(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அம்மா, உங்களுக்கு போன்’
என்ற செய்தியுடன் வருகிற ப்யூனுக்காக ஜானகியின் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. இரண்டு மணிக்கு வர வேண்டிய போன் ஏன் இன்னும் வரவில்லை? வழக்கத்திற்கு மாறாக இன்று மட்டும் போன் மௌனம் சாதிப்பது ஏன்? மனசை மயங்க வைக்கிற இந்த ஏக்கத்தை அவளே உணர்ந்தாள்.
தவித்துக் கொண்டிருந்த மனம், பைலில் ஒட்ட மறுத்து விலகி ஓடிக் கொண்டேயிருந்தது. வேலை செய்யாமல் சிறுபிள்ளைத்தனமாக அடம் பிடித்தது. புழுங்கி, பொறுமையை இழந்துவிட்ட நேரத்தில், 3-35க்கு ப்யூன் தென்றலாய் வந்தான்.
நெஞ்சுக்குள் ஜில்லென்று பூத்துச் சிரித்த பூக்காடு.
அடுத்த கணம் ‘ஹலோ’வில் இருந்தாள். மனசின் பரபரப்பை மறைக்க முடியாத தளும்பலோடு ‘ஜானகி ஹியர்’ என்றாள். மறுமுனையில் பரந்தாமன் குரல் ஒலித்தது.அவள் இதயத்தின் மூலை முடுக்கெல்லாம் இனிமையான பரவச வெள்ளம் பாய்ந்து நிரம்பியது.
பேசினாள்.
பரந்தாமன் பேச்சு வழக்கமாக இருப்பதைப் போலில்லை. ஒரு வித்தியாசம் சுத்தமாக தெரிந்தது. துள்ளல் இல்லை. சீண்டல் இல்லை. மனசைக் கிள்ளுகிற அந்த குறும்புச் சிரிப்பு இல்லை. குரலே சுரத்தில்லாமல் இருந்தது. ஒரு சோகத்தைச் சுமந்து நிற்கிற கரகரப்பு தெரிந்தது.
“டியர், டோன் ஒரு மாதிரியா இருக்கே ஏன்? மனசு சரியில்லையா?”
“எஸ். ஜான். இப்போ நா பேங்க்லேயிருந்து பேசலே. பக்கத்து ஹோட்டல்லேயிருந்துதான் பேசுறேன்”
“ஏன், இன்றைக்கு பேங்க் போகலியா?”
“இல்லே, லீவ் போட்டுட்டேன். எங்கவில்லேஜ்லே யிருந்து சில சொந்தக்காரங்க வந்துருக்காங்க, ஒரு இம்பார்ட் டண்ட் ப்ராளம். அது விஷயமா பேசவேண்டியிருக்கு”
‘ஓகோ… அப்போ இன்றைக்கு நாம மீட் பண்ண முடியாது.இல்லே?”
“அப்படித்தான் நெனைக்கிறேன் ஜானகி. நாளை ஈவினிங்லே மீட் பண்ணுவோம். ஷ்யூர்”
“ஓகே வந்த ரிலேஷன்சை நல்லபடியா கவனிங்க, நாளை நாம சந்திக்கறப்போ… என்ன ப்ராப்ளம்குறதைப் பேசலாம். ஆனா நிதானமா டீல் பண்ணுங்க.”
“தேங்ஸ் ஜான், ஸாரி ஃபார் மை ஆஃப்ஸென்ஸ். நாளை நிச்சயமா சந்திக்கலாம். ”
“நோமென்ஸ்”
ரிசீவரைக் கீழே வைக்கும்போது, மனம் கனத்திருந்தது. நேற்று பார்த்த பரந்தாமனை, நாளை சாயங்காலம்வரை பார்க்க முடியாது என்கிற நிஜம், அவள் மனசை என்னவோ செய்தது. ஒரு சோகம் குடிபுகுந்து கொண்டு அலைத்தது.
அவள் சீட்டில் வந்து சரிந்தபோது, வழக்கமான ஜானகியாக இல்லை. சிடுசிடுப்பாகி விட்டாள். குழம்பிக் கிடந்த பைல்களை ஒழுங்குபடுத்தாமல் வெறுமனே தூக்கித் தூக்கிப் போட்டாள்.
அவள் நெஞ்சை இனம் புரியாத ஏக்கம் வதைத்தது. பரந்தாமன் இல்லாத மாலைப் பொழுதா? அவளால் கற்பனை செய்வது கூட கஷ்டமாக இருந்தது.
சரி, இன்றைக்கு என்ன செய்வது? பரந்தாமன் இல்லா மல் மாலைப் பொழுதை எப்படிக் கழிப்பது? வீட்டுக்குப் போகலாமா? போய் என்ன செய்யப் போகிறோம்? இரண்டு வருஷத்தில் இல்லாத அதிசயமாக இன்று மட்டும் நேரத்தோடு வீடு போய்ச் சேர்ந்தால், வித்யாசமாகத் தெரியாதா? இத்தனை நாளும் ஏன் லேட் என்ற புதுக் கேள்வியை எழுப்பாதா?
எழுப்பினால்தான்… என்ன குடி முழுகிப் போகும்?
அப்பா என்ன, ஆர்ப்பாட்டம் செய்து அமளியாசெய்யப் போகிறார்? அந்த அளவுக்கு மகளுடைய வாழ்விலும், நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்பவரா?
அவருக்கு அந்த ஈஸிச்சேரும், பகவத்கீதையும் போதும். அம்மாவுக்கு சமையலறையும், பூஜையறையும்தான் உலகம். மாதா மாதம் முதல் தேதி மட்டும் சிந்தாமல் சிதறாமல் வந்து சேர்ந்துவிட்டால் போதும். மற்ற எதைப் பற்றியும் கவலை கிடையாது.
சரி, இப்போ என்ன செய்வது?
பரந்தாமனைச் சந்தித்துப் பழகிய பிறகு ஒரு நாளாவது இந்தக் கேள்வி எதிர்ப்பட்டதே கிடையாது. ஒவ்வொரு நாளும் பூவாய் மலர்ந்து – ஒளிர்ந்து மணந்து உதிருமே! பல சமயங் களில் பாரிமுனைக்கே வந்து காத்திருப்பான். ஆபீஸ் முடிந்து அலுத்துக் களைத்து வருகிற ஜானகி, “ஹலோ ஜான்” என்ற அவனது இனிமையான உற்சாகக் குரலில்தான் உயிர் பெறுவாள். குளித்து முடித்த புத்துணர்ச்சி உடம்பெல்லாம் பரவி, மனசெல்லாம் பரவசத்தில் கரைந்து விடுமே!
பீச் மணலோ, மிருகக்காட்சி சாலையோ – வள்ளுவர் கோட்டமோ – கலைவாணர் அரங்கமோ எங்கு சென்றாலும், அந்த ஒரு மணி நேரம் என்ன துரிதமாய் கழிந்து விடும்! நெஞ்சைக் கிள்ளுகிற கேலிகள் – மனசைக் கிளுகிளுக்க வைக்கிற மெல்லிய சீண்டல்கள். சில சமயத்தில் சீரியஸான விவாதங்கள்…
வாழ்க்கையே முழு வீர்யத்துடன் எழுந்து இறுகத் தழுவிக் கொண்டதைப் போல மனசே குதூகலப்படுமே! மறுநாள் சந்திப்பு வரை மனசில் அந்த இனிமை கரைந்து கொண்டே இருக்குமே…
இன்று?
சட்டென மனசுக்குள் ஒரு வெறுமை சூழ்ந்தது.
ஆபீஸ் முடிந்தது. சிறையிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சி யோடும், வாழ்க்கையைக் கட்டித் தழுவுகிற ஆவலோடும் வீதிகளில் மனிதர்கள் பரபரத்து ஓடினர். ஆட்டோக்களுடனும், பல்லவன்களுடனும் போட்டி போட்டுக் கொண்டு பறந்தனர். சென்னை மாநகரமே ஒரு பகல் நேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து ஓடுவதைப் போல் பாரிமுனை திமிலோகப்பட்டது.
ஜானகி பஸ் ஸ்டாப்பில் நின்றாள். யோசனையில் நிமிஷங்கள்கரைந்தன. ‘என்ன செய்யலாம்’ என்ற வட்டத்திற் குள்ளேயே நினைவு சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிந்தது.
சரி… பரந்தாமனுடன் கைகோர்த்துப் போவதைப் போல இன்று தனியாக பீச் போகலாமா? தனிமையில் அனுபவிப்பது, ரசனைக்குரிய அனுபவமாக இருக்குமே!
அவசரமாகப் பாய்ந்து பஸ்ஸில் ஏறிவிட்டாள். நல்ல வேளை உட்கார சீட் கிடைத்தது, பையிலிருந்த வார இதழைப் பிரித்தாள். மனம் எங்கோ ஓடித்தாவ வார இதழை மூடிவிட்டு நிமிர்ந்தாள்.சூடான காற்று முகத்தில் மோதியது.
ஜானகியின் மனசுக்குள் பரந்தாமன் வந்தான்.
என்ன கம்பீரமான தோற்றம்… கட்டுமஸ்தான தேகம். சிரிக்கும் போது பளிச்சிடுகிற அந்தப் பல்வரிசை… ஆழம் காணமுடியாத அந்தக் கண்கள்… சீண்டி விளையாடும் போது அதில் துள்ளுகிற அந்தக் குறும்பு.
பற்களின் வெண்மையைத் துல்லியப்படுத்துகிற கறுப்பு. அடர்த்தியானகறுப்பு. மனசுக்குப் பிடித்தமாகி விட்ட கிருஷ்ண பரமாத்மாகறுப்பு!
பரந்தாமன்! அட, அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனம்! அந்த மனமெல்லாம் ததும்பி வழிகிற அன்பு. என்ன இனிமையாய்ப் பேசுவான். மனசை நீவி விடுகிற நாகரீக நாசுக்குடன் பழகுவானே!
கடற்கரையில் – பாரதி சிலையின் நிழலில் நிகழ்ந்த அந்த தித்திப்பான முதல் சந்திப்பு. ஆ… ஆயுள் முழுவதும் நெஞ்சுக்குள் இனிய தென்றலாக வீசிக் கொண்டிருக்குமே!
அந்த முதல் சந்திப்பு, எதிர்ப்படுகிற பொழுதெல்லாம் புன்சிரிப்புகளாக வளர்ந்து, ஒரு நெருக்கமான சிநேகிதமாகப் பரிணமித்து… நாலைந்து மாதங்களுக்குப் பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் மனசின் கரைகளையும், சமூகத் தடைகளையும் உடைத்துக் கொண்டு காதலாக சங்கமித்து…
இரண்டு வருஷம் என்பது இத்தனை அற்பமானதா? என்ன வேகமாய் ஓடிக் கரைந்துவிட்டது.
ஓ… அந்தத் தருணம்… மனசின் கரைகளை உடைத்துக் கொண்டு சங்கமித்த அந்த இனிய தருணம்…
அன்று –
இப்படித்தான் பல்லவனில் சென்று இறங்கி, சாலையை குறுக்காகக் கடந்து, பாரதி சிலையை நெருங்கினாள். காலையிலிருந்தே இனம் விளங்காத ஒரு சோகம் மனசை அரித்துக் கொண்டிருந்தது. அதில் அவள் முகம் வாடி வதங்கிக் கிடந்தது.
பரந்தாமனின் உற்சாகமயமான ‘ஹலோ ஜான்’ என்ற வரவேற்பில் கூட அவள் உயிர் பெறவில்லை. பதிலுக்கு வெறுமனே முறுவலித்தாள்.
“ஏன் ஜானகி, ஒரு மாதிரியா இருக்கே?”
கனிந்த அன்போடு பார்த்தான். பார்வையில் சொரிந்த பரிவும், தரிசனமும் மனசுக்கு இதமாக இருந்தது. ஆனாலும் மௌனமாக இருந்தாள்.
“ஆபீஸ்லே ஏதாச்சும் ப்ராப்ளமா?”
இல்லையென்பது போலத் தலையசைத்தாள்.
“வீட்லே?”
அதற்கும் மௌனமும் தலையசைப்பும் மட்டும்தான்.
“அப்புறம் ஏன், இந்த மஞ்சள் முகம் வாடிக் கிடக்கு? மனசுல என்ன சிக்கல்னு சொன்னால்தானே களைய முடியும்?”
ஆர்வமும் துடிப்புமான கேள்விகளால் மனசை நீவி விடுகிற அந்த அன்பு ஆறுதலாக இருந்தது. மனசை வருத்திக் கொண்டிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க இதுதான் பொருத்தமான இதயம். தன்னைப் புரிந்து கொண்ட இதயம்.
“பேசு ஜானகி, அழகான சிவந்த இந்த முகத்துக்கு சிரிப்புதான் மேட்சா இருக்கு. இந்த வாட்டம் நல்லாயில்ல… நாட் குட்”
ஜானகி ஏறிட்டு அவனைப் பார்த்தாள்.
“மார்னிங்லே பேப்பர்லே ஒரு நியூஸ் படிச்சேன். ரொம்ப ஷாக்காயிடுச்சு. ஆபீஸ்லே வேலையே ஓடலை. மனசெல்லாம் அதே நினைப்புதான் ரொம்ப அவஸ்தைப் படுத்துது”
“வாட் நியூஸ்?”
பத்திரிகையை விரித்து அந்தச் செய்தியைக்காட்டினாள். முதல் பக்கத்தில் இரண்டு காலச் செய்தியாக வந்திருந்தது. படித்தான்:
‘காதலுக்காக பெற்றோரையும், ஜாதியையும் பகைத்துக் கொண்டு உத்யோகம் பார்க்கும் ஒரு வாலிபனை மணந்து கொள்கிறாள், ஒரு இளம்பெண். சந்தோஷமாய் ஒரு வருஷம் இல்லறம் நடக்கிறது. விவசாயம் செய்கிற பெண்ணின் பெற்றோர் கோபம் தணிந்து, அடிக்கடி மகளை வந்து பார்த்துச் செல்கின்றனர்.
இதுவரை காதலையும் மனைவியையும் மட்டுமே நேசித்த கணவன், வரதட்சணைக்காகவும் ஏங்குகிறான். வேறு பெண்ணை மணந்திருந்தால் வந்திருக்கக்கூடிய நகைநட்டு, சீர்வரிசை எல்லாம் இல்லாமல் போய்விட்டதே என்று எண்ணுகிறான். இந்த ஏக்கம் கணவன் மனைவிக்குள் பூசல்களாக வெளிப்படுகிறது.
அடிக்கடி பெற்றோரிடம் அனுப்பி வைத்து, அதை வாங்கி வா, இதை வாங்கி வா, என்று நிர்ப்பந்திப்பதன்மூலம், காதலினால் வந்த நஷ்டத்தை ஈடு செய்ய முயல்கிறான். அந்த நிர்ப்பந்த முயற்சிகளினால் பூசல்கள் பெரிதாகி, சண்டைகளாகி, மனைவியை அடித்து வதைத்து…
அடி பொறுக்காமல் தாய் வீடு வந்து தஞ்சம் புகுந்த பெண்ணை, வாழாவெட்டியாகவும் வாழவிடாமல் உறவினர்களும், ஜாதியினரும் ஜாதிவிட்டு காதலித்த ‘கொழுப்பை’ சொல்லிச் சொல்லி குத்திக் காட்டி, அதில் பெற்றோரும் சேர்ந்து கொள்ள… மனம் வெறுத்துப்போய் வெளியேறிய அவள் சமூக விரோதிகளால் பந்தாடப்பட்டு, சூறையாடப்பட்டு, ஒரு சோகக் கவிதையாக அழுது இப்போது விபச்சார விடுதியில் உயிர் வாழ்கிறாள்.
செய்தியின் அருகில் ஒரு அழகான இளம் பெண்ணின் புகைப்படம். அட… இந்த அழகான ரோஜா மலருக்கா, இந்தக் குரூரமான அலங்கோலம்?
படித்துவிட்டு நிமிர்ந்தான், ஜானகியைப் பார்த்தான்… அவள் கண்கள் உணர்ச்சிப் பெருக்கில் அகலமாய் விரிந்திருந்தன. முகமெல்லாம் ஆவேசம் கொப்பளிக்கக் கேட்டாள்:
“பாத்தீங்களா, ஒரு பெண்ணுக்கு கிடைச்ச கொடுமையை? பெரிய பெரிய மகான்கள் தோன்றி பேரன்பு, கருணை பற்றியெல்லாம் போதிச்ச தேசத்துலே வறண்டு கிடக்கிற மனிதாபிமானம்! ஈக்குவாலிட்டி சிந்தனை பொங்கி வழியுற இருபதாம் நூற்றாண்டுலே, இவ்வளவு குரூரமான ஜாதீய பேதங்கள்; இந்தப் பாரதிக்கு விழா எடுத்து பெருமைப்படுற பாரத மண்ணுல தலை விரிச்சாடுற வரதட்சணை வெறி; மனுஷ உரிமைகள் பற்றி வாய் கிழியப் பேசி, வருஷத்துக்கொரு தேர்தல் நடத்துற நம்ம தேசத்துல ஒரு பெண்ணோட உரிமைக்கும் காதலுக்கும் நேர்ந்த கதி… எவ்வளவு பயங்கரமாயிருக்கு?… ஓ. காட்!”
“எனக்கே மனசு கஷ்டமாயிருக்கு”
பரந்தாமன் ஜானகியை ஆச்சர்யத்துடன் பார்த்தான். அந்தக் கண்களில் ஜ்வாலை விட்டெரிகிற ஆவேசம். கொந்தளிக்கிற பேச்சில் குமுறி நிற்கிற உணர்ச்சிகள்… கையை வீசுவதில் வெளிப்படுகிற மனசின் வேகம்…
இவள், ஜானகி தானா?
“நம்ம நாட்டுலே எத்தனை ஃபிளாக்ஸ் கலர் கலரா பறக்குது எத்தனை பொலிடிகல் பார்ட்டீஸ்? எத்தனை சேவா ஸ்தாபனங்கள்? எத்தனை மதங்கள்… கோயில்கள்… தத்துவங்கள்… இத்தனையும் மலிஞ்சு கிடக்குற ஒரு கண்ட்ரியிலே இதைப்போல பல ஆயிரக்கணக்கான பெண்கள் நிதம் நிதம் சித்திரவதை செய்யப்படுறாங்க… சீரழிஞ்சு போறாங்கன்னா, என்ன அர்த்தம்? ஜாதிகளையும், வரதட் சணையும், மற்ற கொடுமைகளையும் ஒழிக்கப் போறதாக முழங்குறாங்களே… எங்க ஒழிஞ்சிருக்கு? எது ஒழிஞ்சிருக்கு? மாறாக… கோர ரூபத்தோட வளர்ந்திருக்கு. இல்லையா?”
ஜானகியின் சத்திய வார்த்தைகளின் அக்கினியில் திகைத்துப் போய் நின்றான்.
அவளை வியப்போடும் அனுதாபத்தோடும் பார்த்தான். ‘முதலில் இவளை சம நிலைக்குக் கொண்டு வரணும்’
“ஜானகி. டேக் இட்ஈஸி… மனுஷத் தனத்தைவிட சொத்துக்களை மதிக்கிற இந்த சொஸைட்டியின் செட்டப் புலே, இந்தப் போலித்தனங்களும் குரூரங்களும் இருக்கத்தான் செய்யும். ப்ராபர்ட்டிகளெல்லாம் பொதுவாகி, மனுஷத்தனம் உயர்வா மதிக்கப்படுகிற செட்டப்புலேதான் மனுஷ உரிமைகளும், வாழ்வும் பூப்போல மதிக்கப்படும்.”
இன்னும் அன்பான வார்த்தைகளால் அவளை ஆற்றினான். கடலைப் பருப்பு வாங்கிக் கொடுத்து கொறிக்கச் சொன்னான்.
“வா… காலாற நடப்போம்” என்று மணலுக்குள் அழைத்துச் சென்றான். ஜானகியின் உணர்ச்சிகள் சமனப் பட்டன.
மணலில் பாதங்கள் பதிந்தன. மௌனமும் கூடவே சேர்ந்து நடந்தது. மனசுக்குள் நினைவுகள் கூச்சலிடுகின்றன.
‘ஜானகி, ஓப்பனா ஒரு கேள்வி கேட்கிறேன். மனசுலே பட்டதைச் சொல்லு”
‘என்ன?’ என்பது போல பக்கவாட்டில் நிமிர்ந்த போது, அவளது கண்களின் அழகை ரசித்தான்.
“ஜாதி வேற்றுமைகளைப் பற்றி இவ்வளவு ஆத்திரமா பேசுறீயே, சொந்த லைஃப்லேயே இது எதிர்ப்பட்டா, என்ன செய்வே?”
“அப்பவும் இதே ஜானகிதான் இருப்பாள்”
இந்த பதில் அவனுள் ஒரு இன்ப ஊற்றாகப் பாய்ந்தது.
“ரியலா?”
“ஷ்யூர்”
அவளது உறுதி சத்தியமானதுதான். மனசின் அடியில் கொஞ்ச நாட்களாக முளைவிட்டு வளர்ந்து, வெளிப்பட துடித்துக் கொண்டிருக்கும் கேள்வியை கேட்டு விடலாமா?
தயங்க வேண்டியதில்லை. என்ன நினைத்துக் கொள்வாளோ என்று அஞ்ச வேண்டியதில்லை.
சிந்தனையோடு கடலைப் பார்த்தான். ஓயாத அலைகள் ஓடிவந்து இரைச்சலிடுகின்றன. அவனை ஏறிட்டு நோக்கிய ஜானகி,
“ஏன் கேட்டீக?”
ஒரு சின்ன முறுவலோடு “ஒண்ணுமில்லே” என்றான்.
இருவர்நெஞ்சுக்குள்ளும் ஒரே மாதிரியான நினைவுகள் அலைபுரண்டன. மனசின் கரைகளை அரித்துக் கரைக்கிற நினைவுகள்; உடைத்துக்கொண்டு பாய்வதற்குத் துடிக்கின்ற நினைவுகள்; ஒன்றுடன் ஒன்றாக மோதி சங்கமிக்க ஆவல்படுகிற நினைவுகள்.
தொங்கிக்கொண்டிருந்த மௌனத்திரையை பரந்தாமன் கிழித்தான்.
“ஒரு இம்பார்ட்டண்ட் மேட்டர் பேசணும்”
ஆவலோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். இமைகள் படபடத்தன. அவள் மனசு எதையோ எதிர்பார்த்து, இன்பப் பரவசத்துடன் துடித்தது.
ரொம்ப நாட்களாய் எதிர்பார்த்தது. ‘பரந்தாமனைப் பார்க்காமல் மனசு அடங்காது’ என்ற உணர்ச்சி வெள்ளம் அவளை மோத ஆரம்பித்த நாளிலிருந்து சந்திப்பதும் பேசுவதும் பிரிவதுமாக நட்பாக இருந்த உறவு, ராத்திரிப் பொழுதுகளிலும் வேறொரு பரந்தாமனாக வந்து மனசுக்குள் விளையாட ஆரம்பித்த நாட்களில் இருந்து எதிர்பார்த்த வார்த்தைகள், இது.
துடிப்புடன் கேட்டாள்: “என்ன?”
“நாம டெய்லி மீட் பண்றோம். நிறைய பேசுறோம். சிரிக்கிறோம். பிரிஞ்சுடறோம்… இது வெறும் ஃப்ரெண்ட்ஷீப்தானா, இல்லே. அதுக்கும் மேலா?”
இதைச் சொல்வதற்குள் அவன் திணறிப் போனான். நீண்ட நாளாக அவன் மனசை அழுத்திக் கொண்டிருந்த தயக்கம், முகத்தில் திணறலாகத் தெரிந்தது.
“நானும் கூட இதைப் பேசணும்னு கொஞ்ச நாளாகவே நெனைச்சுக்கிட்டிருந்தேன்…”
“நீ பேசியிருக்கலாமே ஜானகி, எனக்குத்தான் தயக்கம்?”
“என்ன தயக்கம்?”
இப்போது பரந்தாமன் ரொம்பக் குழம்பிப் போனான். பார்வை கீழே தாழ்ந்தது. உதடுகளை அடிக்கடி நாவால் ஈரப்படுத்திக் கொண்டான்.
“ஜானகி, நட்புக்கு ரெண்டு மனசுகள் மட்டும் போதும். அதுக்கும் மேலே போகும்போது, மனசுகள் மட்டும் போதாது. சமூகம் வேறு சிலதை எதிர் பார்க்கும்”
“என்ன எதிர்பார்க்கும்?”
ஏதோ இனம் புரியாத வேதனை உணர்ச்சியில் சிரமப்பட்டு திணறுகிற பரந்தாமனை பரிவோடு பார்த்தாள். அந்த அழகான கண்கள் அவனுக்கு தைரியத்தைச் சொரிந்தன.
ஏதோ ஒரு புதுமையான விசயத்தைச் சொல்வதைப் போல வினோதமான குரலில் “நீ பார்வேர்டு கம்யூனிட்டி” என்றான்.
“ஆமாம். அந்தப் பாவத்துக்கு நா என்ன செய்ய முடியும்?”
ஜானகி சர்வ அலட்சியமாகக் கேட்டாள்.
“நா பேக்வேர்டு கம்யூனிட்டி. மேரேஜ்னு வர்றப்போ நீயோ, உன்னோட பேரண்ட்ஸோ இதை ஜீரணிச்சிக்க முடியுமா?”
அவன் முகத்தின் கறுப்பு கூடுதல் அடர்த்தியாக இருந்தது. தாழ்மை உணர்ச்சியின் உறுத்தலால் விளைந்த அவமானம், ஒரு வேதனையாகக் கண்களில் தேங்கியிருந்தது.
ஜானகி வெடித்துச் சிரித்தாள்; மோதிச் சிதறும் பேரலையின் சப்தமாகச் சிரித்தாள். பரிகசிப்பது போலச் சிரித்தாள். சட்டெனச் சிரிப்பு அடங்கி முகம் மாறியது. கண்ணில் கூர்மையான கோபம்.
“பார்வேர்டு, பேக்வேர்டு! சே, இந்த வேர்ட்ஸே நம்ம காலத்தோட அசிங்கம் இல்லே? நீங்க ஒரு கிராஜுவேட். பேங்க்லே வொர்க் பண்றீங்க. சிட்டியிலே சமத்துவமா சந்தோஷமா இருக்கீங்க… உங்க மண்டையிலேயே இந்த மாதிரியான சிந்தனைகளா? ஓ… காட், உங்க மனசுலே இன்னும் உங்க வில்லேஜ்தான் இருக்கு.”
அந்த உஷ்ணமான விமர்சனத்தினால் பாதிக்கப்படாதவனைப் போல பரந்தாமன் தோன்றினான். அந்த முகத்தில் இன்னும் அந்த மெல்லிய வேதனை. அவன் குரல் இலேசாகக் கரகரத்தது.
“இல்லே ஜானகி. நமக்கு அசட்டுத்தனமாக தோன்றதை யெல்லாம் ஒதுக்கிட்டுப் போக முடியாது. வாழற சொஸைட்டியோட கண்டிஷன்ஸை நாம புரிஞ்சுக்கணும்”
“புரிஞ்சுக்கிறது வேற, பணிஞ்சு போறது வேற இல்லே?”
அவன் குழப்பமில்லாமல் தெளிவோடு அவள் கண்களைப் பார்த்தான்.
”எஸ். நான் துணிஞ்சு நிற்கத் தயார். எனக்கு ஜாதி, டௌரி, சுமையா அழுத்துற சடங்குகள் எல்லாமே சுத்தமா பிடிக்காது… மனசார வெறுக்கிறேன். ரைட் ஐயாம் ரெடி; ஆர் யூ ரெடி?”
இந்தக் கூர்மையான கேள்வி அவளுள் ஒரு இன்ப அதிர்வாகப் பாய்ந்தது. மனசுக்குள் ஒரு பூவானமே ஜில்லென்று சிரித்து மணம் வீசியது. அந்தச் சிரிப்பு அவளது ஈர உதடுகளிலும் பிரகாசித்தது.
“என்ன ஜானகி?”
“ரொம்ப நாளைக்கு முன்னாலேயே நாமுடிவு செய்ஞ்ச ஒரு விஷயத்தைத்தான் இப்ப கேக்குறீக.”
அவன் கை ஆர்வக் கிளர்ச்சியோடு அவள் தோளைத் தழுவியது. அவள் உட்கார்ந்தாள். அவனும்தான்.
தோளைத் தொட்டுத் தழுவி, சற்று இழுத்து, நெருக்கத்தில், பரஸ்பரம் கண்கள் ஆழத்துக்குள் ஊடுருவிய போது-
இந்தக் கடலை மனிதர்களை உலகத்தையே மறந்த னர். புதிய உலகத்தை அவர்கள் கண்களில் பார்த்தனர்……
…பல்லவன் ஒரு குலுங்கலோடு நின்றது. சூடான காற்றுக்குப் பதிலாக, நீரைச் சுமந்த குளிர்ந்த காற்று முகத்தில் மோத, ஜானகி ப்ரக்ஞையுற்றாள்.
அவசரமாக இறங்கினாள்… சாலையைக் குறுக்காகக் கடந்தாள். ப்ளாட்பாரத்தில் சற்று நடந்து பாரதி சிலையை நெருங்கினாள். மணலுக்குள் இறங்கினாள்.
தனியாக-ஜோடியாக குடும்பமாக அங்கும் இங்கும் மணலில் உட்கார்ந்திருந்த மனிதர்கள். வாழ்க்கை சுமத்திய பாரங்களைகடல் காற்றில் கரைக்க முயல்கின்ற மனிதர்கள்…
ஜானகியின் மனசுக்குள் அப்பா வந்தார்… ஈஸிச்சேரில் உட்கார்ந்து கொண்டு, கிருஷ்ணரின் கீதையை வாழ் நாளெல்லாம் வாசிக்கிற அப்பாதான்!
அவர் இந்தக் காதலை எப்படிப் புரிந்து கொள்வார்? ஜாதி பேதத்தை ஜீரணித்துக் கொள்வாரா? கொஞ்சம் குதிக்கத்தான் செய்வார். குலம் அழிந்து போவதைக் கண்டு புலம்புவார். மாதா மாதம் முதல் தேதி வருகிற சம்பளம் போய் விடுமே என்று பதறத்தான் செய்வார். அதற்கு மட்டும் ஏதாவது ஒரு உத்தரவாதம் செய்து விட்டால்… மற்ற விஷயங்களை ஜீரணித்துக் கொள்வார்.
ஜீரணிக்காவிட்டால்தான் என்ன? வருகிற கல்யாணத் தரகர்களையெல்லாம் எதையாச்சும் குற்றம் சொல்லிவிரட்டிக் கொண்டிருக்கிற அவரைப் பொருட்படுத்தினால்… என்னா கும்? தலை நரைக்கும் வரை உழைத்துக் கொண்டு, கனவுகளைத் தின்று கொண்டு, தாலி கட்டாத விதவையாக வாழ்ந்து சாக வேண்டியதுதான்!
பரந்தாமன் என்னவோ ப்ராப்ளம் என்று போனில் சொன்னாரே, அது என்னவாக இருக்கும்?…
சமுத்திரத்தைப் பார்த்தாள். பசிய கறுப்பாக அடிவானம் வரை பரந்து விம்மி அசைந்து கொண்டிருக்கும் நீர்க்காடு. இரைச்சல் போட்டு ஓடி வருகிற அலைகள்… எதையோ பாய்ந்து பிடிக்கிற பேராவலோடு வந்து, மணலில் மோதிக் கரைகிற அலைகள்.
இந்த அலைகளுக்கு ‘சாட்டர்டேயே கிடையாதா?
நேரம் ஊர்ந்தது, ஒவ்வொரு நிமிஷமும் பரந்தாமன் இல்லாததை உணர்த்தியது. மனசுக்குள் ஏக்கமும் வேதனையும் ஒரு சோகத் திரையாகப் படிந்தன.
இரவெல்லாம் படுக்கையில் மாறி மாறிப் புரண்டாள்.
காலையில் ஆபீஸ் வேலையில் கூட மனம் ஈடுபட மறுத்தது. எந்நேரமும் பரந்தாமன்தான். ‘பேங்க்’ குக்குப் போன் பண்ணிக் கேட்கலாமா? நம்பர் கேட்டு வைத்துக் கொள்ளவில்லையே…
சரி… ஈவினிங்லேதான் சந்திக்கப் போகிறோமே!
சந்தித்தார்கள்.
“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
என்று முழங்கிய பாரதி சிலையின் அருகில், புல்லில் உட்கார்ந்திருந்தனர்.
“நேத்து ஏதோ ப்ராப்ளம்னு சொன்னீகளே…”
“ஆமாம் என்னோட சிஸ்டராலே ஒரு சிக்கல்”
“என்ன சிக்கல்?”
“வில்லேஜ்லே ஒரு அரிஜன பையனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு பிடிவாதம் பண்றாளாம். எங்க பேரண்ட்ஸ் மட்டுமில்லே… சொந்தக்காரங்க எல்லாரும் கடுமையா எதுக்குறாங்க. ‘பணிஞ்சா பாக்கணும். இல்ல, காலக் கையை ஒடிச்சு வீட்டுக்குள்ள போடணு’னு நெனைக்கிற அளவுக்கு எதிர்க்கிறாங்க…”
”ஓ…காட்! அப்புறம்?” அவள் மனம் படபடத்தது.
“சிஸ்டர் என்னை ரொம்ப நேசிப்பாள். நா சொன்னால் கேட்பாள். என்னாலேதான் அவளை கன்வீன்ஸ் பண்ண முடியும். அதனாலே, என்னைக் கூப்பிடுறதுக்காக நேத்து எங்க ரிலேசன்ஸ் வந்திருந்தாங்க.”
“நீங்க எப்ப ஊருக்குப் போறீங்க?”
“இன்றைக்கு நைட் வண்டிக்கு”
”போய்?” அவள் மனம் ‘திக் திக்’ கென்று அடித்துக் கொண்டது. என்ன சொல்வானோ என்ற திகிலோடு – பீதியோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவன் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டு சாதாரண மாகச் சொன்னான்:
“ஒரு சாதாரணமான வில்லேஜ்லே அரிஜன் பையனை மேரேஜ் பண்ணிக்கிட்டு எப்படி வாழ முடியும்? அவளைப் பார்த்துப் பேசி, கரெக்ட் பண்ணி, இங்க சிட்டிக்கு அழைச்சிட்டு வந்துடப் போறேன். அப்புறம், ஒரு பொருத்தமான இடம் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்.”
அவள் அதிர்ச்சியில் வெலவெலத்துப் போனாள். மனசின் ஒரு மூலையில் ஏதோ சரிந்து, நொறுங்கி,பொடிப் பொடியாவதைப் போன்றதோர் பிரமை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பில் காய்ச்சிய கொழுவாக அவளுக்குள் இறங்கியது. உள்ளுக்குள் ரத்தம் வழிந்தது.
அவளது கண்ணுக்குள் ஒரு உறுத்தல். விளிம்பில் ஒரு நீர்த்துளி திரண்டு நின்றது. ‘இதுதான் நீங்களா…? இதுதான் உங்க நிஜமான நிறமா?
“என்ன ஜான்? ” – திகைப்போடு கேட்டான்.
“நத்திங்!” கோபத்தில் விருட்டென்று எழுந்தாள். உட்கார்ந்தவாறே அண்ணாந்து பார்த்தான். ஜானகியின் கண்களில் இப்போது, இழப்பின் சோகத்தைக் கடந்த அதீத வெறுப்பு. ஒரு புழுவைப் பார்ப்பது போன்றதோர் அசூயை.
“என்னை லவ் பண்றதுக்கு குறுக்கே நின்ன ஜாதியை உங்களாலே மனசார வெறுத்து ஒதுக்க முடிஞ்சது. உங்க சிஸ்டர் ஒரு ஷெட்யூல்டு கேஸ்ட்பையனை காதலிக்கிறப்போ மட்டும் உங்களாலே ஜாதியை ஜீரணிக்க முடியலே. இல்லே? அப்போ, நீங்க ஜாதி வித்யாசத்தை வெறுக்கலே. வெறுக்கிறதும், விரும்பறதும் உங்க வசதிக்கேத்த மாதிரித்தான். இல்லே? இவ்வளவு மோசமான சிந்தனையை மூடிமறைச்சிக் கிட்டு, எப்படி உங்களாலே பழக முடியுது? சே! உங்களோட பழகுன இந்த ரெண்டு வருஷ அழுக்கை எந்தக் கங்கையிலே போய்க் கழுவுறது?”
வெடித்துச் சிதறிவிட்டாள். அவன் அருகில் நிற்கிற ஒரு கணத்தைக்கூட வெறுப்பானது போல, விறுவிறுவென நடந்தாள். எதையோ பற்றிப் பிடிக்கிற பேராவலோடு வரும் அலைகளின் இரைச்சல் அவள் மனசுக்குள் ஒலித்தது.
ஆபீஸ் போவதா வேண்டாமா என்று ஊசலாடினாள். அவள் மனம் நொறுங்கிப் போய்க் காணப்பட்டாள். கண்ணீரில் கரைந்தாள்.
‘இல்லை… இந்த மனுஷனை நினைச்சு அழுவது கூட இழிவு’ என்று நினைத்தாள். வழக்கம் போல ஆபீஸுக்கு வந்தாள்.
அவளுக்காக ஒரு தபால் காத்திருந்தது. தபால் தலை ஒட்டாத வெறும் கவருக்குள் ஒரு சின்னக் கடிதம். பிரித்தாள்.
‘அன்புள்ள ஜானகி,
வணக்கம். நேற்று, என் ஆயுளில் மறக்க முடியாத ஒரு நாள். ஏனெனில், தர்மாவேசமிக்க உனது சாட்டையடிகளில் தோலை உரித்துக் கொண்டு நான் புதிய பிறவி எடுத்த நாள். பெண்மைக்குரிய வீர்யத்துடன் உண்மையுடன் – நீ கொட்டிய அக்கினி வார்த்தைகளில் குளித்து என் மனம் சுத்தமடைந்தது.
நான் ஊருக்குச் செல்கிறேன், தங்கையை அழைத்து வருவதற்காக அல்ல. அவளது காதலுக்காக உறவினர்களுடனும், சமூகத்துடனும் போராடுவதற்காக. உனது நெருப்புச் சிந்தனை எனக்கு தைர்யத்தையும் வெற்றியையும் வழங்கட்டும்!
இனி நாம் சந்திப்பதும், சந்திக்காமலிருப்பதும் உனது விருப்பத்தைப் பொறுத்த விஷயம். இதோ, எனது போன் நம்பர்.
என்றும் உனது பிரியன் பரந்தாமன்’
போன் நம்பரும் குறிப்பிட்டிருந்தது. அந்த நம்பரை மனசுக்குள் அழுத்தமாகப் பதித்துக் கொண்டாள்.
– செம்மலர் – ஜூலை 1983.
– சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.