(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சாச்சி, ம்மா எப்ப வருவாங்க..இண்டக்கி நானும் ஸ்கூலுக்குப் போகவா?”
எத்தனையோ நாட்களாக மனதில் ஊறப்போட்டு வைத்திருந்த அந்த மகத்தான கேள்வியை, ஒருவகை துணிச் சலோடு கேட்டு விட்டாள் பர்ஹானா. ஆனால் அது நஜிமா சாச்சியின் நெஞ்சைத் துளைத்து கோபத்தை மூட்டிவிடும் என்று அந்தப் பிஞ்சு மனம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
முதலாம் வகுப்புப் படிக்கும் தனது மகள் பைரோஸ் சீருடையணிந்து தயாராக நிற்கிறாள். சின்ன மகள் சக்லா வுக்கு காலை உணவு ஊட்டி, வெளுத்த வெள்ளைக் கவுன், கழுத்துப்பட்டி அணிவித்து, அழகாகத் தலைவாரி, புத்தகப் பையுடன் பாடசாலைக்கு அனுப்ப ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த நல்ல நேரத்தில்தான் –
ஒருவேளை சாச்சியின் காதுகளுக்குக் கேட்டிருக்காதோ என்றெண்ணிய பர்ஹானா மீண்டும் குரல் எழுப்பினாள்.
“நஜீமாசாச்சி, உம்மா எப்ப வருவாங்க. நானும் ஸ்கூலுக்குப் போகவா?”
நஜீமாவோ சூறாவளி காலத்துக் கடலையும் மிஞ்சி விட்டாள்.
“அல்லாஹ் சாச்சி அடிக்காதீங்க, அடிக்காதீங்க” துடித்தாள் துவண்டாள்.
சாச்சிக்குக் கோபம் வந்தால் பெண்மைக்குரிய அடக்கம் பறிபோய் கண்கள் துள்ளும். முகம் சிவக்கும். உதடுகள் படபடக்கும்.
“அடியே மூதேவி ஒனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கு, புள்ளகள ஸ்கூலுக்கு அனுப்பும் போது முன்னுக்கு வந்து நிக்காத எண்டு. தரித்திரம், ஒங்க உம்மா கட்டுக் கட்டா சம்பாரிச்சி வச்சிக்காடி நாயே. ராத்தாட புள்ள பாவமென்டு சோறு போட்டா அப்படித்தான். ரோடு வழிய சீரழிஞ்சி பிச்ச எடுக்க வுட்டுருக்கோணும்”
சூறாவலி ஆர்ப்பரித்து எப்போது ஓய்ந்ததோ, பர்ஹானா கரையை நோக்கிப் பிந்தி வந்து கொண்டிருந்த ஒரு வள்ளத்துக்கு விரட்டப்பட்டதும், சினுங்கிக் கொண்டே நடந்தாள்.
“சாச்சிகிட்ட அடிபட்டு, அடிபட்டு மேலெல்லாம் ஒரே வலிம்மா, நீங்க எப்ப வருவீங்க?”
அந்த நேரத்தில் வஞ்சகமில்லாத கடற்காற்றுத்தான் அவளது உள்ளத்திற்கும் உடலுக்கும் இதமாக இருந்தது.
“ஏ கடற்காற்றே! என் நிலையைப்போய் எங்க உம்மா கிட்ட சொல்ல மாட்டியா நீ” என்று இடித்துச் சொல்வது போலிருந்தது அவளது ஏக்கம்.
இறுதியாகப் பாடசாலைக்குப் போன ஞாபகம் வந்து விட்டது அவளுக்கு.
அன்று மழையும் கச்சான் காற்றும் கண் கட்டி ஓடி விளையாடிய பருவகாலம்.
பாடசாலை நிர்வாகத்திலும் சிறு சலனத்தை ஏற்படுத் தியது. தூவானத்தால் பிள்ளைகள் நனைவதால், சற்று நேரத்தோடு விட்டுவிடுவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண் டிருந்த போது தான், கடலில் மீண்டும் வெறியாட்டம்.
கரையோரம் நின்ற தென்னை மரங்கள் என்னமாப் போர் தொடுத்தன. புயலின் வேகம் தணிந்தபோது பாட சாலை மணி ஒலித்தது. பிள்ளைகள் குய்யோ முறையோ வென்று வீடுகளை நோக்கிப் படையெடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும்… இந்த முறை கச்சான் காற்றுக்கு பொல்லாத கோபம்.
பர்ஹானாவின் நடையிலும் போராட்டம் தாக்குப் பிடிக்க முடியாத அந்த ஒல்லியாய்ப் போன மரம் சாய்ந்து விட்டது.
“அல்லாஜ் உம்மா…”
பர்ஹானா வீரிட்டாள்.
பக்கத்திலிருந்த அவளது குடிசை சுழற்சிக்குப் பலியாகி விட்டது.
நல்ல வேளையாக முன்னெச்சரிக்கையுடன் அவள் உம் மாவோடு, உம்மாவின் தங்கை நஜீமா சாச்சியின் கல்வீட் டுக்கு, தற்காலிகமாகக் குடியேறியிருந்தார்கள். குடை சாய்ந்துவிட்ட செய்தியை உம்மாவுக்குச் சொல்ல வேண்டும் என்று பர்ஹானா நடையின் வேகத்தைக் கூட்ட முயன் றாள். ஏனோ தளர்ந்துவிட்டது. முகத்திலும் வாட்டம். காலையில் பாடசாலைக்குச் செல்லும் போது வெறுந் தேநீர். காலையுணவு பூஜ்யந்தான். அது புதுமையில்லையே அப்படி யானால் அந்த இனம் புரியாத நடைச் சோர்வும், வாட்ட மும். இடைவேளை மணியடித்ததும் இலவச பிஸ்கட் சாப் பிட்டு கிணற்றுத் தண்ணீரைக் குடித்தது தானே. மகிழ்ச்சி யால் மனம் தாளம் இசைக்கும் இடைவேளையை அன்றும் அனுபவித்தவள் தானே பர்ஹானா.
வீடு நெருங்கியதும் வேகத்தைக் கூட்டி ‘பிரேக்’ இல் லாமல் பின் பெட்டிகளைச் சுமக்கும் சைக்கிள் வண்டியைப் போல் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளுப் பட்டு வந்து சாச்சியின் வீட்டு வாசலில் விழுந்தாள். சிலேட்டும் புத்தகமும் வாசலில் போடப்பட்டிருந்த கல்லில் பட்டுச் சிதறின. சிலேட் இரண்டு துண்டுகளாகின.
பாடப்புத்தகத்தைப் பார்த்து வெறுமனே பிரதி பண் ணாமல் அன்றுதான் முதன் முதலில் அம்மா என்று குண்டு குண்டான எழுத்துக்களைக் கூட்டி எழுதியிருந்தாள்.
“அப்பா, அம்மா…”
நீண்டகால பிரயத்தனத்திற்குப் பின் எழுத்துக்கள் எண்ணி எழுதிய சாதனையை உம்மாவுக்குக் காட்ட வேண்டாமா? கவனமாகப் பாதுகாத்துக் கொண்டு வந்தவள் தான்.
கொப்பி வாங்கப் பணம் இல்லையென்று அவளது அபி மான ‘வர்ணம் டீச்சர்தான்’ அந்தச் சிலேட்டை அன்ப ளிப்பாகக் கொடுத்திருந்தாள். அதன் தலைவிதிதான் இன்று இப்படியாகிவிட்டதே.
“அப்பா, அம்மா”
சிலேட் உடைந்து, கடற்கரை மண்ணில் சிதறிச் சிலம்பிக் கிடந்தன.
வாசலில் விழுந்த அரவம் கேட்டு, தூக்கிவிட உம்மா ஓடி வரவில்லை.
ஊர் மரைக்கார் அப்துல் வாஹித். நஜீமா சாச்சியின் வீட்டிலிருந்து வெளியேறியவர், விழுந்துவிட்ட பிள்ளையைத் தூக்கிவிட எத்தனித்த அதே வேளையில் தான் –
நஜீமா சாச்சியும், சுலைஹா என்ற பெண்ணும் வந்து பர்ஹானாவை எடுத்துச் சென்றார்கள். மேசைமேல் இருந்த கிளாசில் உம்மாவுக்காகக் கொண்டு வந்திருந்த பால் ஆறிக்கிடந்தது. அதை பர்ஹானாவுக்குப் பருக்கினார்கள். சன நடமாட்டம் வேறு.
இத்தனைக்கும் உம்மாவின் பேச்சு மூச்சே இல்லை.
கட்டிலில் கிடத்தி, வெள்ளைப் புடவையால் போர்த் தப்பட்டு, சாம்பிராணி ஊதுவத்தியின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
பர்ஹானாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“உம்மா உம்மா…. உம்மா – என்று கத்தினாள். உம்மா பேசவே இல்லை.
நேரம் சுணக்காமல் முன்னேற்பாட்டின்படி, எல்லாம் முடிய மட்டும் பர்ஹானா சுலைஹாவின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
மூன்றாம் கத்தத்திற்குப் பிறகு தான் பர்ஹானா மீண்டும் வந்ததும்-
“நஜீமா சாச்சி உம்மா எங்க? உம்மா எங்க?” என்ற நச்சரித்தாள்.
“உம்மா அல்லாஹ்யிடம் போயிருக்கிறாள்”
தயாராக வைத்திருந்த ஒரே பதிலைத்தான் எல்லாரும் சொன்னார்கள்,
பர்ஹானாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
வாப்பா கடலுக்குப் போயிருக்கிறார்.
உம்மா அல்லாஹ்யிடம் போயிருக்கிறாள்.
ஒரு வருடத்திற்கு முன் கடல் எச்சரித்ததையும் பொருட்படுத்ாமல், கடலுக்குப் போன முஸ்தபா திரும்ப வில்லை. இன்னும் வரவே இல்லை.
வாப்பாவின் ஞாபகம் வந்து கேட்கும் போதெல்லாம், வருவார் வருவார் என்று ஆறுதல் கூற உம்மா இருந்தாள். இப்போது உம்மாவும் போன பிறகு?
நஜீமா சாச்சியைப் பொறுத்தவரையில் நாற்பதாம் நாள் முடிந்த பிறகு துக்கம் பறந்துவிட்டது.
ஆனால் பர்ஹானா?
அவள் இழந்திருப்பது ஒரு விளையாட்டுப் பொம்மை இல்லையே.
இனி அவளுக்கு வாழ்க்கை ஆறாத்துயர் தானோ?
“அடியேய் பரிஹானா இங்க வாடீ”
முதல் முறையாக நஜீமா சாச்சியின் உறுமலைக் கேட்டு அவள் அதிர்ந்து போய் நின்றாள்.
“டீயேய், இப்படியே இருந்தா உம்மா வந்திருவாடி போய் அதுகளோட சேர்ந்து ஒரு வேலையைச் செய். அப் பத்தானே மனதுக்கு சந்தோஷம் வரும். அங்க பார் மீன் கழுவி எவ்வளவு நேரம்; எல்லாம் வெய்யில்ல காயம் போடடி”
இப்படியாகத் தொடங்கி, படிப்படியாகப் பக்குவப்பட்டு…
வைகறையில் கடற்கரைக்குச் செல்வாள்.
வள்ளத்திலிருந்து துடிக்கத் தெறிக்கும் மீன்களைக் கூடையில் பொறுக்கிப் போடுவாள்.
ஏலத்தில் எடுக்கும் மீன்களோடு, தலையில் சுமந்து கொண்டு போய் வீட்டில் சேர்ப்பாள்.
மீனின் குடலைப் பிடுங்கி உப்புப் போடுவாள்.
மறுநாள் அவற்றை மீண்டும் கழுவி வெப்பத்தில் காய வைப்பாள்.
பல நாட்களாக அவை காய்ந்து, காய்ந்த கருவாடாகி விடும்.
அந்த அளவுக்கு அவள் ஒரு பிஞ்சுத் தொழிலாளி.
மனத்திற்கு மட்டும் கவலைகளை மறக்கும் சக்தி, அல்லது எதையும் தாங்கும் சக்தியை இறைவன் கொடுத்திருக்காவிட்டால் அவளும் கருவாடாகி இருப்பாள்.
இப்போதெல்லாம் சுரப்பதற்கு அவள் கண்களில் நீர் இல்லை. ஆனால் ‘உம்மா எப்போ வருவாள்?’ என்ற தவிப்பு மட்டும் மாறவில்லை.
நஜீமா சாச்சி வீட்டில் ‘சாச்சி, சாச்சி அடிக்காதீங்க’ கதறல்கள் கேட்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்துச் சனங்கள் எட்டிப் பார்ப்பதோடு சரி.
ஒவ்வொரு மழலைத் தவறுகளுக்கும், ‘உம்மா வர மாட்டா, உம்மா வரமாட்டா’ என்று போடும் அடி. உதை பிரம்புத் தழும்புகள்.
ஊர் மக்களால் என்ன சொல்ல முடியும்? அல்லது நெஞ்சங்கள் நெகிழ்ந்து விடும் என்பதற்காகவா அவர்கள் வருவதில்லை?
நஜீமா சாச்சியின் பிள்ளைகள் அளைந்து ஒதுக்கும் மிச்சம் மிஞ்சியதுகளும், பழையதுகளும் தானே அவளுக்குப் பிரதான உணவு. சமையற் கட்டில் உறங்குவதற்காக அவளுக்குப் பழைய பன்பாய் இருக்கிறது. உடைமைகள் என்று இரு கவுன்களும், இரண்டாக உடைந்த சிலேட் துண்டுகளும் கிடக்கின்றன. சிலேட்டில் அன்று சாதித்த அப்பா, அம்மா எழுத்தோவியங்கள் மனதில் மட்டும் அழியாத சித்திரங்கள் ஆகிவிட்டன.
ஒவ்வொரு நாளும் வைகறையில் கடற்கரைக்குப் போவதும் பள்ளிக்கூடப் பழக்கத்தை நித்தியமாக்கிக் கொண்டாள். போனதும் மணற்பரப்பில் நின்று கடலை விரக்தியுடன் பார்த்தவாறே –
“அகிலம் ஆளும் ஆண்டவா..
உன் அருளைத் தேடி…”
கீதம் பாடி மணற் பரப்பில், ஆள்காட்டி விரலை அழுத்தி, அழுத்தி ‘அப்பா, அம்மா’ எழுதி முடித்த பிறகு தான் மீன் எடுக்கப் போவாள்.
அன்று கடற்தொழில் இல்லை.
அத்தகைய நாட்கனில் தூரத்து அலுவல்களைப் பார்ப் பதற்காக கிராமத்தவர்கள் காலையிலேயே போய் விடுவார்கள். பெரும்பாலும் நடுத்தர வயது ஆண்கள் குடில்களில் ஓய்வெடுப்பார்கள்.
நஜீமா சாச்சி பிள்ளைகள் சகிதம் பளிச்சென்று உடுத்தி பயணம் கிளம்பி விட்டார்கள். பர்ஹானா மட்டும் வீட்டுக் காவல்.
எப்போதும் இல்லாமல் அன்று பர்ஹானாவின் உள்ளத்தில் உறைந்து போயிருந்த ஓர் ஆசை உயிர் பெற்றுக் கொண்டது.
எப்படியாவது சகீலாவின் கொப்பி புத்தகங்களை எடுத்துப் பார்க்க வேண்டும்.
சகீலாவின் எழுத்துக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன.
சிரமப்பட்டு எழுத்துக்களைச் சேர்த்து, படிக்க முயற்சி. படுதோல்வி.
“அல்லாஹ் மிகப் பெரியவன், அவன் அருள்”
ஒரு கொப்பியிலிருந்து தாளைக் கிழித்து, எழுதும் பிரயத்தனத்தில் நேரம் வஞ்சித்து விட்டது.
வீட்டார் பிரவேசித்து, கையும் மெய்யுமாகப் பிடிபட்டு –
மீண்டும் ஒரு சூறாவளி-
“டீயேய் கள்ளி, எத்தனை நாளடி இந்தக் கூத்து”
பர்ஹானாவின் ஓலம் கடலைப் பிளந்தது.
இந்த முறை ஊரவர் ஒரு தீர்மாணத்துடன் தான் ஆக்ரோசத்துடன் வந்தார்களோ!
பர்ஹானாவின் கையில் நெருப்புக் கொள்ளியால் சூடு போடப்பட்டிருந்தது.
நடந்தவற்றை எல்லாம் உரிய முறைப்படி ஊர் மரைக்காருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
ஊர் மரைக்கார் அப்துல் வாஹித் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சலசலப்பின்றி சமூக சேவை செய்யும் கனவான். ஊர் குடும்பங்களில் எழும் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவில் நிவாரணம் அளிப்பதில் ஆர்வமுடையவர். முறைப்பாடு கொடுத்த கையோடு அன்னாரை நஜீமாவின் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டி விட்டார்கள் ஊரவர்கள்.
நஜீமாவுக்கோ பேரதிர்ச்சி.
மரைக்கார் முதலில் காயத்தைப் பார்வையிட்டு சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய்தார்.
தந்தைக்குப் பின் தாயும் மௌத்தான பிறகு, பர்ஹானாவின் நிலையை அவர் அறிந்திருந்தார். அதற்கு ஒரு பரிகாரத்தை அவர் யோசிக்காமல் இருக்கவில்லை.
“நஜீமா, ஊர் ஜமாத் மொறப்பாடு கொடுத்திருக்காங்க, அப்படி ‘ஒண்டு வந்தாக்கரியம் நாங்க விசாரிக்கிறது கடமை. மரைக்கார் என்ற மொறையில் நான் சில ஒழுங்குகளை செய்ய வேண்டியிருக்கு. எதுக்கும் ஒரு கிழமைக்குப் பொறகு என்னை வந்து கண்டு கொள்ளுங்க?”
ஒரு வாரம் கழிந்தது.
மீண்டும் மரைக்கார் அவசர அழைப்பு விடுத்திருந்தார்.
நஜீமா குமுறினாள்.
உறவினள் சுலைஹாவை அழைத்தாள்,
“வாடீ, போய் கேப்பம். எண்ட பிள்ளையெண்டா என்ன, ராத்தாட பிள்ளை யெண்டா என்ன? நான் அடிப்பன், வெட்டுவன், சுடுவன்.
போனதும் மரைக்காரின் மனைவி மரியத்தின் இதமான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ காத்திருந்தது.
“வாங்க நஜீமா, இது யாரு சுலைஹாவா? வாங்க”
மரைக்கார் பேசினார் –
“நான் சொல்றத நல்லா கேட்கணும். நஜீமா நீங்க உங்கட ராத்தாட புள்ள பர்ஹானாவுக்குச் செயத கொடுமைகளை பக்கம் பக்கமா எழுதி, இத விசாரிக்கனும் எண்டு ஐம்பது பேருக்கு மேல் ஒப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறாங்க”
“பர்ஹானா எனக்கு மகள், நா அவள அடிச்சிதான் வளப்பேன். அதக்கேக்க ஊர வங்க யாரு?”
“நீங்க பர்ஹானாவ வளக்கிற லச்சணம் முழு ஊருக்கும் தெரியும். எப்பவாவது ஒரு மொறப்பாடுவரும் என்றும் எனக்கு நல்லாத் தெரியும்”
மரைக்கார் தொடர்ந்தார் –
“இங்க பாருங்க நஜீமா, பர்ஹானாவ நீங்க மகள் எண்டு நெச்சா, நீங்க அப்படி செய்ய மாட்டீங்க. இப்ப அவளுக்குப் பாதுகாப்பு இல்ல”.
“அப்ப நீங்க அவள என்னிடமிருந்து பிரிக்கவா போறீங்க. அப்ப நா கோர்ட்ல வழக்கு தாக்கல் செய்றன். பொலிஸ் கோர்ட் தீர்மானிக்கட்டும்”
“ஸ் நஜீமா அவசரப்படாம, ஆத்திரப்படாம முழுதயும் கேளுங்க”
“என்னப் பொறுத்தளவில ஒரு பெண்ண பள்ளிவாசல் விசாரணைக்கே இழுத்து அலையவைக்க விரும்பல்ல. நீங்களோ பொலிசு, கோர்ட் என்று பேசுறீங்க. சரி, நான் கொழும்புக்கு போனாப்பில, ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கன். நாங்க பள்ளியில விசாரிச்சி, உலமாகிட்ட ‘பத்வா’ வாங்கி தண்டனை கொடுத்து யாருக்கு என்ன லாபம்? அதவிட நீங்களே விரும்பினா இறைவனுக்காக…”
பர்ஹானாவுக்கு நல்ல ‘நசீபு’ இருக்கு. நீங்க கோர்ட்டுக்கு இழுத்து எங்கட சமூகத்த கீறிக்காட்டினா. ஊர் மக்கள் பர்ஹானாவுக்குத்தான் முழுக்க முழுக்க நியாயம் பேசும்.
நான் இதப்பத்தி முந்தியே யோசிச்சன். அவர் கொழும்பில் ஒரு நல்ல ஹுஜியார், சொத்துப் பத்துள்ள மனிசன். அவர் ஒரு அனாதை ஆசிரமம் நடத்துகிறார். பெயர்தான் அப்படி. ஆனா அதுக்குள்ள எல்லாரும் சொந்தப் பிள்ளைகள் தான். நல்ல உணவு, உடை, கல்வி, உயர் கல்வி, மார்க்கக் கல்வி எல்லாம்…
பர்ஹானாவுக்கு அதில் இடம் கிடைச்சது ஆண்டவனுடைய நாட்டம்தான். எங்கட பகுதியில் எத்தனை கிராமங்கள் இருக்கு, ஆலங்குடா, முகத்துவாரம், ‘டச்பே’ திகழி, கண்டக்குழி, கண்டக்குடா. பர்ஹானாவுக்கு மட்டுந்தான் இடம். மிகக் கஷ்டப்படுகிற அனாதைப் பிள்ளைகளுக்கு அதுவும் ஒரு பத்து, பன்னிரண்டு பேர் மட்டுந்தான். அந்த வகையில் எங்கட ஊருக்கு பெருமை. நஜீமா என்ன செல்றீங்க. நீங்க விரும்பினா அங்க போய் புள்ளைய பாத்திட்டு வரலாம்தானே!
“…”
நாங்க ஐந்து நேரமும் தொழுறவங்க. ஈமான் கொண்டிருக்கிறோம் நாங்க செய்த நன்மை தீமைக்கு விசாரணை, தீர்ப்பு நாளில் தண்டனை இருக்கு.
இதைக் கேட்டதும் நஜீமாவின் உள்ளத்தைப் பிழிந்தெடுப்பது போல் ஏதோ ஒன்று…
அவளுக்கும் ஓர் இதயம். அவ்விதய வாசலுக்கு போடப்பட்டிருந்த வரம்புகளை உடைத்துக் கொண்டு, அங்கு மனிதாபிமானம் விழித்துக் கொண்டு குமுறி-
மரைக்காரை ஒரு கை பார்க்க வேண்டும் என்று போனவளின் கண்களிலிருந்து அலை, அலையாக பொங்குகிறது.
மரைக்கார் மௌனத்தைக் கலைத்தார்.
“நஜீமா இனி யோசிச்சி ஒரு முடிவுக்கு வாங்க மரத்தில உள்ள காயை அடிச்சி கனிய வைக்கிறதவிட, தானாகக் கனியனும். ஒரு அனாதைப் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கிறதால, ஹாஜியாருக்கு என்ன லாபம் என்று யோசிக்கிறீங்களா? அனாதைகளைப் பராமரிப்பவங்க சொர்க்கத்தில அண்ணல் நபிகளாரோடு நெருங்கி இருப்பாங்க”
“…”
“ஆமா நஜீமா. அனாதைகளுக்கு உணவு கொடுப்பவர்களை, ஆண்டவன் நிச்சயமாக சுவனத்தில் நுழைய வைப்பான்” கூறிவிட்டு மரைக்கார் அலுவலாய் உள்ளே போனார்.
அதற்கு மேலும் நஜீமாவால் அவ்விடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. விருட்டென்று நடந்துவிட்டார்கள்.
அப்பொழுது தேநீர்க் கோப்பைகளுடன் வந்த மரியமும். மரைக்காரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நஜீமாவின் நடையில் புதுமையும் தாய்மையும் பளிசிட்டது.
பர்ஹானாவைக் கௌவிப் பிடித்துக் கொண்டிருந்த தூண்டில் அறுந்து விட்டது போலும்.
நஜீமா போகிற போக்கைப் பார்த்தால் பர்ஹானாவையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போல்…
– சு ஊனுல் இஸ்லாம் – ஜனவரி, மார்ச் 1984.
– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.
– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல.