நான் செய்த பாவம் என்ன?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,775 
 
 

“ஐயா சரணு, அப்படி என்ன விட்டத்த பாத்து யோசிச்சிக்கிட்டு இருக்க? எப்படி நாய் வால நிமிர்த்தலாம்னு யோசிக்கிறியா என்ன?” என்றாள் அம்மா நக்கலுடன். நான் அவளைச் செல்லமாக முறைத்துக் கொண்டே இப்படிக் கூறினேன். “அட போம்மா நீ வேற. நேரம் காலம் தெரியாம ஜோக் பண்ணிக்கிட்டு இருக்கே! உனக்கே தெரியும்ல மியூசிக்னா எனக்கு எவ்வளவு உயிருனு! நான் ஆசப்பட்ட மாதிரியே எனக்கு மியூசிக் கோலேஜ்ல படிக்க வாய்ப்பு கெடச்சிருக்கு. ஆனா இப்ப நா எப்படி யூரான் கட்டப் போறேன்னு எனக்கே தெரியல! அத பத்திதான் யோசிச்சிட்டே இருக்கேன்” அதைக் கேட்ட அம்மா “பாத்துக்கலாம் விடுடா. மொதல்ல இந்தத் தாடிய போயி வெட்டு. பாக்கவே சகிக்கல” எனச் சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அப்படியோர் ஆச்சரியம். என்னுடைய எண்ண அலைகள் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்க தொடங்கின.

“பாவம்டா உங்க அம்மா வசந்தி. சின்ன வயசுலயே இப்படி உங்க அப்பாவ இழந்துட்டு நிக்கிறா. கடவுள் ஏன்தான் அவள இப்படி சோதிக்கிறாரோ?! இனி நீயும் உன் தங்கச்சியும்தான் உங்க அம்மாவுக்கு ஆதரவு. என்னிக்குமே நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மாவ கை விட்டுடாதீங்க!” கோமளம் பாட்டி அப்பாவின் கருமாதியில் சொன்னது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.

அப்போது எனக்குப் பதினேழு வயதுதான். தங்கை கவிதா என்னைவிட நான்கு வயது இளையவள். எங்களுக்கு உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. அம்மா வேறு மதத்தைச் சேர்ந்த அப்பாவைக் காதல் திருமணம் செய்து கொண்டாளாம். அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லையாம். எல்லோரும் ஒதுங்கி விட்டார்கள். கோமளம் பாட்டியின் தலைமையில்தான் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடந்தேறியது. “அப்பா அம்மா இல்லாத எங்க ரெண்டு பேருக்கும் கோமளம் பாட்டிதா எல்லாமே!” என்று அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கூறியதுண்டு. கோமளம் பாட்டி அம்மாவுக்கு அத்தைமுறை வரும். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அம்மாவுக்கு அவர்தான் உற்றத்துணை. திருமணம் செய்து கொள்ளாமலே இருந்துவிட்டார்.

அம்மாதான் எங்களுடைய உலகமே. அம்மாவுக்கும் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே அம்மாவுக்குத் தைரியம் ஜாஸ்தி. வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளித்து விடலாம் எனும் மனப்பக்குவம் கொண்டவள். படிப்புச் சரியாக ஏறவில்லை. படிவம் மூன்று வரை மட்டும்தான் படித்திருந்தாள். பதினெட்டு வயதிலேயே அப்பா ரிச்சர்ட்டைக் காதல் திருமணம் செய்து கொண்டாள். சும்மா சொல்லக்கூடாது. அப்பாவுக்கு அம்மாவின்மேல் கொள்ளைப் பிரியம். யாருக்குத்தான் அம்மாவைப் பிடிக்காது! சுருண்டு வளர்ந்த அடர்த்தியான நீண்ட கூந்தல். கலையான முகம். அவ்வளவு அழகு அம்மா!

திருமணத்துக்குப் பின் அப்பாவும் அம்மாவும் தைப்பிங்கில் குடியேறினார்கள். இன்னமும் அங்கேயேதான் இருக்கிறோம். கோமளம் பாட்டியும் எங்களுடன்தான் இருக்கிறார். அப்பா மெக்கானிக் தொழில் செய்து வந்தார். அம்மா இந்நாள் வரை தொழிற்சாலையில் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறாள். குறைந்த சம்பளம் என்றாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை. இதற்கிடையில் அவர்கள் வாழ்க்கையில் நானும் கவிதாவும் வந்தோம். வாழ்க்கை மேலும் அவர்களுக்கு அழகானது.

ஆனால், எங்களின் மகிழ்ச்சி நீண்ட நாள்கள் நிலைக்கவில்லை. பாழாய்ப்போன கேன்சர் அப்பாவின் உயிரைப் பறித்துவிட்டது. அப்பா இறந்த பிறகு குடும்பச் செலவு மொத்தமும் அம்மாவின் தலையில் விழுந்து விட்டது. அதை ஈடுகட்ட அவள் காலையில் தொழிற்சாலை, இரவில் உணவு ஸ்டால் வியாபாரம் என இரு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

இரவு பகல் பாராது அயராது இன்றுவரையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறாள். நானும் அம்மாவுக்கு உதவி செய்ய ஒரு நாள் கூட தவறாமல் உணவு ஸ்டாலுக்குச் சென்று விடுவேன். கவிதாவைக் கோமளம் பாட்டியிடம் ஜாகா பார்க்க சொல்லிவிட்டு அம்மாவின் பின்னாடியே உணவு ஸ்டாலுக்கு ஓடி விடுவேன். “படிக்கிற பையன் உனக்கு எதுக்குடா இந்தக் கஷ்டம் எல்லா? நீ நல்லா படிச்சாலே அம்மாவுக்குப் போதும்” என்று அம்மா சொன்னாலும் அதை நான் பொருட்படுத்தாமல் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன்.

“பேருக்குத்தான் சரண் சின்னப் பையன். ஆனா, பொறுப்புணர்ச்சி மன உறுதி எல்லாமே அவனோட வயசுக்கு மிஞ்சியே இருக்குது” கோமளம் பாட்டி அடிக்கடி இப்படிக் கூறுவதைக் கேட்டு அம்மா பூரித்துப் போயிருக்கிறாள். நான் அம்மாவுக்குச் செல்லப்பிள்ளை. வயலின் வாசிப்பதில் கில்லாடி. மியூசிக் துறையில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என இலட்சியம் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒருநாள் என் கனவு நனவாகும். அந்த நாள் தொலைவில் இல்லை. எங்களுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் அம்மாதான் இன்றுவரையிலும் இருக்கிறாள். அவளுக்காகவும் எனக்காகவும் கண்டிப்பாக நான் என் இலட்சியத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும்.

நான் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றிருந்தேன். இசைக்கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அதற்கான இன்டர்வியூவுக்கும் சென்று வந்திருந்தேன். ரிசல்ட் இன்றுதான் தெரிந்தது. நான் ஆசைப்பட்ட மாதிரியே இசைக்கல்லூரியில் பயில வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சின்னச் சிக்கல். நுழைவுக் கட்டணம் செலுத்துவதற்குச் என்னிடம் போதிய பணம் இல்லை. என்ன செய்ய போகிறேனோ?! ம்ம்ம்ம்ம்….

காதோரத்தில் ஒரு கொசுவின் இன்னிசை மழை. சட்டென்று பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டேன். “டே சரணு!” எனும் குரல் என் காதுகளை வந்து எட்டியது. வெளியில் சென்று பார்த்தேன். கவின் நின்று கொண்டிருந்தான். என்னுடைய நெருங்கிய நண்பன். “பர்கர் வாங்க போலாமாடா?” என்றான் அவன். “இருடா வரேன்” எனக் கூறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த நான், அம்மாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, “போய்ட்டு வரேன்மா” என்று கத்திச் சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். நானும் கவினும் பர்கர் ஸ்டாலுக்கு நடையைக் கட்டினோம். பர்கர் ஸ்டாலை அடைந்தவுடன் எங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு நானும் கவினும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அறிமுகமான ஏதோ ஒரு குரல் என்னைக் கூப்பிடுவதைக் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தோம்.

அதுதான் நாங்கள் செய்த மிகப்பெரிய தப்பு. அந்தக் குரலுக்குச் சொந்தமானவன் வேறு யாருமில்லை. இடைநிலைப்பள்ளியில் எங்களுடன் ஒன்றாகப் பயின்ற குமரன்தான். அவன் தன் கூட்டத்துடன் அங்கு வந்திருந்தான். அவர்களுக்கும் எங்களுக்கும் எப்போதுமே ஒத்து வராது. சண்டைதான் எந்நேரமும் எங்களுக்குள். சண்டை என்று சொல்வதைவிட பகடிவதை என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும். அவர்கள் எங்களை எந்த நேரமும் பகடிவதைச் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். அதனாலே அவர்களைக் கண்டால் எங்களுக்கு ஒருவித பயம் வந்துவிடும்.

இன்று என்ன நடக்க போகிறதோ எனும் பதைப்பதைப்பில் நானும் கவினும் பர்கரை வாங்காமலேயே அவ்விடத்திலிருந்து விறுவிறுவென நகர தொடங்கினோம். அவர்களும் விடாமல் பைக்கில் பின்தொடர்ந்து கொண்டே வந்தார்கள். எங்களின் கெட்ட நேரம். வீடு திரும்புவதற்கு அந்தவொரு தெருவைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். ஏனென்றால், வீட்டிற்குச் செல்ல அந்தவொரு வழிதான் இருக்கிறது. வேறு வழிகள் கிடையாது. அந்தத் தெரு நீளமாக வேறு இருக்கும். அங்குத் தெருவிளக்குகளும் இல்லை. ஆள்களும் கூட அன்று யாருமே இல்லை. எங்களுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது. எங்களின் நடையைச் சற்று வேகமாக்கினோம். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடமிருந்து தப்பித்து விடலாம் என்ற அற்ப ஆசையில் நாங்கள் ஓடவும் செய்தோம்.

அப்போதுதான் குமரன் பைக்கில் என் பின்னால் வந்து மோதினான். நான் அந்தக் கணமே தடுமாறித் தரையில் விழுந்தேன். கவின் அலறிக்கொண்டு என்னைத் தூக்க வந்தான். அவனது இடது கண்ணில் அக்கூட்டத்திலிருந்த ஒருவன் முரட்டுத்தனமாக ஓங்கி ஒரு குத்து விட்டான். கவின் தரையில் சுருண்டு விழுந்தான். எழுந்திருக்கவே இல்லை. அவனுக்கு என்னவானது என்றே எனக்குத் தெரியவில்லை. அருகில் சென்று பார்க்கவும் என்னால் முடியவில்லை. குமரன் என்னை மோதியதில் கெண்டைக்கால்கள் இரண்டும் சரியான வலியாக இருந்தன.

பிறகு அவர்களின் கவனம் முழுவதுமாக என்மேல் திரும்பியது. ஆரம்பமானது அவர்களின் உச்சக்கட்ட பகடிவதை. என்னை மண்டியிட வைத்து என்னுடைய கைகள் இரண்டையும் பின்னால் இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். குமரன் முன்னாலிருந்து வேகமாக ஓடிவந்து ஹெல்மெட்டால் என் மண்டையில் ஓங்கி அடித்தான். இரத்தம் பீறிட்டுக் கொண்டு வழிய தொடங்கியது. அதன் பிறகும் அவர்கள் என்னை விட்ட பாடில்லை. என்னுடைய முதுகுப்பகுதி முழுவதிலும் எறிந்து கொண்டிருக்கின்ற சிகரெட் துண்டுகளால் சூடு வைக்க தொடங்கினார்கள். வலி தாங்க முடியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாகக் கொட்டியது. அதன்பிறகாவது அவர்கள் என்னை விட்டிருக்கலாம். ஆனால், அந்த மனித மிருகங்கள் உடைந்த கண்ணாடி போத்தலை என்னுடைய பின்பகுதியில் நுழைக்க தொடங்கினார்கள்… என் கண்கள் பிதுங்கி நின்றன. என்னால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. அப்படியே தரையில் சாய்ந்து விட்டேன்.

“டே! மச்சான் அவன் செத்துட்டான்டா!” குமரனின் குரல் கேட்டது. அவன் குரலைத் தொடர்ந்து அவர்களின் பைக்குகள் அங்கிருந்து அங்கிருந்து கிளம்பும் கிளம்பும் சத்தம் கேட்டது.

குடிபோதையில் இருந்த அவர்கள் நான் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள். அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனாலும் நான் பிழைக்கமாட்டேன் என்று எனக்குத் தெரியும். காது, வாய், பின்பகுதி ஆகியவற்றிலிருந்து எனக்கு இரத்தம் நிறையவே வெளியேற தொடங்கி இருந்தது. என்னுடைய உடம்புக்குள்ளும் ஏதோ ஒரு கொடிய வலி என்னை அணுவணுவாகச் சித்ரவதைச் செய்து சாகடித்துக் கொண்டிருந்தது. கவினைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன். அசைவின்றிக் கிடந்தான். அவன் நெஞ்சுப்பகுதி மட்டும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. உயிருடன்தான் இருக்கிறான் என்று அறிந்து கொண்டேன். அப்படியே என்னுடைய வலி காணாமல் போய்விட்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு மயான அமைதி நிலவியது. சடலமாக நான் அந்த மயான அமைதியில் படுத்துக் கிடந்தேன்.

இறைவா! இப்படிக் கொடூரமான முறையில் இறப்பதற்கு நான் செய்த பாவம்தான் என்ன? ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பளிப்பாயா? என்னுடைய அம்மாவை இறுதியாக அணைப்பதற்கு?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *