நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2023
பார்வையிட்டோர்: 4,664 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7

நெருப்பூற்றாய் நின்றவனே…
நீயின்றி நானில்லை… 

தனஞ்ஜெயன் முரட்டுத்தனமாய் எதையும் எதிர் நோக்குபவன்… அது அவனது இரத்தத்தில் ஊறியது… அவனால் திடீரென்று தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை. 

“சாரு… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது… நீ லஞ்ச் சாப்பிட்டுவிட்டு வாயேன் பேசலாம்…” என்று ஒருநாள் பொறுக்க முடியாமல் அவன் சொல்லி விட்டான். அவ்வளவுதான்… சாருலதாவிற்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது. 

“அப்படின்னா… எனக்கு மட்டும் வேலை யில்லையா…?” 

“இது முக்கியமான வேலைம்மா…” 

“என் வேலை மட்டும் முக்கியமானதில்லையா…?”

“இதை அவசரமாய் நான் முடித்தாக வேண்டும்…”

“எனக்கும் அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன…” 

சாருலதா புத்திசாலிதான். ஆனால்… என்று அவள் காதல் என்னும் மாயவலையில் விழுந்து தொலைத்தாளோ… அன்றே தன் சுயத்தை தொலைத்து விட்டாள். அவன் மேல் பைத்தியமாகி விட்டாள். 

தனஞ்ஜெயன்… தான் காட்டும் பிரியத்தை புரிந்து கொள்ள மறுக்கிறான் என்ற கோபம் மட்டுமே அவளுக்குள் இருக்க… அவளது செவிகள் தனஞ்ஜெயன் கூறிய விளக்கத்தைக் கேட்க மறுத்தன. அவள் அவனுடன் பதிலுக்குப் பதில் பேசி மல்லுக்கு நின்றாள். ஓர் அளவிற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாமல் தனஞ்ஜெயனின் கோபம் கரை உடைந்தது. அவன் அலுவலகம் என்பதையும் மறந்து அவளிடம் சீறினான்.

“ஏய்ய்… இப்ப என்னடி சொல்கிற…?”

“தனா… நான் என் வேலைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு… உங்களைத் தேடி எவ்வளவு ஆவலாய் வந்திருக்கிறேன் தெரியுமா…?” 

“உன்னை யார் வரச்சொன்னது…? நானா வரச் சொன்னேன்…? போ… போய் வேலையைப் பாரு…”

அவன் கோபத்துடன் நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்த வேகத்தில் அவனது கோபத்தின் பரிமாணம் தெரிந்தது. சாருலதா சட்டென்று தன் இருக்கைக்குப் போய்விட்டாள். அவனது புறக்கணிப்பைக் கண்கூடாய் கண்டவளின் மனம் வலித்தது. 

‘எப்படிப் பேசிவிட்டான்… இனி இவன் முகத்தில் விழிக்கவே கூடாது…’

அவள் மனதில் எழுந்த வைராக்கியத்திற்கு ஆயுள்… சில மணி நேரம்கூட நீடிக்கவில்லை. தூக்கத்திலிருந்து விழிகள்… விழித்து எழும்போதே… ‘எப்போது அலுவலகம் போவோம்… எப்போது அவன் முகத்தில் விழிப்போம்’ என்று மனம் பரபரக்க… சாருலதா… தன் மனக்குதிரைக்கு கடிவாளமிட முடியாமல் தவித்துப் போனாள். 

அவன் பக்கம் திரும்பவே கூடாது என்று பிரயாசை பட்டதெல்லாம் வீணாகிவிட… அரைநாள் தாண்டு முன்னால் அரை உயிராய் ஆகிப்போனாள். 

அவன் முகம் பார்க்காமலிருக்கவும் முடியாமல்… அவனைத் தேடிச் சொல்லவும் மனமில்லாமல் சோர்ந்து போய் மேஜை மேல் தலை கவிழ்ந்த போது… அவளருகே… அவன் குரல் ஒலித்தது. 

“என்ன தூங்கு மூஞ்சி… ஆஃபீஸ் நேரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறாயே… இப்படித்தான் நீ வேலை செய்கிறாயா? உனக்குத் தண்டச் சம்பளம்தான் கொடுக்கிறாங்களா…?” 

‘அவனா பேசுவது…?’ சாருலதா முகம் மலர்ந்து நிமிர்ந்தாள். அவனைக் கண்களால் பருகியவாறு… கண் சிமிட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை, நிதானமாய் பார்த்தபடி… எதுவும் நடக்காதது போல் அவள் எதிரே அமர்ந்தான் அவன். 

“என்னடா… உச்சிவெயில் நேரத்தில் நம் உயிரை எடுக்க வருவாளே… ஆளைக் காணோமேன்னு நானே வந்தேன்… ஏண்டி வரவில்லை…?” எதுவுமே நிகழாதது போல் அவன் சாதாரணமாகக் கேட்டான். 

“தனா…” சாருலதா அழ ஆரம்பித்து விட்டாள். 

“ஸ்ஸ்… இது ஆஃபீஸ்… உன்னிடம் எத்தனைத் தடவை தான் சொல்வது. இப்படி அழுமூஞ்சியாய் இருக்காதே சாரு…”

“நீங்கள் மட்டும் என்னை அழ வைக்கலாமா…?”

“எனக்கென்ன அப்படி ஒரு வேண்டுதலா இருக்கிறது…? சொன்ன பேச்சைக் கேளுன்னு சொன்னால் நீதான் கேட்க மாட்டேன் என்கிறாயே…?” 

“நீங்கள் மட்டும், நான் சொன்னதை கேட்க மாட்டிங்க… நான் மட்டும் நீங்கள் நில்லுன்னா நிற்கணும்… உட்காருன்னா உட்காரணும்… இது என்ன அநியாயம்?”

“இப்ப வாயை மூடுகிறாயா…? இல்லை… நான் எழுந்து போய் விடவா…?” 

தனஞ்ஜெயன் எரிச்சலுடன் அதட்டியதும்… சாருலதா மெளனமாகிவிட்டாள். ஆனால், அவளது மனம் சிணுங்கிக் கொண்டிருப்பதை, அவளது முகம் காட்டியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனஞ்ஜெயனின் மனம் கனிந்தது. 

“ஏண்டி… உன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு என்னையும் கஷ்டப்படுத்துகிறாய்? சொன்னால் ஒரு சொல்லில் புரிந்து கொள்ள மாட்டாயா…?” 

“நீங்கள் மட்டும் என்னைப் புரிந்து கொள்ளமாட்டீங்க… என்னை மட்டும் புரிந்துகொள்ளவில்லைன்னு குற்றம் சொல்வீங்க…” 

சாருலதா யோசிக்காமல் தன் மனக்குமுறலை மீண்டும் கொட்டிவிட… வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. தனஞ்ஜெயன் மூர்க்கமானான். 

“உன்னைத் தேடி வந்தேனே… என்னைச் சொல்ல வேண்டும்… நீ திருந்தவே மாட்டாய்டி…” 

“திருந்துமளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்…?”

“சும்மா எதிர்த்து… எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த… அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்… ராஸ்கல்… என்னை என்னவென்று நினைத்தாய்…? நீ காதலித்து விட்டால்… நான் வேலை வெட்டி இல்லாமல் உன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டுமா… அதற்கு வேறு ஆளைப் பாரு… காதலிக்கிறாளாம்… காதல்… விளக்கெண்ணை…”

தனஞ்ஜெயன் போக முற்பட… சாருலதாவின் மனம் பதைத்தது… ‘போகாதே…’ என்று அவனது கை பிடித்துத் தடுக்க அவள் மனம் துடித்தது… அவளது பார்வையில் அந்த இறைஞ்சல் தெரிய… தனஞ்ஜெயன் போக முடியாமல் நின்றான். 

“இப்ப என்னடி சொல்கிற…? நான் போகவா… இல்லை உட்காரவா…?” 

சாருலதா எழுந்து அவனுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டுவிட்டு… தன் இடத்தில் வந்து அமர்ந்தாள்… அவளை முறைத்துக் கொண்டே தனஞ்ஜெயன் அவள் எதிரில் அமர்ந்தான்… அவள் மௌனமாக மேஜை மேலிருந்த கம்ப்யூட்டரின் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சாரு…” 

“….”

“உன்னிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்…” 

“…”

“ஏன்… என்னிடம் பேசமாட்டாயா…?”

“உங்களுக்குத்தான் நான் பேசினால் பிடிக்காதே…”

“அப்படி நீயாய் கற்பனை பண்ணிக்கொண்டால், நான் அதற்குப் பொறுப்பாக முடியாது..” 

“நீங்கள் பொறுப்பில்லாமல் இருக்கத்தானே விரும்புகிறீங்க… தடைகளில்லாமல்… சுதந்திரமாய் வாழணும்னு பிரியப்படறீங்க… உங்களுக்கு நான் தடை போட வில்லை.” 

“அப்படி என்ன பொறுப்பை நான் தட்டிக் கழித்து விட்டேன்…?” 

“காதல் என்ற பொறுப்பில் நீங்கள் கமிட் ஆகிக்கொள்ள விரும்பவில்லை தனா…” 

“முட்டாள் போலப் பேசாதே… உன்னிடம் ஆயிரம் தடவை நான் சொல்லி விட்டேன்… உனக்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவத்தை இதுவரை வேறு யாருக்கும் நான் கொடுத்ததில்லை. உன்னிடம் பேசியது போல் பொறுமையாக வேறு யாரிடமும் நான் பேசியதில்லை… நீ இருக்குமிடம் தேடி நான் வந்தது போல்… வேறு யாரையும் நான் தேடிப் போனதில்லை…” 

“நேற்று மட்டும் ஏன் அப்படிச் சொன்னீங்க…?” 

“ச்சு… அதையே பிடித்துக் கொண்டு தொங்காதே..”

“நேற்று நீங்கள் பேசியபோது என்மனம் வலித்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா…?” 

“அதை விட்டு விடுன்னு சொல்கிறேனில்ல…” 

“ஏன் தனா… அதற்கு நீங்கள் விளக்கம் சொல்ல வேண்டாமா…? இல்லை… விளக்கம் கேட்கும் உரிமைதான் எனக்கு இல்லையா…?” 

“பெரிய கத்திரிக்காய் உரிமையைக் கண்டுவிட்டாய்… உனக்கு விளக்கம் சொல்லணும்கிற அவசியம் எனக்கு இல்லை… நான் இப்படித்தான் இருப்பேன்… புரிந்ததா… பெரிதாய் விளக்கம் கேட்க வந்துவிட்டாள்… விளக்கெண்ணை…” 

தனஞ்ஜெயன் கோபத்துடன் எழுந்து சென்றுவிட – விக்கித்துப் போய்… நெடுநேரம் நெடுமரமாய் அசையாமல் அமர்ந்திருந்தாள் சாருலதா. 

அத்தியாயம்-8 

நெஞ்சத்தில் குடியிருப்பவனே…
நீயின்றி நானில்லை… 

‘அவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஆற்றாமையாக இருந்தது சாருலதாவிற்கு. ஒரு வினாடி கூட அவள் தரப்பு நியாயத்தைச் சொல்ல அவள் வாய் திறக்கக்கூடாது என்பது அநியாயம் இல்லையா…? அவள், அவனைக் காதலிக்கிறாள் காதலிக்கிறாள் என்பதற்காக… கண்ணுக்குத் தெரியாத பிரம்பை கையில் வைத்துக் கொண்டு… அவளை சிறு குழந்தைபோல் மிரட்டி வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி…? ‘நான் மனம் வைத்தால் உன்னிடம் வந்து பேசுவேன்… எனக்கு கோபம் வந்து விட்டால்… உன்னைத் தண்டிப்பேன்’ என்று எந்தக் காதலனாவது சொல்லுவானா…? 

ஆனால், தனஞ்ஜெயன் அதைத்தான் அவளிடம் சொன்னான்… அவன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்று யோசித்து யோசித்து சாருலதா ஓய்ந்து விட்டாள். 

இயல்பாக வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூடப் பேச முடியாமல் மனம் புழுங்கினாள். எந்த நேரம் அவன் கோப முகம் காட்டுவான்… எந்த நேரம் அவன் சிரிப்பு முகம் காட்டுவான் என்பதை அறிய முடியாமல் மனம் தடுமாறினாள். 

ஒவ்வொரு நாள் இரவும்… இனி அவனுடன பேசவேகூடாது… அவன் நிழலிருக்கும் திசையின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது என்று மனதிற்குள் வைராக்கியம் வைத்துக் கொண்டு உறங்குவாள். மறுநாள் அவன் முகத்தைக் கண்டதும்… அந்த வைராக்கியம் காற்றோடு கலந்து மறைந்து விட… சூரியன் போகும் திசையெல்லாம் திரும்பும் சூரியகாந்தி பூப்போல்… அவனது நடமாட்டம் இருக்கும் திசைகளில் விழி பதித்து வேலை செய்வாள். 

கிருஷ்ணனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் சுரக்கும். 

“ஏண்டா இப்படி இருக்கிறாய்…?” 

“எப்படி இருக்கிறேன்…” 

“உன்னைக் காதலிக்கும் பெண்ணின் மனதை இப்படியா நோகடிப்பாய்…?” 

தனஞ்ஜெயன் கண்டிப்புடன் கிருஷ்ணனைப் பார்த்து ஒருநாள் தெளிவாகச் சொல்லி விட்டான். 

“கிருஷ்…. இது எனக்கும்… அவளுக்கும் இடையில் நடக்கும் விவகாரம். நீ ஊடே வராதே…” 

“டேய்… நான் உன் ஃபிரண்டுடா…” 

“அவள் என் காதலி… எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்… இடையில் வர உனக்கு மட்டுமில்லை… யாருக்குமே உரிமையில்லை…” 

“தனா…” 

“நட்புக்கென்று ஒரு எல்லைக் கோடு இருக்கிறது… நீ அதைத் தாண்டி வரப் பார்க்காதே… காதலுக்கு எல்லைக் கோடே கிடையாது. அவளைத் துன்புறுத்தவோ… இல்லை தொலைத்துக்கட்டவோ… எனக்கு முழு உரிமை உண்டு… ஒன்றைத் தெரிந்து கொள்… நான் ‘செத்து விடு’ என்று விசத்தைக் குடுத்தால்… அவள் சந்தோசமாய் அதை வாங்கிக் குடித்துவிட்டு செத்து விடுவாள்…”

“அந்த அளவிற்கு அவள் உன்னைக் காதலிக்கிறாள் என்ற கர்வம்தானேடா… உன்னை இப்படிப் பேசவைக்கிறது… வேண்டாம் தனா… அவளை அளவுக்கு மீறித் தண்டிக்காதே…”

“அதைச் சொல்ல நீ யார்…? நான் ‘சா’ என்றால் அவள் செத்து விடுவாள் என்பது மட்டும்தானே உனக்குத் தெரியும்… அவள் செத்த மறு நொடியில் அவளுடனே சேர்ந்து நானும் உயிரை விட்டுவிடுவேன்… இது அவளுக்கும் தெரியும்…” 

“டேய்… ஏண்டா… இப்படிப் பேசுகிறாய்?”

“போடா… போய் வேலையைப் பார்… இனி… எங்கள் இருவருக்குமான பிரச்சினைகளில் நீ தலை கொடுக்காதே…” 

கிருஷ்ணன் முகம் மாறிப்போனான்… அதற்குமேல் அவனால் சாருலதாவிற்கு ஆதரவாக தனஞ்ஜெயனிடம் பேச முடியவில்லை. 

ஆனால்… ஒருவாரமாய் சாருலதாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் அவளை அலைக்கழித்த தனஞ்ஜெயன் மறுநாள்… தானாக அவளைத் தேடிப் போனான்… அவள் எதிரில் கோபமாய் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். 

யாரோ எதிரில் அமர்வதை உணர்ந்து… கம்ப்யூட்டரின் திரையிலிருந்து பார்வையை விலக்கிய சாருலதா… ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளானாள்… அவளுடைய தனஞ்ஜெயன் அவளைத் தேடி வந்துவிட்டானா…? ஒரு வாரமாய் முகம் திருப்பிக் கொண்டு அவளைத் தண்டித்தவன்… இன்று அவளுக்காக மனம் இரங்கி விட்டானா…? 

“தனா… இந்த அதிகப்படி பனிஷ்மென்ட் அவசியம் தானா? நான் இதைத் தாங்கி நிற்பேனா…?” என்று கண்ணீருடன் கேட்டாள். 

தனஞ்ஜெயனின் இறுக்கமான முகத்தில் லேசான இணக்கம் வந்து போனது… அவன் அவளது கண்ணீர் குரலைக் கவனிக்காதவன் போல… கண்டிப்பான தொனியில் வினவினான். 

“கிருஷ்ணனிடம் நீ என்ன சொன்னாய்…?” 

“ஒன்றும் சொல்லவில்லையே…!” 

“அவனிடம் எனக்குத் தூது சொல்லி அனுப்பினாயா…?”

‘இவன் எனக்காக… என்னைத் தேடி வரவில்லை… என்மேல் குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்க வந்திருக்கிறான்…’ சாருலதாவின் உணர்வுகள்… தண்ணீர் பட்டப் பாலாய்… பொங்குவதை நிறுத்தி அடங்கின. 

அவள் நிமிர்ந்து அவன் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தாள். 

“நீங்கள் மாறவே மாட்டீங்களா தனா…?” 

“உனக்காக நான் மாறவேண்டிய அவசியம் எனக்கில்லை…” 

“ஓகே… அந்த அவசியம் எனக்கு மட்டுமே இருந்து விட்டுப்போகட்டும். ஆனால்… நீங்களாக எதையாவது நினைத்துக் கொண்டு என்னிடம் கேள்வியைக் கேட்கும் வேலையை இனி விட்டுவிடுங்க…”

“நானாக கேள்வி கேட்கிறேனா…? உன் தொண தொணப்பிலிருந்து தப்பித்து நிம்மதியாக அபார்ட்மென்டிற்குப் போனால்… அங்கேயும் அவன் உன் பேச்சைத்தான்… ஒரு மனிதனுக்கு எப்படியிருக்கும்…?” 

“அது உங்களுக்குத்தான் தெரியும்… எனக்குத் தெரியாது… எனக்குத் தெரிய வேண்டியது வேறொன்று… இப்போதைய உங்களின் கோபம் எதற்காக தனா…? கிருஷ்ணனிடம் நான் தூது விட்டுவிட்டேன் என்று நினைத்துக் கோபப்படுகிறீங்களா…? இல்லை… கிருஷ்ணன்… என் நினைவை உங்கள் மனதில் உண்டு பண்ணுகிறார் என்று கோபப்படுகிறீங்களா…?” 

“உன் புத்தி இப்படி குதர்க்கமாகத் தாண்டி யோசிக்கும்…” 

“உங்களுக்குக்கெல்லாம் பெண்கள் யோசித்தால் பிடிக்காதே…” 

“என் கேள்விக்கு முதலில் பதில் சொல்…” 

“உங்களுக்கும்… எனக்கும் இடையில் தூது எதற்கு? என் காதலையே உங்களிடம் நேரடியாய் சொன்னவள் நான். என் கோபதாபங்களை சொல்லவா… ஊடே ஆள் வைக்கப்போகிறேன்…? நான் கிருஷ்ணனிடம் மரியாதை வைக்கபோகிறேன்…? அவர் உங்கள் ஃபிரண்ட், என்பதற்காக! மற்றபடி, அவரிடம் ‘ஹலோ…’ என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு வார்த்தை பேசியதில்லை…”

தனஞ்ஜெயனின் இதழ்கள் வளைத்து சிரிப்பைச் சிந்தின. அவன் அவளிடம் லேசாகக் கண்சிமிட்டினான்.

“தனா…” அவள் பிரமித்து நோக்கினாள்…

“ஈவினிங் வெளியே போகலாமா…?”

“நிஜமாகவா…?” 

“நிஜமாகத்தான்…” 

“இத்தனை நாளில்… முதன் முதலாய் என்னை வெளியே அழைத்துப் போகிறேன்னு சொல்லியிருக்கீங்க…! எனக்கு எப்படியிருக்கிறது தெரியுமா…?” 

“அது உனக்குத்தானே தெரியும்…” 

“அது சரி… பதிலுக்குப் பதில் சொல்லாவிட்டால்.. தனஞ்ஜெயனின் பெருமை என்னாவது…? ம்ம்… எங்கே அழைத்துக் கொண்டு போவீங்க…?” 

“அதை நீயே சொல்லு…” 

“கோயிலுக்குப் போகலாமா…?” 

“நினைத்தேன்… நீ இதைத்தான் சொல்வாய் என்று…”

“முதன் முதலாய் வெளியே போகிறோம்… கோயிலுக்குப் போவதுதான் முறை…”

அன்று மாலை… அவனுடைய டி.வி.எஸ். அப்பாச் சியில் ஏறி… அவன் முதுகைப் பற்றிக் கொண்டு… அவன் பின்னால் அமர்ந்தபோது… சிறகேயில்லை… தான் பறப்பதாக உணர்ந்தாள் சாருலதா. நீலவானம்… கண்முன் விரிய… அவனது வண்டி… சாலையின் போக்குவரத்தில் கலந்தது. 

‘இவன் என்னுடையவன்…’ புயலின் மனதை வசப்படுத்திக் கொண்ட நிறைவில் – பூவின் இதயம் மகிழ்ந்தது. 

கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்திப் பூட்டி விட்டு தனஞ்ஜெயன் வந்தான். அவனுடன் இணைந்து சாருலதா… பெருமையாய் உணர்ந்தாள். 

“அபிஷேகக் கூடை வாங்கிக்கலாம் தனா…”

“வாங்கிக்க…” 

“பூ…?” 

“அதைக்கூட என்னிடம் கேட்கணுமா…? வாங்கிக் கொள்…” 

தனஞ்ஜெயன் இயல்பாய் பூக்காரப் பெண்மணியிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தான். 

அவனுக்குத் தெரியாது. அவன் கோடி ரூபாய் கொடுத்து வைர நகையை வாங்கிப் பரிசளித்து இருந்தாலும் இந்த அளவிற்கு சாருலதா மகிழ்ந்து போக மாட்டாள் என்பது. பூ என்பது… மனதிற்குப் பிடித்த ஆணின் கையில் பெண் வாங்கத் தவம் செய்யும் ஒரு மங்கலப் பொருள்… உரிமையுள்ளவன் மட்டுமே ஒரு பெண்ணிற்கு பூ வாங்கிக் கொடுக்க முடியும். உடந்தைப்பட்டவனிடம் மட்டுமே… அந்தப் பெண்… பூவை வாங்கிக் கொள்வாள்… அதை சாருலதா செய்தாள்.

– தொடரும்…

– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *