(1988ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13
அத்தியாயம்-9
விநாடிகள் சில ஒருவித தவிப்போடு விலகின. ராமினது பார்வையின் வீரியத்தை அவளால் சமாளிக்க முடியாமல் இருந்தது. அவள் மீண்டும் தலையைக் குனிந்தாள்.
“சாந்தி…”
“ம்..”
“உங்கட தென்னந்தோட்டத்தை ஒருக்கால் பார்க்க வேணுமெண்டு ஆசையாய் இருக்குது. பார்த்துக்கொண்டு வருவமே?”
சட்டென்று அவள் நிமிர்ந்துபார்த்தாள்.
“என்ன பாக்கிறாய்?”
“இல்லை… தனியாவோ?”
“நீயும் கூட வா”
“அதுதான்..என்னோட தனியாவோ?”
“ஏன்? வந்தாலென்ன? உதிலைதானே? உந்தக் குச்சு ஒழுங்கையால போனால் வலுகிட்டத்தானே”
“அது சரி; ஆக்கள் எல்லாரும் பாப்பினமெல்லே?” சாந்தி தயங்கிக் கூறினாள்.
“பார்த்தாலென்ன? சும்மா…தென்னந் தோட்டத்தைப் பாக்க ஆசையாய் இருக்குதெண்டால்…”
“சரி வாங்கோ” என்றவாறே போகத் திரும்பிய சாந்தி,
“பின்படலையால போவம். உள்ளாலை வாங்கோ” என்று அவனை அழைத்தபடி வீட்டின் பின்புறத்தை நோக்கிச் சென்றாள்,
“வீடெல்லாம் நல்லாய் பெருப்பிச்சுப் போட்டியள்! என்ன?” ராம் வீட்டின் பகுதிகளைச் சுற்றிச் சுழன்று பார்வையிட்டவாறே நடந்தான்.
“ஓம்; எப்பிடி வீடு?… வீடு உங்களுக்குப் பிடிச்சுதே? இந்த வீடு எனக்குத்தானே” சாந்தி ஆவலோடு கூறினாள்.
“உனக்கு எழுதியாச்சுதோ?”
“இல்லை; இனிமேல்தான் எழுதுவினம். எங்களுக்குத் தும்பளையிலும் ஒரு பழையவீடு இருக்குது தானே…முதலிலை அந்த வீடு தான் எனக்குத் தாறதெண்டு இருந்தவையள். அது … நாலுபரப்புக் காணி. இது மூண்டு பரப்புத்தானே! ஆனாலும் எனக்கென்னவோ இந்த இடந்தான் பிடிச்சுது. பின்னைச் சரியெண்டு அம்மாவும் அப்பாவும் விட்டிட்டினம்”.
“அப்ப… கொம்மாவும் கொப்பரும் பின்னுக்கு எங்கை இருப்பினம்?”
“அவையள்… தும்பளைக் காணியில ஒரு பரப்பை எடுத்து சின்ன வீடு கட்டி இருக்கப்போகினமாம்” சாந்தி பகிடியாகக் கூறினாள்.
“ஏய்! உனக்கெதுக்கு வீடு? எங்கட வீடு எனக்குத் தானே. பேசாமல் வீடு வேண்டாமெண்டு சொல்லிவிடு. வேணுமெண்டால், தென்னந்தோட்டத்தில் வாற அரைவாசியை மட்டும் வாங்கலாம். அது பின்னுக்கு நல்லாய் உதவும்” ராம் நிதானமாக, அக்கறையோடு அபிப்பிராயம் தெரிவித்தான்.
‘ராமத்தான் சும்மா வாற வீட்டை வேண்டாமெண்டு சொல்லுறதே?’ அவனது அபிப்பிராயத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்த சாந்தி தனது அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள்.
“சும்மா… தேவையில்லாமல் ஏன் கடமைப்பட வேணும்? நான் தனிப் பிள்ளை? எனக்கு வீடு வசதியெல்லாம் இருக்குது. பிற்காலத்தில் கொம்மாவும் கொப்பாவும் இருக்கிறதுக்கும் ஒரு வீடு இருந்தால் அவையளுக்குச் சுகந்தானே. விரும்பினால் அவையள் சாகிறபோது எழுதித் தரட்டும்”.
“ராமத்தான்…!” அவள் ஆச்சரியத்தோடும் வியப் போடும் கனிவாக அவனை நோக்கினாள்.
“என்ன சாந்தி?… ஏன் இப்பிடிப் பாக்கிறாய்?” ராம் சந்தேகமாகக் கேட்டான்.
“நீங்கள் மற்ற ஆம்பிளைகளை விட வித்தியாசமாய் இருக்கிறீங்கள். நான் குடுத்துவைத்தவள்” சாந்தி குரல் தழுதழுக்கக் கூறினாள்.
“ஏய் இதுக்குப்போய் பெரிதாய் உணர்ச்சிவசப்படுறியே? இது… என்னைப் பொறுத்தவரையில ஒரு மனிதாபி மானமுள்ள மனிசன் செய்யிற விசயம்”
“இல்லை ராமத்தான். எங்கட அம்மாவுக்கு… தும்பளை வீடுதான் சீதனமாய்க் குடுத்த வீடு! நானும் சுகந்தியும் அந்த வீட்டிலதான் பிறந்தனாங்கள்.பிறகு, அப்பா கஷ்டப் பட்டுச் சேமித்த காசிலைதான் இந்த வீடு கட்டினனாங்கள். தென்னந்தோட்டக்காணி ..பாட்டா சாகிறபோது அப்பாவுக்கு எழுதிக் குடுத்ததாம். இதொண்டும் இப்ப எங்களுக்கு இல்லாட்டால் நான் கூட இவ்வளவு துணிவாய் உங்களோட கதைச்சிருக்கமாட்டன்; அப்பிடியொரு தாழ்வு மனப்பான்மை எனக்கு இருந்திருக்கும். ஆனால்… இப்பதான் யோசிக்கிறன்; இப்பிடியான வசதிகள் எங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, நான் கொடுத்து வைத்தவளாய்த் தான் இருந்திருப்பன்” சாந்தி நின்று நிதானமாகக் கூறியது ராமிற்கு வேடிக்கையாக இருந்ததோ, என்னவோ மெல்லச் சிரித்தவாறே குறும்பாக அவள் கன்னத்தில் கிள்ளினான். சட்டென்று தடுமாறிப்போன சாந்தி,
“ச்…என்ன இது? அம்மா கண்டாலும்…” செல்லமாகக் கடிந்தபோதே, சமையலறையிலிருந்து சிவகாமியின் குரல் கேட்டது.
“சாந்தி… இங்கையொருக்கால் வந்திட்டுப் போ”.
“ராமத்தான் தென்னந்தோட்டத்தைப் பார்க்கப் போறாராம்; காட்டிப்போட்டு வாறனம்மா” சாந்தி கிணற்றடிப் பக்கம் நின்றவாறே பதில் குரல் கொடுத்துவிட்டு,
“ராமத்தான், கெதியா வாங்கோ'” என்று அவசரப்படுத்தியவாறே பின்புறப் படலையைத் திறந்துகொண்டு வெளியேறினாள்.
மேற்கே சூரியன் மெல்ல மெல்ல அஸ்தமித்துக்கொண்டிருந்தான். அந்தச் குச்சு ஒழுங்கையில் பல வயோதிபர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். பின்புறப் படலையைத் திறந்த ராம், ஒரு கையால் சாரத்தைத் தூக்கிப் பிடித்த வாறே ஒழுங்கையில் இறங்கி சாந்தியின் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
ஒழுங்கையால் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை வினோதமாகப் பார்ப்பது சாந்திக்குக் கூச்சமாக இருந்தது. இவர்கள் சேர்ந்து செல்வதைக் காண்பதற்கு சில அயல் வீட்டு வேலிகளும் சேவை செய்தவண்ணம் இருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை. கல்யாணத்துக்கு முன்னரே ராமுடன் சேர்ந்து அப்பிடிப் போவது அவளுக்கு ஒருவித ஒழுங்கீனம்போல் இருந்தாலும், மனதிற்குள் ஒருபுறம் பெருமையாகவும் இருந்தது. அவள் திரும்பி ராமைப் பார்த்தாள். அந்த உயரமான உடலின் தோளைத்தான் அவளால் நேராகப் பார்க்கமுடியும். அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
“என்ன பாக்கிறாய்?” ராம் நடந்தவாறே கேட்டான்.
”என்ரை சிநேகிதப் பிள்ளைகள் எல்லாரும்.. வீட்டு வேலிக்குள்ளாலை எங்களைத்தான் பாக்கினம்” சாந்தி மெல்லக் கிசுகிசுத்தாள்.
“அப்பிடியோ …?” அவன் சட்டென்று அவளின் தோள்களில் கையைப்போட்டு, தன்னோடு சேர்த்திழுத்துக்கொண்டு நடந்தான்.
“ராமத்தான்! என்ன இது? எல்லாரும் எங்களைத்தான் பாக்கினம்!… விடுங்கோ” அவள் சட்டென்று விடுவித்துக் விலகினாள். அவனது அபரிதமான துணிச்சல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
“பின்னையென்ன .. நாங்களென்ன ‘சூ’ விலையிருந்து வந்த ஆக்களோ? இப்பிடிப் புதினம் பாக்கிறதுக்கு!” ராம் புன்னகையோடு கூறினான்.
“அதுக்கு இப்பிடியே செய்யிறது. தென்னந் தோட்டத்துக்கு வாங்கோ… தரவேண்டியதைத்தாறன்”. அவள் செல்லமாக அதட்டியவாறே உதடுகளைம் பற்களால் அழுத்திக் கொண்டாள்.
அவர்கள் தென்னந்தோட்டத்திற்குள் நுழைந்தபொழுது தோட்டத்தில் சற்று இருள் பரவியிருந்தது. தென்னை யோலைகள் ஒவ்வொன்றும் உல்லாசமாக மெல்ல மெல்ல அசைந்து குளிர்ந்த காற்றை இதமாகப் பரப்பிக்கொண்டு நின்றன.
“ஓ ஃபைன்! தென்னந்தோட்டத்தைப் பார்க்க எவ்வளவு ஆசையாய் இருக்குது! பச்சைப்பசேல் என்று மரம் முழுக்கத் தேங்காய்!” ராம் ஆச்சரியமாகப் பார்த்து நின்றான். சாந்தி பட்டென்று அவனது தொடையில் கிள்ளினாள்.
“சீ…! ஐயோ!.. ” அவன் திடுக்குற்று முணுமுணுத்த வாறே அவளின் கைகளைப் பற்றிப் பிடித்தான்.
“றோட்டிலை வாறபோதும் உங்களுக்குப் பகிடியே? அவையள் எல்லாரும் நாளைக்கு என்னைப் பழிக்கப்போகினம்!’
அவள் சிணுங்கினாள். அவன் பற்றிப்பிடித்த அவளது கைகளை விடாமலே சட்டென்று இழுத்து, இறுக அணைத்துக் கொண்டான். அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
“ச் விடுங்கோ…” அவள் திமிறினாள்.
“விடமாட்டேன்” அவன் ஒருவித வெறியோடு மாறி மாறி அவள் கன்னங்களில், உதடுகளில், கழுத்தில், மார்பில் முத்தங் கொடுத்தான்.
“ம்… விடுங்கோ… பிளீஸ்”. அவளுக்குப் பயத்தில் கண்கள் கலங்கின! உடல் நடுங்கியது. உதடுகள் துடித்தன. அவனது கைகள் அவளுடலை உடும்பாகப் பற்றியிருக்க, உதடுகள் அவள் மேனி முழுவதும் விளையாடின! அவள் தன்னை விடுவித்துக்கொள்ள எடுத்த முயற்சியில் சுழன்று தடுமாறிக் கீழே சரிந்தாள். ராம் தன் இடுப்பில் கைகளை ஊன்றிய வாறே புன்னகையோடு அவளைப் பார்த்து நின்றான். அவள் மிகவும் பயந்து போயிருந்தாள். மருட்சியோடு அவனை நிமிர்ந்து நோக்கினாள். அவளுக்கு ஏனோ அழவேண்டும் போல் இருந்தது.எச்சிலை மென்று விழுங்கிக்கொண்டாள். விழுந்த வேகத்தில் கால் பெருவிரல் வலித்தது.
“கால் வலிக்குதா?” அவன் மெல்லக் குனிந்து கேட்டு விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான். அவள் சட்டென்று கோபத்தோடு விலகி அமர்ந்தாள். அவன் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்திருந்தபோது, அவள் வெறுப்போடு தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு மெலிதாக மூச்சு வாங்கியது. வியர்த்துக் கொட்டியது.
அத்தியாயம்-10
“சாந்தி… கோபமா?” ராம் மெதுவாக மன்னிப்பு வேண்டும் தோரணையில் கேட்டான். அவள் மௌனமாகத் தலை குனிந்திருந்தாள்.
“சாந்தி… கதைக்கமாட்டியா?” அவன் மீண்டும் ஆதங்கத்தோடு கேட்டான். அவனது அந்தக்குரலைக் கேட்ட போது, அவளுக்குக் கோபம் மெல்ல மாறி,பரிதாப உணர்வே ஏற்பட்டது. அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“சாந்தி, வெளியிலை என்னைப் பார்க்கிறபோது குறும்புக்காரன் மாதிரி மட்டும்தான் உனக்குத் தெரியுது. உண்மையைச் சொல்லப்போனால்… எனக்குள்ளை நீயே நிறைஞ்சிருக்கிறாய். அம்மா எங்கட கல்யாணம் பற்றி எழுதின பிறகு என்ரை கனவுகள், கற்பனைகள் எல்லாமே நீயாத்தான் இருக்கிறாய்! ஒவ்வொரு நிமிசமும் நான் உன்னோடயே இருக்கவேணும் போலை ஒரு தவிப்பு. ஐ மீன்… இந்த நிமிசமே உனக்குத் தாலி கட்டிப்போட்டு, மனைவி யாக்கிப் போடவேணும் போலை ஒரு துடிப்பு!”
“சாந்தி… சின்ன வயசில நாங்கள் சண்டை போட்டாலுங்கூட, நான் கனடாவுக்குப் போறவரைக்கும் ஏதோ ஒரு வகையிலை நாங்கள் சந்திக்காத நாட்களேயில்லை! அந்தளவுக்கு ஒட்டிப்போன வாழ்க்கை…. அதனால்தான் நான் தயங்காமல்; நீ என்னைத் தொட்டபோது என்ரை உணர்ச்சிகளை என்னால கட்டுப்படுத்த முடியேல்லை; ஏதோ பலமான உரிமை இருக்கிற மாதிரி…”
ராம் அசையும் தென்னோலைகளை அமைதியாகப் பார்த்திருந்தான். சற்று முன்னர் இருந்த கோப உணர்வுகளெல்லாம் அவளையறியாமலே பொசுங்கிப்போக, இனம் புரியாத ஒரு வேதனையுணர்வோடு அவள் ராமைப்பார்த்தாள். அவளுக்கு அவன் மார்பில் முகம் புதைத்து அழவேண்டும் போலிருந்தது.
“சாந்தி…..இன்னும் கோபமே?” ராம் திரும்பி மெல்லக் கேட்டபோது அவளுக்குப் பொசுக்கென்று அழுகை வந்தது, அவனின் வலது கரத்தைப் பற்றியவள், தன் கன்னத்தோடு சேர்த்தழுத்தி விம்மத் தொடங்கினாள்.
“சாந்தி! என்ன இது? அழுறியா?…” ராம் அவள் தலையை மெல்ல வருடியவாறே கேட்ட பொழுது,
“உங்களுக்கு.. உங்களுக்கு என்னிலை கோபமில்லையே?’ என்றவாறு அவள், அவனின் மார்பில் தலைசாய்த்தாள்.
“எனக்கென்ன கோபம்? நீ தான்..” என்று ராம் மெல்லச் சிரிக்க… அவளும் சேர்ந்து சிரித்துக் கொண்ட போது அவன் குனிந்து அவள் நெற்றியை முத்தமிட்டான்.
தென்னை மரங்களில் வந்து குந்தியிருந்த சில கிளிகள், இந்த இளம் ஜோடிகளைப் பார்த்ததாலோ என்னவோ கீச்சுக் கீச்சென்று ஒலியெழுப்பியவாறே சிறகடித்து மீண்டும் பறந்து போயின.
‘சரசர’வென்று ஒலியெழுப்பியவாறே தென்னையிலிருந்து பொத்தென்று விழுந்த காய்ந்த தென்னோலை இவர்களை உரசிவிட்டபோது, திடுக்குற்ற சாந்தி சட்டென்று எழுந்தாள். அவளுக்கு சற்று முன்னர் தானிருந்த நிலை வெட்கத்தை ஏற்படுத்தியது. அவளது உடல் காரணம் புரியாமல் நடுங்கியது. உணர்வுகள் ஏனோ தவித்தன.
“போவமே?… ” அவள் தலையைக் குனிந்தவாறே நாணத்தோடு கேட்டாள்.
“இங்கை இருக்கப் பிடிக்கயில்லை எண்டால் போகலாம்” ராம் மண்ணைத் தட்டியவாறே சாரத்தை மடித்துக் கொண்டு எழுந்தான்.
“அப்பிடி…யில்லை… ; அம்மா தேடுவா” சாந்தி அவனை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய்க் கூறினாள்.
“நாளைக்கு… வீட்டுக்கு வாவன்; படம் போட்டுப் பாப்பம்” ராம் கைகளைப் பின்னால் கட்டியவாறே முன்னால் நடந்துகொண்டு ஆவலாகக் கேட்டான்.
“என்ன படம்?” சாந்தியும் அவன் பின்னால் நடந்த வாறே கேட்டாள்.
“என்ன படம் போட்டால் உனக்கு விருப்பம்?” ராம் திருப்பிக் கேட்டான்,
“உங்களுக்குப் பிடிச்சதை நானும் பாக்கிறன்”
இருவரும் தோட்டத்தின் வாயிலை அண்மித்தபோது. வேகமாக வந்த சைக்கிள் ஒன்று கிறீச்சிட்டு நின்றது.
“தனராஜ்! ஏண்டாப்பா இந்த ஓட்டம் ஓடுறாய்?” ராம் மெல்லச் சிரித்தவாறே கேட்டுக்கொண்டு வெளியில் இறங்கினான்.
“நான் நாளைக்கு உன்னட்டை வரவேணுமெண்டு இருந்தனான்” ராம் கூறிமுடிக்கமுன்,
“டேய் … நாலு ஆமெட் கார் வந்து எங்கட ஒழுங்கைச் சந்தியிலை வரிசையாய் நிக்குது; அவங்கள் அங்கங்கு இறங்கி நிக்கிறாங்கள்” தனராஜ் மூச்சு வாங்கக் கூறினான். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. இவர்களைக் கடந்து இன்னும் சில இளைஞர்கள் வேகமாக எங்கோ ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம், பீதியால் நிலைகுலைந்திருந்தது.
“தனா! என்ன சொல்லுறாய்?…” ராம் புரியாமல் கேட்டான்.
“வீடுகளுக்குள்ளை புகுந்து செக் பண்ணப் போறாங்கள் போலை கிடக்குது! ஊரடங்குச் சட்டம் போட்டிருக்கிற நேரமாய்ப் பார்த்து வந்திருக்கிறாங்கள்; வீட்டுக்குள்ளை வைத்தே எல்லாப் பெடியங்களையும் பிடிக்கப் போறாங்கள் போலை கிடக்குது. அதுதான்… நான் வீட்டுக்குப் பின்பக்கத்தாலை பாய்ஞ்சு ஓடிவந்திட்டன். நீயும் உங்கை நிக்கிறது நல்லதில்லை; என்னோட ஓடிவா; இல்லாட்டால் ஆபத்து”! தனராஜ் அவசரப் படுத்தினான்.
சாந்திக்குப் பகீரென்றது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது.
“ராமத்தான் நீங்கள் இங்கை நிண்டால்… உணமையாய் ஆபத்துத்தான். தனா மாஸ்ரரோட எங்கையாவது ஓடித் தப்பிறதுதான் நல்லது. அவங்கள் போனபிறகு வரலாம். உங்க உடம்பைப் பார்த்தால். கட்டாயம் பிடிச்சுப் போடுவாங்கள்; கெதியாய் ஒடுங்கோ ராமத்தான்.” அவள் திகிலோடு பரபரத்தாள்,
”சாந்தி நீ…நீ…” ராம் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிய போது,
“நான்… அவங்கள் இங்கால்ப்பக்கம் வாறதுக்கிடையிலை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவன். நீங்கள் யோசியாமல் ஓடுங்கோ ராமத்தான்” அவள் காலில் விழாத குறையாக அவனது கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள். அடுத்த நிமிடமே தனராஜின் சைக்கிளில் ராமும் ஓடிமறைந்தான்.
சாந்தி ஓரளவு நிம்மதியடைந்தாலும், ஒருவித பயத்தில் தவித்துக் கொண்டுதான் இருந்தாள்.
‘எங்கட அம்மா அப்பாவுக்கு வரப்போகிற ரெண்டு மருமக்களும் ஒண்டாய் போகினம். பிள்ளையாரே ! அவையளுக்கு ஒண்டும் வராமல் காப்பாற்றிப்போடு’ சாந்தி மனதிற்குள் பிரார்த்தித்தவாறே அவசரம் அவசரமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள்.
அக்கம் பக்க வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்த வானொலி ஓசைகள் நிறுத்தப்பட்டு, ஊர் ஒருவித அசாதாரண நிசப்தத்தில் மூழ்கியிருந்தது.
சாந்தி வீட்டினுள் நுழைந்தபோது,
“அக்கா! வந்திட்டீங்களே; ராமத்தான் எங்கை ‘அவங்கள்’ உந்தச் சந்தியிலை வந்து கூட்டமாய் நிக்கிறாங்களாம். கொஞ்சப்பேர் றோட்டுக்கரை வீடுகளுக்குள்ளை புகுத்து செக் பண்ணுறாங்களாம்” சுகந்தி கலவரத்துடன் அவளருகில் ஓடி வந்தாள்,
“சாந்தி, ராம் எங்கை போட்டான்? உங்கை… அவங் கள் வந்து வீடுவீடாய்ப் புகுந்து, எல்லாப் பெடியங்களையும் பிடிக்கிறாங்களாம்” சிவராசர் பீதியுடன் பரபரத்தார்.
“அவரும் தனராஜ் மாஸ்ரருமாய் அந்தப்பக்கமாய் எங்கையோ ஓடினம்; தனராஜ் மாஸ்ரர்தான் அவரையும் கூட்டிக்கொண்டு போறார்.” சாந்தி கூறியபோது, சிவராசரும் எதிரில் வந்துகொண்டிருந்த சிவகாமியும் ஓருவித ஆறுதல் பெருமூச்சை விட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் வீட்டினுள் நுழைந்துகொண்டதும், “அக்கா தனராஜ் மாஸ்ரரும் ராமத்தானும் ஒண்டாவே போகினம்…?” ஒருவித அக்கறையோடு சுகந்தி மெல்ல வினாவியதும்,
“ஓம், பயப்படாதை சுகந்தி. உன்ரை ஆளுக்கும்சரி என்ரை ஆளுக்கும்சரி ஒண்டும் நடக்காது” சாந்தி புன்னகையோடு கூறியதும், சுகந்தி நாணத்தை மறைக்கத் தலை குனிந்தாள்.
“அதுசரி சுகந்தி, தனராஜ் மாஸ்ரரின்ர விசயமெல்லாம் முதலே உனக்குத் தெரியும்போலை கிடக்குது?” சாந்தி சந்தோசமாகக் கேட்டவாறே உள்ளே நடந்தாள்.
“தெரியும் அம்மாவும் மாமாவும் கதைச்சதை நானும் கேட்டுக் கொண்டிருந்தனான்” சுகந்தி வாய்க்குள் சிரித்தவாறே அப்பால் நகர்ந்தாள்.
வெளியில் ஊர் நாய்கள் மாறிமாறிக் குரைத்துக் கொண்டிருந்தன. ஒழுங்கைச் சந்தியிலிருந்து வாகனங்கள் புறப்பட்டுப்போகும் ஓசை கேட்டபொழுது, வீட்டிலிருந்த அனைவரும் நிம்மதிப் பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டார்கள்.
“எங்கடை ஒழுங்கைப்பக்கம் அவங்கள் வரேல்லை; றோட்டுப் பக்கம் மட்டுந்தான் செக் பண்ணினவங்கள் போலை கிடக்குது. இனிமேல்… நாளைக்கு விடியத்தான் என்ன நடந்ததெண்டு தெரியும்” சிவராசர் கூறியவாறே சாய்மனைக் கதிரையில் அனாயாசமாகச் சாய்ந்து கொண்டார்.
“இடி விழுவாங்கள்… இருந்தாப்போலை வந்து, உங்கை எத்தினை பெடியளைப் பிடிச்சுக் கொண்டு போனாங்களோ தெரியேல்லை?” சிவகாமி ஆற்றாமையில் கூறிவிட்டுப் பெருமூச்சு விட்டவாறே சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சாந்திக்குப் பசியே தெரியவில்லை!
‘ராமத்தான் எங்கை நிக்கிறாரோ தெரியேல்லை.பாவம் எங்கடை வீட்டுக்கு வந்தவர், திரும்பிப் போறதுக்கிடையிலையே ஓடவேண்டியதாய்ப் போச்சுது; இரவு என்ன சாப்பிடுறாரோ?’ சாந்திக்கு உள்ளூர வேதனையாக இருந்தது. அவள் தனக்குப் பசிக்கவில்யென்று சிவகாமியிடம் சொல்லி விட்டு, அறைக்குள் சென்று கட்டிலில் சரிந்துகொண்டாள்.
மணிக்கூட்டில் மணி எட்டைத் தாண்டிக் கொண்டிருந்தது சாந்திக்கு உடல் அசதியாக இருந்தாலும் நித்திரை வருவதாக இல்லை. கைகளைக் குறுக்காக நெற்றியில் போட்டவாறே முகட்டைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘கல்யாணம் ஆன உடனை… ராமத்தான் சொன்ன மாதிரிக் கனடாவுக்கு ஓடித்தப்பி விடவேணும். இங்கையிருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் இப்பிடியே பயந்து .. பயந்து… எப்படிச் சந்தோசமாய் வாழுறது? ராமத்தான் என்னிலை உயிரையே வைத்திருக்கிறார். அங்கை போய் சேர்ந்திட்டமெண்டால், ரெண்டு பேரும் ஒரு நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கையை வாழலாம்’ சாந்தி தனது எதிர் காலம் பற்றிப் பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
சுகந்தியும் நேரத்தோடு வந்து படுத்துக்கொள்வதைப் பார்க்கும்போது, சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஏன் சுகந்தி? இண்டைக்குப் படிக்கேல்லையே?” சாந்தி மெல்லத் திரும்பிக் கேட்டாள்.
“ஒரே அலுப்பாய் இருக்குதக்கா” அவள் எதிர்க் கட்டிலில் புரண்டுகொண்டாள். சுகந்தியும் எதைப்பற்றியோ யோசிக்கிறாள் என்பது சாந்திக்குப் புரிந்தது.
‘அவளுக்கும் கல்யாணம் பேசப்படுகுது எண்டு தெரிந்த பிறகு… கொஞ்சமாவது யோசிக்காமல், கற்பனை பண்ணாமல் இருப்பாளே? ஆண்களெண்டாலும் நாலுபேரோடை கதைத்துச் சிரித்துப் பொழுதைப் போக்குவினம்; பெண்களெண்டால் இப்பிடித் தங்களுக்குள்ளேயே எல்லாத்தையும் கற்பனை பண்ணிச் சந்தோசப்பட்டு, துக்கப்பட்டு… தங்களுக்குள்ளேயே அனுபவிச்சுக் கொள்ளுவினம்; அதுதானே இயல்பு!’
சாந்தி மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள்.
“சாந்தி… நித்திரை கொள்ளுறதெண்டால், லைற்றை அணைச்சு, கதவைப் பூட்டிக்கொண்டு படுங்கோ” சிவகாமி குரல் கொடுத்த போதுதான் சாந்தி திரும்பிப் பார்த்தாள். கதவு பூட்டப்படாமல் இருந்தது. வழக்கமாக இந்த இரண்டு வேலைகளையும் சுகந்திதான் இறுதியாகச் செய்து கொள்வாள். இன்று அது நடைபெறாமல் இருந்தது சுகந்தியின் மனவோட்டத்தைச் சாந்திக்குப் புரிய வைப்பதாயிருந்தது. சாந்தி எழுந்து, கதவைப் பூட்டி லைற்றை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
தூரத்தில் எங்கோ, ஒரு வீதி நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
– தொடரும்…
(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)
– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.