கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 15,941 
 
 

புலர்ந்தும் புலராத வைகறைப்பொழுதில் குறைந்த இனிப்பில் அம்மா தரும் காப்பியின் நறுமணம் இன்னும் என் நாசிகளில் பரவிக்கிடக்கிறது. அம்மா இறந்துபோய் இன்றோடு மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன.

அதிகாலைப் பொழுதில் நானும் அம்மாவின் காப்பி போட முயற்சித்துத் தோற்றுப்போன நாட்கள்தான் அதிகம். அதோடு பிள்ளைகளும் குறைந்த சர்க்கரையில் காப்பி குடிப்பதை விரும்புவதில்லை. எனக்கு மட்டும் அம்மாவின் சுவையில் காப்பி கலந்து பருகுவேன். ஆயினும் அம்மா போடும் நரசுஸ் காப்பி தண்ணியைக் கொதிக்க வைத்து, வடிகட்டிப் பால்காய்ச்சி, காப்பி கலக்கும் பொறுமை என்னிடம் இருப்பதில்லை. பாலில் காப்பி பொடி போட்டுச் சுலபமாகச் செய்வதில் சுவையும் சத்தும் கம்மி.

கிடைக்கும் நேரங்களில் எல்லாம் வீட்டிலேயே அம்மா தயாரிக்கும் முறுக்கு, பலகாரங்கள் எல்லாம் எங்களுக்கெல்லாம் தினம் தினம் தீபாவளிதான். இன்று எல்லாமே உடனுக்குடன் கிடைக்கின்றன. ஆனால் அம்மாவின் கைருசி கிடைப்பதில்லை.

அம்மா, அப்பாவின் இறப்பிற்குப் பின்பு உடைந்து போனாள். சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் இவர்களுக்குள் இவ்வளவு பாசமா? வியந்து போனேன். ஏனெனில் அப்பாவின் இறப்பு அம்மாவை அவ்வளவு பாதித்திருந்தது. தலைமுடி நரைத்து, சரியாக உண்ணமுடியாமல், அதிகமாக நோய்வாய்ப்பட்டாள். அப்பாவின் இறப்பு தந்த வலியிலிருந்து மீள்வதற்குள் அண்ணனின் இறப்பு அவளை ஒண்ணுமில்லாமல் ஆக்கியது. எல்லா சோகத்திலும் மிகுந்த சோகம் ~புத்திர சோகம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

அம்மா அதிகமாகப் படிக்காதவள்தான். ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் டக்கென்று பற்றிக்கொள்வாள். கற்பூர புத்தி என்று சொல்வார்களே அதைப்போல. கோலம், சமையல், பூக்கட்டுதல், கூடை பின்னுதல் அனைத்தும் அத்துப்படி. அம்மா படித்திருந்தாள் பெரிய வேலையில் அமர்ந்திருப்பாள். அப்பாவின் பொருளாதாரச் சிக்கலுக்கு உதவியிருப்பாள் என்று நான் பலமுறை எண்ணியிருக்கிறேன். ஏனெனில் என் அம்மா அளவுக்கு என்னால்கூட வேலை பார்க்கமுடியாது.

கோலம் போடுவதில் அம்மாவின் நேர்த்தி தனி. அப்பாவும் அம்மாவின் சமையலுக்கும் கோலத்துக்கும் அடிமை.

“எங்க வீட்ல பழையகுழம்பு கூடத் தனி மணமாயிருக்கும்”

வந்துபோகும் விருந்தினர்களிடம் எல்லாம் அப்பா தம்பட்டம் அடிப்பார். ஆனால் நேரடியாக அம்மாவைப் பாராட்டியது கிடையாது. மறவ வீட்டு ஆம்பளைங்க மாதிரி அப்பா வைத்துக்கொள்ளும் பெரிய மீசை எங்களுக்குப் பிடிக்கும். அப்பா அவ்வளவு மனதிடமானவர். ஆனால் அவரையும் தூக்கிச் சாப்பிடும் மனோதிடம் அம்மாவுக்கு இருக்கும் என எண்ணினேன். மகனின் இறப்பு தந்த வலி அவளை வீழ்த்தியது.

கடினமான வேலையைக்கூட எளிதாகச் செய்து விடுவாள். இன்று இரண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் சமையலே கடினமாய் இருக்கிறது. அம்மா நாலு பிள்ளைகளைப் பெற்று, சமையல் செய்து, பாத்திரம் கழுவி, துணி துவைத்து அப்பாவிடமும் நற்பெயர் வாங்க நேரத்திற்கு அவர் குணமறிந்து செய்யவேண்டும். பேரன், பேத்திகளுக்குப் பிடித்ததைச் செய்யவும் மெனக்கெடுவாள். எந்த வேலையிலும் அவள் காட்டும் நேர்த்தி இன்றும் நினைக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

பேரன் பேத்திகளிடம் அம்மாவின் நகைச்சுவை அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

“இது என்ன டிரெஸ்? அங்கங்கே கிழிஞ்சு தொங்குது. நல்லா நரிக்குறவங்க போடுற மாதிரி”

மற்ற எல்லாப் பொடிசுகளும் விழுந்து விழுந்து சிரிக்கும். டிரெஸ் போட்டவள் மட்டும் விழிக்க, என் தங்கை கோபமாக,

“அம்மா இதை வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு கடைகடையாய்த் தேடி வாங்கியிருக்கேன். நீங்க ஒரே நிமிஷத்துல டேமேஜ் பண்ணிட்டிங்க” என்பாள் செல்லக்கோபத்தோடு.

அம்மா கட்டும் சேலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவளைப் போலவே பாந்தமாய் உடலோடு பொருந்தி மிருதுவாய் இருக்கும். அம்மாவின் சேலையை அவ்வப்போது மோந்து பார்ப்பேன். அம்மா செய்யும் இடியாப்பமும் புதினாத்துவையலும் நாக்கில் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும். அம்மாவோடு சேர்ந்து தூங்குவதற்கு யார் பக்கத்தில் படுப்பது என, சிறுவயதில் எனக்கும் தங்கைகளுக்கும் அடிபுடி சண்டையே நடக்கும்.

அம்மா ஊருக்குச் சென்றாள் என்றால் இருளடைந்து போகும் எங்கள் வீடும் மனமும். எப்பொழுது அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வருவார்கள் என நானும் தங்கைகளும் காத்திருப்போம். வந்தவுடன் புகார்ப்பட்டியல் நீளும்.

அப்பா பக்கவாதத்தில் படுத்தபோது அவரது நிமிடங்கள் கடைசியாய் எண்ணப்படுகையில் அம்மா சொன்ன சொல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.

“அப்பா இருக்கும்போதே என்னைப் பொட்டுவைத்து, பூவைத்து ஒரு போட்டோ எடு” அம்மாவின் கண்களில் தெரிந்த சோகம் என்னை நிலைகுலையச் செய்தது.

அப்பாவின் நிலை எங்களுக்குத் தெரிந்திருந்தும் இதை அம்மா வாயால் கேட்பதில் எங்களின் சோகம் மிகுதியானது. அம்மாவை அப்படி போட்டோ எடுத்தால் அப்பா சீக்கிரம் செத்துப்போவாரோ என்ற பயம் அதைச் செய்ய விடாமல் தடுத்தது. யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள எங்கள் மனம் மறுத்தது. விளைவு அப்பா இறந்து போனார். அம்மாவின் ஆசையும் நிராசையானது. அம்மா இறந்து ஆண்டுகள் பலவானாலும் அவளின் நிறைவேறாத ஆசை இன்னும் என் தூக்கத்தைக் கலைக்கிறது.

– காற்றுவெளி(இலண்டன்), ஐப்பசி 2022

Print Friendly, PDF & Email

1 thought on “நிறைவேறாத ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *