நான் மகேந்திர பல்லவனா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,419 
 
 

“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான்.

”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான்.

“அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம்.

”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற எல்லாரப் பத்தியும் ஓலைச் சுவடியில் எழுதி வச்சிருக்கும்”

“ லாஜிக்கலாகவே இல்லையே” வெங்கட்ராமன் எதிர் வாதம் செய்தார்

“அப்பிடி இல்லை சார். அந்த கால ரிஷிகள். எல்லா ஜீவராசிகளின் க்டந்த கால் ,நிகழ்கால எதிர் கால வாழ்க்கையை ஞான திருஷ்டியால் கணிச்சு பாட்டா பாடி வச்சிருக்காங்க”

தத்தியான தியாகராஜன் கஷ்டமான எங்கள் டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எப்படி பாஸ் பண்ணுகிறான் என ஒரு மாதிரியாய் விளங்கியது.

“ஏம்பா தியாகு ஒரு பர்டிகுலர் பெர்சனைப் பத்தின பாட்டுனு எப்படி தெரியும்” விடாமல் கேட்டேன்.

“ அதுக்கெல்லாம் முறை இருக்கு. நீ போன ஜன்மங்களில் என்னவாய் இருந்தாய் என்பது கூட சொல்லாம்”

என்னுடைய ஆர்வம் கன்னாபின்னா என்று எகிறியது

தியாகராஜன் மேலும் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்தரிஷி நாடி என வெரையிட்டியாக தாக்கினான்.

நான் போன ஜன்மத்தில் யாராக இருந்திருப்பேன் என்று தெரிந்து கொள்வதில் அலாதி ப்ரீதி வந்த்துவிட்டது. காலையில் ரொம்ப சீக்கிரம் 3 மணி வாக்கில் கிளம்பி நேரே சிதம்பரம் போய் கோவில் பார்த்துவிட்டு திரும்ப தஞ்சாவூர் வரும் வழியில் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோஸ்யம் பார்ப்பதாய் தீர்மானம் ஆனது.

போன ஜன்மம் பத்தின என் ஆசை தூக்கம் வராமல் செய்தது

யாராக இருந்திருப்பேன்.

சட்டென்று ஞாபகம் வந்தது காந்தி.. ஹூஹூம். ரொம்ப நல்லவராய் அடிப்பவனை திருப்பி அடிக்காத அசடாய்- எல்லா காரியமும் செய்து கொடுத்து விட்டு எந்த பதவியும் இல்லாமல் பொசுக்குனு குண்டடி பட்டு…..நிராகரித்தேன்

பாரதியார்…. கம்பீரம், கவிதை மிடுக்கு எல்லாம் ஒகேதான். ஆனால் போகாதே போகாதே என்றால் யானையிடம் போய்… இப்படி அழிச்சாட்டியம் பண்ண ஒருத்தராய் இருந்திருப்பேனா.. ரிஜக்டட்

சர். சிவி. ராமன், நேரு, கர்ணன், … வேகமாய் பல Resume களை நிராகரித்தேன்.

மகேந்திர பல்லவன்… ம்ம்ம் இருக்கலாமோ.. ராஜா….. நடனம்.. நாட்டியம் கலைகளில் அபார பிரேமை.. ரொம்ப தந்திரசாலி.. ஆனாலும் காதலைப் பிரிச்சதாவும் புலிகேசிகிட்ட தோத்ததாகவும் பிளாக் மார்க்..குறிப்பா பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று எந்த குறிப்பும் இல்லை. இப்படி குணம் நாடி குற்றமும் நாடி குணமே மிகுதி என்று முடிவு செய்தேன். போன ஜன்மத்தில் நான் ம்கேந்திர பல்லவனாய் இருந்த்திருக்க ஆசைப் பட்டேன். கால சாத்தியம் இல்லாத அபத்தமாய் இருந்தாலும் நான் போன ஜன்மத்தில் மகேந்திர பல்லவன் தான் என்று நாடி ஜோஸ்யத்தில் சொன்னால் _____ செய்கிறேன் என்று பிள்ளையாருக்கு வேண்டிக் கொள்ள வேறு செய்தேன்.

காலையில் பட்டு பீதாம்பரம் சகிதம் கிளம்பி நின்ற என்னை பார்த்து கிச்சா கேட்டான் ,”என்னடா இதெல்லாம்.. கல்யாணத்துக்க்கா போறோம். சீ போய் டிரெஸ் மாத்திட்டு வா” என்று விரட்டி பாண்ட் போட வைத்தான்

பஸ்சில் போகிற வழியெல்லாம் எனது பல்லவ அபிப்ராயம் ரொம்ப ஸ்டிராங்காகி விட்டது. வழியில் பார்த்த கடை போர்டில் தெரிந்த அம்பிகா, ராதா எல்லார் மாதிரியும் காற்றில் வரைந்து கொண்டே வந்தேன். போட்டிருந்த மோதிரம் ரிஷப இலட்சினை பொறித்த அடையாள முத்திரையாக மாறிவிட்டதா என்று வேறு அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தேன்.

பக்கத்தில் உட்கார்த்திருந்த கணபதி சுப்பிரமணியன், “ என்ன சந்துரு உடம்பு சரியில்லையா” என்று கேட்டதற்கு

“இல்லையப்பா நான் நலமாகவே இருக்கிறேன்” என்று மறு மொழி பகன்று விட்டு ஒரு ராஜா பார்வை வேறு பார்த்தேன். அவன் அவசரமாக என்னை விட்டு நாலு வரிசை தள்ளி தாவிப் போய் உட்கார்ந்து கொண்டான்

நேரே சிதம்பரம் கோவில்

சபாநாயகரை தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே மண்டபத்தில் ஜடா மகுடதாரியாய் ஒரு சிவனடியார்.

“டேய் யாரோ பிச்சைக்காரண்டா “ நண்பர்களின் எச்சரிக்கையை உதாசீனித்துவிட்டு சிவனடியாரை சமீபித்தேன். அவர் என்னை நிஜமாகவே பூர்வஜன்ம வாத்சல்யமாய்ப் பார்த்துவிட்டு ரோஜா பூவும் திருநீறும் கொடுத்தார். எங்கே என் மோதிரத்தை கழற்றி அவரிடம் கொடுத்துவிடப் போகிறேனோ என்று அங்கிருந்து என்னை பெயர்த்து மீட்டு வந்தனர்

அகஸ்தியரோ காக புண்டரோ ஏதோ பெயர் போட்ட ஒரு நாடி நிலையத்தை நாடிப் போனோம் ”நாடி ஜோஸ்ய சாகரா பூச முத்து” என்று நேம் போர்டு போட்டிருந்தது.

தியாகு ரெகுலர் கஸ்டமர். அங்கே வேலை பார்பவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்கள்

ஒரு மத்திய வயசு ஆசாமி பேப்பர் எடுத்து வந்து “நாடி பாக்கணுங்றவங்க இதுல இடது கட்டை விரல் ரேகை வைங்க” என்றார்.

“என்ன தியாகு இது”

“அதில்ல சந்துரு. ஒருத்தர் ரேகை மாதிரி இன்னொருத்தர் ரேகை இருக்காதில்ல – அதனால இந்த ரேகை வச்சிதான் உனக்கு உண்டான சுவடி எடுப்பாங்க” இதனால் எனது பிரமிப்பு ஜாஸ்தியானது. ரேகை வைத்தேன்

கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின் அழைக்கப்பட்டோம். பூச முத்தானவர் எனக்கு ஆசை முத்துவாக தெரிந்தார்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் இந்த பிறவி சங்கதி மட்டும் பார்த்தனர். எல்லாமே பாட்டுதான். ஒல்லியாய் நாற்பது பக்க நோட்டில் எழுதிக் கொடுத்தனர். குண்டு குண்டாய் அழகான கையெழுத்து. பூசமுத்து என்ற நடுநாயகர் சொல்ல சொல்ல இன்னொருத்தர் எழுதினார்.

”வெளியில் காத்திருக்கும் கூட்டம் இனிமேல் வரப்போகும் கூட்டம் இத்தனைக்கும் எத்தனை 40 பக்க நோட்டு வேணும். நல்ல பிசினஸ்” என் காதில் கிச்சா முணு முணுக்கும் போது என் முறை வந்தது

“சாருக்கு என்ன பார்க்கணும் .. பொதுவாப் பார்த்தா போதுமா ? இல்லை காண்டம் காண்டமா பார்க்கணுமா”

“எனக்கு போன ஜன்மத்தில் என்னவா இருந்தேன்னு தெரியனும்.. முடியுமா”

”சாதாரணமாக சொல்றதில்லை .. ஆனா அபூர்வமா கேக்றிங்க செலவாகும் பரவாயில்லையா ?”

போன ஜன்மத்தில் நான் பல்லவ சக்ரவர்த்தி என்று ஊர்ஜிதம் செய்ய இது கூடவா செலவு செய்ய முடியாது,, , “பரவாயில்லை பாருங்க.. ம்ம்ம் எவ்வளவு ஆகும்”

”____ ரூபாய் ஆகுங்க “

நண்பர்கள் “வேண்டாண்டா.. திரும்ப்பி போறது தவிர கொஞ்சம் தான் கூட காசு இருக்கு”

தஞ்சாவூருக்கு நடந்தே திரும்பி சென்றுவிடலாம் என்று அசட்டு நம்பிக்கையில் , “ஓகே” சொல்லிவிட்டேன்.

இந்த பிறவியில் நான் யார் யாருடைய பிள்ளை அக்கா, அண்ணன் பேரு எல்லாம் நாடியில் பார்த்து ஊர்ஜிதம் செய்தனர். என்னுடைய இடது கை பெருவிரல் ரேகை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை சொன்னதே எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை

“பார்த்தியா அகஸ்தியர் நாடி பெர்பெக்டா இருக்கும்” தியாகு ஒருவேளை அகஸ்தியரின் பேரனாகக் கூட இருக்கலாம்.

என்னுடைய பூர்வ ஜென்ம ரெக்கார்டுகளை தேடி ஒரு சிஷய பட்டாளம் உள்ளே போயிருந்தது. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பின்னே எத்தனை நூற்றாண்டு பின்னே போக வேண்டும். ஆறம் நூற்றாண்டா .. இல்லை எட்டாம் நூற்றாண்டா..

மனசுக்குள் பரிவாதினி யாழ், ருத்திராச்சாரியார் என்று மிக்சர் ஓடியது.

பரஞ்சோதி ஊர் திருவெண்காடு கூட இங்கே பக்கத்தில்தான் … ஞான சம்பந்தர் பற்றி கேட்க வேண்டும் அவரும் அப்பர் பெருமானும் இப்போது எங்கே யாராய் பிறந்திருப்பார்கள்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

அப்பர் திருவெண்காட்டில் பாடிய தேவாரம் மனசில் ஒடியது

இதோ வந்து விட்டார்கள்..

கையில் ஏராளமாய் ஒலைச்சுவடிகள். இருக்காத பின்னே எத்தனை சாதனைகள்

பூச முத்து ஆரம்பித்தார்

ஒரு பாட்டை பாடிவிட்டு அதாவது உங்க போன ஜன்ம தகப்பனார் பேரில் சிங்கம் இருக்கு பெருமாளும் இருக்கு

மனசுக்குள் சபாஷ் போட்டேன். மகேந்திர பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணு.

பூச முத்து தொடர்ந்தார்… அவர் சொல்ல சொல்ல என் சுவாரசியம் குறையத் தொடங்கியது.. முடிக்கும் போது அவர் மோச முத்துவாக தெரிந்தார். டக்கென்று முடித்துவிட்டார்.

அப்படியானால் போன ஜென்மத்தில் நான் ._________ வா இருந்திருக்கேனா ?

கேட்டபடி அந்த பெரிய தொகையை கொடுத்துவிட்டு பஸ்ஸுக்கு காசில்லாமல் சாயங்காலம் கள்ள ரயில் ஏறி தஞ்சாவூர் வந்தோம்.

பல வருஷம் கழித்து கணபதி சுப்பிரமணியத்துடன் குடும்ப சகிதமாக இன்னிக்கு மஹாபலிபுரம் வந்தேன். ரிசார்ட்டில் ரூம் போட்டு விட்டு ஜன்னலில் தெரியும் கடல் கோவிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

– 17 ஏப்ரல் 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *