நாள் நல்ல நாள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 1,339 
 
 

“எல்லாத்தையும் மேலிருக்கறவன் தான் முடிவு பண்ணறான், நம்ம கிட்ட எதுவுமில்லைன்னு பெரியவங்க சொன்னது வான மண்டலத்துல இருக்கிற கிரகங்களோட இயக்கத்துக்கேத்தாப்ல நாம வாழப்போறோம்ங்கிறது தான். மலையளவு பாடு பட்டாலும் கடுகளவு யோகமும் இருக்கோணும்னு சொன்னதும் இத வெச்சுத்தான். ஒரு விவசாயி தன்னோட தோட்டத்துல என்ன விதை விதைக்கிறாரோ அதுக்குரிய பயிர் முளைச்சு வளர்ற மாதிரி இந்த பிரபஞ்சம் நாம எத செய்யறமோ அதுக்கேத்தாப்ல நமக்கு கிரகங்கள் மூலமா திருப்பிக்கொடுக்கிற அமைப்போட செயல்படுது. அதத்தான் தினை விதைச்சவன் தினை அறுப்பான், வினை விதைச்சவன் வினை அறுப்பான்னு சுருக்கமா சொல்லி வெச்சுட்டு போனாங்க. ம் இப்பெல்லாம் மனம் போற போக்குல போயிட்டு சீக்கிரமா ஒடம்பையும் கெடுத்து, பெத்தவங்க சேர்த்தி வெச்ச சொத்தையும் வித்து அழிச்சிடறாங்க. சமூகத்துல தனி மனித ஒழுக்கத்துக்காக கொண்டு வந்து நடைமுறைல இருந்த எழுதாத சட்டங்களையும் யாரும் மதிக்கிறதுமில்லை….” மிகுந்த வருத்தத்துடன் தன்னிடம் ஜாதகம் பார்க்க வந்த குகனிடம் பேசினார் பிரபல ஜோதிடரும் வயதில் முதியவருமான மாடசாமி!

“எனக்கெந்த பெரிய ஆசையும் கிடையாதுங்க. என்ற பையன் நெனைச்சத வாங்கோணும், நெனைச்ச எடத்துக்குப்போகோணும்னு காச கடன வாங்கிக்கூட யோசிக்காம செலவு பண்ணிப்போட்டான்.

இதுக்கு காரணமே முழுக்க, முழுக்க நானேதான்னு இப்பதான் தெரிஞ்சிட்டேன். அவனோட நகக்கண்ணுல அழுக்கு படப்படாதுன்னு கஷ்டப்பட்டு சம்பாதிச்சத இஷ்டப்பட்டதுக்கு நாஞ் செலவு பண்ணாம அவனுக்கு படிக்கிறதுக்கு பணம் கட்டறது போக துணிமணியும் வெலையப்படிச்சுப்பாக்காம புடிச்சத எடுன்னு சொல்லி பணத்த தண்ணியா செலவழிச்சேன். இன்னைக்கு எனக்கு வயசாயி அவன் பொறுப்புக்கு வந்த பின்னாடி படிச்சுப்போட்டு வேலைக்கும் போகாம, காட்டுல போயி பாடு படவும் தெரியாம கடனு மேல கடன வாங்கி வெச்சிருக்கான். இப்ப காட்டையே வித்துப்போடற நெலமைல வந்து நிக்கறேன். எனக்கெதாவுது வழி சொல்லுவீங்கன்னுதான் உங்கள நம்பி வந்திருக்கறேன். உங்களுக்கு தட்சண கொடுக்கக்கூட காசில்லாமத்தான் இங்க வந்திருக்கறேன்னு வெச்சுக்கங்களே….” சொல்லி கண்ணீர் சிந்தினார் குகன்.

“ஒரு நாளப்போல ஒன்னொரு நாளு இருக்காது, இந்த வருசம் மழை பெய்யற மாதர அடுத்த வருசம் பெய்யாது, இந்த வருசம் நோய், நொடி இல்லாம போன மாதர அடுத்த வருசம் இருக்காது. நேர் மாறா நடக்கும். எறும்புக கூட சேமிக்கிற பழக்கத்த வெச்சிருக்கிற போது மனுசனுக்கு வேண்டாமா? அதுவும் படிச்சவங்களுக்கு வேண்டாமா? இன்னைக்கு சூழ்நிலை எப்படியிருக்குதுன்னா ஆசையக்கட்டுப்படுத்தி சேமிக்கிறது எப்படிங்கிறது இல்லை, ஆசப்பட்டதெல்லாம் செய்ய, அதுவும் உடனே செய்ய கடன எப்படி வாங்கலாங்கிறது தான். எங்க வாங்கலாங்கிறதுதான். திருப்பி எப்படிக்கட்டோணுங்கிற யோசன கூட கிடையாது. அத அப்பறம் பார்த்துக்கலாம்னு யோசிக்கறாங்க. கிரகங்கள் தான் அந்த யோசனைய நமக்கு கொடுக்கும். முன்னென்லாம் அத விளைவ யோசிச்சு பண்ணாம விட்டாங்க. இப்ப கிரகங்க நெனைக்கிறத நடத்தறதுக்கு எடம் கொடுத்திடறாங்க. நல்ல கிரகம் யோசன கொடுத்தா பொளைச்சுக்குவாங்க. அதே கெட்ட கிரகம் கொடுத்தா கெட்டுப்போயிருவாங்க” என மூச்சுவாங்க முடித்தார் ஜோதிடர்.

“அப்படீன்னா என்ற பையனுக்கு கெட்ட கிரகந்தான் யோசன கொடுக்கும் போலிருக்குது. அது எத்தன காலம் கொடுக்கும்னு கொஞ்சம் நல்லாப்பாத்து மறைக்காம கல்லக்காய் ஒடைக்கிற மாதர ஒடைச்சுச்சொல்லுங்க. உங்களத்தான் சாமியாட்ட நம்பீட்டு வந்திருக்கறேன்” என கவலையை வெளிப்படுத்தினார் குகன்.

“ஏழரைச்சனி ஏழரை வருசம் பண்ணற வேலைய அஷ்டமச்சனி இரண்டரை வருசத்துல பண்ணப்பார்க்கும். பண்ணப்பார்க்கும்னு நாஞ்சொல்லறது காத்தா வந்து பண்ணாது. நம்மல வெச்சுத்தான், நம்ம மூலமாத்தான் பண்ணும். வேலை சொன்னா மறுக்காம செஞ்சவங்க கூட மறுத்து விதண்டாவாதம் பண்ணுவாங்க. சொல்லறவரு முதலாளியா இருந்தா வேலைல இருந்து தூக்கிடுவாரு. இப்பச்சொல்லுங்க இது நடந்தது ஆருனால…?”

“வேலை செய்ய மறுத்துப்பேசுனவனால தான். அப்ப நீங்க சொல்லறதப்பார்த்தா அந்த வேலைய எப்பவும் போல செஞ்சிருந்தா அங்க கெட்ட கிரகத்தோட வேலை எடுபட்டிருக்காதுன்னு சொல்லறீங்க. இல்லீங்களா….?”

“நீங்க படிக்காத பாமரனா இருந்தாலும் ரொம்ப சரியா புரிஞ்சிட்டீங்க. இப்படித்தாங்க ஒவ்வொரு விசயத்துலயும் நடந்துக்கனம். இருட்டாகறத தடுக்க முடியாது. பதிலா வீட்டளவுக்கு வெளக்கு வெச்சுக்கனம். நாம வெளில போகனங்கிறதுக்காக வெயில் அடிக்காம இருக்காது. கொடை பிடிச்சுக்கனம். மழையும் அப்படித்தான். கொடையையே புடுங்கிட்டு போற காத்தடிச்சா வெளில போகாம இருந்துக்கனம். வீட்ல இருக்கறவங்களோடயும் பொறுத்து போயிக்கனம். நாம சாப்பிட்ட தட்ட மனைவி தான் கழுவனம்னு நெனைக்காம நாமே கழுவனம். இது கெட்ட நேரத்துல மட்டுமில்ல. எல்லா நேரத்துக்கும் நல்லது தான். ஒரு பெயர்ச்சி சரியில்லேன்னா அடுத்த பெயர்ச்சி கண்டிப்பா நல்லா இருக்கும். அத விட்டுட்டு நல்லா இருந்தா எப்பவுமே நல்லா‌ இருக்கும்னு ஆட்டம் போடறதோ, சரியில்லேன்னா எப்பவுமே சரியிருக்காதுன்னு கவலப்பட்டு கண்ணீர் வடிக்கிறதோ ஆகாது. நல்ல நேரத்துல சேமிச்சு வெச்சுட்டு, கெட்ட நேரத்துல அத வெச்சு செலவு பண்ணி வாழப்பழகிட்டா எல்லா நாளும் நல்ல நாளுதான். கோள் செய்யாததை நாள் செய்யும்னு சொன்னாங்க. நாளுங்கிறது நம்ம உழைப்போட பலனைக்கொடுக்கிறது. அந்த பகல் பொழுதுங்கிற நாளைப்பயன்படுத்தி நம்ம பசித்தேவைய பூர்த்தி பண்ணிக்கிறதுன்னு அர்த்தம்” என எதார்த்தமாகவும், நிலைமையை வெல்லும் அறிவுரையாகவும், ஜோதிட ரீதியான வழி காட்டியாகவும் ஜோதிடர் பேசிய போது சிறிது நம்பிக்கை மனதில் ஏற்பட்டது குகனுக்கு.

“பரிகாரம் செஞ்சா கெட்டது நல்லதா மாறீடாதுங்களா?”

“ஒரு சின்ன வெளக்கால இருட்ட எப்படி முழுக்கா போக்க முடியாதோ அப்படித்தா பரிகாரம். கொடை புடிச்சிட்டா மழை நின்னுடும்னு நினைக்கிறது எவ்வளவு அறியாமையோ அது மாதிரிதான். பரிகாரத்துலயே பெரிய பரிகாரம், செலவே இல்லாத பரிகாரம் காலம் மாற வரைக்கும் பொறுமையா இருக்கிறதோட சூழ்நிலைக்கேத்தாப்ல வாழப்பழகிக்கிறது தான்.

பரிகாரத்தால வெளில நமக்கெதிரா நடக்கிற விசயம் நடக்காம போகாது. நம்ம அதுக்கேத்தாப்ல மாத்திக்கிற யோசனையக்கொடுக்கும். அது கடவுள் வழிபாடுதானே தவிர ஒரு கடனாளிய மேலும் கடனாளியாக்கிற விசயம் இல்லை. அந்த விசயம் பலனும் கொடுக்காது. இப்ப கடன் பட்டாச்சு. கடன அடைக்கிறதுக்கு வருமானமும் இல்லை. இது தான் உங்க நிலமை. நேரம் மாற இரண்டரை வருசம் ஆகும். இப்ப சொத்த வித்துத்தான் கடன் கட்டோணும்ங்கிற நிர்பந்தம். இப்ப நீங்க கடனத்தீர்க்கிற அளவுக்கு சொத்த விற்கிறது தான் புத்திசாலித்தனம். மொத்த சொத்தையும் வித்தா பாக்கி இருக்கிற பணத்த உங்க பையனுக்கு செலவு பண்ணத்தான் தோணும். செரியில்லாத நேரம் எப்பவுமே சேமிக்க உடாது. பணமா இருக்கிற சேமிப்பு சீக்கிரமா கரைஞ்சு போயிடும்னு தான் சொத்தா வாங்கினாங்க. 

சிக்கனமா செலவு பண்ணி, பிடிச்ச வேலை கிடைக்காட்டியும், கெடைக்கிற வேலைக்கு போகறது தான் இந்த கெட்ட கிரக நேரத்தக்கடக்கிறதுக்கான பரிகாரம்” அனுபவம் மிக்க பேச்சால் தனக்கு அறிவு விருத்தியடைந்ததையும்,குழப்பம் விலகியதையும் உணர்ந்த குகன் தற்கால பிரச்சினையை முடிக்க தீர்வு கிடைத்ததால் வந்த போது இருந்த வருத்தம் விலகி மகிழ்ச்சியுடன் ஜோதிடரை வணங்கிச்சென்றார்.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *