நியாயவிலைக்கடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,574 
 
 

நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான்.

“என்னப்பா அது ?” கேட்டேன்.

“கோதுமை சார்.”

“எங்கே வாங்கி வர்றே ?”

‘நியாயவிலைக் கடையில சார்.” சொல்லிச் சென்றான்.

அடுத்த விநாடி எனக்குள்ளும் வாங்க வேண்டுமென்கிற உந்துதல், கட்டாயம்.

‘ராத்திரி வேலையில யாரும் சோறு சாப்பிடுறதில்லே. கோதுமை ரேசன் கடையில இல்லேன்னா மளிகைக் கடையிலேயாவது வாங்கி வாங்க.’ — என் மனைவி பத்து நாட்களாக பாடம் படிக்கிறாள். அவளுக்குச் சர்க்கரை வியாதி. பையன்கள் சப்பாத்திப் பிரியர்கள். வெளிக்கடைகளில் விலை அதிகம். வாங்க மனமில்லை. நான் சாதாரண அரசு உத்தியோகக்காரன். குறை வருமானத்தில் குறைவில்லாமல் குடும்பம் குப்பைக் கொட்ட வேண்டிய கட்டாயக்காரன். நேற்று அலுவலகம் விட்டு வரும் வழியில் உள்ள நியாயவிலைக்கடையில் வழக்கம் போல ‘ இருக்கா ?’ கேட்டேன். ‘இல்லை.’சொன்னான். இன்று சனிக்கிழமை அலுவலகம் விடுப்பு. அந்தப் பக்கம் போகவில்லை. வந்து விட்டது போல.

“நானும் கோதுமை வாங்கனும்.” நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

வீட்டிற்குள் நுழைந்து அவசர அவசரமாக ரேசன் கார்டு, பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

“எங்கே போறீங்க ?” மனைவி.

“ரேசன் கடைக்கு கோதுமை வாங்க.”

“பத்துக்கிலோவா வாங்கி வாங்க. அடுத்து, இன்னைக்கு வெள்ளிக்கிழமை. சாமிக்கு ரெண்டு வாழைப்பழம், வெத்தலை. மறக்காமல் வாங்கி வாங்க.”

“சரி.| சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாய் மிதித்தேன்.

பதினைந்து நிமிட மிதிப் பயணம். ஒரே கட்டிடத்தில் அருகருகே இரு நியாயவிலைக் கடைகள். இரண்டுமே கொள்ளை கூட்டமாக இருந்தது. எல்லாரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள முகங்கள். சிகப்பு நிற அட்டையை வைத்துக்கொண்டு ஒரு வரிசை வம்மை, ஒழுங்கு இல்லாமல் நான் முந்தி நீ முந்தி என்று கடைகாரர்களிடம் கார்டுகளை நீட்டி மூட்டை மூட்டையாய் அரிசி வாங்கி செல்வதிலேயே குறியாய் இருந்தார்கள்.

“என்ன அரிசி ?” பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன்.

“இணாம். வெள்ள நிவாரணம் சார்.” சொன்னார்.

பத்து நாட்கள் மழை கொட்டியதின் பலன். சிகப்பு அட்டைக்காரர்களுக்கானச் சலுகை. இந்த கூட்டத்தோடு முட்டி மோதி கோதுமை பெறுவது என்பது கஷ்டம். மேலும் இவர்களோடு போட்டி போடுவதும் சரி இல்லை. எனக்குள் பட்டது.

வந்த காரியம் முடிக்காமல் போனால் நாளை இல்லாமல் போகலாம். நியாய விலைக் கடைகளிலெல்லாம் பொருட்களைக் கண்டவுடன் வாங்கி விட வேண்டும். விட்டால் காணாமல் போய் விடும். நின்று வாங்கி செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. கூட்டம் குறையட்டும்! ஒதுங்கினேன்.

அரை மணி நேர தள்ளு முள்ளுவிற்குப் பிறகு கூட்டம் ஒரளவு குறைந்தது. அடுத்து சிறிது நேரத்தில் சுத்தமாய்க் காணாமல் போனது.

நான் படி ஏறி கடையில் ‘கோதுமை| கேட்டு கார்டு நீட்டினேன்.

“இல்லே சார்.” அவன் குண்டைப் போட்டான்.

“இப்போதான் ஒரு பையன் வாங்கி வந்தான்.”

“சரக்கு கொஞ்சமாத்தான் வந்துது. உடனே சரியாய்ப் போயிடுச்சு சார்.”

கையைப் பிசைந்தேன்.

என் முகவாட்டத்தைப் பார்த்த அவன், “அடுத்த கடையில இருக்கா பாருங்க.” சொன்னான். வாங்கி கொடுப்பான் போல நம்பிக்கையில் எட்டிப் பார்த்தேன். அரிசி மூட்டைகளுக்குக் கீழே பாதி மூட்டை கோதுமை கண்ணில் பட்டது.

“இருக்கு.”

“வாங்கிப் போங்க சார்.”

அந்த கடைக்காரர் அவ்வளவாய் பழக்கம் இல்லாதவர். இங்கு வந்து போவதில் கொஞ்சம் நண்பர். அடுத்து, நான் சென்ற வருடம் வாடகை வீட்டில் குடி இருந்தபோது அந்த வீட்டிற்கு முன் எட்டு லட்ச ரூபாய்க்கு மனை வாங்கி வீடு கட்டினார் அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் பார்த்தால் புன்னகை. நெருங்கினால், ‘வணக்கம் சார்’, ‘சவுக்கியமா ?’ வார்த்தைகள்.

எனக்கும் அவர் மீது கொஞ்சம் மதிப்பு. குறை சம்பளத்தில் தன் தங்கைக்குத் திருமணம் முடித்து வீடும் கட்டுகிறார் என்பதில்.

ஆள் நியாயவிலைக் கடையில் கொள்ளையடித்து வீடு கட்டுகிறாரென்று அக்கம்பக்கம் சொன்னார்கள். ஒருவன் முன்னேற்றத்தைப் பார்த்து அக்கம் பக்கம் பொறாமையில் அப்படி சொல்வது இயல்பு. மேலும் எடைக்குறைவு என்பது எல்லா நியாயவிலைக் கடைகளிலும் நடக்கும் பொதுவான நடைமுறை. அது விற்பனையாளர்கள் குற்றமில்லை.

குத்தூசிகளால் மூட்டைகள் கைமாறல், சாக்கு கிழிசல், ஒழுகல், அது இதுவென்று கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் பண்டகசாலைகளிலிருந்து வரும்போதே மூட்டைக்கு இரண்டு மூன்று கிலோக்கள் குறைவாகவே வரும். அதை விற்பனையாளர்கள்தான் சரிகட்ட வேண்டும் என்பது விதி. அதனால் கிலோவிற்கு ஐம்பது, நூறு கிராம் எடை குறைத்து வழங்கி சரி செய்வார்கள். இதையே காரணம் காட்டி அதிக எடை குறைப்பு செய்வதுதான் கொள்ளை.

நியாயவிலைக்காரர்கள் கள்ள மார்க்கொட்டில் மூட்டை மூட்டையாய் சரக்கு விற்கிறார்கள் என்பது அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு செய்யும் செயல்.

இதுவரை பக்கத்துக் கடைக்காரரிடம் எதற்கும் சென்றதில்லை. இப்போது போக மனம் இடம் கொடுக்கவில்லை.

“தம்பி….!” என் கடைக்காரனை அழைத்தேன்.

கல்லாவில் உள்ள பணத்தை எடுத்துக் எண்ணிக்கொண்டிருந்த அவன், “என்ன சார் ?”

“கார்டு இல்லாம எப்படிக் கொடுப்பார்.” கேட்டேன்.

“நான் சொன்னேன்னு சொல்லுங்க.”

“நீங்களே சொல்லிடுங்களேன்.”

“தேவை இல்லே சார். நான் கேட்டேன்னே சொல்லுங்க.” தொடர்ந்து எண்ணினான்.

இனி அவனை வற்புருத்துவதில் பயனில்லை. புரிய…..

‘ஆள் கொடுத்தால் கொடுக்கிறான். இல்லை கொடுக்காமல் போகிறான். இதற்கு என்ன தயக்கம்.| என்று துணிவு வர…. நான் பக்கத்துக் கடையில் தலையை நீட்டினேன்.

கவனித்த அவன், “வாங்க சார்.” கல்லாவிலிருந்தபடி மலர்ந்தான்.

“பக்கத்துக் கடையில கோதுமை இல்லே ரமேஷ்.”

“வேணுமா சார் ?;”

“ஆமாம்.”

“எவ்வளவு ?”

“பத்துக்கிலோ.”

“அவ்வளவு முடியாது சார். எனக்கு கணக்குல இடிக்கும் அஞ்சு கொடுக்கலாம்.”

‘கிடைத்ததே லாபம் !| எனக்குள் சட்டென்று மலர்ச்சி.

“பரவாயில்லே” பையை நீட்டினேன்.

“சார் அரிசி.” என்னை உரசியபடி குரல். திரும்பிப் பார்த்தேன். சிகப்பு குடும்ப அட்டையுடன் அழுக்கு வேட்டி துண்டில் ஐம்பது வயது முதியவர். ஒடுக்கு விழுந்த கன்னம். குழி விழுந்த கண்கள். வத்திப்போன வயிறு. எலும்புகள் தெரியும் நெஞ்சு.

“மொதல்ல அவருக்குப் பத்துகிலோ போட்டு அனுப்பு” என்று உதவியாளனிடம் உத்தரவிட்ட ரமேஷ் அவரிடம் கார்டு வாங்கி பதிந்து கைநாட்டுப் பெற்றுக் கொண்டு ஆளை வேலை முடித்து அனுப்பிவிட்டு அடுத்து எனக்கு கோதுமை கொடுத்து முடித்தான்.

பணத்தைக் கொடுத்தேன்.

அவன் நியாயவிலை விலைக்கே பணத்தை எடுத்துக் கொண்டு மீதியைத் திருப்ப…..எனக்கு ஆச்சரியம்.

“ரமேஷ் ! பணம் குறைவாய் எடுத்திருக்கீங்க போலிருக்கு.” நீட்டினேன்.

“இல்லே சார் சரியாய் எடுத்திருக்கேன்.”

“நீங்க விற்கிற விலையை எடுத்துக்கோங்க.”

“பரவாயில்லே சார். வாங்க.” விடைகொடுத்தான்.

‘நன்றி| ரமேசிடமும் என் கடைக்காரரிடமும் சொல்லிவிட்டு கொஞ்ச தூரம் சைக்கிளை தள்ளி வந்து பங்க் கடையில் நிறுத்தி மனைவி சொன்ன வாழைப்பழம், வெற்றிலை வாங்கினேன்.

“ஐயா !” குரல்.

பார்த்தேன். சிறிது நேரத்திற்கு முன் என்னோடு அரிசி வாங்கிய ஆள் அழைத்தான். தலையில் அந்த மூட்டை.

“நான் கோதுமை வாங்கலை. வாங்கினேன்னு புத்தகத்துல குறிச்சிருக்கிறதா ஒரு படிச்ச தெரிஞ்ச பையன் சொன்னான். உண்மையாய் பாருங்க ?” புத்தகத்தைக் கொடுத்தான்.

வாங்கிப் புரட்டிப் பார்த்தேன்.

அதிர்ச்சி ! இன்றைய தேதியில் அரிசி மட்டுமில்லை சர்க்கரை, கோதுமை,மண்ணெண்ணெய், பருப்பு அனைத்தும் வாங்கியதாக பதிந்திருந்தது.

“ஆமாம்” சொன்னேன்.

“இப்படித்தான் ஐயா ஏமாந்தவங்க கார்டுல அநியாயம் செய்து ஏழைங்க வயித்துல அடிச்சு பணக்காரனாகிறானுங்க பாவிங்க. சாமிதான் அவனுங்களுக்குக் கூலி கொடுக்கனும்.” சபித்து அவன் கார்டு வாங்கிப் போனான்.

எனக்குள் ரமேஷ் மீதிருந்த மொத்த மதிப்புகளும் மறைய….கோதுமை மட்டுமல்ல மனசும் கனத்தது.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *