நினைவுகள் மட்டுமே

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 6,164 
 

பிறேமினி கோலா வாங்கி வாறீங்களே ! ம்… காசைவாங்கிக் கொண்டு கடைக்குப் போனாள் என் சின்னத்தங்கை பிறேமினி. அப்பாவும் நானும் அந்த மூலைப்படியிலிருந்து சின்னனிலிருந்து நான் செய்த அட்டகாசங்கள் பலவற்றை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்விளக்குகள் அணைகிறது. உன்னோடை கதைச்சுக் கொண்டிருந்ததிலை லைற்நிக்குமெண்டதையும் மறந்து போனன். ஏன எழுந்த அப்பாவுக்குச் சொன்னேன்.. சடா கெதியா விளக்கைக் கொழுத்திவாங்கோ நிண்டுகொள்ளு வாறன் நானுனக்குச் சடாவே…. பொறு விளக்கைக் கொழுத்திக் கொண்டு வாறன். இடுப்பில் செருகியிருந்த சூரியா தீப்பெட்டியைப் பற்றவைத்து விளக்கை எடுத்துக் கொழுத்திக் கொண்டு வந்து மீண்டும் என் அருகில் இருந்து எங்கை விட்டனாங்கள் கேட்ட அப்பாவுக்கு வீட்டை விட்டனாங்கள் என்றேன். மாடு பகிடிவிடுகிறியே… சிரித்தபடி என் தலையில் குட்டினார் அப்பா. ஜேர்மனிப் புதினங்களைச் சொல்லு கேப்பம். எத்தினை கோப்பை கழுவுறது எத்தினை ரொய்லெட் கழுவிறதெண்ட புதினமோ இல்லாட்டி என்ர கவுன்சில் உத்தியோகம் பற்றிக் கேக்கிறீங்களோ….? எங்கடை ஊர்ச்சனங்களும் உனக்குக் கிட்ட இருக்கினமாம். அவயளைப்பற்றிச் சொல்லன். உங்கை வாறசனமெல்லாம் விலாசமா திரிஞ்சிட்டுப் போகினம் நீ என்னண்டா….. ம்… அங்கை செய்யிற வேலை கூட்டல் கழித்தல் பெருக்கல் இஞ்சைவந்தாத்தானே கலர் காட்டலாம். அந்த இடையில் பிறேமினியும் கோலாவுடன் வந்து சேர்ந்தாள். அப்பா நான் பிறேமினி மூவரும் கோலாவைக்குடித்தபடி நிறைய அலசினோம். திரும்ப மின்சாரம் வரும்வரையும் பொழுது போகவேண்டுமே.

எங்கள் சிரிப்புச் சத்தங்களைக் கேட்ட அடுத்த அறையில் இருக்கும் அனுசாக்காவும் வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ள எப்படி கதைமாறியதோ தெரியாது அப்பாவின் நினைவுகளில் அதுவரையும் வரவிடாமல் நகைச்சுவையாகக் கதைத்துக் கொண்டிருந்த என்னை அனுசாக்கா கேட்டா என்ன நாளைக்கு அப்பம்மாட்டைப் போறதோ…. ம்….நாளை முழுக்க அப்பம்மாவோடைதான் இருக்கிறது என்றேன். மனிசி அங்கை போனவைக்கெல்லாம் ஜேர்மனியிலையிருந்து தன்ரை பேத்தி வந்திருக்கிறாளெண்டு சொல்லுதாம்…எண்டாலும் மூத்த பேத்தியிலைதான் மனிசிக்குப் பாசம்…. பிறேமினி நீ கடைசியெல்லே உனக்கு ஒண்டுமில்லை அனுசாக்கா சொல்ல ஓ… பின்னை அப்பான்ரை வீட்டுக்கும் அம்மான்ரை வீட்டுக்கும் நான்தானே மூத்தவாரிசு என்னிலைதானே பாசம் கூடவாயிருக்கும். அப்பம்மா என்ரை கையாலை பால் வாங்காமல்ச் சாகமாட்டா என்றேன். ஓ….அம்மா நீபாலூத்தினாத்தான் போகும் அதுமட்டும் மனிசி இருக்கும் என்றார் அப்பா. பிறேமினி சிரித்துக் கொண்டு சொன்னாள் எண்டாலும் அப்பம்மாவுக்கு மூத்தஆம்பிளைப் பிள்ளையிலைதான் பாசம் கூட. ஏதோ என் உள்மனம் பாலூத்தல் என்றதும் நிம்மதியிழந்து கொண்டிருந்தது. கடவுளே நான் போனாப்பிறகு அப்பம்மாவின்ரை உயிர் போகட்டும். நாளையிண்டைக்கு நான் போகும் வரைக்கும் ஒண்டும் நடக்கக்கூடாது. கடவுளை வேண்டினேன். எத்தனைதான் விஞ்ஞானம் வளர்ந்தும் இன்னும் இந்த நம்பிக்கைகளும் வேண்டுதல்களும் இருக்கத்தான் செய்கிறது.

கோவிலுக்குப் போனால் அமைதி கிடைக்கும் என்பார்கள். ஆனால் கோவிலே வீடாக ஓரே பஜனையும் வழிபாடுமாக கோவில் கோவிலாக ஏறிக்கும்பிட்ட அப்பம்மாவுக்கு ஏன் புற்று நோய் வந்தது. கடவுள் ஏன் அப்பம்மாவை வஞ்சித்தார்…..? ஓ…இதைத்தான் விதியென்று சொல்கிறார்களோ!!!

இண்டைக்குப் பின்னேரத்திலையிருந்து ஒண்டும் தெரியேல்லை.அப்பிடியே நித்திரையாக் கிடக்கிறமாதிரித்தான் கிடக்குது. என்று விம்மினார் அப்பா. சடாச்சரம் சடாச்சரமெண்டு ஒரே கூப்பிட்டுக் கொண்டிருக்கிற மனிசி போகப்போகுது…. என்னைப்பெத்த தெய்வம் போகப்போகுது…..என்ரை அம்மா போகப்போகுது அதுவரை அடக்கி வைத்திருந்தவையெல்லாம் பீறிட்டுக் குமுறியழுதார் அப்பா. அங்கிள் அழாதையுங்கோ சும்மா பகிடியாத்தானே இப்ப இவ்வளவும் கதைச்சனாங்கள் அப்பாவின் அழுகையை நிறுத்த அனுசாக்கா தன்னாலான சமாதானத்தைச் சொன்னா. அழாதைங்கோப்பா பேந்து பிறசர் கூடீடும் பிறேமினி விம்மினாள். நான் மட்டும் அழவேயில்லை. அமைதியாயிருந்தேன். அனுசாக்கா என்னைப்பாத்துக் கண்ணைக்காட்டி மெதுவாகச் சொன்னா அழவேண்டாமெண்டு சொல்லு பிறகு பிறேமினிதான் ஓடித்திரியவேணும். அழாதையுங்கோப்பா அப்பம்மாக்கு ஒண்டும் நடக்காது. யாரின் ஆறுதலும் அப்பாவை அமைதிப்படுத்தாது அழுதுகொண்டிருந்த அப்பா நான் சொன்னதோடு அழுகையை நிறுத்தி கண்களைத் துடைத்துக் கொண்டு வில்லங்கமாகச் சிரிப்பை வரவளைத்துக் கொண்டு மீண்டும் கலகலப்பாக்க முயற்சித்துத் தோற்றுப்போய் அப்பம்மாவைப் பற்றியே சொல்லி அழுது கொண்டிருந்தார்.

பிறேமினி உனக்கு ரெலிபோன்…. அறையிலிருந்த அனுசாக்காவின் தங்கை தனுசா பிறேமினியைக் கூப்பிட்டாள். மேலேபோன பிறேமினி அக்கா ரமேசத்தான் கதைக்கிறார். ஏன் இப்ப எடுக்கிறார். பிள்ளையள் ஏதும் குளப்படி செய்யுதுகளோ ???? நினைத்தபடி மேலே போனேன். அக்கா அது கரன் அப்பம்மா செத்துப்போச்சாம். அப்பாவைக் கூட்டிவரட்டாம். அதைச்சொல்லத்தான் ரமேசத்தானெண்டு பொய் சொன்னனான் என்றாள் பிறேமினி. மீண்டும் தொலைபேசி சிணுங்கியது. நான் தான் எடுத்தேன். நான் கரன். வரேக்கை கவனம். சரியடா. சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொண்டு இப்ப என்னேயிறது. ஏற்கனவே அழுது கொண்டிருக்கிறார் கடுமையாம் உடனை வரட்டாமெண்டு சொல்லிக் கூட்டிக் கொண்டு போவம் பிறேமினி சொன்னபடி அப்பாவுக்குச் சொல்லி அப்பாவை வெளிக்கிடச் சொன்னோம். எனக்குத் தெரியும் மனிசி போகப்போகுது…. அப்பா அழுதழுது வெளிக்கிட்டார். மெதுவாக அடுத்த அiறியிலிருந்த மாமா அத்தை சின்னம்மாவுக்கும் சேதியைச் சொன்னோம். செய்தி கேட்டு அத்தை ஐயோ என்றா. சத்தம் போடாதைங்கோ அப்பாக்கு இன்னும் சொல்லேல்லை என்றேன். அப்பா அழுதழுது வாங்கோ என்றார். எல்லோரும் அமைதியாக எங்களை மட்டக்குளிக்கு அனுப்ப கீழிறங்கி வந்தார்கள். மாமா தெரிந்த ஆட்டோக்காரன் ஒருவனை ஒழுங்கு செய்துவிட்டார்.

கன்னாரத் தெருவிலிருந்து ஆட்டோ புறப்பட்டது மட்டக்குழி நோக்கி. நானும் பிறேமினியும் அமைதியாய் இருந்தோம். அப்பவும் மணி அப்போதை மறிச்சவள் நான்தான் நாளையிண்டைக்கு நீ போகிடுவாய் உன்னோடை இருப்பபமெண்டு வந்தனான்….மீண்டும் விம்மினார் அப்பா. சரி இப்ப போறம்தானே. அழாதையுங்கோ என்ற எனக்கு நாளைக்கு நீ ஒருடமும் போகாம அம்மாவோடைதான் நிக்கவேணும் என்ன என்றார். நான் ம் என்றுவிட்டு அமைதியாகிறேன்.

போய்க்கொண்டிருந்த ஆட்டோவை அந்தோனியார் கோவிலடியில் காவலில் இருந்த ராணுவம் மறித்து சோதனை என்றது. எல்லோரினதும் பாஸ் பொலிஸ் றிப்போட் எல்லாம் பார்த்து எனது முறைவந்தது. எனது பாஸ்போட்டைக் கொடுத்தேன். என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு ஜேர்மனியிலிருந்து வாறது. எங்கை ஐ.சி. ஐ.சி எடுக்க முன்னம் மகள் ஜேர்மனிக்குப் போட்டாள். என்றார் அப்பா. அவனுக்கு அது திருப்தியைக் கொடுக்கவில்லை. என்னைக் கேட்டான். இப்ப எங்கை போறது…??? அப்பம்மாக்கு வருத்தம் அதுதான் மட்டக்குளிக்குப் போறம் என்றேன். அவன் அடுத்ததாக சோதனையில் நின்றிருந்த ராணுவத்தினனிடம் என் பாஸ்போட்டைக் கொடுத்துவிட்டு அடுத்து வந்த வாகனத்தை மறித்தான். பாஸ்போட்டை வாங்கியவன் தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டான். வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு பதில் சொல்லி ஒருவாறு ஆட்டோவில் ஏறி மட்டக்குளி நோக்கிப் புறப்படுகிறோம்.

வீடு வெளிச்சத்தால் நிறைந்திருந்தது. ஆட்களின் ஆரவாரம். வெளியில் நின்ற கரன் அப்பாவிடம் வந்து சொன்னான். அண்ணை அய்யம்மா….என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாது அப்பா அப்பம்மாவின் று}முக்குப் போய் அப்பம்மாவைத் தொட்டுத் தொட்டு பெலத்து அழுதார். மணிமாமி மாலினி மாமி இருவரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள். 18 வயதில் இவர்களையெல்லாம் விட்டுப் புலம்பெயர்ந்த நான் சாவீட்டில்தான் திரும்பச் சந்திக்கவேண்டுமென்று எழுத்திருந்திருக்கிறதோ…!!! நெற்றியில் பெரிய நாமப்பொட்டு அதன் நடுவே குங்குமம் வைத்து அசல் மனோரமாவினை நினைவுபடுத்தும் அப்பம்மா அடையாளமே மாறி ஒட்டி எலும்புக் கூடாய்….வெளித்தெரியும் பல்லும் கறுத்து உள்விழுந்த கண்ணுமாய்….வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தா. அந்தவீட்டின் உரிமைக்காரி சிலோவன்ரியின் கணவர் சொன்னார் நீங்க வந்திருக்கிறீங்களெண்டு நேற்று இஞ்சை வந்தவைக்கெல்லாம் சொன்னவா. குடுத்து வைச்சநீங்கள் மூத்த பேரப்பிள்ளைக்கு பந்தம் பிடிக்கப் பலன் இருந்திருக்கு என்றார்.

உயிரோடை இருக்கேக்கைக் கிடைக்கேல்லைப் பாக்க இனிப்பந்தம் பிடிச்சென்ன செய்யப்போறேன். ச்சே… மத்தியானம் வந்து பாத்திருந்திருக்கலாம். உயிரோடை மனிசியைப் பாத்த ஆறுதலாவது கிடைச்சிருக்கும். உயிர் போனாப்பிறகுதான் நானும் வந்திருக்கிறன். அனுசாக்கா சொன்னது போல் அப்பம்மா நான் பாலு}த்தக் காத்திருக்காமல் வாய்க்கரிசி போடக்கூப்பிட்டிருக்கிறா…..

அப்பப்பா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னை அப்பப்பாவால் இனம்காண முடியவில்லைப் போல். மணிமாமி மாலினி மாமியை விட்டு அப்பப்பாவிடம் போய் அப்பப்பா என்னைத் தெரியுதா….? இல்லையெனத் தலையை ஆட்டிய அப்பப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. விம்மிவிம்மி அப்பம்மாவைக் காட்டி போட்டா….போட்டா…. என்றார். 10 வருடத்துக்கு முன் நான் பார்த்த அப்பப்பா உருவே மாறி கண்கள் உள்விழுந்து கன்னங்கள் ஒட்டி மெலிந்து தனது பார்வைப்புலனையும் பாதியிழந்து….. பத்து வருடம் எத்தனை மாற்றம். நானும் அடையாளம் தெரியாது போய்….

சிறுமியாய் இருந்த காலமது ஒவ்வொரு வருடமும் சித்திரை வருடப்பிறப்புக்கு என் சின்னக்கைகள் செய்தெடுக்கும் பவுடர்ப்பேணி உண்டியலை நிறைக்க அப்பப்பாவிடமும் கைவிசேசம் வாங்குவேன். பிள்ளையார்த் திருவிழாவில் கடலையாயும் ஜஸ்கிறீமாயும் மாறும் சில்லறைகளைத் தந்த என் அப்பப்பாவும் அதே திருவிழாவில் பெரியதேரின் பின்னே பஜனைபாடியபடி வெள்ளை வேட்டியும் சால்வையும் நெற்றியில் சந்தனமும் விபூதியும் நிறைந்த அந்த நெற்றியும் என் நினைவுப் பதிவேட்டியிருந்து புறப்பட்டு நினைவாகியது.

அப்பா 1973 ஆவணி பிள்ளையார் நாலம் திருவிழாவில்தானாம் தன் கரைந்த காதலின் தோல்வியைத் தாங்க முடியாமல் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியிலிருக்கும் காங்கேசன்துறைக்குப் போகும் லக்சபானா மின்கம்பத்தில் தற்கொலை பண்ண ஏறியபோது கோவிலுக்கு வந்த அம்மாவும் சின்னன்ரியும் அப்பாவை தற்கொலையிலிருந்து மீட்டு அப்பம்மாவீட்டுக்கு கூட்டிப்போய்விட ஊரெல்லாம் கமலா சடாச்சரத்தோடை ஓடிப்போட்டாளாம் என்று செய்தி அம்மம்மாவிற்குப் போக…அப்பாவும் கமலா என்னை விட்டிட்டுப் போகாதை என உள்ளேபோன மதுவின் வாசத்தோடு சொல்ல…அப்பப்பாவும் மச்சான்தானே செய்து வைப்போம் என அம்மம்மாவை சமாளித்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்ததாக அன்ரியவை சொன்னதும் நினைவில் வந்து போனது.

இன்று ஊர்விட்டு உறவு விட்டு பொருளாதாரத் தடையால் மருத்துவ வசதியின்றி நல்ல உணவின்றி மனிதரை விட பணத்தை நேசிக்கும் கொழும்பு நகரின் கட்டட நெரிசலுக்குள் வரக்காரணமான சிறீலங்கா அரசபயங்கரவாதத்தை அழிக்கப் போராடாமல் வெளிநாடு ஓடிய என்மீதுதான் எனக்குக் கோபம் வந்தது.

அப்போ ஒருநாள் பெரியமாமாவை சுவிஸ் அனுப்பிவிட்டு வந்த அம்மா….. அன்ரி உன்னைக் கொழும்புக்குக் கூட்டிவரட்டாம் வெளிநாட்டுக்குக் கூப்பிடுகிறாளாம். நீ போனியெண்டா எங்கடை குடும்பமும் நிமிந்திடும். மூத்தபிள்ளை நீதான் முடிவெடுக்க வேணும். அன்று எட்டுவயதான என் தம்பியின் முகத்தைப் பாத்து நீ முன்னுக்குப் பிறந்திருந்தா உன்ரை தலையிலை இந்த வெளிநாட்டுச் சுமையைச் சுமத்தியிருக்கலாம் என்றேன். அதற்கு அவன் சொன்னான் நான் வளந்து உளைச்சுத்தருவனக்கா இப்ப நீ போய் உளைச்சனுப்பு என்று சொல்லி. எல்லாரும் தங்கடை பிறந்தநாளை பெரிசாச் செய்யினம் எனக்குத்தானே அம்மா ஒண்டும் செய்யிறேல்லை. நீ போய் காசனுப்பு நான் என்ரை பிறந்த நாளுக்கு கேக்வெட்டி படமெடுத்து அனுப்பிறன் எனத்தன்னுள் ஆசையாய் ஊறியிருந்த விருப்பையும் சொன்னான்.

அம்மா என்னை எப்படியாவது வெளிநாடு அனுப்பிவிடும் நோக்கில் ஊரெண்டாலும் இருக்கலாம். இடம் பெயர்ந்து 2 வருசமாயீட்டுது. ஆற்றையன் கோடீக்கை எத்தினை நாளைக்கு இருக்கிறது. எப்போ இயக்கத்துக்கு ஓடிவிடுவேனோ என அந்தரித்துக் கொண்டிருந்த அம்மாவிற்கு அன்ரியின் வார்த்தை ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும். ஆயுதம் து}க்கினா நாட்டைக் கட்டியெழுப்பிற பொருளாதாரத்தை யார் தேடுறது….அதுக்கும் ஆக்கள் தேவை. நீ வெளிநாட்டுக்குப் போனால் நாட்டுக்கும் உதவலாம் நாங்களும் வாழலாம். என் மனதை மாற்றும் முயற்சியில் பலகதைகள் சொல்லி வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகியது.

நான் பழகிய போராளிகள் பழகி மாவீரரான மாவீரர்கள் ஒன்றாய்ப் படித்த தோழர் தோழிகள் படிப்பித்த ஆசிரியர்கள் யாருக்கும் சொல்லாது என்பயணம் ஏற்பாடாகிறது. எங்கே அவர்களில் யாரையாவது கண்டால் என் பயணத்தை நான் நிறுத்தி விடுவேனோ எனப்பயந்தாவோ என்னவோ. அவர்கள் யாரையும் நான் சந்திக்காமல் கவனித்தா அம்மா. கடைசியாக ஒரு செவ்வாய் துர்க்கையம்மனுக்கு போயிருந்த போது என்வகுப்பு நண்பர்களான மதி மனோ தயாளன் கதிர் பன்னீர் சுதாவைச் சந்தித்த போது அவர்களுக்கு என்பயணத்தைச் சொல்ல முடியாது தங்கை வினோதினியுடன் துர்க்கையம்மனைக் கும்பிட்டுவிட்டு அரிச்சனை செய்ய நின்ற இடத்துக்கு வந்த மதி என்ன ரியூசன் விட்டவுடனை மறந்திட்டீரோ எனக்கேட்டான். இல்லை என்றேன். எங்களை மறக்காதையும் என்றுவிட்டுப் தன் அரிச்சனை விபூதியில் எனக்கும் பூசத்தந்து விட்டுப் போனான் மதி.

அது ஆனையிறவுச்சமர் நிகழ்ந்த நாட்கள். வாணி ரியூசனில் எங்கள் வகுப்பு மாணவர்களும் தேவதாஸ் மாஸ்ரரிடம் அனுமதி வாங்கி ஆனையிறவுச் சமாக்;களத்தில் நிற்கும் போராளிகளுக்கு உலர் உணவு தயாரிப்பிலும் மண்மூடைகள் கட்டுவதிலும் கவனமாயிருந்த ஒரு பொழுது மதி உட்பட அனைத்து மாணவர்களும் இருந்தோம். அப்போ மதி சொன்னான் இப்பிடி இண்டைக்கு ஒண்டா எவ்வளவு சந்தோசமா இருக்கிறம். நாளைக்கு திக்குத் திக்கா ஒவ்வொருத்தரும் போகேக்கை எப்பிடித் தாங்கப் போறம் எனக்கவலையுடன் சொல்ல நான் முந்தியடித்துக் கொண்டு பயப்பிடாதையும் மதி நான் கலியாணங்கட்டி என்ரை பிள்ளையை துர்க்கையம்மனுக்குக் கூட்டிவந்து உம்மை அறிமுகப்படுத்துவன். பிள்ளை இந்தமாமா அம்மாவோடை படிச்ச மதிமாமா இவருக்கு கலோ சொல்லுங்கோ எண்டு அறிமுகப்படுத்தும் சாந்தினி. என்றான் மண்மூடை கட்டிக் கொண்டிருந்த பன்னீர். பன்னீர் உம்மை எப்பிடிச் சொல்லுவன் தெரியுமே அம்மாவோடை படிச்ச பாட்டுக்காரப் பன்னீர்மாமா இவர்தானெண்டு அறிமுகப்படுத்துவன் என்றேன். எல்லோருமே சேர்ந்து சிரிக்க தயா சொன்னான் ஒரு நாளைக்கு எங்களைப் பிரியேக்கை அழுவியள். வீட்டாருக்குத் தெரியாமல் அவர்;களுடன் துர்க்கையம்மன் போனதும் மருதடி போனதும். அளவெட்டி பெனாக்காக் குளத்திலிருந்து யாழ்மண்ணின் அனேகமான ஊரெல்லாம் சுற்றிய அந்த நினைவுகளை அந்த இனியவர்களையெல்லாம் பிரிந்து தொலைவாய் பறக்கும் அந்தக் கொடியநாள் விடிந்தது.

பயணம் புறப்படவிருந்த அந்த இறுதிநாள் அதுதான். முதல் நாளிரவு அப்பாவுடன் சிறுவாக்குவாதம் கதைக்கவில்லை. சிறுசிறு கோபங்களிற்காக அப்பம்மா வீட்டிற்கும் போகவில்லை. மணிமாமி வீட்டிற்கும் போகவில்லை. மாலினிமமாமி வீட்டிற்கும் போகவில்லை. மொத்தத்தில் என் நண்பர்கள் உட்பட அப்பாவின் உறவுகள் யாரையும் பார்க்காது. அன்று புறப்பட்டுப் புலம் பெயர் நாட்டில் அடிமை வாழ்வு வந்த பின்தான் சிறுசிறு கோபங்களுக்காக கோபம் போட்டு சண்டை பிடித்து கதைக்காமல் விட்டு எந்தப்பலனையும் காணவில்லை என்பது மெல்ல மெல்லப்புரிய நான் அழுத இரவுகள். எல்லாமே அந்தக்கணத்தில் காட்சிகளாகிவிரிந்து மறைய அப்பப்பாவிற்குப் பக்கத்தில் போயிருந்து என்னை அடையாளப்படுத்துகிறேன். நான் தன்னருகில் இருப்பதில் அப்பப்பாவுக்கு எந்த ஆரவாரமும் இல்லை. அழுது கொண்டே இருந்தார்.

அப்பப்பாவும் அப்பம்மாவும் சண்டை பிடித்ததை நான் கண்டதேயில்லை. எப்போதும் இருவரும் ஒன்றாயே திரிவார்கள். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சு10ழ இருந்த நாட்களில் கூட அப்பப்பாதான் அப்பம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம். அப்பம்மாதான் அப்பப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம். தங்களுக்குத் தாங்களே எல்லாமுமாக இருந்தவர்கள். அப்படியிருந்த அப்பப்பா இன்று அப்பம்மாவை இழந்து தனித்துவிட்டேன் எனப்புலம்புவதில் ஞாயமிருக்கிறது. ஏன் கொடிய புற்றுநோய் அப்பம்மாவைத் தின்றது.

அப்போது வெளியில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து அப்பம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் மலரன்ரியும் பொன்னம்பலம் மாமாவும் இறங்கி வந்தனர்.மலரன்ரி நல்லா மெலிஞ்சிருந்தா. முன்பு நான் பாத்த மலரன்ரிக்கும் இப்பத்தைய மலரன்ரிக்கும் நிறைய வித்தியாசம். ஆனால் முந்தைய அமைதியான சுபாவம் இன்னும் மாறது இருந்தது.

மாலினி மாமி வாசலிலேயே போய் அழுதா. அப்பம்மாவின் கட்டிலடியில் வந்து நின்று அவர்கள் மௌமாய் நின்று விட்டு இருந்தார்கள். மலரன்ரி என்னைப் பார்த்துவிட்டு எப்பிடி வெளிநாடு என்றார். போகுது என்றேன். அப்பம்மாவை வாகனம் ஒன்று வந்து து}க்கிக் கொண்டு போனது. அப்பம்மாவின் அறைமுழுவதும் என்னைச் சுற்றிய முகங்கள். குடுத்து வைச்சனீங்கள். ஆருக்கும் கிடைக்காதது. என்றா மலரன்ரி. என்னத்தைக் கிடைச்சு இந்த நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நாளையிரவு விடிய போப்போறன். என்னுள் சலித்துக்கொள்கிறேன்.

மலரன்ரியின் மூத்தவள் மகிழ்நங்கை. மற்றமகள் வாசுகி. மகன் கடைசி மகள் பற்றி விசாரித்தேன். நங்கை றைசியாவிலை மெடிசின் படிக்கிறாள். தம்பி அமெரிக்காவிலை. மற்றவள் படிக்கிறாள். என்ற மலரன்ரியின் விழிகள் மெல்ல ஈரமாகிறது. பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்தால் பெற்றவர்கள் நிம்மதியாகவா இங்கு இருக்க முடியும் ??? அதுதான் மலரன்ரியும் விழி கலங்குகிறாவோ நினைத்துக் கொள்கிறேன். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டா மலரன்ரி எப்பிடி வன்னியிருக்கு ???? ஏனடா கொழும்புக்கு வந்தனெண்டிருக்கு மலரன்ரி. பத்துவருசத்துக்குப் பிறகு அந்தமண்ணை மிதிச்சதும் ஏதோ பெரிய சந்தோசம். இனம்புரியாத உணர்வுகள். இடிந்து நொருங்கின கட்டடங்கள். உறவுகளை இழந்து தனிச்ச குழந்தையள் பெரியாக்கள். பிள்ளையளை மாவீரர் துயிலுமில்லத்திலை விதைச்சிட்டு அதுகளின்ரை நினைவுகளோடையே நாடு எப்பவிடியுமெண்டு காத்துக் கிடக்கிற மனிசரெண்டு எல்லாச் சனத்திட்டையும் நாடு தேவையெண்ட தெளிவும் இனி எதுவந்தாலும் தாங்குவமெண்ட உறுதியும் எல்லாத்தையும் விட இவ்வளவு பொருளாதாரத் தடையளுக்கையும் எங்கடை விருந்தோம்பல்ப் பண்பாடு இம்மியும் குறையாம….அந்த முகங்களிலை ஒரு வெளிச்சமிருக்குது…. உண்மையிலேயே அந்த மண்ணையும் அந்த மனிசரையும் விட்டிட்டு வந்தது மனசு பெரிசா எதையோ இழந்தமாதிரியான உணர்வோடையிருக்குது என்றேன். எங்கடை முருகனும் முல்லைத் தீவிலைதான் இருக்கிறான் என்றா மலரன்ரி. அயல் வீட்டு அன்ரி நாங்கள் கதைத்ததைச் சற்றுக் கேட்டுக்கொண்டு இருந்துவிட்டுக்கேட்டா அப்ப என்ன பிரச்சனை தீருமே…? தீந்தா நாங்களும் ஊரிலைபோய் நிம்மதியாய் இருக்கலாம் என்றேன்.

இலங்கை அரசு எந்த நேரம் என்ன முடிவெடுக்குமென்பது யாருக்குத் தெரியும். எங்கள் மக்கள் இந்த இடைக்கால அமைதியைப் பெரிதாய்த்தான் நம்பியிருக்கிறார்கள். இந்த அமைதி நீடிப்பதும் தமிழரும் சிங்களவரும் நிம்மதியாய் வாழ்வதும் இலங்கை அரசின் கையிலே உள்ளதை இந்த அன்ரி அறிந்திருக்க நியாயமில்லைத்தான்.

எல்லோரும் விலகிப்போக மலரன்ரிதான் என்னருகில் மிஞ்சியிருந்தா. நங்கையின்ரை ரெலிபோன் நம்பர் தாறீங்களேயன்ரி போய்க் கதைக்கிறன். இப்ப இல்லை. நாளைக்குத் தாறன் என்ற மலரன்ரி அங்காலும் இங்காலும் பார்த்து விட்டு மெல்லச் சொன்னா என்ரை ரண்டாவது மகள் இயக்கத்திலையிருந்து ஓயாதலை மூண்டிலை செத்துப் போட்டாள். அப்போதை ஆக்கள் இருந்தாப்போலை தான் நான் சொல்லேல்லை. ஓ…அப்போது மலரன்ரி பிள்ளைகளைப் பற்றிச் சொன்ன போது இமைகள் நனைந்தாவே அதற்குக் காரணம் இதுதானோ???

எப்பவன்ரி இயக்கத்துக்குப் போனவள். அவள் நாங்க கோண்டாவிலிலை இருக்கேக்கை போனவள் நான் கனதரம் போய் அழுதனான் ஆனா அவள் வரேல்லை. மூண்டு பிள்ளை உங்களுக்கு இருக்குத்தானேயம்மா. ஒராள் நாட்டுக்காகப் போராடட்டுமன். அண்ணையின்ரை காலத்திலை நாங்கள் எங்கடை நாட்டைப் பெறவேணுமம்மா. நீங்க இனிமேலைக்கு என்னை வீட்டை வாவெண்டு கூப்பிட்டு வரவேண்டாம். வீட்டை வரச்சொல்லி வாறதெண்டா இஞ்சை வரக்குடாதெண்டு சொல்லித் திருப்பி விட்டவள். அதோடை நானும் வாவெண்டு கேக்கேல்லை. மற்றப்பிள்ளையளைக் கூட்டிவந்து கொழும்பிலை படிக்கவிட்டம் பிறகு நங்கைக்கு றைசியாவுக்கும் தம்பிக்கு அமெரிக்காவுக்கும் படிக்க வாய்ப்பு வந்திது அனுப்பீட்டம். இளையவள் தான் இப்ப இஞ்சை எங்களோடையிருக்கிறாள். நங்கை அடுத்த வருசம் படிப்பு முடியுது திரும்பி வாறாள் என்று தன்பிள்ளைகள் பற்றிக் கூறிமுடித்த மலரன்ரி எனக்கு வாசுகீன்ரை நினைவுதான் மறக்கேலாமக் கிடக்குது. அவளை செத்தாப்பிறகும் பாக்கக் கிடைக்கேல்லை. நாங்க இஞ்சையிருந்து உடனை போகவும் முடியேல்லை. மாமன்ரை விலாசம்தான் குடுத்தவளாம். அங்கைதான் இயக்கம் குடுத்து காரியம் நடந்ததாம். எனக்கென்னவோ என்ரை பிள்ளை உயிரோடை எங்கேனும் இருப்பாளெண்டுதான் உள் மனம் சொல்லுது. அப்பிடி அவள் ஒரு நாளைக்கு வந்து அம்மாவெண்டு கூப்பிடுவளெண்டுதான் நம்பிறன். என்றபடி விம்மியழுதா.

வாசுகி ! படிப்பில் அக்கா நங்கைக்கு நிகராக வலுகெட்டிக்காரி. பத்துவருடத்துக்கு முன் நான் பார்த்த வாசுகியின் முகம் ஒரு தரம் என் கண்களில் வந்து போனது. இப்படி இன்னும் எத்தனையுறவுகளை நான் இழந்து விட்டேன். இன்னும் எத்தனை பேரின் சாவுகள் அறியாமல் இருக்கிறேனோ…. இனி வருவோர் யாராவது சொன்னால் தான் தெரியும்.

அவள் நல்லாக் கவிதையள் எழுதுவாள் தமக்கைமாதிரி நல்லகெட்டிக்காரி. அவளின்ரை வீரச்சாவுப் படம்கூடப் பாக்கேல்லை. மீண்டும் தன் மகளின் கெட்டித்தனத்தையும் சொல்லி வேதனையையும் சொல்லி விம்மினா மலரன்ரி. இயக்கப் பேரென்னன்ரி. அமுதா. மேஜர் அமுதா. என்றா மலரன்ரி. மேஜர் அமுதா அவளா எங்கள் வாசுகி. என்னைக் கவர்ந்த அமுதாவின் கவிதை ‘தமிழீழம் நாளை நம் நாடு” விடுதலைக்காய் என்ற சிறுகதையும் என் நினைவுகளில் வந்து போனது. என் உறவுக்காரியின் கைகள் வடித்தவைதான் அந்த அருமையான கவிதையும் கதையும் என்பது ஏன் எனக்குத் தெரியாது போனது??? அதைவிட வன்னியில் என்தோழியும் நானும் அமுதாவைப்பற்றிக் கதைத்தபோது அவளது கல்லறையை அஞ்சலித்த போது எனக்கு அமுதாவை யாரென்று அடையாளம் காணமுடியவில்லையே!!!

தன் மகள் என்றாவது ஒருநாள் திரும்பி வரலாம் எனும் நம்பிக்கையில் இருக்கும் மலரன்ரியிடம் உங்கள் மகளின் கல்லறையைப் பார்த்தேனன்ரி. உங்கள் மகளின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். உங்கள் மகளின் கதையைப் படித்திருக்கிறேன். உங்கள் மகள் இனி வரமாட்டாள். அவள் எங்களது மண்ணில் விதையாய் வீழ்ந்து போய் விட்டாள் இனி அவள் வரும்நாள் எங்கள் தேசத்தின் விடியலின் பூபாள ஒலியில்தான் என்று எப்படிச் சொல்வது ???? எங்களது விடியலுக்காக தன் மகளைக் கொடுத்து விட்டு விம்மியளும் இந்தத் தாயின் நம்பிக்கைக் கோட்டையின் மீது நான் இடிவிழுத்த விரும்பவில்லை. ஓமன்ரி வீரச்சாவெண்டு பிறகு திரும்பியும் வந்திருக்கினமெண்டு அறிஞ்சிருக்கிறம் தானே. இனி என்னேயிறது இருக்கிற மற்றப் பிள்ளையளுக்காக நீங்கள் யோசிக்காமல் இருக்க வேணும். என்னால் முடிந்த ஆறுதல் வார்த்தையது.

இப்படி எத்தனை பேர் தங்கள் பிள்ளையின் வீரச்சாவைக் கூட அறியாது இருக்கிறார்கள். இதைவிட இந்தச் சிங்கக் கோட்டைக்குள் தன்மகனுக்குத் தானே வேவு பார்த்து காற்றோடு பிள்ளை கரைந்தும் தமிழரின் விடியலுக்காக அந்தக் கொடிய வேதனையையும் தாங்கிக் கொண்டிருக்கிற தாய்போல…. திரு.பொட்டம்மான் அவர்கள் எழுதிய தாயகத்தின் தாயைப் போல தாயகத்தின் தந்தைபோல எத்தனை வீரத்தாய்களும் தந்தைகளும் எமது தேசத்தில் வாழ்கிறார்கள். இத்தகைய வரலாறு எங்களுக்குத் தான் தமிழர்களாகிய எங்களுக்கு மட்டுமே சொந்தம். இந்த வரலாற்றுக்கு எங்கள் தேசமும் தேசத்து மக்களும் போராளிகளும் செய்த தியாகங்கள் எத்தகைய பெரியது !!!! இந்தத் தியாகத்தை தற்கொடையை புலத்தில் வாழும் எம் தமிழரில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம். புரிந்திருக்கிறோம். என்றால் பாதிப்பேரின் தொகை கேட்கும் கேள்வி ஓ..அப்பிடியா….அவ்வளவே…. மிஞ்சிப்போனால் கேக்கக் கவலையாக் கிடக்கு என்பார் சிலர்.

இதில் பெரும்பகுதி ஒன்று உள்ளது. புலம் பெயர்ந்து 15 அல்லது 20 வருடங்களைத் தாண்டியிருக்கும் இந்தத் தியாகங்களின் பெயரை வைத்துத் தம் இலக்கியப் பணிவளர்ப்பதும் காற்றாகு கடலாகு கரும்புலியாகு கவிதை படிப்பதிலும் காட்டும் வீரத்தை நாட்டுக்கு ஒரு சதம் தாருங்கள் எனப்போனால் அய்யோ எங்களுக்குச் சரியான கஸ்ரம். சொந்த வீடு வாங்கியிருக்கிறோம் காசுகட்டுறம் நாட்டுக்குத் தரமுடியாமல்க் கிடக்கு எனும் சளாப்பல்களும். எனது மதம் தமிழீழ விடுதலைப்போரை ஏற்கவில்லை. இது பெரும் வன்முறை யுத்தம் ரத்தம் சிந்தும் கொடுமையைப் புலிகள் செய்கிறார்கள் என்று மதவெறித்தனம் பிடித்து தன் மதம் விட்டு இன்னொரு மதத்துக்கு தாவி உபதேசம் செய்தபடி எழுத்தில் மட்டும் தமிழீழம் என்பதை வீராப்பாய் எழுதி வானலைகளில் வந்து முழக்கும் வியாபாரிகள். புகள் தேடிஅலையும் இந்தப் பேய்களுக்கும் தமிழீழம் எனும் புனித பூமியின் வரலாற்றின் பின் புதைந்திருக்கும் வலிகள் ஏனோ புரியமறுக்கிறது.

சரி நாங்க போட்டு நாளைக்கு வாறம். ஏலுமெண்டா எங்கடை வீட்டை நாளைக்கு வாறீங்களே. கேட்ட மலரன்ரிக்கு ஓம் எனத்தலையாட்டுகிறேன். மலரன்ரி போய் விட்டா. ஆனால் என் மனம் அவவையே சுற்றிக் கொண்டு இருந்தது.

அன்றைய இரவு முழுவதும் ஒரே தொலைபேசி அழைப்புகளும் அழுகையும் தான். பகல் முழுவதும் வெயிலில் திரிந்ததோ என்னவோ ஒரே தலையிடியாயிருந்தது. எனது சுடிதாரின் தாவணியை விரித்து அப்படியே து}ங்கிப் போகிறேன்.

காலை விடிந்து 7 மணிதாண்ட ஆட்கள் வந்து போகத் தொடங்கினார்கள். கரன் மச்சானும் கஜன் மச்சானும் தான் அங்குமிங்கும் ஓடியோடித் திரிந்து அலுவல்களைக் கவனித்தார்கள்.அப்பம்மாவின் காரியங்களை முன்நின்று நடாத்தும் பொறுப்பு 20 வயதான கரனிடமும் கஜனிடமுமே போயிருந்தது. ஊரில் என்றால் எத்தனை பெரியவர்கள் இங்கு…. இந்தக் கொழும்பு நகரில் எந்த நாதி எமக்காக…..

அங்கு வந்தவர்களில் பலருக்கு என் மீதே கண்ணிருந்தது. என்னருகில் வந்திருந்த ஒரு அன்ரி என் அம்மா அப்பாவைத் தெரியும் என்று என்னுடன் பேச்சை ஆரம்பித்து கேக்கிறனெண்டு கோவிக்காதையும் பிள்ளை நீர் ஜேர்மனியிலையும் உப்பிடித்தான் இருக்கிறனீரோ ? எப்பிடி ? புரியாது கேட்ட எனக்கு நகையொண்டும் போடாமல் மேக்கப் ஒண்டும் போடாமல் இப்பமாதிரி சிம்பிளாவே…எனத் தொடர்ந்தார் அந்த அன்ரி. சாவீட்டில் இந்தக் கவனிப்புகளுக்கும் குறைவில்லை. அந்த துயர் நிகழ்விலும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. வெளிநாட்டிலிருந்து வந்தால் என்ன புதிதாகக் கொம்பா முளைக்கும். நான் பிறந்தது வளர்ந்தது 18 வயது வரையும் வாழ்ந்தது ஈழத்தில்தானே. இந்தப்பத்து வருடம் என்னை என்ன மாற்றிவிட்டது. சிலருக்கு நகையணியப் பிடிக்கும் சிலருக்கு மேக்கப்பண்ணப் பிடிக்கும். எனக்கு இவை விருப்பமில்லை. இதைவிட வேறு என்ன காரணமும் என்னிடம் இல்லை. ஆனால் இங்கு நான் வந்ததிலிருந்து பலர் கேட்ட கேள்விகளில் இதுவும் சேர்ந்தே இருந்தது. என்னால் புரியவே முடியாத புதிராய் இருக்கிறது ஏன் இப்படிக் கேட்கிறார்கள்….?

என் உறவுகள் சிலருக்கு என்னை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அறிமுகம் செய்யவே பெரும் கஸ்டமாக இருந்தது. ஏனென்றால் நான் நகைகள் போடவில்லையாம். வித்தியாசமாக நினைப்பார்களாம் என்னை. எனக்கு இவர்களின் இந்தப் போலித் தனங்களுக்கெல்லாம் தலையாட்ட வேண்டியது அவசியமாக இருக்கவில்லை. ஏனென்றால் நான் எனது விருப்பின்படியே வாழவிரும்பும் மனசி. மற்றவர்களின் வரட்டுக் கௌரவத்திற்கெல்லாம் அஞ்சி நடுங்க விருப்பில்லை. என்னபிள்ளை சிரிச்சுப்போட்டு இருக்கிறீர் ? மீண்டும் சிரித்துவிட்டு பேசாமல் வெளியே போனேன். என்ன அறுவையிது என் விருப்பு வெறுப்புக்களையெல்லாம் அறியத்துடிக்கும் கேள்வி. என் விருப்பு வெறுப்புப் பற்றி விடுப்பறியக் காத்திருந்த அந்த அன்ரியின் முகத்தைப் பார்ப்பதைத் தொடர்ந்து தவிர்த்துக் கொள்கிறேன்.

பறைமேளம் இடையிடை தன் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தது. ஐயர் ஏதோ மந்திரம் சொல்ல அவருக்கு ஒரு உதவியாளன் மணியடித்து சங்கூதிக் கொண்டிருந்தான். அடிக்கடி தன் உரத்த குரலால் அப்பாவை உறுக்கிக் கொண்டிருந்தார் ஐயர். அப்பிடி நில் இப்பிடிச் சுண்ணமிடி. அந்தப்பக்கத்தாலை வா எனும் கட்டளைகள். இந்தச் சடங்குகள் செய்யாவிட்டால் அப்பம்மா அமைதியடைய மாட்டாவா?? ஐயரைக் கேட்கவேண்டும் போலிருந்தது. சடங்கு எனும் பேரில் ஐயர் ஒவ்வொரு துரும்பை எடுக்கவும் சில்லறைகளைக் கேட்டு வாங்கித்தன் சால்வைக்குள் போடுவது ஏன் ? இதுதான் சம்பிரதாயமா….?

வாய்க்கரிசி போடுறவை வாங்கோ மக்கள் முதல் பிறகு பேரப்பிள்ளைகள்….ஐயரின் இந்தக்குரலுக்கு அப்பா உட்பட எல்லோரும் வரிகையாகப் போய் நின்று ஐயரிடம் அரிசியை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அரிசிபோடப்போட ஐயரின் உதவியாளன் ஒவ்வொரு வெற்றிலையிலும் இருந்த சில்லறைகளை எடுத்துக் கவனமாக்கினான்.

பேரப்பிள்ளையள் வாங்கோ பந்தம்பிடிக்க அதுவும் ஐயரின் அழைப்புத்தான். நான் பிறேமினி கரன் மச்சான் கஜன் மச்சான் தயாமச்சாள் 5 பேரும் அப்பம்மாவுக்கு பந்தம்பிடிக்க வரிசையாய் நிற்கிறோம். ஐயரின் உதவியாளன் பந்தங்களை எமக்கு ஒவ்வொருவராகக் கொழுத்தித் தருகிறான். தயாமச்சாள் அழுதழுது தேவாரம் பாடியபடி பந்தம் பிடிக்கிறாள். மணிமாமி மாலினி மாமி விம்விம்மியழுகிறார்கள். அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. அப்பப்பா அழுதழுது தேவாரம் படிக்கிறார். என்விழிகளிலிருந்தும் நீர்த்திவலைகள் சொரிந்து கொண்டிருக்கிறது.

அப்பம்மா பெற்ற 8 பிள்ளைகளில் புண்ணியன் சித்தப்பா 1987 இல் இந்திய வல்லு}றுகளின் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்து இறந்து விட்டார். கண்ணன் சித்தப்பா இந்தியாவில் பாலன் சித்தப்பா மலர்மாமி சிவாமாமி கனடாவில் ;இன்று அப்பம்மாவுக்கு கடமை செய்ய கண்ணீர் வடிக்க மூன்று பிள்ளைகள் தான் நிற்கிறார்கள். நாங்கள் பேரப்பிள்ளைகள் 21 பேரில் இன்று 5பேர் மட்டுமே நிற்கிறோம். இப்படி எத்தனைபேரின் மரணங்கள் கூட நிம்மதியானதாகவோ நிறைவானதாகவோ இல்லாத வாழ்வு தழினுக்கு விதியாகிப் போய் விட்டதையெண்ணிக் கலங்கினேன்.

அப்பம்மாவுக்காவது நாங்கள் 5 பேராவது நிற்கிறோம். 3 பிள்ளைகளாவது நிற்கிறார்கள். என் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ ஏதாவது ஒன்று நேர்ந்தால் பந்தம் பிடிக்கப் பேரப்பிள்ளைகளும் இல்லை. பிறேமினியைத் தவிரப்பிள்ளைகளும் நிற்கமாட்டோம். என் அம்மாவும் அப்பாவும் அந்தரித்து எங்களின் கடமையுமின்றி நாளை இந்தக்கொழும்பில் முடிந்து போனால் கொள்ளிபோடத் தம்பி வரமாட்டான். நானும் வினோதினியும் எங்கள் பிள்ளைகளைக் கொண்டு வரக்கிடைக்குமோ தெரியாது. அனாதைகளாக என் அப்பாவும் அம்மாவும் இறந்து முடிய நாங்களும் அப்பம்மாவின் முகத்தைக் கூடப்பார்க்கக் கிடைக்கவில்லையே என்று கனடாவிலும் இந்தியாவிலும் இருந்து அந்தரிக்கும் சித்தப்பாமாரைப் போலவும் மாமிமாரைப்போலவும் ஆயுள் உள்ளவரையும் அழுது தொலைக்கப் போகிறோமா….???? கண்டிறியாத வெளிநாடு பேசாமல் இதுகளோடை வந்து இருந்திடலாம் போலையிருந்தது. அம்மாவையும் அப்பாவையும் நினைக்க மனம் ஏதோ அந்திரித்துக் கொண்டிருந்தது.

அப்பம்மாவின் உடலை மயானம் கொண்டு செல்ல ஆயத்தமாகிச் சவப்பெட்டியை மூடஆயத்தமானார்கள். எல்லோர் கதறலும் ஒருகணம் மனதைக் கலவரப்படுத்தியது. அப்பப்பா பெலத்து அழுதார் கொழுத்தப் போறாங்களணை உன்னைக் கொழுத்தப் போறாங்களணை…..என அப்பம்மாவின் முகத்தைத் தடவித்தடவிச் சொல்லிக் கொண்டு நின்றார்.

அப்பம்மாவின் உடல் மயானம் நோக்கிய ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்தது. எல்லோரும் வாசல் வரையும் போய்அழுதுகொண்டு நின்றார்கள். நான் மட்டும் அப்படியே நின்ற இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்கு மேல் நகர்ந்து போக என்னால் முடியவில்லை. ஏதோ மனசெங்கும் அந்தரிப்பாய்…..

நாளை எனக்குத்தன்னும் ஒன்று வெளிநாட்டில் நடந்தால் வந்து பார்க்கவோ கண்ணீர் விடவோ ஒரு நாதியில்லை. அப்பம்மாவை விட மோசமான முறையில் என் பிணம் அனாதையாகப் போகும். என் பிள்ளைகள் அங்கே பிறந்தவர்கள் இங்கத்தைய சாத்திரம் சம்பிரதாயம் எதுவும் தெரியாது. அனாதைகளாக அவர்களும் எனக்குப் பிள்ளையாகப் பிறந்தபாவத்திற்காக….

அவர்கள் இங்கு வருவதற்கான வீசாவும் இல்லை. அங்கும் ஒட்டாது இங்கும் ஒதுங்க முடியாது தவிக்க…..நான் அனாதையாய் செத்துவிடக் கூடாது கடவுளை வேண்டினேன். எனது மண்ணில் எனது சாவு நிகழவேண்டும். அது எனது பிள்ளைகளின் அருகாமையாகவும் என் உறவுகள் சு10ழ்ந்து கண்ணீர் வடிக்க நான் சாகவேண்டும். இறைவனே எனக்கொரு வரம் கொடு அனாதையாய் என் அன்னையும் வேண்டாம். அனாதையாய் என் தந்தையும் வேண்டாம். அனாதையாய் என் பிள்ளைகளும் வேண்டாம். நிம்மதியாய்ச் சாக என் நிலத்தில் வாழும் நாள் விரைவில் வரவேண்டும். அதுவரை நான் சாகக்கூடாது. வாழவேண்டும்.

அன்று மாலை அப்பம்மாவின் காரியம் எல்லாம் முடிந்துவிட்டது. எல்லோரும் ஒன்றாய்க் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பப்பா மட்டும் அப்பம்மா நேற்றுவரை படுத்திருந்த கட்டிலின் அருகில் நின்று அழுது கொண்டேயிருந்தார். அடுத்த வருசமெண்டாலும் உன்ரை பிள்ளையளை ஒருக்கால் கொண்டு வந்து காட்டிப்போட்டுப் போ. நாங்களும் எந்த நேரம் கண்மூடுறமோ தெரியாது. அப்பா சோகமாய்ச் சொன்னார். எனக்கு மட்டும் என்ன விருப்பமில்லையா ??? அம்மம்மா அம்மப்பா அப்பம்மா அப்பப்பா சித்தி மாமா உறவுகளை என் பிள்ளைகளுக்குக் காட்டத்துடிக்கிறேனே!!! இதை எப்படி உங்களுக்கு விளக்குவேனப்பா!!! எந்த உறவுகளினதும் தொடர்புமின்றி அம்மா அப்பாவைத் தவிர எந்த உறவுகளையும் அறியாமல் வாழும் என் பிள்ளைகள் உங்களுடன் உறவாடும் அந்த இனிய நாளுக்காகத்தானே காத்திருக்கிறேனப்பா!!! சொல்லத் துடித்த உதடுகள் ஊடே வார்த்தைகள் வெளிவர மறுத்து தொண்டைக்குள் விழுங்கப்படுகிறது.

சிலோவன்ரி எல்லோருக்கும் சோறுகுளைத்துக் கொண்டு வந்து கூப்பிட்டா. பெரியமச்சாள் என்ன யோசினை வாங்கோ நாளைக்கு விடியப்போகிடுவீங்கள் பிறகு இப்பிடிச் சேந்து சாப்பிடக் கிடைக்காது வாங்கோ என அழைத்தான் கரன் மச்சான். சிலோவன்ரியைச் சு10ழ்ந்து எல்லோரும் சோறுசாப்பிடத் தொடங்கினோம். அந்த மெல்லிய மெளுகுவர்த்தி வெளிச்சத்தில் என் விழிகள் அழுதன. அது யாருக்கும் தெரியாது. சின்னனில் அம்மம்மாவிடம் சுற்றியிருந்து சோறு சாப்பிட்டது. அப்பம்மாவைச் சுற்றியிருந்து சாப்பிட்டது….என பழைய ஞாபகங்கள் வந்து வந்து போனது. ஊறுகாயை ஒரு கையில் வைத்துக்கொண்டிருக்க கரன் அதைப்பறித்துத் தன் வாயில் போட்டுச் சொன்னான் சிலோமாமி ஊறுகாயும் சோறும் நல்லாயிருக்கு. அடபாவி எனக்கெங்கேடா ஊறுகாய்…அது என்ரை வயித்துக்கை போட்டுது என்று சிரித்தான். சிலோவன்ரியின் குழையல் சாப்பாடு நீண்டகாலத்துக்குப் பிறகு ஏதோவொரு புத்துணர்வைத் தந்து கொண்டிருந்தது. நாளை இதே நேரம் ஜேர்மனியில் இருப்பேன். இந்த இனிதான நினைவுகளோடு…..

சாப்பாடு முடிந்து கூடியிருந்து புதினங்கள் கதைத்து நித்திரை து}ங்கினா மாலினிமாமி. என்னம்மா நித்திரை து}ங்குறியள் எழும்புங்கோ நாளைக்கு விடிய சாந்தியக்கா போகப்போறா பிறகினி எப்ப வாறாவோ தெரியாது. இண்டைக்குத்தானே கொஞ்சம் பிந்திப்படுக்கலாம் என்று தாயை எழுப்பினான் கரன் மச்சான். ஆம் நான் நாளைக்குப் போய்விடுவேன் ரமேசுடன் என் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என் குழந்தைகளிடம் நான் போய்விடுவேன். இன்றைய இந்த இனிமை நாளையிலிருந்து எனக்கு இல்லை. சற்றுநேரக் கலகலப்போடு பெரியவர்கள் உறங்கிப் போக நான் பிறேமினி கரன் மச்சான் கஜன் மச்சான் முந்தைய நினைவுகளை மெல்ல மீட்டிக் கொண்டு படுத்திருந்தோம். பேய்வந்த கதை. பயந்து ஒளிந்த கதை. கரன்மச்சான் கஜன் மச்சானின் காதல்க்கதைகள் எல்லாம் கதைத்துத் து}ங்கிவிடுகிறோம்.

மறுநாள் 24.02.02 காலை. என்னை விமானநிலையம் ஏற்றிப்போக கரன்மச்சானும் கஜன் மச்சானும் வானோடு நின்றார்கள். என்னால் முடியவில்லை. சிலோவன்ரி பிள்ளைகள் மாமா மாலினிமாமி மணிமாமி அப்பப்பா அப்பா எல்லோரும் என்னை வழியனுப்ப வாசல்வரையும் வந்து நிற்க வாகனத்தில் ஏறுகிறேன். கஜன் மச்சானும் பிறேமினியும் பின் இருக்கையில் அமர கரன்மச்சான் என்னருகில் வந்து இருக்க வாகனம் புறப்படத் தயாராகிறது. அதுவரையும் பேசாமல் நின்ற அப்பா என் கைகளை எட்டிப்பற்றி அழுதார். அடுத்த வருசம் பிள்ளையளைக் கொண்டு வந்து காட்டு என்ன…. எல்லோர் விழிகளும் நீர் முட்ட வாகனம் புறப்படுகிறது. அவர்கள் மறையும் வரையும் என் கைகள் அசைகிறது.

ஊராயுமிருந்து அய்யம்மாவும் சாகாமல் நீங்களும் நிண்டமாதிரிக்கு எவ்வளவு சந்தோசமா இருந்திப்பம். காலம் எங்களுக்கு கைதரேல்லை. ராத்திரி முழுதும் எவ்வளவு பன்பலடிச்சம் இனி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடம் போகப்போறம் என்ன சாந்தியக்கா சொன்னான் கரன் மச்சான். அவனை நிமிர்ந்து பார்த்தேன். அவனும் அழுவதற்குத் தயாராய் இமைகள் நனைந்திருந்தது. இவன் நான் கட்டுநாயக்காவில் வந்து இறங்கியவுடன் என் முதுகில் குத்தி என்ன தெரியுதா என்னை என்ற போது….அவனை அடையாளம் தெரியாமல் முழித்த எனக்கு கரன் மறந்திட்டீங்களே என்று சிரித்தவன். இன்று நான் போகப்போகிறேன் என்று விழிகலங்கி….

சோதனைகள் தாண்டி என்னை கரனும் கஜனும் பிறேமினியும் விமானநிலைய வாசல் வரைவந்து வழியனுப்பி விழிகள் நனைய நிற்க நான் உள்ளே போகிறேன். திரும்பிப்பார்க்கவே இல்லை. நடக்கிறேன் நான். என் இமைகள் அதுவரை பொத்தி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் என் அனுமதியின்ரி கன்னங்கள் வழியே வழிந்து கொண்டிருந்தது. இன்நிமிடத்தலிருந்து எனக்கு மிஞ்சப்போவது இந்நிமிடம் வரை என் உறவுகளுடனான நினைவுகள் மட்டுமே…..

– சாந்தி ரமேஸ் வவுனியன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *