நீயின்றி நானில்லை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 8,701 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

கனலாக காய்பவனே… 
நீயின்றி நானில்லை… 

“பெண்களைத் தாய்க்குலம்ன்னுதான் பொதுவாகச் சொல்வார்கள் தனஞ்ஜெயன்… தாயை மதிக்கும் நீங்கள்… தாய்க்குலத்தை வெறுப்பவராக இருக்க முடியாது…”

“இது இப்போது தேவையில்லாத விவாதம் சாருலதா…”

“அதுவும் உண்மைதான்… எனக்குத் தேவை நீங்கள்தான்…” 

“நான் கிருஷ்ணனின் நண்பன்…” 

“ஆனால்… என்னுடைய காதலன்…”

“நான் உங்களைக் காதலிக்கவில்லை… அவன்தான் உங்களைக் காதலிக்கிறான்…” 

“நானும் அவரைக் காதலிக்கவில்லை… உங்களைத்தான்… உங்களை மட்டும்தான் காதலிக்கிறேன்…” 

“காதலுக்கும் எனக்கும் காத தூரம்ம்மா…” 

“மீத தூரத்தை நாம் சேர்ந்து கடக்கலாம்…”

“போகாத ஊருக்கு வழி தேடாதீங்க…”

“நான் போக வேண்டிய ஊர் அது ஒன்றாக மட்டுமே இருக்கும்போது… அந்த ஊருக்குத்தானே நான் வழிகேட்பேன்…”

“இது வீண் பிடிவாதம்…” 

“இது மட்டும்தான் என் வாதம்…” 

“முடிவாக நீங்கள் என்னதான் சொல்லுகிறீங்க…?”

“என் முதலும்… முடிவும்… நீங்கள் மட்டும்தான்னு சொல்கிறேன்…” 

தனஞ்ஜெயன் பேச்சிழந்தான். அவளது அசையாத மன உறுதியைக் கண்டு மலைத்தான். ‘என்ன மாதிரியான அன்புப்பிடி இது என்று திகைத்தான்…!’ 

“அப்படி என்னதான்… என்னிடம் இருக்கிறது…?” 

எரிச்சலுடன் இந்தக் கேள்வியைக் கேட்டவனின் முகத்தை… இரு முழங்கைகளையும் மேஜைமேல் ஊன்றி உள்ளங்கைகளில் முகத்தைத் தாங்கி… ஊன்றிப் பார்த்தாள் சாருலதா… 

“உங்களிடம் என்னதான் இல்லை தனஞ்ஜெயன்…? உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்கிற பெண்ணிடம்… உங்கள் நண்பனின் குணத்தை உயர்த்தி… உங்கள் குணத்தைத் தாழ்த்திச் சொல்கிறீங்களே… இந்த ஒன்றிலேயே நீங்கள் உயர்ந்துவிட்டீர்களே…” 

“ஏம்மா… உண்மையைத்தானே நான் சொன்னேன்…”

“அந்த உண்மை உங்களிடம் இருக்கிறது தனஞ்ஜெயன்… நான் யோக்கியனில்லைன்னு சொல்லவும் ஒரு மன தைரியம் வேண்டும்… அது உங்களிடம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நீங்கள்தான் யோக்கியன்…” 

‘இவள் என்ன மாதிரியான பெண்…?’ தனஞ்ஜெயன் நாற்காலியில் சரிந்து அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்தான். 

“உலகத்திலேயே நான் பொறுக்கின்னு சொல்கிறவனை கண்ணியவான் என்று கொண்டாடும் பிறவி நீங்களாகத்தான் இருக்க முடியும் சாருலதா…”

“நீங்கள் மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ என்ற புத்தகத்தைப் படித்ததில்லையா…?” 

“ஏங்க… நானே குடிப்பேன் என்கிறேன்… என்னைப் போய் காந்தியின் புத்தகத்தைப் படித்திருக்கிறாயான்னு கேட்டால் எப்படி…? படித்ததில்லை…” 

“ஒரு தடவை படித்துப் பாருங்கள்…” 

“இந்த நீதி போதனையை எல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள் சாருலதா… அதுதான் உத்தமம்… எனக்கு அட்வைஸ் கேட்பதென்றால் சிறு வயதிலிருந்தே அலர்ஜி. அட்வைஸ்… பண்ணி முகம் முறித்துக் கொள்ளாமல் வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்…”

“காந்தியின் ‘சத்திய சோதனை…’ புத்தகத்தில் நீதி போதனைதான் பண்ணியிருக்கிறார்ன்னு யார் சொன்னது…?”

“அப்படியா…! அவரே மகாத்மா… அவர் அதைத்தானே செய்வார் என்கிற அனுமானத்தில் சொன்னேன்…” 

“இல்லை… ‘சத்திய சோதனை’ என்பது அவருடைய சுயசரிதை… சின்னவயதில் அவர் அசைவம் சாப்பிட்டிருக்கிறார். அது முதல் அவர் செய்த சின்னச் சின்ன தவறுகள் வரை அத்தனையையும் வெளிப்படையாய் தன் சுய சரிதையில் எழுதியிருக்கிறார்… அதுதான் அவரின் மன தைரியம்…” 

“அசைவம் சாப்பிட மன தைரியம் வேண்டுமா? அவனவன்… அதை வகைவகையாய் வாங்கிச் சாப்பிடுகிறான்க… நீங்க இதைப் போய் பெரிதாய் பேச வந்துட்டிங்க…”

“என்ன தனஞ்ஜெயன்… இது… நீங்களும் மத்தவங்க போல பேசினால் எப்படி…?” 

“நான் ஊரோடு ஒன்றிப் போகாதவன்னு பெயர் வாங்கினவன்… என்னைப் பத்திப் தப்புத்தப்பாக புரிந்து வைத்திருப்பீங்களா…?” 

“சரி… அதை விடுங்க… காந்தி கதைக்கு வாங்க…” 

“ஏங்க… உங்களுக்கே இது நல்லாயிருக்கா… என் நண்பனின் காதல் கதையைச் சொல்ல வந்தவனை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து… இப்படி பிளேடு போடுகிறீங்களே… காந்தி கதையெல்லாம் எனக்கு எதுக்குங்க…?”

சாருலதா அவனை மௌனமாக முறைத்தாள்… அவளின் பார்வையின் அனல் தாங்காதவனாய் தனஞ்ஜெயன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி சமாதானத்திற்கு வந்தான். 

“ஓகே… ஓகே… இப்படி எரிப்பது போல் பார்க்காமல் ஈட்டு புட்டுன்னு காந்தி கதையைச் சொல்லி முடியுங்க…”

“அவர் பிராமணர் தனஞ்ஜெயன். அதுவும்… அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பிராமணர்கள் ‘அசைவம்’ என்கிற வார்த்தையைக்கூடச் சொல்லமாட்டாங்க. அவ்வளவு கட்டுப்பாடான காலகட்டத்தில்… இவர் அசைவம் சாப்பிட்டதை துணிச்சலாக எழுதி ஒப்புக் கொண்டிருக்கிறார். நான் அதைத்தான் சொன்னேன்…” 

“ஸோ… என்னை… மகாத்மா காந்தியுடன் இணை சேர்க்கிறீங்க…”

“இல்லை… யாரும்… யாருக்கும் இணையாக முடியாது… உங்களுக்கு இணை யாருமில்லை தனஞ்ஜெயன்… உங்களுக்கு நீங்கள் மட்டும்தான் இணையாக முடியும். மகாத்மா வேறு… நீங்கள் வேறு… உண்மையை ஒப்புக் கொள்ளும் ஹீரோயிசம் அவரிடம் இருந்தது. அதே ஹீரோயிசம் உங்களிடமும் இருக்கிறது…” 

நண்பனின் காதலைச் சொல்ல வந்தவனை அவள் கதாநாயகன் ஆக்கிவிட… தனஞ்ஜெயன் குழப்பத்துடன் எழுந்து கொண்டான். 

“எனக்கு பதில் சொல்லாமல் எழுந்து விட்டீங்களே…” 

“வேறு என்ன செய்ய? இங்கேயே இலை போட்டு சாப்பிட உட்கார்ந்து விடவா…?”

“அதுவும் நல்ல ஐடியாதான்… இது லன்ச் டைம்… என் சாப்பாட்டை நாம் இரண்டும் பேரும் ஷேர் பண்ணிக் கொள்ளலாமா…?” 

“பகிர்ந்து உண்டால் உங்களுக்கு வேண்டுமானால் பசியாறும்… ஆனால், எனக்கு நீங்கள் கொடுக்கும் ஒரு கவளம் சோறெல்லாம் போதாது… நான் கேண்டீனுக்குப் போகிறேன்… நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்…” 

தனஞ்ஜெயன் போன பின்னாலும்… வெகுநேரம் சாருலதா சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்… அவர் மனம் பூராவும்… தனஞ்ஜெயனின் வருகையும், அவனுடன் பேசிய பேச்சுக்களுமே நிறைந்திருந்தன, சாப்பிட மனம் இல்லாமல் வேலையை ஆரம்பித்து விட்டாள். 

அன்று இரவு கிருஷ்ணன்…. தனஞ்ஜெயனிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனது விளக்கத்தைக் கவனிக்காமல் சாருலதா காதல் சொல்லி விட்ட சஞ்சலத்தில் இருந்த தனஞ்ஜெயன் வெகுநேரம் கழித்துத்தான் நண்பனின் மௌனத்தை உணர்ந்தான்… 

“கிருஷ்ணா… ஏண்டா உம்முன்னு இருக்கிறாய்?” 

“நீ, சாருலதாவிடம் இன்றைக்கு என்னைப் பற்றிப் பேசினாயா…?” 

தனஞ்ஜெயன் குற்ற உணர்வுடன் ‘ஆமாம்…’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான். 

“உனக்கெப்படிடா… இது தெரியும்…” 

“சாருலதா… இன்றைக்குச் சாயந்தரம் என்னிடம் பேசவேண்டுமென்று சொன்னாள்… நானும்… அவள் சீட்டிற்குப் போனேன்…” 

தனஞ்ஜெயன் உதட்டைக் கடித்துக்கொண்டு… வேறு திக்கில் பார்த்தான். 

“ஏண்டா… என்னிடம் இதை நீ சொல்லவில்லை…?”

“கிருஷ்ணா…” 

“சாருலதா உன்னைத்தான் காதலிக்கிறாளாமே…?”

“அதை விட்டுத் தொலைடா… அவள் இப்படிச் சொல்வாள் என்று எனக்குத் தெரிந்திருந்தால், அவள் இருக்கும் திசைப் பக்கமே தலை வைத்துப் படுத்திருக்க மாட்டேன்…”

“அவள் என்னிடம் மரியாதையாக… அவளுடைய மறுப்பைச் சொன்னாள்டா… ‘உங்கள் காதலை நேரடியாய் சொல்ல இரண்டு வருடமாய் நீங்கள் தயக்கம் காட்டினீங்க… ஆனால் அதை என்னிடம் வந்து சொல்ல ஒரு நொடிகூட தனஞ்ஜெயன் தயக்கம் காட்டவில்லை… அவருடைய அந்த துணிச்சலைத்தான் நான் காதலிக்கிறேன்’னு சொன்னாள்டா…” 

“அவள் எதையோ சொல்லிவிட்டுப் போகிறாள்… வீணாய் நீ உன் மனதைப் போட்டு உழப்பிக் கொள்ளாதே…” 

“இல்லை தனா… நான் இப்போது தெளிவாக இருக்கிறேன்… என் நண்பனைக் காதலிப்பவளை… நான் எப்படிக் காதலிக்க முடியும்…?” 

“என்னடா சொல்கிறாய்…?” 

“நான் அவள் மேலிருக்கும் காதலை விலக்கிக் கொள்கிறேன்னு சொல்கிறேன்…”

“உன்னால் அது முடியுமாடா…?” 

“கட்டாயம் முடியும்… ஏனென்றால் என் எதிரில் நீ இருப்பாயே… உன்னைப் பார்க்கும் போதெல்லாம்… நீ சாருலதாவின் காதலன் என்ற நினைவுதான் என் நெஞ்சில் வரும்… அப்புறமும் அவளை எப்படி நான் நினைப்பேன்…” 

கிருஷ்ணன் விலகிக் கொண்டான். தனஞ்ஜெயன் ஆசுவாசமாய் உணர்ந்தான்… அவன் மனதிலிருந்த குற்ற உணர்வு விலகி ஓடியது. சாருலதாவைப் பற்றிய சிந்தனை வந்தது. 

கொட்டுகிற தேள் என்று மற்றவர்கள் பயமுறுத்த… அவள் அவனைக் கொம்புத்தேனாய் நினைத்து வந்தாள்… எவரும் தொடத் துணியாத அவன் மனதை எளிதாகத் தொட்டுச் சென்றாள்… தனஞ்ஜெயன் காதலில் விழுந்தான்… எவருக்கும் கட்டுப்படாத முரட்டுக் காளையான அவன்… அவளது அன்பில் கட்டுண்டு நின்றான். 

அத்தியாயம்-6

நீல வானம் சாட்சியாக…
நீயின்றி நானில்லை… 

தனஞ்ஜெயனின் கண்கள் சாருலதாவைத் தேட ஆரம்பித்தன… அவள் அதை எதிர்பார்த்தவள் போல்… புன்னகை பூத்த முகத்துடன் அவன் முன் பிரசன்னமாக ஆரம்பித்தாள்… அவர்கள் பேசினார்கள்… முதலில் சாதாரணமாய் பேசினார்கள். ஒருவர் குடும்பத்தைப் பற்றி… மற்றொருவர் விசாரித்துக் கொண்டார்கள்.

“நான் கிராமத்துக்காரன்…” 

“அதுதான் எனக்குத் தெரியுமே…”

“ஏன்… என் முகத்தில் நான் ‘காட்டான்’ என்று எழுதி ஓட்டியிருக்கிறதா…?” 

“போதுமே… வாய்க்கு வாய்… நான் கிராமத்துக்காரன்… நான் கிராமத்துக்காரன்னு அள்ளி வீசியது யார்…? நீங்கள்தானே… ஆமாம்… தெரியாமல்தான் கேட்கிறேன்…”

“நீ தெரிந்துகொண்டே கேள்வி கேட்கிற ஆளாச்சே…”

“இப்போது என்னைப் பேசவிடப் போகிறீர்களா… இல்லையா?” 

“எப்போதும்… நீ அதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய்… இவ்வளவு பேசுகிறாயே… உனக்கு வாய் வலிக்காதா…?’ 

“என்னைப் பற்றி ரொம்பத்தான் அக்கறை உங்களுக்கு…”

“இருக்கக்கூடாதா…? அதை விட… நீ தெரியாமல் எதையோ கேட்டாயே… அது என்ன…?” 

“கிராமத்துக்காரங்க எல்லாம் ‘காட்டான்’ என்று யார் சொன்னது…?”

“நீ நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாச்சே. இப்படித்தான் நினைத்து வைப்பாய் என்ற யூகம்தான்…”

“உங்க யூகத்தைத் தூக்கி உடைப்பில் போடுங்க…”

“போட்டு விட்டால் போச்சு… அப்பா என்ன செய்கிறார்?” 

“யாருடைய அப்பா…?” 

“உன்னுடைய அப்பாதான்… இங்கே என் முன்னால் உட்கார்ந்து உயிரை எடுத்துக் கொண்டிருப்பது யார்…? நீதானே… உன்னுடைய அப்பாவைப் பற்றிக் கேட்காமல் யாருடைய அப்பாவை நான் கேட்பேன்…?” 

“நீங்கள் வேறு யாருடைய அப்பாவைப் பற்றிக் கேட்டாலும் கேட்பீங்க… உங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது… என்னுடைய அப்பா… பேங்க் மேனேஜர்…” 

“அம்மா…?” 

“ஸ்டேட் கவர்ன்மென்டில் வேலை பார்க்கிறாங்க…?”

“கூடப் பிறந்தவங்க…?” 

“ஒரே அண்ணன்… காலேஜ் லெக்சரர்… கல்யாணமாகி விட்டது. அண்ணி எல்.ஐ.சி. யில் வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு ஒரு குட்டிப் பெண் இருக்கிறாள்… பெயர் ஆர்த்தி…” 

“ஆக… உன் குடும்பமே… மெத்தப் படிச்ச மேதாவிங்க குடும்பம்ன்னு சொல்லு…” 

“படிச்சவங்க… அவ்வளவுதான்… பட்டம் வாங்கின வங்கதான் மேதாவி… படிப்பறிவு இல்லாதவங்க எல்லாம் முட்டாள்ன்னு யார் சொன்னது? காமராஜர் எந்த காலேஜில் படிச்சார்…?” 

தனஞ்ஜெயன் புருவங்களை உயர்த்தி… அவளது பேச்சை ரசித்தான். அவள் விளையாட்டாய்… தன் கையிலிருந்த பேனாவினால் அவன் புறங்கையில் ஒரு தட்டுத் தட்ட – சிரித்துக் கொண்டான். 

“ஏன் சிரிக்கறீங்க…?” 

“இல்லை… நீ இருபத்தியோராம் நூற்றாண்டில் இருந்தாலும் அந்தக் காலத்தில் காதல் பண்ணுவது போலவே காதல் பண்ணுகிறாயே… அதை நினைத்தேன்… சிரிப்பு வந்தது…” 

“எதைச் சொல்கிறீங்க…?” 

“அந்தக் காலத்து சினிமாக்களை நீ பார்த்ததில்லை போல… அதில் கதாநாயகன் ஒரு பூவைக்கிள்ளி… அதன் காம்பினால் கதாநாயகியின் மேல் லேசாகத் தட்டுவான்… கதாநாயகி உடனே வெட்கப்பட்டுக் கொண்டு… மரத்திற்கு பின்னால் போய் ஒளிந்து கொள்வாள்…”

‘தான் பேனாவினால்… அவனது புறங்கையைத் தட்டியதை அவன் குறிப்பிடுகிறான்’ என்று புரிந்து கொண்ட சாருலதா முகம் சிவந்தாள். அவன் முகத்தைப் பார்க்க அவளால் முடியவில்லை. பார்வையைத் தாழ்த்திக் கொண்டு… விரல் நகத்தால்… மேஜைமேல் கீறிக் கொண்டிருந்தாள்… எதையாவது பேச வேண்டும். என்பதற்காக. 

“அப்புறம்… சொல்லுங்க…” என்று கேட்டு வைத்தாள்.

“அப்புறம் என்ன… ஹீரோவும்… ஹீரோயினும் மரத்தைச் சுற்றிவந்து ஒருத்தரையொருத்தர் தொட்டுக் கொள்ளாமல் கவனமாய் நாலடி தள்ளி நின்று டூயட் பாடுவாங்க…”

தனஞ்ஜெயன் சிரிக்காமல் இதைக் கூற… சாருலதா பொங்கிச் சிரித்தாள். ஒருவழியாய் சிரித்து முடித்து, அவனைப் பார்த்தவளின் கண்களில் காதல் பொங்கி வழிந்தது. தனஞ்செயனின் நினைவில் ஒரு திரைப் படப் பாடல் வந்தது… 

‘பார்த்த முதல் நாளே உன்னைப் 
பார்த்த முதல்நாளே. 
காட்சிப் பிழைபோலே 
காட்சிப் பிழைபோலே… – உணர்ந்தேன் 
ஓர் அலையாய் வந்து எனையடித்தாய்…
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்…
என் கனாவில்கூட உன்முகம்… உன்முகம்…
என்றும் மறையாதே…’ 

அதைப் பாடும் கதாநாயகியின் கண்களில் பொங்கி வழிந்த காதலை… அப்படியே சாருலதா பிரதிபலித்தாள், அவள் முகத்தில் நாணம் கலந்த பரவசம் இருந்தது. அவனது அருகாமையில் மட்டுமே, அவளது முகத்தில் உதிக்கும் பரவசம் அது. 

அந்தப் பாடலில் கதாநாயகன்… நாயகியைப் பார்த்து பதிலுக்குப் பாடும் பாடல் வரிகளை மெல்லிய குரலில் தனஞ்ஜெயன் பாடினான்… 

“காட்டிக் கொடுக்கிறதே – கண்கள் 
காட்டிக் கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே – கண்ணில்
காதல் வழிகிறதே… 
உன் அலாதி அன்பினில்
நனைந்த பின், நனைந்த பின்…
நானும் மழையானேன்…” 

சாருலதாவின் இமையோரங்களில் நீர் முத்துக்கள் உதித்தன… அவள் இமைகளைக் கொட்டி… அவை சிதறாமல் தடுத்தாள்… அவளது காதலை அவன் ஏற்றுக் கொண்டதை உணர்ந்த அவளது மனம் நெகிழ்ந்தது… அந்த நொடியில் அவனது காலடியில் சரிந்து அமர்ந்து… அவன் மடியினில் தலைசாய்க்க அவள் மனம் துடித்தாள்… அவளது துடிப்பை அறிந்து கொண்டவனாய் தனஞ் ஜெயன் கரம் நீட்டி… தன் கரத்தினுள் அவளது கரத்தை இறுக்கிப் பிடித்து, அவள் விரல் பற்றிக் கொண்டான். இப்போது தாங்க மாட்டாதவளாய் சாருலதா விசும்பி விட்டாள். 

“ஏய்ய்… முட்டாள்… இது ஆஃபீஸ்…”

புத்திசாலியென்று பெயர் எடுத்தவள்… அவன் முட்டாளாக்கியபோது முழு நிலவாய் மலர்ந்து சிரித்தாள்…

“ம் ம்… தெரியும்…’ 

“தெரிந்து கொண்டே ஏன் அழுகிறாய்…? முதலில் கண்ணைத் துடை. உன்னைப் போய் போய் எல்லாரும் புத்திசாலின்னு புகழ்ந்து பேசுகிறாங்களே…” 

“ஸாரி… கொஞ்சம் எமோசனலாகி விட்டேன்…”

“கொஞ்சம்தான் எமோசனல் ஆனாயா…? நீ விட்ட கண்ணீரில் நான் அம்பேல் ஆகிவிட்டேன்… இதுவா கொஞ்சம் இன்னும்… நீ நிறைய எமோசனல் ஆனால்.. என் கதி என்ன ஆவது.. I…?” 

“ஒன்றும் ஆகாது… உங்களுக்கென்ன… நீங்கள் ராஜா…” அவள் அவனைப் பெருமையுடன் பார்த்துச் சொன்னாள். ‘இப்படிக் கொண்டாடும் அளவிற்கு அவள் தன்னிடம் எதைக் கண்டாள்’ என தனஞ்ஜெயனுக்கு புரியத்தான் இல்லை. ஆனால்… அவள் தன்னிடம் கொண்டிருந்த கரை காணாத காதலை அவன் நன்கு புரிந்து வைத்திருந்தான். 

“உங்களைப் பற்றிச் சொல்லுங்க தனா…:

“நான் தனஞ்ஜெயன்… நேற்று வரை சுதந்திரமாய் வாழ்ந்தவன்…” 

“ஏன்… இன்றைக்கு என்ன வந்துவிட்டது?”

“நீதான் பூ விலங்கைப் பூட்டி விட்டாயே…”

“அதனால் ஒன்றும் உங்கள் சுதந்திரம் பறிபோய் விடாது… உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்…” 

“அப்பா விவசாயி… அம்மா இல்லத்தரசி… ஒரே ஒரு தங்கை… தாலுகா ஆபிஸ் கிளார்க் ஒருவருக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்திருக்கிறோம்… அவருக்கு தாலுகா ஆபிஸில் வேலை… என் தங்கைக்கு ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எங்களிடம் மொய் வசூலிப்பதுதான் வேலை…” 

“மொய்யா…? அப்படியென்றால்…?” 

“இதுகூடத் தெரியாதா…? தாய்வீட்டில் வாங்கும் சீர் வரிசை பத்தாதுன்னு… வருடா வருடம் எதையாவது ஒரு சாக்கைச் சொல்லி… தாய்மாமன் மொய்ன்னு… மொத்தப் பணமாய் பிறந்த வீட்டைப் போட வைப்பதுதான்… மொய்…” 

“தங்கைக்கு சீர் செய்ய அலுக்கலாமா…?” 

“அடேங்கப்பா… என் தங்கைக்கேற்ற அண்ணிதான்… வா.., வந்து என் குடும்ப ஜோதியில் ஐக்கியமாகி… உன் சம்பளப் பணத்தையெல்லாம் என் தங்கைக்கு மொய் எழுது…”

சாருலதாவிற்கு அப்போதே தனஞ்ஜெயனின் கைப்பிடித்து அவன் வீட்டிற்குப் போய்விடவேண்டும் என்ற துடிப்பு வந்தது. அவளது துடிப்பினை உணர்ந்தவன்போல்… அவன் மௌனச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். 

“உங்க அம்மா கோபப்படுவாங்களா…?” 

“கோபம்ன்னா என்ன விலைன்னு கேட்பாங்க…”

“அப்பா…?” 

“அதை முதலில் கேளு… அவர் வெட்டரிவாளும்… வேல் கம்புமாக மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அலைகிற ஆள்… ஊர் பஞ்சாயத்துத் தலைவர்…” 

“ஓ… பிரஸிடெண்ட்டா…?”

“அது வேறு ஒருத்தர்… என் அப்பா பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட் இல்லை..” 

“அப்போ… பஞ்சாயத்து தலைவர்ன்னு சொன்னீங்க?”

“அது அப்படித்தான்ம்மா… கிராமத்துப் பக்கத்தில் வம்சாவளியாய் ஒரு குடும்பத்து ஆள்கள்தான் பஞ்சாயத்து பண்ணி, சச்சரவை தீர்த்து வைப்பாங்க. அப்படி… என் தாத்தாவிற்கு அப்புறம்… பஞ்சாயத்துத் தலைவராய் வந்தவர்தான் என் அப்பா…” 

“இன்ட்ரெஸ்டிங்…” 

தான் எதைச் சொன்னாலும்… இவள் இந்த வார்த்தையைத்தான் சுவராஸ்யமாய் சொல்லிக் கொண்டு, தன் வாய்ப் பார்ப்பாள் என்று புரிந்து வைத்திருந்த தனஞ்ஜெயனுக்கு அப்போது… அவளிடம் பரிவுதான் வந்தது. 

– தொடரும்…

– நீயின்றி நானில்லை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 2011, திருமகள் நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *