நான் ஆளப்பட வேண்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,615 
 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவன் எதிர்பார்த்துக் கொண்டு வந்தது போலவே எல்லாம் இருந்தது. வீட்டில் இவனுக்கு எவரும் முகம் கொடுப்பாரில்லை. வெளியே சென்று வீடு திரும்பி வருவதற்குச் சற்றுத் தாமதமானால், இந்தச் சொற்ப நேரப் பிரிவே இவர்களுக்கு நெஞ்சிற் கனக்கும். அதை இறக்கி விடுவது போல அப்போய்’ என இதயத்துள் வந்து விழுந்து தோயும் குதூகல வரவேற்பு இன்று இவனுக்கில்லை. அப்பா என்று ஒருபோதும் அழைத்தறிய மாட்டார்கள். அப்படி அழைப்பது இவர்களைப் பொறுத்தவரை அந்நியப் பட்டு நிற்பது போல ஓர் உணர்வு. எப்பொழுதும் அப்போய்தான். அதில்தான் எத்தனை நெருக்கம்!.

இவன் தலையைத் திருப்பி உள்ளே பார்க்கின்றான். சின்னவன்கள் இருவரும் வெளியில் இல்லை. பெரியவளும் அங்கில்லை. இவனுக்கு விளங்கிக் கொண்டு விடுகிறது. படித்து முடித்து பெருகும் சஞ்சிகைகளைப் போட்டு வைப்பதற்கென்று சிமெந்தினால் ஒரு பிளேட்” அறைக்குள் கட்டி வைத்திருக்கின்றான். அது இப்பொழுது பாதுகாப்பு வலயம் ஆக்கப்பட்டு விட்டது. தம்பிகள் இருவரையும் அணைத்து வைத்துக் கொண்டு பெரியவள் அங்குதான் இருப்பாள்.

மனையானவளை அடுக்களைக்குள்ளே போய்த் தான் தேட வேண்டும். இரவு நேரத்து உணவு தயாரிப்பதில் இவள் மும்முரமாக ஈடுபட்டிருப்பாள்.

சின்னவள் விறாந்தைப் படியில் வந்து விசமத்துக்கு அமர்ந்திருக்கிறாள். இவளுக்குப் பின்னே அஞ்சி அஞ்சி நடுங்கிக் கொண்டு கிடக்கிறது ஜாம் போத்தல் விளக்கு. அதன் மங்கலான வெளிச்சம் மெள்ள மெள்ள ஒளியை இவள் முகத்தில் தடவித் தடவிப் போகிறது. கடுமையும் இறுக்கமும் உறைந்த முகத்துடன் இவள் மௌனித்துக் காத்திருக்கின்றாள். இது அப்பாவை எதிர்பார்க்கும் காத்திருப்பு.

இவனுக்குப் புரிந்து போகிறது. இன்று இவனோடு போர் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றாள். அதற்கான எத்தனங்கள் தான் இந்த மௌனமும் அலட்சியமும்,

இது ஒன்றும் இவனுக்குப் புதுமை இல்லை. முன்னரும் இவள் எச்சரித்திருக்கிறாள். ஒரு சமயம் இவனுக்கு சொல்லியும் இருக்கின்றாள். “கேற் பூட்டிப்போடுவன் ….. நீங்கள் போய் அப்பாச்சி வீட்டிலே தான் படுக்கவேண்டி வரும்.” அப்படி ஒரு கண்டிப்பு. இவன் உள்ளம் மலர அப்பொழுது மெல்லச் சிரிக்கின்றாள்.

‘அப்பாச்சி’ என்றே இவளைச் செல்லமாக இவன் அழைப்பதுண்டு. சாயலில் இவள் இவன் அம்மா போல், அப்பாச்சிபோல, அப்பாச்சிக்கு மனசு பூப்போல, அது மென்மையானது. வெள்ளை மனசு. வெளித்தோற்றத்தில் மாத்திரந்தான் இவளுக்கும். இந்த இறுக்கமெல்லாம், பிறர் இன்னல் கண்டு உள்ளம் நெகிழ்ந்து கரைந்து கசிந்து போகின்றவள் இவள். ‘அசல் அப்பா’ என்று பெயரெடுத்தவள். அதில், இவளுக்கு மனசுக்குப் பிடிபடாத ஒரு பெருமை. இவள் மனசின் எதிர்பார்ப்பு என்ன என்பது இவனுக்குத் தெரியும். அப்பா இவள் சொல்லை மீறி நடக்கக் கூடாதென்று எண்ணுகின்றவள் இவள்.

இவளைக் கண்டும் கண்டு கொள்ளாதவன் போல உதட்டுக்குள் மெல்லச் சிரித்த வண்ணம், சயிக்கிளை வீட்டுச்சுவரில் சாய்த்து விட்டு கொண்டு உள்ளே நுழைவதற்குப் படியில் கால் எடுத்து வைக்கின்றான்.

பதற்றமான இந்த வேளையிலும் காலங் கடந்து வீட்டுக்கு வந்து நிற்கும் அப்பாவின் பணிவின்மை இவள் மனதில் சீற்றத்தை மூட்டுகின்றது.

“பெரியப்பா மூண்டுமுறை வந்து வந்து விசாரிச்சுப் போட்டுப் போகுது” வார்த்தைகளில் வெக்கை அடிக்கிறது; முகம் திருப்பாமல் பேசுகின்றாள்.

ஓ……! இது புதிய முறையிலான ஓர் எச்சரிக்கை .

யார் சொல்லுக்கும் அடங்காமல் இருக்கலாம் ; ஆனால் பெரியப்பாவுக்கு அடங்கித்தானே ஆகவேண்டும், இந்த அப்பா !

இவனுக்கு உணர முடிகின்றது. அண்ணா வந்து தேடிக்கொண்டு போயிருப்பாரென்று.

“பிள்ளை, அப்பா நிக்கிறானே?”

“இல்லைப் பெரியப்பா”

“அவனுக்கு நேரகாலந் தெரியாது …… எப்ப பாத்தாலும் இலக்கியமும் கூட்டமும் …..” உள்ளூரச்சினந்து கொண்டு போயிருப்பார்.

சற்றுத் தாமதித்து மீண்டும் வந்திருப்பார். “பிள்ளை அப்பா வந்திட்டானே?”

“இல்லைப் பெரியப்பா”

மறுபடியும் …….. மறுபடியும் ………. அண்ணா தேடிக்கொண்டு இருப்பார்.

அண்ணா இவனைத் தேட வேண்டும். வேறு யார் தான் இவனை வந்து தேடப் போகின்றார்கள்! இவனல்லவா தனக்கீழுள்ளவர்களைத் தேட வேண்டியவன். அண்ணா தேட வேண்டும் …… இன்றும் …… நாளையும்…… அதன் பிறகும்… இவன் மனசுக்கு அது வேண்டும் போல மனசு தவிக்கிறது. அண்ணா அவன் என்று சொல்ல வேண்டும். ‘நிக்கிறானே’ என்று கேட்க வேண்டும். நெஞ்சுக்கு நெருக்கமானவர்களின் ஆளுமை கொள்ளும் உள்ளத்துள் இருந்து இந்த அவன்’ வந்து விழுகின்றபோது, இதயமெல்லாம் நிறைந்து போகிறது. ‘அவன்’, ‘அவள்’, நீ எப்படி எல்லாம் இனிக்கின்றது ! பூப்பூவா மலர்ந்து விழுவது போன்ற வார்த்தைகள், வார்த்தைகளுக்கு ஏது பொருள்? அது எங்கிருந்து எழுகின்றதோ, அந்த இடத்துக்கு உரியதல்லவா அதன் அர்த்தம்!

வியர்வையில் உடல் நனைந்து நசநசக்கிறது, உடைகளை மாற்றிக் கொண்டு சில்லென்று குளிர்ந்த நீரில் திளைத் தெழும்புவதில் என்ன சுகம்! என்ன! இதம்! அண்ணா அவன் என்று சுட்டும் போது ருசிப்பது போல, எங்கெல்லாம் இந்த மனசுக்கு வேண்டும் சுகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்று ஒரு கணம் இவன் மனசு நினைவு கொள்ளுகின்றன.

அறியாள் இவனுக்கு இப்பொழுது ஒரு தேநீர் தேவை. இவன் வீடுவந்து சேர்ந்த போது வழமை போல, ‘வந்தாச்சோ?’ என்று இவளும் இன்று குரல் கொடுக்கவில்லை. இவளுக்குக் கால் நூற்றாண்டு காலம் இவனோடு வாழ்ந்து பெற்ற அனுபவம், இது ஒன்றும் இவளுக்குப் புதிசல்ல. எத்தனை இரவுகள் ! ஒரு இரவு இலக்கியம் …. மறு இரவு சமூகம் ….. அடுத்த இரவு அரசியல் … இப்படி எத்தனை கூட்டங்கள்! எத்தனை இரவுகள் இவனுக்காகக் காத்திருந்திருக்கின்றாள் ! பேய் உறங்கும் சாமத்தில் தான் உறங்காது இவன் சுகமாக வீடு வந்து சேர வேண்டுமே என்று ஏங்கிக் கொண்டு கிடந்திருக்கிறாள். உங்களைத் தெரியாதே எனக்கு!’ என்ற மாத்திரம் சுருக்கமாக இப்பொழுது இடையிடையே சொல்லிக் கொண்டிருக்கிறாள். இவன் இப்படித்தான் என்பது இவள் தீர்மானம். இவன் தன் சொல்லைக்கேட்டு நடப்பதில்லை என்று ஒரு வெப்பிசாரம் இவள் மனசில் என்றும் உண்டு. இப்பொழுதெல்லாம் சின்னவளை மெல்ல முன்னுக்கு வைத்து தான் தந்திரமாக விலகிக் கொண்டு விடுகின்றாள்.

இவன் முன் ரீப்போமீது தேநீரைக் கொண்டு வந்து வைக்கிறாள். ஏதிலார்போல் ஒரு தடவை இவன் முகத்தைப் பார்த்து விட்டு மெல்லத் திரும்புகிறாள். எப்பொழுதும் தேநீர் தன் கையில் இவள் தர வேண்டும் என்பது இவன் எதிர்பார்ப்பு. இவளுக்கு இது தெரியும்; தெரிந்தும் மனசில் இருக்கும் அதிருப்தியை வெளிக்காட்டுவதற்கு இவளுக்கு இப்பொழுது வேறென்ன வழி!

இவர்கள் அறியாததல்ல – காலம் கடந்து போவது மறந்து – இவன் தன் நண்பருடன் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்திருப்பான். இலக்கியகாரர்கள் பலாக்காய்ப்பால் போல ஒட்டிக் கொண்டு விட்டால், விடுபட முடியாமல் இழுபடுகின்றவர்கள். இவன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போன வேளை, எல்லாம் ஒட்டிக் கொண்டிருந்திருப்பான் மறந்து – இவன் சுமுகமாகவே இருந்தது. சுமார் எட்டு மணி இருக்கும். இவன் நண்பரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவதற்குத் தயாரானான். அந்த வேளை பார்த்து பலாலியில் இருந்து ஷெல் வந்து விழுவதற்கு ஆரம்பிக்கிறது. மேலும் அரைமணி நேரம் தாமதம். அதன் பிறகு விரைவாக வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். மீண்டும் ஷெல் அடி தொடங்குகிறது. இடை நடுவில் தரித்து நிற்பதற்கு விரும்பாத இவன், வேகமாக வந்து சேருகின்றான்.

ஷெல் அடி, குண்டு வீச்சு, ஹெலித் தாக்கு என்றால் அண்ணா வந்து இவனைத் தேடுவது வழக்கம். புத்தகம் என்றும் நண்பர்கள் என்றும் இவன் எங்காவது அலைந்து கொண்டிருப்பான். ‘என்ன பேச்சும் ….. எழுத்தும் ….. எல்லாத்தையும் விட்டிட்டி இந்தப் பிள்ளையளோட வீட்டிலே இருக்க வேணும்’ என்பது அண்ணாவின் விருப்பம். குழப்பமான நேரங்களில் அவன் வீட்டோடு இருந்தால் அவருக்கு நிம்மதி. உலகம் மோனத்திருக்கும் வேளையிலும் நாய் குரைத்தால், இரண்டு வீடு தள்ளிக் குடியிருக்கும் அண்ணா எழுந்து வந்து இவன் வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு போனார் என்பதெல்லாம். இவனுக்கெப்படித் தெரிய வரும்! பிள்ளைகள் சொல்லுவார்கள். பெரியப்பாவின் மூத்த குழந்தை அப்பா’, இவன் மனசு பிஞ்சுக் குழந்தையாக அப்பொழுது கெக்கலி கொட்டும்.

– மேடைகளில் ஏறி நின்று பட்டிமன்றங்களில் காற்றுடன் இவன் சமர் புரிந்த காலம். அரங்க மேடையில் உயர நின்று நட்சத்திரமாக ஜொலித்து பூமிக்கிறங்கி வருவதற்கிடையில் நள்ளிரவு தாண்டி விடும். எப்பொழுதும் இவனுக்குத் துணையாக வரும் நண்பர்களில் ஒருவராவது இவனைக் காத்து நிற்பார். இவன் வீடுநோக்கி அவரோடு புறப்படுவான். அந்தச் சமயத்திலும் இவன் பின்னால் சயிக்கிள் ஒன்று தொடர்ந்து சிலபோது வந்து கொண்டிருக்கும். துணை வந்த நண்பர் அவர் வீடு வந்ததும் பிரிந்து போய் விடுவார். இவன் தனித்து விடப்படுவான். திருடர்களும் அஞ்சி ஒழுங்கும் பயங்கர நடுநிசியில், தொட்டால் கையில் ஒட்டிக் கொள்ளும் மை இருளில் இவன் போய்க் கொண்டிருப்பான். அப்பொழுதும் அந்தச் சயிக்கிள் சற்றுப் பின் தங்கி இவனுக்குக் காவலாகப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். வீட்டுக் கேற்’ ரில் இவன் வந்து தரித்து நிற்பான். அந்தச் சயிக்கிள் – அண்ணா – மெல்ல இவனைக் கடந்த வண்ணம் ‘ஆ……… போய்ப்படு’ என்று சொல்லிக் கொண்டு போகும்.

பள்ளிவிட்டு வீடு வந்தால் முப்பத்தைந்து வயதிலும் சின்னக் குழந்தையாக இவன். அம்மாவைத் தேடிக்கொண்டு ஓடுவான். அணிந்திருக்கும் சேட்டைக் கழற்றி ஆணியில் தொங்க விட்டு படுக்கையில் அம்மா அருகே அமர்ந்து விடுவான். அம்மா எழுந்து ஈன்ற பசு இளங்கன்றை நாவினால் நக்குவது போல, இவன் முதுகை மெல்ல மெல்லத் தடவிக் கொடுப்பாள். நித்தமும் இது நடக்கும். இவன் ஆத்மாவை வருடி விடுவது போல அந்தக் கரத்தின் மென்மையான வருடல்……. அதனை அடைந்து பரவசம் கொண்ட அந்தக் கணங்கள் ……… அதற்காக இன்றும் இவன் உள்ளம் ஊமையாக ஏங்கித் தவிக்கும். அப்பொழுது தடவிக்கொடுத்த வண்ணம் என்றாவது அம்மா சொல்லுவாள்!

“அப்பூ … நீ சிகரெட் நல்லாக் குடிக்கிறியாம் …….. இரவிரவாகக் கிடந்து இருமிறியாம் … அண்ணா வந்து பேசிறான்”

இந்த அம்மா … எழுபத்தைந்தில் ஓர் இரவு இவன் பேசிக் கொண்டிருந்து, பின் வீடு திரும்புகின்றான். அதிகாலையில் …… இருள் கலையாத இருண்ட காலையில் இவனை வந்து எழுப்புகின்றார்கள். அம்மா சொல்லாமல் கொள்ளாமல் பக்’ கென்று போய் விட்டாள். ஓ …. உறங்குவது போலுமல்லவா சாக்காடு! பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஐயா போனபோது வேதனையாகத்தான் இருந்தது. பொறுப்புக்களைச் சுமக்க வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சை இறுக்கியது. ஆனால் எல்லாமாக அம்மா இருந்தாள். அம்மா போன பிறகு இவன் எவருமில்லாத ஓர் அநாதையாக தனித்துப் போய் விட்டதான ஓர் உணர்வு நெஞ்சில் எழுந்து நின்றது, அப்பொழுது தான் எல்லாமாக இதுவரை அம்மா இருந்தாள் என்பது இவனுக்குள் முழுமை கொண்டது.

இப்பொழுது இவனுக்கு மேல் அம்மா இல்லை; அண்ணா .

இவன் ஒரு தினம் பள்ளிக்குப் போகவில்லையெனில் மருமக்கள் வந்து வீட்டில் சொல்லுவார்கள். ‘மாமா பள்ளிக்குடம் வரயில்லை அம்மா; எப்படியோ இது அண்ணாவுக்குத் தெரிந்து விடும். இவனுக்கேதோ சுகவீனம் என்று எண்ணிக் கொண்டு அடுத்தவேளை ‘தம்பி’ என்ற வண்ணம் வந்து நிற்பார். பரிவுடன் இழைந்து வரும் அந்தக்குரலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல, ஆவல் பொங்கி எழும். இடையிடையே பள்ளிக்குக்கள்ள மொழிக்க வேணும்’ என மனசுக்கு அப்பொழுது தோன்றும், இந்தப் பொங்குதலுக் கெல்லாம் …..

இவனுக்கு யார் இல்லை ?

இவன் எதனைத் தேடிக் கொண்டிருக்கின்றான் ?

மனைவி, மக்கள், சகோதரிகள், மருமக்கள், பெறாமக்கள் மைத்துனர்கள் என்று……. ஒரு கணம் இவன் முகம் வாடிப்போனால், மீண்டும் இவன் முகத்தின் மலர்ச்சியைக் காண வேண்டுமென்று நெஞ்சு பொருமித் தவிக்கும் இதயங்கள் ……… நெஞ்சுக்கு நெருக்கமாக எல்லாம் இருந்தும் இவன் எதனைத் தேடிக் கொண்டிருக்கிறான்!

வான் கடிதங்களில் தன்னை அஞ்சல் செய்து கொண்டிருக்கிறானே, இவனுக்கு இளையவன், சிறகுக்குள் வந்தொடுங்கும் குஞ்சுப் பறவையின் உள்ளுணர்வுகள் அல்லவா அவன் எண்ணங்களிலும் தலை காட்டுகின்றன!

அவன் உயர்ந்து பரந்த நிழல். இந்த நிழலின் கீழ் ஆறுதல் தேடும் இளைய உறவுகள் பல, ஆனால் இவனுக்கு ……?

இவன் ஏகாங்கியாக எங்கெங்கோ சஞ்சாரம் செய்து கொண்டிருக்கின்றான்.

சின்னவன்கள் அறையிலிருந்து விறாந்தைக்கு வருகின்றார்கள். பெரியவளும் அவன்களைத் தொடர்ந்து வருகின்றாள். சின்னவள் சினம் ஆறி வாசல் படியை விட்டு எழுகிறாள். எல்லோரும் வந்து இவனைச் சூழ்ந்து அமருகிறார்கள். இங்கு கவிந்திருந்த இறுக்கம் இன்னும் முற்றாகக் கலைந்து போகாத நிலை. சகசமாக இவர்கள் வாயிலிருந்து அப்போய்’ இன்னும் வந்து விழவில்லை. இவன் எல்லோரையும் பார்த்து மெல்லச் சிரித்த வண்ணம், சின்னவள் முகத்தைக் குறிப்பாக நோக்குகிறான். பெரியவள், தம்பிகள், சின்னவளைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். இவளுக்கும் அடக்க இயலவில்லை. வாய்விட்டுச் சிரிக்கிறாள். அடுத்து வேறென்ன,

அப்போய் தான் என்று இவன் மனசு ஆவலுறும் வேளை …

மீண்டும் ஷெல் வந்து விழுகிறது. கண்மூடித்தனமான தாக்குதல், இடையறாது தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருக்கிறது. வீட்டுக்கு அண்மையில் வந்து விழுந்து வெடித்துச் சிதறுகிறது.

எல்லோரும் இவனைச் சுற்றி இருக்கிறார்கள். முன் போல பாதுகாப்புத் தேடி அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ள இவர்கள் எண்ணவில்லை. இவனுக்கு அச்சமாக இருக்கின்றது.

“பிள்ளையள் அறைக்குள்ளே போய் இருங்கோவன்”

“நாங்கள் போகயில்லை”

“ஏன் ….?”

“நீங்கள் கூட இருக்கிறியள், எங்களுக்கென்ன பயம்! திரும்பவும் ஷெல்”

“பிள்ளையள், அப்பா வந்திட்டானே ?”

“ஓம் பெரியப்பா”

“ஆ, கவனமாக இருங்கோ ”

இவன் ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து உட்காருகின்றான்.

– மல்லிகை நவம்பர் 1993, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *