நிலவாய் அவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2022
பார்வையிட்டோர்: 6,155 
 
 

பொன் போல் ஜொலிக்கும் பழுப்பு நிற சுருள் கேசம், கறுந்திராட்சை போன்ற பளிங்கு விழிகள், அளவாய் புன்னகைக்கும் இளஞ்சிவப்பு உதடுகள், ரோசாப்பூ நிற தேகத்திற்கு ஏற்றவாறு அடர் சிவப்பு வெல்வெட் மேலாடை, அடுக்கி வைத்த மேகப் பொதிகள் போல் பரந்து விரியும் இளஞ்சிவப்பு கீழாடையென அந்த பார்பி பொம்மை அவன் கண்களை அகல விரியச் செய்தது. பல வண்ணங்களில் விட்டு விட்டு மின்னும் அலங்கார விளக்குகளின் மின்னொளியில் அந்த பார்பி பொம்மை உண்மையிலேயே அவனைப் பார்த்து புன்னகை செய்வதாகவே அவனுக்கு தோன்றியது.

கடையடைக்கும் நேரமாகையால் கல்லாப் பெட்டியிலிருந்த​ பணத்தை கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார் அந்த ஃபேன்சி கடையின் உரிமையாளர். ஷோ கேசிலிருந்த மற்ற பொம்மைகளை விட அந்த பார்பி பொம்மை அவன் கவனத்தை ஈர்க்க காரணம் பக்கத்து வீட்டு ஆனந்தி சில மாதங்களாக அது போல் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு செய்த அலப்பறைகள்தான். சிங்கப்பூர் மாமா பிறந்த நாள் பரிசாகத் தந்த அந்த பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குத் தலை பின்னி விடுவதென்ன, உடை மாற்றுவதென்ன, பவுடர் அடித்து விடுவதென்னவென்று தெருவையே அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தாள். கொஞ்சம் பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன் என்று ஓரிரு முறை கேட்டுப் பார்த்தும் மாட்டேனென்று நெஞ்சோடு அந்த பார்பி பொம்மையை இறுக்க அணைத்துக்கொண்டு ஓடி விடுவாள். ஆசையாக ஒரு நாள் அந்த பொம்மையை லேசாக தொட முயன்றதுக்கே அழுது ஊரைக்கூட்டி விட்டாள். அதேபோல் தனக்கும் ஒன்று வேண்டுமென்று அம்மாவிடமும் பலமுறை கேட்டாகி விட்டது. “அது பொம்பளப் புள்ளைங்க வெளையாடுறது.. நீ என்ன பொம்பளப் புள்ளையா? ஒனக்கு அப்புறமா ரிமோட் கார் வாங்கித் தாரேன்..”ன்னு சிரித்தவாறே சொல்லி சரி கட்டிவிடுவாள். “சரி..பொம்பள பொம்மை வேணா… ஆம்பள பொம்மையாச்சும் வாங்கித் தாம்மா..”ன்னு கேட்டால் “நாலாங்கிளாசு வந்தாச்சு..இன்னும் பொம்மைய வச்சு வெளையாட நீயென்ன சின்ன குழந்தையா?”ன்னு செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைப்பதோடு முடித்துக்கொள்வாள்.. ரிமோட்டு காராவது வாங்கித் தருவாளென்று பார்த்தால் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் வாங்கித் தந்த பாடில்லை. தனக்கு மட்டும் விரும்பிய எதுவும் கிடைக்கப்பெறுவதில்லை என்ற ஏமாற்றம் நெஞ்சை அடைக்க கண்களில் கண்ணீர் முட்டியது அவனுக்கு. தன் கையைப் பிடித்திருந்த அம்மாவின் முகத்தை மெல்ல ஏறிட்டுப் பார்த்தான். அவனது கண்ணீரைப் பொருட்படுத்தும் அளவிற்கில்லாமல் அவளுடைய கண்களும் கலங்கியவாறே முன்னால் நின்ற அரசுப் பேருந்தின் ‘சேலம் வழி திருச்சி’ என்ற பெயர்ப்பலகையை உயிரற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

பதினைந்திற்கும் குறைவான பயணிகளே இங்கொன்றும் அங்கொன்றுமாக அந்த பேருந்தில் அமர்ந்திருக்க, டிரைவரும் கண்டக்டரும் முன்புறமிருந்த கடையில் டீ குடித்துக் கொண்டே தொழிற்சங்க தேர்தலைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். பேருந்து புறப்பட அவர்களுக்கு இன்னும் இருபது நிமிடங்கள் நேரமிருந்தது. பேருந்துகள் வருவதும் போவதுமாக அந்த சிறிய பேருந்து நிலையம் ஓரளவு பரபரப்புடன் காணப்பட மழைக்கால தொடக்கத்தை வரவேற்கும் விதமாக அருகிலிருந்த அம்மன் குளத்து தவளைகளின் “கரக்.. கரக்” சப்தம் பேருந்துகளின் இன்ஜின் இரைச்சலை மீறி ஒலித்துக்கொண்டே இருந்தது. தவளைகளின் அழைப்புக்கு சிறிது செவி சாய்ப்பது போல் மழைத் தூறல்கள் இங்குமங்குமாய் மண்ணில் பொட்டு வைக்கத் தொடங்கியது. சட்டென்று அவள் முகத்தில் விழுந்த ஒன்றிரண்டு மழைத்துளிகள் அவளை சுய நினைவிற்கு வர வைக்க மழைத்துளிகள் அவன் மீது படாதவாறு சுவரோரமாய் ஒதுங்கி நின்றாள். கார் மேகங்களுக்கிடையே வான் நிலவானது தன் இருப்பை காப்பாற்றிக்கொள்ள போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில் அவள் மனதும் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

“நேத்து வண்டியூரு தெப்பம் பக்கத்துல ஒங்க ஊட்டுக்காரர பாத்தேன்.. பின்னால நம்ம பூக்கார செல்வி..சோடியா பைக்ல சுத்துறாக..இத்தோட ரெண்டு மூணு தடவை பாத்துட்டேன்.. பாத்துக்க தனம்..”ன்னு காய்கறி விற்கும் பேச்சியம்மா கிழவி எச்சரிக்கை விடுத்து பெருமூச்சோடு கூடையை தலையில் சுமந்து சென்றாள். தனத்திற்கும் இந்த விசயம் அரசல் புரசலாக முன்னமே தெரியும். ஏற்கனவே போன மாதம்தான் பக்கத்து வீட்டு ராமசாமி தாத்தா மூட்டு வலிக்கு வைத்தியம் பார்க்க வடக்குத் தெரு நாட்டு வைத்தியரிடம் போன போது ஆற்றங்கரை ஓரமாக ரெண்டு பேரும் உரசிக்கொண்டு உட்கார்ந்திருந்ததை பார்த்துவிட்டு “என்னாத்தா..சுந்தரம் இப்போல்லாம் ஆத்தங்கரையோரமாவே தெனந்தெனம் வண்டி ஓட்டிக்கிட்டிருக்காரு போலருக்கே?!..”ன்னு கேலியா சொன்னது அவளுக்கு புரியாமலில்லை. சுந்தரத்திடம் இதைப்பற்றி கேட்க ஆரம்பித்தால் வானத்திற்கும் பூமிக்குமாக எகிறி குதிக்க ஆரம்பித்துவிடுவான்.

அம்மா இருந்திருந்தால் கூட கோபப்பட்டு கிளம்பி போவதற்கு தனக்கென்று ஒரு போக்கிடம் இருந்திருக்கும். இப்போது நிலைமை அப்படி இல்லை. சேலத்திலிருக்கும் அவளது ஒரே தம்பி பாஸ்கரனும் அதுவரை ‘அக்கா அக்கா’ என்று பாசமாக இருந்தவன், செழிப்பான வீட்டில் கல்யாணம் ஆனவுடன் தன்னுடைய மனைவி, மச்சான், மச்சினிச்சிகள் என்று அடியாய் புகுந்த வீட்டு ஆளாக மாறிப்போய்விட்டான். போனமுறை கண்ணனுக்கு முழு ஆண்டு பரிட்சை லீவு விட்டவுடன், அம்மா ஊருக்கு போய் ஒரு பத்து நாள் ஆசையாக தங்கி வரலாம் என்று சென்றவளுக்கு பெருத்த ஏமாற்றமே வரவேற்பாக கிடைத்தது.

“மச்சினிச்சிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க பேமிலியோட நேத்துதான் இங்க வந்தாங்க.. கிளம்பறதுக்கு மொதல்ல ஒரு போன் பண்ண தோணலயா ஒனக்கு.. ஏற்கனவே இங்க இடம் பத்தல..இப்பதான வந்து போன.. அதுக்குள்ள என்ன ?” என்ற தம்பியின் பாசமலர் வரவேற்பினில் ஆகாரம் தொண்டைக்குள் இறங்கவில்லை அவளுக்கு.

கண்ணனிடம் கூட ஆசையாக ஒரு வார்த்தை பேசாமல் அலட்சியப்படுத்தியவனாக, தன்னுடைய மச்சினிச்சியின் குழந்தைகளிடம் பாச மழை பொழிந்து கொண்டிருந்த அவனது பாரமுகங்கள் இனி தனக்குத் தாய் வீடென்று எதுவும் இல்லை என்பதை அவளுக்கு தெளிவாக உணர்த்தியது.

அதனால் இப்போது எதையும் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு. ஒரு வகையில் பார்த்தால் இதற்கு தானும் ஒரு காரணம்தான் என்று அவளுக்கு தோன்றியது.

“ஒரு முழமாச்சும் வாங்கிக்கங்கக்கா..”என்று பூக்கூடையுடன் வாசலில் நின்று கெஞ்சிய செல்வியின் முகத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் அவள் மேல் உண்டானது. கருப்பாக இருந்தாலும் வசீகரிக்கும் முகம். பூசினாற்போல உடல்வாகு. நல்ல உயரம். உரிமையுடன் வீட்டுக்குள் புழங்கும் அளவிற்கு பழக விட்டாகிவிட்டது.

“ஏம்புள்ள.. தெருத்தெருவா விக்கிறவ..ஒரு அரை முழத்த எடுத்து ஓந் தலையில வெச்சிக்கிட கூடாதா?” அக்கறையுடன் கேட்டாள் தனம்.

“ம்க்கும்..ரொம்பத் தேவைதான்.. அத வித்தா பழைய சோத்துக்கு ஊறுகாவுக்காவது ஆகும்..

அந்த சப்பாணிப்பயல எந்தலையில கட்டி வச்சிட்டு இன்னைக்கு தெருத் தெருவா அலைஞ்சிட்டுருக்கேன்.. பூ ஒன்னுதான் இப்போ கொறச்சலாக்கும்..நீங்க வேறக்கா..” அலுத்துக் கொண்டாள் செல்வி.

ஆனால் நேற்று அவள் கண்ட அந்த காட்சி. தலை நிறைய மல்லிகைப் பூவுடன் சுந்தரத்தின் இடுப்பில் ஒரு கையை வைத்து அணைத்தவாறு புது மணப்பெண் போல் மலர்ந்த முகத்துடன் அவனுடன் பைக்கில் சென்ற செல்வியைப் பார்த்தவுடன் ஆயிரமாயிரம் எரிமலைகள் அவளுக்குள் வெடித்துச் சிதற ஆயத்தமானது. கொதிக்கும் கண்ணீர் எரிமலைக் குழம்பாய் கொப்பளித்தது. அவளுக்காக பரிதாபப்பட்ட தன்னுடைய நிலையை இன்று பரிதாபத்திற்குள்ளதாக மாற்றி விட்டாளே நம்பிக்கை துரோகி என்ற கோபம் தனத்தின் உள்ளத்தில் சூறாவளியாய் சுழன்றடித்தது

பரிவு காட்டிய தன்னை பரிதவிக்க விட்ட அவள் செய்த துரோகம் பெரிதா, அவன்தான் உலகமென்று வாழ்ந்துகொண்டிருக்கும் தனக்கு அவன் செய்த துரோகம் பெரிதா என்று நடக்கும் பட்டிமன்றத்தில் நிலை குலைந்த நீதிபதியாய் திணறினாள் அவள்.

குறைந்தளவே சம்பாதித்தாலும் தன்னைக் கண்ணியமாக வைத்திருக்கும் அவனது குணத்துக்காகவே அவனிடம் கண்ட பல குறைகளை பொறுத்துக் கொண்டவளுக்கு, இனியும் பொறுப்பதற்கில்லை என்றானது.

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு, அடுக்களையில் அங்கே இங்கே என சேர்த்து வைத்த ஐந்து பத்து ரூபாய்களை மணிபர்ஸில் திணித்தவாறு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கண்ணனைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு அழுகையும் ஆத்திரமுமாக கதவைத் தாளிட்டு சாவியை எதிர் வீட்டு பாத்திமாவிடம் கொடுக்க , “என்னாச்சு தனம்? இந்த நேரத்துல எங்க கெளம்பிட்ட?” என்று கையைப் பிடித்து அக்கறையுடன் தடுத்த அவளிடம் “ஒன்னுமில்லக்கா..அவர் வந்தா கொடுத்துருங்க.. வரேன்..”னு அழுது வீங்கிய முகத்தை மறைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடையைக் கட்டினாள்..

வீட்டை விட்டு வீராப்பாய் கிளம்பி சேலம் பஸ் நிற்குமிடம் வந்தவளுக்கு “இப்பதான வந்து போன.. அதுக்குள்ள என்ன ?” என்ற தம்பியின் வார்த்தைகள் காதில் ரீங்காரமாய் ஒலித்து பஸ்ஸில் ஏற விடாமல் தடுக்க அடுத்து என்ன செய்வது, எங்கு போவதெனப் புரியாது அந்த இரவுப்பொழுதில் கலங்கி நின்றாள்.

கார்மேகங்கள் அந்நேரம் வான் நிலவை மூடி மறைத்திருந்தன. காற்று பலமாக வீசத் தொடங்க பேருந்தில்அமர்ந்திருந்தபயணிகள் அவசர அவசரமாக சன்னல் கதவுகளை கீழே இறக்கி மூட ஆரம்பித்தனர். டிரைவரும் கண்டக்டரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். டிரைவர் அவரது இருக்கையில் அமர கண்டக்டர் அமர்ந்திருந்த பயணிகளுக்கு சீட்டு கொடுக்க ஆரம்பித்திருந்தார்.

பாத்திமாவிடம் விசயத்தை தெரிந்து கொண்ட சுந்தரம் அவள் எங்கே சென்றிருப்பாள் என்று அனுமானித்தவனாக பேருந்து நிலையத்துக்கு விரைந்தான்.

வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு தன்னை நோக்கி வந்த அவனைப் பார்த்தும் பாராது அழுகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன பழக்கம் இது? இந்த நேரத்துல இங்க வரலாமா? வா போகலாம்” என்று கண்டிப்பும் அக்கறையும் கலந்தவனாக அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“இதுக்கு மேல இங்க இருக்க எனக்கு என்ன இருக்கு..” என்று தழுதழுத்தது அவள் குரல்.

“இப்ப என்ன ஆயிடுச்சு..?”

“இனிமே என்ன ஆகனும்.. அம்மா இருந்தாலாவது எனக்குன்னு ஒரு நாதி இருந்திருக்கும்.. இப்ப கேக்க ஆளில்லாம அனாதையாட்டம் தெருவுல நிக்கறேன்..” என்று உடைந்து அழுது அவள் கூறிய வார்த்தைகள் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து அந்த​ வறண்ட பூமியில் எதற்கும் கேட்பாரற்று வளர்ந்த அவன் இறுகிய உள்ளத்தில் ஈரம் கசிய செய்தது.

கலங்கிய கண்களுடன் கண்ணனும் இருவருக்குள்ளும் என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“சரி புள்ள.. வான்னு சொல்றேன்ல..சொன்னா கேக்கனும்..” சிறிது கண்டிப்புடனும் சிறிது கெஞ்சலுடனும் சுற்றி இருப்பவர்கள் யாராவது தான் இறைஞ்சுவதை பார்க்கிறார்களோ என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவன் அவள் கையைப் பிடித்து மெதுவாக இழுக்க, முரட்டு குணம் கொண்ட அவன் இவ்வளவு தூரம் தனக்காக இறங்கி வந்து கெஞ்சுவதே பெரிது என அவளது உள்ளமும் அமைதியாகத் தொடங்கியது. எப்படியும் தன் பக்கம் அவனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை அவள் உள்ளத்தில் துளிர் விட ஆரம்பிக்க கண்ணீரைத் துடைத்து கொண்டு அவனுடன் மெதுவாக நகரத் தொடங்கினாள்.

பலமாக வீசிய காற்றில் மழை மேகங்கள் கலையத் தொடங்க வான் நிலவு மீண்டும் பிரகாசமான புன்னகையுடன் ஒளிரத் தொடங்கியது.

“உனக்கென்னடா ஆச்சு குட்டிப்பயலே… நீ ஏன் இப்படி கண்ணுல தண்ணி விட்டுக்கிட்டு நிக்கற​…” என்று கண்ணனைக் கையில் தூக்கி கொஞ்சலாய் வினவினான் சுந்தரம்.

பார்பி பொம்மையை நோக்கி தன் பிஞ்சு விரலை நீட்டினான் அவன்.

“அது விலை கூட இருக்கும்… அவனுக்கு அந்த சின்ன​ ரிமோட் கார் வாங்கிக் கொடுங்க போதும்..” என்றாள் தனம் சிக்கனமான குடும்பத் தலைவியாய்.

ரிமோட் காரை வாங்கிக் கொண்டு பைக்கை நிறுத்தி இருந்த இடம் நோக்கி நகர ஆரம்பித்தது அந்த அழகிய சிறிய குடும்பம்.

பைக்கில் மூவரும் அமர்ந்து கொள்ள வண்டியை கிளப்பினான் சுந்தரம். ரிமோட் காரை கையில் பிடித்தவாறே பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வரை அந்த​ பேன்சி கடையை வைத்த கண் வாங்காமல் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

அங்கே.. அந்த பார்பி பொம்மை இன்னும் அவனைப் பார்த்து புன்னகை செய்து கொண்டுதான் இருந்தது.

***

‘நீரில் நீண்டநேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும்; பலநாட்கள் பருகுவோர்க்குத் தேனும் புளிக்கும். இது உலக இயற்கை. நீ தலைவியுடன் நெடுநாள் வாழ்ந்தமையால் சலிப்புற்று அவளைப் பிரிந்தாய். அப்படியாயின், எங்களை எங்கள் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு. அழகிய குளிர்ந்த பொய்கைகளையுடைய எம் தந்தையினது ஊரில் இரவில் கடும்பாம்புகள் திரியும் எம் தெருவில் வந்து எமது நடுங்கும் துயரை நீ களைந்தாய், களவுக் காலத்தில்! இப்போது எங்களை எங்கள் வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிடு’ என்று கூறுகிறாள்.

நீர்நீடாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில்தேனும் புளிக்கும்
தணந்தனை யாயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ

(ஆர்ந்தோர் = மிகுதியாக உண்டோர்; தணந்தனை = பிரிந்தாய்; உய்த்துக்கொடுமோ = சேர்ப்பித்து விடு)

– குறுந்தொகை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *