கணபதியப்பன் அவர்கள் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார்.
அவர் மனைவிக்கு பயம் பிடித்துக்கொண்டது. இவருக்கு கோபம் அதிகமாக அதிகமாக இரத்த கொதிப்பு அதிகமாகிவிடுமே என்ற பயம்தான்.
அமைதியாய் இருங்கள், நம்ம பையந்தானே, கொஞ்ச நாள் எல்லாம் சரியாயிடும்.இப்ப அமைதியாய் இருங்கள். முடிந்த வரையில் சமாதானப்படுத்தினாள். சரி சரி என்று வாய் சொன்னாலும் கணபதியப்பன் மனம் மட்டும் வருத்தத்துடனும் கோபத்துடனுமே இருந்தது.
கணபதியப்பன் இருந்த இருப்பென்ன? அவர் பதவியில் இருந்த போது அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. விடிந்தால் ஏதாவது ஒரு நகரத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ பறந்து கொண்டிருப்பார். எல்லாம் கம்பெனி செலவுகள் தான். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்பெனிக்கு வியாபார தொடர்புகள் ஏற்பட்டு கொழித்தது. இதனால் இவரை மிக மிக மரியாதையுடன் வைத்திருந்தனர். இவர் சொன்னால் வேறு வார்த்தையே கிடையாது.எங்கு சென்றாலும் மனைவியையும் உடன் அழைத்து சென்று விடுவார். மனைவி
உடன் இருந்தால் அவருக்கு ஒரு தைரியம்.
அவருக்கு பிறந்தது ஒரே ஒரு பையன்.அவன் இவர்களுடன் ஒரு வயது வரையில் தான் இருந்தான், அதன் பின் அவர்களுடைய அப்பா அம்மா வீட்டிற்கு, அதாவது, மனைவியின் பெற்றோர்கள் வீட்டிலும், இவருடைய பெற்றோர்கள் வீட்டிலுமே வளர்ந்தான். அதுவும் ஐந்து வயது வரை மட்டும்தான்.
அதன் பின் அந்த நகா¢லேயே பெரிய பள்ளியில் தங்கி படிக்கும் வசதியுடன் சேர்த்தனர். கணவனும்,மனைவியும் நாட்டுக்கு நாடு சுற்றுப்பிரயாணம் சென்றாலும் மகனின் பள்ளிக்கு கட்டவேண்டிய எல்லா தொகைகளும் சரியாக போய் சேர்ந்து விடும். அதன் பின் மகனின் தொழில் படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்தார். அவன் என்னவெல்லாம் ஆசைப்பட்டானோ அதனை எல்லாம் இருவரும் செய்து அவனை வளர்த்தனர்.
இவர்களின் எண்ணப்படியே மிகப்பெரிய செல்வந்தா¢ன் மகளை இவனுக்கு பேசி முடித்தனர்.அவன் எதுவும் சொல்லவில்லை, ஏற்றுக்கொண்டான். இது கணபதியப்பனுக்கு மிக பெருமையாக இருந்தது.அந்த ஊரே வியக்கும் அளவுக்கு கல்யாணத்தை சீறும் சிறப்புமாக நடத்தி காட்டினார். கணபதியப்பன் வீட்டு கல்யாணம் என்றால் அதுதான் கல்யாணம் என்று ஊரே அதிசயித்தது.
எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக நினைத்திருந்தார்.கல்யாணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே, மகன் லண்டன் சென்று குடியேறுவதாக சொல்லி விட்டான்.
அங்கேயே தொழிற்சாலை ஒன்று நிறுவி அதனை பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டான்.
இதற்கு அவனின் மாமனாரும் உதவி செய்வதாக சொல்லி விட்டார். அவருக்கு ஏற்கனவே லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தன.
கணபதியப்பனுக்கும், அவர் மனைவிக்கும் பெருத்த ஏமாற்றமாகி விட்டது. கடைசி காலத்தில் தன் மகனுடன் இருக்கலாம் என நினைத்தவர் தலையில் பெரும் இடி விழுந்தது போல இருந்தது. தன மனைவியிடம் சொல்லி நாங்கள் போன பின்னால், நீ எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள் என்று சொல்லிப்பார்த்தார். அவன் பிடிவாதமாக இருந்தான்.
சம்பந்தியிடம் சொல்லி மகனை இங்கேயே இருக்குமாறு சொல்லமுடியுமா? என்று நினைத்தவர் அது அவனுக்கும் தனக்கும் கெளரவ குறைச்சலாக ஆகிவிடும் என்று அமைதியாகி விட்டார். இருந்தாலும் மனம் மட்டும் இன்னும் கோபம் ஆறாமல் பொருமிக்கொண்டே இருந்தது.
அப்பொழுது அந்த ஊருக்கு மடத்து துறவி வருகை புரிவதாக இருந்தது. அவரின் வருகையை எதிர்பார்த்து அந்த ஊரின் அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.கணபதியப்பனின் மனைவியும் அவரிடன் “ஏங்க நாமளும் போய் பார்ப்பமே” என்று சொல்ல மனமில்லாமல்தான் அவரை பார்க்க அங்கு வந்திருந்தார்.
அவரை பார்க்க பெரிய பெரிய மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலைகள், சமுதாயத்தில் பெரிய மனிதர்கள், வசதிகளிலும்,செல்வாக்கிலும் பிரபலமானவர்கள், ஆனால்
அவர்களின் கண்கள் ஏதோவொரு கவலையில் அந்த மகானை பார்க்க காத்திருக்கிறது. இதை பார்த்த கணபதியப்பனுக்கும் மெல்ல நம்பிக்கை துளிர் விட்டது. நம்முடைய பிரச்சினைகளை இவரிடம் சொல்லி பார்க்கலாம்.
மகான் வருகை புரிந்தவுடன் ஓய்வு எடுக்க எந்தவொரு வசதிகளும் தேவையில்லை என்று சொல்லி ஒரு சாதாரண மர நிழலிலேயே உட்கார்ந்து விட்டார்.பக்தர்கள் ஒவ்வொருவராக
அவரிடம் வந்து பேசிவிட்டு அவரின் ஆசிர்வாதங்களை வாங்கி சென்று கொண்டிருந்தார்கள். கணபதியப்பனும் அந்த வரிசையில் நின்று கொண்டார்.
அவரின் வாய்ப்பு வந்தது. மெல்ல மகானிடம் சென்றவர், கை கட்டி குனிந்து ஐயா என்று ஆரம்பித்து அவரின் எதிர்பார்ப்புக்களை எல்லாம் கிடைத்த ஐந்து நிமிடங்களில் மள
மள வென சொல்லி விட்டார்.மகனின் லண்டன் குடிபெயர்ப்பையும் சொல்லி முடித்தார்.
மகான் ஒரு நிமிடம் அவரை உற்றுப்பார்த்து, நீ எத்தனை வருட காலம் உன் தாய் தந்தையிடம் இருந்தாய்?
இவர் மெல்ல திணறிக்கொண்டே நான் பதினைஞ்சு வயசுக்கப்புறம் படிப்பு வேலை, அப்படீன்னு வெளியே வந்துட்டேன்.அப்புறம் என் வேலை காரணமா என்னால அப்பா
அம்மா கூட போய் இருக்க முடியல.
ஏன் நீ நினைச்சிருந்தா உங்க அப்பா அம்மா கூட இருந்திருக்கலாமல்லவா?
இவர் மெல்ல தயங்கி “ இருந்திருக்கலாம்.”
சரி உன் பையன் உங்கூட எத்தனை வருசமா இருந்தான்?
அவனை படிப்புக்காக இருபத்தைஞ்சு வருசம் வெளியில தான் வச்சு படிக்க வச்சோம்.
குழந்தையா இருக்கும்போதாவது உங்க கூட இருந்தானா?
ஐயா நான் ஊர் ஊரா சுத்தற வேலை இருந்ததால, அவன் தாத்தா பாட்டி கூடத்தான் இருந்தான்.அவனுடைய எல்லா தேவைகளுக்காக நான் இரவு பகலாக நாடு நாடா அலைஞ்சு, சம்பாரிச்சு என் பையனுக்கு அனுப்பிச்சுட்டு இருந்தேன். எனக்கு உதவியா என் மனைவியும் என் கூடவே இருந்தா.
நீ நல்லா உழைச்சே உண்மைதான், உன் அப்பா, அம்மா கூட உன்னால வாழ நினைக்கல, சரி உன் ஒரே மகனையாவது உன் பக்கத்துல வச்சு வளர்க்கணும்னு நினைக்கல, அப்படீங்கறபோது அவன் மட்டும் உன் கூட இருக்கணும்னு எப்படி ஆசைப்படறே?
ஐயா நான் அவங்க நல்லா வாழணும், கடைசி காலத்துலயாவது நிம்மதியா இருக்கணும்னுதான் நாயா பேயா அலைஞ்சேன்.
நல்லது, அப்படி அலைஞ்சு கடைசியில அந்த நிம்மதி உனக்கு கிடைச்சுடுச்சா?
அந்த நிம்மதிதான் இப்ப என் பையன் ரூபத்துல போயிடுச்சே.
உன் மகனை குறை சொல்றதுக்கு முன்னால நீ உன்னை திரும்பி பார்த்துக்கொள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, உன் மகனை பத்தின கவலைய விட்டுட்டு உன்னுடைய வாழ்க்கைய சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய முடியுமா? அப்படீன்னு பார்.உலகத்தின் வாழ்க்கை அப்படீங்கறது குடும்பத்துக்காக, அல்லது சமுதாயத்துக்காக, இந்த இரண்டுல தான் எல்லாமே அடங்கியிருக்கு.
நீ இது வரை குடும்பத்துக்காக உழைச்சேன் அப்படீன்னு சொல்றே? ஆனா நிம்மதி கிடைக்கலே அப்படீங்கறே. இப்ப சமுதயத்துக்கு உன்னால ஏதாவது செய்ய முடியுமா? அப்படீன்னு யோசி.
நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்.
நல்லது நாலு ஏழை குழந்தைகளை படிக்க வை.ஏழைகளுக்கு மருத்து உதவி தேவைபட்டா உன்னால முடிந்ததை செய். யாரையும் குறை சொல்லி பேசாதே. இனி உன்னால் இந்த சமுதாயம் பலன் பெறட்டும்
மகான் அமைதியாகி கை தூக்கி ஆசிர்வாதம் செய்தார்.
கை கட்டி வெளி வந்த கணபதியப்பன் மனதில் அமைதி வந்து குடியேறி இருந்தது.