நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 2,599 
 
 

(1988ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-11

ஆதவனின் காலைக்கதிர்கள் சாந்தியின் கன்னத்தை அள்ளியபோது, அவள் திடுக்குற்றுக் கண்விழித்தாள். நேரம் 7.00 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. இரவு நீண்டநேரம் கண் விழித்திருந்ததில் நித்திரை அவளை அப்படி அடித்துப் போட்டு விட்டிருந்தது! அவள் அவசரமாகப் படுக்கையை விட்டெழுந்து அறைக்கு வெளியே வந்தபோது. சிவராசர் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வருவது தெரிந்தது. 

“அப்பா…. காலமை வேளையோட எங்கை போயிட்டு வாறீங்கள்?” சாந்தி கண்களைக் கசக்கியவாறே ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்டாள், 

“ராமும் தனராஜும் நேற்றிரவே வீடுகளுக்கு வந்திட்டினமாம். எனக்கு நேற்றிரவு முழுக்க அவங்கள் ரெண்டு பேரைப் பற்றியும் யோசினைதான். அதுதான்.விடிய நேரத்தோடயே போய் வீட்டில நிக்கினமோ எண்டு பார்த்துக் கொண்டு வந்தனான்.” சிவராசர் மகிழ்ச்சியுடன் கூறியவாறே தன் அலுவல்களில் கவனத்தைக் செலுத்தத் தொடங்கினார். சிவராசரின் அக்கறை சாந்திக்குப் புரிந்த பொழுது சிரிப்பு வந்தாலும், இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் என்பதை அறிந்தபொழுது பெரிய நிம்மதியாக இருந்தது. 

சாந்தி ‘மளமள’ வென்று வீட்டு வேலைகளைக் கவனித்து முடித்துவிட்டு வந்தபொழுது, மணி ஒன்பதிற்கு மேலாகி இருந்தது.பனி வெயில் சுளீரென்று தகித்துக் கொண்டிருந்தது. சுகந்தி ரியூசனுக்குப் போய் விட்டிருந்தாள். விடுமுறை நாளானதால் சிவராசரும் தென்னந் தோட்டத்திற்குப் போய்விட்டிருந்தார். சிவகாமி, சிவராசரின் அலுவலக உடைகளை அள்ளிப்போட்டு வைத்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். கொல்லைப்புறத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆடுகளும் பசியில் கத்திக்கொண்டு நின்றன. 

“அம்மா ஆட்டுக்குக் குழை வெட்டிப் போடட்டே?” சாந்தி கேட்டவாறே கத்தியையும் பெட்டியையும் எடுத்துக்கொண்டு ஆயத்தமானாள். 

“உங்கை குழை ஒண்டும் இல்லைப் பிள்ளை; வெட்டின கதியாலெல்லாம் இப்பத்தானே தழைச்சு நிக்குது… தென்னங் காணிக்குள்ளை கிடந்த குழைகளும் வெட்டி முடிஞ்சிது.” என்றவாறே சிவகாமி யோசித்தாள். 

“மாமா வீட்டு வளவுக்குள்ளை நிறைய முள்முருக்கு நிக்குதம்மா…” சாந்தி ஆவலாகக் கூறினாள். 

“அப்பிடியே? அப்ப ஒருக்கால் ஓட்டமும் நடையுமாய்ப் போய், அதிலை வெட்டிக்கொண்டு வாவன்; நல்ல பிள்ளை…” சிவகாமி கெஞ்சலாகக் கூறிவிட்டு, மீண்டும் தன் வேலையில் மூழ்கிக் கொண்டாள். மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள, இரகசியமாய் நாணிக் கொண்ட சாந்தி, 

“மாமா வீட்டிலை படம் போடப்போகினம் எண்டும் சொன்னவையள்; அதையும் எத்தினை மணிக்கெண்டு கேட்டுக்கொண்டு வந்திடலாம்” சிவகாமிக்குக் கேட்கக் கூடிய விதத்தில் படம்பற்றி நாசூக்காகக் கூறியவாறே புறப்பட்டாள். 

“அது … படம் பின்னேரம் நானே போடுவினம்; அதுக்குப்.. பிறகு போகலாம்; இப்ப, சுணங்காமல் வந்துசேர்” சிவகாமி கூறுவது அவள் காதுகளில் விழுந்தபோது அவளுக்குச் சுருக்கென்றது. 

‘அம்மாவுக்கு நான் ராமத்தானோட கண்டபடி கதைக்கிறதும் அவ்வளவு விருப்பமில்லைப் போலை கிடக்குது. அவவுக்கு மரியாதையும் கௌரவமும் தான் முக்கியம். அது தான், கலியாணத்துக்கு முதல் நாங்கள் பழகிறதை விரும்பயில்லைப் போல கிடக்குது. ஒரு பாட்டிலை … அதுவும் சரி தானே….’ சாந்தி தனக்குள் யோசித்தவாறே செல்லநாதர் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தாள். 

செல்லநாதரின் வீட்டை அண்மித்தபொழுது நாய் குரைத்தது. கேற்றைத் திறந்து உள்ளே நுழைய, வாலை ஆட்டிய நாய் அவள் கால்களை நக்கிவிட்டு மெதுவாகப் போய் ஒரு மூலையில் படுத்துக்கொண்டது. 

முன் கதவு அகலத் திறந்திருந்தது. யாரும் உள்ளே இருப்பதற்குரிய அடையாளங்கள் தெரியவில்லை. அவள் “மாமி….” என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள். 

சமையலறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. யாரையும் காணவில்லை. ராமின் அறையை மெல்ல எட்டிப்பார்த்தாள். ராமையும் காணவில்லை! அவளுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. கையில் கிடந்த பெட்டிக்குள் கத்தியைப் போட் டுக் கொண்டு கிணற்றடிப்பக்கம் நடந்தாள். ஒழுங்கை வீதியில் சிலரின் சிரிப்போசை கேட்டது. மதிலோடு கிடந்த கொங்கிறீற் கல்லில் ஏறி, மெல்ல எட்டிப்பார்த்தாள். நேற்று ராமுடன் சேர்ந்து போகும்பொழுது வேலியால் பார்த்துக்கொண்டிருந்த அதே முகங்கள். அவள் சட்டென்று கீழே குனிந்துகொண்டாள். 

“சாந்தியக்கா… ஏன் ஒளிக்கிறீங்கள்?; நேற்று எங்கட ஒழுங்கையெல்லாம் ஃபைன் ஆய் இருந்திது” சுகந்தியின் சினேகிதி – கலா, கிண்டல் பண்ணிக்கொண்டு போக, இவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவர்களது சிரிப்போசை மெல்ல மெல்லத் தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. 

சாந்தி கொழுக்கைத் தடியை எடுத்து, முருக்கங் கிளையை வளைத்து, குழைகளை ஒடிக்கத் தொடங்கினாள். திடீரென்று இடையில் ஏற்பட்ட குறுகுறுப்பான ஸ்பரிசத்தினால் திடுக்குற்று கைகளை விட்டபொழுது, முருக்கங்கிளை விசுக்கென்று மேலே எகிறியது. திரும்பிப் பார்த்தாள். ராம் புன்னகையுடன் அருகில் நின்றிருந்தான். அப்போது தான் குளித்து மாற்றிய சாரமும் ஈரம் துவட்டிக் கலைந்த தலையுமாக நின்றிருந்தான். அவனது வரவு அவளுக்கு உள்ளூர ஆனந்தமாக இருந்த பொழுதிலும் பொய்க்கோபத்துடன் தலையைத் திருப்பினாள். 

“ஏய்! என்ன இது? என்ன கோபம்?’ அவன் மீண்டும் சீண்டினான். அவள் எதுவும் பேசாமல், மீண்டும் கிளையை வளைத்து, குழையை ஒடிக்கத்தொடங்கினாள். 

“நான் முழுகிப்போட்டு… உங்கட வீட்டுக்குத்தான் வர ஆயத்தப் படுத்திக்கொண்டு நிண்டனான். நீயே வந்திட்டாய்; பிறகென்ன?” ராம் குஷியாகக் கூறியவாறே துவாயால் தலையைத் துவட்டத் தொடங்கினான். சாந்தி எதுவும் பேசவில்லை. 

“என்ன இது? காளி சிலை மாதிரி உக்கிரமாய் நிக்கிறாய்? வீட்டிலை ஏதும் பிரச்சினையே?” ராம் புரியாமல் கேட்டான். 

“வீட்டிலை இல்லை; றோட்டிலைதான் பிரச்சனை” சாந்தி சட்டென்று திரும்பிக் கூறினாள். 

”என்னது? றோட்டிலயோ…? என்ன பிரச்சினை?” 

“நேற்று… தென்னங்காணிக்குப் போகேக்க என்ன வேலை பாத்தனிங்கள்? கலா என்னை நல்லாய்ப் பகிடி பண்ணிப்போட்டுப் போறாள். எல்லாப் பெட்டைகளும் சிரிக்கிறாளுகள்.” 

“ப்பூ ! இதே பிரச்சனை? நானும் என்னவோ ஏதோ எண்டு பயந்திட்டன். ஏன்… அவையள் உதுகளே பார்த்துக்கொண்டு இருக்கிறவையளாம்?… கனக்கக் கதைச்சால் றோட்டாலை உன்னைத் தூக்கிக் கொண்டும் போவன் தெரியுமே? வேணுமெண்டால் அதையும் வந்து பாக்கச் சொல்லு”

“ம்… இது கனடா இல்லை!” 

“அது எனக்கும் தெரியும்” கூறியவாறே ராம் அவள் தலையில் செல்லமாகக் குட்டினான். 

“ஐயையோ… மாமி…” என்று சத்தமாகக் கத்தியவாறே, அவள் தன் தலையைத் தடவி விட்டுக்கொண்டு சிணுங்கினாள். 

“ஏய் …ஏய்… கத்தாதை ; சனமெல்லாம் ஓடி வரப் போகுது.” 

“பின்னையென்ன.. எனக்கு உண்மையா நோகுது” அவள் சிணுங்கியவாறே அவன் கையில் கிள்ளினாள். 

“நீ… சும்மா சும்மா என்னைக் கிள்ளினால் நான் என்ன செய்வனெண்டு தெரியுந்தானே?” 

“என்ன செய்வியள்?… ஏதும் செய்தால் நான் மாமி எண்டு கத்துவன்” 

“நீ இப்ப நாயாய்க் கத்தினாலும் மாமி வரமாட்டா; மாமியும் மாமாவும் கோயிலுக்குப் போயிட்டினம் தெரியுமோ?” 

“அதுக்கென்ன… பக்கத்து வீட்டு ஆக்களெண்டாலும் ஓடி வருவினம் தானே?” 

“ஓஹோ… தங்களுக்கு அப்பிடியும் ஒரு எண்ணம் இருக்கிறதோ?” என்று நாடகப் பாணியில் அபிநயம் செய்தவாறே, அவளை வேண்டுமென்றே இழுத்து அணைத்தான். அவள் வேகமாக அவனைத் தள்ளிவிட்டு “மாமி … மாமி” என்று வீறிட்டுக் கத்த, அவன் பயத்தினால் விலகிக்கொண்டு பற்களை நெருமியவாறே ஓடிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான். 

சிரிப்பை அடக்கிக்கொண்ட சாந்தி, ஒடித்த குழைகளைச் சேர்த்து அள்ளிக்கொண்டு வாசலுக்குவர, ஒழுங்கைச் சந்திக்கு அருகாமையில் படபடவெனத் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்க ஆரம்பித்தன. திடுக்குற்றவள், பயத்தினால் கைகள் உதறல் எடுக்க, குழைப்பெட்டியைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஹோலுக்குள் ஓடினாள். மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க சுற்றிப்பார்த்தவாறே ராமைத் தேடினாள். 

ராம் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தவாறே, ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். 

“அங்கை சுட்டுக் கேக்குது… நீங்கள் இங்கை புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறீங்கள்.” சாந்தி அவனருகில் போய் நின்று படபடத்தாள். 

“நான் வாசித்துக் கொண்டிருந்தால் உனக்கென்ன செய்யுது? நீ போய் மாமி… மாமி எண்டு கத்திக்கொண்டு நில்லன்” ராம் கோபமாகக் கூறிவிட்டு மீண்டும் புத்தகத்தில் கண்களை ஓடவிட்டான். அவனது செய்கை, அந்தக் கலக்கத்தின் மத்தியிலும் அவளைச் சிரிக்கவைத்தது. 

“என்ன ராமத்தான்? நான் சும்மா பகிடிக்குத் தானே அப்பிடிச் செய்தனான்.” என்றவாறே அவள் அவனது தோளில் கையை வைத்தாள். 

“பின்னை யென்ன சும்மா தொட்டால்கூட ஏதோ உயி ரையே விடுற மாதிரி நிக்கிறாய்!” ராமிற்குக் கோபம் மாறியது. மெல்லச் சிரித்தான். 

சந்தியில் வாகன இரைச்சல்கள் கேட்டன.

“ராமத்தான் எனக்குப் பயமாயிருக்குது!” அவள் நடுங்கினாள், 

“உது… சும்மா சனத்தை வெருட்டிறதுக்கு வெடி வச்சிட்டுப்போறாங்கள்; உவங்களுக்கும் குறிபார்த்துச் சுடத் தெரியுமே?… அங்கை, றக் எல்லாம் போற சத்தம் கேட்குது” என்றவாறே ராம் அவளின் கைகளைப் பற்றினான். 

“உவங்களின்ரை கெட்டித்தனமெல்லாம் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” 

“எப்பிடித் தெரியுமோ?… நான் கனடாவிலை இருந்தாலும் இந்த நியூஸ் எல்லாம் எங்களுக்குச் சுடச்சுட வரும். போதாததிற்கு நேற்று தனராஜும் கனக்கப் புதினங்கள் சொன்னவன்” 

“அப்ப நாங்கள் கனடாவுக்குப் போனாலும் இந்த நியூஸ் எல்லாம் அறிஞ்சு கொண்டிருக்கலாம்”

“பின்னை… நீ கனடாவைப் பற்றி என்ன நினைச்சாய்? நீ வாவன். நிறையப் புதினமெல்லாம் காட்டிறன்…” 

”அது சரி, எப்பவாம் கல்யாணம்?”

“உனக்கும் அவசரமே?” ராம் செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டினான். அவள் நாணத்தோடு சிரித்தவாறே அவனிருக்கும் கதிரையின் கைப்பிடியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். 

“சாந்தி, கல்யாணம் நடக்குதோ நடக்கேல்லையோ, நான் கனடாவுக்குப் போகேக்க உன்னையும் கூட்டிக்கொண்டு போடுவன்; அவ்வளவுதான்”. 

“பார்த்தீங்களே; உங்களுக்கும் அவசரம் தானே?”

“பின்னை… இத்தனை வருசமாய் ஒரு பொம்பிளையைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் பிரமச்சாரியாகவே இருக்கிறன். எனக்கு இருபத்தெட்டு வயசாச்சுது. இனிமேலும் பொறுக்க ஏலுமே?” 

“ம்… நான் வரமாட்டன் எண்டால்…” 

“தூக்கிக்கொண்டு போயிடுவன்”. 

இருவரும் சிரித்தார்கள். சாந்தி மெல்ல எழுந்தான். 

“ராமத்தான், நேரமாகுது; நான் போகப்போறன்” என்றவாறே புறப்பட ஆயத்தமானாள். 

“பின்னேரம் நாலுமணிக்குப் படம் போடுவம்” ராம் கூறியதும், “என்ன படம்?” என்றாள் ஆவலாக. 

“அது… இனிமேல்தான் யோசிக்கவேணும்” 

“ஏன்… ஒரு மணிக்கே ஸ்ராட் பண்ணுங்கோவன்”

“ஐயையோ! ஒரு மணிக்கெண்டால்… ஐயாவும் அம்மாவும் இங்கைதான் நிற்பினம். நாலு மணியெண்டால் ரெண்டுபேரும் எங்கையாவது வெளிக்கிட்டு விடுவினம்; அப்ப… நாங்கள் ஃபிறீ தானே” 

“ஓஹோ! அப்பிடியோ ஏன்… நான் சுகந்தியையும் கூட்டிக்கொண்டு தானே வருவன்” 

“ஐயோ! அவளை எதுக்கு இங்கை? நீ மட்டும் தனியா வா” 

“கடவுளே நான் மட்டும் தனியா வர.. வீட்டிலை அம்மா என்ன நினைப்பா?”சாந்தி கூறியதும் ராம் சிரித்தான். 

“சாந்தி, ஒண்டு செய்வமே?தனராஜ்ஜயும் வரச் சொல்லி விடுவம். எதிர்பாக்காமல் சந்திக்கிறமாதிரி… சுகந்தியையும் அவனையும் ஜொயின் பண்ணி விடுவம்” ராம் கூறியபோது சாந்திக்கு சிரிப்பு வந்தது. 

“நீங்கள் சரியான ஆள்தான்…; கல்யாணம் பேசப்படுகுது எண்ட உடனேயே… அவையள் ரெண்டு பேரையும் பழக்கப் படுத்தப் பாக்கிறீங்கள்.” 

”நன்மைக்குத்தானே? சுகந்தி எங்களை டிஸ்ரேப் பண்ணவும் மாட்டாள்… அவளுக்குத் தனிமையும் போயிடும்; வருங்கால மாப்பிள்ளையோட அவள் கதைச்சதுமாகும்”

“டிஸ்ரேப் பண்ணுறதுக்கு என்ன இருக்கு? அப்பிடி யென்ன வெட்டி விழுத்தப் போறீங்கள்?” 

“நீ… வாவன்; நான் வெட்டி விழுத்திறன்” 

“ம்… சரி…” அவள் விடைபெற்றுக்கொண்டு புறப் பட்டாள். 

“அம்மா, ஐயா வர நேரமாகும் என்னைத் தனியா விட்டிட்டு அவசரப்பட்டுப் போறாய்…” ராம் அதிருப்தியோடு கூறினான். 

“ப்ளீஸ்… ராமத்தான்; அம்மா பேசுவா. பின்னேரம் வருவன் தானே” சாந்தி போய்விட்டாள். 

அத்தியாயம்-12 

நேரம் ஒரு மணியாகி விட்டிருந்தது. நல்ல வெயில் நேரமாக இருந்த போதிலும் மேகம் ஏனோ இருண்டு கிடந்தது. சாந்தியும் சுகந்தியுமாகச் சேர்ந்து மதிய உணவை அருந்திவிட்டு, ஹோலுக்குள் வந்து ஓய்வாக அமர்ந்து கொண்டார்கள். 

“மழை பெய்யப்போகுது போலை கிடக்குது” சிவகாமி கூறியவாறே இவர்களருகில் வந்து அமர்ந்துகொண்டாள் அவள் கூறிய வாய் மூடமுன், பொத்துக்கொண்டு வந்த மழை பொலபொலவென்று பொழிய ஆரம்பித்தது. 

“இதென்ன… புதினமாய்க் கிடக்குது? பங்குனியிலை கொட்டிற மழையைப் பாருங்கோ” சிவகாமி ஆச்சரியத்தோடு நாடியில் கை வைத்தாள். 

“அம்மா அது… நான் இண்டைக்குப் புதிசாய் நட்ட பூமரத்துக்காகத்தான் பெய்யுது….” சுகந்தி சிரித்தவாறே கூறினாள். முற்றத்தில் மலர்ந்து நின்ற றோஜா மலர்களின் மெல்லிய இதழ்களில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஒருவித ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சாந்தி, வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டதும் எட்டிப் பார்த்தாள். செல்லநாதர் மழையில் நனைந்தவாறு அவசரம் அவசரமாக உள்ளே வருவது தெரிந்தது. 

“என்னண்ணை… அவசரமாய் வாறியள்? மழைக்குள்ளையும் நனைஞ்சுபோட்டியள் போலை கிடக்குது” சிவகாமி கேட்டவாறே கதிரையை இழுத்துப் போட்டாள். கதிரையில் அமர்ந்த செல்லநாதர், மழையில் நனைந்த தலையைக் கைகளால் கோதியவாறே, 

“எங்கை… உன்ரை மனிசனைக் காணேல்லை?” என்ற வாறே சுற்றுமுற்றும் பார்த்தார். 

“அவர்…இப்பதான் சாப்பிட்டவர்; அலுப்போடை படுத்திருக்கிறார். ஏன்… என்ன விசயம்? அவசரமே?” சிவகாமி நெற்றியைச் சுழித்தவாறே வினாவினாள். 

“ஓ; அவசரந்தான்… நீ அவரையும் எழுப்பிக்கொண்டு வாவன்.” செல்லநாதர் ஏதோ முக்கியமான விடயம் கதைக்கப் போகும் பாவனையில் கட்டாயப் படுத்தினார். சாந்திக்கு அவரின் அசாதாரண நிலை ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

“சாந்தி.. மாமாவுக்குத் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாணை” சிவகாமி குரல் கொடுத்ததும் அவள் தயங்கித் தயங்கிச் சமையலறைக்குள் நுழைந்தாள். 

கண்களைக் கசக்கியவாறே வெளியில் வந்த சிவராசர், 

“என்ன சம்மந்தியார்? நாளெல்லாம் குறிச்சாச்சுதே?” என்று கேட்டவாறே செல்லநாதரின் அருகில் ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார். சிவகாமி சிவராசரின் பின்னால் வந்து நின்று கொண்டு, 

“அண்ணை விசயத்தைச் சொல்லுங்கோவன்” என்று அவசரப் படுத்தினாள். 

“நாளெல்லாம் குறிச்சாச்சுது பாருங்கோ… ஆனால் சேரப்போற சோடிகள்தான் இப்ப மாறுபட்டு நிக்கிதுகள்…” செல்லநாதர் மெல்ல இழுத்தார். சாந்திக்குப் பகீரென்றது. அவள் கரங்கள் நடுங்க, சமையலறை வாசற் கதவைப் பற்றியபடி நின்றிருந்தாள். 

“சம்மந்தி என்ன சொல்லுறியள்?…” சிவராசர் புரியாமல் நெற்றியைச் சுளித்தார். 

“சாந்தியின்ரை ஓலையும் ராமின்ரை ஓலையும் எலியும் பூனையும் மாதிரித்தானாம் இருக்குமாம். துப்பரவாய் பொருத்தமில்லையாம். இது ரெண்டையும் ஒண்டு சேர்த்தால் வில்லங்கம்தான் வருமெண்டு சாத்திரியார் அடிச்சுச் சொல்லிப் போட்டார்.” செல்லநாதர் கூறியபோது சிவராசரும் சிவகாமியும் அதிர்ச்சியுற்றனர். 

“அண்ணை… நீங்கள் அப்பிடியெண்டால் கார்த்திகேசு சாத்திரியாரிட்டையும் கொண்டுபோய்க் கேட்டுப் பார்க்கேல்லையே?…” சிவகாமி அதிருப்தியோடு அங்கலாய்த்தாள். 

“நீயும் ஒண்டு. கறுப்பையா இப்பிடியெண்டு சொன்ன உடனேயே நான் எனக்குத் தெரிஞ்ச அத்தனை பேரட்டை போய்க் கேட்டுக் கொண்டுதான் வாறன்” செல்லநாதர் கூறியதும், 

“அப்ப…இப்ப என்ன செய்யிறது?” சிவராசர் நிலை குலைந்துபோய்க் கேட்டார். 

“சிவகாமி… இது பிழைச்சுப் போட்டுதெண்டு நீங்கள் யோசிக்கத் தேவையில்லை; ராமின்ரை ஓலை சுகந்தியின்ரை ஓலையோட நல்லாய்ப் பொருந்துதாம். அது மாதிரி… தனராஜுக்கும் சாந்திக்கும் அசல் பொருத்தமாம். இப்ப என்ன வந்திட்டுது? எப்பிடிப் பார்த்தாலும் ஓண்டுக்குள்ளை ஒண்டுதானே” செல்லநாதர் அவர்களைத் தேற்றுவது போலக் கூறினார். 

“அண்ணை…ராம் ரெண்டு மாசத்திலை கனடாவுக்குப் போறதுக்கிடையில, கலியாணத்தை. முடிச்சுப் போட வேணுமெண்டு சொன்னியள். இப்பிடியெண்டால் எல்லாம் பிழைக்கப்போகுதே?” சிவகாமி குழப்பத்தோடு வினாவினாள். 

“ஏன் பிழைக்கப்போகுது? முந்திப் பிந்தியெண்டு வைக்காமல்… உன்ரை மூத்தவளின்ரையையும் இளையவளின்ரையையும் ஒரே மேடையில் முடிச்சிட வேண்டியதுதான், ராம் போகேக்கை… சுகந்தியையும் கூட்டிக்கொண்டு போயிடலாம்” செல்லநாதர் ஒருவித ஆர்வத்தோடு கூறினார். 

“அது நல்ல ஐடியா தான்” சிவகாமியும் சிவராசரும் ஏககுரலில் சம்மதம் தெரிவித்தனர். 

சாந்தி செல்லநாதரிடம் தேனீரை நீட்டினாள். அவள் உள்ளம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. அப்படியே அவர் காலில் விழுந்து கதறியழவேண்டும் போல மனம் துடித்தது. அவளை மீறியெழுந்த உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த, உதடுகளைப் பற்களால் அழுத்திக் கொண்டாள். அவசரமாக அறைக்குள் நுழைந்துகொண்டவள் கட்டிலில் புரண்டு, தலையணையில் முகம் புதைத்தாள். வெடித்துக் கொண்டுவந்த அழுகையில் தலையணை ஈரமாகிக்கொண்டிருந்தது. 

‘எனக்கும்… தனா மாஸ்ரருக்கும் …! ஓ! ராமத்தான்…’ அவளால் கற்பனை பண்ணிப் பார்க்கவே இயலாமல் இருந்தது. பச்சைக் குழந்தையாய்ப் பரிதவித்து விம்மி விம்மி அழுதாள். 

“வாற இருபத்தேழாம் திகதி நல்ல நாளாம்” செல்லநாதர் தான் கூறினார். 

“இண்டைக்குப்… பதினாறாந் திகதியாச்சுது…இன்னும் பத்து நாள்தானே இருக்குது” சிவகாமி விசனப்பட்டாள். 

“அதுக்கென்ன. நினைச்சால் நல்ல வடிவாய் முடிக்கலாம்” செல்லநாதர் கூறியவாறே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். 

“அக்கா…” சுகந்தியின் கைகள் சாந்தியின் தோள்களிலே ஆதரவாகப் பதிந்தபொழுது, அவள் தலையை நிமிர்த்தினாள். 

“சுகந்தி சுகந்தி…” அவள் சுகந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு குலுங்கி அழுதாள். 

“அக்கா, என்ன இது? கண்ணைத் துடையுங்கோ”

“சுகந்தி எனக்கிந்த முடிவைத் தாங்க முடியேல்லை! அம்மாவிட்டைச் சொல்லு சுகந்தி” சாந்தி தன் கண்களைத் துடைத்தவாறே கெஞ்சினாள். 

“அக்கா, நாங்கள் இப்ப எதைச் சொன்னாலும் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளவே மாட்டினம். அவையளுக்கு…
இப்பவும் நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் எண்ட எண்ணந்தான்! எங்களை ஒரு சொல்லுக்கூடக் கேட்காமல், அவையள் எடுத்த முடிவின்ரை விளைவுகளை அவையளே அனுபவிக்கட்டும். நாங்கள் செய்ய வேண்டியதுகளை நியாயத்தோடை செய்வம்”

“சுகந்தி ! நீ… நீ என்ன சொல்லுறாய்..?” 

“அக்கா,இந்த முடிவு இவையளாலை மட்டும் தான் நிச்சயிக்கப்பட்டது. நியாயமான முடிவொண்டு… ஏற்கனவே ஆண்டவனாலை நிட்சயிக்கப்பட்டிருக்கும்'” 

“சுகந்தி எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை” 

“அக்கா, நாங்கள் வழக்கம் போலை ஒண்டுமே தெரியாத மாதிரி… சாதாரணமாய் மாமி வீட்டை படம் பார்க்கப் போவம். அங்கை போய், ராமத்தானிட்டை எல்லா விசயத்தையும் சொன்னால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க ஏலும்”. 

“சுகந்தி, இப்பிடி ஒரு இடியைக்கேட்ட பிறகு என்னால ஒண்டுமே செய்ய ஏலாதாம் நான் எந்த உரிமையோ எந்த நம்பிக்கையோட அவரைப் பார்த்துக் கதைக்கிறது? நான் வரேல்லை சுகந்தி … நீ போறதெண்டால் போயிட்டு வா; எனக்கு… தலையெல்லாம் ஒரே பாரமாய் இருக்குது…!”

சுகந்தி மேலும் அவளை வற்புறுத்தாமல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். 

சாந்திக்கு தன் மனம் அமைதிபெற, ராமைச் சந்திக்க வேண்டும் போல மனம் துடித்தது! 

செல்லநாதரின் வீட்டுக்குப் போயிருந்த சுகந்தி, அரை மணிநேரத்தில் திரும்பியிருந்தாள். சாந்திக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஏதோ அசாதாரணமாக நடந்திருக்கவேண்டும் என மனம் கூறியது. 

“சுகந்தி!…நீ படம் பாக்கேல்லையே?” சாந்தி தான் கேட்டாள். 

“இல்லை… படம் போட்டால்தானே பாக்கிறதுக்கு!”

“ஏன்..?” 

“உங்களுக்காகவே போட வெளிக்கிட்ட படம்! நீங்கள் வராவிட்டால் ராமத்தான் ஏன் போடப்போகிறார்?” 

“சுகந்தி உண்மையாய்த்தானோ?” 

“நான் போனபோது அங்கை ராமத்தானும் தனா மாஸ்டரும் நிண்டவையள். நீங்கள் வரயில்லை எண்ட உடனை ராமத்தானுக்கு மூட் அவுட்டாப் போச்சுது! நீங்கள் ஏன் வரயில்லையெண்டு என்னைப் பிச்சுப் பிடுங்கிக் கேட்கத் தொடங்கிட்டார். நான். தனா மாஸ்ரரும் நிற்க…நடந்த உண்மையெல்லாத்தையும் அப்பிடியே சொல்லிப் போட்டன் ” 

“சுகந்தி…?” 

“அக்கா, ஏன் பயப்படுறியள்? தனா மாஸ்ரர் கூட எங்களுக்குத்தான் சப்போட். ராமத்தான் இண்டைக்கு இரவு மாமாவிட்டைத் தன்ரை விருப்பத்தைச் சொல்லிப் பார்க்கப் போறாராம். அதுக்கு… மாமா ஒப்புக் கொள்ளா விட்டால் நாளைக்கு ராமத்தான் இங்கை வருவாராம்” சுகந்தி கூறியபோது சாந்திக்கு ஒரு வித நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது: 

அன்றைய இரவு படுக்கைக்குச் சென்ற அவளுக்குத் தூக்கமே வரவில்லை. 

‘ராமத்தான் மாமாவோடை கதைக்கிற விசயம் வெற்றியாய் முடிய வேணும். ராமத்தான் கெட்டிக்காரன்…… எப்பிடியும் மாமாவைச் சம்மதிக்க வைச்சிடுவார். சாதகப் பொருத்தமென்ன வேண்டிக் கிடக்கு?; எங்கட மனசுக்குள்ளை இருக்கிற பொருத்தம்தானே உண்மையான பொருத்தம். இந்த மனசு… ராமத்தானைவிட இன்னொருவன்ரை மனசை நினைச்சுப் பார்க்காது. மாமாவுக்கு அதை நல்லாய்விளங் கப்படுத்த வேணும்’

சாந்தி பல விதமாக எண்ணியெண்ணி மன அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தாள். பொழுது எப்போது விடியும்… முடிவு எப்போது தெரியும்? என்ற ஆவல் அவளைத் துளைத்துக்கொண்டிருந்தது 

ஏதோ ஒருவித நம்பிக்கையில் கண்களை மெலிதாக மூடியவள் மீண்டும் கண்விழித்தபோது பொழுது விடிந்திருந்தது. 

மணி எட்டு அடித்தபோது சிவராசர் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். சுகந்தி, ஒரு நண்பியாக இவளுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பாடபாலைக்குப் புறப்பட்டுவிட்டாள். சிவகாமியும் கடைக்குப்போயிருந்தாள். யாரும் வீட்டில் இல்லாத அந்தத் தனிமை ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது. அவள் கதிரையில் சாய்ந்தபடி அண்ணாந்து முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது. ராம் அவசரம் அவசரமாக உள்ளே வந்து கொண்டிருந்தான். சாந்திக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது. சட்டென்று கதிரையிலிருந்து எழுந்துகொண்டாள். 

‘வியர்க்க விறுவிறுக்க வாறார்… என்ன முடிவைச் சொல் லப்போறார்?…’ 

“சாந்தி… கொப்பர் போட்டாரே? கொம்மா எங்கை” சுற்றுமுற்றும் பார்த்தவாறே ராம் பதற்றத்துடன் கேட்டான். 

“ஒருதருமில்லை… நான்தான் தனிய நிக்கிறன். ஏன் ராமத்தான்? ஏன் பதற்றப்படுறீங்கள்?” சாந்தி நெற்றியைச் சுளித்தவாறே மெதுவாகக்கேட்டாள். 

“சாந்தி, நேற்று சுகந்தி, இங்கை நடந்த எல்லா விசயமும் சொன்னவள். நான் நேற்று இரவு முழுவதும் ஐயாவோடை சண்டைதான்! ஐயா கடைசி மட்டும் மசியவே மாட்டாராம். கடைசியில … அவர் சந்தேகப்படாதபடி … நானும் அவரோட ஒத்துப்போறமாதிரி பணிஞ்சுபோயிட்டன். நாங்கள் இப்பிடியே இருந்தால்… எல்லாருமாய்ச் சேர்ந்து வாற இருபத்தேழாம் திகதி எங்களைக் குழப்பியடிச்சுப் போடுவினம். நான் மாட்டன் எண்டு சொன்னாலும், ஐயா புத்திசாலித்தனமாய் உனக்கும் தனாவுக்கும் விசயத்தை முடிச்சுவிட்டிடுவார். நான் நாளைக்கே கொழும்புபோய், கனடாவுக்கு ஓடித் தப்பப்போறன்” 

“ராமத்தான்!?” 

“நான் தனியா இல்லை; உன்னையும் கூட்டிக்கொண்டுதான்”  

“அ… ராமத்தான் ..?!” சாந்தி அதிர்ச்சி மேலிட, நிலை குலைந்துபோய் அவனை ஏறிட்டு நோக்கினாள். 

“சாந்தி…இப்ப கனக்கக் கதைக்க நேரமில்லை.உனக்கு நான் வேணுமெண்டால், உன்ரை பாஸ்போட்டையும், ஐடென்றிற்றி காட்டையும் மட்டும் எடுத்துக்கொண்டு, நாளைக்குக் காலமை ஆறுமணிக் கொழும்பு பஸ்சுக்கு ஆயத்தமாய்… அஞ்சு மணிக்கே உந்த ஒழுங்கைச் சந்திக்கு வா ; நான் காரோடை நிற்பன்; சரிதானே? ஐயா இப்ப இங்கை வந்தாலும் வருவார். ஆனபடியாலை நான் போட்டுவாறன். சொன்னதுகளை மறந்திடாதை” ராம் கூறியவாறே அவசரமாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான். 

அத்தியாயம்-13 

சாந்தி மிகவும் ஆடிப்போயிருந்தாள். அவளுக்கு மூளையே இயங்க மறுத்தது, திடீரென்று ஏற்பட்டுவிட்ட திகைப்பில் சிந்தனைகள் சீர்பெறாமல் எங்கோ தடுக்கி விழுந்து கொண்டிருந்தன. 

‘கடவுளே! எல்லாரையும் பகைச்சுக்கொண்டு, கனடாவுக்குப் போய்!’ அவளுக்குக் கற்பனை பண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது. 

‘ராமத்தானைத் தவிர வேற ஒருத்தரை என்னால கல்யாணஞ் செய்ய ஏலாதெண்டிறது உண்மைதான். ஆனால்… அதுக்காக… அம்மா, அப்பா, சுகந்தி எல்லாரையும் தலை குனிய விட்டிட்டுப் போய் வாழுற அளவுக்கு… நான் ஒரு வாழ்க்கையைத் தேடவேணுமே? ஊர்பேச, உலகம் சிரிக்க, நாளைக்குச் சுகந்தியின்ரை வாழ்க்கை என்ன கதியாகும்? வேண்டாம் இந்த முடிவு வேண்டவே வேண்டாம்’ அவளுக்குத் தலை வலித்தது பித்துப் பிடித்துவிடும் போல் இருந்தது. 

பின்னேரம், சுகந்தி பாடசாலையால் வந்தவுடன் சாந்தி காலையில் நடந்த சம்பவங்களுடன் தன் மனக்குமுறலையும் அவளிடம் இரகசியமாகக் கொட்டி அழுதாள். 

“அக்கா, ராமத்தான் எடுத்த முடிவுதான் நல்ல முடிவு! நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கிறேன்” என்று 

சுகந்தி கூறிமுடிக்கமுன், 

“சுகந்தி! நீயும் இதுக்கு ஒத்துக் கொள்ளுறியே?”. சாந்தி வியப்போடு வினாவினாள். 

”அக்கா, ராமத்தானுக்கு உங்களிலை அன்பும் அக்கறையும் இருக்கிற படியால்தான் இப்பிடியொரு முடிவை எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு உள்ளத்தை இழந்தபிறகு… இங்கையிருந்து எதைத்தான் சாதிச்சுப்போடுவியள் எண்டு சொல்லுங்கோ. வாற இருபத்தேழாம் திகதி… ராமத்தானுக்குக் கல்யாணம் நடக்காவிட்டாலும், உங்களுக்கும் தனா மாஸ்ரருக்கும் கலியாணம் எண்டு நிச்சயித்துப் போட்டினம்! உங்களுக்கு முடிச்சால் தான், ராமத்தானை வழிக்குக் கொண்டு வரலாமெண்டு. இப்ப மாமா ஓடித்திரியிறார்” 

சாந்தி எதுவுமே கூறமுடியாமல் விம்மி விம்மி அழுதாள். 

“அக்கா, இதிலை. அழுது ஆகப்போறது ஒண்டுமே யில்லை; முதலிலை கண்ணைத் துடையுங்கோ” 

“சுகந்தி… நாங்கள் இந்த முடிவை எடுக்கிறதாலை உன்ரை எதிர்காலம்…?” 

“அக்கா, அதைப்பற்றி நீங்கள் பயப்படவே வேண்டாம். நீங்கள் கனடாவுக்குப் போனாலும், எனக்கும் தனா மாஸ்ரருக்கும் கலியாணம் நடந்தே தீரும். பொருத்தமோ பொருத்தமில்லையோ நடக்கத்தான் போகுது. உங்கட விசயம் தெரிஞ்ச உடனை என்னைக்கட்டிறதுக்கு மற்றவை பின் வாங்கினாலும் தனாமாஸ்ரர் பின்வாங்கமாட்டார். அவருக்கு நேற்று, எல்லா விசயமும் விளக்கமாய் நானும் ராமத்தானும் சொன்னனாங்கள். அவர்கூட இந்த முடிவுக்கு நிச்சயமாய் சம்மதிச்சிருப்பார்.” 

சாந்தி எண்ணச் சுமையோடு பெருமூச்சொன்றை விட் டுக் கொண்டாள். 

“அக்கா, நான் சொன்னதெல்லாத்தையும் நல்லாய் யோசித்துப் பார்த்து, மனப்பூர்வமாய்… ஒரு திடமான முடிவை எடுங்கோ” 

இரவு முழுவதும் சாந்தி கண்விழித்த நிலையிலேயே படுக்கையில் கிடந்தாள்! நெஞ்சம் முழுவதும் அன்றைய சம்பவங்கள் ஊமைச்சுமைகளாய் அவளை அழுத்தியிருந்தன. அவளுக்கு அழுகை வரவில்லை! முகட்டைப் பார்த்தபடி அசையாமல் கிடந்தாள்! நடுநிசியின் நிசப்தத்தில் ஒரு பல்லி மட்டும் அடிக்கடி சூள் கொட்டிக்கொண்டிருந்தது, நேரம் செல்லச் செல்ல … ஏனோ அவள் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. சட்டென்று எல்லா யோசனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ராமிடம் ஓடிச்சென்று இந்த முடிவை மாற்றும்படி கூறி, கதறி அழவேண்டும் போல் மனம் துடித்தது! 

“உனக்கு நான் வேணுமெண்டால்…” அன்று பகல் வியர்க்க விறுவிறுக்க, ராம் கூறிய அந்த வார்த்தைகள் அவள் ஞாபகத்தில் வர, சட்டென்று அவளின் மனத்துடிப்பு அடங்கிப்போவதுபோல இருந்தது. நீண்டநேர மனப்போராட்டத்தின் பின்னர் ஒரு உறுதியான முடிவை எடுத்துக்கொண்டாள். 

பொழுது புலருமுன் படுக்கையிலிருந்து எழுந்த அவள், ஓசைப்படாமல் முகம் கழுவி, தலைசீவி, பொட்டு வைத்து, உடை மாற்றிக்கொண்டு, ஆயத்தமாக எடுத்துவைத்த பொருட்களுடன் அடிமேல் அடிவைத்து, அறைக்கு வெளியே அவள் வந்தபொழுது சுகந்தியும் பின்னால் வருவது தெரிந்தது. சாந்திக்கு ஏனோ அழுகை வந்தது. 

“அக்கா, அழாதேங்கோ; யோசிக்காமல் போங்கோ; இப்ப… சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் எழும்பப் போகினம்” சுகந்தி மெதுவாக அவள் தோளைத்தொட்டு ஆறுதல் கூறினாள். 

அவர்கள் பின் கேற் வழியாக வெளியேறி, ஒழுங்கைச் சந்திக்கு வரும்பொழுதும், பொழுது இருளாகவே இருந்தது. மெல்லிய நிலவொளியில் உற்றுப் பார்த்தனர். சந்தியில் ராம் நிற்பது தெரிந்தது. 

“சுகந்தி… ” அவளின் கைகளைப் பற்றிய சாந்தி, அவற்றை விட மனமில்லாமல் ஒரு கணம் தயங்கி,பின் விட்டுவிட்டு விறுவிறுவென்று ராமை நோக்கி நடந்தாள். வீதியின் ஒதுக்குப்புறமாக, இருளோடு இருளாக ஒரு கார் நிற்பது தெரிந்தது. 

“சாந்தி…!” மகிழ்ச்சியோடு குரல் கொடுத்த ராம், அவளின் கைகளைப்பற்றி அணைத்தவாறே காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான். இவள் ஏறும்பொழுது திரும்பிப் பார்த்தாள். சுகந்தி கையசைப்பது தெரிந்தது. 

கார் மெல்ல உறுமிக்கொண்டு புறப்பட்டது. சாந்தி பின்னே திரும்பி காரின் பின்புறக் கண்ணாடியூடாக வெளியே பார்த்தாள். இவள் காரிற்குள் இருந்தவாறே கையை அசைத்தாலும், அது சுகந்தியின் கண்களுக்குத் தெரியாது என்ற நிலையில் இவளுக்கு ஏனோ அழுகை வந்தது. 

“சாந்தி…”ராம் ஒருவித சந்தேகத்தில் குனிந்து, அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, “அழுறியா?” என்றான் ஆதரவாக. இவள் தலையசைத்தாள். ராம் அவளின் வலது கரத்தை மெல்லப்பற்றி, தனது கைகளுக்குள் சிறைப்படுத்திக்கொண்டான். அந்த ஆதரவும் அன்பும் அவளின் மனச் சுமையை ஓரளவு குறைப்பதாயிருந்தது. 

அவள் நிமிர்ந்து பார்த்தபோது திடுக்குற்றாள். காரில் ட்றைவருக்கு அருகில் இன்னுமொருவர் இருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது. தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், சாந்தியின் பார்வை போன திசையைப் புரிந்துகொண்ட ராம், 

“முன்னுக்கு இருக்கிறது… எங்கட தனா மாஸ்ரர்” என்றான். அவளுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது 

“எனக்கு இந்த ஐடியாவைச் சொல்லித் தந்ததே அவன்தான். நேற்றுப் பின்னேரமே .. இவன் தன்ரை சிநேகிதன் ஒருவனைப் பிடிச்சு… யாழ்ப்பாணத்திலை, கொழும்பு பஸ் சீற் ரெண்டுக்கு புக் பண்ணிப்போட்டான். இப்ப இந்தக் கார் அரென்ஜ் பண்ணினதும் இவன்தான். இவனின்ரை உதவிகளை நாங்கள் எண்டைக்கும் மறக்கக் கூடாது சாந்தி’ ராம் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியதும், சாந்தி மெல்லத் தலையைக் குனிந்தாள். 

“ராமத்தான்…” அவள் மெல்லக் குரல் கொடுத்த பொழுது, அவன் அவளருகில் குனிந்தான். 

 “நாங்கள்போன பிறகும்… இதே அக்கறையோட தனா மாஸ்ரர், சுகந்திக்கு வாழ்வு கொடுப்பாரா?” சாந்தி கேட்டதும் ராம் புன்னகை சிந்தினான். 

“சாந்தி, எங்களை விட… அவனுக்கு அவளிலை அக்கறை இருக்குது. ஏனெண்டால் அவன்ரை மனசிலை இப்பகூட இருக்கிறது சுகந்திதான். அவனே என்னட்டை சொன்னவன்” ராம் கூறியபோது சாந்திக்கு ஒருவித நிம்மதியாக இருந்தது. 

கார் யாழ்ப்பாணத்தை அடைந்தபொழுது நேரம் 6-00 மணியாகிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண ரவுணில் கொழும்பு பஸ் புறப்பட ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தது. ராம் தனது நீளமான பெரிய வெளிநாட்டு சூட்கேஸைத் தூக்கியெடுத்து கொழும்பு பஸ்ஸில் ஏற்றினான். 

“ராம். போய் சேர்ந்த உடனை கடிதம் போட்டிடு”தனராஜ் குரல் தழுதழுக்கக் கூறிவிட்டு ராமின் தோளைத் தட்டிக்கொடுத்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. 

கொழும்பு பஸ் ஹோர்ண் அடித்ததும், ராம் சாந்தியை யும் கூட்டிக்கொண்டு உள்ளே ஏறி, இருக்கைகளைத் தேடினான். அவர்களது சீற் பின்பக்கம் ஒதுக்குப்புறமாக இருந்ததால் அவர்களுக்கு அது வசதியாக இருந்தது. 

பஸ் மெல்ல உறுமி நகரத் தொடங்கியது. தனராஜ் கையசைத்துக்கொண்டிருந்தான். பிரிவுத் துயர் நெஞ்சை அழுத்த, இருவரும் கையை அசைத்துவிட்டு மெளனமாய் இருந்தார்கள். 

பஸ் பளையைக் கடந்துகொண்டிருந்தது. சாந்தி ஜன்னலினூடாக வெளியே எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். எண்ணங்கள் வீட்டைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தன 

‘இப்ப… அம்மா தேத்தண்ணி போடுறதுக்காக என்னைக் கூப்பிட்டு அலுத்து, எழுந்து வந்து, அறைக்குள் பார்த்து.. என்னைக் காணேல்லை எண்டு யோசித்து, சுகந்தியை எழுப்பிக் கேட்டுப் பார்த்து, வீடெல்லாம் தேடிப்பார்த்து.., ஏங்கிப்போய் அப்பாவை எழுப்பி… அப்பாவும் பல தடவை சத்தமாய்க் கூப்பிட்டுப்பார்த்து முடிவிலை சரியாய்ப் பயந்து, மாமா வீட்டை ஓடிப்போய் முறையிட்டு … மாமாவும் தன்ரை மகனைக் காணயில்லை எண்டு துள்ளியடிக்க… ஊரெல்லாம் ஒண்டு கூடி…’ அவளுக்குக் கற்பனை பண்ணிப் பார்க்கவே கண்கள் கலங்கின. அவள் தலையைச் சாய்த்தவாறே மறுபுறம் திரும்பிக் கொண்டாள். 

பஸ் எந்தவித ஓசையும் எழுப்பாமல் சவர்க்கார நழுவலாகப் பறந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் அவள் கூந்தல் மெல்லக் கலைந்து பறந்து கொண்டிருந்தது. அவளது கூந்தலின் தவிப்பைப் போலவே அவள் மனமும் தவித்துக் கொண்டிருந்தது. 

“சாந்தி” குரல்கேட்டுத் திரும்பினாள். ராம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள், 

“பயமாயிருக்கா…?” 

அவள் தலையை அசைத்து விட்டுக் குனிந்து கொண்டாள். 

“நாங்கள் இண்டைக்கு கொழும்பில என்ரை ஃப் ரென்ட் வீட்டில தங்கி நிண்டு, விசயத்தை அவையளுக்குச் சொல்லிப்போட்டு, பிளேன் ரிக்கற்றுக்கு அலுவல் பார்க்க வேணும். எப்பிடியும் மூண்டு நாளைக்குள்ளை கனடாவுக்குப் போய்ச் சேர்ந்திடுவம். அங்கை போனால் பிறகென்ன? கவலையே இல்லை! எல்லா வசதியும் இருக்குது. இங்கை எங்கட அம்மா ஐயா அவை கொஞ்ச நாளைக்கு எங்களிலை கோபமாய் இருந்தாலும்… கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாய் போயிடும்” ராம் அவளைத் தேற்றுவது போலக். கூறிக்கொண்டதும், அவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெளனமாய் தலையைக் குனிந்து கொண்டாள். 

“சாந்தி, வாயைத்திறந்து ஏதாவது கதையேன்” அவன் அவளது முகத்தைத் திருப்பி, ஏக்கமான வேண்டுதலோடு கேட்டான். 

ராமின் கண்கள் சிவந்து போயிருப்பதை அப்போது தான் அவள் கண்டாள். 

‘ராமத்தான்! ஏன்… ஏன் உங்கட கண்கள் ரெண்டும் இரத்தச் சிவப்பாய் இருக்குது?’ கேட்க நினைத்தவளுக்கு வார்த்தைகள் வாயோடு அடங்கிப் போக, 

“ராமத்தான்” என்று முனகியபடி அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள். அவளை மெல்ல அணைத்த ராம் திடுக்குற்றுப் போனான்! 

“சாந்தி! ஏன் உன்ரை உடம்பு இவ்வளவு சூடாய் கொதிக்குது?” அவசரமாக அவளது கழுத்திலும் நெற்றியிலும் கையை வைத்துப் பார்த்தான். 

“சாந்தி உனக்குக் காய்ச்சலா?” ராம் பதற்றத்தோடு கேட்டான். 

“இல்லை. இரவு பூரா நித்திரை விழிச்சதாலை ஒரே அலுப்பாய் இருக்குது” சாந்தி அவன் தோளிலிருந்து தலையை எடுக்காமலே மெதுவாகக் கூறினாள். 

“நீ ஒண்டும் யோசிக்காமல் கொஞ்சநேரம் இப்பிடியே நித்திரையைக் கொள். நிலைமையைப் பார்த்து, வவுனியா விலை டிஸ்பிறின் வாங்கிப் போடலாம்” ராம் அவளைத் தன் மார்போடு அணைத்துப் படுக்கவைத்தான். அந்த அணைப்பின் சுகத்தில் அவள் மெல்ல மெல்ல தன் துயரச் சுமைகளை இறக்கிவைத்துவிட்டுத் தூங்கிப்போனாள். 

பஸ்ஸிற்குள் இருந்த கசற் பிளேயர் மெதுவாக சினிமாப் பாடல்களை இசைக்க ஆரம்பித்திருந்தது. 

சாந்தி கண்விழித்த பொழுது ராமின் கை அவள் தலையை அணைத்தபடி இருந்தது. இரவு நித்திரை விழித்த தன் விளைவாக அவளையறியாமலே அவள் நீண்ட நேரம் நித்திரையாகிப் போனது இப்போது தான் அவளுக்குத் தெரிந்தது. மெல்ல எழுந்து, திரும்பிப்பார்த்தாள். ராமின் தலை சீற்றின் சாய்மனையிலிருந்து நழுவி மெல்ல மடிந்து போயிருந்தது. அவனும் தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்து போயிருந்தான். 

‘பாவம்! ராமத்தானும் என்னைப்போலை இரவு முழுக்கக் கண் விழித்தபடியே யோசித்துக் கொண்டிருந்திருப்பார்!’ அவளுக்கு அவனில் ஒருவித பச்சாத்தாபம் ஏற்பட்டது. அவள் மெல்ல சாய்ந்தமர்ந்தவாறே, நிமிர்ந்து ராமின் தலையை நிமிர்த்தி, தன் தோளோடு சாய்த்துக் கொண்டாள். 

வெளியே மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது. 

பஸ் வவுனியா ரவுணில் வட்டமடித்துக் குலுங்கி நின்ற போது, ராம் கண்விழித்துக் கொண்டான். கொட்டாவி விட்டவன் நேரத்தைப் பார்த்துவிட்டு, 

“சாந்தி, வவுனியா வந்திட்டுது போலை” என்றவாறே அவள் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான், அவளுக்குக் காய்ச்சல் தணிந்திருந்தது. 

பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல இறங்கி ஒவ்வொரு கடைகளிற்குள் நுழைவது தெரிந்தது. 

“வா சாந்தி. போய் ஏதாவது சாப்பிடுவோம்” ராம் மெதுவாக அவளை அழைத்தான். 

இருவருமாக, இறங்கி ஒரு ஹோட்டலில் நுழைந்து கொண்டனர். 

மீண்டும் பஸ் புறப்படும்பொழுது வெயில் சற்றுத் தணிந்து, கருமுகில்கள் சூரியனை மறைத்திருந்தது. 

பஸ் பிரதான வீதியால் கொழும்பு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

“என்ன? வடிவாய் சாப்பிட்டனியா?” ராம்தான் கேட்டான். 

“பின்னை.. விடுவேனா?” சாந்தி சற்றுக் கவலை மறந்த நிலையில் பகிடியாகக் கூறினாள். அவளது முகமாற்றம் ராமிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவன் மெல்லக் குனிந்து, அவள் இதழ்களை முத்தமிட்டான். 

“ஐயோ, அங்கை… ஆக்கள் எல்லாரும் பாக்கினம்”  அவள் செல்லமாகக் கண்டித்தாள்.பஸ்ஸில் மீண்டும் சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. பசியெல்லாம் அடங்கிப் போனதில் இருவருமே உற்சாகமாக இருந்தார்கள். 

“ம்… கனடாவுக்குப் போனபிறகு நீ என்னதான் சொல்லித் தப்பப் போறாயெண்டு பாப்பம்” – ராம் புன்னகையோடு கூறியதும் அவள் நாணத்தோடு மறுபுறம் திரும்பினாள். 

பஸ் உல்லாசமாக வவுனியாவைப் பிரிந்து கொண்டிருந்தது. 

திடீரென்று, தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு மினி வானின் வித்தியாசமான வேகம், எல்லோர் கவனத்தையும் ஈர்த்த கணத்தில், கொழும்பு பஸ்ஸின் வேகம் குறைந்து, அது தயங்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

ட்றைவர் ஒருவித சந்தேகத்துடன் தலையை வெளியே நீட்டினான். அண்மித்துக்கொண்டிருந்த மினி வானிலிருந்து நிறுத்தற் கையசைப்புத் தெரிய… கொழும்பு பஸ் மெதுவாக ஓரத்தில் தரிக்கவும், அருகில் வந்து வான் கிறீச்சிட்டு நிற்கவும் சரியாக இருந்தது. 

“பாவற் குளத்தடியிலை பெடியள், பதினாறுபேரை முடிச்சிட்டாங்களாம் பஸ்சைத் திருப்பண்ணை …” வான் ட்றைவர் பதறிப் பதறிக் கூறினான் 

சாந்திக்குப் பகீரென்றது. 

வானிலிருந்த அனைவர் முகங்களிலும் மரணத்தை வெல்லும் தீவிரமும் அவசரமும் தெரிந்தது. 

“அவங்கள் வெளிக்கிடுறதுக்கிடையிலை அங்காலை கடக்க ஏலாதே?” பஸ் ட்றைவர் வெளியே நீட்டிய தலையை எடுக்காமலே நப்பாசையோடு அவசரமாகக் கேட்டான்.

“அவங்கள் எல்லாப் பக்கத்தாலையும் வெளிக்கிட்டிட்டாங்களாம் நீ…” என்று வாசலில் நின்று உரத்துக் கூறிய வான் கிளீனர் வசனத்தை முடிக்காமலே சினத்துடன் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொள்ள, 

“சரி, பஸ்ஸைத் திருப்பு நாங்கள் போறம்” என்ற ட்றைவர் கையை அசைத்துவிட்டு, வானை ஸ்ராட் செய்தான். அது திடுமென்று கிளம்பி, அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கியது. 

“தம்பி, அப்பிடியெண்டால் ஏன் மினைக்கெடுறாய்? பஸ்ஸைத் திருப்பு…” பஸ்ஸில் இருந்த ஒரு முதியவர் பதற்றத்துடன் குரல் கொடுத்தார். 

“ராமத்தான்…” சாந்தி நாக்குழற, நடுங்கும் கரங்களால் ராமின் கையினைப் பற்றிக்கொண்டாள். 

“பயப்படாதை சாந்தி… நானும் இருக்கிறன்தானே; தைரியமாயிரு…” ராம் அவளைத் தன் தோளோடு சேர்த்தணைத்து அமைதிப்படுத்தினான், சொற்ப நேரத்திற்குள் வியர்வையில் தெப்பமாகி விட்ட ராமின் ஷேட், அவனின் நிலையை அவளுக்கு உணரவைப்பதாயிருந்தாலும், அவனின் அணைப்பு அவளுக்குப் பயத்தைக் குறைப்பது போலிருந்தது.

“கெதியாத் திருப்பண்ணை…” பஸ்ஸிற்குள்ளிருந்து மீண்டுமொரு குரல் ஆற்றாமையில் வெளிப்பட்டது. 

ட்றைவர் பஸ்ஸை உடனடியாகத் திருப்பமுடியாமல் திணறிக்கொண்டிருந்தான். 

திடீரென்று அண்மையில் வேட்டொலிகள்! கூடவே வித்தியாசமான வாகன இரைச்சல்கள்! 

“வாறாங்கள் போலை கிடக்கு…” பஸ்ஸில் இருந்த இளைஞனொருவன் விழிகள் பிதுங்கக் கூறியவாறே அவசரமாக எழுந்து, தன் பயணப் பையுடன் வெளியில் குதித்து காட்டுப் புறமாக ஓடத் தொடங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக இருக்கையிலேயே அமர்ந்திருந்த பிரயாணிகள் இப்போ சட்டென்று எழுந்து, இறங்க முயற்சித்ததில் பஸ்ஸின் ஒடுக்கமான வாசல்கள் அடைபட்டு, அனைவரும் நெரிபடத் தொடங்கினர். 

றைவரும் கிளீனரும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் ஆடிப்போயிருந்தனர். 

ராம், சாந்தியை இழுத்துக்கொண்டு, பலங்கொண்ட மட்டும் பிரயாணிகளை இடித்து, விழுத்திக்கொண்டு கீழே குதித்தான். சனக்கும்பல் சிதறி… அல்லோல கல்லோலப் பட! 

எதிலோ தடுக்கி, செருப்புகள் தூர எகிறி விழ, தலைகுப்புற விழப்போன சாந்தியை எட்டி அணைத்த ராம், 

“கவனம் சாந்தி… ஸ்பீட்டாய் ஓடு..” என்றவாறே அவளின் வலது கரத்தைப் பற்றிக் கொண்டு இறக்கமான காட்டின் செங்குத்தான பாதையால் சறுக்கி ஓடத் தொடங்கினான். 

“ராமத்தான்… பாஸ்போட்…?” சாந்தி அவனுடன் இழுபறிபட்டு ஓடியவாறே மூச்சிரைக்கக் கேட்டாள். 

“அது பஸ்ஸிலை… பாக்கிற் குள்ளை… போகட்டும்…” 

“ஐடென்ரிற்றிக் காட்…?” 

“அது இங்கை பொக்கற்றுக்குள்ளை”

“ஆவ்…ஈச்சம் முள்ளு…” சாந்தி காலின் வலி தாளா முனகியவாறே ராமின் கையை மேலும் இறுகப் பற்றினாள். 

உயரத்தில் ஒரு காட்டுக் குருவி பெரிதாகக் கீச்சிட்டு இவர்களைக் கடந்து பறந்து போனது. 

“களைக்குது… ராமத்தான்…” அவள் ஓட முடியாமல் கண்கள் கலங்கினாள். 

வேட்டொலிகள் மிகவும் அண்மித்திருந்தன. 

“நிண்டிடாதை சாந்தி…இன்னும் கொஞ்சத்தூரம்..” 

நெற்றியில் எதுவோ படீரெண்று மோத, “ஊ’” என்று ஓலமிட்ட ராம், ஒருகணம் கதிகலங்கி, பின் நீட்டிக்கொண்டிருந்த பெரிய மரக் கிளைகளிலிருந்து விலகி, ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான். 

“ராமத்தான்…” சாந்திக்கு நெஞ்சம் கலங்கித் தவித்தது. அவனைக் கட்டியணைத்துக் கொண்டு கதறியழ வேண்டும் போல கரங்கள் துடித்தன ஆயினும், எதுவுமே செய்ய முடியாத நிலையில், மனத்தவிப்புகள் யாவும் உள்ளே அமுங்கிக் குமுற, கண்களிலிருந்து கண்ணீர் குபுகுபு வென்று பொங்கி வழிந்தது. 

தூரத்தில் ஒரு காட்டு ஓநாயின் இடைவிட்ட ஊளை ஒலி. 

இவர்கள் நிச்சயமானதொரு நம்பிக்கையுடன் இறுகப் பற்றிய கரங்களை மட்டும் விட்டு விடாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். 

(முற்றிற்று)

(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *