நிழல் தின்னும் மனக் குரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 9,447 
 

அகிலனைப் பொறுத்தவரை சுவிஸ் மண்ணோடு அவனின் தடம் பதித்த வாழ்க்கை வேள்வி வெறும் புறம் போக்கான வரட்டுச் சங்கதிகளைக் கொண்ட காசு நிலை பெறுவதற்கு மட்டுமன்று அதையும் தாண்டிப் பெற்ற தந்தையின் கடமை யோகம் தவறிய தடம் புரண்ட போக்கினால் அவன் தோள் மீது விழுந்த மிகப் பெரிய அளவிலான தார்மீகப் பொறுப்புக்களை ஒரு பங்கமும் நேராமல் நிறைவேற்றி வைப்பதற்காகவே அவன் சுவிஸ்ட்லாந்துக்கு வந்து சேர்ந்தான்

கள்ள விசா எடுத்து அங்கு வருவதற்குக் கூட நிதி நிலைமை இடம் கொடாததால் வேறு வழியின்றிக் கப்பலில் தொழில் புரிந்த மார்க்கமாகவே அவனின் சுவிஸ் கனவு கை கூடியது ஆறு மாதங்களாக அதில் கஷ்டப்பட்டது இன்னும் மறக்கவில்லை யாராவது சொந்தக்காரர் மனம் வைத்திருந்தால் அவன் லண்டனுக்கே வந்து சேர்ந்திருப்பான் அம்மா அதற்காக வட்டிக்குக் கடன் கேட்ட போது சாட்சிக் கையெழுத்துப் போட யாராவது முன் வந்தால் தருவதாக அவர்கள் கூறிய போது அம்மா தன் கையறு நிலைமையை எடுத்துச் சொல்லியும் அது நடக்கவில்லை எல்லோரும் கையை விரித்து விட்டார்கள்

இருக்கிற காசை வைத்துக் கொண்டு ஒரு கப்பல் பணியாளனாக வந்து சேர்ந்தவன் இடை நடுவில் குதித்துக் கள்ளமாகக் சுவிஸில் இறங்கியது அது ஒரு தனிக் கதை

சுவிஸ்லாந்து மிகவும் அழகிய நகரம் லண்டனை விடப் பன்மடங்கு அழகு அதை வர்ணிக்க வார்த்தைகள் போதாது அவன் ஒரு நல்ல கவிஞனாக இருந்திருந்தால் அதன் பனிச் சாரல் படிந்து பள பளக்கும் பேரழகை மேலான கவிதை மொழியிலேயே உயிர்ப்பித்துக் காட்டியிருப்பான் அப்படியொரு கவிதை மொழி பேசுகிற அளவுக்கு அவனுக்குத் தமிழும் வராது எனினும் கணக்குப் பாடம் நன்றாக வரும் அப்படியான அறிவுக் கூர்மையும் புத்தித்திறனும் கொண்டவன் அவன் அப்பா மட்டும் தன் கடமையை சரிவரச் செய்திருந்தால் இன்று அவன் கதையே வேறு

சுவிஸ் வந்த பிறகு ஒரு ரெஸ்ரோரெண்டில் அவனுக்குச் சமையல் வேலை தான். வீட்டில் இருந்த வரைக்கும் ஒரு தேனீர் கூடப் போட வராது அவனுக்கு. இப்போது தங்கைகளைக் கரை சேர்க்கும் பொருட்டு சுய கெளரவம் விட்டொழிந்த அவனது இந்தத் தியாக வேள்வியின் பலனாக உச்சக் கட்டத் துரித கதியில் இன்றைய நடை முறை வாழ்க்கைப் போக்குக்கு இணையாக அவன் மட்டுமல்ல அவன் குடும்பமும் தலை நிமிர்ந்து ஒளிச் சவாரி செய்வது என்னவோ உண்மை தான் அது மட்டும் தான் வாழ்க்கையென்று நம்பி நிலை சரிகின்ற மந்தப் போக்கையும் தாண்டி எதிலும் பங்கமுற்றுத் தோற்றுப் போகாத ஒழுக்க விழுமியங்களின் நடை பிசகாத பெருமைகளையே தனது வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகின்ற அவன் பணமொன்றையே பெரிதாக நினைவு கூர்ந்து வாழ்க்கையைக் கழிக்கும் மிகச் சாதாரண மனிதர்களோடு உறவு கொண்டாடும் மனப் போக்கின்றி வேலை நேரம் தவிர்ந்த மிகுதி நேரங்களில் அவனின் பொழுது தனிமையிலேயே கழிந்து போகும் அவனுக்கென்று தனியாக நண்பர்வட்டம் ஏதுமின்றி அவன் கரை ஒதுங்கி இருக்க நேர்ந்ததால் வெள்ளைக்காரனின் கெட்ட பழக்கங்கள் எதுவும் அவனிடம் கிடையாது சிகரெட்டைக் கூட அவன் தொடுவதில்லை

அவனுக்கு நான்கு தங்கைகள் அவர்களில் மூத்தவளான பூரணிக்குக் கல்யாணம் நடந்த புதிது ஒரு லண்டன் மாப்பிள்ளை தான் அவளுக்கு அதுவும் நிரந்தர விசா கிடைக்காத பையன் என்பதால் சிங்கப்பூரில் வைத்துத் தான் அவர்களின் கல்யாணத்தை முடிக்க வேண்டியதாயிற்று அகிலனுக்கும் இன்னும் விசா கிடைக்காததால் அவனாலும் போக முடியவில்லை பூரணிக்குத் துணையாக அம்மா மட்டும் தான் போய் வந்தாள் அப்பா ஏனோ இந்தப் பொறுப்பையும் தட்டிக் கழித்து விட்டது அவனுக்குப் பெரும் மனவருத்தத்தை அளீத்த்தது

அப்படிப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிற நிலையில் அம்மா என்றுமே இருந்ததில்லை இதற்காக அவள் மனதில் தான் எத்தனை காயங்கள் அவள் இதைப் பற்றி வெளிப்படையாக வாய் திறந்து பேசாவிட்டாலும் அவனுக்குத் தெரியும் எத்தனையோ ரணங்களோடு அவள் சுமக்கின்ற சிலுவையின் வலி அவன் அறியாதது அல்ல

அச் சிலுவையைப் பிடுங்கி எறிந்து அவளைக் காப்பாற்றி மீட்டெடுத்த சந்தோஷத்தோடு அவன் இருந்த வேளையில் தான் ஒரு எதிர் மறையான விபரீதச் சூழலுக்கு அவன் முகம் கொடுக்க நேர்ந்தது சூரிச்சிலிருந்து தனது மகன் ஒருவனின் பிறந்த நாள் விழாவுக்கு அழைப்பு விடுக்க ஒரு சமயம் கிரி வந்திருந்தான் அவனைக் காண்பதற்கு அவன் ஊரில் வாழ்ந்த காலத்தில் இந்தக் கிரியைப் பணக்காரக் களையில் கொடி கட்டிப் பறக்கும் ஒரு பெரிய மனிதனாகவே கண்ட ஞாபகம் அப்பவெல்லாம் சவூதிப் பணம் தான். .சுவிஸ் காசும் அதன் மெருகேறிய மனிதர்களும் பின்னால் வந்த நிழல் தொடரான கதை முடிச்சுக்கள் ஒவ்வொரு நிழலாக முடிச்சவிழ்ந்து வாழ்ந்து மறைவதே இறுதி முடிவு

இந்தக் கிரி சவூதிப் பணம் போதாதென்று தற்போது சுவிஸுக்கு வந்து குடும்பத்தோடு பணக்கடலில் நீச்சலத்து வருவதை எதிர் கொண்டவாறே அவனை மேலோட்டமாக வரவேற்றபடி அகிலன் கேட்டான்

“வாங்கோ கிரியண்ணை எப்படியிருக்கிறியள்?”

“எனக்கென்ன சோஷல் வேர்க் என்ற பெயரிலை கையிலை காசு புரளுது அதையும் வட்டிக்கு விடுறன் ஊரிலை நாலைஞ்சு காணிகள் வாங்கி விட்டிருக்கிறன் பிரச்சனை தீர்ந்ததாலை எக்கச்சக்க விலைக்கு விக்காலாம் தானே”

இதைக் கேட்டு அகிலன் மனம் நொந்தான். எங்கே போனாலும் இந்த வரட்டுப் புத்தி போகாது என்று பட்டது. ஒரு காலத்தில் குடும்பத்தை சுவிஸுக்கு எடுப்பதற்காகக் கிரி தன்னிடம் வட்டியில்லாத கடனாக மூன்று இலட்சம் வாங்கியதே ஒரு கனவு போல் தோன்றியது. இப்போது அவன் இப்படி வட்டிக் காசை விடுவது எந்த விதத்தில் நியாயமாகுமென்று அவனுக்குப் பிடிபட மறுத்தது .இதை எடுத்துச் சொன்னால் அவன் புரிந்து கொள்ளவா போகிறான்? அவன் அப்படியென்றால் மனைவி சுகிர்தம் இன்னும் ஒரு படி மேலே. .அவளின் குணங்களை உரசிப் பார்க்க இது ஒரு நல்ல தருணம்

அதற்குச் சூரிச்சுக்கல்லவா போக வேண்டும். மலை சரிவுகள் தான் வழியெல்லாம்.. ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கும் போய் வர.. கார் பயணமென்றாலும் மூச்சு வாங்கும்.. இருந்தாலும் கிரியின் முகத்திற்காக மட்டுமே இந்தப் பயணம். அதுவும் நேரில் வந்து அழைத்த பிறகு போகாமல் விடுவது கெளரவக் குறைச்சல்

பெரிய எடுப்பிலே அந்த பிறந்த நாள் விழா களை கட்டி நிற்கும்.. தங்க முலாம் பூசிய அழைப்பிதழே சொல்கிறது ஒரு ராஜ விழாவாக மண்டபம் முழுக்கக் கலர் கலராக ஒளி பிரகாசித்து அது நிற்குமென்று கூட்டம் வேறு அலை மோதும். குடிக் கச்சேரி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதில் நானும் ஒருவனா? அல்லது வேறானவனா? இல்லை இந்தச் சங்கமிப்புகள் என்ரை புறப்பிரக்ஞையாய் வருகிற நிழல் சங்கதிகள் தான் என்ற தீர்க்கமான முடிவோடு இருக்கிற எனக்குள், இப்படி வரப் போகிற சூழ்நிலைச் சாபம் என்னை ஒன்றும் செய்து விடாது நான் நானாகவே இருப்பேன்” இது சத்தியம்”

ஒரு மங்களகரமான வெள்ளிக் கிழமையென்று ஞாபகம் தீட்டுக் குளித்தே பழகிய மனிதர்களுக்குக் கிழமை எதுவாயிருந்தாலென்ன பணத்துக்காக எப்படியும் மாறலாமென்ற தளும்பல் நிலை வந்த பின் சத்திய தரிசனமான வாழ்வொழுக்கமென்பது எப்பவோ முடிந்து போன பழங்கதை தான் . கிரி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டாடும் அந்த விழாவிலே தனக்கான வாழ்வியல் சிறப்புகளுடன் அங்கு பிரசன்னமாகித் தான் வந்திருப்பது எவ்வளவு தூரத்துக்கு மிக நெருக்கமான உள்ளார்ந்த பார்வையுடன் எடுபடும் என்பது அகிலனைப் பொறுத்த வரை வெறும் பகற்கனவாகவே தெரிந்தது

விழாவுக்கு அவன் வரும் போது அலங்கார மேடையில் கேக் வெட்டும் சடங்கு முடிந்து விருந்து களை கட்டி நடப்பதைப் பார்த்து விட்டு வாசலில் நிலை தளர்ந்து அவன் நிற்கும் போது அவனை வரவேற்பதற்காகச் சுகிர்தம் அவசரமாக உள்ளிருந்து ஓடி வந்தாள்

வேடம் கட்டி ஆடும் ஒரு நிழற் பொம்மை போலப் பணக்காரக்களையினால் மெருகேறிப் பள பளக்கும் டாம்பீக அழகோடு அவள் நிற்பதை வெறும் காட்சி மயக்கமாகவே எதிர் கொண்டு மனம் சலித்து விட்ட நிலையில் ஒன்றும் பேசத் தோன்றாது வாயடைத்து மெளனமாக அவன் நிற்பதைப் பார்த்து விட்டு அவள் குரலை உயர்த்திச் சொன்னாள்.

“வெட்கப்படாமல் உள்ளே வாங்கோ அகில் எல்லாம் எங்கடை ஆட்கள் தான் “

அவள் அப்படிச் சொன்ன போது அவனிடம் நிறையக் கேள்விகள் எழுந்தன. நல்லதொரு வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் உயிர்த் துடிப்புள்ள சத்தியத்தையே மையமாகக் கொண்டு இயங்கும் நடை முறை வாழ்க்கையின் புனிதங்களே அப்போது நடைபெறுகின்ற அந்த விழாவில் காற்றில் அடிபட்டுக் காணாமல் போயிருப்பது குறித்துத் தன் நெஞ்சில் கொந்தளிக்கின்ற கேள்வி அலைகளின் பலனாக மூச்சு முட்டுகின்ற துயரத்திலே மனம் கனத்துப் போய் அதை வெளிக்காட்ட விரும்பாமல் விளையாட்டாக அவன் கேட்டான் “

“என்ன சொன்னியள்? இதுகள் எங்கடை சனமோ?””

“அகில் இப்ப சண்டை பிடிக்கிற நேரமே? வந்து சாப்பிடுங்கோ பிறகு ஆறுதலாய் நான் இதைப் பற்றி உங்களுக்க்குக் கதை சொல்லுறன்”

அவள் நெஞ்சை நிமிர்த்திக் கனத்த குரலில் உள் விழிப்பு வராமல் இதைச் சொன்ன போது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. .நான் கேட்டது என்னவோ. இவள் என்ன சொல்லி விட்டுப் போகிறாள்? ஏதோ கதை சொல்லப் போகிறாளாமே!. முதலிலை கை நனைப்பம் . பிறகு இவள் சொல்லுகிற கதையைக் கேப்பம். குளிரிலை பசி வந்தால் பிடுங்கி எடுக்கும். எல்லாம் அசைவ உணவு தான். அங்கு பன்றிக் கறி மாட்டுக் கறி எதுவும் சாப்பிடக் கூடாதென்று அம்மாவின் அன்பு வேண்டுகோள். சைவ உணவு தான் அவளின் பிறவிப் பெருமை. அப்பா அதற்கு விதி விலக்கு. அவர் ஒரு புலால் பிரியன் அவர் பிறந்து வளர்ந்த அந்த மாமிசக் கோட்டைக்குள் அம்மா போய் விழ நேர்ந்தது தான் மிகப் பெரிய கொடுமை. எல்லாம் தலையெழுத்து அப்பாவுக்காக அவள் எவ்வளவோ இழந்திருகிறாள் சுத்தம் பாராது இரத்தம் ஒழுக ஒழுக மீன் வெட்டிச் சமைக்க நேர்ந்தது எதைச் சாதித்துப் பெற?

.குடிக் கச்சேரி ஒரு பக்கம். .கிரியும் நிறையக் குடித்திருக்க வேண்டும். அந்தப் பக்கத்திலிருந்து தள்ளாடியபடி அவன் வருவது நிழற் படமாகக் கண்ணை உறுத்திற்று

அந்த நிழற்படலம் நீங்காத நிலையிலேயே அவன் சாப்பிடும் போது அருகே வந்து நின்று சுகிர்தம் முகத்தில் சிரிப்பு வழியக் கேட்டாள்

“என்ன அகில் சிங்கப்பூரிலை உங்கடை தங்கைச்சி பூரணிக்குக் கல்யாணம் முடிஞ்சுதெண்டு கேள்விப்பட்டனான். .கொம்மாதான் கூடப் போனவா என்றும் அறிஞ்சன்.. கையிலை பிடிச்சுக் குழந்தை மாதிரி ஆர் அவவைக் கூட்டிக் கொண்டு போனது?

அம்மாவைப் பற்றி சுகிர்தம் அப்போது கேட்ட அந்தக் கேள்வியின் சாரத்தை மிகப் பாரதூரமான ஒரு தார்மீகக் குற்றமாக உள் வாங்கி உணர்ந்து மன வருத்தம் கொண்ட அவன், கொஞ்சமும் முன் யோசனையின்றி அம்மாவின் எதிலும் நிலை குலையாத ஆன்மீக பலமான புனித செயற்பாடுகளையே கொச்சைபடுத்துகிற மாதிரி அவளைச் சந்திக்கு இழுத்துக் கேவலப்படுத்துவதற்கென்றே சுகிர்தம் வாய் திறந்து கேட்டு விட்ட அக் கேள்விக் கணையின் ரணத்தை மனதில் வலியுடன் சுமந்தவாறே பாதி உண்ட நிலையில் மேலே சாப்பிட மனம் வராமல், அவளை நிமிர்ந்து பார்த்துக் கண்கள் கலங்கியவாறே உணர்ச்சி சூடு பறக்கக் கேட்டான் அவன்

“போதும் நிறுத்துங்கோ சுகிர்தமக்கா என்ன கேட்டியள்? அம்மா குழந்தை மாதிரி என்று உங்களுக்கு ஆர் சொன்னது?”

“ஏன் நான் கேட்டதிலை என்ன பிழையென்று சொல்லும். நான் வாயை மூடுறன். எனக்கென்ன தெரியும்? ஊரிலை எல்லோரும் கதைச்சததைத் தானே இப்ப எனக்குக் கேட்கத் தோன்றியது “

“அப்படிக் கதைச்சதாலை அதுவே உண்மையாகி விடுமா? எங்கடை சனங்கள் நாக்கிலை நரம்பில்லாமல் எவ்வளோ கதைப்பினம்.. ஊரிலை வாத்தியாரின் பெண் பிள்ளைகளுக்குச் செய்காரியம் ஒன்றும் தெரியாது பால் குடி பபாக்கள் என்று. அங்கை கதைச்சதைக் கேட்டு வைச்சுக் கொண்டு தானே பெரிசாய் அம்மாவைப் பற்றி இப்படியொரு அபத்தக் கதை எனக்குச் சொல்ல வந்திட்டியள்.. அப்பா என்ற கையாலாகாத மனிசனை வைத்துக் கொண்டு எங்களைப் பெற்றுப் போட்ட பாவத்துக்காக எங்களை வளர்த்து ஆளாக்குறதுக்காக அவ எப்படியெல்லாமோ தீக்குளிச்சுப் பட்ட காயங்களை அறியாமல் மனம் போன போக்கிலே பேசி விட்ட உங்களை மட்டுமல்ல அப்படியிருக்கிற ஆரையும் அவ்வளவு எளிதில் மன்னித்து ஏற்றுக் கொள்கிற நிலையிலை நான் இல்லை இப்படிப் பாவங்களுகே பழக்கப்பட்டிருந்தாலும் வேஷத்தைக் காட்டி மயக்குகிற புத்தி இருக்கும் வரை மனிதரை வார்த்தைகளாலை கொன்று போடுகிற தீட்டுச் சங்கதிகள் மறைந்து தான் போகும் இங்கு இருக்கவே எனக்குப் பிடிக்கேலை .நான் போயிட்டு வாறன்”

பெற்ற தாயையே சந்திக்கு இழுத்துக் கேவலப்படுத்திவிட்ட தர்மாவேசத்தினால் மனம் திறந்து அவன் கூறிய நியாய வார்த்தைகளின் உக்கிரம் தாங்க முடியாமல் விருந்தினர்களை வரவேற்கும் தோரணையில் முகமூடி தரித்து ஓடும் ஒரு கொலையாளி போல் சத்திய தரிசனமாக எரித்தே கொன்று போடும் ஒரு சூரியனாய் அவதாரமெடுத்துப் பேசித்தீர்த்து விட்ட அவன் முகத்தில் விழிக்கவே பின் வாங்கி அஞ்சி ஓடுகிற கணக்கில் அந்தத் தரங்கெட்ட சுகிர்தத்தின் நிலையிருந்தது. அவன் போக எழுந்த போதோ அல்லது அதற்குச் சற்று முன்னதாகவோ அவள் இடத்தைக் காலி செய்து விட்டுப் போய் மறைந்த காலடித் தடங்களை மட்டுமே கண்களுக்கு வெளிச்சமாகக் கண்டு மனம் நொந்த வலி மாறாமலே அவனும் போக எழுந்தான் இப்படியொரு சம்பவ அனர்த்தம் அதனோடு தொடர்பான சுகிர்தம் கூறி விட்ட அம்மாவைப் பற்றிய மிகவும் அபத்தமான வார்த்தைப் புனிதம் இழந்த பழிச் சொல் இன்று தோன்றி மறைந்து விட்ட வெறும் கனவாகத் தன்னுடனேயே புரையோடி மறைந்து போக வேண்டுமென்பதே இப்போதைய அவனின் மனம் சிலிர்க்கும் பிராத்தனையாக இருந்தது.. ஊரிலிருக்கும் அம்மா இதை அறிந்தால் மீண்டும் ஒருமுறை அவள் தன்னைத் தானே பரீட்சித்த்துத் தீக்குளிக்க நேரிடும் காரிய சாதனைகள் புரிந்தும் கர்ம போகம் ஆற்றியும் வாழ்வின் சிகரத்துக்கே போய் ஒளிர்ந்து பிரகாசிக்கும் உயிர்த் தீபமான என்ரை அம்மாவைப் பற்றி இவ்வளவு மட்டமான கருத்துச் சிதைவா சுகிர்தத்தின் பார்வையில் ? இதைச் சரி செய்து அவளுக்கு ஏற்பட்ட பார்வைக் கோளாறிலிருந்து அம்மாவை விடுவித்து அவ நிஜத்தை சாட்சி கொண்டு நிரூபிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புக் காரணமாகவே உள்ளேயும் வெளியேயும் தீப்பற்றி எரிகிற மாதிரி எனக்குள்ளே கருகி ஒழிந்து விட்ட நிலையில் இதைப் பகிரங்கப்படுத்தி அம்மாவுக்குக் கூறினால் என்னவகும்? இதற்காகவே அவவும் தீக்குளித்து மறுபடியும் தன்னைப் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கினால் அது இன்னும் கொடுமை”

அதிலிருந்து அவளைக் காப்பாற்றியாக வேண்டிய மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமை யோகம் கருதியே அவனுள் கனன்று எரியும் இந்த மெளனத்தீ அது ஒரு கவசமாகத் தான் உள்ளே தீப்பற்றி எரிந்து போனாலும் நிச்சயம் அம்மாவைக் காப்பாற்றும் என்று அவனுக்கு நம்பிக்கை வந்தது அந்த உயிர்த்துவமான நம்பிக்கை ஒளியிலேயே வாழ்க்கை இன்னும் இயங்கி கொண்டிருப்பதாக அவன் மிகவும் பெருந்தன்மையுடன் நினைவு கூர்ந்தான்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *