தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 19,506 
 
 

அம்மாவை எனக்கு ரொம்பப்பிடிக்கும். கடவுளுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அம்மா மூலமாக கடவுளுக்கு விண்ணப்பம் செய்தேன். “எப்படியாவது எனக்குப் பிடித்த கோர்ஸில் எனக்கு ஒரு சீட் கிடைத்துவிட வேண்டும்’.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு பொறியியல் கல்லூரியில் சேர ஆசைப்படும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவனாக இருந்த சமயம் அது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடல்துறைப் பொறியியலாகிய மரைன் இன்ஜினியரிங்கில் சேரத்துடித்த சில நூறு மாணவர்களில் ஒருவனாக நான் இருந்தேன்.

சில நாட்கள் கடந்தபோதுதான் ஒரு புதிய தகவல் எனக்குக் கிடைத்தது. நான் வேண்டும் பொறியியல் படிப்பில் எனக்கு சீட் கிடைக்க வேண்டுமென்றால் நிறக்குருடு இருக்கக்கூடாதாம். திடீரென்று ஒரு சின்னக்குழப்பம். அதற்கு முந்தைய வாரம் இரவு நேரத்தில் நானும் நண்பர்களுமாக கடைக்குச் சென்றிருந்தபோது ஒரு சட்டையின் வண்ணத்தை மற்றவர்கள் பச்சை என்று கூற, நான் மஞ்சள் என்று சாதிக்க, கருத்து வேறுபாடு வந்தது நினைவுக்கு வந்தது.
ஒரு வேளை எனக்கு நிறக்குருடோ? வலைத்தளங்களை மேய்ந்தபோது “கலர் ப்ளைன்ட்னஸ்’ எனப்படும் நிறக்குருடு பாதிப்பு உள்ளவர்களுக்கு எந்த வண்ணமுமே புலப்படாது என்பதில்லை. சில வண்ணங்களில் முக்கியமாக பச்சை, பழுப்பு, சிவப்பு போன்றவற்றில் குழப்பம் உண்டாகும்’ என்பது போல் தகவல்கள் கிடைத்தன. அச்சம் அதிகமானது. ஆண்டாண்டுகளாக உலகம் முழுதும் கப்பலில் பவனி வரும் பணி குறித்து கனவு கண்டேனே, வீணாகி விடுமோ?’
வேறு யார் எனக்கு? அம்மாவிடம்தான் அழுதேன். அம்மா சமாதானம் சொன்னாள். போதவில்லை.

“”அம்மா, நாளைக்கே கண் டாக்டரிடம் போகலாம். என் கண்ணிலே எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாதுன்னு சாமியிடம் வேண்டிக்குங்க. அடுத்த வாரம் நம் குலதெய்வத்தை தரிசிக்கலாம். மரைன் இன்ஜினியரிங் சீட் கிடைத்தால், அபிஷேகம் செய்யலாம்’’ என்றேன். அம்மா ஆறுதலாக முதுகைத் தடவிக்கொடுத்தாள்.

நிறக்குருடு இல்லையென்று ஆனது. நினைத்த படிப்பில் சீட் கிடைத்தது. நான்கு வருடப் படிப்பில், முதல்மூன்று வருடங்கள் முடிந்தவுடன் அம்மாவுக்கு இதயநோய் ஏற்பட்டதும் கவலை உண்டானது. கப்பலில் இன்ஜினியராகச் சேர்ந்தால் வருடத்தில் ஓரிண்டு மாதங்கள் தவிர வெளிநாடுகளில்தான் கப்பல் பயணம். அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள்?

கவலைக்கு நடுவே படிப்பை முடித்தேன். வேலை கிடைத்த கையோடு ரம்யாவைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினாள் அம்மா. நாங்கள் வசித்த பகுதியிலேயே இருந்த ரம்யா அழகாக இருந்ததும் ஒரு காரணம்தான். என்றாலும் “நான் வெளிநாடு செல்லும்போது அம்மாவை கவனித்துக்கொள்ள குடும்பத்தில் ஒருவர் தேவை அல்லவா?’ என்பதையும் உண்மையாகத்தான் நினைத்தேன்.
ஆனால் என் அவசரத் திருமணத்தின் நோக்கம், திருமணமான ஒரே வருடத்தில் கரைந்துபோனது. அம்மா இறந்துவிட்டாள்.

அடுத்த மாதமே கப்பல் பயண வாய்ப்பு. திரும்பிவர ஆறு மாதங்கள் ஆகும். ரம்யாவை அழைத்துச் செல்ல முடியாது.

“பரவாயில்லை. தெரிந்ததுதானே. என் அம்மா வீடும் ரெண்டு தெரு தள்ளித்தானே. கவலைப்படாமல் போய்ட்டுவாங்க’’ என்றாள் ரம்யா புன்னகையுடன்.

ஆறு மாதங்கள் கடந்தன. முன் அறிவிப்பின்றி வீட்டிற்கு வந்து சேர்ந்ததில் ரம்யா பரவசம் அடைந்தாள். ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். என் இறுக்கத்தை உணர்ந்து “பார்த்து, மெதுவா’ என்றாள் புன்னகையுடன்.

என் வாரிசு அவளுக்குள். தெரிவிக்கப்பட்ட விஷயம்தான். என்றாலும் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.

“மாசக் கணக்கா கப்பலிலேயே வாசம் செய்திருப்பீங்களே. எங்கே பார்த்தாலும் கடலா இருக்குமில்ல! எனக்க நினைக்கவே பிரமிப்பா இருக்கு’ என்றாள்.

என் கண்முன் கரப்பான் பூச்சிகள் வரிசைகட்டி நின்றன.
“”கடலிலே காத்து சுகமா இருக்குமில்ல?’

கடற்கரைக் காற்றை நினைத்துக்கொண்டு பேசுகிறாள். கப்பலில் ஜெனரேட்டர் எக்கச்சக்கமான சத்தத்தை தொடர்ந்து எழுப்ப, அந்தப் பகுதியில்தான் நாளின் பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டிய கட்டாயம்.

“என்ன பதிலே சொல்லமாட்டேங்கறீங்க? பல நாட்டுத் துறைமுகங்களில் கப்பல் நிக்குமே. அந்த நாடுகளிலே அழகான பொம்பளங்க எல்லாம் இருப்பாங்க இல்ல?’

எந்த அர்த்தத்தில் கேட்கிறாள்? கூடப் பணியாற்றிய அன்பரசனும், இக்பாலும் ஒருமுறை நேரடியாகவே கேட்டுவிட்டனர். “”அத்தனை வாய்ப்பையும் மிஸ் பண்றயே. நீ ஆம்பிளைதானே?’’

சலனப்பட்டதில்லை என்பதில்லை. ஆனால் பாடுபட்டு மனதையும், உடலையும் அடக்கிக் கொள்ள முடிந்தது.

துறைமுகங்களில் சில நாட்கள்தான். ஆனால் கப்பலுக்குள் மாதக்கணக்கில்! வேலையும் அதிகமாகவே இருந்தது. கப்பலில் நான் தங்கிய பகுதியில் குளிர்சாதனப் பெட்டி ரிப்பேர் ஆகிவிட, 46 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அதைவிட அதிக வெப்பத்தை அடிக்கடி அளித்தது ராபர்ட்டின் செய்கை.

உயர் பதவி. எனவே மனைவியை உடன் அழைத்துவர அவனுக்கு அனுமதி உண்டு. ஆனால் அந்தச் சலுகையை என்னை எரிச்சல்பட வைக்கவே, அவன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். காரணம் புரியவில்லை.

“”உங்களை மாதிரி மாநிறத்துக்கும், நல்ல சிவப்புக்கும், நடுத்தரமாய் இருக்கிற கலரிலே இருக்கிறவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்று அவன் மனைவி என்னிடம் ஒருமுறை கூறியதற்கு நான் என்ன செய்ய முடியும்? சொல்லப்போனால் அதற்குப் பிறகு அவளிடம் பேசுவதை வெகுவாகத் தவிர்த்தேன்.

நான் எதிர்ப்படும்போதெல்லாம் ராபர்ட் அவளை அணைத்ததும், முத்தமிட்டதும் தாம்பத் உரிமை என்பதைவிட என்னைத் தூண்டிவிடும் முயற்சிகளாகவே இருந்தன. ரம்யாவின் தொலைதூரத்தை அடிக்கடி நினைவுபடுத்தினான். ஒருமுறை அவன் அறையைத் தாண்டி போது ஜன்னல் திறந்திருந்தது. உள்ளே கட்டிலில் கணவனும், மனைவியுமாக இரு மிருகங்கள்.

அதற்கடுத்த இரண்டு நாட்களுக்கு என்னால் தூங்க முடியவில்லை.

“”என்னய்யா, ஜன்னல் காட்சி எப்படி இருந்தது?’’ என்று அவன் கேட்டபோது முகம் சிவக்க மௌனமாகத்தான் இருக்க முடிந்தது. பதவிப்படி அவன் பல படிகள் மேலே. மாதக்கணக்கில் இவனோடுதான் பயணம் செய்ய வேண்டும்.

“”என்னங்க, உங்களுக்குப் பிடிச்ச சேமியா பாயசம், ஆமவடையும் செய்யட்டுமா?’’ என்று கேட்ட ரம்யாவை அழைத்துச்சென்று கட்டிலில் அமர்த்தி அவள் தோளில் சாய்ந்துகொண்டேன். புடவை ஈரமானதை சற்று நேரம் பொறுத்துதான் உணர்ந்துகொண்டாள் அவள்.

“”என்ன ஆச்சு? எதுக்கு அழறீங்க? இப்பதான் வந்துட்டீங்க இல்ல? ஒரு மாசம் கழிச்சுதானே கிளம்பணும்? இருக்கிற நாட்களை சந்தோஷமாக கழிப்போம். இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு என்ன வருத்தம்? இதுதானே வேணாம்கிறது?’’

வேண்டாம்தான்.

அந்த ராபர்ட் என்னுடைய கப்பலில் வந்திருக்க வேண்டாம். என் தனிமையைத் தொடர்ந்து உசுப்பிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கியமாக கப்பல் சென்னையை அடைய, சில மணி நேரங்களே இருக்கும்போது “”“டுத்த தடவை உனக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கித்தரேன். நீயும் உன் மனைவியை அழைச்சிட்டு வா. என் மனைவி க்ளாராவுக்கும் உன் மேலே ஒரு கிரஷ் இருக்கு. உன் மனைவியும் புகைப்படத்திலே பார்க்கவே அசத்தலா அழகா இருக்கா. அடுத்த டிரிப்பிலே நாம மாத்திக்குவோம்’ என்று சொல்லி இருக்க வேண்டாம். துறைமுகத்தைக் கப்பல் அடைய ராபர்ட்டைக் காணாது அத்தனை பேரும் பதறும் அளவுக்கு நிலை உண்டாக நான் காரணமாக இருந்திருக்க வேண்டாம்.

பூட்ஸ் அணிந்த கால்கள் கதவைத் தட்டின. ஒரு நிமிடம் விலங்காக மாறியதன் பலனாக விலங்குகளை ஏற்கத் தயாரானேன். கதவைத் திறந்தேன்.

வேண்டாம் பட்டியலில் இன்னும் ஒன்றே ஒன்று நினைவுக்கு வந்தது.

“”அம்மா, எனக்கு மரைன் இன்ஜினியரிங் சீட் கிடைக்கவேண்டுமென்று நீ கடவுளிடம் விண்ணப்பித்திருக்க வேண்டாம்’.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *