நிழல்களும் நிஜங்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 2,159 
 
 

திடீரென விழிப்பு வர எழுந்த கமலாத்தா முன் அறையில் இன்னும் டி.வி ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள்.

ஆயா வாயை பிளந்து கொண்டு டி.வியை பார்த்தவாறே தூங்கிக்கொண்டிருந்தாள்.

சட்டென கோபம் வர டி.வியை அணைத்தாள். அணைத்த சத்தத்தில் விழித்துக்கொண்ட ஆயா “அட டி.வியைத்தான் கொஞ்சம் போடேன், பார்த்துக்கிட்டிருக்கேனுல்ல”

“ஆயா” இப்ப மணி என்ன தெரியுமா? வாயை மூடிகிட்டு தூங்கு, காரமாய் சொல்லி விட்டு போய் படுத்துக்கொண்டாள். இனி தூக்கம் வந்த மாதிரிதான். இந்த ஆத்தா ஏன் இப்படி டி.வி பைத்தியமாய் இருக்கிறாள்?

ஆறு மணிக்கு கதவை திறந்து வெளியே வந்த கமலாத்தா திண்ணையில் அய்யனை காணாது திகைத்தாள். இந்நேரத்துக்கு எங்கே போயிருக்கும்? நினைத்துக் கொண்டிருக்குபோதே “அம்மணி” குரல் கொடுத்து வந்தார். பால் கறக்க ஆள் வந்துடுச்சு, மணியானை கூப்பிட்டு பண்ணைய சுத்தம் செய்ய சொல்லிட்டு வந்தேன்.

இரு காப்பி கொண்டாரேன், உள்ளே நுழைய போகுமுன், மணியானுக்கும், பால்காரனுக்கும் சேத்து கொண்டாந்துரு. சரி என்று தலையாட்டிக்கொண்டே சென்றாள்.

கமலாத்தாளின் இரு பெண்களும், பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்ற பின்னால் அய்யனுக்கும், ஆயாவுக்கும் தட்டில் சாதத்தை போட்டுக்கொண்டு அப்படியே இவளுக்கும் தட்டில் சாப்பாட்டை போட்டுக்கொண்டு வந்தவள் முன் அறையில் காலை நீட்டி உட்கார்ந்திருந்த ஆயாவின் முன் ஒரு தட்டை வைத்து விட்டு அய்யனுக்கும், இவளுக்கும் எடுத்து வந்து திண்ணையில் அய்யனோடு உட்கார்ந்து இவளும் சாப்பிட்டாள்.

ஆயா வழக்கம்போல் முன் அறையில் தட்டில் வைத்து விட்டு போன ஆவி பறந்த சோற்றையும், அதன் மேல் ஊற்றியிருந்த குழம்பையும் தன் வற்றிப்போன குச்சி கைகளால் பிசைந்து சாப்பிட்டாள். “ஏன் புள்ளை தண்ணி கொண்டாந்து வைக்கலை. அப்பொழுதுதான் ஒரு கவளம் உள்ளே போயிருக்கும், அதற்குள் ஆயாவின் குரல் கேட்டதும் எழப்போன கமலாத்தாவை நீ இரு நான் போய் தண்ணி வச்சாரேன், சொல்லிக்கொண்டே ஒரு சொம்பு தண்ணீரை ஆயாவின் பக்கத்தில் கொண்டு வைத்து விட்டு வந்தார் அய்யன்.

கமலாத்தாளுக்கு ஆச்சர்யமாக இருந்தது, பொண்டாட்டிக்கு சேவகம் செய்வதற்கெல்லாம் அசராத அய்யன், எப்படி ஆயாவுடன் இத்தனை வருடங்கள் பேசாமல் இருக்கிறார்?

அய்யனிடம் இராத்திரி ஒரு மணிக்கு மேல் டி.வி ஓடிக்கொண்டிருந்ததையும், அதை அணைக்க போனால் ‘ஆயா’ டி.வியை போடு நான் பாக்கணும் என்று சொன்னதையும் சொன்னாள்.

அய்யன் சிரிப்புடன் இது இன்னைக்கு நேத்து புடிச்ச வியாதியில்லை, அந்த காலம் தொட்டே அவளுக்கு படம்னா உசிருதான்.

கமலாத்தாளுக்கும் பதினோரு மணி வரைக்கும் வேலை இல்லை, அதற்கு பின்னால்தான் மாட்டுக்கு தீவனம் வைக்கணும், அய்யனின் வாயை மெல்ல கிண்டினாள்,

அந்த காலமுன்னா எப்பத்திலிருந்து? அப்பவெல்லாம் டி.வி இருக்காதே?

சினிமா இருந்துச்சே ! ம்…அவள் முகத்தை பார்த்த அய்யன், இவள் கதை கேட்க ஆர்வமாய் இருப்பதை புரிந்து கொண்டவர் போல் அந்த கதையை ஏன் கேட்கறே? ஆரம்பித்தார்.

இன்றைய ஆயா அப்பொழுது இளம் குமரியாய் அலங்கரித்துக்கொண்டு, அம்மாவுடன்,அவர்கள் ஊர் கொட்டாயில் படம் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தார்கள்..

அம்மாவும், மகளும் படம் பார்க்க ஆர்வமாய் கிளம்பிக்கொண்டிருப்பதை மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்த ஆயாவின் அப்பாவிடம் இன்றைய அய்யன்

அன்றைக்கு இளைஞனாய்

மாமாவ் ஏன் அக்கா இப்படி சினிமா பைத்தியம் புடுச்சு அலையுது?

கல்யாணமான புதுசுல உங்க அக்காளை அடிக்கடி “கொட்டாயுக்கு” கூட்டிட்டு போவேன், கொஞ்ச வருசத்துலயே எனக்கு படம் பாக்கறதுல சலிப்பு வந்துடுச்சு, ஆனா இவளுக்கு அதிகமாயிடுச்சு, இப்பவெல்லாம் என்னை கண்டுக்கறேதே இல்லை, இவ இப்படி போறதுமில்லாம வயசு புள்ளையையும் கெடுத்து சினிமா பைத்தியம் புடிக்க வச்சிருக்கா?

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதை கூட லட்சியம் செய்யாமல் அம்மாவும், பெண்ணும், அவசரமாய் வெளியே ஓடுகிறார்கள்.

அன்று இவன் வீட்டில் ஏதோ வேலையாக இருக்க அக்கா வீட்டில் கூப்பிடுவதாக உறவுக்காரன் வந்து சொல்லவும் “அய்யன்” என்னவோ ஏதோவொன்று ஓடுகிறார்.

வீடு அமைதியாக இருக்கிறது, ஆயா மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டு கொண்டிருக்கிறாள். இந்த பக்கம் அக்கா தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பக்கத்தில் பெல்ட் கிடக்கிறது.நின்ற நிலையில் மாமா.முகம் சிவந்து இறுகி கிடக்கிறது.

சூழ்நிலையை புரிந்து கொள்ள நீண்ட நேரமாகவில்லை, அய்யனுக்கு. மாமா இருவரையும் பெல்ட்டால் அடித்திருக்கிறார் என்பது புரிந்தது.

உள்ளே நுழைந்த அய்யனிடம் மாமா ஒரே கேள்வியைத்தான் கேட்டார். என் பொண்ணை உனக்கு கட்டிக்க சம்மதமா?

திடீரென்ற கேள்விக்கு என்ன பதில் சொலவது என்று திகைத்து நின்ற அய்யன், சற்று தடுமாறினார்.

உனக்கு சம்மதமில்லை, அப்படித்தானே, இந்த மாதிரி சினிமா பைத்தியம் பிடிச்சு ஓடற பொண்ணை யாருக்குத்தான் பிடிக்கும்.

அதில்லை மாமா, இப்படி திடீருன்னு கேட்டா எப்படி, அப்பன் கிட்டே பேசிட்டு சொல்றேன்.

அதெல்லாம் நான் பேசிக்கறேன், உனக்கு சம்மதமா இல்லையான்னு மட்டும் சொல்லு.

சரி என்று தலையாட்டியவர்தான், காரியங்கள் மட மடவென நடந்தன. தாலி கட்டி முதல் நாள் இரவு அவள் சொன்ன வார்த்தை !…

எனக்கு உன்னைய புடிக்கலை, சினிமாவுல வர்ற மாதிரி இருக்கறயா? நீ எப்ப பார்த்தாலும், அழுக்கு வேட்டி சட்டையோட. குலுங்கு குலுங்கி அழுதாள்.

மனது நொறுங்கிப்போனார், என்ன செய்வது என்று தெரியவில்லை. இவர்கள் வாழ்க்கை வெளி உலகத்துக்கு கணவன் மனைவியாய் தெரிந்தது, அவ்வளவுதான்.

அப்புறம்தான் விசயம் தெரிந்தது, இவள் சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு இரயில் ஏற முயற்சித்திருக்கிறாள், நல்ல வேலை ஊர்க்காரர் யாரோ பார்த்து விட்டு மாமனுக்கு தகவல் தர அவர் ஆள் விட்டு இவளை பிடித்து வந்திருக்கிறார். எல்லாம் சரி இவருடைய வாழ்க்கையை அல்லவா காவு கொடுத்திருக்கிறார். உன்னைய பிடிக்கவேயில்லை, எனக்கு சினிமாதான் வேணும் என்பவளிடம் எப்படி குடும்பம் நடத்துவது? புரியாமல் திகைத்தார்.இப்படி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. நல்ல வேளை, மாமனுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து மீண்டும் ஓடிப்போவதை பற்றி நினைக்காமல் இருந்தாள்.

ஒரு நாள் மாமன் இவரை அழைத்து மாப்பிள்ளை என்னைய மன்னிச்சுடு, அவசரப்பட்டு உன்னைய மாட்டி விட்டுட்டேன், நானே அதை சரி பண்ணிடறேன் மகளை வந்து கூட்டிக்கொண்டு போனார்.

என்ன நடந்தது என்று தெரியாது, மூணு மாசம் கழிச்சு வந்தா, என் கூட குடும்பம் நடததுனா, ஆனா அவ சினிமாவுக்கு போறதை பத்தி எதுவும் பேசக்கூடாது, உன் கூட வாழறனனேன்னு மட்டும் சந்தோசப்படு. இவ்வளவுதான் அவ பேசுனா?

அதுக்கப்புறம் உங்கப்பன் பிறந்தான், அவன் பிறந்து பத்து வயசாகறப்பவே உங்க ஆயாவோட பேச்சு வார்த்தையை நிறுத்திட்டேன். நீ ஆறாவது படிக்கறப்பவே உன் அப்பனும், அம்மாளும் பழனி காவடிக்கு போகும்போது லாரி வந்து மோதிடுச்சு. அதுக்கப்புறம் உன்னைய வளர்த்தி கட்டிக்கொடுத்து…ம்.. நல்ல வேலை நீ அனுசரனையா இருக்கறதுனால உன் புருசன் எதைய பத்தியும் கவலைப்படாம பட்டாளத்துல வேலை செய்ய முடியுது.

உன் ஆத்தா இதை பத்தியெல்லாம் கவலைப்படவே இல்லை. தினமும், இல்லாட்டி இரண்டு மூணு நாளைக்கு ஒருக்கா ஒரு படம் பார்த்துடுவா.

வயசாக வயசாக படம் பாக்கறது குறைஞ்சு, அப்புறம் டி.வி வந்தவுடனே அதுக்குள்ளேயே முழுகிட்டா. சொன்னவர் திடீரென சிரித்தார்.

ஏங்கய்யா சிரிக்கறீங்க?

ஒண்ணுமில்லை, இத்தனை வருசமா படம் பாக்கறாளே, யாரு நடிக்கறாங்க, என்ன கதை எதுவும் தெரியாது. அவ கிட்டே போய் கேட்டுப்பாரு, இன்னைக்கு வர்ற படத்துல யார் நடிச்சிருக்காங்கன்னு. அவ காலத்துல இருந்த கதாநாயகன்தான் நடிச்சிருக்காருன்னு சொல்லுவா. அவங்கல்லாம் வயசாயி மறைஞ்சு போய் வருசக்கணக்காச்சு. இவளுக்கு அதுவெல்லாம் ஒண்ணும் தெரியாது. அவ பாக்கற எல்லா படத்துலயும், இப்ப வர்ற டி,வியில வர்ற கதையிலயும் சரி அவ காலத்துல் நடிச்ச ஹீரோதான் நடிச்சுகிட்டு இருக்காங்கன்னு இன்னும் நினைச்சுகிட்டு இருக்கா.

கமலாத்தாளுக்கும் சிரிப்பு அதிகமாகி புரையேறியது.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *