“கார்டியோலொஜிஸ்ட்டைக் கொண்டுபோய் காட்டுறதுக்குத் தான் சிபாரிசு செய்யிறன் எண்டு இண்டைக்கு மூண்டாம் தரமாய்ச் சொல்லிப்போட்டார், டொக்டர் நாதன். ஆனால், இவர், தனக்கு வேண்டாமாம் எண்டு அடாப்பிடியாய் நிற்கிறார். வருத்தத்துக்கு வழி பாக்காமல் அதை அனுபவிக்கப் போறன் எண்டு அடம்பிடிக்கிற உந்த ஸ்ரபன்னேஸ்க்கு ஏதாவது செய்யுங்கோ பாப்பம்.” எரிச்சலுடன் மகன் சுரேன், மனைவி மல்லிகாவுக்குச் சொல்லிக்கொண்டிருப்பது, மேல்ப்படியினை மெதுவாகத் தாண்டிக்கொண்டிருந்த என் காதுகளிலும் சத்தமாகக் கேட்டது.
அப்படி ஒரு பிரச்சினை நடக்கும் என நான் எதிர்பார்த்ததால், எனக்கெந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை.
பன்னிரண்டு படியேறியது, என்னை மூச்சிரைக்கச்செய்ய, அப்படியே பொத்தென்று என்னுடைய சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டேன், நான்.
“அவளை விட்டால் வேறை டொக்டர் இல்லையே? ஏனப்பா, வேறையொரு டொக்டரிட்டை அனுப்பச்சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம் தானே!” ஈரம்சொட்டும் தன்னுடைய நீண்ட தலைமயிரைத் துவாயினால் உலர்த்தியவாறு, என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தாள், மல்லிகா.
“ஏன், டொக்டர் சிவபாலன் சரியில்லை எண்டு உங்களுக்கு ஆராவது சொன்னவையோ, சும்மா ஆக்களின்ரை கதையை விடுங்கோ, உங்கடை காசையே செலவழிக்கப் போறியள், ஒருக்கா அவவைப் போய்ப் பாக்கிறதிலை உங்களுக்கென்ன நட்டம் வரப்போகுது?” அவன் குரலில் தொனித்த கோபம், அவன் கண்களிலும் சுவாலையாக மின்னியது.
“சுரேன், உனக்குக் கதை தெரியாது அப்பு… அப்பா ஏன் வேண்டாம் என்று சொல்லுறார் எண்டு விளங்காமல் சும்மா கதைக்காதை.”
“எனக்கு ஒண்டும்தான் விளங்கேல்லை! சரி, அதை எனக்கொருக்கா விளங்கப்படுத்துங்கோ பாப்பம்.”
“ம்ம்… அந்த… வேசையின்ரை, பெட்டைதான், அவள்… இந்தப் பிரச்சினைகள் எல்லாத்தையும் சொல்லி, வீணா உன்னையும் ஏன் குழப்புவான் எண்டுதான் நாங்கள் ஒண்டையும் உனக்குச் சொல்லேல்லை.”
“என்ன … என்னத்தை நீங்கள் எனக்குச் சொல்லேல்லை? ஆற்றை பெட்டை அது?” அவனின் குரல் மிகுந்த குழப்பத்துடன் பிசிறியது.
“நானும் அப்பாவும் பிரிஞ்சிருந்த காலத்திலை, அப்பான்ரை இரக்க சுபாவத்தைப் பாவிச்சு உதவியெல்லாம் எடுத்ததும் போதாமல், அப்பாவை மயக்கித் தன்ரை பக்கம் இழுக்கிறதுக்கு அவள் … அந்தச் சிறுக்கி ஆடின ஆட்டம் ஒண்டும் உனக்குத் தெரியாது! அவளின்ரை தொல்லையைத் தாங்கேலாமல் கடைசியா நாங்கள் பொலிசிலை முறைப்பாடு செய்துதான் அவளை ஒருமாரி வெட்டினது. அப்பாடா… அதை ஏன் பேசுவான்? தன்ரை பாட்டிலை இருக்கிற அப்பாவுக்கு, ஆயிரம் தரம் அவள் போன் பண்ணுவாள், ஈமெயில் போடுவாள். சீ, வெட்கம் கெட்டவள்!, பிள்ளையளுக்குக் கலியாணம் கட்டிக்கொடுக்க வேண்டிய அந்த வயசிலை, தனக்கு ஆம்பிளை தேடி அவள் போட்ட கூத்து … அப்பப்பா.”
மேலும் அங்கே நின்று அந்தக் கதைகளைக் கேட்க என்னால் முடியவில்லை. அறைக்குள் வந்து கட்டிலில் குப்புறப் படுத்துக் கொள்கின்றேன்.
***
“ஓ, மை கோட், சுப்பரா வாசிச்சீங்கள், உங்கடை புல்லாங்குழலின்ரை ஒசை மனசை மட்டுமில்லை, அப்படியே உடம்பையும் சில்லிடப் பண்ணியிட்டுது!”
எனக்கான மருந்துடன் வந்த நேர்ஸ் அனு, என்னை மனதாரப் பாராட்டிய போது, என்னை வருத்தம் பார்க்க வந்திருந்த என் நண்பன் மனோ, “இது மட்டுமே, அவர் பாடுறதை நீங்கள் கேட்க வேணும், கேட்டியள் எண்டால், விட்டிட்டுப் போக மாட்டியள்”, எனத் தன் பங்குக்கு என்னைப் புகழ்கின்றான்.
“றியலி? அமைதியா இருக்கிற உங்களுக்கை இத்தனை விஷயமா? ஒரு நாளைக்கு நீங்கள் எனக்கு பாடிக்காட்ட வேணும், என்ன”, முகமெல்லாம் மலர்ந்தபடி எனக்கு வேண்டுகோள் விடுக்கின்றாள், அனு.
அப்படி ஆரம்பித்த நட்பு, என் பாடலை ரசிப்பதாக, என் கதைகளுக்குப் பின்னூட்டல் தருவதாக, இருவரினதும் மன ஆறுதலுக்கு விடயங்களைப் பகிர்வதாகத் தொடர்ந்து, மனதால் மிக நெருங்குகின்றது.
ஆஸ்பத்திரியிலிருந்து நான் வீட்டுக்கு வந்த பின்பும் எங்களின் சந்திப்புக்கள் தொடர்கின்றன. நித்திரை கொள்ள முடியாதளவுக்கு கை வலிக்குது, மருந்து போட்டுவிடக் கூட ஒரு ஆள் இல்லை, எனக் கதையோடை கதையாய் ஒரு நாள் அவளுக்கு நான் ஈமெயிலில் எழுதுகின்றேன்.
அன்று மாலை, கைக்குப் போடுவதற்கு மருந்து, மசாஸ் பண்ணுவது போல இறுக்கிப் போடும் ஒரு பண்டேஸ், அமைதியான நித்திரைக்காகப் படுக்கும் போது ஸ்பிறே பண்ணும் ஒரு தைலம் என கை நிறையச் சாமான்களுடன் வந்தவளைப் பார்த்ததும் விக்கித்துப் போகின்றேன், நான்.
விடைபெறும் போது அவளைத் தொடர்ந்து வீதி வரை சென்ற நான், ஐ லவ் யூ, என்கிறேன். வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மிக மிக வேகமாய்ச் சிறகடிக்கின்றன. இதயம் உச்சயஸ்தாயில் ஓசை எழுப்புகின்றது.
பத்து யார் தள்ளி நிறுத்தி வைத்திருந்த கார் வரை எதுவும் பேசாமல் சென்றவள், கார்க் கதவைத் திறந்து, அதற்குள் ஏறும் போது, திரும்பி என்னைப் பார்த்து, ஐ லவ் யூ ரூ, என்கிறாள். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
கொம்பியூட்டரின் முன்னாள் போய் ஜீரோக்கைத் திறந்து வைத்துக் கொண்டு எப்போது கொம்பியூட்டருக்கு முன்னாள் வருவாள் எனக் காவல் இருக்கின்றேன். இப்படியாக வேலைக்குப் போகும் போது கோல் பண்ணு, வேலையால் திரும்பி வரும் போது வந்து பார்த்துவிட்டுப் போ என கோரிக்கை வைப்பதும், வருவதற்கு ஒரு மணித்தியாலம் முன்பாகவே வருவதின் பதட்டமும், வந்து போன பின் வந்ததன் ஆனந்தமுமாக, மிக மிக அழகாகிப் போன நாட்கள் அவை.
அவள் தந்த அந்த அணைப்பின் சுகத்துடனும், அவளின் வாசத்துடனும் இருப்பதற்காக, போட்டிருந்த சேட்டைக் கூட மாற்றாமல் இருந்த நாட்கள், அவளைக் காணாத போது தலை வாரவோ, சேவ் எடுக்கவோ மனம்வராத பொழுதுகள் என, தெவிட்டாத அந்தக் காதலில் திளைத்த நாட்கள் பல.
அவளுக்கும் எனக்கும் தெரிந்த உறவாக இது இருக்கட்டும், எங்களுடைய சந்தோஷம் எங்களுக்குள் மட்டுமேயானதாக இருக்கட்டும், வேறு எவருக்குமே தெரியக்கூடாது என எனக்குள் முடிவெடுத்துக் கொள்கின்றேன், நான்.
சமூகத்தில் நான் கட்டியெழுப்பியிருந்த நல்ல விம்பம் என நான் நம்பிய அந்த விம்பத்தை அவளுக்காக அல்ல, எதற்காகவும் உடைக்க நான் தயாராகவிருக்கவில்லை. என்னைக் காதலிப்பது போல வாழ்க்கையில் தான் யாரையும் காதலிக்கவில்லை, என்னுடன் அனுபவிக்கும் மகிழ்ச்சி போல் எங்கும் கிடைக்கவில்லை, என அவள் மனசாரச் சொன்னபோது, என் மேல் அவளுக்கிருந்த பைத்தியம் எந்தப் பிரச்சினையையும் வர விடாது என என்னை முழுமையாக நம்ப வைக்கின்றது. அதனால், வருத்தங்களுடன் பணமும் சவாலானபோது, ஆறு வருடங்களின் முன் என்னை விட்டிட்டுப்போன மனிசி மீண்டும் வந்து ஒன்றாக வாழ விரும்பியது, பொருத்தமானதொரு தீர்வென நினைக்கின்றேன்.
அனுவுடனான என் உறவை இனி யாரும் சந்தேகிக்க வழியில்லை, சரி, மதிப்புக்காக குடும்பமும், கவனிப்புக்காக அவளுமாக இருக்கட்டும் என முடிவெடுக்கின்றேன். அப்படியே, இரண்டு அறைக் குடித்தனத்தில் மனைவியுடனான என் வாழ்க்கை ஆரம்பமாகின்றது.
ஆனால் நான் போட்ட கணக்குத் தப்புக்கணக்கென, என்னுடன் ஏட்டிக்குப் போட்டியாகின்றது, என் விதி.
அந்த வருடக் கிறிஸ்மஸ், வெள்ளைக் கிறிஸ்மஸ் ஆக இருக்கப் போகின்றது என என்னுடைய மூத்த பேத்தி மிகவும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கின்றாள். ரொறன்ரோவைச் சுவர்க்கலோகமாக்குவதற்காக வந்த அந்த 30 செமீ பனியுடன் இணைந்த பெரும் காற்று, மரங்களை மட்டுமன்றி என் மனவைராக்கியத்தையும் எதிர்பாராதளவுக்குச் சரித்து விடுகின்றது. மின்சாரமும் இயற்கை வாயுவும் இல்லை என்றாகிய அந்தக் குளிர்ந்த இரவுகளில், குளிரை மேவ, எனது கட்டிலின் மறுபுறத்தில் வந்து படுத்துக்கொண்ட, அதுவரை அந்த வீட்டுக்குள் பெயரளவில் மட்டும் என் மனைவியாக இருந்தவள், என் மனைவியாகி என் தேவைகளுக்குத் தீனி போடுகின்றாள்.
பத்து வருடத்துக்கு மேலாக இருக்காத தாம்பத்தியம் அந்த உயிரை உருக்கும் குளிரில் மீள்பிறப்பெடுத்துக் கொள்கின்றது. என்னை விட்டுவிட்டுப் போனவள் என, அவள் மேலிருந்த என் கோபமும் சூரியனைக் கண்ட பனி போல மறைந்து போகின்றது.
அதே இரண்டு கிழமை விடுமுறைக்குள் தன்னைச் சந்திக்க வேண்டாமெனவும், தன் மேலான என்னுடைய உணர்வுகளை ஆராய்ந்து என்னுடைய முடிவை எடுக்கும்படியும் அனு எனக்கு காலக்கேடு விதித்திருந்தாள். மல்லிகாவுக்கு எங்களுடைய உறவைத் தெரியப்படுத்த வேண்டும் என்பது தொடரும் அவளது தொந்தரவாக இருக்கின்றது.
மனிசியுடன் படுக்கத் தொடங்கிய பின் என் மனம் மிகவும் குறுகுறுக்கத் தொடங்குகின்றது. குழப்பமாகவிருக்கின்றது. அனுவும் என்னை விட்டபாடில்லை. மனிசியுடனான என்ரை வாழ்க்கை முறையை அறிவதில் அவள் காட்டிய ஆர்வம் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றது. எனது மெளனமும் செய்கைகளும் அவளுக்கு எதுவோ சொல்லியிருக்க வேண்டும். அதனால் அவளுடனான சரசங்கள் குறைந்து சண்டைகள் நிறைகின்றன.
தனக்கும் பொம்பிளைப் பிள்ளை இருக்கும்போது, இப்படி என்ரை மனிசிக்குத் துரோகம் செய்யக்கூடாது எனச் சொல்லிக்கொண்டிருந்தவள், முடிவில் இரண்டாம் பெண்டாட்டியாக இருந்தாலும் இருப்பேனே தவிர, இப்படி வைப்பாட்டியாக இருக்க மாட்டேன் என முரண்டுபிடிக்கின்றாள். அல்லது தன்னுடைய உறவை விட்டுவிடச் சொல்லி விரட்டுகிறாள்.
அவள் காட்டிய அன்பை, கவனிப்பை இழக்க விரும்பாத நான், சாகும்வரை அந்த உறவைத் தொடர்வேன், பசிக்கு உணவிட்டவளை, தவித்திருந்தபோது தஞ்சமளித்தவளை விட மாட்டேன் என சத்தியம் செய்திருந்தேன். இருந்தாலும் வெளியில் தெரிய வந்தால், அப்படி ஒன்றில்லை என நிச்சயமாக மறுப்பேன் என்றும் உறவு தெரியவந்தால், நல்லது நடக்கும் என நினைத்து அவசரப்படக்கூடாது என்றும்கூட அவளுக்கு நான் சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடனான உறவை மல்லிகாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நிற்கின்றாள்.
அப்படி இன்னொருவருக்கூடாக எங்கடை உறவைப் பற்றி அவள் மல்லிகாவுக்கு தெரியப்படுத்தியதாலைதான் பிரச்சனை இவ்வளவு பாரதூரமானது.
“அப்ப, தொடர்பு கொள்ள வேணாம் எண்டு பொலிசு மூலம் சொல்லி அவளை உயிருடன் கொன்றதுக்கு, நீ எந்தவிதத்திலும் பொறுப்பில்லை, அப்பிடியோ ….” எனக்குள் இருந்து ஒரு குரல் என்னைத் தட்டிக் கேட்டது.
“நான் என்ன செய்யிறது? அது மனிசி செய்தது, என்னாலை எதுவும் செய்ய முடியேல்லை”
”எதை உன்னாலை செய்யமுடியேல்லை? உனக்கும் அவளுக்கும் ஒரு உறவுமில்லை … அவள்தான் உன்னைச் சுத்தினாள் எண்டு கதை விடுறதுதான் உன்னாலை செய்யேலுமாயிருந்ததோ? பொம்பிளையள் உங்களைச் சுத்துகினம் எண்ட உங்கடை நினைப்பை நிஜமாக்கிறதுக்கும், தேவைகளைப் பெற்றுக்கொள்கிறதுக்கும் தேடித் தேடி திட்டமிட்டு, உறவாடுவியள், பிறகு அந்த உறவுக்கான எந்தப் பொறுப்பும் இல்லை என்பியள். இதுதான் உங்கடை ஆண்மையோ?”
“விட்டுவிடச் சொன்னால், வீட்டுக்கு வந்து தன்ரை பக்கக் கதையை அவள் மனிசிக்கு சொல்லுவாளோ என்னவோ எண்டு எனக்குப் பயமாக இருந்தது. அதோடை எனக்கும் அவளுக்கும் பெரீசா ஒத்துவாறேல்லை, சேர்ந்து வாழ்ந்தால் எங்களாலை சந்தோஷமாக இருக்கேலாது எண்டும்கூட அப்ப, அப்ப அவளுக்கு நான் சொல்லியிருக்கிறன்.”
“சரி, அப்படி நல்ல உறவில்லை எண்டால் அதைச் சொல்லி முதலிலேயே அவளை விட்டிருக்கலாமே? உன்னட்டை இருந்து இதைப் பறிச்சுப் போட வேண்டாம், எண்டு அவளிட்டை யாசிச்சது எல்லாம் உனக்கு மறந்து போச்சோ? பிறகு, காத்திருந்து, நீ போற நேரம் பாத்து கதவு திறக்கிறதுக்கு அவள் தயாரா இருக்கேல்லை எண்டது தானே உன்ரை பிரச்சினையானது?”
“அவளுக்கு நல்லதொரு வாழ்கை அமையேல்லை, என்ரையும் நல்லாயிருக்கேல்லை … அதாலை இரண்டு பேருமாச் சேந்து சந்தோஷமாக இருப்பம் எண்டு நான் நினைச்சன். பசிச்ச போது, அவள் எனக்கு சாப்பாடு போட்டிருக்கிறாள், நோவுக்கு மருந்து தேய்த்திருக்கிறாள், உளைவுக்கு மசாஸ் பண்ணியிருக்கிறாள் … அதுகள் மட்டுமில்லை, இன்னும் எனக்கு பல விஷயங்கள் தேவையாயிருந்தது, அதுகளை அவள் செய்திருக்கிறாள் … இல்லையெண்டு நான் சொல்லேல்லை. … அது மாதிரி, அவளுக்கு நானும் உதவிசெய்திருக்கிறன். பிறகு, என்னட்டை அதிகமாய் எதிர்பாத்தால் அதுக்கு நான் என்ன செய்யிறது? … கடைசிக் காலங்களிலை பாவம் பாத்துத்தான் நான் அவளிட்டைப் போய்வந்தனான்.”
“ஓ, பாவம் பாத்துத்தான் பழகினனி? உனக்கு ஒரு சந்தோஷமும் இருக்கேல்லைதான். என்ன கதை கதைக்கிறாய்? பாவம் பாக்கிற ஒரு ஆளாலை இப்படி முதுகிலே குத்த ஏலுமே? வாழ்க்கை என்ன கூட்டிக் கழிக்கின்ற கணக்கோ? குடும்பமாக வாழப் போகேல்லை, மனிசியிலை காதலே இல்லை, அவளோடைதான் கணவன்–மனைவி வாழ்க்கை, மற்றதெல்லாம் உலகுக்கு வேஷம் எனக் கடைசி வரைக்கும் திரும்பத்திரும்பச் சொல்லி, அவள் தான் உன்ரை உலகம் என அவளை நம்பப் செய்து, அவளைத் தவிர உனக்கு யாருமில்லை என்றெல்லாம் உருகவைச்சுபோட்டு, இப்ப அதிகமாய் எதிர்பார்த்தால் என்ன செய்கிறதோ? ஏன், அப்படியான இடத்துக்குப் போய் காசைக் குடுத்து எல்லாத்தையும் வாங்கியிருக்கலாமே? ஏன் மற்றவையின்ரை வாழ்க்கையோடை விளையாடுறியள்? …”
“அவளிட்டைப் போற நேரங்களிலை நான் தூண்டப்பட்டேன், இல்லாட்டி ஒண்டுமில்லாமலும் என்னாலை இருந்திருக்க முடியும்.”
“ஆரை ஏமாத்துறாய்? அப்பவேன் நெடுக தேடலில் இருக்கிறாய்? பலவீனம் எங்கை இருக்கு, யார் பாதிக்கப்பட்டிருக்கினம் என அலைந்து திரிகிறாய்? உனக்குத் தானே என்னை விளங்கும் என அவளுக்குச் சொல்லிச் சொல்லி அவளின்ரை பலவீனத்தை வடிவாப் பாவிச்சுப்போட்டு வழமையான பாணியிலை விளக்கினன், கழுவினன் எண்டு விட்டு விட்டாய். உங்கடை வயது 16 ஆக இருந்தா என்ன 60 ஆக இருந்தா என்ன ஆம்பிளை ஆம்பிளைதான் எனக் காட்டிவிட்டாய். அவள்தான் பாவம், நீயும் உண்மையாய் காதலிக்கிறாய் என உன்னைப் புருஷனாக வரிச்சு ஏமாந்து போனாள்.”
“புருஷனோ? நான் என்ன கலியாணம் கட்டப்போறன் எண்டு சொன்னனானே? தாலி கட்டுவிச்சது அவளின்ரை வேலை. என்னோடை அவள் கலந்தாலோசிக்கவில்லை. கடைசிலே தான் நினைச்சதை என்னைக் கொண்டு செய்விச்சுப் போட்டாள்.”
“அப்ப வைப்பாட்டியாக வைச்சிருப்பம் எண்டதுதான் பிளான் என்கிறாய்! ஆனாலும் இரண்டு தாரம் என சாத்திரம் சொன்னது, அது, இது எண்டு அவளின்ரை எதிர்பாப்பை வளக்கிறதுக்கு நீயும் சொன்னனிதானே? சும்மாதான் கேட்கிறன், அவள் உன்னட்டை அன்பைத் தவிர வேறை என்னத்தைக் கேட்டாள்? பணம், சொத்து, சுகம் அது இது எண்டு கேட்டவளே? அவளின்ரை மூச்சுக்காற்றும் விளங்கும் என நீ சொன்னதை நம்பித்தானே தன்னுடைய குடும்பத்தை விட்டிட்டு உன்னட்டை, உன்ரை அன்பைத் தேடி வந்தாள். உன்னாலை எப்படி இப்படித் துரோகம் செய்ய முடிஞ்சுது?”
“மகிழ்ச்சிக்காக இருப்பம் எண்டுதான் நினைச்சன், அதோடை சந்தோஷமான பொழுதுகளிலை அப்பிடியெல்லாம் சொல்லியிருக்கிறன்தான், பிறகு சந்தோஷத்தை விட சச்சரவு தான் கூடிச்சுது. அதாலை…செய்த பிழையை தொடர்ந்தும் ஏன் செய்வான் என யோசிச்சன். இரண்டு பேருமே நல்லா அனுபவிச்சிருக்கிறம், அவவும் யோசிச்சிருக்கத்தானே வேணும். சரி.. இனி அவவும் தன்ரை வாழ்க்கைக்குத் திரும்பிப் போகலாம் தானே? அது தான் அவவுக்கும் நல்லது . அதை விட்டிட்டு ஊரெல்லாம் சொல்லிக்கொண்டெல்லோ திரிகிறா… ம், ம்…. என்ரை இரக்க சுபாவம் … என்னைக் குற்றவாளியாகவும் பொய்யனாகவும் எமாற்றுக்காரனாகவும் ஆக்கி, அற்ப பிறவியாக இப்ப தலைகுனிய வைச்சிட்டுது.”
“ஓ, சிவம்! மீண்டும், உன் மேல் பச்சாதாபம் பாடும் பல்லவியா? அவள் திரும்பிப் போறதா? ம்ம்.. ஏமாத்துறன் எண்டு நினைக்கிறியாடி, எண்டு கேட்டுக்கேட்டு அவளை நல்லாத்தான் ஏமாத்திப்போட்டாய், உன்னுடன் இனி என்னத்தைக் கதைக்க? மனிசியிட்டை இருந்து எல்லாம் உனக்குக் கிடைக்கும் எண்டதும் அவள் உனக்கு தேவையில்லாமல் போனாள். அதோடை அந்த இளம் வயசிலை மட்டுமில்லை இப்பவும் கூட புதிசு புதிசா வெளியிலை உனக்குத் தேவைப்படுது. அவ்வளவுதான். அன்பு, காதல் – இவை எதுக்குமே எந்தவொரு பொருளும் இல்லை எண்டு ஆக்கிவிட்டாய், நீ செய்த துரோகத்தை விழுங்க முடியாமலோ அவள் எவ்வளவு அவஸ்தைப்படுவாள் என்பது உனக்குத் தெரியாததல்ல, இருந்தும் …. “
“நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யிறன் …”
“ஓ, சட்டப்படி கட்டினால் தான் கடமையோ, நம்ப வைத்து நடுக்கடலிலை விடுறதிலை ஒரு பிழையுமில்லையோ? காதலை மறைக்கேலாது, அது வெளியிலை வரும், எப்ப என்ன செய்யிறது எண்டு சொல்லிச் சொல்லிக் காத்திருக்க வைச்சிட்டு, சீ, நீயெல்லாம் ஒரு மனிசனா? என்னவோ சொல்லிக்கொள், இலேசிலை நீ என்னை அசட்டை செய்யேலாது. நாளாக நாளாக என்ரை குரல் சிவம் உனக்குள்ளை பலமாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கப்போகுது.”
– காற்றுவெளி – ஜனவரி 2016 இதழ்