட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையே…” 

“இந்த வீட்டின் கௌரவம் பாதிக்கும்படி நான் எதுவும் செய்யவில்லையே அம்மா..” 

“நீ பிறந்தது முதல் உனக்கு எது நல்லது… எது கெட்டதுன்னு… பார்த்துப் பார்த்துச் செய்தவர்கள் நாங்கள்… எங்களுக்கு உன் கல்யாணத்தைத் தீர்மானிக்கும் உரிமை கிடையாதா…?”

“உரிமைப் பிரச்சினையைக் கிளப்ப… இது ஒன்றும் சொத்துப் பிரச்சினை இல்லைப்பா… வாழ்க்கைப் பிரச்சினை… என் மனதுக்குப் பிடித்தவரோடு நான் வாழணும்னு நினைப்பது தப்பா…?” 

“உன் மனதுக்குப் பிடித்திருந்தால் மட்டும் போதுமா சாரு…?” 

“வேறு என்னம்மா வேண்டும்…?” 

“கல்யாணம் என்பது விளையாட்டுச் சமாசார மில்லை… அது ஆயிரம் காலத்துப் பயிர்… எடுத்தேன்… கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிவிடக்கூடாது…”

“இதை வேறு விதமாகவும் சொல்லலாம் அம்மா…”

‘எப்படி…?’ என்று கேள்வி கேட்காமல் அவளுடைய குடும்பம் அவளை முறைத்துப் பார்த்தது… 

நிச்சயம் அவள் விதண்டாவாதமாய் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுவாள் என்பதை அறிந்தவர்களாதலால்… பல்லைக் கடித்துக் கொண்டு… அவளைப் பார்த்தார்கள். 

“திருமணம் என்பது… இருமணம் இணையும் விசயம். ஆயிரம் காலத்துப் பயிர்களாய் வாழ வேண்டிய வாழ்க்கையை கடமைக்காக அவர்கள் வாழ்ந்து விடக் கூடாது…” 

கங்காதரன்… கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் அமைதியாய் நின்றார். பின் மகளைப் பார்த்துக் கேட்டார். 

“இப்ப முடிவாய் நீ என்னதான் சொல்கிறாய் சாரு?”

“கல்யாணம் என்ற ஒன்றைப் பண்ணிக் கொள்வதாக இருந்தால்… தனஞ்ஜெயனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்.” 

“அவரின் ஊர் எது…”

“தேனி பக்கத்தில் ஒரு கிராமம்…’ 

“எதற்கும் அவரை… நாளைக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்… அவருடன் பேசிவிட்டு என் முடிவைச் சொல்லுகிறேன்…” 

கங்காதரன் விருட்டென்று சென்றுவிட… குடும்ப சபை… அப்போதைக்கு கலைந்தது. 

சாருலதாவிற்கு கண்கள் கலங்கின. காதலிப்பது அவ்வளவு பெரிய குற்றமா…? ஆள் மாற்றி ஆள் எத்தனை கேள்விகளைக் கேட்டு விட்டார்கள்! 

அவள் மௌனமாய் சோபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொள்ள… அவளது கையை ஒரு பிஞ்சுக் கை பற்றி இழுத்தது. நிமிர்ந்து பார்த்தாள். அவளது அண்ணனின் குழந்தை ஆர்த்தி நின்றிருந்தது. 

“ஏன் அழுகிற அத்தை…?” 

“ஒன்றுமில்லைடி செல்லம்…”

சாருலதா, கண்ணைத் துடைத்துக் கொண்டு குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். 

அது அவளது முகத்தை அண்ணாந்து பார்த்தது. 

“என்ன ஆர்த்தி…?” 

“நீ பாட்டியிடம் கேட்காமல் சாக்லெட் தின்றாயா…?”

“இல்லையே…” 

“எதையாவது உடைத்து விட்டாயா…?”

“இல்லைடா கண்ணம்மா…” 

“ஹோம் வொர்க் செய்யவில்லையா…?” 

“எனக்கு ஹோம் வொர்க்கெல்லாம் கிடையாது… எல்லாம் ஆபீஸ் வொர்க்கத்தான். ஆமாம்… எதற்கு… என் கண்ணுக்குட்டி… அத்தையை இத்தனை கேள்வி கேட்டுதாம்? 

“அப்புறம் ஏன் அத்தை… அம்மா… அப்பா… பாட்டி… தாத்தா… எல்லாரும் உன்னையே திட்டினாங்க…?” 

‘என்னவென்று பதில் சொல்வது…?’ சாருலதா கண்களில் துளிர்த்த கண்ணீரோடு… குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 

– தொடரும்…

– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *