கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 1,132 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அது ஒரு வாழைத் தோட்டம். நிறைய வாழை மரங்கள் உள்ளன. தோட்டத்தின் ஒதுப்புறமாக அதன் ஒரு ஓரத்தில், ஒரு வாழைக் குடும்பம் ! சுற்றிலும் நான்கைந்து இளம் வாழைகள் – இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் கிளம்பியவை – நின்று கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு நடுவே நடு நாயகமாய்ப் பத்தடி உயரமான தாய் வாழைமரம் நின்றுகொண்டிருக்கிறது. இளந் தென்றல் ஒன்று எங்கிருந்தோ வீசி, மரத்தின் அகண்ட இலைகளை உராயச் செய்கிறது. ‘ச்ச்’ என்று அம்மரம் பெருமூச்செறியும் ஓசை தோட்டத்து அமைதியைக் குலைக்கிறது. 

ஒரு வாழைக் கன்று தாயைக் கேட்கிறது- அம்மா, நீ இப்போது பெருமூச்சு விட்டாயா? அல்லது, காற்றில் இலை உராய்ந்த சப்தமா? 

தாய்மரம் : இரண்டும்தான் ! நானும் பெருமூச்சுவிட்டேன். காற்றில்வேறு, இலைகளும் ஓசையிட்டன. 

கன்று: எதற்காக, அம்மா, பெருமூச்சு விட்டாய்? 

தாய் : உனக்கென்ன கேள்வி அதைப் பற்றி? நான் எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டேன். 

கன்று : விஷயம் என்னவென்று சொன்னால் தான், அம்மா, நான் உன்னை விடுவேன். எதை நினைத்துப் பெரு மூச்செறிந்தாய்? 

தாய்: நான் பிறந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது. போனவருஷம் இந்நாளுக்கு எப்படி இருந்தேன் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டேன். உடனே என்னையும் அறியாமல், பெருமூச்சு வந்தது. 

கன்று : இது இல்லை நீ பெருமூச்சு விட்டதற்குக் காரணம். நீ பொய் சொல்கிறாய்.

தாய்: நிஜமாய்த் தான்! போன வருஷம் இத்தனை நாளுக்கு எப்படி இருந்தேன் என்று நினைவு வந்தது. 

கன்று: இதில் பெரு மூச்சிற்கென்னம்மா இருக்கிறது? போன வருஷம் நீ இப்போதிருப்பதைவிட ஒரு வயசு சிறியவளாய் இருந்திருக்கப் போகிறாய். இப்பொது ஒரு வயது கூட ஆகிவிட்டது. இவ்வளவுதானே வித்தியாசம்? 

தாய்: குழந்தைகளே, உங்கள் எல்லோரிடமுமே சொல்கிறேன், கேளுங்கள். போன வருஷம் நான் எப்படித் தெரியுமோ, இருந்தேன் ? நீங்கள் இப்பொழுது எப்படி பச்சிளங் குழந்தைகளாய்ப் புது மெருகுடன் இருக்கிறீர்களோ, இதே போல இருந்தேன், பிறந்த புதிது. வாழ்க்கை மிகவும் இன்பகரமாய் இருக்கப் போகிறதென்று உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தேன். போகப் போகத் தானே உண்மை தெரிகிறது? 

கன்று: எனன உண்மை அது? வருஷா வருஷம் ஒவ்வொரு வயது அதிகமாகிறது என்கிற அதிசய உண்மையைக் குறிப்பிடுகிறாயா? எல்லோருக்கும் தான் அப்படி வயது அதிகமாகிக் கொண்டு போகிறது. உனக்குமட்டும் அல்லவே! 

தாய்: எனக்கு வயது அதிகமானதோடு மட்டுமில்லை; அந்திக் காலமும் வந்துவிட்டது. 

கன்று: நீ சொல்வது வேடிக்கையாய் இருக்கிறதே. இப்போது கொஞ்சநேரம் முன்பு தானே உனக்கு ஒரு வயது ஆகிறது என்றாய்? அதற்குள், அந்திம காலத்துப் பேச்செடுக்கிறாயே? 

தாய் : இப்பொழுதுதான் உருவாகியிருக்கும் குழந்தைகளாகவுள்ள உங்களிடம் நான் அதைச் சொல்லாமல் இருக்கலாம் என்று பார்த்தேன். இருந்தாலும், உண்மையை எவ்வளவு காலம் மறைத்து வைத்திருக்க முடியும்? சொல்லிவிடுகிறேன். நமக்கெல்லாம் – நம் வாழை இனத்தாருக்கே வாழ்வு ஒரு ஆண்டு தான்! 

கன்று: ஏன் அம்மா, நாம் ஒரு வருஷத்திற்கு மேல் வாழ்ந்திருக்க ஆசைப்படக் கூடாதா? 

தாய்: நன்றாய் ஆசைப்படலாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாது. 

கன்று: அது ஏன், அம்மா, அப்படி?

தாய்: அதை ஏன் கேட்கிறாய் வயிற்றெரிச்சலை? இம்மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் என்று ஒன்று உண்டா? கேட்டால். உலக நியதி என்பர் : அவ்வளவுதான்! பிறந்து பன்னிரண்டாம் மாதத்தின் முடிவில், சாகவேண்டும். ஈசன் நம்மை வெகுக் குரூரமாக வஞ்சித்துவிட்டான். நம் வாழ்வு ஒரு வருஷம் தான்! பிறந்து ஒரே வருஷத்தில் மடியும் நம்மைப் பற்றிக் கேள்வி முறையில்லை. ஆனால் இந்தியனுடைய சராசரி ஜீவன் இருபத்தேழு தான் என்று அவன் அழுகிறான். இதுதான் உலகம்! இது எனக்கு எப்படித் தெரியும் என்றால், அன்றைக்கொருநாள் நம் தோட்டத்து முதலாளி வந்திருந்தபோது சொல்லிக்கொண்டிருந்தார். இருபத்தேழு வயது அவருக்குப் போதாதாம்! 

கன்று: அம்மா, நம்மைத் தவிர உலகத்தில் மற்ற எல்லோருமே இப்படித்தான் மனிதனைப் போல் வெகுநாட்கள் ஜீவிக்கிறார்களா? 

தாய்: அப்படிச் சொல்ல முடியாது. பிறருக்குப் பணிசெய்து வாழ்பவர்கள். உழைப்பாளிகள் முதலியவர்கள் எப்போதுமே அல்பாயுசுக்காரர்கள்தான்! நாம்தான் இப்படி என்றால், நமக்கு மிகவும் வேண்டியவர்களான தேனீ இனம்மட்டும் என்ன வாழ்ந்தது? அதற்கும் ஆயுள் ஒரு வருஷமோ, என்னவோதான்! 

கன்று: அப்படியானால், நாங்கள் எல்லோரும் உன்னைவிட்டுப் பிரிந்துதானா ஆகவேண்டும்? 

தாய்; அதற்கென்ன சந்தேகம்? பிறந்து பன்னிரண்டு மாதம் உயிர் வாழ்ந்து, கடைசியில் தாறுபோட்டுவிட்டுச் சாகவேண்டியது நம் கடமை. அதற்கேற்ப, முந்தாநேற்று நான் கருப்பஞ்சாறு தோற்றுவிடும்படியான இனிப்புள்ள நூறு பழங்கள் கொண்ட ஒரு தாறை இட்டு முதலாளிக்கு அளித்தேன். அது என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளி. 

கன்று : பாட்டியும் கடைசியில் அப்படித் தான் செய்தாளா, அம்மா? 

தாய்: பாட்டியாவது, பேத்தியாவது?எல்லோரும் அப்படித்தான்! உங்கள் பாட்டி இறக்கும் முன்பு என்னிடம் இரண்டு உறுதி மொழிகள் வாங்கிக் கொண்டாள். 

கன்று : அவை என்னென்ன? 

தாய்: எல்லோருமே கேளுங்கள். நான் உங்களிடமும் அவ்வுறுதி மொழிகளை வாங்கிக் கொள்ளப்போகிறேன். நம் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும் என்று என் அம்மா கேட்டுக் கொண்டாள். சரியென்று ஒப்புக் கொண்டேன். இதோ நீங்கள் என் எதிரே நிற்கிறீர்கள். அவ்வாக்கை நிறைவேற்றி விட்டேன். இன்னொன்று பரோபகாரம். எப்போதும் பலனைக் கருதாது யாருக்கும் உதவ வேண்டும் என்றாள். இதுதான் அவள் என்னிடம் கேட்டுக் கொண்டது. நல்லது, பொல்லாதது எண்ணாமல், பணி செய்து கிடப்பதே நம் கடன். என் காய், கனி, பூ, பட்டை, இலை எல்லாம் போய்விட்டன. இவ்வளவுக்கும் முத்தாய்ப்பு வைத்தாற் போல், நாளைக்கு நானே போகப் போகிறேன். 

கன்று: செத்து விடுவாயா, அம்மா? 

தாய்: நான் சாகமாட்டேன் தானாக. ஆனால் என்னை வெட்டி வீழ்த்திக்கொண்டு போய் விடுவார்கள். நேற்று வந்தபோது நம் முதலாளி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டில் ஏதோ கலியாணம் வருகிறது. அப்போது பந்தல் அலங்காரத்திற்கு என்னை வெட்டிக்கொண்டுபோய்விடுவார்கள், நாளைக்கே! 

கன்று : எப்படியோ நாளை நீ தப்பிவிட்டாய் என்றால், அப்புறம் உயிர் வாழ்வாயல்லவா? 

தாய்: நாளைக்குத் தப்பிவிட்டால்தானே அந்தப்பேச்சு? நம் இனத்திலேயே இயற்கைச் சாவு துர்லபம். ஒன்று, பந்தல் – வீடு அலங்காரத்திற்கு எடுத்துச் சென்று விடுவார்கள்; இல்லாவிட்டால் ஆடு, மாடு நம்மை நாசம் செய்துவிடும்; வாழைத் தண்டிற்காக, நம்மைக் கழுவேற்றுவது சகஜம்! 

கன்று: முதலாளி வீட்டில் கலியாணம் என்று,அங்கு எல்லோரும் சந்தோஷத்தோடு இருக்கையில், நாங்கள் மட்டும் உன்னைவிட்டுப் பிரிந்து அநாதைகளாய்த் தவிக்க வேண்டுமா? 

தாய்: அப்படிக் கேட்கக்கூடாது, அவர்களுக்குக் கொண்டாட்டாம்; ஆனால் அது நமக்குத் திண்டாட்டம்தான். பிறருக்காகத் திண்டாடுவதில்தான், நமக்குக் கொண்டாட்டம். விடிய விடிய உபதேசம் கேட்டு விட்டுக் கடைசியில் இப்படிக் கேட்கிறாயே? 

இச்சமயம் அங்கே தோட்டத்து முதலாளி தம் மகனுடன் வருகிறார். கூட, மரங்களை வீழ்த்திக்கொண்டு செல்ல, யமகிங்கரர்களும் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மரமாய்ப் படுக்கவைத்துக்கொண்டு வருகிறார்கள். அதற்குள் முதலாளி. இதுகாறும் பேசிக்கொண்டிருந்த மரத்திற்குப் பக்கத்தில் வருகிறார். 

“டேய், நேற்றுச் சாப்பிட்டாயே அந்தப் பழங்கள் எப்படி இருந்தன ?” என்று தந்தை கேட்டு நிறுத்தக்கூட இல்லை. 

மகள்: ஜோராய் இருந்தது, அப்பா. 

முதலாளி : பார்த்தாயா, இந்த மரத்தினுடைய பழங்கள்தான் நீ சாப்பிட்டது. 

மகனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.”இந்த மரமா, அப்பா?” என்று ஆதுரம் பொங்க விசாரிக்கிறான். 

“அப்படியானால், இந்த மரம் மற்ற மரங்களையெல்லாம்விட ரொம்ப நல்ல மரமப்பா. இல்லையா” 

“ஆமாம்!” 

யம கிங்கரர்கள் மற்ற மரங்களை வீழ்த்தி விட்டு, அங்கு வருகிறார்கள். 

“இதையும் வெட்டிவிடவேண்டியது தானுங்களே, எசமான்?” 

“இது என்னடா கேள்வி?” வேலைக்காரர்கள் மரத்திற்கு அருகே செல்கிறார்கள். 

முதலாளி: ஜாக்கிரதையாய் வெட்டு. பக்கத்தில் உள்ள புதுக் கன்றுகளையும் சேர்த்துச் சாய்த்துவிடாதே. 

மகன்: இதையும் வெட்டப் போகிறார் களாப்பா? 

முதலாளி: ஆமாம். 

மகன்: வேண்டாம், அப்பா. பாவம், நல்ல மரம். நமக்கு எவ்வளவு நல்ல பழங்கள் தந்த மரம்! இதைப்போய் வெட்டலாமா? 

முதலாளி: போடா அசடு. மரத்திலே நல்ல மரம் என்றும் கெட்ட மரம் என்றும் ஒன்று உண்டோ? 

மகன்: அதெல்லாம் முடியாது. ஊஹும், நீ வெட்டச் சொன்னால், நான் அழுவேன். 

முதலாளி: பிள்ளை சொல்கிறதைக்கேட்டு, நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் ? சும்மா வெட்டுங்கள். 

மகன்: நான் விடமாட்டேன். 

பையன் பிடிவாதக்காரன். செல்லப்பிள்ளை வேறு. அவன் மரத்தடியில் உட்கார்ந்து விடுகிறான். “இந்த மரத்தை வெட்டினால், நான் வீட்டிற்கு வரமாட்டேன். இங்கேயேதான் உட்கார்ந்து அழுவேன்.” 

முதலாளி: போனால் போகிறது, விட்டு விடுங்கள். என்னவோ பிள்ளை பிடிவாதமாய் இருக்கிறான். மரம் பிழைத்துப் போகட்டும். 

பழையபடி அவர்கள் போன பிறகு வாழைக் குடும்பத்தில் பேச்சு ஆரம்பிக்கிறது. 

தாய்: பார்த்தீர்களா, அந்தப் பையனின் அபிமானத்தை ? அவன் பிடிவாதமாய் இருந்து தடுத்திரா விட்டால், நான் இப்போது உங்கள் நடுவே நின்று கொண்டிருப்பேனா? அதனால், அவனுக்கு நீங்கள் எல்லோரும் ஆளுக்கொரு நல்ல தாறாகப் போட்டுக் கொடுங் கள். என்னால்தான் முடியாது;  நீங்களாவது செய்துவிடுங்கள்”. 

கன்றுகள்: ஆகட்டும், அம்மா. நீ பிறப்பெடுத்ததற்குச் செய்யவேண்டிய பணிகள் அவ்வளவும் செய்து முடித்து விட்டாய். இனி மேல் எங்களுக்கு நடுவே, நீ நிச்சிந்தையாய் இரு. அதுதான் எங்கள் ஆசை! 

தாய்: ஆகட்டும், குழந்தைகளே ! 

ஒரு வாரம் கழித்து, வீட்டில் கலியாணமெல்லாம் தீர்ந்த பிறகு, முதலாளி அங்கு வருகிறார். வாழைக் கன்றுகளுக்கு நடுவே இப்போது குப்பை செத்தைதான் இருக்கிறது, அந்த மரம் இருந்த இடத்தில். அவ்விடத்தைக் காட்டி, முதலாளி வேலையாட்களுக்குக் கட்டளை இடுகிறார்: 

“அந்தக் கன்றுகளுக்கு உரம் போட வேண்டாம். தாய் வாழையே மக்கிப்போய், நல்ல எருவாய்ச் சேர்ந்திருக்கும். எருவை வேறு போட்டுக் காசைக் கரியாக்க வேண்டாம்.” 

– காவேரி, விக்ருதி மலர் 10, கார்த்திகை இதழ் 4, நவம்பர் 1950

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *