அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்துகொண்டிருக்கிறாள்.வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த பள்ளங்களை மறைக்க இந்த வயதிலும் அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. சிரிப்பு என்று சொன்னால், ஏதோ மனம் திறந்த,முகம் மலர்ந்த சிரிப்பல்ல. வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளை எதிர்;கொள்ள அவள் முகத்தில் மாட்டிவைத்திருக்கும் முகமூடியானது அந்தச் சிரிப்பு.
அப்பாவின் முகத்தை நேரடியாக நான் பார்த்து எத்தனையோ வருடங்களாகி விட்டன. எனக்கு வயது இப்போது முப்பத்தி மூன்றாகிறது. இருபது வருடங்களுக்கு முன் ‘பெரிய பிள்ளையாகியபோது’ நான் வயதில்,அறிவில்,சுயமையாகச் சிந்திக்கும் வயதுக்கு வந்து விட்டேன் என்ற உணர்வில் அப்பாவைக் கண்டதும் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை அவரை நான் நேரே நிமிர்ந்து பார்த்தது கிடையாது. எங்கள் குடும்பத்தில் அப்பாவுக்குப் பெரிய மரியாதை. அவருடன் அவரின் குழந்தைகளாகிய நாங்கள்,நேரடியாக ஏதும் பேசிக் கொள்வது கிடையாது.
சிறு பெண்ணாக இருந்தபோது அப்பாவின் தோளின்மேலிருந்துகொண்டு கோயிற்திருவிழாவில்
ஸ்வாமியின் ஊர்வலத்தை ரசித்தது இன்னும் பசுமையான நினைவாக இருக்கிறது.அவரின் பட்டுச் சால்வையால் என்னைச் சுற்றிக்கொண்டு,என்னை ஒரு இளவரசியாகவும் அவரின் தோள்கள் நான் செல்லும் தேராகவும் நினைத்துக்கொண்டது நினைவில் நிலைத்திருக்கும் பசுமையான நினைவுகளாகும்.
அவற்றைக்கடந்த வயது வந்தபின் அப்பாவின் முகத்தை நேரிற் பார்த்தது கிடையாது. எனது தகப்பன் மிகவும் கம்பீரமான தோற்றமுள்ளவர். பரந்த மார்பும் அகன்ற தோள்களும் ஆழமான பார்iவுயும்கொண்ட மனிதன் அம்மாவைப் பற்றி விசேடமாகச் சொல்ல சட்டென்று என்மனதில் வரும் உணர்வு,’அம்மா ஒரு நல்ல மனுஷி’ என்பதுதான்.
அம்மாவும் நானும் எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை எங்கள் வீட்டுச் சமயலறையில் செலவழித்திருக்கிறோம்.இளவயதில் எனதுடம்பின் அழுக்கைத் தேய்த்துக் குளிப்பாட்டிய தாய், வயது வளர்ந்து கொண்டுபோன காலத்தில் எனது வளர்ச்சிக்குத் தேவையான உடுப்புக்களை வாங்கித் தந்திருக்கிறாள்.
பெரிய பெண்ணாகப் பரிமாணம் எடுத்த காலத்தில் எனக்குத் தெரியவேண்டிய சில விடயங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள்.அதை விட எங்களுக்கிடையில் மிகவும் நெருக்கமான பிணைப்பு இருப்பதாகத் தெரியாது. தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றோராகக் கொடுக்கும் அன்புக்கும்,; மரியாதைக்கும் அப்பால் தங்கள் குழந்தைகளின் மன உணர்வுகளை உண்மையாக-ஆழமாக உணர்ந்தவர்கள்; எத்தனைபேர்?.
எனக்கு இரண்டு அண்ணாக்கள் உள்ளனர். எனக்கு,அவர்கள் எப்போதும் ‘அந்நியர்களாகத்தான்’ இருந்திருக்கிறார்கள். எங்களுக்குள் உள்ள நீண்ட வயது இடைவெளிகள் எங்களின் அந்நியத் தன்மைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம். இரண்டாவது அண்ணாவின் பெயர் சுதாகரன். அவனுக்கும்; எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். பெரிய அண்ணாவின் பெயர் நாராயணன்.அவனுக்கும் எனக்கும் எட்டு வயது வித்தியாசம். அவன் ஒரு நோஞ்சலானவன். எனக்கு நினவு தெரிந்த நாளிலிருந்து அவன் ஏதோ ஒரு காரணத்துடன் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு திரிவான்.
இளைய அண்ணா பிறந்து பலவருடங்களுக்குப் பின் நான் பிறக்கும்வரையும் அவன் அம்மா,அப்பாவின் செல்லப் பிள்ளையாகவிருந்திருக்கலாம். நான் பிறந்ததும், தனது விசேட அந்தஸ்துக்குக்கு நான் தடையாக வந்து விட்டேன் என்று அண்ணா சுதா நினைத்திருக்கலாமோ தெரியாது. ஆனாலும் அவன் என்னுடன் பெரிய பாசத்துடன் பழக மாட்டான்.
இலங்கைத் தமிழர்களுக்குப் பிரச்சினைவந்து,அவர்கள் அகதிகளாக உலகமெல்லாம் ஒடியபோது பெரிய அண்ணா கனடா சென்று விட்டான்.சுதாகரன் பிரான்சுக்கும் போனார்கள். நான் எனது தாய் தகப்பனுடன் லண்டனுக்கு வந்து விட்டேன்.இப்போது எங்கள் குடும்ப உறவு பெரும்பாலும் தொலைபேசிக்குள் அடங்கி ஒடுங்கி விட்டது.
கனடாவில் வாழும் பெரிய அண்ணாவின் பெரிய மகளுக்குப் பதினைந்து வயது. போய்பிரண்ட் வைத்திருக்கிறாளாம். பெரும்பாலான வெள்ளைக்காரப் பெண்களின் குழந்தைத் தனமான வளர்ச்சிப் பரிமாணத்தில் இப்படியான செய்திகள் மிகச் சாதாரணம்.ஆனாலும் கனடாவில் வாழும் பெரிய அண்ணா துடித்துப்போய்விட்டான். அவன் பழைய கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பழமைவாதி. ஓரு காலத்தில்,திரைகடல் ஒடியும் திரவியம் தேடிய தமிழர்கள் தனியாகத்தான் செனறார்கள். ஆனால் குடும்பங்களுடன் திரைகடல் தாண்டியவர்கள்,பல கலாச்சாரங்களுடன் மோதவேண்டி வருவது அவனால்ச் சமாளிக்கக் கஷ்டமாகவிருக்கிறது. அவனது மகளின் முந்தானையைப் பிடிக்க ஒரு தமிழனைத் தேடியிருப்பான்,ஆனால் அவள் ஒரு வெள்ளைக்காரப் பையனைப் பார்த்ததால் அதிர்ச்சி அடைந்து விட்டான்.
அப்பா,தத்துவார்த்த ரீதியாக அண்ணாவுக்குப் புத்தி சொன்னார்.’ இதெல்லாம் குழந்தைத் தனம் நாளைக்கு மறந்து விடுவாள்.வீணாக அலட்டிக் கொள்ளாதே’ என்றார்.
இலங்கையில் கூட்டுக் குடும்பமாக வளர்ந்த சமுதாயம்,இன்று கூடுகலைந்த பறவைகளாகப் பறந்து விட்டார்கள். வாழ்க்கை என்ற பெரும் பாதையில் நடக்கும்போது.பல கலாச்சாரத்தையும் சந்திக்கவேண்டும்.சமுத்திரத்தில் நீந்தும்போது தண்ணீர் படாமலிருக்க முடியுமா?ஒன்றாகப் படிக்கும்போது ஓடும் புளியம் பழமும்போல் வாழ எல்லோராலும் முடியுமா? இப்படிப் பல கேள்விகள் எனக்குள் பிறந்தன. ஆனால் அதையெல்லாம் வெளியிற் பேச நான் முயன்றது கிடையாது. எனது தாய் தகப்பனின் கட்டுமானக் கோட்பாட்டுக்குள் வாழப் பழகிக் கொண்டவள் நான்.
நாங்கள் லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டன.லண்டன் கலாச்சாரம் என்னைப் பாதிக்கவில்லையென்றும், நான் இன்னும் நல்லதொரு தமிழ்ப் பெண்ணாக நடந்துகொள்வதாகவும் எனது தாய் எனக்குக் கேட்கத் தக்கதாகச் சொல்வாள். எனக்குத் திருமணமாகி, நான் என் பெற்றோரரை விட்டுப் பிரியும் வரைக்கும் பெற்றோர் சொல் கேட்கும் பெண்ணாக- இருக்கவேணடும் என்று எனது தாய் நினைப்பதும் எனக்குத் தெரியும்.
இருபத்து மூன்று வயதில் லண்டனில் காலடியெடுத்து வைத்த எனக்கு ஒரு நல்ல (?) மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்துப் பல வருடங்கள் கடந்து விட்டன. எத்தனை தரம் எனது சாதகம் கைமாறின என்று எனக்குத் தெரியாது. எத்தனை பேரின் எச்சங்கள் எனது புகைப் படங்களில் முத்தம் கொடுத்தன என்றும் எனக்குத் தெரியாது. பத்து வருடங்களாக,எனது தாய் தகப்பன் காட்டிய நல் வழியில், புத்தி மதிகளுடன், பொறுமையுடன் நான் ஒரு நல்ல தமிழ் மாப்பிள்ளைக்காக் காத்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் எத்தனையோபோர் என்னைப் பெண்பார்க்க வந்து போனார்கள். நாங்கள் கொழும்பில் இருந்த எனது இளமைக் காலத்தில் என்னைத் திருமணம் செய்யத் தானாக வந்த மாப்பிள்ளைகளுக்கு,’அவளுக்கு என்ன இப்போதுதான் இருபத்திரண்டு வயதாகிறது. யுனிவர்சிட்டியால் வெளிக்கிட்டு இப்போதுதான் உத்தியோகம் எடுத்திருக்கிறாள்…கொஞ்ச நாள் போகட்டும்..’ என்று பல சாட்டுக்களை அம்மா சொல்லியிருக்கிறாள். இப்போது அவள் எனது வயதை யாருக்கும் சொல்வது கிடையாது. அது அவளுக்கு வெட்கம் என்று நினைக்கிறேன்.
நான் முப்பத்தி மூன்று வயது முதுகன்னி!. எனது கல்யாணத்தை நினைத்து அவள் விடும் பெருமூச்சுக்கள்,அடுத்த அறையிலிருந்து மெல்லமாக வந்து என்னை வதைப்பது அவளுக்குத் தெரியுமோ என்னவோ தெரியாது.
எனது இளமைக்காலத்தில் என்னைக் கேட்டு வந்த மாப்பிள்ளைகளில் பலரை,அவன் வேண்டாம் இவன் வேண்டாம் என்று இறுமாப்பாக நிராகரித்தாள். ‘தனது மகள் அழகானவள், படித்தவள், அவளுக்கு ஏற்ற மாபிள்ளை pவரவேண்டும்’ என்று அம்மா தனது சினேகிதிகளிடம் சொன்னவை எனக்கு இன்னும் ஞாபகத்திலிருக்கிறத.
இப்போது, யார் தலையிலென்றாலும் என்னைக் கட்டித் தன் பாரத்தைக் குறைக்க அம்மா தவிப்பதும் எனக்குத் தெரியும். என்னைப் பார்க்கவரும் ஆண்களுக்கு முன்னால் நான் பட்டுச் சேலைகட்டி, பொட்டு வைத்து. பொன்னாபரண நகைகள் அணிந்து மெல்லநடந்த,பவித்திரமாகப் பவனி வருவேன்.அப்பப்பா அப்படி எத்தனை அனுபவங்கள்?
பெண் பார்க்க வருபவர்கள் முன்னால்,எப்போதும் போல் ‘அசல்த் தமிழ்ப் பெண்ணாகப்’ பட்டுப் படவையில் பவனி வராமல், லண்டனுக்கு ஏற்ற மாதிரிக் ‘கசுவலாக’ ஏதும் உடுத்திக் கொள்’ என்று அம்மாவின் சினேகிதி ஒருதரம் அட்வைஸ் சொல்ல, அதைக்கேட்டு நானும் ஸ்டைலாக
ஸ்கேர்ட்டும் பிளவுசும் போட்டேன். அது நடந்தது ஐந்து வருடங்களுக்கு முன். பெண்பார்க்கவன்,’ என்ன இது இருபத்தியெட்டு வயதில் ஒரு டீனேஜ் பெட்டை மாதிரியா உடுத்துக் கொள்வது?’ என்று உறுமிவிட்டுப் போய்விட்டான்.
‘லண்டனில் கொஞ்சம் பாஷனாக இருக்க வேண்டும’ அம்மாவின் இன்னொரு சினேகிதியின் அட்வைஸ் இது. அவள் என்னை இந்திய ஸ்டைலில் சுடிதார்; போடப் பண்ணி விட்டாள்.
என்னைப் பெண்பார்க்க இன்னொருத்தனுக்கு வட இந்திய ஸ்டைல் பிடிக்காதாம்! பெண்பார்க்க வந்தவர்களுக்குக் கொடுத்த வடையையும் இனிப்புக்களையும் தொடாமல் அவன் போய் விட்டான்.
நான் வேலைக்குப் போகும் போது பிரயாணத்துக்கு வசதியாக ஆங்கில உடுப்புக்களையும், இந்துக் கோயில்களுக்குப் போகும்போது பட்டுச்சேலையும் பொட்டுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்காக ஒரு இலங்கைத் தமிழ் மாப்பிள்ளையைப் பார்க்க எனது பெற்றோர் படாத பாடு படுகிறார்கள். இலங்கையிற் தொடரும் தமிழருக்கெதிரான இனவெறிச் செய்கைகளால், பல தமிழ் இளைஞர்கள் உலகெங்கும் ஓடிக்கொஒ;டிருக்கிறார்கள். இனத்துக்காகப் போராடத் துணிந்தவர்கள் பிறந்த மண்ணில் பிணமாகச் சரிகிறார்கள்.
லண்டனுக்கு வந்த கல்யாண வயதுள்ளவர்களின் விலை யானைவிலை குதிரை விலையாகவிருக்கிறது. ஆண்கள் தங்கள் ஆண்குறியில் விலைப் பட்டியலைப் போட்டதோரணையில் பேரம் பேசுகிறார்கள்.
எனது ஆபிசில் என்னுடன் வேலைசெய்யும் ஆங்கிலச் சினேகிதிகளுக்கு எங்களின் திருமணக் கலாச்சாரம் சிலவேளைகளில் விளங்கிக் கொள்ள முடியாததாகவிருக்கிறது. அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்பவர்கள். சாதி மத, இன நிற வேறுபாடுகளைக் காதலில் கலந்து விடாதவர்கள். உலகத்திலேயே மிகவும் கூடிய எண்ணிக்கையில் கலப்புத் திருமணங்கள் நடக்கும் நாடு இங்கிலாந்து. அவர்களுடன் வேலை செய்யும் போது,’ முன்பின் தெரியாதவனை என்னவென்று திருமணம் செய்து கொள்வாய்’? என்ற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கப் பதில் சொல்லி என்னைப் போல் பல’இந்தியப் பெண்கள்’; அலுத்து விட்டோம்.
எனது சினேகிதி எலிஸபெத் எனது மேலதிகாரி. ஏற்றத்தாழ்வு இல்லாமல் பழகும் சமத்துவ உணர்வுள்ள ஆங்கிலேயப் பெண்மணியவள்.
ஆரம்பத்தில் எங்களின் உத்தியோக வேறுபாட்டால் கொஞ்சம் தூரத்திருந்த உறவு, அம்மா செய்து தரும் சுவையான இட்டலி, வடை, தோசையினால் மிகவும் நெருங்கி விட்டது. பெரும்பாலான ஆங்கிலேயர்கள்போல் அவளும் ‘இந்திய உணவுகளை’ விரும்பிச் சாப்பிடுபவள்.
‘இந்தியர்களின் மிளகையும் மஞ்சளையும் தேடிப்போய்த்தானே மேற்குலகம் அமெரிக்காவைக் கண்டு பிடித்து எல்லோருக்கும் தலையிடி தந்தவர்கள் இன்று இந்திர உலகத்துக்கே கண்வைத்து விட்டார்கள்.’ எலிசபெத் குறும்பாகச் சொல்வாள். அவளின் தகப்பன் அமெரிக்கர் வியட்நாமில் செய்த போருக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கான ஆங்கிலேய முற்போக்குவாதிகளில் ஒருத்தர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்.
ஆவளுக்கு எனது வயது. முதற் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. இப்போது திருமணம் செய்யாமல் தனது காதலனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
எனது வாழ்க்கையிற் தொடரும் பெண்பார்க்கும் படலங்களின் கதைகள் அவளுக்கு வேடிக்கையாகவும் சிலவேளைகளில் குழப்பமாகவுமிருக்கின்;றன.
‘பெரும்பாலான பெண்கள், தங்களுக்கென்று ஒரு ஆணழகன்,வெண்குதிரைகள் பூட்டிய பொன்தேரில் ஏறி எங்களைத்தேடி வருவான் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கணிசமான பெண்களுக்குக் கழுதையிலேறிய குரங்குகள்தான் வருவார்கள்.அவர்கள் இரவில் எங்கள் உடம்புகளில் ஏறிவிழந்து தங்கள் ஆண்மையைக் காட்டிவிட்டுப் போவார்கள்’ எலிசபெத் எரிச்சலுடன் மேற்கண்டவாறு பலவற்றைச் சொல்வாள்.
அவள் சொல்வதெல்லாம் உண்மையின் அடிப்படையிலா, அல்லது அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலா சொல்கிறாள் என்று எனக்குப் புரியாது.
நான் இன்னும் எனது வாழ்க்கையின் நிறைவுக்காக ஒருத்தனின் வரவுக்காகக் காத்திருக்கிறேன்.
‘இத்தனை நாளும் உன்னைப் பெண்பார்க்க வந்த ஒருத்தனாவது உனது உணர்வுகளைச் சுண்டியிழுக்கவில்லையா?’ எலிசபெத் ஒருநாள் என்னிடம் கேட்டாள்.
அன்று நாங்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படம் பார்த்து விட்டு வந்துகொண்டிருந்தோம்.லண்டன் தெருக்களில் , சினிமா,நாடகங்கள் அல்லது இசைவிழாக்கள் பார்த்து விட்டு ஜோடிகளாகத் திரியும், இளம் வயதினரை எண்கண்கள் ஏக்கத்துடன் பார்ப்பதை அவள் அவதானித்திருக்கவேண்டும்.
உள்ளத்தின் இரகசிய தாபங்களை உடலின் அசைவுகள் காட்டிக்கொடுப்பதை அவளால் அவதானிக்காமலிருக்க முடியுமா,
லண்டனில் உடம்பைச் சிலிர்க்க வைக்கும் குளிர்காலத்தில் சூடான அணைப்புக்கு எனக்கும் ஏக்கமுண்டு என்பதை அவள் உணராமலா இருப்பாள்?
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும்போது. தளர்ந்துகொண்டுபோகும், இளமையை வருட ஒரு அன்புக்கரம் கிடைக்காதா என்று என்னைப்போல் எத்தனை இளம் பெண்கள் ஏங்காமலிருப்பார்கள்?
மாதத்தின் நடுப்பகுதியில் பெண்களின் சுரப்பிகள் அள்ளி வீசும்; ஆசைத் தீயை அணைக்க ஒரு ஆண் துணைதேவை என்பது எலிசபெத்துக்குத் தெரியும்தானே?
அவளின் கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் நான் நடந்து கொண்டிருந்தேன்.
ஏக்கம் தவழும் எனது தாயின் முகம் சட்டென்று எனது ஞாபகத்திற் படிந்தது. கல்யாணமாகாவிட்டாலும் பொருளாதார ரீதியாக எனது காலில் நான் தங்கி நிற்கும் வலிமை எனக்கிருக்கிறது என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு பெண்ணின் வாழ்வின் ஆரம்பமே அவளின் கல்யாணத்திற் தங்கியிருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழும் எனது பெற்றோரின் ஏக்கப் பெருமூச்சுக்கு நான் என்ன செய்வதாம்?
போன கிழமை அம்மா என்னைத் தன்னுடன் கோயிலுக்கு வரச் சொல்லிக் கட்டாயப் படுத்தினாள். யர்ரோ ஒரு மொட்டையன், தான் பார்க்கவிரும்பும் பெண்ணைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுவரச் சொல்லியிருப்பான்.
மாட்டை அலங்கரித்துச் சந்தைக்குக் கொண்டபோவதுN;பால் அம்மாவும் என்னை.அலங்காரத்துடன் கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போனாள்.
அப்போது எலிசபெத்தின் ஞாபகம் வந்தது.’ கல்யாணம் என்பது ஒரு புனிதமான விடயம் என்று சொல்வதெல்லாம் உண்மையா?ஆண்கள் தங்களுக்கு ஏற்றபடி கலாச்சாரத்தை மாற்றி அமைக்கிறார்கள். காலத்துக்காலம் பெண்கள் பற்றிய கருத்துக்களைத் திரித்துப் படைக்கிறார்கள். கல்யாணம் என்பது , ஒரு பெண் தன் வாழ் நாள் முழுதும் அவளுக்குக் கிடைக்கும் உணவுக்கும், உடைக்கும் அவளின் உடம்பையும் உழைப்பையும் ஒட்டுமொத்தமாகத் தானம் செய்யத்தான் இந்தக் கல்யாணச் சடங்கையெல்லாம் தடபுடலான நடத்தி முடிக்கிறார்கள்’ என்றாள்.
‘எனக்கு உணவும் உடையும் யாரும் தரத் தேவையில்லை;ல….எனக்கு ஒரு துணை தேவை..என்னையுணர்ந்த ஒரு உறவு தேவை.. அந்த உறவின் தொடர்பில் ஒரு குழந்தை தேவை.எனது முழுமையை உணர்த்தும் புணர்வு தேவை…பெண்மையின் மலரவைக்கும் ஆண்மைதேவை’ நான் இப்படிச் சொன்னது எலிசபெத்துக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவேண்டும்.
அவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள்.
‘ஆண்களின் மொழியில் நாங்கள் எங்களின் சுயமையை இழந்து விட்டோமா?’ அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
பாதாள ட்ரெயினுக்கு அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தபோது அக்கம் பக்கத்திலிருந்த வந்த பல தரப் பட்ட ஒலிகளால் எலிசபெத் சொன்னது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. அரைகுறையாகக் கேட்டதும் எனக்குப் புரியவில்லை.
பாதாள ட்ரெயின் இருளை ஊடறுத்துக் கொண்டு இருண்ட குகைக்குள்ளால் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
‘சடங்குகள் என்பது வெறும் ஆடம்பரமான நடவடிக்கைகள் மட்டுமல்ல. மனித மனங்களின் உள்ளக் கிடக்கைகளை உலகுக்கு அறிவிக்கும் பரந்துபட்ட விழாக்கள்’ எலிசபெத் என்னை ஆழமாகப் பார்த்துக் கொண்டு சொன்னாள். நான் அவளுக்கு மறுமொழி சொல்லவில்லை.
அவள் என்னை ஊடறுத்துப் பார்த்தபடி சொன்னாள்.
‘உனது கழுத்திலேறும் தாலியும் கையிற் போடப்படும் மோதிரமும் உனக்குப் போடப்படும் அடையாள விலங்குகள்.இந்த அடையாளங்களுக்குள் தங்கள் உடமைகளைச் சட்டப்படி அடிமைகொள்கிறார்கள் ஆண்கள்’
இவளுக்கு ஆண்களில் என் இவ்வளவு கசப்பு?
‘எனது அம்மாவை எனது அப்பா ஒரு கைதியாக வைத்திருக்கிறார் என்ற நான் நினைக்கவில்லை.’ நான் எனது கோபத்தைக் காட்டாமல் முணுமுணுத்தேன்.
‘ அவள் சுதந்தரமாக வாழ்கிறாள். சுயமாக ஒரு முடிவு எடுக்கிறாள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காட்டேன்’ எலிசபெத் அன்புடன் கேட்டாள்.
அம்மா, மற்ற பெரும்பாலான தாய்களும்போல் மற்றவர்களுக்காக வாழ்பவள்! தனக்கென்ற சுயமையற்றவள்!
எனக்கு அழுகை வந்தது.
‘எனது தாய் அவித்த பிட்டுக்களைக் குவித்தால் அக்குவியல் இமயத்தை மேவி விடும்,
என் தாய் துவைத்த துணிகளைப் பிரித்துவைத்தால் அவை இமயத்தை மூடிவிடும்,
என் தாய் சிந்திய கண்ணீரைச் சேர்த்து வைத்தால் நர்மதா தலைகுனிவாள்,
என்தாய் விடும் பெருமூச்சுக்களைச் சிறை பிடித்தால் எரிமலைகள் பிழந்து விடும்’
நான் அழுதேன்.
எலிசபெத் என்னுடன் பேசவில்லை. பரிதாமாக என்னைப் பார்த்தாள். திருமணமாகாவிட்டால் சமுதாயக் கவுரவம் கிடைக்காமல் திண்டாடும் என் நிலை அவளுக்குப் பரிதாபமாக இருந்திருக்க வேண்டும்.
வீpட்டுக்குப் போனதும்’ ஏன் இவ்வளவு நேரம்?’ என்ற கேள்வியுடன் அம்மா என்னைப் பார்த்தாள்.
அம்மாவின் இப்படியான கேள்விகளுக்கு மறுமொழி சொல்லிக் களைத்த விட்டேன்.
‘ நாளைக்கு லீவு எடுக்க முடியுமா?’
அம்மா என்னைக் கேட்கிறாள். மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்த நான் அப்படியே நின்றபடி அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறேன்.
‘ அப்பாவுக்கத் தெரிந்த யாரோ ஒருத்தர் ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு உன்னைப் பெண்பார்க்க வருகிறாராம்’ அம்மாவின் அடக்கமான- பாசமான குரல் எங்கள் வீட்டின் இரவின் நிசப்தத்தில் மிகத் துல்லியமாகக் கேட்கிறது.
நான் மறுமொழி சொல்லாமல் நிற்கிறேன்’ பையன் நல்ல பையனாம்… பெரும்பாலும் சரிவருமாம்’ அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் குரலில் நம்பிக்கை
நான் மெல்லமாக எனது அறைக்குள் நுழைகிறேன். கைகள் இயந்திரம்போல் உடைகளைக் களைகின்றன.
‘நாளைக்கும் ஒருத்தன் வருகிறானாம். எனது உடலை ஏற இறங்கப் பார்ப்பான்’!
எனக்குச் சிரிப்பா அழுகையா வருகிறது.
குழம்பிப் போய்நிற்கிறேன்.
இரண்டாம் தாரமாகக் கேட்டு யர்ரும் வருவானா?
அம்மாவின் கருத்துப்படி எனது வயதில் பெண்பார்த்து வருவதே பெரிய விடயமாம்.
இப்போதெல்லாம் லண்டன் தமிழ்ச் சமுதாயத்தில் விவாகரத்துக்கள் மலிந்து விட்டன. ஓரு பெண்ணைத் தள்ளி வைக்க பெரிய காரணங்கள் தேவையில்லை. ஏனென்றால் இலங்கையில் தொடரும் பிரச்சினையால் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு நல்ல விலை போகிறது. எவ்வளவு பணம் கொடுத்தும் தங்கள் பெண்களை இரண்டாம்தாரமாகவென்றாலும் கட்டிக் கொடுக்க ஏராளம்பேரிருக்கிறார்கள்.
வாழத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே வியாபாரமாகிவிட்டது. சமயத்தை,மொழியை,கலையை,கல்யாணத்தை வைத்து வியாபாரம்.
என்னை யாரோ ஒருத்தன் தலையில் கட்டித் தங்கள் சுமையைத் தீர்க்கத் துடிக்கும் எனது பெற்றோரில் எனக்குப் பரிதாபம் வருகிறது.
அம்மா நம்பிக்கையான எனது பதிலை எதிர்பார்க்கிறாள்.
நான் எனது உடுப்பை மாற்றுகிறேன். நேரே தெரிந்த நிலைக் கண்ணாடியில் எனது நிர்;வாணத்தை நீண்ட நேரம் யாரோ ஒருத்தியாய் நின்று அவதானிக்கிறேன். இதுவரை அவசரமாக உடுப்பு மாற்றும்போது பார்த்த எனது உருவத்தை யாருடனோ சோர்த்துப் பார்க்கிறேன்.
யார் வரப் போகிறார்கள்? வெண்குதிரை ஆணழகனா?
கழுதைவண்டியில் வரும் ஒரு குரங்கு இந்த மாசற்ற மார்பகங்களைக் கீறிவிளையாடுமா? அந்த மிருகத்தின் கைகள்; சங்குபோன்று வளைந்த என் கழுத்தை அணைத்துப் பிடிக்குமா?
பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்து புனித பெண்மை ஒரு வினாடியில் குத்திப் பிளக்கப் பட்டுக் குருதியில் தோயுமா?
எனது உடலை வீணையை வருடுவதுபோல் வருடுகிறேன்.இந்த அழகிய வீணையின் நாதத்தை யார் மீட்பான்?
காதலின் மொழி என்பது ஒரு அழகிய இசைக்குச் சமம்,அதைப் புணரத் தெரிந்தவன் எத்தனைபேர்? அன்பின் வெளிப்பாடு; ஒரு கலை அதை ரசிக்கத் தெரிந்தவன் எத்தனைபேர்? தாம்பத்தியம்; என்பது தெய்வீக உறவு அதைத் தெரிந்துகொண்டவன் வருவானா?
எனது உடம்பு நடுங்குகிறது.இரவு உடுப்பைப் போடுகிறேன். எங்கோ நடுச்சாம மணியடிக்கிறது.
அம்மா மேசையில் சாப்பாடு எடுத்துவைக்கும் சப்தம் கேட்கிறது.
கீழே வருகிறேன்.
அறுபத்தைந்து வயதாகும் எனது தாய் புட்டுக்கள் அவிப்பதில் புலமைப் பட்டம் பெறக் கூடியவள். இடியப்பம் செய்வதில் கலைச் செல்வி.
மௌனத்தைக் கவிதையாக்கும் கதா நாயகி. அவளை அணைத்துக் கொள்கிறேன். அவளுக்கு எனது செய்கை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்க வேண்டும். என்னை ஏற இறங்க விழித்துப் பார்த்தாள்.
‘ அம்மா நாளைக்கு நான் யாரையும் பார்க்கல்ல..’ எனது கண்ணீர்; அவளை நிலகுலையப் பண்ணியிருக்கவேண்டும்.
எனக்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டதோ என்பதுபோல் என்னை ஆழமாகப் பார்த்தாள்.
என்றோ ஒரு நாள் என்னை விரும்பி வரும் ஒருத்தனுக்காகக் காத்திருக்கிறேன் என்று சொன்னால் அம்மாவுக்குப் புரியுமா,
லண்டன் -1995
(யாவும் கற்பனையே)