நிம்மதி வேணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 3,148 
 
 

அலுவலகத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக போக அனுமதி கேட்டு நின்ற தேவசகாயத்திடம் ‘அக்கவுண்டண்ட்’ கேட்டார், எப்படி இருக்கு உங்க அப்பாவுக்கு?

அப்படியேதான் இருக்கு சார், இரண்டு மூணு நாள் கழிச்சுத்தான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.

வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறெயா?

இல்லை சார் வீட்டுல இரண்டு பேரும் வேலைக்கு போயிடறோம், பசங்களும் ஸ்கூலுக்கு போயிடறாங்க. யார் சார் பார்த்துக்குவாங்க? அதனால ஹாஸ்பிடல்லயே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டேன்.

ரொம்ப சிரமம்தான் உனக்கு,

என்ன சார் பண்ண முடியும்? எங்களை வளர்க்கறதுக்கு ரொம்ப சிரமப்பட்டாரு, அவரை நிம்மதியா கடைசி காலத்துல வீட்டுல வச்சு பார்த்துக்க முடியலை பாருங்க.

அதுக்கு உன்னை குறை சொல்ல முடியுமா? நீங்க இரண்டு பேரும் வேலைக்கு போனாத்தான் அவரை இந்தளவுக்காவது ஹாஸ்பிடல்ல வச்சு பார்த்துக்க செலவு பண்ண முடியுது.

அதுவும் சரிதான் சார்., நான் கிளம்பட்டுமா சார், அப்படியே ஹாஸ்பிடல் போயிட்டு அவர் கூட இராத்திரி எட்டு ஒன்பது வரைக்கும் இருந்துட்டு வீட்டுக்கு போயிடுவேன். டாக்டரை பார்க்கறதுக்கு போறதுனாலதான் உங்க கிட்டே பர்மிஷன் கேட்கிறேன்.

சரி போயிட்டு வா..

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான் தேவசகாயம். சைக்கிளை எடுத்து அந்த வாகனங்களின் இடைஞ்சல்களிலிருந்து தள்ளிக்கொண்டு பாதைக்கு வந்தான்.

அப்பா.. நினைவு தெரிந்த நாளிலிருந்து முகம் சிரித்தபடியே இருந்த ஞாபகம்தான்.

இவனோடு நான்கு பேர், அப்புறம் தாத்தா பாட்டி, அவரும், அம்மாவும். ஆக் மொத்தம் எட்டு பேர் அந்த வீட்டில். வருமானம் கைக்கும் வாயிற்கும் எட்டாத நிலைமைதான்.

அம்மாவுடன் தினம் தினம் சண்டைதான், பற்றாக்குறை பட்ஜெட், ஆனாலும் முகத்தில் கொஞ்சம் கூட வருத்தமோ, சங்கடமோ இருந்ததாக தெரியவில்லை.

அக்காக்கள் இரண்டு பேருக்கும், அந்த கஷ்டத்திலும் கல்யாணம் செய்வித்து மேடையேற்றினர். அடுத்து என்னை எப்படியோ பிளஸ் டூ முடித்து அவர் கம்பெனியிலேயே அலுவலகத்தில் சேர்த்து விட்டார். தம்பி டிரைவராக்கி அரசு பேருந்தனராகவும், நுழைத்து விட்டார்.

அப்பாவிடம் அதிகமாக ஒட்டியிருப்பவன், அம்மாவே சொல்வாள், கடைசி காலத்துல கஞ்சி ஊத்தறது சகாயமாத்தான் இருக்கும்.

அப்பா அடிக்கடி அவனிடம் சொல்வார், சகாயம் மனுசனுக்கு நிம்மதியான வாழ்க்கை வேணும். என்னை பொறுத்த வரைக்கும் அது கடைசி வரைக்கும் கிடைச்ச மாதிரியே தெரியலை, உனக்கே தெரியும், அம்மா, அப்பாவை கவனிச்சு, அதுக்கப்புறம் உங்களை படிக்க வச்சு, வேலைக்கு சேர்த்து, உங்க அக்காளுகளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, அப்பா,….

இத்தனை வருசம் ஓடிடுச்சு. வயசு எழுபதும் ஆயிடுச்சு, அக்கடான்னு உட்காரணும்னு ஆசைதான், உங்கம்மா விட்டாத்தானே, இப்ப கூட பாரு உன் பெரியக்கா பொண்ணுக்கு விசேஷம், நம்மனால முடிஞ்சதை செய்ய சொல்லி வற்புறுத்தறா, அடுத்து உன் சின்னக்கா ரெடியா இருக்கறா, அவ பொண்ணுக்கு ஏதாவது செய்வேன்னு, அப்புறம் உன் பையன், உன் தம்பி பையன்..

அதெல்லாம் அவங்க பார்த்துக்க மாட்டாங்களா? நீங்க அமைதியா உட்கார்ந்திருக்கலாமில்லை. இந்த அம்மா சொன்னா கேட்கமாட்டாங்களா?

அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது, இந்த அப்பாவை பாவம் வயதான காலத்துலயாவது நிம்மதியா விட மாட்டேங்கறாளே. அவரோட பதினெட்டு வயசுல குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பிச்சாரு, எழுபதாகியும் விடமாட்டேங்குது, மனதுக்குள் நினைத்தாலும் அம்மாவிடம் சொல்ல பயம்.சண்டைக்கு தயாராய் இருப்பாள்.

இவனுக்கு மட்டுமல்ல, அக்காக்களுக்கும், தம்பிக்குமே அம்மாவிடம் எப்பொழுதுமே பயம்தான். அப்பாவிடம் பேசும் தைரியம் அம்மாவிடம் இருந்ததில்லை.

உண்மையிலேயே அவருக்கு நிம்மதி கடைசி வரை கிடைக்கவே இல்லை. அம்மா திடீரென இறந்து விட, அதற்கு பின் இந்த ஆறுமாதம் நிம்மதியாக இருந்தாரென்றால் அதுவும் முடியவில்லை.

நோய்வாய்பட்டு விட்டார். ஆரம்பத்தில் பக்கத்து கிளினிக்கில் பார்த்து வந்தவரை டாக்டரே கூப்பிட்டு எதுக்கும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்த்துடலாம்.

மூன்று நாட்கள் அட்மிஷன் செய்து நன்றாகி வீட்டுக்கு கூட்டி வந்தாலும் அடுத்து இதோ இரண்டு நாட்களாக ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டியதாகி விட்டது.

இனி நீண்ட நாட்கள் தாங்குவது கடினம், டாக்டர் சொல்லி விட்டார்.

எண்ணங்கள் மனதுக்குள் ஓடியபடியே ஹாஸ்பிடல் வாசலுக்குள் சைக்கிளை கொண்டு வந்தவன் ஓரமாக நிறுத்த இடம் தேடி சென்றான்.

அவனை பார்த்து மென்மையாய் புன்னகைத்தார். அப்பா இப்ப எப்படியிருக்கு?

ப்ச்..அப்படியேதான் இருக்கு, இருந்தாலும் நீ ரொம்ப மனசை போட்டு அலட்டிக்காதே, எனக்கு காலம் முடிய போகுது, ஆனா நீ இன்னும் நிறைய உனக்கு இருக்கு.

என்னப்பா இப்படி சொல்லீட்டிங்க, நீங்க கடைசி வரைக்கும் நிம்மதியா இருக்கணும், இருக்கணும்னு சொல்லிகிட்டே இருப்பீங்களே, கடைசி வரைக்கும் உங்களை அப்படி என்னால வச்சுக்க முடியாம போச்சே. அம்மா கூட தினமும் சண்டை போட்டு, எங்களை எல்லாம் சுமந்து, ரொம்ப பாவம்ப்பா நீங்க, அப்பாவின் கட்டிலின் அருகில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அவரை பார்த்து கண் கலங்கினான்.

ஐந்து நிமிடம் அவனையே உற்று பார்த்தவர் கண்ணா உங்கிட்ட நான் சொன்ன நிம்மதி எங்கிட்டேதான் இருந்திருக்கு, இந்த ஆறு மாசத்திலதான், அந்த நிம்மதி இனிமேல் கிடைக்காதுன்னு தெரிஞ்சுது. நான் சீக்கிரம் போய் சேரப்போறதுக்காக, இதை சொல்லலை.

புரியாமல் அவரை பார்த்தான், என்னப்பா சொல்றீங்க அப்ப எங்கிட்ட நிம்மதி வேணும்னு கேட்டுகிட்டே இருப்பீங்களே.

ஆமடா நான் கூட நிம்மதின்னா ஏதோ காண கிடைக்காத பொருளா இருக்குமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். உங்கம்மா எப்ப என்னை விட்டு போனாலோ அதுக்கப்புறம்தான் ஓ இதுவரைக்கும் அந்த நிம்மதி என் கிட்டேதான் இருந்திருக்கு, அவ போன பின்னாலதான் அது என்னை விட்டு போயிருச்சுன்னு புரிஞ்சுது.

சத்தியமா எனக்கு புரியலைப்பா..

இல்லைடா, எட்டு பேர் இருந்த குடும்பத்தை என்னால கட்டி இழுத்துட்டு போக முடிஞ்சுதுன்னா அதுக்கு காரணம் உங்கம்மா தாண்டா, அவ இருந்த தைரியத்துலதான் என்னால எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்ய முடிஞ்சிருக்கு.

அதுக்கப்புறமும் இந்த எழுபது வயசு வரைக்கும் அவ என்னைய உட்கார விடாம விரட்டி விரட்டி வேலை வாங்கினதால நான் நிம்மதியா ஆரோக்கியமா என்னோட வேலைகளை பார்த்துட்டுதான் இருந்திருக்கேங்கறது அவ போன பின்னாலதான் எனக்கு புரிஞ்சிருக்கு.

என் கூட அவ இல்லாத இந்த ஆறு மாசத்துலதான், நான் எதையோ பார்த்து அதுதான் நிம்மதின்னு ஏங்கியிருக்கேன்னு புரிஞ்சது. அந்த நிம்மதி போயிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே அது வரை என்னோட உடம்புக்குள்ள ஒளிஞ்சுகிட்டிருந்த எல்லா வியாதியும், என்னை சுத்திகிச்சு. அப்பத்தான் புரிஞ்சுகிட்டேன். இது நாள் வரைக்கும் அந்த நிம்மதிக்குள்ளதான் இருந்திருக்கேன், இதுக எல்லாம் எட்டி பார்க்காம இருந்திருக்கு. இப்ப அது போயிடுச்சுன்னு தெரிஞ்ச பின்னால என்னை வந்து பிடிச்சுகிச்சு.

தேவசகாயத்துக்கு அப்பாவின் நிம்மதி எதில் இருந்திருக்கிறது என்பது இப்போது புரிந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அப்பாவின் மரணத்தை மருத்துவமனை அறிவித்த போது அவனுக்கு ஒரு வித நிம்மதி வந்தது.

நிம்மதியை தவறவிட்டு விட்டு அப்பா ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டது போதும் என்று நினைத்தான்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *