நித்தியாவுக்குக் கோபம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 3,172 
 
 

அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் நித்தியாவைப் பார்த்து….

“ஹாய்….!!….” உற்சாகமாய்க் கை ஆட்டினான் சேகர்.

அவள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு வெடுக்கென்று திரும்பிக்கொண்டாள்.

சட்டையைக் கழற்றக்கூடத் தோன்றாமல்… மனம் ‘பக் ‘கென்றது இவனுக்கு.

வினாடி நேரம் செய்வதறியாது திகைத்தவன் அவள் அருகில் வந்து….

“கோபமா…?” முகத்தைப் பார்த்து கொஞ்சலாய்க் கேட்டான்.

அவள் பேசவில்லை. மாறாகத் திருப்பிக்கொண்டாள்.

காலையில் அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் இவள் ஏதோ தொணதொணக்க.. கடுப்பாகிப் போய் ஒரு தட்டு தட்டியத்திற்கு இன்னும் இவ்வளவு கோபம் ! நினைத்தவன்…

“ஏய்..! என்னைப் பாரு.” என்றான்.

அவள் பார்க்கவில்லை.

“காலையில் நடந்தது காலையோட போச்சு.” சொல்லி அவள் முகத்தைத் திருப்பினான்.

நித்தியா தொட்ட அந்தக் கையைப் பட்டென்று தட்டிவிட்டாள்..

‘அட ! ….பொட்டக் கழுதைக்குக் கோபம், வீராப்பு ! ‘இவனுக்குள் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.

இருந்தாலும்….காலை தப்பு மாலையும் கூடாது ! அடக்கினான்.

மனைவியை சமமானப் படுத்த…

“நீ செய்தது மட்டும் நியாயமா…?” சாந்தமாகக் கேட்டான்.

“என்ன…??..” நித்தியா விறைப்பு முறைப்பாகக் கேட்டாள்.

“நான் அலுவலகம் கிளம்புற…அவசரம், வேகத்தில் இருக்கும்போது தொணதொணக்கலாமா..?” -தன் பங்கு நியாயத்தைச் சொன்னான்.

“அதுக்காக அடிக்கிறதா…?”

“ஒரு அறைதானே…? !”

“அதுவும் அடிதானே..! ? ‘’

“சரி. அடிச்சிருக்கக் கூடாது. ஏதோ வேகத்துல அப்படி செய்துட்டேன். தப்பு. அதுக்காக என்ன செய்யணும்ங்குறே..?” – தன் தவறை உணர்ந்தவனாய் மனைவி முகத்தைப் பார்த்தான்.

“……………………….” –

நித்தியா மனம் சமாதானமாகவில்லை. முக இறுக்கம் தளரவில்லை.

“கன்னத்துல போட்டுக்கோவா..?”

“போட்டுக்கோங்க…”

“மகாராணி விருப்பம். நான் செய்யாமல் இருப்பேனா…?” என்று பணிவாய்க் கூறிய சேகர்… இரண்டு கைகளாலும் தன் கன்னத்தில் தோப்புக்கரணத்திற்குப் போடுவது போல் அடித்துக்கொண்டான்.

‘இவன் நடிப்பும் நடிப்பும் நித்தியாவிற்குச் சிரிப்பை வரவழைத்திருக்க வேண்டும்.

சிரிக்கவில்லை. அதே ‘உம் ‘மில் இருந்தாள்.

குனிந்து அவள் முகத்தைப் பார்த்த சேகர்..

“இன்னும் கோபம் தீரலையா…?” கேட்டான்.

“தீராது !!” நித்தியா வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொன்னாள்.

“இன்னும் என்ன தண்டனை கொடுக்க நினைப்பு..?” செல்லமாகக் கேட்டான்.

“நான் சொல்ல மாட்டேன்.”

“ஏன்..?”

“நான் பேசமாட்டேன்.”

‘என்ன செய்தால்… இவள் கோபம் தீரும்.’உம் ‘கலையும் ? ‘நினைத்தவன்….

“தேவிக்கு ஒரு உம்மா கொடுத்தால் சரியாப் போகுமா…?” கேட்டான்.

அவ்வளவுதான் ..!!

சட்டென்று திரும்பி அவனை ஒரு நெருப்புப் பார்வைப் பார்த்த நித்தியா…

“வேணாம் !” கராறாகச் சொன்னாள்.

“காரணம்…??…”

“கன்னம் கன்றிப் போயிருக்கு…”

துணுக்குற்ற சேகர்….அப்போதுதான் நித்தியா கன்னத்தைக் கவனித்தான். அச்சாக அவனின் மூன்று விரல்கள் பட்ட இடம் சிவந்து கன்றிப் போயிருந்தது.

சொரக்கென்றது.

“அடடா… வேகமா அடிச்சிட்டேனா..?” பச்சாதாபப் பட்டான்.

“ம்ம்….”

“மன்னிச்சுக்கோ…”

“…………………………”

“படத்துக்குப் போகலாமா…?”

“வேணாம்..!”

“இது அடிச்சதுக்காக அழைச்சுப் போற கூலி. நான் வர்லே. என் மேல உங்களுக்கு உண்மையான அன்பில்லே.!”

“ஐயையோ…! உன் மேல எனக்கு அன்பில்லையா.?” என்று பதறிய சேகர்…

“சத்தியமா உன் மேல எனக்கு நிறைய அன்பிருக்குச் செல்லம். அதனாலதான் நம்ம முதல் குழந்தைக்கு நித்தியன்னு உன் பேரை வச்சிருக்கேன். அடுத்தது பெண்ணாய்ப் பிறந்தால் நித்யஸ்ரீன்னு வைக்க ஆசை !”

சொல்லி தன் இரு கைகளையும் கோர்த்து சேர்த்து இறுகக் கட்டிப்பிடித்தான்.

“இது பசப்பு !” நித்தியா இதற்கும் அசிங்கவில்லை. முயக்கினாள்.

“உன் மேல அன்பிருக்கிறதைக் காட்ட அனுமன் மாதிரி நெஞ்சைப் பிளந்து காட்ட வசதி இல்லே. அல்வா, மல்லிப்பூ வாங்கி வரவா…”

“இது அடுத்ததுக்கு அடி…”

“வேற என்ன செய்யனும்…?”

“என் மேல உங்களுக்கு உண்மையான அன்பு பாசமிருந்தால்… தொட்டு தாலிகட்டின மனைவி தொட்டால்சிணுங்கி.! முறைத்தாலே முகம் சுண்டிப் போவாள். அடிச்சி வந்திருக்கோம். கோபதாபமாய்க் குமைஞ்சி கிடப்பாள். சரி படுத்த ஏதாவது செய்யனும்ன்னு நினைச்சி எனக்குப் பிடிச்ச கடலை உருண்டை வாங்கி வந்திருப்பீங்க. செய்யலை…. ‘’ சின்ன குழந்தையைச் சொன்னாள்.

‘எப்படிப்பட்ட வெள்ளைமனசு, குழந்தை உள்ளம்.?! வேறு பெண்ணாக இருந்தால் இதுதான் சாக்கு என்று நகை, பட்டுப்புடவை என்று அடுக்குவாள். இவள் அது செய்யாமல்…தனக்குப் பிடித்த….ச்சே…! . வாழ்க்கையில்… தினம் தம்பதிகளுக்குள் கற்றுக்கொள்ள எவ்வளவோ விசயங்கள், நுணுக்கங்கள். ! ‘ சேகர் மனதில் பளிச்சென்று பட…….

அடுத்த வினாடி….

“ப்பூ..! இவ்வளவுதானா விசயம். உனக்கும் எனக்குமாய்ச் சேர்த்து கடலை உருண்டை, அல்வா, மல்லிப்பூ எல்லாம் வாங்கி வர்றேன்.” சொல்லி சிட்டாகப் பறந்தான்.

நித்தியா பூவாக மலர்ந்தாள், சிவந்தாள்.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *