நீயின்றி என்னால்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 99 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”கிணிங்… கிணிங்… கிணிங்…” மணி தொடர்ந்து ஒலித்தது. திடுக்கிட்டு விழித்த கல்பனா துள்ளியெழுந்து பால் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.

இரவு முழுவதும் அடித்து வீசிய மழையில் அரண்டு போன மரக்கிளைகள் மௌனமாக மழைநீர்ச் சொட்டுகளைத் துளித் துளியாய் விட்டுக்கொண்டிருந்தன. கழுவித் துடைத்த வானம் கம்மென்று இருந்தது.

சில்லென்ற ஈரக்காற்று உடலை வருடப் பாலை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லத் திரும்பிய கல்பனாவின் காதுகளில் அந்த மெல்லிய அழுகுரல் வந்து மோதியது.

“என் இராசாவே, எங்கே போயிட்டீங்க, இராசாவே ? இனி நான் என்ன செய்வேன்? அய்யா…’

“அது அருளம்மாவின் அழுகுரல் அல்லவா! என்ன ஆச்சு?”

பாலை வைத்த கல்பனா, அருளம்மாவுக்கு அடைக்கலம் தந்த மூலை வீட்டுத் திண்ணையை நோக்கி நடந்தாள்.

அருளம்மா, சாமியப்பன் எங்கிருந்தோ வந்த இணை. சாமியப்பன் வயதானவர். அருளம்மா குருடு. இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வீடு வீடாகப் பிச்சையெடுத்துத் தங்கள் வாழ்க்கையை ஒட்டி வருகின்றவர்கள்.

வாசலில் வந்து மௌனமாக நிற்பார்கள். ஏதாவது கொடுத்தால் வாங்கிகொண்டு, “நல்லாயிருங்கம்மா!” என வாழ்த்திவிட்டு அடுத்த வீடு செல்வார்கள்.

“கண்தெரியாத அருளம்மாவை வயதான அந்தச் சாமியப்பன் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்! எவ்வளவு அன்பாக அவளை அழைச்சுக்கிட்டுப் போகிறார்!’ எப்படிப்பட்ட அன்பு உள்ளங்கள்! எவ்வளவு ஒற்றுமை! என அவர்களைப் பார்க்கின்ற போதெல்லாம் கல்பனா வியப்பாள்.

அவர்களைப் பார்த்தால் வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்துபின் வாழ்க்கைச் சிக்கல்களில் அடிபட்டு நைந்துபோனவர்கள் போல் தோன்றும். ”உண்மையிலேயே அவர்கள் கணவன், மனைவியா ? இல்லை அநாதைகளா ? கைவிடப்பட்டு அதரவுக்காக ஒன்று சேர்ந்தவர்களா?” என்ற ஐயமும் கல்பனாவின் உள்ளத்தில் எழும்.

“கேட்கலாமா? சே.. சே, வேண்டாம், அவர்களின் மனம் ஒரு வேளை வருத்தப்பட்டுவிட்டால்… பாவம், வேண்டாம்” என மனதிற்குள்ளேயே அவர்களைப் பற்றி விசாரணையை நடத்திக் கொள்வாள் கல்பனா.

ஒரு மாதமாக விடாது பெய்த மழையில் அவர்கள் தங்கியிருந்த சத்திரம் இடிந்து விழுந்தவிட்டதால், தங்குவதற்கு இடமில்லாமல் திண்டாடினார்கள். மாடி வீட்டு ‘லூக்காஸ்’ அண்ணன்தான் இரக்கப்பட்டுத் தன்னுடைய இடிந்துபோன பழைய ஒட்டு வீட்டுத் திண்ணையில் அவர்கள் தங்க அனுமதி கொடுத்தார்.

மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தாலும், அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டு வீடு வீடாகப் போய்க்கொண்டிருந்தனர். பாவம், வயிற்றுக்கு வழி பண்ணப் போய்த்தானே ஆக வேண்டும்.

கல்பனாகூடச் சொன்னாள், “ஏன் இந்த மழையில் துன்பப்படுறீங்க! நான் சாப்பாடு தருகிறேன். பேசாமல் இருங்கள்” என்று!

”அம்மா! உங்களுக்குத் துன்பம் வேணாம்மா” என்று அன்போடு மறுத்துவிட்டாள் அருளம்மா. வாரத்தில் ஒரு நாள் தான் ஒரு வீட்டில் உணவு வாங்குவது அவர்கள் வழக்கம் என்பதை அறிந்த கல்பனா மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

நேற்றுக் காலை குழந்தைகளைப் பள்ளியில் விட்டுத் திரும்பியபோது சாமியப்பன் குழாயில் இருந்து பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டு போனதைப் பார்த்த கல்பனா, “தாத்தா! சாப்பாடு எதுவும் தரவா ?” எனக் கேட்டாள்.

“இல்லீங்கம்மா. வேண்டாம். “லூக்காஸ்” அய்யா வீட்டம்மா காலையில் சாப்பாடு கொடுத்திட்டாங்க” என்று சொல்லி நகர்ந்தார் சாமியப்பன். நண்பகலிலேயே மழை ஆரம்பித்துவிட்டதால் கல்பனா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.

“இப்போ ஏன் அருளம்மா அழுகிறாள் ? ஒரு வேளை சாமியப்பன்..” எட்டக் காலடி வைத்து மூலை வீட்டுத் திண்ணையை அடைந்தபோது அங்கு ஒரு சிறு கும்பலே இருந்ததைக் கண்டாள் கல்பனா.

“இதுகளை இங்கே கொண்டு உட்கார வைத்துத் தெருவோட அழகையே கெடுக்கிறாங்களே” என அடிக்கடி முணுமுணுக்கின்ற துபாய் கமலாகூட அங்கு நின்றிருந்தாள். கணவனுடன் துபாயில் சில வருடம் இருந்துவிட்டு இப்பொழுது இந்த ஊரில் புது வீடு கட்டியிருக்கின்ற கமலா, இங்குள்ளவர்களையெல்லாம் அதிலும் ஏழைகளையெல்லாம். மனிதப்பட்டியலில் இருந்தே நீக்கி விட்டவள்.

“என்ன செய்தி?” என அங்கு நின்றிருந்தவர்களிடம் வினவினாள் கமலா.

“நேற்று வெளியிலே பிச்சை வாங்கப் போன கிழவனை இன்னும் காணலியாம்” எனப் பதில் கொடுத்தாள் புஷ்பம் ஆயா.

“இன்னும் வரலையா! அருளம்மா நீ கூடப்போகலையா?”

எனக்குக் காய்ச்சலா இருந்துச்சுன்னு “நீ இரு, நான் மட்டும் போயித் தர்மம் வாங்கியாறேன்னு போனாங்கம்மா! இன்னும் காணலையே…” அருளம்மா பெருங்குரலெடுத்து அழுதாள்.

”மழையிலே எங்காவது ஒதுங்கியிருக்கலாம். கவலைப்படாதே. வந்திடுவார், தாத்தா” என்று கல்பனா ஆறுதல் கூறினாள்.

“இவளை விட்டாப் போதும்னு கிழம் எங்காவது ஓடியிருக்கும்”அடிக்குரலில் சொல்லிக்கொண்டு நகர்ந்தாள் கமலா.

“இந்தா, கிழவி. சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே. பிள்ளைகள் படிக்குதுக” என எட்டிப் பார்த்துக் கத்திவிட்டுப் போனாள் எதிர்வீட்டு விஜயா.

“என்ன மனிதர்கள் ! மனத்திற்குள் வருத்தம் எழ வேலைகளைப் பார்க்க வீடு நோக்கி நடந்தாள் கல்பனா.

இரண்டு நாள்கள் ஓடிவிட்டன. சாமியப்பக் கிழவனைக் காணவில்லை. அருளம்மாவின் குருட்டு விழிகள் ஓயாது கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. யார் கொடுத்த உணவையும் அவள் தொடவில்லை.

“இது இங்கேயே செத்துத் தெருவை நாறடிக்கப் போகுது. பாருங்க!” எனக் கமலா பொருமித்தள்ளினாள்.

கல்பனா, கிழவியைக் கட்டாயப்படுத்திச் சிறிது உணவைச் சாப்பிட வைத்தாள். “எங்கள் வீட்டுக்காரரிடம் சொல்லித் தேடத்சொல்றேன். கவலைப்படாதே” என ஆறுதல் படுத்தினாள்.

“அவுக இல்லாம நான் எப்படி இருப்பேன், தாயே!” என அருளம்மா நைந்துபோன குரலில் புலம்பினாள்.

“விசாரிப்போம்… விசாரிப்போம்” எனத் தலையாட்டிச் சென்றார் கல்பனாவின் கணவர்.

“ம்…இவர் மறதிக்காரர். இவர் எங்கே விசாரிக்கப் போகிறார்” என மனத்திற்குள் சொல்லிக்கொண்ட கல்பனா தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தாள்.

கிழவன் காணாமல்போன மூன்றாவது நாள் குழந்தைகளுக்கு நண்பகல் உணவைப் பள்ளியில் சென்று கொடுத்துவிட்டுக் கல்பனா திரும்பிக்கொண்டிருந்தாள்.

நகரமன்ற மருத்துவமனை அவசர நோயாளி வண்டியொன்று அவளைக் கடந்து சென்று அவள் வீட்டருகே நின்றது.

அவசர நோயாளி வண்டியிலிருந்து இறங்கிய காவலர் ஒருவரும், மருத்துவமனைச் சிப்பந்தி ஒருவரும் விரைந்து வந்த கல்பனாவை நெருங்கினர்.

“திருவாளர்.சுந்தரம் என்பர் இந்த வீட்டுச்சொந்தக்காரர் தானே என்று காவலர் கல்பனாவிடம் கேட்டார்.

“ஆமாம், என்னுடைய கணவர்தான்.’

“சாமியப்பன் என்ற ஒரு வயதானவரைக் காணவில்லை எனக் புகார் கொடுத்துள்ளார். அது சம்பந்தமாக வந்துள்ளோம்.”

“அப்படியா! சாமியப்பன் எங்கே இருக்கிறார், கண்டுபிடிச்சிட்டீங்களா?”

“கடுமையான காய்ச்சலால் சாலையில் மயங்கிக்கிடந்த கிழவரை இரண்டு நாளாக மருத்துவமனையில் வைத்திருந்தோம். இன்னைக்குக் காலையில இறந்திட்டார்.”

“என்ன சாமியப்பன் இறந்திட்டாரா?” கல்பனா அதிர்ச்சியோடு வினவினாள்.

”ஆமாம். அவரோட மனைவி பேரு அருளம்மாதானே! கிழவர் இறந்தபோது தன்னுடைய கண்களை அந்தக் கிழவிக்குக் கொடுக்கச் சொல்லிட்டுச் செத்தார். அதனாலே உடனடியாக அந்தக் கிழவியை அழைச்சிட்டு போக வேண்டும்.”

சாமியப்பன் இறந்தது வருத்தமாக இருந்தாலும், அருளம்மாவுக்குக் கண்கிடைக்கப் போவது ஆறுதலாக இருந்தது” இனி அந்தக் குருட்டுக் கிழவி கண் பெற்று எப்படியாவது வாழ்ந்திடுவாள்.”

அவசர நோயாளி வண்டி வரக்கண்டு சூழ்ந்த அனைவரும் சாமியப்பனின் நல்ல குணங்களைச் சொல்லி அவரது இறப்பிற்காக வருத்தப்பட்டனர்.

“அருளம்மாவை எழுப்பி, அவளிடம் இங்கிதமாகச் செய்தியைக் கூறினார்கள் கல்பனாவும், புஷ்பம் ஆயாவும்.

வற்றிப்போன அவளின் கண்களில் இருந்து நீர் வரவில்லை. நைந்துபோன அவள் குரல் மெல்ல ஒலித்தது.

“இந்தக் குருடிக்கு இனி எதுக்கம்மா கண்ணு ? என் தெய்வமே என்னை விட்டுப் போயிடுச்சே! இனி நான் வாழவா வேணும்?’ செத்தபோதுகூட என்னை மறக்காமல் கண்ணைக் கொடுத்து என்னை வாழவைக்க அவுக சொல்லியிருக்காங்களே! நான் குடுத்து வைச்சவமா, குடுத்து வச்சவ. அதுவே எனக்குப் போதும். அவுக போனப்புறம் என்னாலே இனி வாழ முடியாது. ஆண்டவன் என்னைச் சீக்கிரம் எடுத்துக்கணும். யாராவது ஒரு கண்ணு தெரியாத ஏழைப்பிள்ளைக்கு அந்தக் கண்ணைக் கொடுத்திடச் சொல்லுங்கய்யா. அந்தப் பிள்ளையாவது நல்லா வாழட்டும்.”

அனைவரும் மெய்சிலித்துப் போனோம். “எவ்வளவு பெரிய மனசு”.

மருத்துவரிடம் சொல்லி ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இந்தக் கிழவியைச் சேர்த்துவிட ஏற்பாடு செய்யுங்க” எனக் காவலரிடமும் மருத்துவமனைச் சிப்பந்தியிடமும் கேட்டுக் கொண்டாள் கல்பனா.

அருளம்மாவை ஏற்றிக்கொண்டு விரைவு வண்டி மறைந்தது.

“ஆண்டவனே! சீக்கிரம் அருளம்மாவை உன்னிடம் சேர்த்துக்கங்க. சாமியப்பன் இல்லாமல் அவளால் இனி வாழவே முடியாது” என்று வேண்டிக் கொண்டே வெறுமையாய்த் தெரிந்த வீதியில் வீடு நோக்கி நடந்தாள் கல்பனா.

– மகிமலர். ஃபாத்திமா தனராஜ், தேவகோட்டை.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *