நிராகரித்தலின் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 19, 2024
பார்வையிட்டோர்: 3,045 
 

சுற்றித் தூங்கிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கும் பொழுது சற்றுப் பொறாமையாக இருந்தது. இரவு நேரப் பேருந்து பயணம்.தூக்கத்தைக் கூட வற்புறுத்தி வரவழைக்க வேண்டிய வாழ்க்கையை நினைத்துக் கொஞ்சம் சலிப்பு தட்டியது.நரகம் என்று வேறொன்றும் இல்லை. தூக்கம் வராத இரவுகள் தான் அவை.தூக்கமற்ற இரவுகளாலே நிறைந்திருக்கிறது என் வாழ்க்கை.

இரவு நேரத்துக் குளிர் காற்றை அனுபவித்தபடி தூங்கிக்கொண்டே பயணிக்க வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசை. சிரிப்பு வருகிறதா? வராதா பின்னே? எல்லாருக்கும் வீடு, கார் எனக் கனவுகள் துரத்தும் போது நானோ நல்ல தூக்கம் வேண்டி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

தூக்கம் வராதது கூட தற்போது பிரச்சனையாயில்லை. நேர் எதிர் சீட்டில் நடக்கும் லீலைகள்… அவளின் பிளந்த மார்பகங்களுக்குள் பாம்பு போல் மெல்ல நுழையும் அவன் கைகளை இருட்டிலும் பளபளக்கும் வாட்சின் மூலம் அறிய முடிந்தது. நெருங்கும் அவர்களின் இதழ்களை மெல்லிய இருளிலும் காண முடிந்தது. நெடுநேரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது கண்மணியை உறுத்தும் இந்த காட்சிகள். ச்சே என்ன ரோதனை இது…?

ஆனால் அவர்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. உடல் எனும் மாயை படுத்தும் பாடு, ஒருவரையும் விட்டு வைப்பதில்லையே. காதலிக்கும் தருணத்தில் ஆட்டோவில் வைத்து ராகவ் முத்தமிட முயன்றது ஞாபகத்திற்கு வந்தது. அவன் நெருக்கம் பிடித்திருந்தாலும் அது பொது இடம் என்பதால் அவனை இருத்துவதற்குள் போதும் போதும் என்றிருந்தது. அவனுக்கென்ன அவன் பாட்டுக்கு பாதியில் இறங்கி போய்விட்டான். இறங்கும் நேரத்தில் கடும் முறைப்போடு கூடுதல் கட்டணம் கேட்ட ஆட்டோ டிரைவரின் முகம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அவன் எந்த விதத்தில் கடுப்பாகி இருந்தான் என இப்போது புரிகிறது. அவன் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்த போது பெரும் படபடப்பு உடலில் தொற்றிக்கொண்டதை இன்னும் மறக்க முடியவில்லை. ஏதேதோ ஞாபகங்கள் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தன. ஏனோ ஞாபகம், ஞாபகம் என இன்னும் இன்னும் யோசனைகள் முன்னேறுவதைத் தவிர்க்க முடியவில்லை. தூக்கம் வராத இரவுகள் பின்னும் நினைவின் இழைகள் சிந்தனை வலையாகிறது. அந்த வலைக்குள் சிக்கிக்கொண்டு தூக்கத்தை இழப்பதும் வாடிக்கையாகிறது.

இனி அந்த பக்கம் பார்க்கக்கூடாது என்று தலையை கவிழ்த்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து, மடியில் இருந்து சரிந்து விழும் ஹேண்ட் பேக்கை பிடிக்க குனிந்த போது, மினுங்கும் அவளின் வெள்ளை நிற கால்கள் கண்ணில் உறுத்தியது. அவள் சேலை மெல்ல மேலேறுவதை உணர முடிந்தது. இதுவும் அவன் லீலைகளில் ஒன்றாகத் தான் இருக்கும்.

ம்ஹும்… இது சரிப்பட்டு வராது. கண்களை இறுக்க மூடிக்கொண்டேன்.

இரண்டு சீட்டுக்கு முன்னால் இருந்து சிகரெட் வாடை வந்த படி இருந்தது. புகையோடு பஸ்ஸில் சிகரெட் பிடிக்கக்கூடாது என்ற சட்டமும் காற்றில் புகைந்துக் கொண்டிருந்தது.

மூக்கை முந்தானையால் சுற்றிக் கட்டிய படி கண்களை மேலும் இறுக்கமாகக் மூடிக்கொண்டேன். ஏதேதோ நினைவுகள் சுற்றியபடி இருந்தது. அடிக்கடி எழுந்து நேரத்தை இருட்டில் உத்துப் பார்த்தேன். நேரம் நகர்வதாக தெரியவில்லை. சின்னஞ்சிறு வெளிச்சத்துகள்கள் ஊடே நகரும் நகரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. கூடவே சாரலும். ஆஹா தூக்கம் வராவிட்டால் என்ன? இதோ என் செல்ல மழை. மெல்லிய சத்தமும் நீர் துளிகளுமே மழை என்று சொல்லிற்று. எப்போதாவது பக்கத்தில் நகரும் வாகன வெளிச்சம் அது மழை தான் என்பதை உறுதி செய்தது. இடது கை பக்கத்துக்கு ஜாக்கெட் ஈரமாகி கொண்டிருந்தது. ‘சட்’‘சட்’ என ஜன்னல்கள் மூடும் சத்தம். ஏனோ ஜன்னலைச் சாத்த மனம் வரவில்லை. ‘’ஏங்க ஜன்னல மூடுங்க, சாரல் அடிக்குது” முன் சீட்டில் இருந்து ஒரு குரல் எரிந்து விழுந்தது. ஏன் சாரல் அடிச்சால் என்ன? என்று கேட்க நினைத்ததை முழுங்கி சாத்த மனமில்லாமல் ஜன்னலை சாத்தினேன்.

ஜாக்கெட்டின் ஈரம் குளிர்ந்து போய் இருந்த உடலுக்கு மேலும் குளிரூட்டியது. முந்தானையை இழுத்து மூடுகையில் எதேச்சையா கண்கள் அந்த பக்கம் திரும்ப, கொஞ்ச நேரத்திற்கு முன் கொஞ்சிக் கொண்டிருந்த இருவரும் ஒருவர் ஒருவர் மேல் வாய்பிளந்த படி உறங்கி கொண்டிருந்த காட்சி சிரிப்பேற்படுத்தியது. இந்த காட்சியைப் போட்டோ எடுத்துப் பார்த்தால் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு கட்டாயம் குறைந்து போகும் என்று தோன்றிற்று. ‘சே என்ன யோசனை இது? அவர்களுக்குள் இருக்கும் மோகம் உனக்கேன் கோபத்தை ஏற்படுத்துகிறது’ என்னை நானே கோபப்பட்டுக்கொண்டேன்.

பொறாமையோ… இருக்கலாம். ராகவ் சிரித்துப் பேசியே பல நாள் ஆயிற்று. குழந்தை இல்லை என்கிற வெறுமை, ஒருவர் மேல் ஒருவருக்கு கசப்பை அள்ளி வழங்கி கொண்டிருந்தது. காரணம் யார்? என்ற போட்டி ஒரு விலகலை ஏற்படுத்தி இருந்தது. ஒருவர் மேல் ஒருவருக்கிருந்த காதல், மழையில் கரையும் புற்று மண்ணாய் கரைந்து கொண்டிருந்தது. குழந்தை என்பது காதலின் அடையாளம் தானே. ஆனால் இங்கே அது சமூகத்திற்கு தன் ஆண்மையையோ, பெண்மையையோ உறுதி செய்வதற்கான அடையாளமாகி போனது தான் வேதனை.

கண்களில் தூக்கமின்மையின் எரிச்சல் ஆரம்பித்தது. இரவில் சமைப்பதற்கு முன்பே உறங்கிவிடும் என்னை தூக்கத்தில் எழுப்பி அம்மா தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு சாப்பாடு ஊட்டியது நினைவுகளில் நிழலாடியது. பாதி உணவிலே அம்மாவின் மேல் தூக்கத்தினால் சரிந்தது என மேலும் மெல்ல மெல்ல ஒரு சுழல் போல் நினைவுகள் உள்ளிழுத்துச் செல்ல மெல்ல கண்கள் அழுந்துவது போல் இருந்த வேளையில், இடுப்பில் ஏதோ பூச்சி ஊறுவது போல் இருக்க, கை வைத்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. மறுபடியும் அதே உணர்வு. இப்போது அறிவுக்கு புரிந்து போனது இது பூச்சியெல்லாம் இல்லை. இருட்டில் உற்றுப் பார்த்த போது சீட்டின் பக்கவாட்டில் இருந்து ஒரு கை நுழைவது தெரிந்தது. அந்த கைகளின் விரல்கள் என் இடுப்பை தேடுவதைப் பார்த்தவுடன் பதட்டத்தில் சட்டென முன்னாடி நகர்ந்து உட்கார்ந்தேன். நொடிகள் சுதாரித்த பின் எழுந்து பின்னே பார்த்தேன். பின்னால் இருந்தவன் உறங்குவது போல் நடித்துக்கொண்டிருந்தான். முன்னாடியே கால்களில் ஏதோ தட்டுப்பட்டது போன்ற உணர்வு தற்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘நாய்’ என்று மனதினுள் சத்தமாக திட்டிக்கொண்டேன். இருட்டு தான் எத்தனை விஷயங்களுக்கு சவுகரியமானதாக இருக்கிறது. திருட்டுத் தனங்களுக்கு உறுதுணையாக.

நல்ல வேளை பக்கத்து சீட்டு காலியாக இருந்தது. மாறி உட்கார்ந்தேன். கண்களை மூடுவதும் திறப்பதும் சே. என்ன பொழப்பு இது? உலகத்தில் யாருக்கு தான் பிரச்னை இல்லை. அதற்காக எல்லாரும் தூங்காமலா இருக்கிறார்கள்? இரவு நேரங்களானால் பிரச்னைகளைப் பற்றி யோசித்து யோசித்து இப்போது தூக்கமின்மை என்பதே பெரும் பிரச்னையாகிவிட்டது.

அது என்ன?… பூனையின் மினுங்கும் கண்களை போல பளபளக்கும் ஒரு ஜோடி கண்கள் எதிர்பக்கத்து முன்சீட்டில் இருந்து…

பகீரென்றது அந்த அற்ப பார்வை. தூக்கக்கலக்கத்தில் விலகி இருந்த மாராப்பைச் சரி செய்து கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அந்த கண்கள் மறைவதை உணர முடிந்தது.

பேருந்தின் வேகம் மெதுவாகக் குறைந்து வெளிச்சம் ஒளிர்ந்தது. “டீ சாப்பிடுறவங்க இறங்குங்க. 5 நிமிஷம் பஸ் நிக்கும்”. கரகரக்கும் குரலில் சொல்லிக்கொண்டிருந்தார் கண்டக்டர்.

“ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே வளருதே…” சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த டீக்கடை ஒன்றின் அருகில், பேருந்து ஓரம் கட்டப்பட்டது. பெரும்பாலான ஆண்களும், ஓரிரண்டு பெண்களும் இறங்கினர். சிலர் பேருந்து நின்றது கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர். அங்கே ஏற்கனவே இரண்டு பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. ‘’ஏ… இந்தாப்பா டீ சாப்பிடுறீயா?” யாரோ யாரையோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தில் அமர்ந்திருப்பது புழுக்கமாக இருந்தது. ஒரே இடத்தில் நீட்டிய படி இருந்ததில் கால்கள் மரத்துப் போய் இருந்தன. காலாற இறங்கி நடக்க வேண்டும் போல் இருந்தது. அப்படியே பாத்ரூம் பக்கம் போய் விட்டு வரவேண்டும். இல்லையேல் இனி பொழுது விடியும் வரை இப்படியே இருக்க வேண்டி வரும். அவசரமாக வந்தால், ஆண்கள் போல் வண்டியை நிறுத்தச் சொல்லி வழியில் எங்கும் போக முடியாது.

எல்லாரும் இறங்கிய பின் மெதுவாக இறங்கினேன். சுத்தி முத்தித் தேடியதில் எங்கும் கழிவறை இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. வாகன வெளிச்சம் ஒன்று நகர்ந்த போது நின்றிருந்த பேருந்தின் பின்னால் அமர்ந்திருந்த இரு பெண்களின் புட்டங்கள் அப்பட்டமாய் தெரிந்தன. பக்கென்று இருந்தது.

வந்த சிறுநீர் உள்ளிழுத்துக் கொண்டது போல் இருந்தது. திரும்பி நடந்தேன். ஒரு டீ குடித்தால் தேவலை என்றிருந்தது.

டீக்கடையைச் சுற்றி அங்கும் இங்கும்., சுற்றிலும் பெண்கள் இருக்கிறார்களா என்பதை பற்றியெல்லாம் கவலையற்று சில ஆண்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் அவர்களின் கூட வந்த ஆண்களுடன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அங்கே தொப்பையைச் சாய்த்துக்கொண்டு நின்றிருந்த ஆண்களும், குடித்து சிகப்பேறிப் போய் கிடந்த அவர்களின் கண்களும் வயிற்றில் புளியைக் கரைத்தன. டீக்கடை நோக்கி நகர்ந்த கால்களை, மொய்க்கும் சில கண்கள். டீ கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டுமா என்ன?

டீ குடிக்க மனமில்லாமல் இடத்தில் வந்து அமர்ந்தேன். பஸ் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. ‘’கண்ணே கலைமானே…” என ராஜா இப்போது தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். கண்டக்டர் விசில் சத்தம் கேட்டது.ஒவ்வொருவராக பேருந்தில் ஏறினர். தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஜோடி கண்களும் சில நொடிகள் என்னில் ஊன்றிச் சென்றது. வேண்டுமென்றே தொடையை உரசிச்செல்லும் சில கால்களை மிதிக்க வேண்டும் என்று தோன்றியது. லேசாக நகர்ந்து கொண்டேன். கடைசியாய் தாண்டிச் செல்பவனிடமிருந்து வந்த மதுவின் வாசனை மூக்கை நெருடியது. ஒரு நொடி வயிற்றைப் புரட்டியது.

மறுபடி பேருந்து ஊர ஆரம்பித்தது. சில்லென்ற காற்று. சற்று ஆசுவாசமாய் இருந்தது. கண்ணைமூடினால் உடலெங்கும் ஆணுறுப்புகளால் மோதுவது போல ஒரு கற்பனை தோன்றி உடல் சிலிர்த்தது. அருவெருப்புத் தன்மை கூடி உமட்டுவது போல இருந்தது.

கண்டக்டரும், டிரைவரும் ஏதோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். வெகு நேரம் அவர்கள் பேச்சு தொடர்ந்த படி இருந்தது. ஏதோ அவர்கள் வேலையிடத்து அரசியல் என்பது மட்டும் அரைகுறையாய் புரிந்தது. பேசிக்கொண்டிருந்த கண்டக்டர் என்னை திரும்பி பார்த்தார். ‘இன்னும் தூங்கவில்லையா? என்ற கேள்வி போல இதமான புன்னகை ஒன்றை பரிசளித்தார்.

ராகவ் ஞாபகம் வந்தது. அவனிடமும் இப்படித்தான் ஒரு இதமான புன்னகை எப்போதும் குடியிருக்கும். சமீபமாய் அந்த புன்னகை காணாமல் போய் இருந்தது. இந்நேரம் குடித்துவிட்டு வந்து வாயைப் பிளந்து தூங்கிக்கொண்டிருப்பான் என்ற நினைப்பு வருத்தமூட்டியது. குழந்தை என்ற ஆயுதம் கொண்டு தன் ஆண்மையை நிரூபிக்க முடியாமல் போன கோபத்தில் குடிக்க ஆரம்பித்தான். சோகம் வந்தால் குடி தான் தீர்வென்றால் 99 சதவிகிதம் பெண்கள் இந்நேரம் குடிமகள்களாகி இருக்க வேண்டும்.

நெருக்கமாக இருந்து நெடுநாளாகிவிட்டது. குடி அவனுக்கு வெகு நெருக்கமாகிவிட்டது. எல்லா வருத்தங்களையும் தாண்டி இப்போது அந்த எண்ணம் வந்து படுத்தியது. உடல் தான், உடல் தான் எல்லாம் என்று இந்த நொடி தோன்றியது.

அவன் வியர்வை வாசனை, மூக்கைத் துளைப்பது போல் இருந்தது. அப்படியொரு கிறக்கம் தரும் ஃபர்ப்யூம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றே தோன்றியது.

முரட்டுத்தனமான அந்த இறுக்கம், மிருதுவான அவனது தலைமுடி, அவன் மார்பில் படர்ந்திருக்கும் முடிகள், அவன் வயிற்றில் இருக்கும் அந்த தழும்பு, இருட்டிலும் சிரிக்கும் அந்த கண்கள், நெருக்கமான நேரத்து அவனது முகம் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. உச்சக்கட்டத்து அவனது முனகல் ஓசை காதுகளில் ரீங்கரித்தது. மெல்ல கைகள் மார்பகத்தை நோக்கி போவதை தடுக்க முடியவில்லை. மிருதுவான மார்பகங்களில் அந்த முரட்டு கைகள்…

மயிர்க்கால்கள் விரைத்துக்கொண்டு நின்றன. காமம் உடலெங்கும் நீராய் வழிந்தோடிக்கொண்டு இருந்தது. அடித்தொடையை இறுக்கிக்கொள்ள வேண்டி இருந்தது. உச்சத்துக்குப் பின்பான சில நொடிகளில் வியர்வையில் உதடுகள் படிய அவன் தரும் கழுத்து முத்தமும், முகத்தின் மேல் முகம் நொறுங்க தூங்கும் குழந்தை தூக்கமும் நினைவில் மோதியது. தொண்டை எச்சிலை முழுங்கிக்கொண்டேன். மறுபடி கழிவறைக்குப் போக வேண்டும் என்ற உந்துதலாய் இருந்தது.

எப்போதடா விடியும் என்றிருந்தது.கண்ணைமூடினால் எங்கிருந்தோ விசில் சத்தம் போல், வண்டி ஸ்டார்ட் செய்யும் சத்தம் போல், பூனையின் தாப நேரத்து முனகல் போல விதவிதமாய் குறட்டை சத்தம் கேட்கிறது. எவ்வளவு நேரம் இருட்டில் இப்படியே விழித்திருப்பது? வீடாக இருந்தாலும் ஜெயகாந்தனோ, தி.ஜாவோ துணையாகி இருப்பார்கள்.

கடந்து செல்லும் வாகனம் ஒன்றிலிருந்து “அன்னக்கிளி ஒன்னத் தேடுதே…” கேட்டது. தமிழகத்தில் இரவு நேரமானால் பேருந்தோ, டீக்கடையோ, மொட்டை மாடியோ எல்லாவற்றிலும் இளையராஜாவே நிறைந்து வழிகிறார்.

காதல், காமம், கோபம், மகிழ்ச்சி, சோகம் என அத்தனை நவரசங்களுக்கும் வடிகாலாய் இளையராஜா பாடல்கள் இருக்கின்றன என்பதை யாராலும் மறுத்துச் சொல்ல முடியாது என்பது தானே நிஜம். அதிலும் இரவு நேரங்களில் நம் மூளையிலும், இதயத்திலும், நரம்புகளிலும் ஊடுருவி அந்த இசை நம்மை படுத்தும் பாடு இருக்கிறதே. அப்பப்பா… இசையால் இவ்வளவு முடியுமா என்ன?

தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டி வருமோ என்ற நிர்பந்தம் அந்த சிந்தனையை மாற்றியது.ஆனாலும் தொண்டை வறல்வதை உணர முடிந்தது.

நேரம் பார்த்தேன். நாலாகி இருந்தது. கண்டக்டரும் இப்போது தூங்கிகொண்டிருந்தார். பேருந்தில் நானும் டிரைவரும் மட்டும் தான் விழித்திருந்தோம். மறுபடி மிக லேசான ஒரு தூரல். வைப்பர் ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டிருந்தது. எதிர் வரும் வாகனங்களுகேற்ப வளைந்து நெளிந்து கொண்டு உன்னிப்பாக ஓட்டிவரும் டிரைவர் மேல் ஒரு சில கணங்களுக்கு காதல் வந்து போனது. நீங்கள் நினைக்கும் காதல் அல்ல அது. வியப்பு. அதனால் ஏற்படும் சிறு மனக்கிலேசம் என்று கூட சொல்லலாம். இது தவறில்லையா? இது எப்படி தவறாகும். சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்கும் மனமுள்ளவர்களுக்கு இது தவறாக தெரியாது.

ஆச்சரியப்படும் வகையில் செயல்படுபவர்களை அணைத்துக்கொள்ள வேண்டும். துளியும் காமமற்ற அன்பு அது. கண்கள் மினுங்க கைகள் குலுக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு. உண்மையான ஆச்சரியத்தை, பாராட்டை அப்படித் தானே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான சமூகம் இதுவல்ல. இந்த சமூகம் இன்னும் பெண்ணுடலை தாண்டி வெளிவரவே இல்லை.

இரவு நேரத்தில் ஒரு பெண் தனியே நிற்க நேரிட்டால், பயணிக்க நேரிட்டால், ஹோட்டலில் அறை எடுக்க நேர்ந்தால் என ஒரு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறார்கள். அந்த பெண்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துவிடலாம் என்று எண்ணம்.

குடும்ப பெண்ணான உனக்கு இரவு நேரத்தில் பயணத்திற்கென்ன அவசியம் என்பதாய் இருக்கும் அவர்களின் பார்வைகள், ஊசியாய் குத்தும். பார்வை வழியாக, செய்கை வழியாக என பல வழிகளில் உடலுறவுக்கு அழைப்பு விடுக்கும். இதனை தாண்டி இரவுப்பயணம் மேற்கொள்ள நேரிட்டால் இழுத்து மூடிக்கொண்டு போர்வையின் உள்ளே இருப்பது ஆணா, பெண்ணா என்பது தெரியாமல் இருந்து விட வேண்டும். இல்லையென்றால் கைப்பிடித்து இழுக்காத குறை தான்.

தூங்காமல் யோசித்ததில் கண்களோடு சேர்ந்து தலையும் வலிப்பது போல் இருந்தது. நேரம் பார்த்தேன். மணி ஐந்தாகி இருந்தது.

மறுபடி ராகவ் ஞாபகம் வந்தது. ஏன் தன் மேல் இத்தனை கசப்பு, குழந்தையில்லாதது மட்டும் தான் காரணமா? இல்லை வேறு எதாவது காரணம் இருக்கக்கூடுமா? இந்நேரம் பழைய ராகவ்வாக இருந்திருந்தால் “எங்கே? எங்கே?” என போன் அடித்திருப்பான். குளித்து முடித்து நெற்றியில் பட்டையோடு பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருப்பான். இப்போது… என நினைத்த போது தொண்டை கசப்பு, நெஞ்சை நனைத்தது. கண்களை சுழற்ற ஆரம்பித்தது.

மேலே படர்ந்து கொண்டிருந்தான். நிர்வாணம் அங்கே ஆடை பூண்டிருந்தது. அவன் கைகள் தலை முடியை துழாவிக்கொண்டிருந்தன. கழுத்தில் வெளிப்படும் அவன் பெருமூச்சின் வெப்பம் காய்ந்த சுள்ளிகளில் பற்ற வைத்த நெருப்பாய் உடலெங்கும் தீயாய் காமம் பரவியது. காமத்தினாலா வியர்வையினாலா என்று தெரியாதபடி உடல்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. சாதிமல்லியின் வாசம் நெஞ்சை நிறைத்திருந்தது. ‘மோகமுள்’ படித்த காலத்தில் இருந்து சாதிமல்லி மீது தீராத ஒரு ஆவல் இருந்தது. உதடுகளை கவ்விக்கொண்டிருக்கும் பற்கள். வலி தாளாமல் அவனை தள்ள தள்ள அவன் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தான். இறுக்கம் இறுக்கம் மூச்சுவிட முடியாதபடி கடினமான ஒரு இறுக்கம். இறுக்கத்தைத் தளர்த்த மிருதுவான அவன் காதுகளின் நுனியைக் கடிக்க, காதில் அவன் மூச்சு பரவசமூட்டும் சிறு காற்றாய், மெல்ல மெல்ல பெரும் புயலாய் மாறி ஓலமிட்டது.

“ஐயோ! இது என்ன இப்படி ஒரு சத்தம்…?”

“ம்மா… எழுந்திரும்மா. மேடம்… மேடம்… ஸ்டாண்ட் வந்திடுச்சி எழுந்திருங்க”. எங்கோ துரத்தும் குரல். சட்டென நிர்வாணமாக யாரோ என்னைப் பார்த்துவிட்டது போல் உணர்ந்து உதறி எழுந்தேன்.

பொழுது விடிந்து சூரிய வெளிச்சம் முகத்தில் அறைந்தது. கண்விழித்த போது எதிரில் நின்றிருந்த கண்டக்டர் “நைட்டெல்லாம் முழிச்சிருந்துட்டு இப்ப தூங்கிறீங்களேம்மா” என்றார். நைட் பார்த்த அதே இதமான புன்னகையோடு. அவரது அந்த புன்னகையை ரசிக்கும் மனநிலை மாறி இருந்தது. அவனுக்காக ஏங்கி தவிக்கும் அவமானம் பிடுங்கித் தின்றது. பெருங்கூச்சமாக இருந்தது. கூச்சத்தில் சிதறிய கனவின் ஒரு துண்டை மிதித்தபடி படிகளில் இறங்கும் போது ஏன் விடிந்தது? என்றிருந்தது.

(இந்த சிறுகதை 2018 ம் ஆண்டு நடைபெற்ற க.சீ.சிவகுமார் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *