நிமிர்ந்தாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 1,780 
 
 

ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இருக்கையில் முதலாக அமர்ந்த கவிதா கடந்த கால நிகழ்வுகளை நினைத்து கண்கலங்கினாள். 

பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் வாழ்வில் மறக்கவே முடியாத நாள். பெற்ற தாயே புழுவைப்பார்ப்பது போல் பார்த்தாள். தந்தை எதுவும் பேசாமல், ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றார். தம்பியோ தரம் தாழ்ந்து போடி, வாடி என பேசியதோடு எடுபிடி வேலை செய்யவைத்தான். நட்புகள் விலகிச்சென்றன. தோப்பு போல் என்றுமே நட்புகளுக்கு இடையே வலம் வந்தவள் தனி மரம் போல் நின்றாள்.

பற்றாக்குறைக்கு பக்கத்து வீட்டு பரிமளம் வேறு வந்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அம்மாவிடம் “என்ன வசந்தி உன்ற பொண்ணு கவிதா பத்தாவுதுல பெயிலாயிட்டான்னு சொன்னாங்க. நீ பெரிய படிப்பு படிக்க வெக்கோணும்னு வேலைக்குங்கூட போகாம ஊட்டுலியே இருந்துட்டு விதவிதமா செஞ்சு போட்டுட்டு பொத்திப்பொத்தி வளத்தினியே… இப்ப என்னாச்சு? அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும். என்ற பொண்ணு கௌசி பாசாயிட்டா. கேக்கு வெட்டோணும்னு அடம்புடிச்சு டவுனுக்கு அவங்கப்பங்கூட போயி பெருசா ஒரு கிலோவே வாங்கீட்டு வந்திருக்கறா…. நீயும் வா. கேக்கு சாப்புட்டு வருவியாமா. ஆனா உன்ற பொண்ணு கவிதாவ மட்லும் கூட்டீட்டு வந்தராத. இவ மூஞ்சியப்பார்த்து என்ற புள்ள சந்தோசம் போயிரும். அவ கூடப்படிச்சு பாசானவங்கள மட்லும் வரச்சொல்லியிருக்கறா. என்ற ஊடே ஒரே திருவிழா மாதர இருக்குது போ. அப்பறம் ஒன்னொரு விசயம். உன்ற பொண்ணு கவிதாவுக்கு படிப்பு வராதுன்னு ஆயிப்போச்சு. மாடு வாங்கி குடுத்து மேய்க்கச்சொல்லிப்போடு. அத வெச்சு அவ கண்ணாலத்துக்கு நாலு பவுனாச்சும் எடுக்கலாம். இல்லீன்னா ஒன்மில்லாத அனாதைக்குத்தாங்கட்டிக்குடுக்கோணும். என்ற பொண்ணு கௌசிய கலெக்டருக்கே படிக்க வெக்கப்போறன்னா பாத்துக்குவே….” என சொன்னதைக்கேட்டதும் கவிதாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. வீட்டிற்குள் சென்று குப்புறப்படுத்து குழுங்கி, குழுங்கி வேதனையின் உச்சத்திலும், எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்திலும் தேம்பி,தேம்பி அழுதாள். அன்று முழுவதும் உணவை பசியால் உடல் கேட்டும் மனம் வேதனையில் முடங்கி எடுத்துண்ணத்தடுத்தது.

காலையில் எழுந்ததும் தனது ஆசிரியரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தாள்.

“தோல்வியை சந்திக்காத சாதனையாளர்களே இந்த பூமில யாருமில்லை. படிப்பறிவில்லாத ஒரு விவசாசி கூட தன்னோட காட்டுல ஒரு போகம் கெட்டுப்போயி நஷ்டமானா, சோர்ந்து போயி அடுத்த போகம் விதைக்காம விடறதில்லை. அதனால நீ மறுபடியும் படி. நீ தோற்றுப்போனதுனால உன்னைச்சுற்றிலும் இருக்கிறவங்க எப்படி நடந்துக்கிறாங்கன்னும், எப்படி தரம் தாழ்ந்து ஏளனமா பேசறாங்கன்னும் கேட்டிருப்பே. இப்படிப்பட்ட உதாசீனங்கள் தான் நம்மை மிக உயரமான, சிறப்பான இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும். இன்னைக்கு மோசமா பேசற அதே வாயால உன்னைப்பாராட்டவும் செய்ய வைக்க முடியும். அதுக்கு விடா முயற்ச்சியும், உழைப்பும் வேணும். சில கைடு புக்ஸ் தர்றேன், கொண்டு போய் படி. மறுபடியும் எழுது . வெற்றி நிச்சயம்” என வாழ்த்தி அனுப்பியபோது ‘கடவுளைப்போன்ற சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்’ என நினைத்தபடி புத்தகங்களை பெற்றுக்கொண்டு நன்றி கூறியவள் மன உறுதியுடன் வீடு திரும்பினாள்.

ஆசிரியர் கொடுத்த புத்தகம் தவிர நகரத்தில் உள்ள நூலகத்துக்குச்சென்று பயனுள்ள பல புத்தகங்களை எடுத்து வந்து படித்தாள். தேர்வு எழுதினாள் , தேர்ச்சி பெற்றாள். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றாள். கல்லூரியில் சேர்ந்து படித்தவளுக்கு படிப்பு முடித்ததும் பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

வேலையில் தனிக்கவனம் செலுத்தி கடினமாக உழைத்ததின் பலன் அந்த நிறுவனத்தின் உயர்ந்த பதவி கிடைத்தது.

இன்று தன் முன் டேபிளில் இருந்த நோட்டில் ‘முடியும் என்பது உயிர் மூச்சாக இருப்பவர்களது வாழ்வில் முடியாது என்பது வெறும் பேச்சாகப்போய்விடும்’ என எழுதினாள்‌.

வேலை முடிந்து விலையுயர்ந்த தனது காரை தானே ஓட்டியவள், நேராக தன் வீட்டிற்குச்செல்லாமல் பக்கத்து வீடான கௌசி வீட்டிற்கு கேக்குடன் சென்றவளைப்பார்த்ததும் பதட்டமான கௌசியின் தாய் பரிமளம் “வா…. வா…. வாங்க கவிதா மேடம்…” எனக்கூறி இருக்கையை எடுத்துப்போட்டவள், “கொஞ்ச இருங்க கௌசி மாடு பிடிக்கப்போயிருக்கறா. போயி கூட்டீட்டு வாரேன்…” எனக்கூறி வெளியே சென்றவளைத்தடுத்து, ” பரவாயில்லைங்க. எனக்கு ஆன்லைன்ல ஒரு மீட்டிங் இருக்கு “எனக்கூறி விட்டு கேக்கை எடுத்து சிரித்த படி கொடுத்த பின் தன் வீடு சென்றவள், தனது அறைக்குள் சென்று தனிமையில் அமர்ந்து இன்றும் அன்று கதறி அழுதது போலவே தேம்பி தேம்பி அழுதாள். இது வேதனைக்கான அழுகையால் வந்த கண்ணீர் அல்ல. சாதனைக்கான அழுகையால் வந்த ஆனந்தக்கண்ணீர். தற்போது பத்து வருடங்களாக இருந்த மன இறுக்கம் குறைந்ததாக நினைத்தவள் உடலாலும், மனதாலும் நிமிர்ந்து நின்றாள்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *