(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பொன்னம்மாள் துபாயிலிருந்து மகன் எழுதிய கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்தாள். கண்ணாடி போட்டிருந்த பிறகும், சில வார்த்தைகள் புரியாமல் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, “என்ன அத்தாச்சி, மாமன் என்ன எழுதியிருக்காங்க?” என்றவாறு வீட்டின் உள்ளே வந்தாள் சித்ரா.
“அவனுக்கென்ன மகராசன் மாதிரி இருக்கேன்ணு எழுதியிருக்கான். ஆமா, உனக்கு ஏதோ சேலை எல்லாம் கொடுத்து அனுப்பி யிருந்தானாமே?” என்று கேட்டாள் பொன்னம்மா, தன் மகள் வயிற்று பேத்தி சித்ராவிடம்.
“என்னைக் கட்டிக்க போறவுக. சேலை எல்லாம் அனுப்பத்தான் செய்வாக” என்று அழகு காட்டினான் சித்ரா.
“கல்யாணத்துக்கு முன்னாடியே எம் மகனை வளைச்சுப் போட்டுட்டே! எங்களுக்கு ஒரு மவன்தான், மகராணி அம்மா அவனை எங்ககிட்டேயிருந்து பிரிச்சிட்டுப் போயிடாதே. எங்களுக்கு கடைசி காலத்தில் அவன் தான் கஞ்சி உத்தணும்”
“என்ன பாட்டி! என்னை அவ்வளவு மோசமாகவா நெனச்சிட்டீங்க, உங்க காலடியிலே உலகமிருக்குண்ணு, உங்களையே சுற்றி சுற்றி வரப் போறவுக நாங்க. இப்படி சொல்லி விட்டீர்களே?”. கண்கலங்கிய சித்ரா பாட்டியை அணைத்துக் கொண்டபோது உள்ளே வந்த தங்கபாலு, “பாட்டியும் பேத்தியும் கூட்டுச் சேர்ந்து என்ன சதி நடத்திறீக?” என்று கேட்டார்.
“போங்க தாத்தா, நாங்க பேசிச் சிரிச்சாக் கூட உங்களுக்கு பிடிக்காதே!” என்று தாத்தாவைக் கோபித்து விட்டுக் கிளம்பினாள் சித்ரா.
அவளுக்கு எதிரே வந்த ராஜவேலு “வீட்டிலே யார் இருக்காங்க?” என்று கேட்டான்.
“நீங்க யாரு?” என சித்ரா கேட்டாள்.
“என் பெயர் ராஜவேலு. இங்கே தங்கபாலுன்னுட்டு, ஒரு ஆளைப் பார்க்க வந்தேன்.”
“எங்கேயிருந்து வர்றீக?”
“சிங்கம் பட்டியிலிருந்து”
“உள்ளே போங்க, எங்க தாத்தா தான்” என்றவள், “தாத்தா! உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காக?” என்று, சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
“உள்ளே வாங்க தம்பி, உட்காருங்க”. அவன் அமர்ந்தான். “பொன்னம்மா! மோர் கொண்டு வா” என்று சொல்லி விட்டு எதிரே இருந்த ஸ்டுலிலே அமர்ந்து கொண்டார் தங்கபாலு.
“என்ன தம்பி விஷயம்?” தங்கபாலு கேட்டார்.
“எப்படி சொல்றது? வீட்டிலே யாரெல்லாம் இருக்கிறீங்க?”
“என்ன விஷயம் தம்பி, ரொம்பப் பீடிகை போடறீங்க?”
‘இவர்களிடம் எப்படி சொல்லப் போகிறேன். துபாயில் விஷா இல்லாமல் வேலை செய்தவர்கள் எல்லோரையும் கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்ததில் கடல்நோய் வந்து தங்கபாலு அவர்களின் மகன் கணேஷன் கப்பலிலே இறந்து போனான். உடலைக்கூட கொண்டு வர முடியவில்லை. இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்ற இந்தக் குடும்பத்தில் இதை எப்படி விளக்கிச் சொல்லப் போகிறேன்?’ என்று யோசித்தவன் கணேஷனின் அம்மா பொன்னம்மா கொண்டு வந்த மோரை வாங்கி குடித்தான்.
“அய்யா..! கணேஷன் உங்களுக்கு ஒரே பையன் தானே?” என்று, கேட்டான்.
“நீ…..நீங்க கணேஷூக்கு பிரண்டா? என்ன விஷயம் தம்பி?”
“ஒரு நிமிஷம், வெளியே போய் பேசலாமுங்களா அய்யா?” என்றான் அவன், அருகில் நின்ற பொன்னம்மாவைப் பாத்தவாறு.
இவன் என்ன விஷயமாக நம்மைப் பார்க்க வந்திருக்கிறான் என்று புரியாமல் துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வாப்பா என்று ராஜவேலுவையும் கூட்டிக் கொண்டு அருகில் நின்றிருந்த வேப்பமரத்தடியின் கீழ் நின்றவர் “சொல்லுப்பா என்ன விஷயம் கணேஷன் துபாயிலே ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டானா?”
“இல்லீங்க அய்யா.”
“யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டு, உங்களை சமாதான தூது அனுப்பினானா?”
மௌனமாய் இருந்தான்.
“உங்களுடைய மௌனம் எனக்கு ஏதோ பயமாக இருக்கிறது தம்பி. என்னைத் தனியாக வேறு கூட்டிண்டு வந்திருக்கீக என்ன? சொல்லுங்க”.
“அய்யா ஒரு துக்கமான விஷயம்.”
“சொல்லு” என்ற தங்கபாலுவின் முகம் கொஞ்சம் சிறுத்துப் போனது.
“கொஞ்சம் மனசக் கல்லாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி கூட வாசலில் நின்று கொண்டு நாம் என்ன பேசுகிறோம் என்று கவனித்துக் கொண்டு தான் நிற்கிறார்கள்.
எனக்கும் கணேஷனுக்கும் விசா முடிந்து அதை திரும்பவும் ரினீவ் பணண முடியாமல் நாங்கள் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று விசா இல்லாதவர்களை எல்லாம் திரும்ப இந்தியாவிற்கு கப்பலில் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் கப்பலில் ஏறி வரும் போது கணேஷனுக்கு கடல் நோய் வந்து….வந்து…”
“சொல்லுப்பா?”
“அவன் இறந்து போனான்!”
“என்னது?” என்று ஆவேசமாக கேட்டவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, “அப்புறம்?” என்றார். அவரை அறியாமல் கண்களில் கண்ணீர் அடைத்துக் கொண்டு, “சொல்லுங்க…” என்றார்.
“அவனை கரைக்குக் கூட கொண்டு வர முடியவில்லை. அய்யா!”
“என்னை செய்தீர்கள்?”
“தெரியாதுங்க அய்யா! இந்தியாவில் மும்பை துறைமுகத்தில் வந்து இறங்கிய போது கப்பல் கேப்டனிடம் கேட்ட போது, கையை விரித்து விட்டார். சீஃப் ஆபீஸரிடம் திரும்பத் திரும்ப விசாரித்த போது, கணேஷன் இறந்து நான்கு நாள் கப்பலியே வைத்திருக்க முடியாது. அவனை!….. நாங்கள் கரைக்கு கொண்டு வர முடியவில்லை என்று சொல்லி விட்டார்…” என்று ராஜவேலு சொல்ல அவன் தொண்டை துக்கத்தால் கமறியது.
“தம்பி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ?” என்றார் பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
“சொல்லுங்க அய்யா”
“என் மனைவிக்கோ… வேறு கணேஷனுக்கு தெரிந்த சொந்தக்காரர்களுக்கோ, இந்த விசயத்தை சொல்லாமல் மறைத்து விட முடியுமா?”
“ஏன் அய்யா? ஒரு நாள் எப்படியும் அவர்களுக்குத் தெரிய வேண்டியதுதானே?” என்று ராஜவேலு துக்கத்துடன் கேட்க, பொன்னம்மாவிடமிருந்து ஓடி வந்த சித்ரா, “சார்! மாமா எப்படி இருக்காங்க, கல்யாணத்திற்கு போன மாதமே ஊருக்கு வருவதாக எழுதியிருந்தாங்களே?” என்று கேட்டாள் வெட்கத்தோடு.
தங்கபாலுவின் முகத்தைப் பார்த்தான் ராஜவேலு. சோகத்தோடு தங்கபாலு வேண்டாம் என்ற அர்த்தத்தோடு தலையை அசைக்க,
“எல்லாம் உங்க தாத்தாவிடம் சொல்லியிருக்கேன்; வருகிறேன், அய்யா வர்றேன்.”
தங்கபாலு தன் மனைவியிடமும் பேத்தியிடமும் எப்படி விஷயத்தை சொல்லப் போகிறேன் என்று வருத்ததுடன் யோசனை செய்து கொண்டே வீடு நோக்கி நடந்தார்.
வாசகர்களே! தங்கபாலுவுக்கும், ராஜவேலுக்கும் தெரிந்த இரகசியம், சித்ராவுக்கும் பொன்னம்மாளுக்கும் தெரியாது. ஆம்! நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டீர்கள்! இரகசியத்தை காப்பீர்களாக!
– 01-03-2001, தமிழ் அமுதம்