“குதிச்சா செத்தரலாம்…. குதிச்சிரலாமா…” கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் முன்னால் பரந்து விரிந்து சரிந்து கிடக்கும் பள்ளத்தாக்கை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவளுக்கு மேலே… வானத்தில் நீந்தும் பறவைகளின் நிறம் இதுவரை பார்த்திராதது.
மனுஷனோட முன்ன பின்ன தான் இந்த வாழ்க்கை… அறிந்தவள் தான். ஆனாலும் ஆர்வம் மரணத்தின் மீதிருக்கிறது. வாழ்தலின் வழியே கண்டடைந்த சலிப்பை சரி செய்வது இந்த மரணத்தால் மட்டுமே நிகழும் என்று மனதார எப்போதோ நம்பி விட்டாள். பெண் நம்பி விட்டால் அதன் பின்னால் அழகான முரண் பிடி பட்டுக் கொண்டே இருக்கும். அவள் பிடித்திருப்பது மரணம். அவளை பிடித்திருப்பதும் மரணம் தான். இன்று என்ன நாள் என்று அவளுக்கு தெரியாது. இன்று வரை எத்தனை முறை இங்கே வந்து இப்படி வெறிக்க அமர்ந்திருக்கிறாள் என்பதையும் அவள் மறந்து தான் இருக்க வேண்டும். மரணத்தை நினைக்க அவள் எதையும் மறக்க துணிவாள். சொல்ல போனால் மறந்து துணிந்தவள் அவள்.
சுற்றிலும் வேடிக்கை மனிதர்கள். வாழ்வின் எல்லா திசைகளும் அடைபட்ட தருணத்தில் சுற்றுலாவுக்கு வந்து குவிந்த குப்பைகள். இப்போது கூட வெறும் கண்களால் மலையின் அழகையோ பள்ளத்தாக்கின் ஆவலையோ காண அவர்கள் விரும்பவில்லை. அல்லது அவைகளை மறந்து போய் விட்டார்கள். யாரோ பார்க்க அல்லது நாளை என்று ஒன்று இருப்பது உறுதியற்ற உலகத்தில்… நாளை பார்க்க என்று அலைபேசியின் வழியாக தங்கள் ரசனையை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் தூக்கி போட்டு பெரும் கல்லெடுத்து முகத்தில் அடித்து கொன்று பள்ளத்தாக்கு கழுகுகளுக்கு இரையாக்க வேண்டும் போல தோன்றியது. உள்ளே உருளும் பாறைகளில் தொடர் நசுங்குதல் தனது இதயமும் அது சார்ந்த இயக்கமும் தான். அவள் தானாகவே முனகினாள். யாருக்கும் அவள் பாடுவதாக தான் தோன்றும். தானாக முனங்கினால்… அது பாட்டு தான் என்பது வசதி. ஆனால் உண்மையில் தானாக புலம்பாத ஒரு மனிதன் இவ்வுலகில் இல்லை. மனுஷியும் தான். பாடி ததும்பும் தனியொரு உதடு.
போதும் போதும் என்று அலுத்து விட்டது. அழுத வடுக்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
ஒரு பூகம்பம் வந்து பூக்காதா இந்த புண்ணிய பூமியில் என்று அவள் வேண்டாத நாள் இல்லை. ஒரு கோர விபத்தில்… கிடைக்கும் மரணத்துக்காக அவள் ஒவ்வொரு பேருந்தாக… லாரியாக… ரயிலாக காத்து கிடந்தது எல்லாம் காதுக்குள் யாரோ முனங்கும் கவிதை. இதோ இப்போது கூட யாரோ இந்த காட்டின் காதுக்குள் முனங்குகிறார்கள். போ… போ… மகளே.. எட்டி குதி. நீ குதிக்கத்தான் காலம் இங்கே பள்ளம் தோண்டி வைத்து அதை பள்ளத்தாக்கி… அதையும் வேடிக்கை பொருளாக்கி… அதற்கும் காசு வாங்கி… இந்த மனிதர்கள் மானங்கெட்டு பிழைக்கிறார்கள். நீ மானத்தோடு சாவு.
பகல் இரவு மறைந்து காலம் ஆகி விட்டது நாள். விடிந்தால் ஊசிமலை பள்ளத்தாக்கு முகப்பு தான் அவள் வாடிக்கை. அல்லது விடிவதே அங்கு தானா என்ற சந்தேகமும் உண்டு. செக்யூரிட்டிகள் கூட நண்பர்களாகி விட்டார்கள்.
“ஏம்மா… சாவு கிராக்கி… எப்ப பாரு இங்க வந்து குந்திக்குனு… அப்பிடி இன்னாத்ததா நோக்குவ…” இப்படி போகையில் கேட்கும் செக்யூரிட்டி அப்படி வருகையில் எதுவும் கேட்காமல் இயல்பாகி விடுவார்.
“ஏய் புள்ள… பத்தரம்… நழுவிச்சுனு வெச்சுக்கோயேன்… கீழ….. கீழ போயிருவ… இதுவரை விழுந்தவன் எவனுக்கும் ஒரு சோலி மயிரும் இல்ல..” நாக்கை இழுத்து சாவு பெல் அடித்த திருநெல்வேலி தடியர்….அவரும் செக்யூரிட்டி தான். கொஞ்சம் கனிந்தவர்.
அடித்தொண்டையில் அண்டா உருட்டுவது போல மிமிக்ரி செய்கிறவன் யாருயா என்று கேட்போருக்கு கேட்க தோன்றும். அத்தனை பாதாளம் அந்த குரலில். அதை சிரித்துக் கொண்டே கடந்து… மொட்டை பாறையில் பூ பூத்தது போல முழங்காலை கட்டிக் கொண்டு வானத்தில் ஆரம்பிப்பாள். அப்படியே… தொடுவானத்தில் இறங்கி… மேகம் பூசி.. கண்களை பள்ளத்தாக்கில் மேய விட்டு பிறகு அப்படியே கீழே இறக்குவாள். சிறகடிக்க வேண்டாத பறவை… மெல்ல தன் உடலை பூமிக்கு அர்ப்பணிப்பதாக இருக்கும் அந்த காட்சி. அவள் கண்களில் மரணம் மின்னுவதை உணரும் தருணம் எதிர்ப்படும் சிலருக்கு கிடைத்திருக்கிறது.
“யார்… இந்த குந்தானிச்சியா… அவ இருக்கறவங்கள தள்ளி விட்டுட்டு கடலை கொறிப்பா. அது கொஞ்சம் மெண்டல் கேசு தான். ஆனா எட்டில்லாம் குதிச்சிடாது. சும்மா வேடிக்கை பார்க்கும்….”
நெல்லை மொழியினர் நேக்காக பேசி சந்தேகம் தீர்த்தார்.
“இல்லைங்க.. அது என்கிட்டே வந்து…”
அதற்கு மேல் சுற்றுலாவாசியை பேச விடாமல்.. பொத்து என்பது போல கையை காட்டி விட்டு தக்காளி சோற்றை அவக் அவக்கென்று வாய்க்குள் போட்டார்.
“கிளம்பு.. உனக்கு ஊர் சுத்துறது தான் வேலை. எனக்கு உங்களை மாதிரி கிறுக்கு கோமளிங்களைல்லாம் பாதுகாக்கணும்….”
அவர் சொல்லவில்லை. அவர் கண்கள் மென்றன.
தினம் ஒரு வண்ணத்தில் ஜொலி ஜொலிக்கும் கண்ணம்மா… சக்கரைக் கிண்ணத்தில் மாட்டிக்கொண்ட… சிரிக்கற எறும்பாக தன்னை நினைத்துக் கொண்டாள். அழ மறந்து வெகு நாட்கள் ஆகிற்று. முகத்தில் முசுமுசுவென வந்து விழும் கயமுய கிசுகிசுக்களை கொசு விரட்டுவது போல கையை ஆட்டி ஆட்டி ஒட்டிக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கு… போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. பெரும் மண்சரிவு இப்போது ஏற்பட போகிறது என்று அவள் ஆழமாக நம்பினாள். நகர முடியாத சிந்தனையை இப்படி மண்சரிவு நினைப்பு கொண்டு நகர்த்துவது அவளின் இயல்பு.
சரிந்து நிறைந்து பூத்திருக்கும் புற்களில் கால் பதிக்கையில்…. கடைசி மூச்சு விடும் தருணம் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றும். உட்கார்ந்தபடியே நீர் கோர்த்திருக்கும் புற்கள் சரித்துக் கொண்டே போவதை பார்ப்போர் உற்சாகம் தொற்றிக் கொள்ள… உடனே அவளோடு போட்டோ எடுக்க முற்படுவார்கள். போஸும் கொடுப்பாள். பிறகு காதுக்குள் ரகசியம் பேசுவாள். காது கொடுத்தோர் அய்யயோ… இது கிறுக்கு என்று நகர்ந்து விடுவார்கள். அப்படியே போன வேகத்தில் தடுப்பு சுவர் தாண்டி பயங்கரமாக எட்டி தாவி பாதுகாப்பு வளையத்தை தாண்டி பள்ளத்தாக்கில் பறந்து விட மாட்டோமோ என்று ஏங்குவாள்.
செக்யூரிட்டி கடலை பொட்டலத்தை நீட்ட… மரண ஒத்திகையை தள்ளி போட்டு ஒவ்வொரு கடலை உருண்டையிலும் குட்டி குட்டி பூமிகள் பார்ப்பாள். பிறகு காற்றினில் வீசுவாள். வெற்றிடம் முழுக்க கிரகங்கள் சுழலுவதாக ஒரு திடீர் நம்பிக்கை எழ… முகத்தில் விழும் சுருள் முடியை ஊதி பிரபஞ்சம் நெளிப்பாள்.
ஒரு நாள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மறுநாள் மயான அமைதி. எப்போதுமே பாறையில் குத்த வைத்து கால்களை விரித்தே அமர்ந்திருப்பாள். முகம் சுளித்து பார்ப்போருக்கு இது என் விடுதலை என்பதாக ஒரு புருவம் தூக்கி நெற்றியில் தொங்கும் சுருள் முடியை மேல் நோக்கி ஊதி… அப்படித்தான் என்பாள்.
கீழே போட்டோ எடுப்பது போல செல்லும் ஆண்கள் மேலே பின்னால் திரும்புவது போல திரும்பி அவள் அமர்ந்திருக்கும் பொசிஷனை பார்த்து ரசிப்பான்கள். ரகசிய போட்டோக்களும் உண்டு. மயிரா தெரியுது.. என்று முனகினாலும்… அகற்றிய கால்களை குறுக்க மாட்டாள். இதுக்கெல்லாம் சேர்த்து தான் சாக போறேன்… பாருங்கடா… செத்து என் கெத்த காட்டறேன் என்று கண்கள் முனங்கும். அவள் காதுக்குள் காலம் முனங்கும். தொடர் பேச்சு சத்தம்… தொடர் பிராண்டல்… எப்போதாவது சட் அப் என்று வெற்றிடத்தில் கத்துவது அக்கம் பக்கம் நகர்வோரை நிறுத்தி என்ன என்று வேகமாய் பார்க்க செய்யும்.
அவள் மொட்டை பாறையில்… மழை சொட்ட சொட்ட அமர்ந்திருக்கிறாள்.
அலைபேசி அடிக்கிறது.. அதூரன் எடுக்கிறான். மறுமுனை உச்ச பச்ச கோபத்தில் கேட்கிறது.
“அவ சாவாளா மாட்டாளா…?”
புருஷன் பொண்டாட்டி சண்டைதான். ஆனால் தண்ணி பைப்கிட்ட வெச்சு செருப்பாலயே அடித்திருக்க வேண்டாம். அடித்த மகா ஞானி வேலைக்கு சென்று விட்டான். அடி வாங்கி கூனி குறுகிய வீட்டுக்காரிக்கு… மல்லாக்க படுத்துக்கொண்டு மேலே எச்சி துப்பியது போல… உள்ளே ஒரு அசூயை. விறுவிறுவென தண்ணீரை கொண்டு போயி வீட்டுக்கு முன் இருந்த துளசி செடியில் ஊற்றி விட்டு…நட்டுக்கொண்டு நின்ற சூரியனை எரிப்பது போன்ற உடல்மொழியில்… நேராக மொட்டை மாடிக்கு அருகே இருக்கும் அறைக்கு சென்றாள். தனது சிவப்பு வண்ண வாயில் புடவையை எடுத்தாள். அத்தனை கோபத்தையும் கைகளுக்கு கொண்டு வந்து முறைத்துக் கொண்டே திரித்தாள். சுழலாத போதெல்லாம் மின்விசிறிக்கு வேறு என்ன வேலை. தற்கொலைக்கு உதவுவது தானே. மின்விசிறி றெக்கையினிடையே நேக்காக போட்டு கவ்வ செய்து விட்டு.. கீழே தொங்கும் முனையை கரகரவென இழுத்தாள். கைக்கு வந்த சேலையில் சுருக்கு தெறிக்க விட்டு கழுத்தினில் மாட்டினாள். கச்சிதம் பூட்டினாள். மலையில் இருந்து எட்டி குதித்து பாதாளத்தில் விழுந்தது போல ஸ்டூடிலில் இருந்து தவ்வி தன் உலகத்தை நகர்த்திக் கொண்டாள். நறநறவென பற்கள் பொடிபட… கண்கள் இன்னும் ஒரு சுற்றில் தெறித்து ராட்டினத்தில் இருந்து விலகுவது போல காற்றினில் இயைந்து விழுந்து விடும். கையளவு மூச்சுக்கு…. கவக் கவக்கென கத்த பார்க்கும் கழுத்து சுருங்கி கொண்டே போகிறது. கைகள் காற்றின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டன. “சீக்கிரம் சீக்கிரம்… முடிச்சி விடு தேவிடியா கடவுளே…”- இருந்த… பின் மண்டை நினைப்பில் கொந்தளிப்பு. முதுகில் எதுவோ உடைத்து நொறுங்கும் சூடு. இருந்த உலகம் இன்னும் வேகமாய் சுழலுவதை உணர உணர… கடைசி மூச்சில் ரத்தம் சொட்ட… நிழல் நகர்ந்து கொண்ட மரணம்… அங்கே வெற்றுடலை தொங்க விட்டு விட்டது. தடக்கென காலுக்கடியே ஒரு முறிவு.
நான்கு நண்பர்கள். குடித்து பேச்சு மீறுகிறது. எப்படியோ உள்ளே இருந்த சாதி மயிர் நீட்டிக் கொண்டு வெளியே வந்து விட்டது. அவன் புடுங்கி சாதி.. இவன் புடுங்கிட்டு இருக்கற சாதி.. இவன் புடுங்க போற சாதி.. இவன் புடுங்க தெரியாத சாதி. குடிக்கையில் ஆதி வெறி தூண்டப்படும். டிக்கி வழியே பிறந்தது போன்ற பாவனை வந்து தலை மேல் ஏறி அமர்ந்து விடும். தான் பேசுவது தான் பேச்சு. மற்றதெல்லாம் ஏச்சு என்று நம்பும். மூன்று புடுங்கிகள் சேர்த்து ஒரு புடுங்கியை பீர் பாட்டிலால் தாக்கினார்கள். பிறகு கனிவு கொடுக்கும் கல் என்று ஒருவன் நந்தா சூர்யா போல தேடி தேடி ஒரு ஹீரோயிசம் காட்டினான். இன்னொருவன்… ஓசில குடிக்கற நாய்க்கு கம்யூனிசம் கேக்குதோ… எண்ணி நாலு குத்து அல்லையில் குத்தினான். மூன்றாவது குத்துக்கு நெஞ்செலும்பு உடைந்திருக்க வேண்டும். உடல் பின்னோக்கி உள்ளே இழுத்து முகத்தில் ஒரு வெளிர் நிறம் வந்து போனது. கண்கள் சொருகிய கண்களில் துக்கமும் துயரமும் அழுகையும் கொடும் பயமும்… சுழன்றன. கைகள் வேண்டாம் என்கிறதா… தடுக்க எழும்புகிறதா…. தெரியாது. காற்றினில் கடைசி கெஞ்சலை வரைகிறது. பின் மண்டையை பிடித்து ஓங்கி தள்ளி விடுகிறான் இன்னொரு புடுங்கி நண்பன். தடுமாறியவன் சுவற்றில் முட்டி சரிகிறான். விடிந்தால் போதை தெளிந்து விடும். பிறகு செய்தது கொலை என்று தெரிய வரும். ஒருத்தன் சாக… மூன்று பேர் சாக காத்திருப்பான்கள். மானங்கெட்ட மடப்பயல்கள்.
பேருந்து நிற்க நிற்க முன் படிக்கட்டில் இருந்து இறங்க முற்பட்ட பெண்மணி…. காலம் தவறி… கீழே விழுகிறாள். விழுந்து விட்டோமே என்று உணர்வதற்குள் அனிச்சை…. உடலில் கையை காலை ஆட்டுகிறது. உடலை எம்பி எதிலிருந்தாவது எப்படியாவது தப்பித்து விடலாம் என்று உருண்டு புரண்டு…. அதற்குள்… பின் சக்கரம் பெரும் பூதமாய் உருண்டு வந்து நெஞ்சில் ஏறி இறங்குகிறது. ஒரு குடும்பம் நொறுங்கும் சத்தம். இறங்கிய பேருந்து தன்னை குலுக்கி சமநிலை செய்து கொண்டு சற்று தூரம் நகர்ந்து….ஐயையோ என்னாச்சு… உள்ளே நாய் ஏதும் மாட்டிக்கிச்சா என்பது போல முகம் திரும்பி கழுத்து வளைந்து நிற்கிறது. பேருந்துள் இருக்கும் அத்தனை பேரும் கூச்சல் போடுகிறார்கள். சாலையில் கூட்டம் கூடி விடுகிறது. ஓட்டுநர் இறங்கி ஓடோடி வந்து பார்த்து தலையில் கை வைத்து தடுமாறுகிறார். மரண வேகத்தில் பேருந்தை நகர்த்தி விட முயற்சி செய்த செத்தவளின் கைகள் மேல் நோக்கி வானத்தை தாங்குவது போல தொங்கி நிற்கிறது. அது அகால மரணத்தை சரிந்து விடாமல் தூக்கி நிற்கிறது போல.
சப்பலிஞ்ச நெஞ்சு… ரோட்டில் பிசுபிசுத்து மெல்ல ரத்தம் கசிய விட்டிருக்கிறது. மிச்ச ரத்தத்துக்கு நாக்கு நீட்டி பார்க்கும் கண்கள்….கை வசம் இருந்த எல்லா கிளிப்பிங்குகளையும் பார்த்து முடித்து விட்டன.
சுட சுட கொடூர மரணங்களை வீட்டுக்குள் இருக்கும் திரையில் ஓட விட்டு குஷன் சோபாவில் படுத்துக் கொண்டு பார்ப்பதில் அப்படி ஒரு அலாதி. ஒவ்வொரு நாளும்.. ஒரு மரணத்தில் விடிய வேண்டும்… மிஸ்டர் Zக்கு. சாகும் வயதில் ஏன் இந்த விருப்பம் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு மரணம் வேண்டும் அவன் வாழ்வதற்கு. அவன் கண்களில் ரத்த கவிச்சை சொட்டிக் கொண்டே…. இருக்க வேண்டும். அலைபேசியை எடுத்து அதூரனுக்கு அடித்தான்.
“என்னாச்சு…. அவ மொட்டை பாறைலயே உக்கார்ந்துட்டு இருக்கற ஸீனை எத்தனை வாட்டி பாக்குறது. எப்படா சாவா… ஐயோ சீக்கிரம் சீக்கிரம் சீக்கிரன்டா… காசு வாங்கறீல… வேலைய பாக்க மாட்டியா…..” – மரண வாடை திறன்பேசி வழியாகவும்.
“இன்னைக்கு முடிஞ்சிடுங்க…. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று ஒரு வேலைக்காரனின் உடல் மொழியில் திறன்பேசியை அணைத்த அதூரன்…. கேமராவில் ஸூம் செய்தான்.
கண்ணம்மா மொட்டை பாறையில் இப்போது மழைக்கு வண்ணம் பூசிக் கொண்டிருக்கிறாள்.
இடையே மிஸ்டர் X இடம் இருந்து அழைப்பு. மிஸ்டர் K இடம் இருந்து அழைப்பு. மிஸ்டர் D இடம் இருந்து அழைப்பு.
எல்லா கிறுக்கனுங்களுக்கும் சக மனிதனின் சாவை துளி துளியாய் ரசித்து ருசிக்க வேண்டும். பார்ன் வீடியோவுக்கு அடிக்ட் ஆன மாதிரி சில கோமாளிங்க மற்றவனோட அகால மரணத்தை அணு அணுவா ரசிக்கறானுங்க. ஏன் எதுக்கு ஒன்னும் விளங்கல. ஆரம்பத்தில் இயல்பாக சாகிறவனை போகிற போக்கில் எடுத்த வீடியோ… கேமரா நண்பன் ஒருவன் மூலம் சென்று இப்படி ஒரு எச்சை x க்கு கிடைக்க…. அதற்கு அவன் காசு கொடுத்தான். படிப்புக்கும் செய்கின்ற வேலைக்கும் இடையே வயிறு மாட்டிக் கொண்டு முழிக்கையில்… இந்த வேலை சட்டென பாக்கெட் நிறைத்தது. ஆரம்பத்தில் அதுவாக நடக்கின்ற விபத்துகளை எடுத்தவன்….. பிறகு மெல்ல மெல்ல சாக போகிறவனை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்தான். பிறகு காத்திருந்து எடுக்க ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டான்.
விடிந்தால் மரணத்துக்கு அலையும் கண்களோடு கேமராவை தூக்கிக் கொண்டு அலைய ஆரம்பித்தான். ஒருத்தன் இன்னொருத்தன் அந்த இன்னொருத்தன் இன்னொருத்தன் என்று முகம் தெரியாத குரல்கள் அவனை ஆட்டுவிக்க ஆரம்பித்தன.
அது ஒரு வலை. அது ஒரு ரகசிய பிசினஸ்.
மரணம் சிதறாத இடம் இல்லை. வாழ்வது எப்படியோ மரணமும் அப்படிதான்… அது தினம் தினம் நிகழ்கின்ற இயல்பு. எந்த ஒரு மரணத்திலும்.. ஆழ்ந்த துக்கம் இருக்கிறது. அது தன்னை இல்லாமல் ஆக்கும் கடைசி தருணங்களில்… துயரம் மேலோங்கி இருக்கிறது. அது தான்…. தீனி அவர்களுக்கு. சாக போகிறவனை ஒளிந்து நின்று படம் பிடிப்பது நடுக்கத்துக்குரியது. உள்ளே நட்டுவாக்கிளி பிராண்டும் ரகசிய கடி அது. திருடனுக்கு தேள் கொட்டியது போல தான் ஒவ்வொரு மரணமும். ஓடி ஒளிய முடியாது. ஆனால் தேடி பிடித்திழுக்கிறது பணம். இப்போதெல்லாம் வயிறு நிறைந்தாலும்.. மனதில் விழுந்த ஓட்டை பெரிதாகி கொண்டே இருக்கிறது அதூரனுக்கு. ஆனாலும் அதூரன் ஒரு கீ கொடுத்த பொம்மையை போலாகி விட்டான். ரயிலில் அடிபட்டவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவதற்கு பதில்…ஒதுங்கி நின்று படம் பிடித்துக் கொண்டிருக்கிறான். விஷம் குடித்தவன்… பாம்பு கடித்தவன்… கிணற்றில் விழுந்தவன்… கரண்ட் ஷாக் அடித்தவன்… விரட்டி விரட்டி வெட்டப்பட்டவன்… மரத்தில் இருந்து தவறி விழுந்தவன்…கட்டடத்தில் இருந்து கால் தடுக்கி விழுந்தவன்… தூக்கில் தொங்குவபவன்… லாரியில் மோதியவன் என்று தேடி அவன் தினம் தினம் ஒரு கழுகை போல நரகத்துக்குள் அலைகிறான். அவன் பேச்சில்… மூச்சில் அவன் உடல் முழுக்க கூட மரண வாசம் தான். விட்டு விலகிட முடியாத பாவங்கள் அவன் தலைமேல் கிரீடம் சூடி விட்டது. முகம் தெரியாத சாத்தான்கள் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த பல நேரங்களில்… வாழ்வின் அடிப்படை சாபங்கள் அவனை விரட்டி பிடித்தன.
மரணம் ரசிக்கும் மாய வலைக்குள் அவனொரு சங்கிலி. சங்கிலி அறுபட வலைகள் விரும்பாது. விரட்டுகிறது.
ஒவ்வொரு சாவிலும் தனக்கும் பங்கிருப்பதாக அவன் நம்ப ஆரம்பித்து விட்டான். அது அவனை வெம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. ரயிலில் கால் துண்டானவன் கதறிய சத்தம் இன்னும் துல்லியமாக கிடைக்கவில்லையே என்று திட்டு வாங்கிய இரவு தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தான். தான் ஒரு மிருகமாக மாறிக் கொண்டே வருவதை அவனால் தாங்க முடியவில்லை. ஆனாலும்… மிருகத்தின் போர்வையில் மனிதனிடம் இருந்து பெருந்தூரம் ஓடி விட கிடைத்த வாய்ப்பாகவும் இதை பார்க்க ஆரம்பித்தான். மரணத்துக்கா பஞ்சம். தடுக்கி எழுந்தால் இந்த பூமியில் மரணம் தான். இந்த பூமியே வாழ்ந்து கெட்ட ஒன்றின் மரணம் தான் என்பதும் அவனது நம்பிக்கைக்குள் வந்து விட்டிருக்கிறது. அதன் தீர்வு அதை ஆசை தீர பார்ப்பது தான் என்பது தான் அவனுக்கான போதனை. கிளிப்பிங் எத்தனை கொடூரமாக இருக்கிறதோ அத்தனை காசு.
“காசு தான் முக்கியமா…..! அசிங்கமா இல்ல…?” அவன் மனசாட்சிக்கு எந்த இரவிலாவது திடும்மென எழுந்து பதில் சொல்வான்.
“ஆமா காசு தான் முக்கியம்…”
எங்கிருந்தோ கிடைத்த லிங்கில்…. ஊசிமலை உச்சியில் ஒரு பெண் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்து தான்…. வார கணக்கில் அவள் பின்னால் ஒளிந்து ஒளிந்து காத்திருக்கிறான். அவள் மலை உச்சியில் இருந்து விழும் அன்று பாக்கெட் நிறையும். ஒரு ப்ராஜெக்ட் கூடும். ஆனால் அவள் தினம் தினம் போக்கு காட்டிக் கொண்டே இருக்கிறாள்.
கேமரா ஸூம்- ல் முகத்தருகே தெரியும் அவளின் பேரழகு…. நொடியில் ஒற்றைக் கண்ணில் நட்சத்திரம் மாட்டுகிறது. செதுக்க செதுக்க எழுந்து வந்து விட்ட சிற்பம் போல இருக்கிறவள் ஏன் இங்கே இப்படி அலைந்து கொண்டிருக்கிறாள். எத்தனை கேஸ்கள் பார்த்திருப்பான். அதூரன் கணிப்பு தப்பியதே இல்லை. அவள் தற்கொலைக்கு தான் முயற்சிக்கிறாள். அவள் ஒவ்வொரு முறையும் மலையின் விளிம்பிற்கு சென்று எட்டி பார்க்கையில்… அவள் முகத்தில் தெளிவு கூடி மரண விருப்பம் தோன்றுவதை… ஸூம் காட்டிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த கண்களில் மரணத்தின் தீவிரம் இருக்கிறது. அந்த வறண்ட உதட்டில் ஏற்கனவே மாண்டுவிட்ட நிறம் அப்பி கிடக்கிறது.
காய்ந்த முகத்தில் கனத்த யோசனை. எப்போதும் துளி துளியாய் மரணத்தை சேகரித்த துயரம் மின்னும் உடல் அது. தினம் தினம் அவள் செத்து செத்து வாழ்வதை பார்க்க முடிகிறது. ஆனாலும் அவள் எட்டி குதிக்க தயங்குகிறாள். பணம் மரணம் கேமரா எல்லாம் தாண்டி அவள் ஏன் சாக மாட்டேங்கிறாள் என்ற ஆர்வம் அவனை தொற்றிக் கொண்டு விரட்ட ஆரம்பித்து விட்டது. அதே நேரம் தலைக்குள் வந்து வந்து ரீங்கரிக்கும் ஒவ்வொரு x ன் அழைப்புகள். ரத்தத்துக்கு நீளும் நாக்குகளின் சொரண்டல் ஆதூரனின் மூலையில் பள்ளம் உண்டாக்கி கொண்டே இருக்கின்றன.
“வர்ற கோபத்துக்கு போயி தள்ளி விட்டுட்டா என்ன….?”
மனதுள் உருளும் பிணங்களின் வரிசையில் அவளுக்கான இடத்தை எதைக் கொண்டும் இட்டு நிரப்ப முடியவில்லை. தொல்லையாக இருக்கிறது எல்லாமே. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். சுற்றுலா கோமாளிகள்… சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து கொண்டு என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவேளை அவள் மலையை ரசிக்க வந்தவளாக இருக்குமோ…புத்திக்குள் வேறொரு திசை விரிந்தது. இனியும் காலம் தாழ்த்த கூடாது. ஒளிந்திருந்த பாறையை விட்டு விலகினான். இயல்பாக ஒரு நடை. இயன்ற வரை ஒரு கூறுகெட்ட சுற்றுலாவாசி முகம். வாங்கிய கூமாச்சி கடலை பொட்டலத்தை பிரித்து ஒவ்வொரு கடலையாக வாய்க்குள் போட்டான். பிரபஞ்ச வெடிப்பில் ஒவ்வொரு தூசியாக அடைபடுவது போன்ற அத்தியாய குளறுபடி அவனுள்.
அத்தனை அருகில் வெறும் கண்களில் அவளை காணுகையில் அது சாவதற்கான அழகல்ல என்று புரிந்தது. உள்ளே நிகழ்ந்த பெரு வெடிப்பில் ஓராயிரம் பாரதிராஜா பட பறவைகள்.
சின்ன சிரிப்பில் கண்ண குழைவில்… செக்யூரிட்டியிடம் வாங்கி கொண்ட கடலை பொட்டலத்துக்கு தேங்க்ஸ் என்றாள். அதில் கொஞ்சம் வெட்கமும் 12 வருஷத்துக்கு ஒரு முறை மலையில் பூக்கும் குறிஞ்சி பூ மாதிரி தான் விரிந்தது.
“பேரெல்லாம் இருக்கட்டும்… இங்கிருந்து குதிச்சு சாக பயமா இருக்கு.. கூட சேர்ந்து சாகறயா….” அவளிடம் பேர் கேட்ட ஒரு சுற்றுலா இளைஞனிடம் வெகு இயல்பாக கேட்டாள்.
“ஓ இவ கிறுக்கியா….” அவன் தடுமாறி தெறித்து விட்டான்.
“அது தான் ஸூம்- ல் பார்க்கும் போதெல்லாம் யாரிடமாவது எதோ கேட்பதாக பேசுவதும் அவர்கள் அய்யயோ என்பது போல பார்த்துக் கொண்டே நகருவதும்….” இது தான் விஷயமா…!” என்று அதூரனுக்கு புரிந்தது. சிரிப்பும் வந்தது. இவ எல்லாரையும் லூசாக்கிட்டு இருக்காளோ. நவநாகரிகமான உடையில்… பாவனையில்…. ஒப்பனையில்…
“இல்லையே அந்த கண்களில் பைத்தியம் இல்லையே… அதில் அத்தனை தெளிவு… இருக்கிறதே….?”
வீடு வந்தும் அவளின் நினைப்பு மலை உச்சியை தலைகீழாக்கி பள்ளத்தாக்கு செய்து கொண்டே இருக்கிறது.
முதல் முறையாக உள்ளே இனம் புரியாத ஆனந்தம். கன்னத்தில் மினுமினுக்கும் பூனை முடிகளில்… மலைக்காற்றின் அசைவை உணர்ந்த தருணம்…. நெற்றியில் சுருண்ட நெகிழி தத்துவமென கற்றை முடி கருணை…குரலில் மரணம் வாசித்தாலும்… அதில் மாங்கனியில் செய்த புல்லாங்குழல் புதுமை. “என்ன இது மாற்றமோ… ஏன் மனசு தவிக்குதே” பாடல் முணுமுணுத்தான். கண்ணாடியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகம் பார்த்தான். பிம்பம் செய்யும் சிறு புன்னகையை தாங்காத வெட்கம் அவன் அறையில் அவனை சடுதியில் கடவுளாக்கி விட்டது. அவனுள் இருந்த சாத்தானின் கறைகள் எல்லாமே துடைக்கப்படுவது போன்ற நம்பிக்கை. அவளை சாக விட கூடாது. இதுவரை செத்த யாவருக்கும் சேர்ந்த வாழ்வை அவளுக்கு தந்து விட வேண்டும்.
முடிவெடுத்தவனாய் விடியலை விரட்டி பிடித்தான்.
சாவதை படம் பிடிக்க வந்து விட்டு என்ன இது காதல் கத்திரிக்காய்… என்று அவனை அவனே நொந்து கொள்கிறான். வரும் அழைப்புகள் வெறும் மிரட்டல்கள் இல்லை. கண்டிப்பாக சிக்க வைத்து விடும். பணத்துக்கும் பிணத்துக்கு இடையே மனிதனாக இருப்பதில் இருக்கும் பெரும்பாடு அவனை அவள் வரும் வரை போட்டு கசக்கி எடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு பக்கம் திடும்மென அவள் மேல் பூத்து விட்ட காதல்… அவளை எப்படியாவது காப்பாற்றி விட எத்தனிக்கிறது. இந்த கொடும் கூட்டத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று தான் காலம் இவளை இங்கே அனுப்பி இருக்கிறதோ. அவள் கண்களில் மரண ஒளி இன்னும் இன்னும் பிரகாசமாக மிளிர…சேருமிடம் வந்து விட்டிருந்தாள். மொட்டை பாறையில் காதல் தாவரமென பூத்திருக்கிறாள். அவள் தலைக்கு மேல் விரிந்திருக்கும் வானத்தில் தெளிவு. வெளிர் நீலம் வேகமாய் தன்னை ஈஸிக் கொண்டிருக்கிறது.
சோர்ந்து போன மனதில் தோல்வியும் இல்லை. வெற்றியும் இல்லை. கேமரா ஸூம் வழியே கண்களை நீட்டித்தான். வெறும் கண்களில் அரூப உருவமாய் தெரிந்தவள் கேமரா ஸூம் வழியே உயர அகலமாய் தெரிந்தாள். அவள் முகத்தில் இதுவரை இல்லாத குழப்பம் இன்று இருக்கிறது. அவள் அழுகிறாள். இதுவரை ஒரு நாள் கூட அழுது பார்க்கவில்லை. ஒப்பனை முகத்தை காணவில்லை. எதுவோ சரி இல்லை. அவள் தயாராகி விட்டாள். கண்களை வெளியே எடுத்து பார்த்தான். அவள் மொட்டை பாறையை விட்டு இறங்கி….மலையின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
இல்லை சரி இல்லை….- வேக வேகமாய் அவளை நோக்கி ஓட தொடங்கினான் அதூரன்.
“ஏய்… லூசு… குதிச்சிடாத குதிச்சிடாத…..பேசிக்கலாம்….” உள்ளம் பதற பதறவே அவள் கம்பிகளால் சூழ்ந்த எல்லைக்குள் நுழைந்து…. எழுந்து….மறுகணம் எல்லைகளற்ற வெளியில் எட்டி குதித்து விட்டாள்.
திக் திக்கென சுற்றுலாவாசிகளின் கவனம் ஒரு சேர அதிர்ந்து திரும்ப… செக்யூரிட்டிகளின் நடுக்கம் அனிச்சையாய் தங்களை ஓடோடி மலையின் விளிம்புக்கு தள்ளிக் கொண்டு வர… அதற்குள் அவள் எட்டி குதித்த இடத்தில் மூச்சிரைக்க நின்றிருந்தான் அதூரன். அவளின் குதித்த அதிர்வு…. அவனுள் கைகள் அசைத்து… கால்கள் உதைத்து… ஒரு மரண குழந்தையை இறக்கிக் கொண்டிருந்தது. தனக்கு மூச்சிருக்கிறதா என்று கூட உணரமுடியவில்லை. நிலைகுத்திய பார்வை அவனுக்கு. நிகழ்வது குத்தி கிழித்ததெல்லாம் அவன் மேல்.
இதுவரை இருந்த அதீத வெப்ப சலனம். மழை வந்து விட தயாராகி கொண்டிருக்கிறது.
நீல உடையில் இப்போது தான் வானில் இருந்து இறங்கி வந்த மேக தூதுகி போல மொட்டை பாறையில் பூத்திருந்தவள்…
தினம் தினம் வேறு வேறு பூக்கள் பூக்கும் மொட்டை பாறையில் யானை காதுகள் அசைவதாக வந்த கற்பனை…
அவள் சாவது பற்றி மனம் இனிக்க யார் யாரிடமோ பேசி தீர்க்கிறாள்.
கடலை பொட்டலங்கள் தீர்ந்து கொண்டே இருக்கின்றன.
x களிடம் இருந்து வரும் அழைப்புகள்…..
அவள் கெஞ்சுகிறாள். எனக்கு பயமா இருக்கு… கூட வாயேன்… இங்கிருந்த பறந்து இந்த பள்ளத்தாக்கில் ஒரு பறவை மாதிரி மாறிடலாம். யாருக்கும் நம்ம உடம்பு கிடைக்காது.
ஒவ்வொருவரிடமும் பேசிய ஒவ்வொன்றும் மனதுள் எட்டி குதிக்கின்றன. அதே நேரம் அவளை சுற்றி அவன் மனம் நெய்திருந்த பிம்பங்கள் ஒவ்வொன்றாக வந்து வந்து மறைந்து கொண்டிருந்தன.
செக்யூரிட்டிகள் சத்தம் போட்டு…. கூட்டம் கூடாமல் பின்னோக்கி செல்ல தடுமாறிக் கொண்டிருக்கையில்… பெரு மூச்சு முகம் முழுக்க அவனை ஊதி தள்ளியது போல நினைவுக்கு வந்தான்.
அவள் அமர்ந்திருந்த பாறை… அவள் சற்று முன் நின்ற இதே இடம்… சட்டென அவள் எட்டி குதித்த இந்த பள்ளத்தாக்கு… எல்லாம் எல்லாம் மாறி மாறி அவன் மூளைக்குள் கேமராவை பதித்துக் கொண்டே இருந்தது. அவன் நெற்றியில் ஒளிரும் ஒற்றை கண்ணன் எல்லாவற்றையும் படம் பிடிப்பதாக அவன் நடுங்கும் உடல் நம்பியது. வரும் அழைப்புகளின் மிரட்டல் ஒலி… இதுவரை படம் பிடித்த அத்தனை மரணங்களின் ஓலம்… “கூட யாராவது வாங்களே… சாக பயமா இருக்கு” என்ற அவளின் சிணுங்கும் குரல்…என்று எல்லாமும் எல்லாமும் எல்லாமும்…. அவன் காதில் கழுகு றெக்கையை வேக வேகமாய் அடித்தன.
கண்கள் மூடி திறந்த ஒரு நொடியில்… சட்டென தானும் எட்டி குதித்த அதூரன்…. பள்ளத்தாக்கில் பறக்க ஆரம்பித்து விட்ட பறவை ஒன்றில் தானும் தொற்றிக் கொண்ட நினைப்பில் மிதக்க ஆரம்பித்தான்.
கூட்டம் மீண்டும் அதிர்வில் ஓங்காரித்தது.
ஒரு தாலாட்டு முன் பின்னாக இரு உடல்களை காற்றினில் இறக்கிக் கொண்டிருந்ததை எல்லாருமே நடுங்கும் கண்களில் கண்டார்கள்.
கத்தி கதறும் பதற்றம் எல்லாம்…. சில நொடி உறைநிலையில் நின்று விட…. பாறைக்கு பின் ஒளிந்து நின்று படம் பிடித்துக் கொண்டிருந்த கேமரா ட்ரைபாட் தானாகவே கால் உடைந்து சரிந்தது. அந்த கேமரா கீழே விழுந்து பாதி உடைந்து உருண்டு உருண்டு உருண்டு…. மற்றவர் விலக விலக…. இதோ அதுவும் மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கு நோக்கி…. முகம் திரும்பியபடி சிறகு விரிக்கிறது.
அதன் உடைந்த ஒற்றைக்கண்ணில் பதிகிறது. கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்ட நிலவுக்கு இன்று ஊதா நிறம்.