நான் கிறுக்கனா…?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 11,670 
 
 

“மியாவ்.. மியாவ்.. பூனை சத்தம் போட்டு ஞாயிறு தூக்கத்தை கெடுத்தது. எழுந்து போர்டிகோவிற்கு சென்று பார்த்தேன் பக்கத்து வீட்டு பூனைகள் காம்பவுண்டில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.” சே.. கொஞ்ச நேரம் தூங்க முடியுதா பாருங்க பக்கத்து வீட்ல பெரிசா பூனை வளர்க்கிறேன்னுட்டு மூணு, நாளு இம்சைங்களை வளர்க்கிறா. இங்க வந்து அமர்க்களம் பண்ணுதுங்க. பூனை பண்றதெல்லாம் குறும்பு.. அடிச்சா பாவமாம்.” முணு முணுத்து கொண்டே ஜன்னலை மூடினாள் ரஞ்சனி.

நான் பூனைகளையே பார்த்து கொண்டிருந்தேன். பூனை என்னை ஒரு மாதிரியாக பார்த்தது , “ ஆமா நாங்கதான் குறும்பு பண்றோமா? நீங்க குறும்பு பண்றதேயில்லையா? என்றது. நான் பதிலே பேசவில்லை. ஏற்கனவே என் மனைவி என்னைப் பற்றி அவள் அப்பாவிடம் புலம்பி கொண்டிருந்தாள்.

“ அப்பா, மாப்பிள்ளை எஞ்சினியரா இருந்தாலும் எழுத்தார்வம் உள்ளவர்னுதானே சொன்னிங்க எனக்கு என்னமோ கிறுக்கா இருப்பாரோன்னு பயமாயிருக்குப்பா.. நேத்து தோட்டத்தில் செடி கூட பேசிட்டிருக்காருப்பா…”
நான் இல்லை என்று நினைத்து கொண்டு அவள் அப்பாவிடம் போனில் பேசியதை கேட்டு தொலைத்து விட்டேன்.

நேத்து நடந்ததை சொல்லிடறேன்.. மெல்ல தயங்கி வந்த என் ரஞ்சனி, “ என்னங்க கல்யாணமான புதுசுல பார்க், சினிமான்னு போவாங்க.. நீங்க என்னடான்னா இலக்கிய கூட்டமா கூட்டிட்டு போறிங்க.. இன்னிக்காச்சும் சினிமா போலாங்க.. நான் ரெடியாகறேன்.. நீங்க போய தோட்டத்துல இருக்கிற ரோஜாவை பறிச்சிட்டு வாங்க..” என்றாள்.
வெளிர் ரோஜா நிறத்தில் இருந்த அந்த ரோஜா மனதை கொள்ளை கொண்டது பறித்து விடலாமென்று மெல்ல கை நீட்டிய போது,

‘ வாடும் வரையாவது
என்னை பிரசவித்த
என் தாயோடு இருக்க விடு ‘

ரோஜா கெஞ்சுவது போலிருந்தது. “ ஸாரி.. நீ செடியிலே இரு..” என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அதை கேட்டுவிட்டுதான் அவள் அப்பாவிடம் புகார் செய்தாள்.என்னை எதிர் பார்க்காமல் கிள்ளி தலையில் செருகி கொண்டு நல்லாயிருக்கா? என்றாள். “கொஞ்சங்கூட நல்லாயில்லே..” சொல்லலாம் என்று வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி கொண்டேன்.சொல்லிவிட்டால் அவ்வளவுதான் இரவு பட்டினி போட்டுவிட்டுவாள் என்று பொய்யாக சிரித்து வைத்தேன்.

என்னை கிறுக்குன்னு அவ அப்பா கிட்ட சொல்லிட்டிருந்தது கேட்டும் எனக்கு கோவம் வரலைங்க. ஏன்னா என்னை பெத்தவங்களே என்னை புரிஞ்சுக்கலை. “ “போடா பைத்தியக்காரா.. வானம், மழைன்னு புலம்பிட்டிருக்காம பொழைக்கிற வழியை பாரு..” இலக்கியம் படிக்க ஆசைப்பட்ட என்னை மெக்கானிக்கல் எஞ்சினியர் கட்டாயப் படுத்தி படிக்க வைத்தார்கள். மெக்கானிக்கல் படிச்சி எக்கனாமிக்கலா நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உடனே கல்யாணம்.

நான் என் வாழ்க்கையை கவிதையா வாழ்ந்து பார்க்கிறேன்ங்க.. அது புரியாம எனக்கு வேலை வெட்டி இல்லைங்கிறாங்க..
தூரத்தில பச்சை பசேல்னு புல்வெளி … கயிற்று கட்டில்ல படுத்து கிட்டு வருடி போற தென்றல் சுகத்தோட மெலொடியஸா பாட்டை கேட்கும் போது எத்தனை ஆனந்தமாயிருக்கும் .. இப்படி எல்லாம் பேசினா ஓடிடறாங்க. ரசனை இல்லாத பிறவிங்க.

அதுக்குதாங்க நான் இப்ப எல்லாம் என் ரசனைகளை மனசுக்குள்ளேயே வச்சிக்கிறது. என் பெண்டாட்டி என் ரசனைகளோடு ஒத்து போகலைன்னாலும் தீர்மானமா சொன்னா, “ நீங்க எதையாவது கிறுக்கிட்டு போங்க.. மாசம் ரெண்டு புடவை, ஞாயித்து கிழமையில ஹோட்டல், பீச்னு இப்படி கூட்டிட்டு போனா உங்களை என்ன சொல்ல போகிறேன்..?” என்று. அவ உலகம் அவ்வளவுதான்.

“ கீச்..கீச் சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தேன். எங்கள் வீட்டு மரத்தில் இருந்த குருவி கூட்டில் இருந்த இரண்டு குருவிகளும் புதிதாய் தெரிந்த மற்ற இரண்டு குருவிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. பார்க்க எல்லைப் போர் மாதிரி இருந்தது. ஒரு வழியாய் புதிய குருவிகள் வலியோடு ஓடி விட்டது. நிம்மதியாய் கூட்டில் உட்கார்ந்து கொண்டன. ஆண் குருவி என்னை பார்த்து “ எப்படி பார்க்கிறான் பாரு கல்லுளி மங்கன் மாதிரி ஒரு கோலை எடுத்து விரட்டி இருக்கலாமில்லையா..?” என்றது.

“ ஆமா.. ஆமா சண்டை போட்டா சுவாரஸ்யமா பார்க்கிறதுதானே இவனுங்க வேலை.. “ என்றது பெண் குருவி.

“ ஏய் விட்டா பேசிகிட்டே போவிங்களா மனுஷந்தான் சண்டை போடறான் உங்களுக்கென்ன வந்துச்சி..? என்றேன்.

“ ம் இது நாங்க கஷ்டபட்டு கட்டின கூடு அதுல அதுங்க ரெண்டும் உட்கார்ந்துக்க பார்த்துச்சி.. நீ கட்டின வீட்ல பக்கத்து வீட்டுக்காரன் வந்து குடியேறினா சும்மா விட்டிருவியா…?

“ அட பாவிங்களா.. உங்களுக்கும் கூட சுய நலம் பரவிடுச்சா..?

“ ம் பின்ன மனுஷனை பார்த்து பார்த்து எங்களுக்கும் அந்த புத்திதானே வரும்..?

போய்யா.. போ நாங்க ரெண்டு பேரும் ஜாலியா டூயட் பாடனும். பொறாமையா பாக்க போற…”

பிறகு ரெண்டும் துள்ளல்… தாவல் கீச்.. கீச் ஒரே கும்மாளம்.
எட்டி பார்த்த ரஞ்சனி , “ ச்சே.. நம்ம வீட்டுல வந்துதான் இதுங்க அமர்க்களம் பண்ணனுமாக்கும்… போர்டிகோ மொத்தம் நாசம் பண்ணுதுங்க.. ஒரே கூச்சல் வேற இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விட போறதில்லை சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“ பாருய்யா என்னமோ இவ வீடாமே… நம்மளை மாதிரி இவளேவா கட்டினா..? இவளை விடவா நாம் சத்தம் போட்டிட்டிருக்கோம்? வாயாடி எந்நேரமும் புருஷனை தொணைச்சிட்டேயிருப்பா…” பெண் குருவி கிண்டல் பேச, ஆண் குருவி எக்காளம் போட்டது.

அதற்குள் கையில் கோலோடு வந்த என் மனைவி கூட்டை ஓங்கி தட்டினாள். பறவைகள் ரெண்டும் தப்பித்தோம்.. பிழைத்தோம் என்று பறந்தது. நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளியை தண்டித்தது போல சந்தோஷமா “ அப்பா… இனிமே தொல்லை இல்ல சொல்லிக்கொண்டே உள்ளே போனாள்.

“ என்னங்க.. அந்த டோரை சாத்துங்க கொசுங்க தொல்லை “ உள்ளேயிருந்து சத்தம் போட்டாள்.

Print Friendly, PDF & Email
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *