நான், நிருபர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 6,935 
 
 

”தம்பி, சுப்ரமணின்னு என் ஃப்ரெண்ட், உன்னைப் பார்க்க வருவான். அவனோட மகனுக்கு ஏதோ பிராப்ளமாம். கலங்கிப் போயிருக்கான்.” – டெல்லியில் இருந்து அலைபேசியில் ஒலித்த அண்ணன் குரலில் பதற்றம்.

பிரபல புலனாய்வுப் பத்திரிகையில் சீனியர் கரஸ்பாண்டென்ட்டாக இருக்கும் எனக்கு, இதுபோல உதவிக் குரல்கள் அவ்வப்போது வருவது உண்டு.

டீ முடித்து, டேபிளில் ஃப்ரெஷ்ஷாக இருந்த அடுத்த இஷ்யூவை எடுக்கும்போது, இன்டர்காம் ஒலித்தது. ”சார், உங்களைப் பார்க்கிறதுக்காக சுப்ரமணின்னு ஒருத்தர் வந்திருக்காரு.”

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவருக்கு 50 வயதிருக் கலாம். களைத்திருந்தார். சிநேகமாக நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினேன்.

”நான் சுப்ரமணி, டி.வி.எஸ்ல புரொஜெக்ட் கோ-ஆர்டினேட்டரா இருக்கேன்.”

”சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?”

சிறிது தயங்கி, ”என் பையன் கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, எல் அண்ட் டி-யில வேலை பார்க் கிறான். கூட வேலை பார்க்கிற பொண்ணோட லவ்!”- சொல்லிக்கொண்டே என் முகம் பார்த்தார். ”ரெண்டு நாளைக்கு முன்னாடி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.”

”நல்ல விஷயம். ரெண்டு பேரும் மேஜர்தானே?”

”மேஜர்தான். ஆனா, பொண்ணோட அப்பா அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் கண்ணபிரான்.”

கண்ணபிரான் – தாம்பரம் உதவி ஆணையர் சட்டம் – ஒழுங்கு. முன்னாள் வண்ணாரப்பேட்டை க்ரைம் இன்ஸ்பெக்டர். அன்றைய ஏரியா அமைச்சரின் வலது கரம். சாதிப்பற்று அதிகம். இரண்டு கொலை வழக்கு களில் எஃப்.ஐ.ஆரைச் சொதப்பியதில் பல லட்சங்கள் அனுகூலம். இரண்டு டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இரண்டு முறை அவரை உரசிச் சென்றி ருக்கிறேன்.

”ரொம்பப் பிரச்னை பண்றாரு. ரெண்டு பேரையும் அவர்கிட்ட ஒப்படைக்கணுமாம். என்னை… என் ஃபேமிலியை போலீஸ் சுத்திச் சுத்தி வருது. என் செல்போனை ஃபாலோ பண்றாங்க. எனக்குப் பயமா இருக் குங்க.” – குரல் உடைந்து அழுகைக்குப் போனது.

இப்போது என் நிருபர் மூளை விழித்துக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைபற்றி யோசிக்க… அவர் பேசினார்… ”போலீஸ் ஸ்டேஷன்ல புகார் வாங்க மாட்டேங்குறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பு வேணும்.”

”ரெண்டு பேரும் இப்ப எங்க இருக்காங்க..? நான் உங்க பையன்கிட்ட பேசணும்.”

”அம்பத்தூர்ல என் ஃப்ரெண்ட் வீட்ல” என்றவர், அலைபேசியை எடுத்தார். நம்பர் அழுத்தினார்…

”தம்பி, நான் அப்பா பேசறேன்டா. நமக்கு வேண் டப்பட்டவர்தான். பேசு.” என்னிடம் கொடுத்தார்.

அறிமுகத்துக்குப் பின், ”பயப்படாதீங்க… நான் பார்த்துக்கிறேன். உங்க ஒய்ஃப்கிட்ட கொடுங்க…”

”ஹலோ..!” – அந்தப் பெண்.

”நான் உன் ஃபாதர் இன் லா-வுக்கு வேண்டப்பட்டவன். உங்கப்பாவோட மனநிலை என்னம்மா?”

”எங்க கல்யாணத்தை அப்பா நிச்சயம் ஏத்துக்க மாட்டாரு. சாதி வெறி பிடிச்சவரு. கொதிச்சுக்கிட்டு இருக்காரு அங்கிள். எங்களைக் கொல்றதுக்குக் கூலிப் படை வெச்சிருக்காரு. ஆயுதங்களோடு அந்தக் கும்பல் எங்களைத் தேடி அலையுது.”

”பயப்படாதே..! நான் பார்த்துக்கிறேன். எனக்கு உன்கிட்டேயிருந்து ஓர் உறுதிமொழி வேணும். நீ மேஜர்தானே?”

”ஆமாம் அங்கிள்! ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்ஸ் வெச்சிருக்கேன்.”

”எந்தச் சூழ்நிலையிலேயும் பின் வாங்கிட மாட்டியே?”

மெலிதாகச் சிரித்தாள், ”மாட்டேன். நாலு வருஷமா காதலிக்கிறோம். இதையெல்லாம் எதிர்பார்த்துதான் அங்கிள் கல்யாணமே பண்ணிக்கிட்டோம். ரொம்ப டார்ச்சர் பண்ணினாருன்னா… கமிஷனர் ஆபீசுக்குப் போவேன். அங்கேயும் நியாயம் கிடைக்கலேன்னா, சி.எம். வீடு எதிரே உண்ணாவிரதம் இருப்பேன்.”

அலைபேசியை எடுத்தேன். ”கமிஷனர் ஆபீஸ்… கன்ட்ரோல் ரூம் கொடுங்க.”

கொடுக்கப்பட்டது.

”பார்த்திபன், நான் கலை. தாம்பரம் ஏ.சி. கண்ணபிரான் மொபைல் நம்பர் வேணும்…”

குறித்துக்கொண்டேன். நம்பரை அழுத்தினேன். முதல் ரிங்கிலேயே எடுக்கப்பட்டது.

”குட்மார்னிங் சார்! நான் கலைச்செல்வன்… ஆனந்த முரசு.”
”சொல்லுங்க.”

”உங்க பொண்ணு விவகாரமா பேசணும்.”

”தெரியும்… அந்த நாதாரி அடுத்து அதான் பண்ணுவானு. இங்க பாரு… அவ எனக்கு ஒரே பொண்ணு. பத்து லட்சம் செலவு பண்ணிப் படிக்கவெச்சிருக்கேன். பெரிய இடத்துல மாப்பிள்ளை ரெடி! எவனோ ஊர் பேர் தெரி யாத பொறம்போக்குகூட ஓடிப் போயிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கா. வாழ்த்து போஸ்டர் அடிச்சு வரவேற்பு கொடுக்கறதுக்கு நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல. இப்ப அவ உன்கிட்ட இருக்காளா..?”

”இல்ல. ஆனா, இருக்கிற இடம் தெரியும்.”

சிறிது யோசனைக்குப் பின், ”அவளை நான் பார்க்கணும்… பேசணும். அப்புறம் மத்ததை யோசிக்கலாம்.” என்றார்.

”எங்க சார் சந்திக்கலாம்?”

”நீயே சொல்லு!”

வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொன்னேன். ”ஒரு மணிக்கு ரிசப்ஷன்ல வெயிட் பண்றோம் சார்.”

”சரி.”

”சார், நான் ஃப்ரெண்ட்லியா இந்தப் பிரச்னையை நல்லபடியா முடிக்கணும்னு நினைக்கிறேன்.”

”நானும் அப்படித்தான். போலீஸ்காரனா பேசலை. அப்பன்காரனா, பெத்த பொண்ண நாலு நாளா பாக்க முடியாத ஏக்கத்துல பேசிக்கிட்டு இருக்கேன்.”

அலைபேசித் தொடர்பைத் துண்டித்தார். நான் சிறிது யோசித் தேன். பிறகு, ”12 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டு வந்து டுங்க” என்றபடி நண்பன் ஒருவன் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத் தேன்.

”அந்தாளு மோசமானவர்னு. எல்லாரும் சொல்றாங்க… பயமா இருக்கு” என்றார் சுப்ரமணி.

”இதுல பயப்பட ஏதுமில்லை. என்னோட நிருபர் அனுபவத்துல இது மாதிரி ஏராளமான சம்பவங் களைப் பார்த்துட்டேன். தைரியமா போங்க. 12 மணிக்கு அங்க வந்துடுங்க. நானும் வந்துடறேன். நேர்ல சந்திச்சு ஒருத்தரை ஒருத்தர் பார்த் துக்கிட்டாங்கன்னா கோபதாபங் கள் குறைஞ்சுடும். அப்புறம் பிரச் னையைச் சுலபமா தீர்த்துட லாம்.”

சரியாக 12 மணிக்கு நண்பனின் வீட்டுக்கு வந்தவர்களைப் பார்த்தபோது, மனதுக்குள் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.
”சார்… நான் செல்வன்… இது இந்திரா…”

சிநேகமாகக் கை குலுக்கினான். அந்தப் பெண் சிரித்து வணங்கினாள். திருமணப் பதிவு மற்றும் வயதுச் சான்றிதழ் போன்றவற்றை நீட்டினார்கள். வாங்கிப் பார்த்தேன்.

”எங்க ஆபீசுக்கு ஒரு ரவுடிக் கும்பல் போயிருக்கு, சார்! என் ஃப்ரெண்ட் வீட்டு அட்ரஸ் எல் லாம் விசாரிச்சிருக்காங்க!”

”எப்ப?”

”அரை மணி நேரத்துக்கு முந்தி…”

அதாவது நான் கண்ணபிரானிடம் பேசிய பிறகு.

”சார்… உங்ககிட்ட ஒரு ரிக்வெஸ்ட்! நீங்க ரிப்போர்ட்டர். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இவங்கப்பாவை எந்த விதத்திலேயும் குறைச்சு மதிப்பிடாதீங்க. எங்களைப் பிரிக்கிறதுக்கு என்ன வேணாலும் செய்வாரு. பெரிய இடத்துல இவளுக்குச் சம்பந்தம் பேசி இருக்காரு…”

ஒரு மணிக்கு ஹோட்டலில் சந்திப்பு. எனக்கு ஏனோ அந்த எண்ணம் தோன்றிற்று.

”நீங்க இங்கேயே இருங்க…”

வீட்டைவிட்டு வெளியே வந்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்து, ஹோட்டலை நோக்கி விரட்டினேன். ஹோட்டலை நெருங்குகையில் நிருபருக்கே உரிய உள்ளுணர்வு என்னை உஷார்படுத்தியது. எதிரே டீக் கடையில் பைக்கை நிறுத்திப் பூட்டினேன். ஹோட்டலை நோக்கி நடந்தேன். பக்கவாட்டில் இருந்த பார்க்கிங்கில் பார்வையைச் செலுத்தினேன். தூரத்தில் ஒரு சைரன் ஜீப் தனது உடலை மறைத்தபடி நின்றிருந்தது. மெதுவாக லாபிக்குள் கேசு வலாக நுழைந்தேன். நாலாபுறமும் பார்வையைச் செலுத்திய எனக்கு அதிர்ச்சி!

மஃப்டியில் போலீஸ். அதில் எனக்கு நன்கு அறி முகமான இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இருந்தார்கள். திருமணம் நடந்துகொண்டு இருந்ததால், அந்தக் கூட்டத்தில் என்னை மறைத்துக்கொண்டேன். மெயின் ரிசப்ஷனில் மேலும் அதிர்ச்சி. ரவுடிக் கும்பல். அங்கிருந்த அனைத்து நாற்காலிகளையும் ஆக்கிரமித்திருந்தார்கள்.

அடுத்த விநாடி மூளைக்குள் கோப ரத்தம் பாய்ந்தது. நான் ஒரு பிரபல பத்திரிகையின் நிருபர். சட்டப்படியான ஒரு காதல் விவகாரத்தைக் காதல் ஜோடி சார்பாக நாகரிகமாக அப்ரோச் செய்கி றேன். ஒரு தந்தையின் உணர்வுகளை மதித்து அவரிடம் தம்பதியை அறிமுகப்படுத்த அழைத்து வர எண்ணுகிறேன். ஆனால், ஒரு பொறுப்புள்ள போலீஸ் அதிகாரியான அவரோ, ரவுடிகள் மற்றும் டிபார்ட்மென்ட் துணையோடு அவர்களைக் கடத் தவும் அசம்பாவிதம் நிகழ்த்தவும் திட்டமிட்டால்…

வாருங்கள் அதிகாரவர்க்கமே… ஜனநாயகத்தின் நான்காவது தூணின் வலிமையை உங்களுக்கு உணர்த்துகிறேன். உங்களை… உங்களைவைத்தே மடக்குகிறேன். மனசுக்குள் சபதமிட்டேன். வெளியே வந்தேன். அலைபேசியை எடுத்தேன்.

சரியாக மணி ஒன்று.

டாக்ஸியில் இருந்து அனைவரும் இறங்கினோம். நான், செல்வன், இந்திரா, செல்வனின் அப்பா. மற்றும் அவரது நண்பர் ஒருவர். பயந்து பயந்து நாலாபுறமும் பார்த்துக்கொண்டே வந்தவர்களை உற்சாகப்படுத்தினேன்.

”பயப்படாம வாங்க…”

அவர்கள் தைரியம் பெற்று லாபி நோக்கி நடந்த விநாடி… காத்திருந்த போலீஸ் கும்பலும், ரவுடிக் கும்பலும் வேகமாக எங்களை நோக்கிப் பாய்ந்தன.

ரெஸ்டாரென்ட்டுக்குள் பதுங்கி இருந்த கண்ண பிரான் ஓடி வந்தார், மகளை நோக்கி! என்னைக் கடந்த அந்த சில விநாடிகளில் அவரிடமிருந்து சாராய நெடி. அந்த விநாடி பதற்றமானது.

ஒரு பக்கம் இருவரும் ”அங்கிள்” என்றபடி என் னோடு பதுங்க… பையனின் அப்பா பதறி நிற்க… போலீஸ்காரர்கள், அந்தப் பெண்ணைக் கோபத்துடன் சூழ… ”நாதாரி நாயே” என்றபடி கண்ணபிரான் பாய்ந்து வர… ஹோட்டல் பணியாளர்கள் பயந்து நிற்க… கூட்டம் சிதறி ஓட…

அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என் னால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம்.

ஹோட்டலின் உள்ளே கையில் கேமராவோடு பத்திரிகை புகைப்படக்கா ரர்கள் பட்டாளமாக நுழைந்தார்கள். பெரும் வட்டமாகச் சூழ்ந்தார்கள். அடுத்த விநாடி எங்களை நோக்கி ஃப்ளாஷ், வெளிச்சக் குவிய லாக மின்னியது. நான்கு தொலைக்காட்சி கேமராக்கள் அந்தப் பெண்ணை, கண்ணபிரானை, மஃப்டி போலீஸைக் குறிவைத்துத் தடவின. காத்திருந்த ரவுடி கள் சூழ்நிலையின் அர்த்தம் புரிந்து, சட்டென்று பின் வாங்கினார்கள். முகம் மறைத்தார்கள். விபரீதம் புரிந்த போலீஸ்காரர்கள் சாந்தமானார்கள்.

”சார்… உங்க பொண்ணு சட்டப்படி மேஜர். இதோ ஸ்கூல் ரெக்கார்ட்ஸ் இருக்கு. எதுக்கு அவங்களை டார்ச்சர் பண்றீங்க? ஒரு போலீஸ் அதிகாரி மாதிரி உங்க நடவடிக்கை இல்லையே?”- ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் கண்ணபிரானை நோக்கி மைக் நீட்ட… அவர் என்னைப் பார்த்தார். பெண்ணைப் பார்த்தார். கூடியிருந்த நிருபர் கூட்டத்தைப் பார்த்தார். புகைப்படக்காரர்களைப் பார்த்தார். செய்வதறியாது திகைத்து நின்றார். பதில் சொல்லாமல் திரும்ப நடந்தார்.

”சார், சார்… அவசரப்பட்டுட்டோம். இது எதையும் நியூஸ்ல போட்டுடாதீங்க. வேலை போயிடும். பின்னாடி நீங்க இருக்கீங்கன்னு ஏ.சி. சொல்லவே இல்லை. ஸாரி சார்!” – போலீஸ்காரர்கள் கூட்டமாக என்னிடம், எனது சகாக்களிடம் கெஞ்சினார்கள். ரவுடிக் கும்பல் பயந்து விலகியது. நான், நிருப நண்பர்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன்.

விமானத்துக்கு இன்னும் நேரம் இருந்தது. இந்திராவும் செல்வனும் இப்போது பயம் விலகிச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். நான் இந்திராவை அருகே அழைத்தேன். வந்தாள்.

”அப்பா போலீஸ் அதிகாரி. ஏராளமான சொத்து. ஒரே பொண்ணு. ரொம்ப செல்லம். பெரிய இடத்து மாப்பிள்ளை… இதையெல்லாம் புறக்கணிச்சிட்டு நீ செல்வத்தை நேசிக்கிறதுக்கு விசேஷ காரணம் ஏதாவது உண்டா?” என்றேன்.

”காதல்ல நேர்மை ரொம்ப முக்கியம் அங்கிள். ஒரு பெண் ணுக்குப் பணமும் சொத்தும் பாதுகாப்பு இல்லை. கட்டிக்கப் போறவனோட நேர்மையும் நாணயமும்தான்! அது செல்வன் கிட்ட நிறையவே இருக்கு. எங் கப்பாகிட்ட அது இல்ல. அவரு பார்த்துவெச்சிருக்கிற மாப் பிள்ளைகிட்டயும் கிடையாது” என்றவள், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தாள்…

”இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்த அன்னிக்கு நான் பொறந்ததால இந்திரானு எனக்குப் பேர் வெச்சாரு அப்பா. சின்ன வயசுல எனக்குத் திருக்குறள் கத்துக் கொடுத்து… ஒழுக்கம், நேர்மை, நாணயம் இதையெல்லாம் சொல் லிக்கொடுத்தது அப்பாதான். என்னை ரொம்ப ஹானஸ்ட்டா வளர்த்தாரு. எஸ்.ஐ-யா இருந்த வரைக்கும் அப்பா ரொம்ப நேர் மையாதான் இருந்தார் அங்கிள். அப்புறம்தான் ஏனோ மாறிட் டாரு!” என்றாள் வேதனை ததும் பும் குரலில்.

”அப்பா மேல் உள்ள இந்த வெறுப்பு நிரந்தரமானதா இந்திரா?”

”இன்னிக்கு அவர் பண்ணின காரியம் மன்னிக்க முடியாதது அங்கிள்! ஒரே பொண்ணான என்னைப் பார்க்கணும்னு அப்பாவுக்கு ஆசை வந்துச்சுன்னா… பதவியைப் பயன்படுத்தி அவர் சம்பாதிச்ச பணம், சொத்துக்கள் எல்லாத்தையும் அரசாங்கத்துக்கோ இல்ல, அநாதை ஆசிரமத் துக்கோ கொடுக்கணும். பழைய நேர்மையான அப்பாவா, அதிகார மமதைகள் எதுவும் இல்லாத அப்பாவா அவர் வரணும். அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஹானஸ்ட்டியை அவர்கிட்டயிருந்து நான் எதிர்பார்க்கிறேன். எப்பவாச்சும் எங்கப்பாவை நீங்க சந்திக்க நேர்ந்தா, அவர்கிட்ட இதைச் சொல்லுங்க அங்கிள்…”

”எப்பவாச்சும் இல்லம்மா, இப்பவே கேட்டுக்கிட்டு இருக்காரு” என்ற நான், சட்டைப் பையில் உயிர்ப்புடன் இருந்த அலைபேசியை எடுத்தேன்.

லைனில் இருந்த ஏ.சி. கண்ணபிரானிடம், ”சார்… நீங்க கேட்கச் சொன்ன சந்தேகத்தைக் கேட்டுட்டேன். உங்க ஒரே பொண்ணோட பதிலைக் கேட்டீங்கல்ல?” என்றபடி லைனைக் கட் செய்தேன்.

இந்திராவும் செல்வனும் என்னை வியப்பாகப் பார்க்க… விமானத்தில் ஏறுவதற்கான அழைப்புக் குரல் மைக்கில் வழிந்தது!

– பெப்ரவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *