கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,587 
 
 

“ஏ… அண்ணமாரே… தம்பிமாரே… அக்காமாரே… தங்கச்சிமாரே…. அய்யாமாரே…. ஆச்சிமாரே… குட்டி குட்டி பிள்ளைங்கமாரே…. நம்ம கொளத்தாங்கரை பிள்ளையார் கோயில் வாசல்ல உங்கள சந்தோசப்படுத்த நாங்க கூத்தாடப் போறோம். ஆட்டம், பாட்டம்ன்னு களைகட்டப்போற அந்த விழாவுக்கு வந்திருந்து உங்க ஆதரவையும், உதவியையும் செய்யணும்னு கேட்டுக்கறேங்கோ…”

பொன்னாத்தா தெரு முனையிலிருந்து கடைசிவரை கூவிக் கொண்டே போனாள். பின்னாடியே உடுக்கையை அடித்தபடி கண்ணுச்சாமி சென்றான்.

நிகழ்வுகள்கிராமத்தில் தெரு கூத்தை ரசித்துப் பார்ப்பார்கள். தகுந்த மாதிரி உதவியும் செய்வார்கள். நகரத்தில் வாழ்வோரைப் போலப் பெரிதாய் செலவு செய்யவோ, பொழுது போக்கவோ இயலாத கிராமத்து ஏழைகளுக்குத் தெருக்கூத்துதான் பெரிய கலைவிழா.

பிள்ளையார் கோயில் வாசலுக்கு அனைவரும் கிளம்பி வந்திருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் திமிறி நின்றது.

கூத்தாட வசதியாய் நடுவில் வட்ட வடிவில் இடம் விட்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். கூத்தைத் தொடங்கும்விதமாய், முதலில் கண்ணுச்சாமி முன்வந்து உயரமாய் கை கூப்பினான்.

“”சாமியோவ்… ஒங்க எல்லாருக்கும் வணக்கமுங்கோ… இதோ எங்க வயித்துப் பாட்டுக்கு நானும், எம் பொஞ்சாதியும், புள்ளைங்களும் உங்க முன்னால இன்னிக்கு பணிஞ்சி நிக்கிறோம். எங்களுக்குத் தெரிஞ்சத செஞ்சி காட்டப் போறோம். நீங்க எல்லாரும் அமைதி காத்துத் தரணும்னு கேட்டுக்கிட்டு கூத்தத் தொடங்குறோம்” என்றதும், ஒரு சிறுவன் ஓடிவந்து எதிரில் நின்றான்.

“”இங்கப் பாருங்கோ… இந்தச் சின்னஞ்சிறு கொழந்த… சிரிக்கும் செல்லக் குழந்தை… பேரு பாபு. இங்கருந்து அங்கயும், அங்கருந்து இங்கயுமா விடாம குட்டிக்கரணம் அடிச்சிப் போகப் போறான்… எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க…”

தட்டினார்கள். சிலர் உற்சாகத்தில் “ஓ’ வெனக் கத்தினார்கள்.

பாபு தடதடவென குட்டிக் கரணம் அடித்துக் கொண்டே போனான். திரும்பவும் பின்புறமாய் அடித்துக் கொண்டே வந்தான். எல்லோர் விழிகளும் ஆச்சரியத்தில் பெரிதாய் விரிந்தன.

விசில் அடித்து ஆர்ப்பரித்தது கூட்டம்.

அடுத்த ஓர் இரும்பு வளையத்துக்குள் உடலை நுழைத்து, மிகவும் சிரமப்பட்டு மேலிருந்து கீழாய் வளையத்தை நகர்த்தி வெளியே வந்தார்கள், கண்ணுச்சாமியும், பொன்னாத்தாவும். வளையத்துக்குள் மாட்டிக் கொண்ட இருவர் உடம்பு வலி தாங்காமல் துடிக்கும் துடிப்பை முகபாவனையில் வெளிப்படுத்தினார்கள்.

அடுத்து ஒரு டப்பாங் குத்து நடனம். கையை ஆட்டி, காலை ஆட்டி, இடையை ஆட்டி அவளுக்குத் தெரிந்ததை ஆடி முடித்தாள், பாபுவின் தங்கை கோகிலா.

அடுத்து தீப்பந்தம் ஏந்தி உடல் முழுவதும் தீயால் சுட்டுக் கொண்டான் கண்ணுச்சாமி.

தீயின் சூட்டால் துடிக்கும் பாவனை. தகுந்தாற்போல் ஒரு சோகப் பாடல். தீயின் சூட்டில் உடம்பு முழுவதும் கறுப்புக் கோடுகள்.

கூட்டம் மெய் சிலிர்த்து நின்றது. பெண்களில் சிலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். விசிலும் கைதட்டலும் ஆரவாரித்தது.

நிகழ்ச்சி முடியும் தறுவாயில், நடுவில் ஒரு துணியை விரித்தான் கண்ணுச்சாமி. “”இத நம்பித்தான் நாங்க வாழுறோம். உங்களால முடிஞ்சத மனங்கோணாம செய்யுங்கய்யா எல்லாரும்” கண்கலங்கி கையெடுத்து வணங்கினான்.

சற்று நேரத்துக்கெல்லாம், நாணயங்களும், அரிசியும் நிறைந்தன. அள்ளிச் சுருட்டிக் கொண்டு அனைவருக்கும் நன்றி சொல்லி வந்துவிட்டார்கள்.

இதுதான் வழக்கமான வாழ்க்கை. இதில் எந்தக் குறையையும் உணரவில்லை. நாளைக்கு வேண்டுமென்று சேமிக்கவில்லை. வஞ்சகம், சூழ்ச்சி என்று யாரையும் ஏமாற்றவில்லை.

அன்றைய உழைப்பு, அன்றைய சம்பாத்தியம், அன்றைய சந்தோஷம். அதுதான் அவர்கள் கொள்கை.
*******************

படுக்கையிலிருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை பைரவ மூர்த்தி.

கார் ஓட்டுநர் மூன்றாவது முறையாக மணி அடித்தபோது அரைத் தூக்கத்தில் கதவைத் திறந்தார்.

“”வணக்கம் சார்” பணிந்து வணங்கினான்.

“”வா கோவிந்த். இன்னிக்கு நல்லா அசந்துட்டேன். வீட்லன்னா அஞ்சி மணிக்கு மேல ஒரு நிமிசம் படுக்க விடமாட்டாங்க” என்று சிரித்தார்.

“”சரி. நீ போய் காரைத் துடச்சிட்டு.. பெட்ரோல் புடிச்சிட்டு வந்திடு. வர்றப்போ நாலு இட்லி கட்டி எடுத்திட்டு வா.. அதுக்குள்ள நான் குளிச்சிட்டுத் தயாராயிடுறேன்”

தலையாட்டினான்.

பணம் எடுத்துக் கொடுத்தார்.

கோவிந்த் வெளியேறி காரை நோக்கி நடந்தான்.

பைரவ மூர்த்தி தங்கியிருக்கும் மாடி அறையிலிருந்து பார்த்தால் வெளியில் நிற்கும் வேப்ப மரத்தின் உச்சி வரை பார்க்கலாம். பேச ஆளில்லா சமயத்தில் வேப்பமரத்தைத் தான் வெறித்தபடி கட்டிலில் படுத்துக் கிடப்பார்.

அப்போதெல்லாம் மரத்தின் கீழ் தென்படும் கண்ணுச்சாமி குடும்பத்தினரையும் பார்க்கத் தவறுவதில்லை. அவர்கள் நிலை, வாழ்க்கை குறித்து பல சமயம் மனதிற்குள் பச்சாபத்தோடு வேதனைப்பட்டதுண்டு. பாவப்பட்டதுண்டு. ஆனால் அவர்கள் யார் என்பது கூட அவருக்குத் தெரியாது.

பைரவ மூர்த்தி மத்திய அரசு நிறுவனத்தில் உயர் பதவியிலிருப்பவர். பட்டம், பதவி, பணம் எல்லாவற்றிலும் நிறைவாய் வாழ்பவர். எந்த வசதிக்கும் குறைவில்லை. அவர் தலைப்பட்டு கார்,பங்களா என உயர் வசதிகள் அனைத்தும் அனுபவித்தாயிற்று. மனைவி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை. இரண்டு பிள்ளைகள். ஓர் ஆண், ஒரு பெண். இருவருக்கும் திருமணம் ஆயிற்று. பையன் கணிப்பொறிப் பொறியாளராக டெல்லியில் வசிக்கிறான். மகளை அமெரிக்க மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து அங்கேயே வாழ்கிறார்கள். இவருக்கும் இன்னும் நான்கைந்து ஆண்டுகள்தான் பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் பணியின் காரணமாக இவர் தஞ்சாவூரிலும் மனைவி கோயம்புத்தூரிலும், பிள்ளைகள் இரண்டும் ஆளுக்கொரு திசையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். விடுமுறையில் இவர் கோயம்புத்தூர் சென்று மனைவியைப் பார்ப்பதோடு சரி. மற்ற எல்லாமும் தொலைபேசியில்தான்.

அரை மணி நேரத்துக்குள்ளாக ஓட்டுநர் வந்து திரும்பவும் அழைப்பு மணியை அழுத்தினான். திறந்தார்.

இட்லியைப் பிட்டு விழுங்கிவிட்டு, காரில் வந்து ஏறினார். அலுவலகம் நோக்கிக் காரைச் செலுத்தினார் ஓட்டுநர்.
*******************

அன்று மாலை.

அலுவலகத்திலிருந்து வந்து விட்டிருந்தார் பைரவமூர்த்தி.

அறையில் செய்தித்தாளைப் புரட்டியபடி படுத்திருந்தார். காற்று வேகமெடுத்திருந்தது. வேப்ப மரத்துக் கிளைகள் இங்குமங்கும் நடனமாடின.

வானம் கருக்கலிட்டும், கும்மாளமிட்டும் இடித்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்துக்கு எல்லாம் “பொடு பொடு’ வெனத் தூறல் போடத் தொடங்கி விட்டது.

தூறலும், சாரலும் சேர்ந்து ஜன்னல் வழியே உள்ளே சிதறின.

மழை வலுத்துவிட்டது.

“அடிக்கட்டும் நல்லா அடிக்கட்டும்…. எவ்வளவு வெயில்’ என நினைத்தபடியே ஜன்னலை சாத்தப் போனவருக்கு “பகீர்’ என்றது.

ஓர் ஓட்டைக் குடையில் ஒண்டியபடி மரத்துக்குக் கீழேயே நின்றிருந்தார்கள் கண்ணுச்சாமி குடும்பத்தினர்.

குழந்தைகள் இரண்டும் குளிரில் நடுங்கின.

இவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. என்ன சொல்லி அழைப்பது என்றும் தெரியவில்லை.

“”ஹலோ ஹலோ” கத்தினார்.

மழையின் சத்தம் கூடுதலாய் இருந்தது. காதில் விழ வாய்ப்பு இல்லை. யோசித்தார். பின் இரண்டு முறை வேகமாய்க் கையைத் தட்டினார்.

கண்ணுச்சாமி திரும்பிப் பார்த்தான்.

“”இங்க வாங்க… இங்க வாங்க… ” குரலிலும், சைகையிலும் அழைத்தார்.

கண்ணுச்சாமி தங்களை அழைப்பார் என்கிற நம்பிக்கையில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான்.

“”உங்களத்தான் வாங்க”

தயங்கினான் கண்ணுச்சாமி.

“”ஒண்ணும் நெனைக்காம வாங்க. மழ விட்டதும் போயிடலாம்”

பிள்ளைகளை இழுத்துக் கொண்டு மூட்டையைத் தூக்கியபடி வேகவேகமாய் ஓடி மாடியின் மேலேறி அறை ஓரமாய் நின்றார்கள்.

“”உள்ள வாங்க சும்மா”

“”வேணாம் சாமி… இதுவே போதும்”

“”யோவ் வாய்யா உள்ள வந்து நில்லு”

உள்ளே போய் கதவருகே நின்று கொண்டார்கள். பைரவமூர்த்திக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மழை விட்டு விட்டது. சற்றும் தாமதிக்காமல் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். போகும்போது கண்ணுச்சாமிதான் சொன்னான்.

“”மழன்னு போய் ஒதுங்கினா வெரட்டியடிக்கிற ஒலகத்துல எங்களயும் மனுசங்களா மதிச்சி ஒதுங்க எடம் கொடுத்தீங்களே… நீங்க நல்லா இருக்கணும் சாமி”

போய்விட்டார்கள்.

பைரவமூர்த்திக்கு மனசு என்னவோ ரொம்பவும் சங்கடப்பட்டது. எத்தனை வகையான மனிதர்கள்? எத்தனை வகையான வாழ்க்கை? நமக்கெல்லாம் படுக்க ஓர் இடம் இருக்கு. பாவம் அவர்கள் எங்கு போய் தூங்குவார்கள்?

இரவு முழுவதும் அவர்கள் நினைவாகவே இருந்தது. மழையில் ஒண்டிக் கொண்டு நின்ற காட்சி மீண்டும் மீண்டும் வந்து துன்புறுத்தியது.

மறுநாள் அடித்த வெயிலில் தரை காய, மாலையே வேப்ப மரத்தடிக்குத் திரும்பவும் வந்துவிட்டிருந்தார்கள் அவர்கள்.

அறையிலிருந்து பைரவ மூர்த்திக்கு பார்க்கவும் உள்ளே என்னவோ செய்தது. வெளியே வந்து கைதட்டினார். கண்ணுச்சாமிதான் பார்த்தான். கைகாட்டி அழைக்க நேற்றைய விசுவாசத்தில் உடனே எழுந்து ஓடினான்.

“”ஏதும் சேதிங்களா ”

“”நேத்து எங்க போய் படுத்திருந்தீங்க?”

“”பஸ் ஸ்டாண்டுக்குப் போயிட்டம் சாமி”

“”ஏய்யா இப்படியெல்லாம் இருக்கீங்க? நாடோடியா தெருவுலயே எத்தனைக் காலத்துக்கு வாழ்வீங்க? உங்க புள்ளங்கள நெனைச்சிப் பாக்கறதில்லயா நீங்க” மெதுவாகத்தான் பேச்சை ஆரம்பித்தார். சற்று நேரத்துக்கு எல்லாம் பைரவமூர்த்தி அவர்களை நினைத்து வேதனையின் உச்சத்தில் இருந்தார்.

“”என்ன சாமி பண்றது ஆண்டவன் விதிச்சது அவ்ளோதான்”

“”கூத்தாடி வாழுங்க. தொழிலைக் குறை சொல்லல. ஆனா வாழ்றதுக்கு ஒரு வீடு வேணும்ல? வெயிலோ, மழையோ ஒண்டிக்க அதானய்யா ஆதாரம். அத விட்டிட்டு இப்பிடி நாடோடியாவே வாழ்றதெல்லாம்…”

அவர் முடிப்பதற்குள் இவன் முந்திக் கொண்டான்.

“”சாமி நீங்க தப்பா நெனக்கலேன்னா… ஒண்ணு கேட்பேன் சாமி”

பைரவமூர்த்தி சிரித்துக் கொண்டார்.

“”கேளு”

“”இவ்ளோ நல்ல மனுசனா இருக்கிற உங்களுக்கு குடும்பம் குடித்தனமில்லையா? இப்படித் தனியா இருக்கீங்களே”

சிரித்தார்.

“”எனக்குன்னு ஒரு குறைச்சல் இல்லே. பெரிய பங்களா…காரு… போதுமான சொத்து சுகம், மனைவி மக்கள் எல்லாம் இருக்கு. வேலைக்காவ இப்படி வந்து கெடக்க வேண்டியிருக்கு”

திரும்பவும் சிரித்தார்.

“”சரி நான் ஒண்ணு சொல்றேன். கேப்பியா?”

“”சொல்லுங்க சாமி”

“”எங்க ஆபிஸ்ல வேல பாக்குற அதிகாரியோட வீட்டுல வீட்டு வேலக்கி ஆளு வேணும்ங்குறாரு. உன் மனைவிய… புள்ளகள மனசுல வச்சிக்கிட்டு கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவரு பொண்டாட்டி, ரெண்டு பொம்பளங்க எல்லாரும் பாசமா இருப்பாங்க. புள்ளங்க காலேஜ்ல படிக்கிறதுங்க. வீட்டம்மாவும் அரசாங்க வேலையிலிருக்காங்க. அங்கேயே பக்கத்துல ஒரு கீத்துக் கொட்டகை இருக்கு. தங்கிக்கலாம். ஒரு குறையும் இருக்காது. உங்க புள்ளங்களயும் பள்ளிக் கொடத்துல சேருங்க. விருப்பப்பட்டா பொஞ்சாதி புள்ளயெல்லாம் இங்க இருக்கட்டும். என்னோட வாங்க கோயம்புத்தூருல என் நண்பரோட கம்பெனியில செக்யூரிட்டி வேலை வாங்கித் தர்றன். போதுமான அளவுக்கு மாசச் சம்பளம், மாசம் ஒருமுறை வீட்டுக்கு வந்திட்டுப் போகலாம்”.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே பதட்டமாய் எழுந்தான் கண்ணுச்சாமி.

“”எ… என்… என்ன சொ…ல்றீங்க?”

“”பதட்டப்படாதய்யா… உன் குடும்பம் நல்லாருக்கணும்னுதான் சொல்றேன். அன்னிக்கி மழயில நனைஞ்சி உம் புள்ளங்க நடுங்குணப்போ எவ்வளவு கஷ்டமா இருந்திச்சி தெரியுமா?”

பைரவ மூர்த்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பைரவ மூர்த்தி சொல்வதையெல்லாம் அவன் கொஞ்சமும் பொருட்படுத்துவதாயில்லை.

“”ஏ… சாமி… என்ன சொல்றீங்க நீங்க? பழைய சோத்த தின்னாலும் பொண்டாட்டி கையால வாங்கி புள்ளைங்களோட உக்காந்து சாப்பிடறதுல தனி ருசி சாமி. அன்னன்னிக்கு கூத்தாடி சம்பாதிக்குறதுன்னாலும் புள்ள, பொஞ்சாதியோடு சேந்து சிரிச்சி ஒண்ணாச் சாப்பிட்டு, தூங்கி, வாழுற இதுல ஒரு சொகம் இருக்கு சாமி. எல்லாருக்கும் கெடைக்காது சாமி இது? எவ்ளோ காசு, பணம் இருந்தாலும் புருஷன் ஒரு பக்கம், பொஞ்சாதி ஒரு பக்கம்ன்னு வாழ்றது ஒரு வாழ்க்கையா சாமீ?”

பைரவ மூர்த்தி அதிர்ந்தும் வியப்பாய்ப் பார்த்தார்.

என்ன இருந்தாலும் கண்ட ஓட்டல்ல தின்னு, ஒண்டிக்கட்டயா இந்த அறையில அனாதையா கல்லு மாதிரி படுத்திருக்கிற நீங்க ரொம்பவும் பாவம் சாமி, உங்கள நெனச்சா மனசுக்குக் கஷ்டமா இருக்கு”

பைரவ மூர்த்திக்கு பொட்டில் ஓங்கி அடித்த மாதிரி இருந்தது.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *