சுசீலா,சுசீலா………… என்ன வீட்ல ஒருத்தரையும் காணோம்,கதவைத் திறந்து வெச்சுட்டு எங்க போயிட்டா? என்றவாறு சுசீலாவின் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி (நந்தினி – சுசீலா குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்).வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சுசீலாவின் மகன் அரவிந்திடம், உங்க அம்மா எங்கே? காலையிலிருந்து ஆளையே காணோம் என்று கேட்டாள்.
அம்மா வெளியே போயிருக்காங்க என்றான் அரவிந்த்…
அப்படியா? சரி வந்ததும் நான் வந்துட்டு போனதா சொல்லிடு, மறந்துடாத என்ன?
சரி அக்கா அம்மா வந்ததும் மறக்காம சொல்லிடறேன்.
17 வயதே நிரம்பிய அரவிந்த், 12ஆம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த பின்பும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், தேர்வு முடிவுகள் என்பது இப்போதைக்கு சாத்தியம்இல்லாததால், தான் கண்ட கல்லூரிக்கனவு நனவாகும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கும் தருணம் இது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, சுசீலா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், அரவிந்த், “அம்மா, நந்தினி அக்கா உங்களைத் கேட்டு வந்தாங்க,வ ந்ததும் மறக்காம சொல்ல சொன்னாங்க”.
அப்படியா, வேற ஏதாவது சொன்னாங்களா?
இல்லையே அம்மா…
ஒரு வேளை வீட்டு வாடகை கேட்டு வந்திருப்பாங்களோ? கடவுளே! நான் என்ன பண்ணுவேன்? பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் வேற கட்டணும், மூணு மாச வாடகை பாக்கி தரணும் நான் என்ன பண்ண போறேன் என்று மனதிற்குள் பேசிக்கொண்டே விக்கித்து நின்ற சுசீலா, அரவிந்திடம் , நந்தினி அக்காவைப் பார்த்துட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், நந்தினியே வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
அக்கா நானே வரலாம்ன்னு கிளம்பினேன், நீங்களே வந்துட்டீங்க,
ஆமாம் நீங்க தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க, நாங்கதான் உங்கள தேடி வரணும்…
அக்கா ஏன் இப்படி கோபமாப் பேசறீங்க? அரவிந்த் உள்ள இருக்கான் , நாம கொஞ்சம் தள்ளிப் போய் பேசிக்கலாம் வாங்க என்றாள் கெஞ்சலாய் …
நந்தினி,சுசீலா சொல்வதை சிறிதும் காதில் வாங்காமல், கறாராகப் பேச ஆரம்பித்தாள்..
இதோ பாரு சுசீலா, நீயும் 3 மாசமா கடை நடத்த முடியல, வருமானம் சுத்தமா இல்லை… வாடகை குடுக்க பணம் இல்லை… 3 மாசம் கழிச்சு மொத்தமா தரேன்னு சொன்னதுக்கு நானும் சம்மதிச்சேன்… ஆனால் இதுக்கு மேல அவகாசம் குடுக்க முடியாது…இதுக்கு மேல என்னாலயும் சமாளிக்க முடியாது.
அக்கா, நோயின் தாக்கம் குறையல,ஊரடங்கும் தளர்த்தப்படல, ஒரு வாரம் கடை நடத்திப் பார்த்த்தோம், தள்ளுவண்டிக் கடையில இட்லி, தோசைன்னு வாங்கினா சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்காதுன்னு நெனச்சு 4 கஸ்டமர் கூட வரல .. அதனால இப்போதைக்கு வருமானம் எதுவும் இல்லை,ஹோட்டல்ல எங்கயும் வேல கிடைக்கற சூழ்நிலை இல்லை…கொஞ்சம் பொறுத்துக்கங்க, சீக்கிரமா ஏற்பாடு பண்ணிடறேன் …
ஒரு வாரம் உனக்கு அவகாசம் தரேன், அதுக்குள்ளே ஏற்பாடு பண்ணு …என் கஷ்டம் எனக்கு , என்று முணுமுணுத்தவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் ….
இதையெல்லாம் வீட்டினுள் இருந்தவாறே, கவனித்துக் கொண்டிருந்த அரவிந்துக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில், தந்தையைப் பறி கொடுத்து, தனியே தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்து, வாழ்க்கையைத் தனக்கென வாழாமல், பிள்ளைகளுக்காக அளவில்லா தியாகம் செய்து இன்று இக்கட்டான சூழ்நிலையில் , தன் தாய் மற்றவர் முன்பு அவமானத்தால் , தலைகுனிந்து நிற்பதை சகித்து கொள்ள இயலாமல், துக்கமும் கோபமும் மாறி மாறி வந்து அவனை நிலை குலைய செய்தது,தன் இயலாமையை எண்ணி மிகவும் வருந்தி, ஏதாவது ஒரு வகையில் அம்மாவுக்கு உதவிட எண்ணினான் அரவிந்த்…
திடீரென மனம் தெளிந்தவனாய், சுசீலாவிடம்,
அம்மா, காலேஜ் திறக்க இன்னும் 3 மாசம் ஆகுமாம்.. டிவில சொன்னாங்க… அது வரைக்கும் நான் வேலைக்கு போறேன்…
வேலைக்கா? இந்த சின்ன வயசுல உனக்கு என்ன கண்ணு வேலை தெரியும்?நான் எப்படியோ சமாளிச்சுக்கிறேன் கண்ணு.. ,
கஷ்டமான வேலை இல்லம்மா, நம்ம மூர்த்தி மாமாவுக்கு தெரிஞ்ச இடம்தான், கம்ப்யூட்டர்ல பில் போடற வேலை தான் அம்மா..நீ ஒண்ணும் பயப்படாத…
அப்படியா கண்ணு, கம்ப்யூட்டர் வேலையா? அப்படின்னா போயிட்டு வா..
மறுநாள், மூர்த்தி மாமாவிடம் தொலைபேசியில் தான் வேலைக்கு வருவதை உறுதி படுத்தி விட்டு, சுசீலாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலானான்…
வேலைக்கு செல்லும் வழியில், அவனது மாமா ( ஆம்புலன்ஸ் டிரைவர் ) இரண்டு நாட்களுக்கு முன்பு தற்செயலாக கூறிய விஷயம் நினைவிற்கு வந்தது… “மாப்ள,இந்த கொரோனா நோயால் சாகறவங்க எண்ணிக்கை அதிகரிச்சுட்டே வருது,கவலையான விஷயம் என்னன்னா, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில பொணத்த தூக்க ஆள் கிடைக்கறது இல்லை.. ஒரு பொணத்துக்கு 200 ரூபா கிடைக்கும் கூப்பிட்டா யாரும் உயிருக்கு பயந்து வர மாட்டேங்கிறாங்க, உங்க ஏரியாவுல யாராவது இருந்தா சொல்லு”.
கொரோனாவால யாரும் சாகக்கூடாதுன்னு இவ்வளவு நாள் வேண்டிக் கொண்டிருந்தேன் ஆனால், இப்போது???