நிறை – குறை குடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 4,059 
 
 

கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ‘ புசு புசு ‘ வென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

எழுந்து போய் கதவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி , திடுக் !!.

“வா… வா… ‘’ கடுகடு குறையாமல் அதிக மலர்ச்சி இல்லாமல் உள்ளே நுழைந்தவளை ஒரு மாதிரியாக வரவேற்றாள்.

அதே நொடி…

“பேரப்பையன் தூங்கிட்டானா..?” என்று கேட்டு மகள் தோள் மீது தூங்கிய ஒரு வயது குழந்தையை எடுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டு சோபாவை நோக்கி நடந்தாள்.

‘வந்தது யார்….?’ அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்தாள் சுகாசினி.

“வா கவுரி..!” அவளும் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஒப்புக்கு அழைத்து, அ டுத்து ஏதும் பேசாமல் உள்ளே மறைந்தாள்.

“வர்றேன் அண்ணி !” என்ற கவுரிக்கு வீட்டின் நிலைமை சரி இல்லை புரிந்தது. அண்ணிக்கும் அம்மாவிற்கும் ஏதோ ‘ லடாய் ! ‘ தெளிவாகத் தெரிந்தது.

“என்னம்மா..! அண்ணிக்கும் உனக்கும் சண்டையா..?” என்று மெல்ல கேட்டு தாயின் அருகில் அமர்ந்தாள்.

“என்னைக்குத்தான் இந்த வீட்ல சண்டை இல்லே…”முகத்தை முறுக்கி முயக்கி சொன்ன அலமேலு… தோளில் இருந்த பேரனை அப்படியே சோபாவில் கிடத்தினாள்.

அவன் கண் விழிக்காமல் இருக்க மெதுவாய் நெஞ்சில் தட்டிக் கொடுத்தாள்.

“ஏன்… என்னாச்சு..?” கவுரி விடவில்லை. அக்கறையாய்க் கேட்டாள்.

“நான் நாயாய்ப் பேயாய் அலைந்து பெண் தேடிய லட்சணம்… இப்போ அனுபவிக்கிறேன். !” – அலமேலுவின் குரல் வெறுப்பு, சலிப் பாக வெளி வந்தது. .

“என்ன குறை..?”

“எல்லாம் குறைதான். !” வெடுக்கென்று சொன்னாள்

“விபரமா சொல்லு..?”

“காலையில் நான் எழுந்து பல் துலக்கியதும் காபி கொண்டு வந்து வைத்தாள் உன் அண்ணி. என் மாட்டுப்பெண். கூடவே அதை ஆத்திக் குடிக்க ஒரு தம்ளரையும் கொண்டு வந்து வைக்கனும்.. அதுதானே முறை..? வைக்கலை.!!

‘ அதை அப்படியே சூடா கொட்டிக்கோ..! ‘ சொல்ற மாதிரி வேண்டா வெறுப்பா வைச்சு திரும்பிப் பார்க்காமல் போனால் மனுசிக்குக் கோபம் வருமா வராதா..?

“இப்படி வச்சா எப்படிக் குடிக்க…?” ன்னு கொஞ்சம் காட்டமாய்க் கேட்டேன். இது கேட்டது குத்தமா..? மாமியார் கோபப்படுறது தவறா..?

“தம்பளர் வேணும்ன்னு கேட்க வேண்டியதுதானே… ? ! அதுக்கு ஏன் கோபப்படுறது..? மனுசின்னா தப்பு தவறு செய்யிறது சகஜம். அதுக்காக அடிமையா நினைச்சி அதட்டல் .போடுறதா..? புகுந்த வீட்டுக்கு வந்தா பொண்ணு பெட்டிப் பாம்பா அடங்கனுமா..?” அப்படின்னு பிலுபிலுன்னு பிடிச்சிகிட்டாள். சண்டை. !” சொல்லி நிறுத்தினாள்.

அடுப்படியில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சுகாசினி…வேலையை விட்டு வேகமாய் வந்தாள்.

“கவுரி ! எனக்கு வீட்ல வேலைகள் இல்லையா..? உன் அண்ணன் அலுவலகத்துக்குப் போகனும். அதுக்கு நேராநேரத்தோடு சமைக்கனும். அடுத்து புள்ளைங்க ரெண்டையும் கிளப்பி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும். இப்படி தலைக்கு மேல வேலை. இந்த நேரத்துல ஒரு உதவி ஒத்தாசை இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் அதிகாரம் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது..?” என்று தன் பக்க நியாயத்தைக் காட்டமாகச் சொன்னாள்.

“பாத்தியா..? நான் உட்கார்ந்து இருக்கிறது இவளுக்குப் பிடிக்கலே. பார மனுசி… என்னால குனிஞ்சி, நிமிர்ந்து வேலை செய்ய முடியல. முட்டிக்கால் வலி. கை கால் குடைச்சல். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதின்னு எனக்குள் ஏகப்பட்ட நோய் நொடி. தொந்தரவு. எப்படி வேலை செய்ய முடியும்..? நான் சிவனேன்னு ஆக்கிப் போடுறதைத் தின்னுக்கிட்டு பொழுது போக.. தொலைக்காட்சிப் பெட்டியில இந்த கண்ராவி தொடர்களைப் பார்த்துத் தொலைக்கிறேன். அது பொறுக்காமல் இவளுக்கு. என்னை விரட்டறா..”

என்றாள்.

“நான் ஒன்னும் விரட்டலை. நீங்கதான் என்னை அடிமையாய் நினைச்சி விரட்டுறீங்க..?”

“நான் உன்னை ஒன்னும் அடிமையாய் நினைக்கலை. நீதான் என்னை மட்டமாய் நினைச்சி துரத்துறே..?”

வார்த்தைக்கு வார்த்தை சண்டை….! மறுபடியும் தொடர…

பிறந்த வீட்டிற்கு வந்த கவுரி எந்தப் பக்கம் பேசுவது என்று புரியாமல் தவித்தாள்.

இப்படி அதட்டினால் தாய்.! அந்தப் பக்கம் அண்ணி !! – விழி பிதுங்கினாள்.

“இப்படி சண்டை போட்டு என்னை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு இங்கே இவள் கேட்பார்,மேய்ப்பார் இல்லாமல் தனிக்காட்டு மனுசியாய் குடும்பம் நடத்த ஆசை. அதான் இப்படி ஆடறாள் !”

“எனக்கொன்னும் அப்படி ஆசை இல்லே. நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு என் மேல பழி போட்டு உங்க மகனிடம் திட்டு வாங்க வைக்காதீங்க..”

“அவன் எங்கே என் சொல் கேட்கிறான்.? தாலி கட்டினதும்தான் மாறிடுறானுங்களே..? மயக்கி மாத்திடுறீங்களே..?”

” மயக்க நான் ஒன்னும் சூனியக்காரி இல்லே.”

“நானும் மகனிடம் வத்தி வைக்கிற மகராசி இல்லே…”

வார்த்தைக்கு வார்த்தை பேச்சு ! சத்தம் அதிகமாக… இதற்கு மேல்… கவுரிக்குப் பொறுக்க முடியவில்லை.

“அம்மா நிறுத்து. அண்ணி நிறுத்துங்க..”உரக்கக் கத்தினாள்.

வாய் மூடினார்கள்.

“எல்லாம் என் தலையெழுத்து.. ! ‘’ அலமேலு மூக்கை உறிஞ்சி புடவையால் துடைத்தாள்.

சுகாசினி..ஒரு வினாடி திகைப்பாய் நின்று அறைக்குள் நுழைந்தாள்.

சில நிமிடத்தில் மனம் சாந்தி ஆன அலமேலு…

“உன் புகுந்த வீட்ல எல்லாரும் நலமா இருக்காங்களா..?” வந்தவளை விசாரித்தாள்.

“இருக்காங்க…”

“என்ன சலிப்பா சொல்றே..?”

”……………………….”

” சொல்லாம கொள்ளாம ஏன் இப்படி கட்டின புடவையோடு புள்ளையைத் தூக்கிகிட்டு திடீர் பிரவேசம்..?”

“அங்கேயும் இதே கூத்து. அநியாயம்தான் !”

“புரியும்படி சொல்லு..?”

“எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை..!”

“உன் அண்ணி போல மாமியாரை எதிர்க்க, தாக்க உனக்குத் துப்பில்லே….”

“என்னம்மா சொல்றே..?” கவுரி தாயைத் துணுக்குற்றுப் பார்த்தாள்.

“ஆமாம்டி. அந்தத் திராணி இல்லாமத்தான் அங்கெ முணுக்குன்னா இங்கே புசுக்குன்னு ஓடி வர்றே. ! எதுக்கும் மனசுல தைரியம், துணிச்சல் வேணும். அந்த விசயத்துல என் மருமகள் கில்லாடி.! அவளைப் போல் ஆகாது. எதுவாய் இருந்தாலும் நேருக்கு நேர் தாக்குவாள். வீட்டை விட்டு ஒரு அடி வெளியே எடுத்து வைக்கமாட்டாள். !”

“அம்மா ! நிறுத்து நிறுத்து. ! நீ அண்ணியைக் குறை சொல்றீயா…? நிறை சொல்றீயா..?” கவுரி அவசர அவசரமாகக் கேட்டாள்.

“சத்தியமா நிறைதான் சொல்றேன். இது என் குடும்பம், என் வீடு, ஒரு அடி அந்தண்டை போகமாட்டேன். எதுவா இருந்தாலும் இங்கேயே சமாளித்துக் குடும்பம் நடத்துவேன் ! ன்னு சொல்றாப்போல நடக்குறா. நானும் அவளுக்கு ‘ குறையை ‘ ச் சொல்லி, சுட்டிக் காட்டி வாழ்க்கையைப் பழக்குறேன். அவளும் பழகுறாள். எல்லா பெண்களுக்கும் இந்தப் பலம், மனசு வேணும். வீட்டுக்கு வீடு வாசல்படி. நீயும் அப்படிப் பழகு. சரியாய் நடந்துக்கோ..”சொன்னாள்.

அலமேலு சொன்னதெல்லாம் கவுரி மனதில் சரியாக ஏற… குறை குடமான அவளுக்கு முகம் மலர்ந்தது.

அதே நேரம் அறைக்குள் இருந்து கேட்ட சுகாசினி மனதில் அலமேலு மாமியாராக இல்லாமல் தாயாக மாறி உயர்ந்தாள்.!

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *