நிலைத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 7,148 
 
 

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை.

மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை விரும்பலை. ஆனாலும் அதை வெளிப்படையா சொல்ல விருப்பமில்லை. அதே சமயம் குறிப்பிட்ட விஷயத்தோட நியாயம் அதை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்துது. அங்கே மௌனம் உதவுது. அப்படி இருக்கிறது மூலமா எதிராளியைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். தன் முடிவைத் தெரிவிக்காததன் மூலமா ஒத்துப் போகாத நிலையை ஏற்படுத்தலாம். பின்னால் விஷயம் பெரிசானா, நான்தான் ஒண்ணுமே சொல்லலையே என்று கூறி எதிர்க்கவில்லை என்பதான தோற்றத்தை ஏற்படுத்தித் தப்பிக்கலாம்.

வாழ்க்கையில் பல சமயங்களில் மௌனம் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு சாதனமாய், சாதகமாய் அமைகிறது. மௌனம் சண்டைகளைத் தவிர்க்கிறது. பரஸ்பரக் கோபங்களை ஆற்றுகிறது. பிரச்னையை ஆறப்போடுவதற்கு உதவுகிறது. ஒத்திப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்வதற்கு வழி வகுக்கிறது. மறதிக்கு ஏதுவாக்குகிறது. யார் ஜெயித்தது என்ற தேடுதலில் நீ தோற்றாய் என்று மனதுக்குள் நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள உதவுகிறது. இந்த முறையும் என்னை நீ வெல்லவில்லை என்று சொல்லாமல் சொல்லத் தோதளிக்கிறது. இதெல்லாவற்றையும் யார் பக்கம் நியாயம் என்பதைத் தீர்க்கவொண்ணாமல் அந்தரத்தில் தொங்கப் போடுவது அதீத வசதியாய் இருக்கிறது.

இம்மாதிரி ஒரு வழிமுறை மூலம் அவனை அடிக்கடி பழி வாங்கியிருக்கிறாள் அவள். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் இத்தனை காலம் ஓடிப்போனதே அவளின் இந்த சாமர்த்தியத்தினால்தான். அதுவே அவளின் வெற்றி. முக்கியமான பிரச்னைகளைப் பேசும்போதெல்லாம், அவன் தன்னுடன் விவாதிக்க விஷயத்தை முன் வைக்கும் போதெல்லாம் அவனின் அபிப்பிராயங்களுக்கு பதில் சொல்லாமல், அல்லது மறுத்துப் பேசாமல், தன் கருத்து எதுவாயினும் எல்லாவற்றிற்கும் மிஞ்சியவளாய் “சரி, வேண்டாம்“ என்ற ஒற்றைச் சொற்களிலோ, “வேறே பேசலாமே“ என்று சொல்லியோ அவள் தப்பித்திருக்கிறாள். அதன் மூலம் அவன் சொல்லிய விஷயம் அல்லது சொல்ல வந்த விஷயம் தன்னால் கணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு அது தனக்குப் பிடிக்காதது என்பதாகவோ, இந்த மாதிரிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்கிற ரீதியிலேயோ அந்தக் கணத்திலேயே அவள் ஸ்தாபித்ததன் மூலம் அவனை வெற்றி கொண்டதாகவும், தன் கண்ணெதிரிலேயே அவனை உடனுக்குடன் அவமானப்படுத்தியதாகவும், எண்ணி இறுமாந்திருக்கிறாள்.

இதையெல்லாம் மாரடிப்பதற்கா நான் உனக்கு வாழ்க்கைப் பட்டேன் என்பதாகவும், இந்தச் அல்பங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்ற பொருளிலும் அவனை, அவன் பேச்சை உடனடியாகப் புறக்கணிப்பது என்பது அவளுக்குப் பெருத்த ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்து கொண்டுமிருக்கிறது.

ஆனால் ஒன்று. எத்தனை முறை இப்படி நடந்தாலும் அவன் அயரவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் அவளை இன்றுவரை அவன் சார்பில் யோசிக்க வைக்கும் விஷயமாக முடிவுறாமல் இருந்து கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் அவன் தன் மேல் தீர்க்க முடியாத மையல் கொண்ட ஆடவனாகவும் தெரியவில்லை. வயதுக்கேற்ற வேகமும், சில்மிஷங்களும், நேரம் காலமறியாத தொந்தரவுகளும், சீண்டல்களும், அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

அவனைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விஷயங்களில் காண்பிக்கும் நிதானமும், பொறுமையும், ஆணித்தரமான அடியெடுப்பும், அவளை பிரமிக்கத்தான் வைக்கிறது. இதில் நீ மறுப்புச் சொல்லியும் பயனில்லை, நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்கிற அவனது தீர்மானம் அதுநாள் வரையிலான மௌனங்களின் மூலமான தப்பித்தல்களை சுக்கு நூறாக உடைத்துச் சிதறடித்திருக்கிறது.

எந்த மௌனத்தின் மூலமாக அவனிடமிருந்து தன்னை உயர்த்திக் கொண்டாளோ அல்லது அப்படி நினைத்துக் கொண்டாளோ அந்த மௌனங்களின் ஒட்டு மொத்தமான யதார்த்தத்தையே தன்னின் முழுப் பலமாகக் கொண்டு அவன் இப்போது உயர்ந்து நிற்பதை அவள் உணர்ந்தாள்.

அதுநாள் வரையிலான அவனின் கருத்தான சேமிப்பாகத் தோன்றியது அது. இன்னும் எத்தனை காலங்களானாலும், இந்த மதிப்பான ஒன்றை மட்டும் நீ உடைத்தெறியவே முடியாது, அது நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நடந்தே தீரும் என்பதாக அவன் தீர்மானமாய் இருப்பது அவளுக்குள் மெல்லிய நடுக்கத்தைப் பரவவிட்டு, இந்த விஷயத்தில் தான் தோற்றுத்தான் போய்விட்டோமோ என்பதாக அவளின் எண்ணங்களை மெல்ல மெல்லச் சிதறடித்துக் கொண்டிருந்ததை அந்தக் கணத்தில் அவள் உணரத் தலைப்பட்டாள்.

மௌனம்ங்கிறது பல சமயங்கள்ல ஒத்திப் போடலுக்கு வேணும்னா வழி வகுக்கலாம். ஆனா அதுவே தீர்வா என்றுமே இருந்ததில்லை. அதை பலவீனம்னு புரிஞ்சிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. …

நான் பேசினா அனாவசியமா சண்டைதான் வரும்…? உங்க இஷ்டப்படி செய்யுங்கோ…

இப்படிச் சொல்வதன் மூலம் தான் சதா சண்டை போடுபவன் என்பதை அவள் நிர்மாணிக்க முயல்கிறாளா? அப்படிச் சொல்லி தன்னை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி வகுக்கிறாளா? அல்லது தானே நிதானமாக விஷயத்தை நோக்குபவள் என்று சொல்லாமல் சொல்லி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாளா?

என் இஷ்டப்படி செய்றதுங்கிறது அடாவடியில்லை. அதிலிருக்கிற நியாயம். அதுக்கு மறுப்பு வரும்னா அதை அடாவடியாத்தான் செய்தாகணும்…

நியாயம்ங்கிறது ஒரு சார்பானதில்லையே…ஒருத்தருக்கு நியாயமா இருக்கிறது இன்னொருத்தருக்குத் தப்பா தோணலாம். வேறொரு பார்வை இருக்கலாம். அதை நீங்க ஒத்துக்கப் போறீங்களா? நிச்சயமா இல்லை. எதுக்கு வீண் பேச்சு?

ஒவ்வொரு முறையும் இப்படிச் சொல்லித்தான் தன்னிடமிருந்து விலகியிருக்கிறாள். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. எப்படிப் போராடியேனும் தன் கருத்தை நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்ட நான் தயாரில்லை என்ற கருத்து மட்டும் ஆணித்தரமாக இருக்கிறது.

அவளைப் பொறுத்தவரை தனது கருத்துக்கள் எல்லாவற்றிற்குமே ஏறக்குறைய மறுப்பு இருந்துதான் வந்திருக்கிறது. எதில் ஒத்துக் போகிறாள் என்பதாக நினைத்து நினைத்துப் பல சமயங்களில் இவன் குழம்பிப் போயிருக்கிறான். தன்னை அவ்வாறு குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுத் தள்ளியிருந்து அதை ரசிப்பதே அவள் வேலையாய்ப் போய்விட்டது.

தலை குனிந்து தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பது போலவும், அதன் மூலமே தன்னை முன்னகர்த்தி மேலே சென்று விட்டது போலவும் கருதிக் கொள்கிறாளோ?. இடையிடையில் தன்னை நோக்குகிறாளோ என்றும் நினைத்திருக்கிறான். ஒரு பார்வை தற்செயலாய் இவன் அவளை நோக்கிய அதே கணத்தில் அவளிடமிருந்தும் வந்தது. லேசாய்ச் சிரித்துக் கொண்டதுபோலவும் இருந்தது. அது என்ன அலட்சியச் சிரிப்பா? கேலிச் சிரிப்பா? அல்லது நீ இப்படி அலைவாய் என்பது எனக்குத் தெரியும் என்பதான கெக்கலியா?

இப்போதும் அவளின் மௌனம் அவனுக்கு இப்படியான அர்த்தங்களைக் கற்பிக்கத்தான் செய்தது. ஒன்று மட்டும் உண்மை. தன்னை மீறி எதுவும் நடந்து விடுவதற்கில்லை. அதுதான் தன்னின் ஒழுக்கமும், நேர்மையும்பாற்பட்ட விஷயம்.

நீ சொல்வது நியாயமாய் இருந்தால் தண்டனிட்டுக் கேட்பேன். அல்லாமல் வெறுமே கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஏற்க முடியாது. என் செயலில் அப்படியான முரண்களை நீ கண்டறிந்தாலும் அதை நீ தாராளமாக வெளிப்படுத்தலாம். தவறிருந்தால் களையப்படும்.

எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையான நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்றைக்குமே மாறாத ஒன்று. மனிதனுக்கு மனிதன் நியாயங்கள் மாறி விடுவதில்லை. சிலசூழல்களால் அது தடுமாறுவது உண்டு. அங்கேயும் இறுதியாக நிலைப்பது ஒரு செயலின் நேர்மையே. ஒரு விஷயத்தின் நியாயமே. நீ என் மனைவி என்பதற்காக உன் குணக்கேடு சார்ந்து கெடுக்க முடியாது. அதை நீ உணர்ந்துதான் ஆக வேண்டும். உன்னை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். பதிலாக உன் மன வக்கிரங்களை இதில் பாய்ச்ச முடியாது. கண்களை மூடிக் கொண்டு நானும் அதற்கு உடன்பட முடியாது. எந்த அம்பினையும் பயன்படுத்தி நீ என்னை வீழ்த்தி விட முடியாது. அது நாகாஸ்திரமாக இருந்தாலும் சரி.

சூழலைப் புரிந்து கொள். தேவையை உணர்ந்து கொள். காலத்தின் கட்டாயத்தை அறி. உன்னை மாற்றிக் கொள்ள முயல். இல்லையேல் நஷ்டம் உனக்குத்தான். நான் உன்னை வீழ்த்த வேண்டியதில்லை. காலம் அந்தப் பணியைச் செய்யும். வீழ்ந்துபட்ட வேதனையை நீயே அனுபவித்து முடிப்பதுதான் உன் மனசாட்சிக்கான தண்டனை.

காலம் எல்லா மனிதர்களையும் நோக்கிக் கேள்விகளை வீசும். எவனும் அவனவன் செயல்களுக்கு, தவறுகளுக்கு, பதில் அளிக்காமல் விடை பெற முடியாது. குறைந்தபட்சம் அதற்கான தண்டனையையாவது அனுபவித்துத்தான் அவன் மரித்தாக வேண்டும். பாபங்களைச் சேர்க்காதே. பண்புகளைச் சேர்….. அதனால் கிடைக்கும் நற்செயல்களை நிறைவேற்று. குறைந்தபட்சம் அதற்கு முயலவாவது செய். முரணாக நிற்காதே.….

கையில் பிடித்திருந்த அந்தக் காகிதம் மெலிதாக நடுங்குவதைக் கண்ட அவள் தன் கைதான் அப்படி நடுங்குகிறது என்பதை உணர்ந்து அடக்கிக் கொள்ள முயன்றாள்.

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி வைத்து விடுபவன் அவன். வாய் விட்டுப் படபடத்துத்தான் மன வேகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. எழுத்து அவனுக்கு ஒரு வடிகால். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இரும்பு மனிதன் அவன். நினைத்ததை நிறைவேற்றியே தீருவான். அது உலக நியாயம் என்று கருதுபவன். கடவுளே முன்னால் உதித்து கொஞ்ச காலம் தள்ளிப்போடு என்றாலும் அவனிடம் ஆகாது.

அன்பினாலும், தியாகத்தாலும்தான் வசப்படுத்த முடியும். வெறும் உடம்பைக் காட்டியோ, சரிநிகர் சமானத்தைக் காட்டியோ அடி பணிய வைக்க முடியாது. சரி என்றால்தான் சிரமேற்கொண்டு ஏற்றுப் பாதுகாப்பான். முரண்டினால் முறுக்கிப் பிழிந்து விடுவான்.

உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்று அடிக்கடி சொல்பவன். அதற்குக் கட்டுப்படாத ஜீவராசிகளே கிடையாது என்பான். அது ஒன்றினால்தான் இவனை அசைக்க முடியும். மற்றவை இவனிடம் செல்லாது. உணர்ந்தாள் மாதுரி.

சரி, உங்க இஷ்டப்படி செய்ங்கோ…என்றாள்.

இது என் ஒருவனோட இஷ்டம் மட்டும் இல்லை….உலக இஷ்டம்….காலகாலமான கலாச்சார இஷ்டம்….குடும்பங்கிற கட்டமைப்புக்கான இஷ்டம்….காலச் சக்கரம் சுழலும்ங்கிற வாழ்க்கை நியாயத்துக்கான இஷ்டம்…எல்லாருக்கும் பொதுவான இஷ்டம். வாழ்க்கைத் தத்துவத்தை வரையறுத்த இஷ்டம்…இன்று எனக்கு நாளை உனக்கு என்று சக்கரம் சுற்றும்.இன்று போய் நாளை வரும். கண்டிப்பாய் வரும். யாரும் தப்பிக்க முடியாது. எழுதித்தான் வைத்திருந்தான் இதையும்.

இதுதான் முடிவு என்று அவன் வரையறுத்து எழுதியது பிரம்மனின் எழுத்து. அதை மாற்ற இயலாது.

அவன் கிளம்பினான். எதற்காக? எந்த நல்லது நடந்தாக வேண்டுமோ அதற்காக. எந்தக் கடமையை நிறைவேற்றியாக வேண்டுமோ அந்த நற்செயலுக்காக. அவரவர் மனதில் எது தோன்றுகிறதோ அந்த நல்லவைகளுக்காக.

சம்மதித்துத்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லையே. இது அவனுக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதை அவள் உணர வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஒரு நியாயம் இருந்தது.

அவள் என்னவள். அதனால் விட்டுவிட முடியாது. அம்மாவும் அதைத்தானே சொன்னாள் இது நாள்வரை.

அவளுக்கு எல்லாமே நீதானே…உன்னை விட்டு அவ எங்க போவா…அன்பா, அனுசரணையா வச்சிக்கோ….

அன்பின் திருவுருவம். அறநெறியின் இருப்பிடம். மாசற்ற மாணிக்கம். கண்களில் நீர் பனிக்கிறது இவனுக்கு.

இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் இவன் மனதில்.

தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *