நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,556 
 
 

(1988ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம்-7 

பக்கத்து வீட்டு நாய் குரைத்து ஓய்ந்தது. 

வெளிவிறாந்தாவில் இருந்த சிவராசர் ராமின் வரவை அவதானித்ததும் மகிழ்ச்சியுடன் “வாமேனை…உள்ளைவா” என்றவாறே ராமை வரவேற்று, வரவேற்பறையில் அமர்த்தி அளவளாவுவது கேட்டது. சில நிமிடங்களில் சிவகாமியும் அங்கு வந்து கதைக்கத் தொடங்கினாள். பக்கத்து அறையாதலால் கதைகளை சாந்தியால் தெளிவாகக் கேட்கக்கூடியதாயிருந்தது. 

“சாப்பிடுங்கோ … இவ்வளவும் சாப்பிட்டிட்டுத்தான் எழும்ப வேணும்” சுகந்தி ராமிற்கு வடையைப் பரிமாறினாள். 

“ஓ… பிறகென்ன? எனக்கு விருப்பமான சாமான்! இப்படி வைச்சீங்களெண்டால், நான் ‘ட்றே’யையும் சேர்த்துச் சாப்பிட்டுப்போடுவன்” என்று ராம் கூறியபோது அனைவரும் சிரித்துக்கொண்டனர். வரவேற்பறையின் கலகலப்பு கட்டிலில் படுத்திருந்த சாந்திக்கு ஏனோ ஏக்கமாக இருந்தது. 

“அப்ப .. திரும்ப இனிமேல் எப்ப போறது?” சிவகாமி தான் கேட்டாள். 

“ரெண்டு மாசத்திலை எப்பிடியும் போகவேணும்!”

“அப்பிடித்தான் அண்ணையும் சொன்னவர்; அதனால் தான் அதுக்கிடையில எல்லா விசயத்தையும் முடிச்சிட வேண்டுமெண்டு பாக்கிறம்” சிவகாமி கூறி முடிக்கமுன், 

“என்ன… ராம்? உனக்கு …அதிலை யொரு பிரச்சினையும் இல்லைத்தானே?” சிவராசர் குறுக்கிட்டார். 

“இல்லையில்லை; அம்மா எல்லாம் …முதலே .. முதலே விபரமாய் எழுதியிருந்தவ; நான் அந்த முடிவோடைதான்…. அங்கை வீடெல்லாம் அரேன்ஜ் பண்ணிக்கொண்டு அந்திருக்கிறன்”.

“அப்ப… இவளையும் கூட்டிக்கொண்டு போகப்போறன் எண்டிறாய்…?” சிவராசர் கேள்விக் குறியோடு நோக்கினார். 

“ஓம் மாமா; ரெண்டு மாசத்தில போனால் பிறகு எப்ப வருவனெண்டு சொல்லத் தெரியாது. சாந்திக்கும் பாஸ்போட் எல்லாம் ஆயத்தமாய் இருக்குதெண்டு அம்மா சொன்னா…” 

“ஓமோம்; அவளுக்கும் எனக்கும் இருக்குது. நாங்கள் ரெண்டு பேரும் ஒருக்கால்… இந்தியாக் கோயில்களுக்கு போறதெண்ட ஐடியாவிலை ஓல்கன்றி பாஸ்போட் எடுத்தனாங்கள்…. பிறகெங்கை இந்த நாட்டுப் பிரச்சினைகளால் கொழும்புக்கே போக ஏலாமல் இருக்குது…!” சிவராசர் கூறிமுடிக்கமுன், 

“ராம்… அப்ப.. அவளை அங்கை கொண்டுபோய் வைத்திருக்கிறதாலை ஒரு பயமும் இல்லையே?” சிவகாமி ஒருவித ஏக்கத்தோடு கேட்பது சாந்திக்குப் புரிந்தது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. 

“இல்லை மாமி. அதில என்ன பயம்? நான் கூடவே இருப்பன்தானே. அக்கம் பக்கம் வேற ‘ரமில்ஸ்’ உம் இருக்கினம். அவையளுக்கெல்லாம் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். அவையள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பினம்”

“…” 

“இப்ப … இங்கை இருக்கிறதைவிட அங்கை இருக்கிறது எவ்வளவோ பாதுகாப்புத்தானே…”

“ஓ… அது சரி….” சிவராசர் ஒப்புக்கொண்டார். சிவகாமியின் சஞ்சலம் ராமிற்குப் புரிந்ததாலோ என்னவோ. 

“மாமி…, அங்கை நான் வேலைக்குப் போனாலும் சாந்திக்கு ஒரு பயமுமே இருக்காது. வீட்டில சகல வசதியும் செய்திருக்கிறன்; நாலு நாளிலை அவளுக்குப் பழகீடும்” என்று ஆறுதல் கூறுவதுபோல் கூறிவிட்டு, 

“மாமா, இந்தாங்கோ ரவூசர் குளோத்ஸ்” என்றவாறே நான்கைந்து வெளிநாட்டுத் துணிகளைப் பையிலிருந்து எடுத்து, அவர் கையில் திணித்த ராம், 

“சுகந்தி இந்தா … இதில ஒன்பது சாறீஸும். ‘பிளவுஸ் பீஸ்’ உம் இருக்குது. உனக்கு… அக்காவுக்கு… அம்மாவுக்கு…. சரிதானே” என்றவாறே சுகந்தியிடம் அந்த வெளிநாட்டுப் பையை நீட்டியபோது, சுகந்தி நன்றியோடு பெற்றுக்கொண்டாள். 

“சுகந்தி.. அதுக்குள்ளை சொக்லேற் பக்கற்ஸ் உம் இருக்குது. சாப்பிடுங்கோ” ராம் கூறிவிட்டு மீண்டும் மாமன் மாமியாருடன் சம்பாஷணையில் ஈடுபட்டுக்கொண்டான். 

‘கல்யாணத்துக்கு முன்னமே, வெளிநாட்டுக்குப் போற கதையெல்லாம் கதைக்கிறார். ஆனால் என்னை எங்கை யெண்டு…. இன்னும் ஒரு சொல்லுக் கேட்கவேயில்லையே! ஒருவேளை…என்னை …சும்மா ஒரு மாற்றத்துக்காகத்தான் கட்ட ஆசைப்படுகிறாரோ? கட்டின உடனேயே கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போறதெண்டால்…!” சாந்திக்கு ஒரே யோசனையாக இருந்தது. 

’47 நாட்கள்… சினிமாப் படம் மாதிரி… இவளுக்கும் ஏற்கனவே கனடாவிலை ஆரும் வெள்ளைக்காரிகள்…!’

“அக்கா; இங்கை பாருங்கோ; எல்லாம்… நல்ல வடிவான சாறிகள் ! ராமத்தான் சரியான ஆளக்கா; நான் கூடின பங்கு சட்டைகள்தான் போடுறனான் எண்டு அவ்வளவு தெரியாதே? அவர் உங்களுக்கெண்டுதான் இதையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்திட்டு .. சும்மா எங்களைப் பிளீஸ் பண்ணுறதுக்காக என்ரை பெயரையும் அம்மாவின்ரை பெயரையும் இதிலை சேர்த்திருக்கிறார்!” சுகந்தி சாறிகளைக் கட்டிலில் போட்டுவிட்டு முணுமுணுப்பதைப் பார்த்தபோது சாந்திக்குச் சிரிப்பு வந்தது. சொக்லேற் பக்கற்றை உடைத்து இருவருமாக மளமளவென்று சாப்பிட்டார்கள். 

சுகந்தி, அவளை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு மீண்டும் வரவேற்பறை சம்பாஷணையில் சேர்ந்து கொண்டாள். 

வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது. எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். அவசரம் அவசரமாக உள்ளே வந்து கொண்டிருந்த செல்லநாதர், 

“அட… ராமும் இங்கேயே நிக்கிறான்! இங்கை… சிவகாமி…” என்றவாறே சிவகாமியுடன் உள் விறாந்தாவிற்கு வந்தார். 

“சிவகாமி, எங்கை… இவளின்ரை ஓலை தேடியெடுத்துப் போட்டியே?’ 

“ஓமண்ணை… அவரோடை கதைச்சுக்கொண்டிருங்கோவன்… எடுத்துக்கொண்டு வாறன்” 

சிவகாமி அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

“எனக்கு நிக்க நேரமில்லை; நீ கெதியாய் கொண்டுவா” என்று உரத்துக்கூறிய செல்லநாதர், 

“கறுப்பையாச் சாத்திரியார் நேற்று மத்தியானந்தான் மட்டக்களப்பாலை வந்தவராம். எனக்கு.. அவர் வந்தது இப்பதான் தெரியும். ஊரடங்குச் சட்டம் இருந்தாலும்… ஒழுங்கைகளுக்குள்ளாலையாவது போய் விசயத்தைக் கவனிக்கவேணும். பிறகு… நாளும் சுணங்கிப் போடும்” என்றவாறு அறை வாசலுக்கு வந்தவர், சிவகாமி கொண்டுவந்து கொடுத்த, சாந்தியின் சாதக ஓலையைப் பெற்றுக்கொண்டதும், 

“என்னெண்டாலும் பொருத்தங்களை ஒருக்கால் வடிவாய்ப் பார்த்தால்தான் மனசுக்கு நிம்மதியாய் இருக்கும்” என்றவாறே திரும்பினார். 

“அது சரியண்ணை.. சுகந்தியின்ரை விசயம் என்ன மாதிரி?” சிவகாமி அவசரமாக மெதுவாகக் கேட்டபொழுது சாந்தி காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டாள். 

“ஓமோம்; நல்லவேளை! ஞாபகப்படுத்திப்போட்டாய். அவன்… தனராஜின்ரை ஓலையும் கறுப்பையா சாத்திரியா ரிட்டை தான் இருக்குதெண்டு தகப்பன் – ராமலிங்கம் சொன்னவன். கையோடை சுகந்தியின்ரையையும் வாங்கித் தரச் சொல்லி நேற்றுச் சொல்லிவிட்டவன்; நான் மறந்து போனன். எங்கை.. அவளின்ரையையும் கொண்டுவா” என்று செல்லநாதர் அவசரப்படுத்தியதும் சிவகாமி ஓட்டமும் நடையுமாக சுகந்தியின் ஓலையையும் எடுத்துக் கொடுத்தாள். செல்லநாதர் விடைபெற்றுக்கொண்டுபோவது தெரிந்தது. 

‘ஓஹோ…சுகந்திக்கு தனராஜ் மாஸ்ரரைப் பேசினம் போலகிடக்குது! பரவாயில்லை; அவர் நல்லவர்; குடிகிடி இல்லையெண்டு தான் கேள்விப்பட்டனான். ராமத்தானின்ரை கிளாஸ்மேட் ஆக இருக்கவேணும்’. 

சாந்திக்கு அந்த சம்பந்தம் மிகவும் பிடித்தது. சுவர் மணிக்கூடு ஐந்து தடவை ஒலியெழுப்பி ஓய்ந்துகொண்டதும் அறைக்குள் இருந்த சாந்தி, பொறுமைமீறி எழுந்துவெளியே வந்தாள். ஜன்னலினூடாக வரவேற்பறையை எட்டிப் பார்த்தபோது ராமும் சிவராசரும் சாதாரணமாகக் கதைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சுகந்தி வில்லங்கமாக வரவேற்பறை வாசலிலேயே நின்றிருந்தாள். 

ராம் தன்னைப்பற்றி எதுவுமே விசாரிக்காமல் சாதாரணமாகக் கதைத்துக்கொண்டிருப்பது சாந்திக்கு. எரிச்சலையே கொடுத்தது. 

‘இவருக்கு உண்மையாகவே என்னிடம் அன்பும் ஆர்வமும் இல்லையோ? அப்படியிருந்திருந்தால்… வீட்டுக்கு வந்த இவ்வளவு நேரத்திலை… என்னை எங்கையெண்டு கேட்டிருக்கலாமே? அம்மா, அப்பா கலியாணம் பேசிப் போட்டினமே எண்டதுக்காக சும்மா போலியாக அனுசரிச்சு நடக்கிறார், அவ்வளவுதான்’. 

அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘விறுவிறு’ வென்று அறைக்குள் நுழைந்து, பொத்தென்று கட்டிலில் விழுந்தாள். தலையணையைக் கட்டியணைத்தவாறே பிடிவாதமாகக் கண்களை மூடிக்கொண்டாள். மனப்புழுக்கம் குறைவதாயில்லை! சட்டுச் சட்டென்று கோபமும் வெறுப்பும் வந்தாலும் ஒருவித ஏக்கமும் கூடவே இருப்பதை அவளால் ஒதுக்க முடியவில்லை! 

அத்தியாயம்-8 

ராமும் சிவராசரும் மிகவும் சுவாரஸ்யமாக, சம்பாஷணையில் இறங்கியிருந்தார்கள். 

“மாமா, தென்னந் தோட்டமெல்லாம் இப்ப என்ன பாட்டிலை இருக்குது?”

“அது… நீ கனடாவுக்குப் போகேக்கை காய்க்காமல் நிண்டதெல்லே? இப்ப கடவுளேயெண்டு நல்லாய்க் காய்க்குது. அந்த எட்டுப் பரப்புத் தென்னந் தோட்டமும் இல்லாட்டில், இந்தநாளையில எங்கட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவே ஏலாமல்தான் இருக்கும்” 

“ஏன் மாமா.. உங்களுக்கு நல்ல சம்பளம்தானே? ரெண்டு பெட்டைகளோடை, அவ்வளவும் போதாதெண்டே சொல்லுறீங்கள்?” 

“அட, நீயுமொண்டு! நாளாந்தம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமே? ரெண்டு குமருகளை வைச்சிருக்கிறதெண்டால், இந்த நாளையில… ரெண்டு பாதாளக் கிடங்குகளை வெட்டி வைச்சிருக்கிறமாதிரி நாங்கள் அதுக்குள்ளை குதிச்சால்தான் அதுகளை வாழவைக்கலாம். அதுகள் வாழுறது … யாழ்ப்பாணத்திலை எண்டதை மறந்து போட்டியே? .. கொஞ்சம் பொறன். கலியாணப் பேச்சுக்கள் சூடு பிடிக்கேக்கைதான். பெண்ணைப் பெத்தவை எவ்வளவு உழைக்கவேணுமெண்டு உனக்குத் தெரியும்.” 

“மாமா, நீங்கள் எதை வைத்து அப்பிடிச் சொல்லுறியள் எண்டு எனக்கு விளங்குது. யாழ்ப்பாணத்தில் வாழுற் குமர்ப்பிள்ளைகள் பலர், நல்ல திறமையும் அறிவும் அழகும் இருந்தாலும் கூட நல்ல மணவாழ்க்கையை அமைச்சுக் கொள்ள முடியாமல் சீரழிஞ்சு போறதும் எனக்குத் தெரியும்…” 

“ராம், இப்பிடித்தான் எல்லாப் பெடியங்களும்! இந்த நியாயமில்லாத நிலைமைகளை நல்லாய்ப் புரிஞ்சுகொண்டும் அவையளுக்கெண்டு கலியாணம் வரேக்குள்ளை புரிஞ்சு கொண்ட அத்தனையையும் தூக்கிப் பிறகால வைச்சுப் போட்டு புரியாத மாதிரிப் பிடிவாதமாய் நிக்கிறாங்கள்! இதிலை என்ன பிரயோசனம்?… உண்மையைச் சொல்லுறன் ராம்; நான் இப்ப ரெண்டு குமர்ப்பிள்ளைகளுக்குத் தகப்பன் எண்டு நினைச்சுக் கதைக்காமல் ஒரு சாதாரண நடுநிலை மனுச்னாய்த்தான் நிண்டு கதைக்கிறன். மாப்பிள்ளை குடுக்கிறவைக்குத்தான் புத்தி போச்சுதெண்டால், மாப்பிள்ளையாய் போறவையளுக்குப் புத்தி எங்கை போகுது? போன மாசமும் இந்த ஊரிலை ஒரு கலியாணம் நடந்தது. பெடியன் ரெக்னிக்கல் ஒவீசர்… பெட்டை ஏ.எல். லரையும் படிச்சவள்; அவளுக்குக்கீழை இன்னும் மூண்டு குமருகள் இருக்குதுகள்! சீதனம்.. எவ்வளவு தெரியுமே? எழுபத்தையாயிரம் காசு; பெட்டைக்கு வேண்டிய நகைகள்; மாப்பிள்ளை வீட்டாருக்குப் பிடிச்சமாதிரி வீடு! இப்ப அந்தப் பெட்டை யின்ரை தகப்பன் அரைவாசியாய்ப் போனான்! அவன் ஒரு கிராஜ்வேட் ரீச்சர் … இருந்தும் என்ன சுகத்தைக் கண்டான்? கஷ்டப்பட்டுக் சேர்த்து ஒருத்தியைத்தான், கரைசேர்த்தான்.இனி…மற்றதுகளின்ரை பாடு என்ன?… இதுகளையெல்லாம் யோசித்துப் பாக்கிறபோது, உண்மையாகவே எனக்கு வயிறு பத்தி எரியுது! கடவுளேயெண்டு என்ரை பிள்ளைகளுக்குக் கலியாணம் செய்துவைக்க போதுமான வசதிகள் என்னட்டை இருக்குது. ஆனாலும் எல்லாருக்கும் அப்பிடி வசதிகள் வந்துவிடுமே ?…” சிவராசர் ஒருவித ஆற்றாமையுடன் மூச்சுவிடாமலே கூறினார். 

“மாமா, நானொண்டு சொல்லட்டே? என்னைப் பொறுத்த வரையில் புதிசாய் கலியாணம் செய்யிறவையளுக்கு புறம்பாய் வாழுறதுக்கு ஒருவீடு அவசியம் தான். அதுக்காக சீதனமாய்க் காசு. இனாம் எண்டெல்லாம் வாங்கிறது சுத்த அடாவடித்தனம் எண்டு நினைக்கிறவன் நான். வீடு கூட . பெண்வீட்டாரை வற்புறுத்திக் கேட்கக் கூடாது. அவையளுக்குத் தரக்கூடிய வசதியிருந்தால் வாங்கலாம்; இல்லாவிட்டால், இருபக்கத்தாரும் ஒண்டாச்சேர்ந்து, ஒரு வீட்டு வசதியைக் கொடுக்கலாம். அதுதான் முறை எண்டு நானே எனக்குள்ளை யோசிக்கிறதுண்டு; ஆனால், நான் யோசிக்கிற மாதிரி எல்லாரும் யோசித்தால்.. நீங்கள் சொன்னமாதிரியான அவலங்கள் வரவே வராது”. 

“என்ன… மாமனுக்கும் மருமகனுக்குமிடையில் விவாதம் போலை கிடக்குது?” சிவகாமி இடையில் வந்து குறுக்கிட்டாள். 

“இல்லை மாமி, அப்பிடியொரு விவாதமுமில்லை; சும்மா எங்கட அபிப்பிராயங்கள்தான்” ராம் சிரித்தவாறே கூறினான். 

திடீரெண்று அவசரமாக எழுந்த சிவராசர் நேரத்தைப் பார்த்துவிட்டு, 

“ராம், நீ இவையோட கதைச்சுக் கொண்டிரு. நானொருக்கால் உவர் ராமலிங்கத்தாரைச் சந்தித்துக் கொண்டு வாறன்” என்றவாறே எழுந்து, சேட்டை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டார். 

“சுகந்தி,அத்தானுக்கு அல்பங்களை எடுத்துக் காட்டன்” என்றவாறே சிவகாமியும் ஏதோ அலுவலாக உள்ளே நுழைந்து கொண்டாள். 

சில வினாடிகள் வரவேற்பறை நிசப்தமாக இருந்தது. சுகந்தி அல்பங்களைக் கொண்டுபோய் ராமிடம் கொடுத்த பொழுது, 

“சுகந்தி, சாந்தி எங்கை போயிட்டாள்?” என்று அவன் மிக மெதுவாக ஆவலுடன் கேட்டான். சுகந்தி வாய்க்குள் வந்த சிரிப்பை அடக்கியவாறே, “அவ நித்திரையாய் இருக்கிறா” என்று சொல்வது சாந்திக்குக் கேட்டது. சாந்தி மிக அவதானமாக அவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

“நித்திரையோ? நான் இங்கை வருவனெண்டு அவள் சொல்லயில்லயே?” 

“சொன்னவதான்… அதுக்கென்ன இப்ப?” 

“ம்… நல்ல நித்திரையே?” 

“பின்னை…. கூடாத நித்திரையே கொள்ளுறது?”

சாந்திக்குச் சிரிப்பு வந்தது. அவள் தலையணையை மார்போடு அணைத்தவாறே எழுந்து, சுவரோடு சாய்ந்தமர்ந்து கொண்டாள். சுகந்தி சிரிக்காமல் பதில் சொல்வது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. 

“என்னடா இது?” என்று சூள்கொட்டிய ராம், “நான் வந்திருக்கிறதாய் போய் அவளிட்டை ஒருக்கால் சொல்லி விடன்” என்று அவசரப்படுத்தினான். 

“சொன்னாலும் அவ எழும்பமாட்டா. சும்மா…உந்த அல்பங்களைப் பாருங்கோ ராமத்தான்” சுகந்தி சின்னப் பிள்ளைத்தனத்துடன் அலட்சியமாகக் கூறினாள். ராமிற்குக் கோபம் வந்ததில் சட்டென்று முகம் சிவந்தது. 

“இதென்ன… கண்டறியாத அல்பம்? நீ இப்ப சாந்தியை எழுப்பி விடுறியோ இல்லையோ?” அவன் சற்று அதட்டலாக வினாவினான். 

“என்ன ஒரு மாதிரி வெருட்டுறீங்கள்? அம்மாவிட்டைச் சொல்லிப்போடுவன் தெரியுமே?” சுகந்தியும் சளைத்துப் போகாமல் இறுக்கமாகவே நின்றாள். 

“போடி ! அம்மாவிட்டைச் சொன்னாலென்ன… நான் தேய்ஞ்சு போடுவனே? நான் அவளைக் கட்டப்போறவன்; தெரியுமே?” ராம் விட்டுக்கொடுக்காமல் அதிகாரத் தோரணையில் பேசியபோது, சுகந்தி பயந்துபோனாள். ராமிற்கு அவளது பயம் சிரிப்பையூட்டியது. 

“என்ன யோசிக்கிறாய்? போய் சாந்தியைக் கூட்டிக் கொண்டு வாணை!” சற்றுக் குழைந்த குரலில் ராம் கூறியது, சுகந்திக்குக் கிண்டலோ, உண்மையோ எனப் புரியாமல் இருந்த பொழுதிலும், அவள் மெதுவாகத் திரும்பி, சாந்தியின் அறைக்குள் நுழைந்து சாந்தியை அழைத்தாள். சாந்திக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. 

சாந்தி வந்தபொழுது ராம் சிரித்தான். அதன் அர்த்தம் இருவருக்குமே பூரணமாகப் புரியாமல் இருந்தது. 

“என்ன சுகந்தி?… இவள் நித்திரை செய்த மாதிரியே தெரியேல்லை!” ராம் மீண்டும் குறும்பாகச் சிரித்துவிட்டு எதிர்பாராத விதமாக சாந்தியின் கையில் பட்டென்று கிள்ளினான். வலியோடு முனகிய சாந்தி சட்டென்று விலகினாள். 

“இரண்டுபேரும் சேர்ந்து எனக்குக் காது குத்துறீங்களோ? கள்ளிகள்!” ராம் பரிகாசமாகக் கூறியபோது சாந்தியும் சுகந்தியும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 

“ராமத்தான்! நீங்கள்…” சாந்தி யோசித்தாள். 

“நான் வாறபோது… நீ இந்த ஜன்னலடியிலை நிண்டனியோ, இல்லையோ? உண்மையைச் சொல்லு” ராம் கேட்ட போது சுகந்தி தலையைக்குனிந்து மெதுவாகச் சிரித்தாள். சுகந்தி நாக்கைக் கடித்தவாறே மறுபக்கம் திரும்பினாள். 

“நீங்கள் ஜன்னலைப் பார்த்தமாதிரித் தெரியேல்லையே! அப்ப எப்பிடி என்னைக் கண்டனிங்கள்…?” சாந்தி தலை நிமிராமலே சந்தேகத்தோடு கேட்டாள். 

“எனக்குக் கழுகுக்கண் தெரியுமோ?சும்மா நடக்கிற போதும் மூலை முடுக்கொண்டும் தப்பாது” ராம் மீண்டும் பரிகாசமாகச் சிரித்தான். 

“சுகந்தி, பாத்தியே? நான் அப்பவே சொன்னன். இவர் எல்லாருக்கும் மேலாலை விளையாடுவார் எண்டு…” 

சாந்தி கூறி முடிக்கமுன், சுகந்தி வெட்கம் தாளாமல் மெல்ல உள்ளே நழுவிக்கொண்டாள். 

“ராமத்தான், உங்களுக்கு இவ்வளவு கழுகுக்கண்ணெண்டு தெரிஞ்சிருந்தால் இப்பிடி…”

“சும்மா.. வில்லங்கமாய்க் கட்டிலிலை படுத்திருக்காமல், உண்மையாகவே நித்திரை கொண்டிருப்பாயாக்கும்” 

“சும்மா போங்கோ; உங்களோட இப்ப கூடக் கதைச்சு வெல்ல ஏலாது!” 

“ஒத்துக் கொள்ளுறியோ?” 

“என்ன செய்யிறது? இப்பவே ஒத்துக்கொள்ளப் பழகத் தானே வேணும்!” 

“நீ முந்தி மாதிரி இல்லாமல்… இப்பிடி அடங்கிப் போறதைப்பார்க்க… எனக்கு ஆச்சரியமாய் இருக்குது!”

சாந்தி மெல்லச் சிரித்தாள். 

– தொடரும்…

(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். மின்னஞ்சல் முகவரி: chandra363@googlemail.com வாழ்க்கைக் குறிப்பு சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *