கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 14,785 
 

வானம் எதையோ சுமந்து வேர்த்திருந்தது. இயந்திரகதியில் சீராக தூறல்கள். இலை உதிர்த்த மரங்கள் தூறல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு ஜீரணிக்கமுடியாமற் தவித்துக்கொண்டிருந்தன. காலை பிரார்த்தனைக்கு தேவாலயம் செல்லும் வயதான வெள்ளையர்கள் கண்களில் நீர்முட்டியக் குளிரை கைக்குட்டைகளால் ஒற்றிக்கொண்டு, நடக்கிறபோது அடிக்கடி ஏனோ ஆமையைப்போல தலையைத் திருப்புவதும் இழுத்துக்கொள்வதாகவுமிருந்தனர். அவர்களை எந்த முயல்களும் முந்த முயற்சி செய்வதாகத் தெரியவில்லை. வாலிழந்த பறவையொன்று விர்ரென்று இறங்கி மேலெழும்பி பின்னர் மேற்கே சென்று மேகத்தில் புதையுண்டது.

இங்கே அனைத்துமே முன்னதாகத் திட்டமிட்டு செயல்படுவதாக இவனுக்குள் தீர்மானம். இயற்கைகூட தமது காரியங்களை அட்டவணைபடுத்திச் சாதிக்கிறதோ? முன்னதாக் கணிக்கப்பட்டு காரியங்கள் ஆற்றப்படுவதில், எதிர்பார்த்தபடி நடைபெறுவதில் சுவாரஸ்யமில்லையென்பது அவன் எண்ணம். வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அத்தியாயங்களால் எழுதப்படவேண்டும். சந்தோஷமோ துக்கமோ சொல்லிக்கொண்டு வரக்கூடாது. பிறப்பைப்போல இறப்பைப்போல ‘இன்றோ நாளையோ’ எனும் நிகழ்வுகளால் அமையவேண்டும்.

திரைச்சீலையை விலக்கி, சன்னலின் இரட்டைக் கண்ணாடியினூடே வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். இது ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கின்ற நிகழ்ச்சி. இந்நிகழ்வில் இவனுக்குள் முரண்பாடு. எந்தத் திட்டமிடலை எதிர்க்கின்றானோ, அதனிடமே சமரசம் செய்துகொண்டு அடங்கிப்போகிறான். புறவாழ்க்கையை உடைத்துக்கொள்ள சிந்தனை அவசரப்படுவதும், அந்நேரங்களில் அதனை அமைதிப்படுத்துகிறவகையில், போதும் இந்த வாழ்க்கைபோதும் என தீர்மானிப்பான். இந்த பொம்மலாட்ட வாழ்வு வேண்டாம் இக்கயிற்றிலிருந்து விடுபடவேண்டுமென்றும் அடிக்கடி நினைத்துக்கொள்வான்.

வானிலிருந்து இரைச்சலாக சப்தம். அவன் உள்ளத்தைபோல இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் விமானம். அதனுடைய காரியங்கள்கூடத் திட்டமிடப்பட்டவை. புறப்படும் இடம், சேர இருக்கிற இடம், எடுத்துக்கொள்ளும் நேரம், பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை என எல்லாமே. இரைச்சலிடும் இவ்விமானம் போகும் ஊர் எந்த ஊராக இருக்குமென்பதனை அவனுடைய பூகோள அறிவு விடை தராமலேயே தேடுதல் சுவாரஸ்யத்தைக் கலைக்காமல் ஒளிந்துக்கொண்டது.

காலை ஆறுமணி. அதிகாலை விழிப்பினை ஐரோப்பா அறியாதது. இவன் மட்டும் விழித்திருந்தான். காலை ஐந்துமணியிலிருந்து சன்னலை ஒட்டி நிற்கிறான். அதிகாலையில் எழுந்திருக்கிற பழக்கம் அவனுக்கு இந்தியாவில்தான் வந்தது. மார்கழித் திங்களில் சின்னவயதில், காலையில் எழும்பி, கிணற்று நீரை வாளி வாளியாக உடம்பில் கொட்டிக்கொண்டு, பஜனை பாட ஓடியதும், பஜனையின் முடிவில் சுண்டலைத் தின்று சட்டையில் துடைத்துக்கொண்டு அம்மாவிடம் திட்டு வாங்கியதும் நினைவில் வந்து போயின. அன்றைக்கு பஜனைக்குக்கூடும் பையன்களில் யார் முந்திக்கொள்வதென்பதை முன்னிட்டு பிறக்கும் உற்சாகம் இன்றைக்கில்லை. என்றாலும், ஐரோப்பிய மண்ணிலும் காலையில் விழிப்பு பிறக்கிறது. தனதில்லத்தில் பிறர் காலை பத்து மணிவரை உறக்கத்தை அனுபவிப்பதைக் கண்டு எரிச்சலும் கோபமும் வருகிறது. இந்த எரிச்சலும் கோபமும் எதிர்தரப்பிலுள்ள அந்தப் பிறருக்கும் உண்டு.

பிரேமா- அவன் மனைவி எழுந்தவுடன் அவளிடம் பேசவேண்டும் என்று தீர்மானித்தான்.

சன்னலில் பார்க்கிற காட்சிகள் மாறவேண்டும். காகம் கரைதலைக்கேட்கவேண்டும். கூரைவேய்ந்த வீடுகளைக் கடந்துசெல்லும் புகை மூட்டத்தைக் காணவேண்டும். காலைப்பேருந்துகளில் ‘மார்க்கெட்’டிற்கு கொண்டுபோவதற்காக இறக்கப்படும் காய்கறி மூட்டைகளில் ‘தொபீர்’களைக் கேட்கவேண்டும். போர்வையை விலக்காமல் கலைந்த தலையும் கண்களில் தூக்கமுமாக டீக்கடைக்குள் நுழையும் ‘என் முகங்களைக்’ காணவேண்டும். மழையில் நனைந்த சோர்வை வெளிக்காட்டாமல், சாராயத்திற்கு வழி பிறந்ததென்ற தெம்பில் ரிக்ஷாவின் பெடல்களை அழுந்த மிதிக்கும் ‘என் கால்களைக்’ காணவேண்டும். தண்ணீரில் நனைத்த விரல்களைக் சொடுக்கிக் காம்புகள் வலிக்காமல் கால் இடுக்கில் குவளையைத் தொற்றவைத்துப் பால் கறக்கிற ‘என் கைகள்’ வேண்டுமென சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஊரில் நிறையபேர் இருந்தனர். ஆனால் அதுதான் எப்போது? என்றைக்கு? நாளையா? நாளை மறுதினமா? அடுத்த மாதமா? அடுத்த வருடமா?

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே வந்து எல்லாவற்றிலும் பிரம்மித்தது நிஜம். அந்தப் பிரம்மிப்பு இப்படித் தன்னை இவ்வளவு சீக்கிரம் குறுக்கிக்கொள்ளும் என்று அவன் நினைத்ததில்லை. தீர்மானித்துவிட்டான். இன்றைக்கு இதற்கொரு முடிவு கட்டியாகவேண்டும். ஸ்டீரியோவைத் திருப்பினான். சி.டியி யில் நித்யஸ்ரீ யின் ‘எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா” என்ற பாடல். சிரித்துக்கொண்டான். பிரேமா எழுந்துவிட்டாள். கட்டிலைச்சரி சரி செய்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் கேட்பாள் என்னங்க கப்பூசீனாவா? ஹார்லிக்ஸா? இக்கேள்வியைக்கூட அவள் மாற்றினால் தேவலாம்.

பூசனிப்பூவும் கோலமுமில்லாமல் இங்கே மார்கழி விழித்துக்கொள்வதில் அவனுக்குள் கசப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இவனது வாரிசுகள் அறைகளில் “குளோஸ் ஆல் மை ஐஸ்” ஸோ அல்லது விட்னி ஹ¥ஸ்டனின், “மை லவ் ஈஸ் யுவர் லவ்”வோ ஒலிக்கத் தொடங்கும். இவன் தேடுகிற தருமபுரம் சுவாமிநாதனுக்குகோ, சின்ன மௌலானாவுக்கோ இங்கே இடமில்லை என்கிற்போது மனதுக்குள் புழுக்கம் கூடிவிடும்.

முகத்தைத் திருத்திக்கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள் அவன் மனைவி.

“பிரேமா! கொஞ்சம் சாக்லேட் அதிகமாகவிட்டு கப்புச்சீனோதான் கொண்டுவா, உன்னோட பேசணும்”

” உங்களுக்கு ஞாயிற்றுகிழமையானா இந்தியா ஞாபகம் வந்திடுமே. இன்றைக்கே இந்தியாவுக்குக் கிள்ம்பவேண்டும்னு காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு குதிப்பது உங்களுக்கு வழக்கமாகிவிட்டதே?”

“அப்படியில்லை பேரேமா! இன்றைக்குத் தீர்மானமா இருக்கேன். இப்படி உட்கார்.”

” எனக்கு நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்” சென்றவள் வங்கியிலிருந்து கடந்த மாத இறுதியில் வந்திருந்த நிலவரத் தாள்களை மேசையிற் பரப்பினாள்.

அவசர அவசரமாக அவற்றைப் புரட்டினான். எத்தனை முறை புரட்டினாலும் அதில் இருப்பதுதான் இருக்குமென்ற அடிப்படை உண்மையில் நம்பிக்கையற்றுப் புரட்டினான். எண்களும் பூஜ்ஜியங்களும் கண்ணாமூச்சி ஆடின.

இங்கே வந்த ஆரம்பத்தில் இந்தியப் பெரியவர்களைப் பார்த்து அவன் கேட்கிற கேள்வி:

“ஏங்க..! எப்படி இந்த ஊர்ல இருக்கறீங்க? ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் நம்ம ஊருபோல வருமா?”

“என்ன செய்வது தம்பி? நம்முடைய தலைவிதி அது. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கணும்னுதான் வரோம். பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பிள்ளைகள் இச்சூழலில் வளரும்போது, அவர்களோட நாமும் இங்க வாழவேண்டிய நிர்ப்பந்தம்.”

“இல்லைங்க.. அப்படிச்சொல்லாதீங்க! எனக்கு மட்டும் தேவையான பணம் கெடைச்சுதுன்னா ஊருக்குத் திரும்பிவிடுவேன்.”

பெரியவர் சிரித்தார்.

அவனுக்கு அந்தத் ‘தேவையானப் பணத்தை’ நிர்ணயிப்பதில்தான் சிக்கலே. வந்த புதிதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மனதில் வரித்துக்கொண்டு ‘தேடுதலைத்’ தொடங்கியவன் இன்றுவரை நிறுத்தியபாடில்லை. வருடங்கள் கூடக்கூட அவன் மனதில் வரித்தத் தொகை தனது நீள அகலத்தை, பரிமாணத்தைக் கூட்டிக்கொண்டு உச்சுகொட்டியது. கைக்கெட்டிய சுகங்கள் அவனுக்குத் திகட்டவில்லை. பதிலாக இன்னும் இன்னும்.. என்ற ஏக்கத்தை வளர்த்தன.

வங்கித்தாள்களில் விடுபடமுடியாமல் தலையைச் சொறிந்துகொண்டான்.

“பிரேமா?”

“கூப்பிட்டீங்களா?”

“ஆமாம். நம்ம வங்கிக்காரனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கணும். இந்தியாவிலேயே இன்னுமொரு வீடோ அல்லது இங்கேயே இன்னுமொரு அப்பார்ட்மெண்ட்டோ வாங்கணும்.”

“அப்போ.. இந்தியாவுக்கு எப்போ திரும்பறதா உத்தேசம்?”

“இப்போதைக்கு இல்லை” சலித்துக்கொண்டு பதில் வந்தது.

– கல்கி 17-06-2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *